யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 53

728

அத்தியாயம் – 53

முதலில் வன்னியை யாரோ சாதாரண பரி யாளி என்று எண்ணியே கரணியன் அவளை பொருட்படுத்தவில்லை. அதனால் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்த போதும் அவளது சக்கர நிலை குறித்து கரணியன் நோக்கவில்லை.

ஆனால் அவள் பரி இளவரசி என்றதும், ‘சிறு வயதிலே ஆன்மீக இதய வேர் உருவாக்கியவள் என்றும், பரி அரசின் இராஜகுருவுடன் இணைந்து சில விநோதமான நிகழ்வுகளால் உண்டான பிரச்சனைகளை தீர்க்க பரி இளவரசியும் துணை நின்றிருக்கிறாள்.’ என்றும் மாதங்க அரசர் சொன்னது கரணியனுக்கு நினைவு வந்தது.

அதே நினைவில் வன்னியின் சக்கர நிலை அறிந்திட அவள் கைக்காப்பை பார்த்த கரணியன் திகைத்தான். அவள் கைக்காப்பு இரண்டு வெள்ளை முத்துகளுடன் இரு சக்கரம் என்று காட்டியது. பத்து வயதில் இரண்டு சக்கரம் என்பதே அரிது.

ஆனால் அவனது த்கைப்புக்கு காரணம் அதுவல்ல. அவனது கூரிய கண்கள் அவள் கைக்காப்பின் மீது படர்ந்திருந்த சக்கர நிலை மறைக்கும் கருவியை பார்த்து திடுக்கிட்டது. ஏனென்றால் அந்த கருவியை உருவாக்கியவனே அவன்தான்.

அதனை அவன் பேரரசர் விக்ரமனுக்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு பரிசாக அளித்தது அவனுக்கு இன்னமும் நினைவு இருந்தது. ‘பேரரசரிடமிருந்து யாரும் அந்த கருவியை திருடியிருக்க முடியாது.

அப்படியிருக்க, அவராகதான் இந்த சிறு பரி யாளி இளவரசிப் பெண்ணுக்கு, ஏதோ காரணத்தால் இதனை தந்திருக்க வேண்டும்.’ என்று ஒர் முடிவுக்கு வந்தான் கரணியன்.

என்னதான் கரணியன் அந்த கருவியை கண்டுபிடித்திருந்த போதும் அவனால் அதனை அணிந்திருக்கும் வன்னி அனுமதி இல்லாமல் அவளது சக்கர நிலை அறிய முடியாது. மனதுள் ஏதோ முடிச்சுவிழ, வன்னியும் சாரங்கனும் நடக்கும் திசை நோக்கி நெற்றி சுருங்கி பார்த்தான்.

பின் ஓரிரு அடி நடையில் அவர்கள் முன் வந்து நின்று அவர்களை நிறுத்தி கரணியன், “இளவரசி வன்னி. தாங்களும் இளவரசர் சாரங்கனை போல உங்கள் அனுபவத்தை சொன்னால் குற்றவாளியை தேடுவது எளிதாக இருக்கும்.” என்றான்.

அவன் கேள்வியில் சாரங்கன் நடப்பத்தை நிறுத்தி நிமிர்ந்து கரணியனைப் பார்த்தான். திடீரென்று எதிரில் வந்த கரணியனை பார்த்த வன்னி, விழிவிரித்து ஒரு நொடி பார்த்துவிட்டு, சாரங்கனை திரும்பி பார்த்தாள்.

சாரங்கன் தலை அசைக்க, அவன் கையிலிருந்து இறங்கி கரணியன் முன் வந்து, “தளபதி கரணியன்…” என்று ஆரம்பித்து அவள் சார்பில் முன்பு நடந்தவற்றை மற்றொரு முறை சொன்னாள்.

ஒரு ஆண்குரல் ஏதோ பேசியது என்றாளே தவிர வெள்ளி எலும்பு குறித்து அவள் வாய் திறக்கவில்லை. தன் குருவிடம் அது குறித்து கேட்காமல் அதனை யாரிடமும் சொல்ல அவள் தைரியபடவில்லை.

