யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 52

980

அத்தியாயம் – 52

கௌரி சாரங்கனை திரும்பி பார்த்து, “இளவரசர் சாரங்கன், இளவரசியை தங்களுடன் அழைத்துச் சென்று இவ்வூரை சுற்றிக் காட்டுங்கள். நான் மாதங்க அரசின் இராஜகுரு அமுதமை பார்த்துவிட்டு வருகிறேன்.” என்றார்.

சாரங்கன் தலை வணங்கி, “சரிங்க குருவே.” என்றான்.

சாரங்கனின் பதிலில் தலையசைத்த கௌரி, வன்னியிடம் திரும்பி, “இளவரசி வன்னி, வெளியில் செல்லும் போது இளவரசர் சாரங்கனுடனே இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் யாரையும் அருகில் சேர்க்க கூடாது.

முக்கியமாக நான்கு நாடிகளான, கை, நெற்றி, இதழ் மற்றும் நெஞ்சை தொட யாரையும் விடக் கூடாது. தங்களுக்கு நான் சொல்வது புரிகிறதுதானே.!” என்று கண்ணில் தீவிரம் தெரிய சொன்னார்.

எப்போது வெளியில் சென்றாலும் சொல்லப்படும் இதே வார்த்தைகளை கேட்ட வன்னி க்கு சற்று சலிப்பு எட்டி பார்த்த போதும், சாரங்கனின் கையிலிருந்து இறங்கி கரம்குவித்து வணங்கி, “உத்தரவு குருவே.” என்றாள்.

திருப்தியாக, “ம்ம்.” என்று வன்னியை பார்த்துவிட்டு கௌரி அந்த அறையை விட்டு சென்றுவிட்டார்.

அவர் போவதற்காகவே காத்திருந்தவள் போல வன்னி திரும்பவும் சாரங்கனின் கைகளில் செல்லமாக தாவி, “இளவரசர் சாரங்கன் நாம் போகலாமா?” என்றாள். சாரங்கனும் சின்ன சிரிப்பை உதிர்த்து, அவளை கைகளில் ஏந்தி, “ம்ம்.” என்றான்.

வெளியில் வந்த வன்னி அங்கு நின்றிருந்த ஒரு காவலர்களிடம், “காவலர்களே! ஒருவர் மட்டும் என்னுடன் வந்தால் போதும். மற்றொருவர் என் சிநேகிதர்களுக்கு காவலாக இங்கேயே இருங்க.” என்றாள்.

காவலர்கள் இருவரும், “உத்தரவு இளவரசி.” ஒருவன் அந்த அறையின் வாயிலில் நிற்க அடுத்தவன் வன்னி மற்றும் சாரங்கன் பின் நடக்க ஆரம்பித்தான். அது மட்டுமல்லாமல் சாரங்கனின் காவலர்கள் இருவரும் அவர்களை பின் தொடர்ந்தனர்.

மாலையை நெருங்கி விட்டிருந்த இந்த வேளையில் வீதியின் இருமுனைகளிளும் வண்ண வண்ண விளக்குகள் கொடியை போல கோட்டை முழுதும் பரப்பி அழகு சேர்த்தது. வன்னி சாரங்கனின் கைகளிலிருந்து இறங்கி அவனது ஒரு கையைப் பற்றி அவனுடன் நடந்த விதமாக கடை வீதியை வேடிக்கை பார்த்தாள்.

கண்ணில் மின்னல் தெரிய எல்லாவற்றையும் இரசிக்க ஆரம்பித்தாள். சாதரண நாட்களில் இருக்கும் கடைவீதிக்கும் இளவரசர் சங்கமிக்கும் திருவிழாவான இன்றைய தினத்தில் தெரிந்த கடைவீதிக்கும் பல வேறுபாடுகள் இருந்தது.

