யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 50

916

அத்தியாயம் – 50

வன்னியின் குரல் கேட்டதும், எங்கு எதிரில் இருக்கும் வைத்தியர் இளவரசியிடம் உண்மையைச் சொல்லிவிடுவாரோ என்று முகம் வெளுத்தவன், மிரண்டு அந்த வைத்தியரைப் பார்த்தான் நந்தன்.

அவன் கவலையை உணர்ந்த கௌரி பெருமூச்சுவிட்டு, “நீ நாளை இங்கிருந்து கிளம்புவதாகச் சொன்னதால், நான் இளவரசியிடம் உன்னைப் பற்றி எதுவும் இப்போது சொல்லமாட்டேன். கவலைபடாதே!” என்று நந்தனை பார்த்துச் சொன்னாள்.

பின் நந்தன் முன்பு தரையில் எழுதியதை சுத்த சக்கரம்மூலம் சுத்தம் செய்தார். நந்தன் நன்றியுடன் கௌரியை பார்த்தான். அவனையும் அறியாமல் அவனது கண்ணிலிருந்து நீர் நழுவியது.

அதற்குள் நந்தன் இருந்த அறையின் வாயிலை அடைந்துவிட்டடிருந்த வன்னி, தன் பாவடையை ஒரு கையில் தூக்கிக் கொண்டு உள்ளே நந்தனை பார்த்தவிதம் ஓடிவந்தாள். அவள் பின்னே சேவகி ஒருத்தியும் இரு காவலர்களும் வந்தனர்.

காவலர்கள் வாயிலில் நிற்கச் சேவகி வன்னியுடன் அறையில் நுழைந்தார். நந்தனின் கலங்கிய முகத்தைப் பார்த்த வன்னி அருகில் தன் வைத்திய குரு இருப்பதையும் உணராமல் நேராக நந்தனை நோக்கி ஓடினாள்.

நந்தனும் வன்னியை பார்த்ததும் அவளை நோக்கித் தத்தி தத்தி ஓடிச்சென்றான். வன்னி அருகில் வந்து நந்தனின் உயரத்திற்கு முட்டிப் போட்டு அமர நந்தன் அவளது கழுத்து வளைவில் தன் முகத்தைப் பொதித்து மீண்டும் மென்மையாகவும் ஏக்கமாகவும் கனைத்தான்.

அதனைக் கேட்ட வன்னி அவனது முதுகை வருடியபடி, “பரிக்குட்டி, ஏன் இப்படி கனைக்கிற. இன்னும் வலிக்கிறதா? எங்கு வலிகிறது. என்னிடம் சொல்லு. அழுகாதே. நான் உன்னுடனே இருக்கிறேன். சரியா. என்னுடன் இருந்தால் உன் வலியெல்லாம் போய்விடும்.” என்று அவளுக்குத் தெரிந்த முறையில் நந்தனுக்கு சமாதனம் செய்தாள்.

அவளது குரல் அவன் காதருகில் ஒலிக்க மெல்ல அமைதியானான். சின்ன விக்கலுடன் கண்கள் மூடி வாஞ்சையாக அவள் கழுத்தில் வருடினான். அவன் அமைதியானதும் வன்னி பெருமூச்சுவிட்டு, “வா முதலில் மெத்தையில் படு. நா…” என்று சொல்லிக் கொண்டு நிமிர்ந்தாள்.

அப்போதுதான் தன் வைத்திய குருவும் அந்த அறையில் இருப்பதை உணர்ந்தாள் வன்னி. உடனே குருபக்தி மீள நந்தனிலிருந்து விலகி, “வணங்குகிறேன் குருவே. தங்களை கவனிக்க தவறியதற்கு என்னை மன்னிக்கை வேண்டும்.” என்று சிரம் தாழ்த்தி கரம் குவித்து சொன்னாள் வன்னி.