அவள் சொல்வதை சின்ன தலை அசைப்புகளுடனும், அவ்வப்போது கேள்விகளுடனும் கேட்ட கரணியன், முழுதும் முடிந்ததும் பெருமூச்சுவிட்டு, “நன்றி இளவரசி.” என்றான். பின் சற்று நிறுத்தி, வன்னியின் கைக்காப்பை பார்த்தான்.

அவள் அருகில் வந்து அவள் முன் மண்டியிட்டு, “பேரரசர் தங்கள் மீது அதிக அக்கறை கொண்டிருப்பார் போல. அவரது சக்கர நிலை மறைக்கும் கருவியை தங்களுக்கு பரிசளித்திருக்கிறார்.” என்றான்.

அவன் சொன்னதை கேட்ட வன்னி திகைத்து கரணியனை பார்த்தாள். ‘இவருக்கு எப்படி தெரியும்?’ என்று அவள் எச்சரிக்கையான பார்வையை அவன் மீது வீசினாள். அவள் பார்வையை பார்த்து கரணியனுக்கு கேள்விப் பட்டது போல பரி இளவரசி வயதுக்கு மீறிய புத்தி கூர்மையுடைவள் என்பதை அறிந்து மெச்சுதலாக அவள் தலை வருடினான்.

கலக்கம் வேண்டாம் இளவரசி. அந்த கருவியை உருவாக்கியவன் நான் என்பதால் என்னால் அதை நீங்க அணிந்திருப்பது அறிய முடிந்தது. மற்றபடி தங்களின் சக்தி நிலை என்னவென்று எனக்கு நீங்க நினைக்காமல் பார்க்க முடியாது.” என்று அவளை சமாதனம் செய்தான்.

ஆம் பரி அரசு வைத்தியம் பார்ப்பதில் சிறந்தவர்கள் என்றால் மாதங்க அரசு யாளிகள் பலவித ஆன்மீக கருவிகள் உருவாக்குவதில் சிறந்தவர்கள். சிம்மர்கள் சண்டையிடுவதில் சிறந்தவர்கள். மகரர்கள் சுற்றதில் இருக்கும் விநோதமான நிகழ்வுகளை எளிதில் கனவு சக்கரம் மூலம் அறிவதில் சிறந்தவர்கள்.

அதே சமயம் மற்ற யாளிகளின் விஷேச திறமைகளை தெரியாதவர்கள் என்றும் சொல்ல முடியாது. உதாரணத்திற்கு வன்னி ஒருவரை குணப்படுத்துவதில் சிறந்தவள், என்பதற்காக அவளால் சண்டையிட முடியாது என்றோ அல்லது கனவு சக்கரம் உருவாக்க முடியாது என்றோ அல்லது ஆன்மீக கருவிகளை உருவாக்க முடியாது என்றோ இல்லை.

விருப்பம் இருந்து கற்றால் அவர்களால் எதுவும் அறிய முடியும். ஆனால் அவரவர் சொந்த யாளி வகை திறமைகளை ஒப்பிடும் போது அதன் நேர்த்தி குறைந்து இருக்கும்.

அதனால் கரணியன் பல ஆன்மீக கருவிகளை கண்டறிந்திருந்த போதும், சிம்மர்களை போல போர்கலையும் அறிந்தவன். அதனாலே அவன் படை தளபதியாக கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடத்திற்கு மேலாக பணிபுரிகிறான்.

வன்னி கரணியனின் விளக்கத்தில், ‘அதுதான் இல்லையா?’ என்பது போல தலையசைத்தாள். இருந்தும் இன்று மாதங்க அரசினை அடைந்ததிலிருந்து நிகழ்ந்த நிகழ்வுகள் வன்னிக்கு பலவித எண்ண அலைகளை உண்டாக்கியது. ஏனோ இனம் புரியாத திகில் அவளுக்குள் தோன்றியது.

அருகில் இத்தனை காவலர்கள் இருந்த போதும் உடன் யாருமில்லாதது போலவும், யாரோ கண் மறைவில் தன்னை கவனிப்பது போன்றும், பாதுகாப்பற்ற உள்ளுணர்வு வன்னிக்கு இருந்துக் கொண்டே இருந்தது. ஆனால் அது குறித்து அவள் யாரிடமும் சொல்லவில்லை.

