யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 51

685

அத்தியாயம் – 51

வன்னி மாதங்க அரசுக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, பேரரசருக்கு கலை நிகழ்ச்சிகள் காண்பிக்கவும், மாதங்க அரசுக்கு உதவியாக இருக்கவும், பரி அரசின் சார்பாக சுமார் 25 பரியாளிகளும் 75 பரி அரசை சேர்ந்த மனித யாளிகளும் தேர் மற்றும் பறக்கும் சக்கரம் மூலமாக பரி அரசிலிருந்து கிளம்பியிருந்தனர்.

அவர்கள் தரை வழி வந்ததால் மாதத்திற்கு பின்பு இன்றுதான் மாதங்க அரசை அடைந்திருந்தனர். பரி அரசிலிருந்து மட்டுமல்லாமல், மகர அரசிலிருந்தும், சிம்ம அரசிலிருந்தும் அவர்கள் அரசின் விஷேச கலை நிகழ்ச்சிகளை பேரரசரின் முன்பு காண்பிக்க ஆர்வமுடன் அவர்கள் பங்குக்கு புடை சூழ ஒன்றாக கூடி வந்திருந்தனர்.

எப்போதும் தவத்திலோ அல்லது அவரது அரண்மனையிலோ இருக்கும் விக்ரம பேரரசரை நான்கு அரசர் அரசிகளும் , நான்கு அரசின் குல குருக்களும் தவிர வேறு யாரும் இந்த ஆயிர வருடத்தில் பார்த்ததில்லை.

மற்றா அரசின் அரண்மனைக்கு சென்று அரசர் அரசியை காண வேண்டுகோள் விடுவது போல், பேரரசரை காண யாரும் முயன்றதில்லை. தனிமை விரும்பியான பேரரசர் சேவகர்கள் என்றுகூட யாரையும் அவருக்கு உதவியாக அவர் அரண்மனையில் அனுமதித்ததில்லை.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக விக்ரம பேரரசரின் அரண்மனை, நான்கு யாளி அரசுகளுக்கும் நடுவில் உள்ள யாரும் அவ்வளவு எளிதில் செல்ல முடியாத அதிக ஆன்மீக ஆற்றல் கொண்ட விதுர மலையில் அமைந்துள்ளது. அதிக ஆன்மீக ஆற்றல் கொண்ட இடத்தில் இடமாற்றும் சக்கரம் மற்றும் பறக்கும் சக்கரத்தை எளிதாக பயன்படுத்த முடியாது.

அதனால், பேரரசர் இப்படி ஆயிரம் வருடத்திற்கு ஒருமுறை இளைய தலை முறை இளவரச இளவரசிகளை காண வரும் இந்த நாளை, யாளி உலகம் முழுதுமே மிக பெரிய திருவிழாவை போல கொண்டாடினர்.

ஒவ்வொரு முறையும் ஒரு அரசு முழுதும் பொறுப்பெடுத்து இந்த திருவிழாவை செய்வர். போன முறை பரி அரசில் இந்த திருவிழா நிகழ்ந்தது. இம்முறை மாதங்க அரசில் என்றால் அடுத்த முறை மகர அரசில் இந்த நிகழ்வு நடக்கும் என்பது ஏற்கனவே நிர்ணயிக்க பட்ட ஒன்று.

நான்கு அரசிலிருந்து வந்த அனைவருக்கும் தங்க ஏற்பாடு செய்து அவர்களின் உணவு மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்வதில் மாதங்க அரசின் படை தலைவர் கரணியன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

நான்கு யாளி அரசுக்கும் இடையில் சின்ன போட்டிகளும், தங்கள் எல்லை என்ற உடமை உணர்வும் இருந்த போதும், பேரரசர் தொடர்பான எந்த நிகழ்வுகளிலும் யாரும் வேற்றுமை காண்பித்ததில்லை.

அதனால் கரணியனுக்கு உதவியாக மாதங்கயாளிகள் மட்டுமல்லாமல், உதவிக்காக மாதங்க அரசுக்கு வந்த பரியாளிகளும், மகரயாளிகளும், சிம்மயாளிகளும் தயங்கவில்லை.

இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு ஆன்மீக ஆற்றல் அதிகம் கொண்ட யாளி உலகை ஆக்கரமிக்க வேறு உலகத்திலிருந்து அரக்கர்கள் இங்கு வந்த போது பேரரசரின் வலது கை யாளியாக நின்று திட்டங்களை சரியாக கையாண்டு போரில் வெற்றி பெற்றதில் கரணியனின் புகழ் யாளி உலகம் முழுதும் அறிந்த ஒன்று.

அதனால் கரணியனின் ஒவ்வொரு கட்டளைகளையும் மற்ற யாளிகள் எந்தவித வெறுப்பும் இல்லாமல் ஏற்று செயல்படுத்தினர். ஓரிரு மணி நேரத்திலே வெகு சாமர்த்தியமாக அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடாதபடி மாதங்க அரசின் கோட்டைக்குள் எல்லா எல்லைகளிலும் சம விகிதமாக காவலாக ஆட்களை அமர்த்திவிட்டான் கரிணியன்.

இவ்வாறு வெகு தீவிரமாக கரணியன் பறக்கும் சக்கரத்தில் இங்கும் அங்குமாக அலைந்து வேலை பார்த்துக் கொண்டிருக்க, சற்று தொலைவில் அவனை தொடர்வது போல மற்றொரு சாம்பல் உருவம் இரகசியமாக அவனை பின் தொடர்ந்துக் கொண்டிருந்து.

தன்னை தொடர்வது யாரென்று அறிந்த போதும், காரியமே கண்ணாக இருந்த கரணியன், தன்னை நிழல் போல தொடரும் உருவை எல்லா பணிகளும் முடியும் வரை சட்டை செய்யவில்லை.

எல்லோரையும் ஒரு வழியாக கையமர்த்திவிட்டு பெருமூச்சுவிட்டான் கரணியன். மாதங்க அரசின் கோட்டை மதில் சுவரில் நின்று, தலை தாழ்த்தி, ஒரு முறை பல வண்ண ஒளிரும் விளக்குகளுடன் இருந்த தன் அரசை திருப்தியாக பார்த்தான்.

பின் தன்னுள் முனுமுனுப்பவன் போல, ஹப்பா. ஒரு வழியாக முடிந்தது. இன்னும் மாதங்க அரசுக்கு வராத, சிம்ம மற்றும் பரி அரசின் இளவரசர்களும் வந்துவிட்டால் நாளைய மறுநாள் விழாவிற்கு எல்லாம் தயார்.” என்று கையில் தூசி தட்டுவது போல தட்டினான்.

அப்போது கரணியனின் முதுகு பின் ஒரு தண்டாயுதம் அவனை நோக்கி பறந்து வந்தது. அதனை உணர்ந்த கரணியனின் இதழ் ஒருபுரம் விஷமமாக விரிந்தது. அவன் எந்தவித சிரமமும் இல்லாமல், திரும்பியும் பாராமல், சற்று விலகி தன் கையை நீட்டினான்.

முன்பு அவன் நின்ற இடத்தில் அவனை பின்னிருந்து தாக்க இருந்த கடாயுதத்தை ஒரு கையால் பிடித்தான். மெதுவாக பின் திரும்பி எதிரில் குறும்பும், சலிப்புமாக தன் குறி தவறியதில் கோபமாக நின்ற பெண் மாதங்க யாளியை பார்த்தான் கரணியன்.

இளவரசி. இப்போதும் என்ன விளையாட்டு. மற்ற யாளி அரசிலிருந்து ஆட்கள் வந்திருக்கிறார்கள். இப்படி நீங்க திருட்டு தனம் செய்பவள் போல மறைந்து மறைந்து வந்து என்னை எப்போதும் போல பின் தொடர்ந்தால் அவர்கள் உங்களை இளவரசி என்று நினைக்க மாட்டார்கள்!!.”