ஓரிரு வகை யாளிகள் என்றல்லாமல், பல வகை யாளிகள் நடமாட கோட்டைக்குள் இருந்த யாளிகளின் எண்ணிக்கை இயல்பைவிட மூன்று மடங்கு கூட்டமாக இருந்தது. கலை நிகழ்ச்சிக்காகவும் பாதுகாப்புக்காகவும் மற்ற யாளி அரசிலிருந்து வந்தவர்கள் மட்டுமல்லாமல், வேடிக்கை பார்க்க என்றும், வாணிகம் செய்ய என்றும் பலர் வந்திருந்தனர்.

மஞ்சள் நிற ஆடையில் கம்பீரமான தோற்றமுடன் ஆறடியில் சாரங்கனும், அவன் கைப்பற்றி வெள்ளை நிற பாவடை சட்டையில் மூன்றடி வன்னியும், தெருவின் நடுவில் நடந்தபடி வேடிக்கைப் பார்த்தனர்.

அவர்கள் இருவருக்கும் சற்று தொலைவில் கண்ணெட்டும் தூரத்தில், பரியாளி காவலன் ஒருவனும், இரு சிம்மயாளி காவலர்களும் பின் தொடர்ந்தனர்.

மனித யாளி குழந்தைகள் விளையாட என்று பலவித பொம்மைகளும் விளையாட்டு பொருட்களும் வீதிகளில் விற்றுக் கொண்டிருந்தனர். பலவித திண்பண்டங்களும் விற்றுக்கொண்டிருந்தனர்.

பலூன்கள் நிறைந்த கடையை பார்த்ததும் ஒரு நொடி நடப்பதை நிறுத்தி நின்று பார்த்தாள் வன்னி. பலூனை வாங்கி சென்ற மனித யாளி சிறார்கள் விளையாடுவதை ஆர்வமுடன் நோக்கினாள்.

ஒரு சவ்வு போன்ற இரப்பரில் இணைத்த பலூன் அவர்கள் கையினை அசைக்க பந்து போல முன்னோக்கிச் சென்று மீண்டது. அது அசைந்ததால் ஏதோ சத்தம் கேட்டது. அதனை பார்த்த வன்னி, அது எப்படி இயங்குகிறது.!’ என்று ஆச்சரியமாக பார்த்தாள்.

அவள் முகத்தில் தெரிந்த ஆர்வத்தை பார்த்த சாரங்கன் வன்னிக்காக ஒரு பலூனை வாங்கி அவளிடம் கொடுத்தான். தன் கையில் வந்த பலூனை பார்த்த வன்னிந்த சிறுவர்களை போலவே அதனைக் கொண்டு விளையாடி, அதில் வந்த சத்தம் கேட்டு கிளுக்கி சிரித்தாள்.

பின் நிமிர்ந்து சாரங்கனை பார்த்து வன்னி, “நன்றி இளவரசர் சாரங்கன். நாம் போகலாம்.” என்று அவன் கைப்பற்றியபடியே துள்ளி குதித்துக் கொண்டு நடந்தாள். அவள் இழுத்த இழுப்புக்கு நடந்த சாரங்கனின் இதழ் விரிந்திருந்தது.

அப்படியே சில வீதியை கடந்த வன்னி ஓரெல்லையிலிருந்த பொறியுருண்டை கடையை பார்த்ததும் சாரங்கனை இழுத்து ஓடிச் சென்று சில பொறியுருண்டைகளை வாங்க அருகில் நின்ற காவலருக்கு ஆணையிட்டாள். வாங்கிய பொறியுருண்டைகளில் சிலதை தன் கைக்காப்பில் வைத்தாள்.

அவற்றில் ஒன்றை தன் கையில் எடுத்து தன் வாயில் வைத்தவிதமாக மற்றொன்றை சாரங்கனிடம் கொடுத்து, “இளவரசர் சாரங்கன். இது அருமையாக இருக்கும். சாப்பிட்டு பாருங்க.” என்று கண்ணில் ஒளியுடன் சொன்னாள்.