அவள் எண்ணம் இப்படி ஓடிக் கொண்டிருக்க கரணியன் வன்னியின் ஒவ்வொரு அசைவுகளையும் விழி கூர்மையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

என்னதான் வன்னி பேசும் போது, நேர்த்தியாக வெள்ளி எலும்பு குறித்து மறைத்து பேசினாலும், மூவாயிரம் வருடம் யாளி உலகில் வாழ்ந்து பலவிதமானவர்களை பார்த்த கரணியன் அவள் ஏதோ ஒன்றை மறைக்கிறாள் என்பதை உணர்ந்தான்.

இருந்தும் வன்னியை முழுதும் எல்லோர் முன்னிலையிலும் வெளிப்படுத்தவில்லை. சின்ன புன்னகை இதழில் இருந்தவிதமாக அவள் முகத்தை பார்த்தான். கடைசியாக வன்னி திரும்பி நடக்க ஆராம்பித்த போது, “நன்றி இளவரசி. இப்போதைக்கு இந்த தகவல் போதும்.

மேலும் எதுவும் தங்களிடம் கேட்க வேண்டுமென்றால் தங்களை நான் தங்கள் இருப்பிடத்தில் வந்து பார்த்து கேட்கிறேன். இப்போது நீங்க ஓய்வெடுத்துக் கொள்ளுங்க.” என்றான். பின் சாரங்கனிடம் திரும்பி, “இளவரசே, வந்தவனின் நோக்கம் அறியும் வரை அரண்மனைவிட்டு தாங்களும் இளவரசியும் எங்கும் செல்ல வேண்டாம்.” என்றான்.

சாரங்கனும் அவனுக்கு சரி என்பது போல் தலையசைத்தான். கரணியன், சாரங்கனிடம் ஒரு மோதிரைத்தை கொடுத்து, “இளவரசே. இந்த கருவி எங்க மாதங்க அரசில் கண்டுப்பிடிக்கப்பட்ட தற்காலிக பாதுகாப்பு சக்கர கருவி. இதனை ஒரு முறை பயன்படுத்த முடியும்.

இதனை அணிந்திருந்தால் உங்களிலிருந்து இரு மீற்றர் சுற்றளவில் ஏழு சக்கரம் கொண்டவர்களால் கூட குறைந்தது 5 நாழிகைகளுக்கு நெருங்க முடியாது.” என்றான். அதனை கையில் வாங்கிய சாரங்கன், “நன்றி தளபதி.” என்று யோசனையின்றி வன்னியிடம் கொடுத்தான்.

இதனை பார்த்த கரணியன், ‘பாதுகாப்பு சக்கரத்தை சிறிதும் தயக்கமில்லாமல் இளவரசி வன்னியிடம் கொடுப்பதை பார்த்தால், நடந்த இன்றைய நிகழ்வு பரி இளவரசியை எதற்காகவோ அனுக யாரோ அரங்கேற்றிய நிகழ்வு. பரி இளவரசியிடம் ஏதோ பெரிய இரகசியம் இருக்கிறது.’ என்று சரியாக யூகித்து புன்னகைத்தான்.

இருந்தும் வெளிப்படையாக எதுவும் கேட்காமல், சாரங்கன் மற்றும் வன்னியுடன் மேலும் இரண்டு காவலர்களை அனுப்பி, “இளவரசி வன்னி சிறுமி என்பதால், இந்த இருவரையும் உடன் பாதுகாப்புக்கு வைத்துக் கொள்ளுங்க.” என்றான்.

விருந்தினராக வந்திருந்த மாதங்க அரசில் கரணியனின் அக்கறையான செயல் சாரங்கனுக்கு அவன் மீது மதிப்பை கூட்டியது. “வரலாறு புகழ் பெற்ற யாளி உலக படைத்தளபதி என்று எல்லோரும் தங்களின் பெருமை பாடுவதில் தவறே இல்லை. குறிப்பறிந்து செயலாற்றுகிறீர்கள். தளபதி கரணியன்.” என்றான்.

கரணியன் பணிவாக தலை தாழ்த்தி, “சிம்ம இளவரசரின் வாயால் புகழ் பெறுவது என் பாக்கியம். நன்றி இளவரசே!” என்று இதழ் விரித்தான். பின் வன்னியை கைப்பற்றி அங்கிருந்து கிளம்பினான் சாரங்கன்.

