யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 49.2

681

காவலர்களுடன் மதி, நந்தன் மற்றும் முகிலன் மூவரும் கடை வீதியைக் கடந்து அரண்மனை நோக்கி நடந்தனர். இருண்டு விட்ட போதும் ஆங்காங்கே வெள்ளை நிற குழல், வெளிச்சம் பரப்பி அந்தக் கடை வீதியை இன்னும் கோலகலமாகக் காட்டிக் கொண்டிருந்தது.

இப்படி முன்னும் பின்னும் காவலர்கள் சூழ நடந்து செல்வது மதிக்கு என்னமோ போல இருந்தது. கூடவே குகனது குடும்பம் அமைத்திருந்த கடையைக் கடக்கவும் மதிக்கு அவர்களிடம் ஒருவார்த்தை சொல்லிவிட்டு வருவது மேல் என்று தோன்றி, தன் இடது புரம் நடந்த முகிலனிடம் திரும்பிப் பேசினாள்.

“முகிலன் நான் என்னைப் பார்த்துக் கொள்பவர்களிடம் அரண்மனை செல்வதை சொல்லிவிட்டு வர வேண்டும். நான் சென்று வரக் காவலர்களிடம் அனுமதி பெற்று தருகிறாயா?” என்று கேட்டாள் மதி.

முகிலன், “உன்னைப் பார்த்துக் கொண்டவர்களிடம் ஏற்கனவே நீ இனி இளவரசியுடன் இருக்க போவதை சொல்லி அனுமதியும் வாங்கிவிட்டாகிவிட்டது. எதையும் யோசிக்காமல் வா.” என்று விட்டேற்றியாகச் சொல்லிவிட்டு முகம் திருப்பிக் கொண்டு நடந்தான்.

“இளவரசி கைக்காப்பை மறைக்கும் கருவியை நீக்கிப் புல்லாங்குழல் ஊத ஆரம்பித்த போதே அவளது இருப்பிடம் அறிந்துவிட்ட காவலர்கள், வன்னியின் அன்றைய எல்லா செயல்களையும் ஒரு நாழிகையில் அறிந்து அவள் சந்தித்த அனைவரையும் பரிசோதித்துவிட்டனர்.

கூடவே மதி வன்னியுடன் சிநேகமாகத் துணை நின்றதை குகனுடன் இருந்த மற்ற சிறுவர்கள் சொன்னதில் மதியின் பூர்வீகம் உடனே அறிந்து வன்னி வாய்விட்டுச் சொல்லும் முன்னே மதியை வன்னியுடன் இருக்க அரசரும் அரசியும் ஏற்பாடு செய்துவிட்டனர். இது கூடத் தெரியாமல் என்னிடம் கேள்வி கேட்பதை பார் இந்த மதி?” என்று வாய்விட்டே முனுமுனுத்தான் முகிலன்.

இதனைக் கேட்ட மதி திகைத்தாள். கூடவே வன்னியின் பெற்றோர்களை எண்ணி, ‘இப்படியும் பெற்றோர்கள் உண்டா? மகள் சொல்லாமலே அவள் விருப்பம் அறிந்து செயல் படுவெதென்றால், அவர்களுக்குள் எவ்வளவு புரிதல் இருக்க வேண்டும்.’ என்று எண்ணி வியந்தாள்.

ஆனால் இதைக் கேட்ட நந்தன் பதற்றமுற்றான். ‘மதியை போலவே தன்னை பற்றியும் விசாரித்து அறிந்திருப்பார்களா? நான் முன்பு என்ன செய்தேன் என்றும் இவர்களுக்குத் தெரிந்திருக்குமா?’ என்று திடுக்குற்றான்.

இப்படி மூவரும் மூன்றுவிதமாக யோசித்துக் கொண்டிருக்க மூவரையும் இரவில் தங்க ஏற்பாடு செய்துவிட்டு காவலர்கள் சென்றுவிட்டனர். சிறிது நேரத்தில் நந்தனின் அறைக்கு 5 சக்கர ஆன்மீக சக்தி நிலைக் கொண்ட சிம்ம பெண்யாளி வந்தார்.

அறையின் மேஜையிலிருந்த பழங்களை ஒருவித தயக்கமுடன் ஒவ்வொன்றாக எடுத்து உண்டபடி நந்தன் அடுத்து என்ன நிகழ இருக்கிறது என்று புரியாமல் யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது அறைக்கு வந்த அந்தச் சிம்ம யாளியை அவன் கவனிக்கவில்லை.