ம்ம்.” என்று மெதுவாக அவளது கையிலிருந்த் பொறியுருண்டையை வாங்கினான் சாரங்கன். அதனை உடனே சாப்பிடாமல் எதிர்பார்ப்புடன் அவனையே பார்த்த வன்னியின் தலையை வருடினான்.

இயல்பில் வெளியில் வாங்குவதை சாப்பிட்டிராத சாரங்கன் வன்னிக்காக அந்த பொறியுருண்டையை சாப்பிட ஆரம்பித்தான். அவன் சாப்பிட்டுவிட்டதை பார்த்து, “எப்படி. அருமையாய் இல்லை?!!” என்று கேள்வியும் பதிலுமாக கேட்டாள்.

அவள் கேள்வியில் சிரிப்புடனே, ஆமாம் என்பது போல தலையசைத்தான். அப்போது அவர்கள் இருவருக்கு சற்று தொலைவில் ஒரு மரத்தில் சாய்ந்து இருந்த உருவம் அவர்களை பார்த்து விஷமமாக புன்னகைத்தது. அதனை உணராத சாரங்கனும் வன்னியும் மீண்டும் நடக்க ஆரம்பித்தனர்.

சாரங்கன் சற்று தூரம் நடந்தவிதமாக வன்னியை பார்த்து புன்னகைத்து அவள் சொல்வதற்கெல்லாம் தலையசைத்துக் கொண்டிருந்தவனின் முகம், யாரோ தங்களை தொடர்வது போன்ற எச்சரிக்கை உணர்வு வர உடனே தீவிரமாக மாறியது.

வன்னி. சுற்றி பார்த்தது போதும். நேரம் ஆகிவிட்டது. நாம் அரண்மனைக்கு போகலாம்.” என்று வன்னியின் பதிலுக்கும் காத்திராமல், அவளை தன் கைகளில் ஏந்தி வந்த வழி நோக்கி திரும்பி வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

அரண்மனை சுற்று வட்டத்தில் யாரும் பறக்கும் சக்கரம் பயன்படுத்துவதை திருவிழா முடியும் வரை தற்காலிகமாக மாதங்க அரசு தடைச் செய்திருந்தது. அதனால் பறக்கும் சக்கரத்தில் செல்லாமல் வேகமாக நடக்க ஆரம்பித்தான். அவர்களின் பின் அந்த உருவமும் சாரங்கனின் வேகத்திற்கு தொடர்ந்தது.

எதுவும் ஆபத்தென்றால் ஐந்து சக்கரத்தின் இடை நிலையில் இருந்த சாரங்கனால் சமாளிக்க முடியும்தான். போதாத குறைக்கு உடன் வந்த காவலர்கள் மூவரும் கூட ஐந்து சக்கரம்தான். ஆனால் அவர்களை தொடரும் அந்த உருவம் நிச்சயம் அவர்களை விடவும் அதிக சக்கர நிலைக் கொண்டது.

இதனை உணர்ந்த சாரங்கனின் முகம் பல கோணலுக்கு போனது. போதாதற்கு வன்னியின் விசேச வெள்ளி எலும்பு நினைவு வர அவளை காப்பது முதல் கடமை என்று அவளை பாதுகாப்பில் சேர்க்க எண்ணி வேகமாக நடந்தான். வன்னிக்கு ஏன் சாரங்கன் திடீரென்று திரும்பி நடக்கிறான் என்று புரியவில்லை.

அவனிடம் கேள்வி கேட்க நினைத்து அவனை பார்த்தாள். முகம் வெளுத்து தெரிந்த சாரங்கனை பார்த்து திகைத்தாள். உடனே எதுவோ சரியில்லை என்று, திரும்பி காவலர்களை பார்த்தாள். ஆனால் பின் நெருங்கி வந்துக் கொண்டிருந்த காவலர்கள் எங்கு சென்றார்காளோ, கண்ணெட்டும் தூரம் வரை அவர்களை காணவில்லை.