அவர்கள் போவதையே புன்னகையுடன் பார்த்த கரணியனின் முகம், அவர்கள் சற்று தூரம் சென்றதும் தீவிரமாக மாறியது. சாரங்கன் சொன்னதை விடுத்து வன்னி சொன்னவற்றை மீண்டும் ஒருமுறை மனதுள் அசைப்போட்டான் கரணியன்.

கருப்பு முக்காடு உருவமும், இளவரசி கனவில் கேட்டதாக சொன்னவனும் இந்த கருப்புருவமும் ஒருவனாக இருக்குமோ!” என்று முனுமுனுத்தான். பாவம் அவன் கணித்தது சரி என்று உறுதியாக எடுத்து சொல்லதான் அங்கு யாருமில்லை.

இப்படியாக அன்றைய நாள் முடிய அடுத்த நாள் எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் விடிந்தது. ஓய்வெடுத்ததாலோ அல்லது சிறுப்பிள்ளை என்பதாலோ, தன் குருவிடம் வெள்ளி எலும்பு குறித்து கேட்க வேண்டுமென்று உறுதி பூண்டதை, வன்னி மறந்தே போயிருந்தாள்.

இருவருக்கு நால்வராக வன்னியின் அறைக்கு எதிரில் காவலர்கள் இருந்தனர். அதனால் கவலையில்லாமல் உறங்கிய வன்னி, கண்கள் கசக்கி எழுந்து அமர்ந்தாள். பின் இன்னமும் தவத்திலிருந்து விழிக்காத முகிலனையும் மதியையும் திரும்பி பார்த்தாள்.

பெருமூச்சுட்ன, “சேவகர்களே!” என்று சேவகிகளை அழைத்தாள்.

அவள் அழைப்புக்காகவே காத்திருந்த மாதங்க அரசின் சேவ பெண்கள் மூவர், அறைக்கு வந்தனர். பின் அவர்களுக்கு இட்ட பணிப்போல வன்னியை குளிப்பாட்டி அவளுக்கு ஆடை அலங்காரங்கள் செய்து அவளை தயார் செய்தனர்.

அவள் தயாராவதற்கும் சாரங்கன் அங்கு வருவதற்கும் சரியாக இருக்க இருவரும் சேர்ந்து விழா அரங்கிற்கு சென்றனர்.

விழா மேடையின் நடுவில் பேரரசர் அமர்வதற்கான நாற்காலி இன்னமும் நிரம்பாமல் இருக்க, அவரது இடது புரம் மாதங்க அரச அரசியரும், இளவரசி அல்லியும், மாதங்க இராஜகுரு அமுதமும் அமர்ந்திருந்தனர்.

அல்லியின் அருகில் மெய்காவலன் கனகன் நின்றிருந்தான். அதனை தொடர்ந்து சில முக்கிய மந்திரிகள் என விழா மேடை முழுதும் மாதங்க அரசை சேர்ந்தவர்கள் ஏற்கனவே நிரம்பியிருந்தனர்.

அவ்வப்போது படைத்தளபதி அரசரிடமும் முக்கிய மந்திரிகளிடமும் பேசிவிட்டு விழா அரங்கின் இங்கும் அங்கும் பறக்கும் சக்கரம் மூலம், ‘பாதுகாப்பு நிலை சிறந்து இருக்கிறதா?’ என்று வட்ட விழா அரங்கினை சுற்றி பறந்து நோட்டமிட்டுக் கொண்டிருந்தான்.

அவனை நோக்கியே அல்லியின் விழிகளும் இருக்கும் இடத்திலிருந்து பறந்துக் கொண்டிருந்தது. இதனை அவள் பின் நின்றிருந்து பார்த்துக் கொண்டிருந்த கனகனின் விழிகள் பொறாமையில் கரணியனை வெறித்துக் கொண்டிருந்தது.

பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் கரணியனுக்கு மட்டுமே பறக்கும் சக்கரம் பயன்படுத்த மாதங்க அரசு அனுமதித்திருந்தது. விழா மேடையை சுற்றி படிகட்டுகள் போல பல இருக்கைகள் விழாவை பார்க்க வந்தவர்களுக்காக அமைக்கப்பட்டு, அதில் ஏற்கனவே பல வித யாளிகள் கூட்டமும் நிரம்பிக் கொண்டிருந்தது.