அதுவரை வன்னியையும் நந்தனையும் பார்த்திருந்த கௌரி மனதில் முடிச்சு விழ வன்னிக்கு, “ம்ம்…” என்று யோசனையோடு தலையசைத்தாள். சற்று தாமதித்து, “தங்கள் சிநேகிதன் என்னை வைத்தியம் பார்க்க விடாமல் இருப்பதற்காகவே கத்தினான்.

மற்றப்படி அவனக்கு இந்த வலியெல்லாம் பழகிய ஒன்றுதான். அவன் கண்ணில் உள்ள வெளுப்பை பார்க்கும்போது குறைந்தது இரண்டு மூன்று வருடமாவது அவன் இது போன்ற தொடர்ந்த வலியில் இருக்க வேண்டும். அதனால் வலியால் அப்படி கனைத்தான் என்று சொல்ல முடியாது.” என்று சற்று நிறுத்தி,

“நான் தங்களுக்கு சொல்லிக் கொடுத்த வைத்தியத்தை பயன்படுத்தத் தங்களுக்கு ஒரு வாய்ப்பு. இது தங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். அவனைப் பரிசோதித்து அவனது புறகாயங்களையாவது குணப்படுத்த வேண்டும்.” என்று வன்னியிடம் சொன்னாள்.

பாவம் கௌரிக்கு வன்னி ஏற்கனவே நந்தனது மூன்று பெரிய புறக்காயங்களை குணப்படுத்தியது தெரியவில்லை. இருந்தும் வன்னி அதனைப் பெருமையாகத் தன் குருவிடம் சொல்லாமல், “உத்தரவு குருவே.” என்று கௌரி பார்க்க நந்தனின் உடலில் இன்னும் இருந்த காயங்களை நொடியில் தன் ஆன்மீக சக்தியால் குணப்படுத்தினாள்.

அவள் வெகுவிரைவிலே காயங்களைக் குணப்படுத்தியது பார்த்துத் திருப்தியுற்ற கௌரி, “நல்லது. நல்ல முன்னேற்றம். இந்தக் குதிரை குட்டியின் காயம் குணமாகிவிட்டதால் நான் இங்கிருந்து கிளம்புகிறேன். தாங்களும் அதிக நேரம் இங்கிருக்காமல் தங்களது அறைக்குச் செல்ல வேண்டும் இளவரசி.” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்ப எத்தனித்தாள்.

அப்போது, “குருவே. ஒரு சந்தேகம். பரிக்குட்டி இரண்டு மூன்று வருடமாக வலியில் இருக்க வேண்டுமென்று சொன்னீங்க. அது ஏன்.? இன்னமும் அந்த வலி அவனுக்கு இருக்கிறதா? அப்படி இருந்தால் அதனை முழுதும் குணப்படுத்த ஏதேனும் வழியிருக்கிறதா?” என்று படப்படப்புடன் கேட்டாள் வன்னி.,

அதனைக் கேட்ட கௌரி நடப்பதை நிறுத்தித் திரும்பி வன்னியை பார்த்தாள். இன்றுதான் பார்த்த யாரென்றே தெரியாத ஒரு கலப்பின யாளியின் வலியைப் போக்க துடிதுடித்து நிற்கும் வன்னி பார்த்து, கௌரிக்கு, ‘வைத்தியர் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும்.’ என்று பெருமை கொள்வதா

அல்லது, ‘இந்த இரக்கம் வன்னிக்கு பிற்காலத்தில் பிரச்சனை தருமோ.’ என்று பயப்படுவதா என்றே தெரியவில்லை. அவர் மனம் இப்படி கலங்கியிருந்த போதும் தன் சீடனாக இருக்கும் வன்னிக்கு அவளது சந்தேகத்திற்கு பதிலளிக்காமல் இல்லை.