என்றவன், சற்று நிறுத்தி, இதழ் மேலும் விரித்து வாய்விட்டு சிரித்தவிதமாக, “திருடி என்றோ அல்லது தவறு செய்துவிட்டு தப்பிக்க இருக்கும் குற்றவாளி என்றோ எண்ண கூடும்.” என்று மேலும் சிரித்தான்.

ஏற்கனவே தன் கடாயுதம் அவனை தாக்காமல் அவனது கையில் அகப்பட்டதில் கோபமுடன் நின்றிருந்த அல்லி, அவனது கேலி சிரிப்பில் மேலும் கோபம் பொங்க, “தளபதி கரணியன். யாரை திருடி எங்கிறீர்கள்?” என்று தட் தட் என்று அவனது எதிரில் வந்து நின்று தன் இடுப்பில் இரு கைகளையும் வைத்து கேட்டாள்.

அதற்கு பதிலேதும் சொல்லாமல், “ம்ம்? யாரை என்று நினைக்கிறீர்கள் இளவரசி.?” என்று ஒரு புருவம் உயரத்தி கேட்டான். ஆனால் அவனது இதழ் விரிப்பு சற்றும் தளர்ந்தது போல் இல்லை. அதனை பார்த்த அல்லி, எதுவும் பேசாமல் வெடுக்கென்று கரணியனின் கையிலிருந்து தன் கதையை பிடுங்கி முகத்தை சுளித்து காட்டி, திரும்பி அரண்மனை நோக்கி பறந்துச் சென்றாள்.

அவள் போவதையே பின்னிருந்து பார்த்த கரணியனின் புன்னகை, “ஹாஹாஹா…” என்று சிரிப்பாக மாறியது. பின் தொடர்ந்து, “இளவரசி. உங்களால் என்றுமே நான் அறியாமல் என்னை நெருங்க முடியாது.” என்று சத்தமாக சொன்னான்.

அவனது சிரிப்பும் கேலி பேச்சும் கேட்ட அல்லி, கரணியனுக்கு முதுகு காட்டியிருந்த தைரியத்தில் தன் உள்ள உணர்வான குதுகலத்தை அவள் முகத்தில் காட்டி அவளும் மகிழ்ச்சியில் புன்னகைத்தாள். ஆனால் பாவம் கரணியனுக்கு அல்லி இன்னமும் குழந்தை போல கோபமுடன் போவதாகவே தோன்றியது.

ஆம். முன்னூறு எலும்பு வயதான அல்லி, மூவாயிரம் எலும்பு வயதான கரணியனின் மீது இரகசிய காதல் கொண்டிருந்தாள். ஆனால் கரணியன் அல்லியை இன்னமும் சிறுப்பிள்ளை போலவே எண்ணிக் கொண்டிருந்தான்.

அவ்வப்போது சில போர் முறைகளையும், சண்டை பயிற்சிகளையும் அல்லிக்கு கரணியன் சொல்லிக் கொடுப்பதுண்டு. அப்படி ஒரு கலைதான் இரகசிய தாக்கல் முறை (Sneak attack). அதனை செயல் படுத்தவே இன்று அல்லி அவனை பின் தொடர்ந்து வந்து கையும் களவுமாக வெகு சுலபத்தில் கரணியனிடம் மாட்டிக் கொண்டாள்.

இருந்தும் அவனை வெகு அருகில் பார்த்ததிலும், சில வாரங்களாகவே பேரரசரின் வருகைக்காக மிகவும் வேலையாக இருந்த கரணியனிடம் ஓரிரு வார்த்தைகள் பேசியதிலும் அவளது முகம் சூரியனை கண்ட பூவை போல மலர்ந்தது.

சற்று முன்பு கரணியன் பேசியதையும், அவனது புன்னகையையும், அவளது கதாயுதத்தை அவனது கையிலிருந்து வாங்கியப்போது அவன் கைத்தீண்டலையும் எண்ணி அசைப் போட்டுக் கொண்டு பறந்துச் சென்ற அல்லியின் இதழ் வழி நெடுக்க விரிந்திருந்தது.