சாரங்கனின் கைகளில் இருந்த போதும், தன் கை விரலை நெற்றியில் வைத்து உடனே கண்கள் மூடி கவனிக்கும் சக்கரத்தை உருவாக்கி அந்த காவலர்களை பார்த்தாள். காவலர்கள் மூவரும் சற்று தொலைவில் ஒரு மரத்தின் அடியில் உறங்கி கொண்டிருந்தனர்.

அவர்களின் நிலை உணர்ந்த வன்னி, ‘என்ன ஆனது என்று குழம்பினாள்.’ அவள் மேலும் எதுவும் யோசிக்குமுன்னே சாரங்கன் அரண்மனை நோக்கி செல்லாமல், மக்கள் கூட்டம் விலகி, சற்று இருளும் மரங்களும் அடர்ந்த பகுதி நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

இருளென்றாலும், பகலன்றாலும் வன்னியால் தெளிவாக பார்க்க முடியும்தான். ஆனால் மனிதயாளிகள் அதிகம் இருந்த அந்த கடைவீதியில் இவர்கள் இப்படி இருளில் மறைந்தது தெரிவதற்கில்லை.

சாரங்கன் ஏன் இங்கு வந்தான் என்று புரியாமல் குழம்பி சாரங்கனின் முகம் நிமிர்ந்து பார்த்தாள். அவன் முகம் முன்பு கொஞ்ச நஞ்சம் இருந்த இரத்தமும் வற்றியது போல வெளுத்து தெரிந்தான். ஆனால் முன்பு போலல்லாமல் வேகம் குறைந்து நிதானமாக நடந்தான்.

அவனுள் ஏதோ மாற்றம் உணர்ந்த வன்னி, “இளவரசர் சாரங்கன்.” என்றாள். ஆனால் சாரங்கன் பதில் சொல்லவில்லை. மனதுள் பயம் எழ அவன் கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றாள். ஆனால் வன்னியால் முடியவில்லை. அவன் சிலை நகர்வது போல, விறைப்புடன் எங்கோ நடந்துக் கொண்டிருந்தான்.

உடனே எச்சரிக்கை உணர்வுடன் தன் கைக்காப்பிலிருந்து புல்லாங்குழல் எடுத்து வாயில் வைத்து அதனை ஊத எத்தனித்தாள். அதற்குள் சாரங்கன் நடப்பது நிறுத்தி வன்னியை தரையில் இறக்கியன்.

பின் அந்த காவலர்களை போல சாரங்கனும் குத்தூசியிட்டது போல தரையில் விழுந்து உறங்க ஆரம்பித்துவிட்டான். தங்களை தாக்க யாரோ செய்யும் வேலை இது என்று புரிந்துக் கொண்ட வன்னி புல்லாங்குழல் கொண்டு தன்னை சுற்றியும் சாரங்கனை சுற்றியும் தனி தனியே பாதுகாக்கும் சக்கரமிட்டாள்.

அவள் முழுதும் சக்கரத்தை முடிக்கும் முன்னே, “ஹாஹாஹாஇளவரசி வன்னி மிகவும் சக்தி வாய்ந்தவள் போல.” என்ற ஆண் குரல் அவள் அருகில் கேட்டது. குரல் கேட்ட திசை நோக்கி திரும்பினாள். ஆனால் கண்ணேட்டும் தூரம் வரை காரிருளே தெரிந்தது.

ஏற்கனவே சில கிராம பிரச்சனைகளுக்கு தன் குருக்களுடன் வெளியில் சென்று வந்திருந்த வன்னிக்கு வந்திருப்பவனின் குரலில் அவனுக்கு எந்த வித நல்ல எண்ணமும் இல்லை என்று ஏனோ உள்ளுணர்வு உணர்த்தியது.