நந்தனை பார்த்து, “அவன் உடலில் குறைந்தது மூன்று கலப்பின யாளியின் இரத்தம் இருக்கிறது. இரண்டென்றால் நம் யாளி உலகில் ஏற்கனவே மருந்து இருக்கிறது. அதனால் இருவேறு இரத்தம் கொண்ட கலப்பின யாளிகள் அதனை உட்கொண்டால் மனித யாளிகள் போல அவர்கள் வாழ முடியும்.

ஆனால் இவனது சூழலுக்கு இன்னும் எந்த மருந்தும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இன்னொரு பிரச்சனை என்னவென்றால், ஒரு உருவிலிருந்து மற்றொரு உருவம் மாறும் போதும் அவர்கள் மீண்டும் சிறுப்பிள்ளை போன்ற தோற்ற வயதில் தெரிவர்.

உதாரணத்திற்கு இவனுக்கு 10 வயதேனும் இருக்க வேண்டும். ஆனால் இவன் இரண்டு வருடத்திற்கு முன்புதான் அவனது வேறு உருவிலிருந்து பரி உருவத்திற்கு மாறியிருக்க வேண்டும். அதனால் இரு வயது பரிக்குட்டியின் உருவில் இருக்கிறான்.

இதனால் அவனது இரத்த ஓட்டம் ஒவ்வொரு முறை உருவ மாற்றத்தின் போதும் குழம்பி அவனது ஒவ்வொரு எலும்பிலும் வலியைத் தரும். இவனுக்கு ஏற்றது போல் மருந்து விரைவில் கண்டுப்பிடிக்கவில்லை என்றால் இவன் இன்னும் 25 வருடம் வாழ்வது கூடக் கடினம்.

நாளைத் தங்களுக்கு கலப்பின யாளிகள் குறித்தும் ஏற்கனவே இரு கலப்பின யாளிகளுக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து குறித்தும் பாடம் சொல்கிறேன். இப்போது நேரம் கடந்துவிட்டது. நான் ஓய்வெடுக்க செல்கிறேன்.” என்று நீண்ட விளக்கம் தந்து நடக்க ஆரம்பித்தார்.

அதனைக் கேட்ட வன்னி வாயடைத்து நின்றாள். மேலும் கேள்வி கேட்கத் தோன்றிய போதும் ஏற்கனவே வாயில்வரை கடந்துவிட்டிருந்த தன் குருவை மேலும் இன்று தொந்தரவு செய்ய வன்னி விரும்பவில்லை.

ஆனால் நந்தன் எப்போதும் வலியில் இருப்பான் என்ற செய்தி அவளுக்கு வருத்தத்தைத் தந்தது. முகம் சோர்ந்து திரும்பி நந்தனை பார்த்தாள். நந்தன் வன்னி உள்ளே வந்ததிலிருந்து அவளை விடுத்து வேறேதையும் பார்க்கைவில்லை.

கௌரி சொன்னது காதில் விழுந்த போதும், அவன் அதில் பெரிதாகக் கவனம் செலுத்தவில்லை. எதனால் என்றே தெரியாமல் இரண்டு வருடம் வலியில் இருந்துவிட்ட நந்தன், இன்று தன் வலியின் காரணம் தான் கலப்பின யாளி என்பதே என்று மட்டும் தெரிந்துக் கொண்டான்.

ஆனால் வன்னி கவலையாக நிற்பது பிடிக்காமல் மீண்டும் அவள் அருகில் வந்து வாஞ்சையாக அவள் இடையில் தன் தலையை வருடினான். வன்னி அவனது தலையை வருடி, “நான் என் குருவிடம் எல்லா பாடங்களையும் பயின்று உனக்கு விரைவில் மருந்து கண்டுபிடித்து உன்னைக் குணப்படுத்துகிறேன்.

கவலை படாதே? சரியா. வா.” என்று மெத்தையை தட்டி, “நீ முதலில் கொஞ்சம் ஓய்வெடு. மற்றது பிறகு பேசலாம்.” என்றாள்.