அந்தச் சிம்மயாளி, “ம்கும்.” என்று தன் தொண்டையை செறும அந்தச் சத்தம் கேட்டு வாயிலிருந்த பழம் நழுவி விழ நந்தன் வந்த புதியவளை எச்சரிக்கை உணர்வுடன் பார்த்தான். அவள், நந்தன் அருகில் நெருங்கி வர நந்தன் பின்னோக்கி நடந்து பின்னிருந்த சுவரில் ஒட்டிக்கொண்டான்.

வந்தவளை தாக்கிவிட்டு ஓடத் தயாராக இருப்பது போல அவளை முறைத்து பார்த்து நின்றான். சிம்ம யாளிகளின் குலகுருவும், வன்னியின் வைத்திய குருவுமான கௌரி, “பயம் வேண்டாம். நான் வைத்தியர். உன் காயம் அறிய வந்திருக்கிறேன்.” என்றாள்.

கௌரியை நிமிர்ந்து பார்த்து நந்தன் வந்திருப்பவர் வெறும் வைத்தியர் என்று நிம்மதியுற்ற போதும் தன் உடலின் நிலைகுறித்து வந்திருக்கும் புதிய பெண்ணிடம் காட்ட அவனுக்கு விருப்பமில்லை. தன் முன்னங்கால்களை இரண்டு முறை தூக்கி முரண்டு பிடித்தான்.

அதனைப் பார்த்த கௌரி சிரித்து உடனே முகம் மாற்றித் தீவிரமாக ஆராயும் பார்வை நந்தனை பார்த்து, “என்ன செய்ய நினைக்கிறாய்.? மாதங்க அரசில் உன் பெற்றோர்களைக் கொன்றுவிட்டு இங்குப் பரியரசுக்கு ஓடி வந்திருக்கிறாய். இப்போது என்ன எதிர்பார்த்து பரி இளவரசி வன்னியை நெருங்கினாய்?” என்று நேரடையாகக் கேட்டு நின்றார்.

அவர் சொன்னதை கேட்டதும் நந்தனின் விழிகள் பயத்தில் வெளுத்தது. ‘இதனை இளவரசியிடம் ஏற்கனவே சொல்லிவிட்டனரா?’ என்று நினைத்தவனின் முகம் முன்பு முரண்டு பிடித்தவிதத்திலிருந்து மாறி அமைதியாகி எதிரில் இருந்தவளை வெறித்தது.

அவன் அடங்கி அமைதியானது பார்த்துக் கௌரி, “பயப்படாதே! உன் சிநேகிதியிடம் இதுகுறித்து நாங்க எதுவும் சொல்லவில்லை.” என்றாள். இதைக் கேட்ட நந்தனின் கண்ணில் ஒளி மீண்டது. ஆனால் உடனே சோர்ந்தது.

‘அப்படிபட்ட மோஷமான பிறந்த வரலாற்றை வைத்துக் கொண்டு எந்தத் தைரியத்தில் இளவரசியுடன் இருக்க வேண்டுமென்று நான் இங்கு வந்தேன். என்னைப் பற்றி அறிந்தால் என் தேவதை என்மீது இப்போது போல அன்பு காட்டுவார்களா?’ என்று கலங்கி, தன்னை தானே நொந்துக் கொண்டான் நந்தன்.

அவனது கலங்கிய முகம் பார்த்துப் பெருமூச்சுவிட்ட கௌரி, “பல வருடம் முன்பு நடந்த நிகழ்வுகளை யாரிடமும் எடுத்துச் சொல்வதால் எதுவும் மாறப் போவதில்லை. நீ இப்போது நல்லவிதமாக இருந்த போதும் உன்னை எங்களால் இளவரசியுடன் இருக்க வைக்க முடியாது.

உன் உடல் காயங்களைக் குணப்படுத்துகிறேன். கூடவே இந்த மந்திரபையில் கிட்டதட்ட 400 தங்க காசுகள் இருக்கிறது.” என்று மந்திரப்பையை அங்கிருந்த மேஜை மீது வைத்துவிட்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்தவிதம், “இதனைக் கொண்டு எந்தவித சங்கடமும் இல்லாமல் பல வருடம் வாழலாம்.

இதுவும் இளவரசி உன்மீது கொண்ட கருணைக்கு தரும் வெகுமதி. இதனை எடுத்துக் கொண்டு நாளை விடிவதற்குள் இங்கிருந்து கிளம்பி விட வேண்டும். மற்றப்படி அவளுடன் உன்னை இருக்க வைக்கப் பரி அரசரும் சரி அரசியும் சரி விரும்பவில்லை.