அவளுல் திகில் பரவ, “யார் நீ? என்ன வேண்டும். இளவரசர் சாரங்கனை என்ன செய்தாய்.” என்று கேட்டாள்.

அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல், “பரி அரசின் இளவரசி வெள்ளி எலும்புடன் பிறந்தவள் என்று நான் கேள்வி பட்டது உண்மை தான் போல. பத்து வயதில் 3 வது சக்கர நிலை. இது யாளி உலகம் முழுதும் அறிந்தால் என்ன ஆகும்.குரலிலும் வியப்பும் விஷமமும் தெரிய சொன்னான்.

வெள்ளி எலும்பு என்றதும் அதனை அறிந்திராத வன்னி, “என்ன வெள்ளி எலும்பு? என்ன உலறுகிறாய்.?” என்று மனதில் பயம் இருந்த போதும், முன்பு சிறுப்பிள்ளை போல இருந்த துடுக்குதனம் முற்றிலும் மறைந்து கவனமாக நால்புரமும் வெறித்து பார்த்து நின்றாள்.

அவள் அப்படி பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவளை சுற்றி இருந்த இடம் மாறியது. யாரோ அவள் கன்னத்தை தட்டி, “குட்டி பெண்ணே! குட்டி பெண்ணே!” என்று கனிவாக அழைப்பது கேட்டது.

உடனே கனத்த இமையை திறந்தவளின் எதிரில் கருப்பு ஆடையும், முக்காடும் அணிந்த உருவம் தெரிந்தது. குழப்பமுடன் எதிரில் இருந்தவனை பார்த்தாள். உடனே சற்றுமுன் நடந்ததும் அந்த விஷமமான குரலும் நினைவுவர எச்சரிக்கையுடன் விழித்தாள்.

எதிரில் இருந்தவனை சந்தேகிக்க முடியாதபடி, ‘அவன் எந்த வகை யாளிகளின் நிறத்திலும் ஆடை அணிந்திருக்கவில்லை. அநேகமாக சக்தியற்ற மனிதயாளியாக அவன் இருக்க வேண்டும்.’ என்று நினைத்த வன்னி அவனை விடுத்து சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அருகில் சந்தேகம் தரும்படியாக யாருமில்லை. பின் சாரங்கனை எழுப்ப முயன்றுக் கொண்டிருந்த அந்த முக்காடு மனிதனை திரும்பி பார்த்தாள். இருளோ அல்லது முக்காடு நன்கு முகத்தையும் மறைத்திருந்ததோ அவன் முகம் அவளுக்கு தெளிவாக தெரியவில்லை.

உடனே சற்று முன் நடந்தது கனவு சக்கரத்தினால் வந்த நிகழ்வு என்பதை உணர்ந்தாள். சாரங்கனை எழுப்பிவிட எண்ணி, அவளும் அந்த முக்காடு மனிதனுக்கு உதவச் சென்றாள். ஆனால் அவன் எழுவதாக இல்லை.

அவன் கழுத்தில் உறங்குவதற்கான குத்தூசி இருக்கிறதா? என்று பார்த்தாள். ஆனால் அப்படி எதுவும் இல்லை. அதனால் குழம்பி, ‘இன்னும் யாரும் அவர்களை கட்டுபடுத்துகிறார்களா?’ என்று கவனிக்கும் சக்கரம் கொண்டு தேடினாள் வன்னி.

நல்ல வேளையாக அப்படி யாரும் இல்லை. அதே சமயம் அவர்களது காவலர்களும் கண் விழித்து அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருப்பதை கவனிக்கும் சக்கரத்தில் அறிந்தாள். அதனை அறிந்ததும் பெருமூச்சுவிட்டாள்.

அப்போது அந்த முக்காடு மனிதன், “என்ன ஆனது பெண்ணே! ஏன் இந்த புல்வெளியில் இருவரும் உறங்கிக் கொண்டிருக்கின்றீர்கள்? இருவரையும் பார்த்தால் சிம்ம மற்றும் பரி அரசை சேர்ந்தவர்கள் போல தெரிகிறது.