அப்போது, அவள் எதிரில் பறந்து வந்த அவளது மெய்காவலன் கனகன், “இளவரசி. எங்கே சென்றீர்கள்.? ஊரெல்லாம் பலவித ஆட்கள் இருக்கும் நிலையில் மூன்று சக்கர இடை நிலையில் நீங்க இருந்த போதும், இப்படி தனியே செல்வது பாதுகாப்பனதல்ல.” என்றான்.

எதிரில் சிறு பதற்றமுடன் வந்த கனகனின் முகம் பார்த்ததும் அல்லியின் புன்னகையெல்லாம் துணி வைத்து துடைத்தாற் போல மறைந்து போனது. கனகனின் முகம் பார்க்க பிடிக்காமல், நின்று அவனிடம் பேசாமல் பறக்கும் சக்கரத்தில் பறந்தவிதமாக பேசினாள்.

மெய்காவலர் கனகன். என்னுடன் பாதுகாப்பிற்கு தளபதி கரணியன் இருந்தார். அதனால் என்னை குறித்து கவலை பட வேண்டாம். இப்போது நான் ஓய்வெடுக்க போகிறேன். என்னை பின் தொடர்வதை விட்டுவிட்டு, பயனுள்ளதாக எதுவும் கரணியனுக்கு உதவ முடியுமா என்று பாருங்கள்.” என்று விற்றேற்றியாக சொல்லிக் கொண்டு சென்றுவிட்டாள்.

அவளது அலட்சிய பதிலிலும், ஏற்கனவே கரணியன் மீது பொறாமையுடன் இருந்த கனகனின் முகம் கருத்தது. அவனது கை முஷ்டி இறுகி அவனது விரல்கள் உள்ளங்கைகளை புன்னாக்கியது. பற்கள் நரநரவென கடித்த கனகன் எதுவும் சொல்ல முடியாமல், “உத்தரவு இளவரசி.” என்றான்.

ஆனால் அவனுக்கு பதில் சொல்லதான் யாருமில்லை. அல்லி எப்போதோ பறந்து கண்ணெட்டும் தூரம் கடந்துச் சென்றுவிட்டிருந்தாள்.

***

வன்னி, மதி, முகிலன் மற்றும் இரண்டு மெய் பாதுகாவலர்கள் என்று ஐவரும் இடமாற்றும் சக்கரத்தில் பரி அரசிலிருந்து மாதங்க அரசுக்கு பயணித்தனர். சில நாழிகைகளில் மாதங்க அரசுக்கு வந்துவிட்ட அவர்களை மாதங்க அரசின் அரசர் அரசியர் அன்புடன் வரவேற்றனர்.

இடமாற்றும் சக்கரத்திலிருந்து வெளியில் வந்த இளவரசி அரசர் அரசியருக்கு கரம் குவித்து தரையில் குனிந்து வணங்கி நின்றாள். சிறுப்பிள்ளையான போதும் பணிவுடன் நின்ற வன்னியை கைத்தொட்டு எழுப்பினார் மாதங்க அரசி.

மாதங்க அரசர், இளவரசி வன்னி. பத்து வயதுக்குள் இரண்டு சக்கர கடை நிலையில் இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. உன்னுடைய வயதில் என் மகள் அல்லி, மற்ற சிறுவர் சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அவளது 30வது வயதில்தான் அவள் முதல் சக்கர நிலை அடைந்தாள்.” என்று வன்னியை பெருமை பேசி சிரித்தார்.

வன்னியின் பெற்றோர்கள் தனியே தன் மகளை அனுப்புவதால் அதிக பொறாமையை தூண்டக் கூடாது என்று எண்ணி அவளது சக்தி நிலையை இரண்டாவது சக்கரத்தில் தெரியும் படி அவளது கைக்காப்பில் ஒரு கருவியை பொருத்தி அனுப்பியிருந்தனர். அதனாலே மாதங்க அரசர் வன்னியை இரண்டு சக்கரம் என்று எண்ணினார்.

மாதங்க அரசரின் பேச்சில் அவர் பின்னே நின்றிருந்த அல்லி குறைப்படவளாக, சலுகையாக அவரது கைப்பற்றி சினுங்களுடன், “தந்தையே!” என்றாள்.