நந்தன் அவள் சொன்னதும் மெத்தையில் மெல்ல ஏறி அமர்ந்தவன் அருகில் நின்றிருந்த வன்னியின் கையை லேசாகத் தன் வாயில் கவ்வி அவளையும் மெத்தையில் அமரச் சொன்னான். வன்னி அவன் வாய்விட்டுச் சொல்லவில்லையென்ற போதும் உண்மை உணர்ந்து அவளும் ஏறி மெத்தையில் அமர்ந்தாள்.

அவள் அமர்ந்ததும் நந்தன் மெல்ல நகர்ந்து அவளது மடியில் தன் தலையை வைத்துக் கண்கள் மூடிக் கொண்டான். வன்னி அவனது செயலில் கிளுக்கி சிரித்து அவன் தலையை வருடினாள். “நந்தன் உனக்குப் பத்து வயதென்று சொன்னால் என்னால் நம்பவே முடியவில்லை.” என்றாள்.

நந்தன் செல்லமாகச் சினுங்கினான்(whining). ஆனால் எதுவும் செய்யவில்லை. அவன் அமைதியாக இருக்க வன்னி தொடர்ந்து பேசினாள்.

“பரிகுட்டி, இனி உன்னைப் போலவோ மதியை போலவோ யாரும் பசியால் திருடவோ இறக்கவோ மாட்டார்கள். என் தந்தை, அன்னையிடம் சொல்லித் தினமும் ஒரு வேளையாவது நம் அரசில் அன்னதானம் ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டேன்.

அவர்களும் நம் அரசின் கீழ் உள்ள எல்லா சத்திரத்திலும் காசில்லாதவர்களுக்கு இலவசமாக உணவு தர ஏற்பாடு செய்ய ஆணையிட்டுவிட்டனர்.” என்றாள். அவள் சொன்னதை கேட்ட நந்தன் அவள் மடியிலிருந்து எழுந்து நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான்.

அவன் கண்கள், ‘என் தேவதை. நாளை முதல் உன்னை நான் பார்க்க முடியாது.’ என்று ஏக்கமாகப் பார்த்தது. ஆனால் வன்னிக்கு அவனது பார்வையின் பொருள், வலி என்று தோன்ற அவனது நெற்றியை தன் நெற்றியில் ஒற்றி,

“நந்தன் எனக்குப் பசியால் ஒரே ஒரு முறை உணர்ந்த வலியைத் தவிர வேறேதுவும் தெரியாது. அதுவும் எனக்குப் பாடம் கற்று தர என் குரு எனக்குச் சொல்லிக் கொடுத்தபோது உணர்ந்தது. அதனால் எனக்கு உன் வலி என்னவென்று புரியவில்லை.

ஆனால் உன் கலங்கிய முகம் பார்க்கும்போது, அது மிகவும் வலிக்கும் என்று தோன்றுகிறது. இன்னும் கொஞ்ச நாள் பொருத்துக் கொள். சரியா? நான் மூன்று மாதத்திற்கு முன்புதான் மருத்துவம் கற்க ஆரம்பித்தேன்.

விரைவிலே உனக்கு மருந்து கண்டு நான் உன்னைக் குணப்படுத்திவிடுவேன். அதுவரை கொஞ்சம் பொருத்துக் கொள். சரியா?” என்று அவனது வலியைத் தான் உணர்வது போல் சொன்னாள். நந்தனின் கண்கள் நெகிழ்ச்சியில் கலங்க லேசாக அவன் தலையசைத்து மீண்டும் அவள் மடியில் சாய்ந்துக் கொண்டான்.

உடன் வந்திருந்த சேவகி, “இளவரசி உறங்கும் நேரம் ஆகிவிட்டது.” என்றாள்.

அதனைக் கேட்ட வன்னி, “ஓ. போகலாம்.” என்று சேவகியிடம் சொன்னாள். ஆனால் நந்தன் அதனைக் கேட்டதும் உடல் விரைப்புற்று வன்னியின் மடியை விட்டுத் தன் தலையிய அசைக்கவில்லை. “நந்தன். நாளைப் பார்க்கலாம்.” என்று எழ முயன்றாள்.

