யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 49.1

674

அத்தியாயம் – 49

கொஞ்ச நேரத்தில் மதி ஒரு குவளையில் தண்ணீருடன் வர, அவள் பின்னே வன்னியின் இருப்பிடத்தை அறிந்த காவலர்களும், சேவகியும், முகிலனும் தொடர்ந்து வந்தனர்.

“வன்னி…வன்னி…” என்று கத்திய வண்ணம் முகிலன் மதியை கடந்து வன்னியை நோக்கி ஓடி வந்தான். காவலர்களைப் பார்த்ததும் தன்னுடைய ஒரு நாள் கூத்து முடிவுற்றதை எண்ணி பெருமூச்சுவிட்டு வன்னி தரையிலிருந்து எழுந்து நின்றாள். அவளுடன் சேர்ந்து நந்தனும் எழுந்து நின்றான்.

முகிலன் ஓடி வந்து, “எங்க போன நீ. நா எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா?” என்று வன்னியை அணைத்துக் கொண்டு சினுங்கினான்.

வன்னி அவனை முதுகில் தட்டி, “முகிலன், நான் விளையாடதான் போனேன். உன்னை என்னுடன் வரச் சொல்லிச் சைகைச் செய்தேன். நீ தான் கவனிக்கவில்லை. அதுதான் நா விளையாடத் தனியாகவே வந்துவிட்டேன். பயப்படாதே.

நான் இன்று நிறைய கத்துகிட்டேன் தெரியுமா? அதோடு எனக்குப் புதிதாக இரண்டு சிநேகிதர்கள் கிடைத்திருக்கிறார்கள். அவர்களோடு இனி நாம் விளையாடலாம். சரியா. அழுவதை நிறுத்து. என்னை விடு முதலில். அரண்மனைச் சென்று மற்றது பேசலாம்.” என்றாள்.

முகிலன் வன்னியை விட ஒரு அடி உயரம் அதிகமாக இருப்பான் இருந்தும் சிறுப்பிள்ளை போலப் பிடிவாதத்துடன், “எனக்கு வேறு யாருடனும் சிநேகிதம் வேண்டாம். எனக்கு உன்னோடான சிநேகிதம் மட்டும் போதும். இனி இப்படி வெளியில் வரும்போது என்னை விட்டுப் போகமாட்டேன் என்று உறுதிக் கொடு. அப்போதுதான் நான் உன்னை விடுவேன்.” என்று பிடிவாதம் பிடித்தான்.

அப்போது அருகில் வந்துவிட்டிருந்த மதி, “வன்னி. யாரிந்த அழுமூஞ்சி. என்ன நடந்தது என்று இப்படி அழுகிறது. வழியிலிருந்து விலகச் சொல். நான் அந்தக் குதிரைக் குட்டிக்கு நான் தண்ணீர் கொடுக்க வேண்டும்.” என்று கண்களை உருட்டி முகிலனை பார்த்து முறைத்துச் சொன்னாள்.

மதியின் குரல் கேட்டு வன்னியிலிருந்து தலையை மட்டும் தூக்கி, “ஏய். யார் நீ? என் சிநேகிதியிடம் நான் எப்படியும் இருப்பேன். அது கேட்க நீ யார். நான் என் வன்னியை விட்டு…” என்று முகிலன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் கால்மீது கனமான கல் விழுந்தது போன்று தோன்ற வலியில், “ஸ்…ஆ…” என்று கத்தினான்.

வன்னியிலிருந்து விலகித் துள்ளி குதித்து தன் கால் வலித்த இடத்தைப் பார்த்தவன், அவன் கால் குட்டி குதிரை என்று நினைத்து ஒதுக்கிவிட்டிருந்த குதிரையின் கால் மிதியின் அடியில் அழுந்தக் கிடந்தது. “ஏய் என் காலை விடு. வன்னி… யார் இவங்க இருவரும்.

ஒருவள் என்னைத் திட்டுகிறாள். மற்றொருவன் என்னை மிதிக்கிறான்.” என்று கண்கள் கலங்க சொன்னான் முகிலன். ஆனால் அவர்களின் செயலில் வன்னிக்கு பேதமாகத் தெரியவில்லை.

சிநேகிதர்கள் என்றால் இப்படி கலகலப்பாக ஊடல்களுடனும் கூடல்களுடனும்தான் இருக்க வேண்டும் என்று இன்று குகன் மற்றும் அந்தச் சிறுமியின் சண்டையில் தெரிந்துக் கொண்டிருந்தாள்.

அதனால் வன்னி குதிகலத்துடன் அவர்களை முகிலனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். “முகிலன், இவள் மதி சிம்மயாளி. என் புதிய சிநேகிதி. இது பரிகுட்டி நந்தன். என் புதிய சிநேகிதன்.” என்று அறிமுகம் செய்தாள்.