உங்களை போன்ற சக்தி நிலை கொண்ட யாளிகளுக்கு தங்குவதற்கென்று சத்திரங்களும் தற்காலிக தங்கும் இடங்களும் மாதங்க அரசு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அப்படி இருக்க ஏன் இங்கு இப்படி உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.” என்று கனிவாக கேட்டான்.

கனிவான குரலை கேட்ட வன்னி எச்சரிக்கை உணர்வு மறைய முக்காடு மனிதனை திரும்பி பார்த்து, “எங்களுக்கு உதவியதற்கு நன்றி. எனது காவலர்கள் இங்கு வந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதன் பிறகு எங்களுக்கு உதவுவார்கள்.

மனித யாளியாக இருந்த போதும் தயக்கமில்லாமல் எங்களுக்கு உதவியதற்கு நன்றி. தங்களின் பெயரும் இருப்பிடமும் சொன்னால், தங்களுக்கு தக்க சன்மானம் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்.” என்று பணிவாக சொன்னாள் வன்னி.

அதனை கேட்ட அந்த முக்காடு உருவத்தின் முக்காடினுள் குட்டி சிரிப்பு சத்தம் கேட்டது. பின் வன்னியை நோக்கி, “ குட்டிப் பெண் என்று நினைத்தேன். ஆனால் நீங்க பேசுவதை கேட்கும் போது வயதுக்கு மீறிய உலக அனுபவம் அனுபவித்தவர் போல தோன்றுகிறது.” என்று சற்று நிறுத்தி,

அவளை திரும்பி பார்க்காமல் எதிர்புரம் நடந்தவிதமாக, “எனக்கு எந்த சன்மானமும் வேண்டாம். தாங்கள் இருவரும் ஏதோ கைப்பாவை பொம்மை போல இங்கு நடந்து வந்து இந்த மரத்தின் அடியில் விழுந்து சட்டென்று உறங்கிவிட்டீர்கள்.

இந்த மரத்தின் மேல் கிளையில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்த நான் உங்களால் ஏற்பட்ட சத்தம் கேட்டு எழுந்தேன். எதுவோ தவறாக தோன்ற எழுப்பினேன். மற்றப்படி உங்க சன்மானம் கருதியல்ல. உங்க பாதுகாவலர்கள் வருவதால் நான் கிளம்புகிறேன்.”

என்று, ஒரு கொட்டாவி விட்டு, “இன்னும் பல மரங்கள் கடந்து உள்ளே சென்று உறங்க வேண்டும். அப்போதுதான் இப்படி தேவையில்லாத தொந்தரவுகள் வராது.” என்று முனுமுனுத்து சென்றான் அந்த முக்காடு மனிதன.

அவன் போவதையே பார்த்தவிதம் இருந்த வன்னி முனங்கள் சத்தம் கேட்க சாரங்கனை நோக்கி திரும்பினாள். “இளவரசர் சாரங்கன். எப்படி இருக்கீங்க? நம்மை நோக்கி யாரோ கனவுச் சக்கரம் ஏவியிருக்கிறார்கள். நல்லவேளை அந்த மனித யா……? “ என்று அந்த முக்காடு மனிதனை காட்ட எண்ணி வன்னி திரும்பி கைக்காட்டினாள்.

ஆனால் அதற்குள் எங்கோ காணமல் போய்விட்டிருந்த அந்த முக்காடு உருவம், “கருப்புருவ மனித யாளியே! அதற்குள் எங்கே சென்றாய்.” என்று எழுந்து நின்று அடர்ந்த மரங்களை நோக்கி திரும்பி பார்த்து கத்தினாள்.