ஆனால் நந்தன் சினுங்கி கனைத்தான். ஆனால் நகரவில்லை. அவனது செயலில் சிரித்த வன்னி என்ன செய்வதென்று புரியாமல் சேவகியை நிமிர்ந்து பார்த்தாள். பின், “நான் இன்று நந்தனுடன் இருக்கிறேன். நீயும் இங்கே ஓய்வெடு என்று அவளைப் பணித்தாள்.” வன்னி.

அதனைக் கேட்ட சேவகி ஒரு நொடி திகைத்தாள். பின் இளவரசியின் பேச்சுக்கு மறுப்பு சொல்ல முடியாமல் படப்படப்புடன், “உத்தரவு இளவரசி. நான் காவலர்களிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வருகிறேன்.” என்று சொன்னாள்.

சேவகிக்கு சரி எனபது போல் தலையசைத்த வன்னி, லாவகமாக மெத்தையில் சாய்ந்து படுத்துக் கொள்ள, நந்தனின் உடல் இயல்பாகி வன்னியின் கை வளைவுக்குள் லேசாகக் கண்ணயர்ந்தான்.

அதன்பிறகு நள்ளிரவில் நந்தன் வன்னியின் கன்னத்தில் தன் முகத்தை வாஞ்சையாக வருடியதோ, அல்லது அமைதியாக அவளது கை வளைவிலிருந்து நழுவி அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்து அந்த அறையை விட்டுச் சென்றதோ எதுவும் வன்னிக்கு தெரியாது.

வன்னியின் பத்தாவது வயதில்…

பரி அரசவையில் மந்திரிகளும் அரசர் அரசியும் அமர்ந்திருக்க அவர்களுக்கு முன் மூன்று சக்கரத்தின் இடை நிலையில் இருந்த வன்னி சிரம் தாழ்த்தி வணங்கி நின்றாள்.

பூவேந்தன், “இளவரசி, நாளை ஒவ்வொரு அரசின் இளவரச இளவரசிகளும் பேரரசரை சந்திக்க மாதங்க அரசுக்குச் செல்ல வேண்டும். மற்ற இளவரசர் இளவரசிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது உன் எலும்பு வயது மிகவும் சிறியது என்ற போதும், போகும் இடத்தில் நம் அரசின் பெருமை சேர்க்கும்படி நடந்துக் கொள்ள வேண்டும்.” என்று சொன்னார்.

அதற்குச் சிரம் தாழ்த்தி, “உத்தரவு தந்தையே.” என்று சொன்னாள் வன்னி.

பத்தே வயதென்ற போதும், அடிக்கடி தன் குருவுடன் பரி அரசை விட்டு வெளியில் சென்றதிலும், ஊரில் ஏற்படும் பிரச்சனைகளைச் சரி செய்ய உதவியதிலும் வன்னியின் விளையாட்டுதனம் தற்போதெல்லாம் எல்லை மீறியதில்லை.

அதனால் பூவேந்தனும் நண்மலரும் தன் மகளை நினைத்துப் பெருமையுடன் பார்த்தனர். நண்மலர் மந்திரியைத் திரும்பிப் பார்த்து, “ஞிமிலி! இளவரசி கிளம்ப ஏற்பாடு செய்யுங்க. இரு ஐந்து சக்கர காவலரையும் உடன் செல்ல ஏற்பாடுச் செய்.” என்று தன் மெய் காப்பாளினியை பணித்தாள்.

ஞிமிலி, “உத்தரவு அரசி.” என்று உடனே செயல் படுத்த அங்கிருந்து கிளம்பினார். அதனைக் கேட்ட வன்னி முதல் முறை தன் குரு உடன் அல்லாமல் தனியே செல்வதை உணர்ந்து புதுவித கிளர்ச்சியுடன் ஆவலாக நாளைய நாளை எதிர் நோக்கி நின்றாள்.