அவளது சினுங்களை பார்த்த மாதங்க அரசர், “பார். இப்போதும் நான் இல்லையென்றால் தந்தை எங்கே என்று ஊரெல்லாம் கூட்டிவிடுவாள். அதனால் நான் எப்போதும் அவள் விழி எட்டும் தூரத்திலே இருக்க வேண்டும்.” என்று தன் மகளை கிண்டல் செய்து சிரித்தார்.

அவர்களை ஆர்வமாக பார்த்த வன்னிக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை. ‘தன் இரு குருக்களும், பெற்றோர்களும், தன்னுடைய 20வது வயதிற்குள் நான் 7 சக்கர சக்தி நிலையையும் அடைந்திட வேண்டுமென்று ஒரு நொடியும் வீணாக்க விடாமல் தவம் புரிய வைத்தனர்.

கூடவே அதிக சக்தியை விரைவில் அடையும் இளவரசிதான் அவள் பதவிக்கு தகுதியானவள். அவளே நாளை தன்னையும் தன் அரசையும் ஆபத்திலிருந்து காப்பாற்ற முடியும்.’ என்ற அவர்கள் சொன்னது நினைவு வர, ‘இங்கு மாதங்க அரசின் இளவரசி 30 வயது வரை ஆன போதும் முதல் சக்கர நிலை அடையவில்லையா? ஏன்.?’ என்று குழம்பினாள்.

இருந்தும் அதனை இவர்களிடம் கேட்பது உசிதமல்ல என்று உள்ளுணர்வு சொல்ல, அதுகுறித்து எதுவும் சொல்லாமல், “ம்ம்… சற்று காலம் கடந்து என்ற போதும் இளவரசி அல்லியின் பெருமையும் சிறந்ததே. அதற்குள் மூன்றாம் சக்கரத்தின் இடை நிலையை அடைந்திருக்கும் இளவரசி அல்லி இன்னும் மேலும் மேலும் வளர்வார்.” என்றாள்.

அவள் பதிலை கேட்ட மாதங்க அரசர் அரசி இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டர். ‘எப்படி பத்து வயது சிறுமி இவ்வளவு நிதானமுடன் பேச முடியும். கூடவே அல்லியின் சக்கர நிலை, இரண்டாவது சக்கர நிலையில் உள்ள வன்னி எப்படி அறிந்தாள். தாங்கள் யாரும் அல்லியின் சக்தி நிலை குறித்து வெளியில் சொல்ல வில்லையே.’ என்று திகைத்தனர்.

இருந்தும் உடனே முகம் மாற்றி வன்னியை நோக்கி புன்னகைத்தனர் இருவரும். “நல்லது இளவரசி வன்னி. நாளை பேரரசர் வந்துவிடுவார். அதனால் இப்போது தாங்களும் தங்களுடன் வந்தவர்களும் ஓய்வெடுத்துக் கொள்ளுங்க.” என்று காவலர்களையும் சேவகர்களையும் வரவழைத்து வன்னியை வழி அனுப்பினார்.

இயல்பாக மாதங்க அரசர் அரசி மற்றும் இளவரசியிடம் வன்னி பேசிய போதும் அவள் மனதில் முதல் முறையாக ஒரு முடிச்சு விழ தன் பெற்றோர்களிடம் இந்த சக்தி நிலை மற்றும் மற்ற இளவரசர்களுக்கும் தனக்குமான பேதம் குறித்து கேட்க திண்ணம் கொண்டாள் வன்னி.

வன்னி சென்ற சில நாழிகைகளில் சிம்ம அரசின் இராஜகுரு கௌரியும், இளவரசர் சாரங்கனும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களின் வருகைக்காகவே காத்திருந்த மாதங்க அரசர் அரசியும், அல்லியும், “வணக்கம் சிம்ம இராஜகுரு கௌரி. இளவரசர் சாரங்கன். வாருங்கள்.” என்று வரவேற்றர்.