அரங்கின் ஆங்காங்கே எல்லா வகை யாளி காவலர்களும் வேடிக்கை பார்க்க வந்தவர்களை நோட்டமிட்ட விதமாக நடந்துக் கொண்டிருந்தனர். சிலர் கையில் வேல் கம்புடனும், கதாயுதத்துடனும், வில் அம்புடனும், உடை வாளுடனும் பரவி நின்றிருந்தனர்.

காவலர்கள் அருகில் இருந்ததாலோ என்னமோ ஓவென்ற பேச்சு சத்தம் யாளி கூட்டங்களிடையே இருந்த போதும், யாரும் எந்தவித பிரச்சனையோ அல்லது குற்றங்களோ செய்ய துணியவில்லை. காவலர்களின் திறமையில் ஒரு முறை திருப்தியுற்ற கரணியன் கடைசியாக மாதங்க அரசரின் இருக்கைக்கு பின் வந்து நின்றான்.

தன் அருகில் வந்து நின்ற கரணியனை எரிச்சலாக ர பார்வையில் பார்த்த கனகன் அதன் பிறகு அவனை விடுத்து அல்லியை பார்த்தவிதம் இருந்தான். ஆனால் தன்னால் பார்க்க முடியாதபடி தங்கள் இருக்கைக்கு பின் நின்ற கரணியனை அவ்வப்போது அல்லி பொறுமை இழந்து திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போதுதான் வன்னியும் சாரங்கனும் விழா அரங்கை அடைந்தனர். அவர்களுடன் சில சேவகர்கள் வந்து அவர்கள் விழா மேடையில் அமர வழி வகை செய்தனர்.

இவ்வளவு பெரிய திருவிழா அரங்கை பார்த்திராத வன்னி, ‘!’ என்று அரங்கையும், ஆயிரம் ஆயிரமாக கூடியிருந்த பலவித யாளிகளையும், தோரணமாக இருந்த பூ ஆலங்காரங்களையும் வியப்பு மீளாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவர்கள் வருவதை பார்த்த கரணியன் அவர்களை வரவேற்றான். நேற்று பார்த்த நேசத்தில் சாரங்கனும் புன்னகைத்தான். கரணியனின் குரலில் அரங்கத்திலிருந்து விழி நீக்கி வன்னி அவனை பார்த்து கிளுக்கி சிரித்தாள்.

அவளது சிரிப்பில், ‘கபடமற்ற சிரிப்பு.’ என்று கரணியன் திகைத்தான். உடனே முகம் மாற்றி, “இளவரசி வன்னிக்கு நாங்க உருவாக்கிய இந்த விழா அரங்கம் மிகவும் பிடித்திருகிறது போல.” என்று சொல்லியபடி அவளை அழைத்துச் சென்று பேரரசர் இருக்கைக்கு அருகிலிருந்த இருக்கையில் அமர வைத்தான்.

கரணியனின் கேள்வியில், “நிச்சயம் பிடித்திருக்கிறது தளபது கரணியன். இவையெல்லாம் ஏற்பாடு செய்வதை விட, திட்டமிடுவது மிகவும் சிரதையாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் இந்த அரங்கம் இவ்வளவு அருமையாக வந்திருக்கிறது.” என்றாள் வன்னி.

அவளது பதிலை கேட்ட கரணியன் சின்ன சிரிப்பை உதிர்த்தான். அருகில் கேட்ட வன்னியின் குரலில் ஒரு இருக்கை தள்ளி அமர்ந்திருந்த மாதங்க அரசர், “இளவரசி வன்னிக்கு எங்களின் ஏற்பாடு பிடித்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி.” என்றான்.

அப்போதுதான் மேடையிலிருந்த மற்றவர்களை பார்த்த வன்னி, வணக்கமும் சொல்லாமல் அமரந்ததில் நாணித்து எழுந்து நின்று, “வணக்கம் அரசர் அரசியே. வணக்கம் இளவரசி அல்லி. கவனிக்க தவறியதற்கு மன்னிக்க வேண்டும்.” என்று கரம்குவித்து சிரம் தாழ்த்தி சொன்னாள்.

அதற்கு இதழ் விரித்த மாதங்க அரசர், “பரவாயில்லை. இளவரசி வன்னி உங்க அரசு போல் இங்கும் தங்களின் விருப்பம் போல் இருக்கலாம். இருக்கையில் அமர்ந்துக் கொள்ளுங்க. பேரரசர் வரும் நேரம் ஆகிவிட்டது.” என்று புன்னகைத்தார்.