ஆனால் வன்னியின் வார்த்தையை பொறுமையுடன் கேட்க சாரங்கனால் முடியவில்லை. ஒரு தாவில் எழுந்து முட்டியிட்டு, “வன்னி. உனக்கெதுவும் இல்லையே. உன்னிடம் யாரும் வரவில்லையே.” என்று அவள் இரு கைகளையும் பற்றி அவன்புரம் திருப்பி கேட்டான்.

அவனது பதட்டம் உணர்ந்து, கனவு சக்கரத்தில் வெள்ளி எலும்பு என்று கேட்ட அந்த ஆண் குரல் நினைவு வர அதனை சாரங்கனிடம் சொல்லலாமா? வேண்டாமா? என்று யோசித்து பின் அதனை சொல்லாமல், “இல்லை இளவரசர் சாரங்கன். நாம் உறங்கிவிட்டோம். அவ்வளவுதான்.” என்றாள்.

…” என்ற சாரங்கன் இன்னும் இயல்படைய மறுத்து, “வா. நாம் குருவை உடனே பார்க்க வேண்டும்.” என்று அவளை மீண்டும் கைகளில் ஏந்தி வேகமாக நடக்க ஆரம்பித்தான். அதற்குள் அவர்களது காவலர்களும், வேறு சில காவலர்களும் கரணியனும் வந்து சேர்ந்தனர்.

கரணியன், “இளவரசர் சாரங்கனுக்கு வணக்கம்.” என்று கரம்குவித்து வணங்கினான். சாரங்கனும், “வணக்கம் தளபதி கரணியன்.” என்றான்.

வன்னி பரி இளவரசி என்று பார்த்திராத கரணியன் அவளை ஒதுக்கி சாரங்கனை பார்த்து, “இங்கு அதிக ஆன்மீக ஆற்றல் பயன்படுத்தியதற்கான சமிக்ஞை வந்தது. அது தாங்களா? என்ன நிகழ்ந்தது. தாங்கள் முழு சக்தியையும் பயன்படுத்த காரணம் என்ன?” என்று பொறுமையாக கேட்டான்.

சாரங்கன் நடந்த நிகழ்வை தெளிவாக கராணியனிடம் சொன்னான். அதனை தீவிரமான முகத்துடன் கேட்ட கரணியன், “நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க ஓய்வெடுங்க. எங்க அரசில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததற்கு எங்களை மன்னித்துவிடுங்க.” என்று தலை தாழ்த்தி சொன்னான்.

சாரங்கன், “விளையாட்டு போல யாரும் இதனை செய்திருந்தால் எச்சரிக்கை தந்து மன்னிக்கலாம். ஆனால் வேறு எதுவும் தீய காரணமென்றால்?!” என்று சற்று நிறுத்தி, “இது குறித்து தீவிரமான விசாரணையும் விளக்கமும் மேற்கொள்வது நல்லது தளபதி கரணின். அது தங்களின் பொறுப்பு.” என்றான்.

நடந்த நிகழ்வில் தெரிந்த சூழ்ச்சி புரிய, நிச்சயம் இளவரசே.” என்றான் கரணியன். வன்னி திரும்பி கரணியனை பார்த்தாள். கரணியனும் வன்னியை பார்த்து இதழ் விரித்தான்.

இளவரசி வன்னியும் நானும் இப்போது அரண்மனை செல்கிறோம்.” என்று அரண்மனை நோக்கி திரும்பினான் சாரங்கன்.

இளவரசி வன்னி என்றதும் நினைவு வர, “சரிங்க இளவரசே!” என்ற கரணியன், சற்று நிறுத்தி, “வணங்குகிறேன் பரி இளவரசி. தாங்கள்தான் கவனிக்க தவறியதற்கு மன்னிக்க வேண்டும்.” என்றான்.

வன்னி, “வணக்கம் தளபதி கரணியன். கவலை வேண்டாம்.” என்று சிரித்தாள். பின் சாரங்கனிடம் திரும்பி, “இளவரசர் சாரங்கன் போகலாம்.” என்றாள்.