பின் ஓரிரு வார்த்தைகள் அவர்களிடம் பேசிய பின் அவர்களையும் ஓய்வெடுக்க அனுப்பி வைத்தார். முந்தினமே மகர அரசின் இளவரசர் துருவனும் வந்துவிட்டதால் மேலும் இடமாற்றும் சக்கரம் இருக்கும் இடத்தில் காத்திராமல் வேறு வேலைகள் செய்ய அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.

ஓய்வெடுக்கும் அறைக்கு வந்ததும் மதி, முகிலன், வன்னி மூவரும் அவர்களுக்கான மெத்தையில் அமர்ந்தனர். அறை வந்து இயல்பாக அமர்ந்த போதும் வன்னியின் முகம் குழம்பியே இருப்பதை பார்த்த மதி, “வன்னி.” என்று விழித்தாள்.

வன்னி ஏதோ சிந்தனையுடன் தலைத்தாழ்த்தி அமர்ந்திருக்க மதியின் குரலில், “ம்ம்?” என்றாள். மதி எதுவும் கேட்குமுன்னே முகிலன், “வன்னி. ஏன் சோர்ந்து தெரியுற.” என்று வன்னியை அப்படி பார்த்திராததால் கேட்டான்.

கூடவே அவள் நெற்றியை தொட்டு பார்த்து, “எதுவும் காய்ச்சலோ அல்லது சக்கர நிலை உயர்வோ இல்லை. பிறகேன் உன் முகம் வெளுத்து தெரிகிறது.?” என்று குழம்பி கேட்டான்.

அவனது கேள்வியில் தன்னிலை உணர்ந்த வன்னி, உடனே கிளுக்கி சிரித்து, “முகிலன். ஒன்றும் பெரியதாக இல்லை. எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. அதனை நம் குருவிடம் கேட்க வேண்டும். அதுதான் எப்படி கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.” என்றாள் மனதில் உள்ளதை மறையாமல்.

அதை கேட்ட முகிலன், மூன்றாம் சக்கர நிலையில் உள்ள வன்னிக்கு பாடத்தில்தான் ஏதோ சந்தேகம் போல என்று நினைத்து, “அதுதான் இல்லையா. நாம் ஒரு வாரத்திற்கு பின் நம் அரசு சென்றதும் கேட்டுவிடலாம்.” என்று சிரித்தான்.

ஆனால் மதிக்கு வன்னியின் சந்தேகம் என்னவென்று அவள் வாய்விட்டு சொல்லாமலே தெரிந்தது. வெளியில் செல்லும் போது எப்போதும் வன்னியின் பாதுகாப்பிலும் மன நலத்திலும் அக்கறையுடன் இருக்கும் மதி, மாதங்க அரசர் அல்லியின் 30 வயதில் முதல் சக்கர நிலை என்று சொன்னதிலிருந்துதான் வன்னியின் முகம் சோர்ந்தது என்று நன்கு அறிவாள்.

இருந்தும் வெளிப்படையாக எதுவும் கேட்கவில்லை. 5 வருடத்திற்கு முன்பு வன்னியின் சிநேகத்தால் அவளது வாழ்வு மாற்றமடைந்தது. வெளிப்படையாக மதியிடம் வன்னியின் விஷேச நிலையை தன் குரு கௌரி சொல்லாத போதும்,

மதியால் ஓரளவு வன்னியின் நிலை யூகிக்க முடிகிறது. வன்னியின் உடல் பிரதேகமான சக்தியுடையதாக இருக்க வேண்டும். அவளது உடல் நிலை குறித்து யாரும் தெளிவாக அறியுமுன்னே அவள் முழு சக்தியும் அடைந்துவிட்டால்,

அவளது விஷேச நிலையை தனதாக்கிக் கொள்ள வருபவர்களிடம் அவள் தன்னை காப்பாற்றிக் கொள்ள அது உதவும் என்றே அவள் சக்தி நிலை விரைவில் அடைய அவர்கள் துரிதபடுத்திக் கொண்டிருக்கின்றனர்.’ வந்த சில மாதங்களிலே மதி உணர்ந்திருந்தாள்.