மதி, பரிகுட்டி, இவன் முகிலன் நான் பிறந்ததிலிருந்து என்னுடனே இருக்கும் என் ஒரே சிநேகிதன்.” என்று அவர்களுக்குள் அறிமுகம் செய்தாள்.

மதி முகிலனை பார்த்துக் கண்ணை உருட்டினாள். ஆனால் எதுவும் பேசவில்லை. முகிலன் மதியின் முகத்தைப் பார்த்து, “வன்னி இவர்களைக் காணதான் என்னை விட்டு ஓடி வந்தாயா?” என்று பொறாமை பொங்க கோபமாகக் கேட்டான்.

வன்னி முகிலனின் முதுகில் தட்டி, அவன் கேள்வியை ஒதுக்கி, “வா அரண்மனைச் சென்று பேசலாம். பரிகுட்டிக்கு பசிக்கிறது.” என்று நந்தனை பார்த்துத் திடும்பி சொன்னாள்.

அவர்கள் பேசுவதையெல்லாம் முறைத்து பார்த்திருந்த நந்தன் பரிகுட்டி என்று வன்னி சொன்னதும் முகம் மாறி அவள் கையருகே தன் தலையைக் கொணர்ந்து தேய்த்துக் கொண்டான்.

இருந்தும் ஓர கண்ணால் முகிலன் மற்றும் மதியை முறைத்து, அவர்கள் தன் தேவதையைத் தன்னிடமிருந்து பரித்துக் கொள்ள வந்ததாக நினைத்துக் கொண்டு எச்சரிக்கையான உணார்வுடன் வன்னியை ஒட்டி நின்றான்.

மதி தண்ணீர் குவலையை எடுத்துக் கொண்டு குதிரையின் அருகில் சென்றாள். ஆனால் மதியை தன் அருகில் நெருங்க விடாத நந்தன் வன்னியின் பின் ஒழிந்துக் கொண்டு கனைத்தான். வன்னிக்கு பரிகுட்டியின் பயம் புரிய, “மதி. நான் கொடுக்கிறேன். என்னிடம் நீரைக் கொடு.” என்றாள்.

மதி அந்தப் பரிகுட்டியின் முகத்தைப் பார்த்து எதோ உணர்ந்தவள் போல எதுவும் பேசாமல் வன்னியிடம் நீர் குவலையை கொடுத்தாள். ஆனால் முகிலன் எதுவும் உணராமல், “வன்னி. நீயே எதற்கு இந்த வேலைச் செய்கிறாய். சேவகியும் இங்கு வந்துவிட்டாள் அவளிடம் செய்யச் சொல்கிறேன் இருங்க.” என்றான் முகிலன்.

ஆனால் அதுவரை காத்திருக்காமல் வன்னி குவளையை சாய்ததுமே அதிலிருந்து நீரை அருந்த ஆரம்பித்திருந்தான் நந்தன். குதிரை குட்டியாக இருந்த போதும் ஓர கண்ணில் அவன் பார்த்த பார்வை முகிலனுக்கு அவனைப் பார்த்துக் கேலி செய்வது போலத் தோன்றியது.

“வன்னி, இந்தப் பரிக்குட்டி என்னைப் பார்த்துக் கேலி செய்கிறது.” என்று புகார் செய்தான் முகிலன்.

வன்னி, “முகிலன். என்ன ஆச்சு உனக்கு. இவர்கள் நம் சிநேகிதர்கள். அவர்களிடம் ஏன் குறை காண்கிறாய்.” என்று நந்தனுக்கு நீர் கொடுத்தவிதம் திரும்பிப் பாராமல் சொன்னாள். அதனைக் கேட்ட நந்தன், ‘பார்த்தாயா. வன்னி இளவரசி மட்டுமல்ல. இது என் தேவதையும் கூட?’ என்பது போல மமதையுடன் முகிலனை பார்த்தான்.

அதனைப் பார்த்த முகிலன் கோபமாக, “நீ… நீ…” என்று நந்தனை அடிக்கப் போனான். இவையனைத்தையும் ஓரமாக இருந்து கவனித்த மதி, ஒரடி எடுத்து வைத்து முகிலனின் கைப்பற்றி, குரல் தாழ்த்தி, “பொறுமையாக இரு முகிலன்.” என்றாள்.

வன்னி அல்லாத வேறு எந்தச் சிறுவர்களுடனும் பழகியிராத முகிலன் திடீரென்று தன் கைப்பற்றிய தன் வயதை ஒத்த மதியின் கிசுகிசுத்த குரலில் பேச்சு வராமல் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவள் கண்களாலே முகிலனை அமர்த்தினாள். முகிலன் ஏதோ கட்டுண்டவன் போல் அமைதியானான்.