அதனை கேட்ட வன்னி பதிலுக்கு புன்னகைத்து, “உத்தரவு அரசே.” என்று மீண்டும் கரணியன் அவளை அமர்த்திய இடத்தில் அமர்ந்தாள். அவளை தொடர்ந்து சாரங்கனும் மாதங்க அரசர் அரசியை வணங்கிவிட்டு வன்னிக்கு அருகில் அமர்ந்தான்.

சற்று நேரம் கழித்து மகர இளவரசர் துருவனும் மகர அரசின் இராஜ குரு இமயனும் வந்து சேர்ந்தனர். மரியாதை நிமித்தமாக மேடையிலிருந்த அனைவருக்கும் வணக்கம் தந்துவிட்டு சாரங்கனின் அருகில் இருவரும் அமர்ந்தனர்.

கடைசியாக கௌரியும் வர மேடை முழுதும் பேரரசரை தவிர அனைத்து முக்கியமானவர்களும் வந்துவிட்டிருந்தனர். பேரரசர் வருவதற்காக அனைவரும் காத்திருந்த வேளையில் சாம்பல் நிற ஆடையில் விக்ரம பேரரசர் பறக்கும் சக்கரத்தில் விழா மேடைக்கு வந்து சேர்ந்தார்.

அவர் வருவதை பார்த்ததும் விழா அரங்கம் முழுதும் ஒரு நொடி குண்டூசி சத்தம் கேட்கும் அளவு அமைதியானது. அரங்கின் ஒரு ஓரத்தில் வரவேற்கும் விதமாக மேள சத்தமும் குழலின் சத்தமும் ஒலிக்க துவங்கியது.

எல்லாவற்றையும் கண்ணில் மின்னலுடன் பார்த்த வன்னி முதல் முறையாக மெய் சிலிர்க்க வைக்கும் கம்பீரத்துடன் பறந்து வந்து, பேரரசர் தன் அருகில் கோபுரமென உயர்ந்திருந்த இருக்கையில் அமர்வதை இமைக்க மறந்து பார்த்தாள்.

எல்லோரும் தரையில் மண்டியிட்டு பேரரசருக்கு ஒரு சேர, “வணங்குகிறோம் விக்ரம பேரரசே. தாங்கள் நீடூழி வாழ்க.” என்றனர். ஆனால் வன்னி சிறுப்பிள்ளையின் அரறியாமையுடன் அவள் இருக்கையிலிருந்து எழுந்து விக்ரமனை இருமுறை இமைத்து வாய் திறந்து பார்த்தாலே தவிர, வணங்கவில்லை.

பேசவும் தோன்றாமல் சிலை போல விக்ரமனையே பார்த்திருந்தாள். இவ்வாறு அவள் உலகில் அவள் இருக்க, கூட்டத்தில் பேதமாக மண்டியிடாமல் நின்ற வன்னியை பேரரசர் பார்த்து புன்னகைத்தார்.

பின் முகத்தை திருப்பி, “அனைவரும் எழுந்திருங்கள். இருக்கையில் அமருங்கள்.” என்றான் விக்ரமன். அப்போதுதான் நினைவுக்கு வந்த வன்னி, அவசரமாக எதுவும் பேசாமல் தரையில் ஒரு முறை மண்டியிட்டு எழுந்து நின்றாள்.

விக்ரமனின் அதீத சக்தி இது வரை வன்னி அறிந்ததிலே மிகவும் அதிகம். மாதங்க யாளியான விக்ரமன் கிட்டதட்ட ஐராயிரம் வருடத்திற்கு முன்பு பேரரசர் ஆனார் என்று புத்தகத்தில் படித்தது வன்னிக்கு நினைவு வந்தது.

ஆறடி உயரமும் 25 என்றளவு தோற்ற வயதுடனும் கம்பீரமாக நின்ற விக்ரமன் மற்ற மாதங்க யாளிகளை போல சதைப்புடன் அல்லாமல் கச்சிதமான உடலமைப்புடன் கடவுளை போல எல்லோருக்கும் மேலே அமர்ந்திருந்தான்.