ஆனால் அதனை வன்னியிடம் அவள் சொல்வதை விட அவளது பெற்றோர்களோ அல்லது குருக்களோ சொல்வதுதான் உசிதம்.’ என்று வாளாவிருந்தாள் மதி.

வன்னியும் சில நிமிட சிந்தனைக்கு பின் அது குறித்து யோசித்துக் கொண்டிராமல், விரைவிலே பழைய துடுக்குதனம் மீண்டு, துள்ளி குதித்து அவர்கள் இருந்த அறையை நோட்டமிட ஆரம்பித்தாள்.

சிம்ம அரசின் அரண்மனைக்கு அடிக்கடி தன்னுடைய வைத்திய குருவான கௌரியுடன் பல முறை சென்றிருந்த போதும், மாதங்க அரசின் அரண்மனைக்கு வன்னி வருவது இதுவே முதல் முறை.

சிம்ம அரசின் அரண்மனையில் திரை சீலைகளும், மற்ற அலங்காரங்களும் மஞ்சள் நிறத்தில் மினுமினுத்ததென்றால், இங்கு சாம்பல் நிறத்தில் இருந்தது. அநேகமாக மகர அரசில் நீல நிறத்தில் இருக்கும்

தன்னுடை குருவின் கூற்று நினைவு வர, ‘சிம்மர்கள் மஞ்சள் நிறத்தை அதிகம் பார்த்தால் அவர்களின் ஆன்மீக ஆற்றல் உறிஞ்சும் சக்தி பல மடங்கு பெருகும். அதே போல மாதங்கர்களுக்கு சாம்பல் நிறம். மகரர்களுக்கு நீல நிறம். நம்மை போல பரியாளிகளுக்கு வெள்ளை நிறம்.’ என்று தன்னுள் முனுமுனுத்தாள்.

பின் திரும்பி, “மதி, முகிலன். வாங்க நாம் வெளியில் சுற்றி பார்த்துவிட்டு வரலாம்.” என்று குதுகலமக அவர்களின் கைப்பற்றி இழுத்தாள்.

அப்போது, “இளவரசி வன்னி. அவர்கள் தவம் புரிய வேண்டும். இன்னும் அவர்களின் முதல் சக்கர நிலை உறுதியடையவில்லை. இப்போது தவம் செய்யாமல் அலைந்தால், அது அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும்.” என்று கௌரி சொல்லிக் கொண்டு அந்த அறைக்கு வந்தாள்.

தொடர்ந்து, “ஓரிடத்தில் இருந்து தவம் செய்யாமல், அவர்கள் ஏன் உன்னுடன் இங்கு வந்தார்கள் என்று எனக்கு புரியவில்லை. முன்பே சந்திரனிடம் சொன்னேன். என் சீடன் மதி தவம் புரிவதை சில காலம் தொந்தரவு செய்ய கூடாது என்று. என்ன செய்து வைதிருக்கிறார் பார்.” என்று முகத்தில் கடுப்பு தெரிய பரி அரசின் இராஜகுருவை குற்றம் சாட்டினார்.

அறையிலிருந்த மூவரும் பதில் சொல்லும் முன்னே. “இளவரசி அவர்கள் இங்கேயே தவம் செய்யட்டும். அவர்களை நாம் இங்கிருந்து கிளம்பும் வரை தொந்தரவு செய்ய வேண்டாம்.என்று தீர்க்கமாக சொன்னார் கௌரி.

கௌரியின் பார்த்து,வணங்குகிறேன் குருவே. உத்தரவு குருவே.” என்று கரம் குவித்து வணங்கிச் சொன்னாள். அவளை தொடர்ந்து மதியும், முகிலனும் வணங்கினர்.

பின் நொடியும் தாமதிக்காமல் அந்த அறையில் ஆளுக்கு ஒரு மூளையில் தரையில் விரிப்பினை விரித்து மதியும், முகிலனும் தவம் செய்ய ஆரம்பித்தனர். அவர்களின் செயலில் திருப்தியுற்ற கௌரி, அவர்கள் இருவர் அருகிலும் சென்று அவர்கள் முன் கையளவு கொண்ட மினுமினுக்கும் கல்லை வைத்தார்.