என்னால் இதற்கு மேல் எதுவும் உனக்கு உதவ முடியாது. கலப்பின யாளிகள் பலவீனமாக இருந்த போதும் அவர்கள் குறைந்தது 150 எலும்பு வருடமாவது வாழ்வர். ஆனால் உன் விழியினை பார்க்கும்போது உன் உடல் மிகவும் பலவீனமாக இருக்கிறது.

நீ இன்னும் 20 வருடம் வாழ்வதும் கடினம். அதனால் உன் குற்றத்திற்கு தண்டனை பெற்று தருவதில் எந்த அர்த்தமும் இல்லை. அதனால்…” என்று சொல்லிக் கொண்டே போனவர் நிமிர்ந்து நந்தனை பார்த்தார்.

நந்தனுக்கு அவனது உடல் நிலை ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான். ஆனால் தன் இளவரசியை விட்டுப் போக வேண்டும் என்று எண்ணியதும் அவன் கண்ணிலிருந்து நீர் வர ஆரம்பித்தது. என்ன இருந்தும் நந்தன் வெறும் 10 வயதுதான் ஆன சக்தியற்ற யாளியல்லவா.

அவன் வாழ்வில் சில நாழிகள்தான் வந்து சென்ற வன்னியென்னும் வசந்தத்தை தன்னுடைய கடந்த கால நிகழ்வுகளால் விட்டுச் செல்ல வேண்டும் என்று என்னும் போதே தாங்க முடியாமல் மனவலியில் கனைக்க ஆரம்பித்தான்.

நந்தனின் இந்தச் செயலை எதிர் பார்த்திராத கௌரி ஒரு நொடி திகைத்தார். “வன்னியின் மீதான உன் அன்பு புரிகிறது. ஆனால் என்னால் ஒன்று உன்னை இப்போது வெளியில் அனுப்ப முடியும். அல்லது உண்மையை வன்னியிடம் சொல்லி உன்னைச் சிறையில் அடைக்க முடியும்.

அமைதியாக நீ இங்கிருந்து கிளம்புவதா? அல்லது இருப்பதா என்று நீயே முடிவெடுத்துக் கொள். இப்படி கனைப்பதால், அனாவசியமாக இளவரசி இங்கு வர நேரிடும். அதனோடு உன் உண்மை அறிந்தால் அவள் உன்னை வெறுக்கவும் நேரிடும்.” என்று பொறுமையாகச் சொன்னாள்.

நந்தன் சட்டென அமைதியானான். இருந்தும் விட்டு விட்டு விக்கல் வரக் கலங்கிய கண்ணுடன் நிமிர்ந்து கௌரியை பார்த்தான். பின் மேஜையின் மீதிருந்த நாவல் பழம் ஒன்றை தன் வாயில் கவ்வி, தரையில் எழுத ஆரம்பித்தான்.

“எனக்குச் சிறை தண்டனைபற்றிக் கவலையில்லை. ஆனால் என் இளவரசி என்னை வெறுத்துவிடுவதை என்னால் பொறுக்க முடியாது. அதனால் நான் இங்கிருந்து கிளம்பிவிடுகிறேன்.

இருந்து கடைசியாக நான் ஒருமுறை இளவரசியை பார்த்துவிட்டுப் போகிறேன். எனக்கு மருத்துவம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. எனக்கு எந்தக் காசும் தேவையில்லை.” என்று ஆங்காங்கே உடைந்த கோடுகளில் தரையில் எழுதிக் காட்டினான்.

அதனைப் படித்த கௌரி பெருமூச்சு விட்டுச் சரி என்பது போலத் தலையசைத்தாள். “இளவரசி அறியாமல் பார்த்துவிட்டுச் செல். நீ செல்வதை யாரும் தடுக்க மாட்டார்கள். நாளைக் காலை நீ இங்கு இருக்க கூடாது. இருந்தால் என்னால் எதிலும் உதவ முடியாது.” என்றார்.

நந்தன் சரி என்பது போல் தலையசைத்தான். அப்போது, “பரிகுட்டி. பரிகுட்டி. என்ன ஆச்சு. ஏன் கத்துகிறாய். இன்னும் வலிக்கிறது.?” என்று கேட்டுக் கொண்டு வன்னி அவன் இருந்த விருந்தினர் மாளிகைக்கு ஓடி வந்தாள்.