நந்தன் நீர் அருந்தியதும்தான் நிமிர்ந்த வன்னி, அங்குக் கவலையும் பயமுமாக எதிரில் ஒரு கால் முட்டிப் போட்டுத் தலைத்தாழ்த்தி நெஞ்சில் கைவைத்து அமர்ந்திருந்த காவலர்களைப் பார்த்தாள். அவர்களின் செயல் காரணம் புரியாமல் திடுக்கிட்டாள்.

“காவலர்களே. ஏன் முட்டிப் போட்டு நிற்கிறீர்கள். முதலில் எழுந்திருங்க.” என்று ஆணையிட்டாள் வன்னி.

அவள் ஆணையில் எழுந்து நின்ற சேவகர்கள், “உத்தரவு இளவரசி.” என்று ஒன்றாகச் சொன்னனர். இருந்தும் மனதில் கலவரத்துடன் இருந்த அவர்களைப் பார்த்து, “என்ன நிகழ்ந்தது? ஏன் இப்படி சோர்ந்து தெரியிரீங்க.” என்றாள் வன்னி.

“எங்களை மன்னித்து விடுங்க இளவரசி. தங்களை நாங்கள் ஒழுங்காகப் பாதுகாக்கவில்லை. எங்களது எச்சரிக்கையின்மைக்கு, எங்களுக்குத் தண்டனை வழுங்குங்க.” என்றனர் கவலர்களுடன் சேவகியும்.

அதனைக் கேட்ட வன்னி ஒரு நொடி திகைத்து, ‘இதிலென்ன இருக்கிறது என்று இப்படி பயப்பட வேண்டும். இரு சக்கர சக்தி கொண்ட என்னால் என்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதா?’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அந்தப் பூங்காவில் முன்பிருந்த காவலர்கள் மட்டுமல்லாமல் இன்னும் பல காவலர்கள் வந்து வன்னியை சுற்றி வளைத்தனர்.

திடீரென்று கூட்டமாக வந்த காவலர்களின் செயல் காரணம் புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தாள். மதி இளவரசி என்று வன்னியை வந்தவர்கள் அழைத்ததிலே முகம் வெளுத்தாள். அரண்மனை சேர்ந்த பெண் என்று நினைத்தப் போதும்பரியரசின் இளவரசி என்று வன்னியை நினைக்கைவில்லை.

அதனால் இப்படி தீடீரென்று கூட்டமாகக் காவலர்களைப் பார்த்ததும் என்ன செய்வதென்று புரியாமல் வன்னியின் அருகில் வந்து நின்றாள். நந்தனும் வன்னியின் மறுப்புரம் நின்றான். அப்போது பறக்கும் சக்கரத்தில் இருவர் அங்கு வந்து தரையிறங்கினர்.

அவர்களை நிமிர்ந்து பார்த்த வன்னி, குதுகலத்துடன், “தந்தையே. அன்னையே.” என்று வெளியில் அவர்களுடன் வந்திராத ஏக்கம் மறைந்தவளாகத் துள்ளி குதித்துக் கொண்டு ஓடினாள். அவளைத் தன் கையில் வாரி அணைத்துக் கொண்டார் பூவேந்தன்.

அரசரும் அரசியும் அந்த நந்தவன பூங்காவிற்கு வந்ததில் சுற்றியிருந்த காவலர்கள், சேவகர்கள் அனைவரும் தரையில் முட்டீயிட்டு, “வணங்குகிறோம் அரசே. வணக்கம் அரசியாரே!” என்றனர்.

அவர்களுக்குத் தலையசைத்து எழச் சொல்லிவிட்டு தன் கையிலிருந்த மகளின் தலையை லேசாக வருடி, “வெளியில் விளையாடியது திருப்தியா?” என்று செல்லமாகக் கேட்டார் பூவேந்தன். நண்மலர் மகளின் கால் முதல் தலைவரை ஒருமுறை விழிகளால் ஆராய்ந்துவிட்டு பூங்காவைச் சுற்றி ஒருமுறை பார்த்தார்.

தன் அன்னையின் பேதம் உணராத வன்னி, “ம்ம்… ஆமாம் தந்தையே. எனக்கு இரண்டு புதிய சிநேகிதர்கள் கிடைத்திருக்கின்றனர். மற்றும் இன்று திமிரு, தடிமாடு என்று இரண்டு புதிய வார்த்தைகள் கற்றுக் கொண்டேன்.” என்று கிளுக்கி சிரித்தாள்.

அதற்குப் பூவேந்தன், “ம்ம்…ம்ம்…”என்று தன் மகளிடம் சொல்லிய போதும் எதிரில் இருந்த மதியையும் குட்டி குதிரையாக இருந்த கலப்பின நந்தனையும் ஆராயும் பார்வை பார்த்தார்.