கூடவே மனதில் ஒன்று தோன்ற, “தந்தையே. என்னுடன் என் சிநேகிதர்களையும் மாதங்க அரசுக்கு அழைத்துச் செல்லலாமா?” என்றாள்.

பூவேந்தன், “ம்ம்…” என்று யோசிக்க, சந்திரகுரு இடை புகுந்து, “அரசர் அரசியே. அவர்கள் இப்போதுதான் முதல் சக்கர சக்தி நிலைக் கொண்டு ஆன்மிக இதய வேர் உருவாக்கிக் கொண்டு இருக்கின்றனர். அவர்களது சக்தியை நிலை படுத்தும் வரை அவர்கள் வெளியில் செல்வது உசிதமில்லை.” என்றார்.

உடனே முகம் சோர்ந்தாள் வன்னி. அவள் சோர்ந்த முகத்தைப் பார்த்து, ‘பத்து வயது சிறுமி இயல்பாக விளையாடவும் நேரம் இல்லாமல் தன் சக்தியை அதிகரிப்பதிலும், ஊர் பிரச்சனைகளைச் சரி செய்வதிலும் அலைவதை பொறுக்க முடியாமல்

பூவேந்தன், “சந்திரரே! அவர்கள் இளவரசியுடம் போகட்டுமே. அவள் சிநேகிதர்கள் வெளியில் எங்கும் செல்ல வேண்டாம். மாதங்க அரசில் தங்கும் வேளையில் வன்னியுடன் இருந்தால் அவளுக்கும் அந்நிய இடமென்ற தயக்கம் இருக்காதல்லவா?” என்றார்.

அரசரைத் திரும்பிப் பார்த்த இராஜகுரு, “ம்ம். வெளியில் எங்கும் அலையாமல் அறையில் தவம் செய்வதென்றால் முகிலனும் மதியும் உடன் செல்லட்டும் அரசே. ஆனால் பேரரசரை பார்க்கும்போது இளவரசி மட்டும் செல்வது நல்லது.” என்றார்.

பூவேந்தன், “அப்படியே செய்யச் சொல்வோம். வன்னி, உன் சிநேகிதர்களையும் உன் உன்னுடன் செல்ல அனுமதிக்கிறேன். கிளம்புவதற்கு ஆயுதமாகுங்கள்.” என்றார்.

வன்னி உடனே முகம் பிரகாசிக்க, “நன்றி தந்தையே! நன்றி குருவே.” என்றாள்.

ஆம் ஐந்து வருடத்திற்கு முன் நந்தன் ஒரு வார்த்தையும் சொல்லாமல் சென்று விட இரண்டு நாள் காவலர்களைக் கொண்டு அவனைத் தேட பணித்த போதும், அதன் பிறகு அவனைக் கண்டு பிடிக்க முடியாததால் வன்னி அவனை மறந்தே போனாள்.

இப்போது அவளுடன் இருப்பது மதியும் முகிலனுமே. சந்திரகுருவே முகிலனுக்கும் வன்னிக்கும் குருவாக இருக்க, கௌரி மதிக்கும் வன்னிக்கும் குருவாகப் பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறார். தொடர்ந்த விடா முயற்சியால், மதியும் முகிலனும் இரு மாதத்திற்கு முன்புதான் ஆன்மீக இதய வேரும் தங்களின் கைக்காப்பும் உருவாக்கி முதல் சக்கர நிலை அடைந்திருந்தனர்.

இப்போது ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் அனைத்து இளவரசர்களின் பேரரசருடனான சந்திப்பில் கலந்துக் கொள்ளவே வன்னியை பரி அரசின் சார்பாகப் பூவேந்தனும், நண்மலரும் அனுப்ப ஏற்பாடு செய்துக் கொண்டிருக்கின்றனர்.