அவன் இருக்கைக்கு இருப்புரமும் இரு சேவக பெண்கள் மயில் தோகையில் சாமரம் வீசிக்கொண்டிருந்தனர். மாதங்க அரசின் இராஜ குரு எழுந்து விழாவின் கலை விழா துவங்கட்டும் என்று ஆணையிட்டார்.

அவர் ஆணைக்காகவே காத்திருந்தது போல முதலில் மாதங்க அரசின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறியது. பல வித ஆடல்களும் பாடல்களும், போர்கலைகளும் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்தது.

மாதங்க அரசின் விழா முடிந்ததும் அமுதம் எழுந்து அரங்கின் நடுவில் வந்து பேரரசரை நோக்கி நின்றாள். “பேரரசே! மாதங்க அரசின் கலை நிகழ்ச்சிகள் முடிவுற்றது. எங்களின் கலை நிகழ்ச்சி தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமைந்திருக்குமென்று நம்புகிறோம்.

இப்போது மாதங்க அரசின் இளவரசி அல்லியை தங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்.” என்றாள்.

புன்னகையுடன், “மாதங்க இராஜகுரு அமுதம். மாதங்க அரசின் கலை விழா அருமையாக இருந்தது. ஆயிரம் வருடம் தவத்திலிருந்த என் மனம், மாதங்க அரசின் நேர்த்தியான ஏற்பாட்டிலும், மனம் நெகிழும் விதமாக நடந்த கலை நிகழ்வுகளிலும் இளகி இதமாகியது.

மாதங்க அரசின் குட்டி இளவரசியை பார்க்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன். சித்தம் போல் செய்யுங்க.” என்று அனுமதி அளித்தார் பேரரசர் விக்ரமன்.

உங்களை மகிழ்விப்பது எங்க பாக்கியம்.” என்ற அமுதம் சற்று நிறுத்தி, “இளவரசிஅல்லி, தாங்கள் இங்கே வந்து பேரரசரின் ஆசி பெற்றுக் கொள்ளுங்க.” என்று அல்லியை அழைத்தாள்.

அழைப்புக்கே காத்திருந்தது போல் அல்லி அவளது இருக்கையிலிருந்து எழுந்து வந்து அமுதத்தின் அருகில் நின்று பேரரசரை நோக்கி, “வணங்குகிறேன் பேரரசே. எனது பெயர் அல்லி. மாதங்க அரசின் ஒரே இளவரசி.

முன்னூறு எலும்பு வயதும், 22 தோற்ற வயதும் கொண்டு மூன்றாவது சக்கரத்தின் இடை நிலையில் இருக்கிறேன். தற்போது போர்கலைகளையும், கருவிகள் தயாரிக்கும் முறைகளையும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.” என்று அவளை அவளே அறிமுகம் செய்துக் கொண்டாள்.

அமைதியாக தலையசைப்புடனும் புன்னகையுடனும் கேட்டிருந்த விக்ரமன், “அருமை. முன்னூறு வயதில் மூன்றாம் சக்கரம். தொடர்ந்து பயிற்சி செய்து மென்மேலும் வளர என் வாழ்த்துகள் இளவரசி அல்லி.” என்றான்.

பேரரசரின் வாயில் பாராட்டு கேட்டதில் உடலெல்லாம் சிலிர்க்க தரையில் வணங்கி, “நன்றி பேரரசே!” என்றாள். பின் ஒரு கைசைவில் அல்லியும் அமுதமும் அவர்கள் இருக்கையில் அமர, மகர இராஜகுரு இமயன் எழுந்து, “மகர அரசின் கலை நிகழ்வுகள் துவங்கட்டும்.” என்று ஆணையிட்டார்.

முன்பு போல மகர அரசின் கலை நிகழ்வின் முடிவில் துருவனை இமயன் விக்ரம பேரரசருக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

துருவன் பேரரசரை வணங்கி, “பேரரசருக்கு எனது பணிவான வணக்கங்கள். எனது பெயர் துருவன். மகர அரசின் இளவரசன். நானூறு எலும்பு வயதும், 25 தோற்ற வயதும் கொண்டு நான்கு சக்கரத்தின் கடை நிலையில் பேரரசர் முன் நிற்கிறேன்.