வன்னி தொடர்ந்து, “பழங்கள் மட்டுமல்லாமல், தேங்குழல், முறுக்கு, கடலை மிட்டாயெனப் பலவித உணவு பொருட்களைப் பார்த்தேன். மற்றும் தோல் சுருங்கிய மனித யாளிகளை பார்த்தேன்.” என்று விரல் விட்டுக் கொஞ்சிய குரலில் தன் தந்தையிடம் அடுக்கிக் கொண்டே போனாள்.

வன்னி முழுதும் பேசி முடிக்குமுன் நண்மலர், “வன்னி, உன் கை மணிக்கட்டை நீ தனியாக இருக்கும்போது யாரும் பிடித்தார்களா?” என்று கேட்டாள்.

அப்போதுதான் தன் அன்னை நோக்கித் திரும்பியவள், “இல்லை அன்னையே. நான் தான் மதியின் கையைப் பிடித்தேன். ஆங்…அப்பறம் பரிகுட்டியின் கழுத்து நாடி பார்த்தேன். அவனுக்கு உடலெல்லாம் காயம். அவனை மருத்துவரைக் கொண்டு பரிசோதிக்கச் சொல்ல வேண்டும்.” என்று பூவேந்தரின் கையிலிருந்து இறங்கி நந்தன் அருகில் ஓடினாள்.

“பரிக்குட்டி. மதி. வாங்க என் பெற்றோர்களிடம் உங்களை அறிமுகம் செய்கிறேன்.” என்று மதியின் கைப்பற்றியும் பரிக்குட்டியின் கழுத்து பற்றியும் கொணர்ந்து வந்து அவர்களுக்கு அறிமுகம் செய்தாள் வன்னி.

மதி முட்டியிட்டு வணங்கி, “வணங்குகிறேன் அரசர் அரசியே.” என்றாள். நந்தன் எதுவும் செய்யாமல் தலை வணங்கி நின்றான். பூவேந்தன் தலையசைத்து தன் மகள் முன் புன்னகை செய்தார்.

பூவேந்தன் அருகிலிருந்த சேவகனிடம், “அந்தச் சிறுமி மற்றும் கலப்பின யாளிக்கு விருந்தினர் விடுதி ஏற்பாடு செய்யுங்க. முகிலனை அவன் இல்லத்தில் விட்டுவிடுங்க. வன்னி நீ எங்களுடன் வா.” என்றார்.

வன்னி தன் சிநேகிதர்களை பிரிவதை எண்ணி விரும்பாமல், “தந்தையே நானும் அவர்களுடன்.” என்று தன் தயக்கத்தை சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “வன்னி.!” என்று முகத்தில் சிறிதும் இளக்கம் இல்லாமல் நண்மலர் அழைத்தாள்.

அவள் முகத்தைப் பார்த்த வன்னி, முதல் முறையாக நண்மலரின் கோபத்தை உணர்ந்து திடுக்கிட்டாள். ‘இன்று குகன் தன் பெற்றோர்கள் அடிப்பார்கள் என்று சொன்னது நினைவு வர, உண்மையில் என் அன்னை என்னை அடிப்பார்களா?’ என்று நினைத்துத் திகைத்து எதுவும் பேசாமல் தன் தந்தையின் கைப்பற்றினாள்.

அவள் போவதையே இமைக்க மறந்து பார்த்தான் நந்தன். வன்னியும் பூவேந்தனின் கையில் பறந்த போதும் திரும்பித் திரும்பி நந்தனின் விழிகளையே பார்த்தாள். மதி அரசர் முன் தலை நிமிராமல் இருக்க அவர்கள் சென்றதும் பெருமூச்சுவிட்டு நிமிர்ந்தாள்.

முகிலன், “ வாங்க போகலாம்.” என்றான். மதி உடன் நடந்தாள். உண்மையில் இவர்களுடன் போக வேண்டாம் என்று நினைத்தாலும் அரசர் ஆணையைத் தகர்த்து எங்கும் செல்ல முடியாது என்று அவள் நன்கு உணர்ந்தாள். நந்தன், எதுவும் எதிர்பார்க்காமல் தத்தி தத்தி வன்னி சென்ற திக்கையே பார்த்து நடந்தான்.

காவலர்கள் அவர்களுக்குள்ளாக, “இளவரசி யாரிடமும் சொல்லாமல் இப்படி விளையாட ஓடி வந்துவிட்டார். அரசியும் அரசரும் மிகவும் கலங்கி போய்விட்டனர். என்ன நிகழப் போகிறதோ. இதுவரை அரசி கோபமுற்று நாம் பார்த்ததில்லை. இன்று அவர்களது முகமே சரியில்லை. இளவரசியின் துடுக்குதனம் எல்லை மீறிதான் போயிற்று.” என்று ஒருவர் மாற்றி ஒருவராகப் பேசிக் கொண்டனர்.