மதியின் முன் இருந்த கல் மஞ்சள் நிறத்தில் அபரிவிதமான ஆன்மீக சக்தியை வெளியிட்டது. சிம்ம யாளியான மதியின் உடலில் ஆன்மீக ஆற்றல் உறிஞ்சபடுவதை அவள் உடலில் உணர்ந்த வெப்ப நிலையில் உணர்ந்தாள்.

அதே போல முகிலன் முன் வெள்ளை நிற பலிங்கு கல்லிருந்து ஆன்மீக ஆற்றல் அவனது உடலில் சேர்ந்தது. இருவரும் சுற்றம் மறந்து ஆள் நிலை தியானத்திற்கு சென்றது அவர்களின் சீரான மூச்சிலே தெரிந்தது.

அதனை பார்த்த வன்னி, தான் விளையாட வெளியில் செல்வதென்றால் தனியாகதான் செல்ல வேண்டும் என்பதை உணர்ந்து சோர்ந்த போதும் மதி மற்றும் முகிலனின் சக்தி நிலை உயர்வதை உணர்ந்து மனதுள் ஒருவித இதம் பரவ அமைதியாக தலை தாழ்த்தி நின்றாள்.

அப்போது கௌரியை தொடர்ந்து சிம்ம இளவரசர் சாரங்கனும் அங்கு வந்து சேர்ந்தான். சாரங்கன் 600 வருட எலும்பு வயதுக் கொண்ட சிம்ம யாளி இளவரசன். அவரது தாய் தந்தையர் இப்போதைய சிம்ம அரசர் அரசியர் இருவரும் தங்கள் அரியணையில் கிட்டத்தட்ட 2000 வருடங்கள் இருந்துவிட்டனர்.

இன்னும் ஓரிரு பத்து வருடங்களில் அநேகமாக சாரங்கனை சிம்ம அரசனாக்கிவிட்டு ஓய்வெடுக்க செல்வதாக அவர்கள் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர். அதனோடு இருக்கும் இளவரசர் இளவரசிகளிலே சாரங்கன்தான் அதிக வயதுடையவன்.

வன்னி சிம்ம அரசுக்கு தன் குருவான கௌரியுடன் வரும் போதெல்லாம் சாரங்கன் அவளுடன் வாஞ்சையாக விளையாடுவான். எப்போதும் துரு துருவென சுற்றிக் கொண்டிருக்கும் வன்னியை செல்லமாக தூக்கிக் கொண்டு சிம்ம அரசின் கடைவீதிகளில் சுற்றி திறிவான்.

மதி முகிலனுடன் விளையாட முடியாது என்று சோர்ந்திருந்த வன்னியின் முகம் அவனை பார்த்ததும் பிரகாசமடைந்தது. கௌரியையும் மறந்து சாரங்கனை நோக்கி, “இளவரசர் சாரங்கன்.” என்று தாவி குதித்து அவனது கைகளில் அடங்கினாள்.

அவள் ஓடி வருவதை பார்த்த சாரங்கள் கைகளை விரித்து அவளை தூக்கி அவனது தலைக்கு மேலே இருமுறை தூக்கி போட்டு பிடித்து விளையாடி, பின் கைகளில் ஏந்தி, “வன்னி. என்ன குறும்புதனம் செய்து இன்று நம் குருவை கோபப்படுத்தினாய்.” என்று செல்லமாக அவளது மூக்கை தடவினான் சாரங்கன்.

அதனை கேட்டதும் வன்னியின் முகம் வாட சலுகையுடன் உதடு பிதுக்கி, “நான் எதுவும் செய்யவில்லை இளவரசர் சாரங்கன்.” என்று கிசுகிசுக்கும் குரலில் சினுங்களுடன் சொன்னாள்.

Author Note:

So many new names. எதாவது குழப்பம் இருந்தால் தயங்காம கேளுங்க readers.

பரி இளவரசி வன்னி

சிம்ம இளவரசர் சாரங்கன்

மாதங்க இளவரசி அல்லி (உவா வோட அம்மா.)

மகர இளவரசர் துருவன்.