தற்போது கனவு சக்கரத்தின் மூலமாக ஒருவரின் மூன்றாம் ஆழ் மனம் வரை சென்று அவர்களின் உள்ளத்தில் பொதிந்திருக்கும் உண்மைகளை அறிய முடியும். தொடர்ந்து நான்காம் ஆழ் மனம் வரை செல்வது குறித்து படித்துக் கொண்டிருக்கிறேன்.” என்றான்.

பேரரசர் ஓரிரு வார்த்தைகள் துருவனை பாராட்டி அவர்களை அமர்த்தினார். மகர அரசை தொடர்ந்து சிம்ம அரசின் இராஜகுரு கௌரி சிம்ம அரசின் கலை நிகழ்வுகளை துவங்க ஆணையிட்டாள். அவர்களின் கலை நிகழ்வு முடிந்ததும், சாரங்கனை கௌரி அறிமுகம் செய்து வைத்தாள்.

சாரங்கன், “பேரரசருக்கு வணக்கம். எனது பெயர் சாரங்கன். சிம்ம அரசின் இளவரசன். ஆறனூறு எலும்பு வயதும், 25 தோற்ற வயதும் கொண்டு ஐந்தாம் சக்கரத்தின் இடை நிலையில் தங்கள் முன் நிற்கிறேன். தற்போது போர்கலைகள் மற்றும் மருத்துவம் பயின்று வருகிறேன்.” என்றான்.

அதனை கேட்ட பேரரசர், “ஹாஹாஹாசிம்ம இராஜகுரு கௌரி உங்கள் இயல்புக்கு மாறாக மருத்துவத்தில் சிறந்தவர் ஆனது மட்டுமல்லாமல், சிம்ம இளவரசரையும் விடவில்லை போல.” என்று சிரித்தார்.

பேரரசரின் கருத்தில் கௌரி பெருமையுடன் தலைதாழ்த்தி, “உண்மைதான் பேரரசே. வேட்டை ஆடி எளிதில் காயமுரும் சிம்மர்கள், காயத்தை குணப்படுத்துவதிலும் புரிதல் இருக்க வேண்டும். இதை தாங்கள்தான் போர்கலை மட்டும் பயின்ற எமக்கு அறிவுறுத்தினீர்கள்.

அப்படி இருக்க என் சீடர்களுக்கு அதனை சொல்லிதர தவறினால் பேரரசரின் வார்த்தையை மதியாதது போலல்லவா அர்த்தம். என் சீடர்கள் எல்லோரும் போர்கலையுடன், மருத்துவமும் அறிந்தவர்கள்.” என்று பெருமையுடன் பேரரசரிடம் சொன்னாள்.

அவள் பதிலில் பேரரசர் விக்ரமன், “ஹாஹாஹா… இராஜகுரு இன்னமும் என் வார்த்தைகளை மனதில் வைத்திருப்பதை எண்ணி யாம் மகிழ்கிறோம். இளவரசர் சாரங்கனும் தாங்களும் தங்களின் இருக்கையில் அமருங்கள்.” என்றான்.

அவர்கள் இருக்கையில் அமர்ந்ததும் மாதங்க படை தளபதி முன் வந்து, “பரி அரசின் கலை நிகழ்வுகள் அரங்கேறட்டும்.” என்று ஆணையிட்டான். அதுவரை ஆர்வமாக நடப்பவற்றை பார்த்திருந்த வன்னி பரி அரசின் கலை நிகழ்வுகள் நிறைவுக்கு வர லேசாக பதற்றமுற்றாள்.

அவ்வப்போது அவளையும் அறியாமல் திரும்பி திரும்பி பேரரசரை பார்த்தாள். அவளது பார்வை தன்னை பார்த்து மீள்வதை உணர்ந்த பேரரசர் ஓரிருமுறை அவரும் திரும்பி பார்த்து புன்னகைத்தார். ஆனால் வன்னிக்குதான் பதிலுக்கு கூட புன்னகைக்க வரவில்லை.

ஏதோ அச்சம் அவளுள் குடியிருக்க கலை நிகழ்வுகளும் இனிதே முடிந்தது. கௌரி அரங்கின் நடுவில் வந்து நின்று பரி இளவரசியை பேரரசருக்கு அறிமுகம் செய்ய வன்னியை அழைத்தார். கௌரியின் அழைப்புக்கு வன்னி பேரரசரின் முன் வந்து நின்றாள்.