யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 48

793

அத்தியாயம் – 48

குதிரைகுட்டியின் வலி நிறைந்த கனைப்பு நின்றதும், வாசிக்கும் புல்லாங் குழலை நிறுத்திவிட்டு நிமிர்ந்து குதிரை இருந்த இடத்தைப் பார்த்தாள் வன்னி. குதிரையை மீண்டும் அந்த மனித யாளிகள் அடிக்க வராமல் இருக்க அந்தப் பாதுகாக்கும் சக்கரத்தை அவள் நீக்கவில்லை.

குதிரையை நோக்கித் துள்ளி குதித்து நடந்தவண்ணம், அந்தக் குதிரையிலிருந்து சற்று தள்ளி நான்குபுரம் விழுந்து எழுந்துக் கொண்டிருந்த நான்கு மனிதயாளிகளை பார்த்தாள். மதி வன்னியின் செய்கையில் ஸ்தம்பித்து சில வினாடி நின்றாள்.

முதல் முறையாகக் கற்றதை ஆக்கப் பூர்வமாகப் பயன்படுத்தியதில் வன்னி குதுகலத்துடன் கிளுக்கி சிரித்தாள். வன்னி நடக்க ஆரம்பித்ததும் மதியும் அவள் பின்னால் அமைதியாக நடந்தாள்.

வன்னியின் சாதாரண சிரிப்பும் கூடக் கிண்டல் செய்கிறாள் என்பது போல் உணர்ந்த அந்த நான்கு மனித யாளிகள் பற்களை நரநரவெனக் கடித்தவிதம் வன்னி குதிரை குட்டியை அடையும் முன்னே குதிரைக்கும் அவளுக்கும் இடையில் வந்து மறைத்தார் போல் நின்றனர்.

அவளைப் பார்த்ததும் பரியாளி என்று உணர்ந்த போதும், 5 வயது சிறுமிக்கு எந்தப் பெரிய சக்தியும் இருக்க வாய்பில்லை என்று நிச்சயமாக நம்பிய அந்த மனிதயாளிகள் அவள் பயன்படுத்திய கருவியும் தற்காலிகமான சக்தியுடையது.

அதிக நேரம் தாக்கு பிடிக்காது என்று நினைத்து, “ஏய் குட்டிப்பொண்ணு. என்ன ஆன்மீக கருவி வைத்து எங்களைத் தாக்கின?” என்று ஒருவன் கேட்டான்.

அந்தக் கேள்வியில் அவனைப் போலவே தோரணையில், “ஏய் பெரிய பையா நான் எந்தக் கருவியும் பயன்படுத்தவில்லை. அது என் ஆன்மீக சக்தியால் உருவான பாதுகாப்பு சக்கரம்.” என்று தன் நெஞ்சில் கைவைத்து பெருமையாகச் சொல்லிச் சிரித்தாள்.

வன்னிக்கு இவையெல்லாம் விளையாட்டுபோல இருக்க மதிக்கு முகமெல்லாம் வியர்க்க ஆரம்பித்தது. வன்னியின் பதிலில் முதலில் நால்வருமே உண்மைதானோ என்று திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

பின் திகைப்பு ஏளனமாக மாறி, “ஹா…ஹா…ஹா…” என்று ஒருவர் மாற்றி ஒருவர் சிரித்தனர். சிரிப்பினூடே ஒருவன், “என் இடைவரைக்கு கூட நீ வளரவில்லை. அதற்குள் ஆன்மீக சக்தி உருவாக்கிவிட்டாயா? யாரிடம் ஏமாற்ற பார்கிறாய்?” என்றான்.

மற்றொருவன் குதிரை குட்டியைச் சுற்றி தெரிந்த வெண்ணிற பாதுகாப்புசுவர் போன்ற வாளையத்தை பார்த்து, “ஒழுங்காக உன் கருவியை எடுத்துக் கொண்டு இங்கிருந்து ஓடிவிடு. குட்டிப்பெண் என்பதால் உன்னை விடுகிறோம்.” என்றான்.

கடைசியாக இருந்தவன், “அந்தக் குதிரையாளி செய்த தவறுக்குதான் நாங்க தண்டைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். குட்டி பெண்கள் நீங்க இதிலெல்லாம் தலையிடக் கூடாது.” என்று பொறுமையாகச் சொன்னான்.

இவர்கள் பேசுவதை பொறுமையாகக் கேட்டிருந்த வன்னியின் முகம் குதுகலத்திலிருந்து வெறுப்பாக மாறியது. “அந்தக் குதிரையாளி எந்தத் தவறு செய்திருந்தாலும், அவனது உயிரையே பறிக்கும் அளவுக்குத் தண்டனை தர வேண்டியதில்லை. “ என்று அவர்கள்பின் இருந்த குதிரைகுட்டியை எட்டி பார்வை பார்த்தாள்.

தனக்காகப் பேசிய வன்னியின் பிஞ்சுகுரல் கேட்டதும் தான் கனவு காண்கிறோமோ என்ற உணர்வை அந்தக் குதிரை குட்டிக்கு ஏற்படுத்தியது. ஏற்கனவே சக்தியெல்லம் வற்றி மயங்கி இருந்த அவன் மெல்ல இமை திறக்க முயன்றான்.

அரைகண் மூடியவிதமாக மங்களாகத் தெரிந்த அந்தப் பார்வையில் தனக்காகப் பேசிய குரலின் சொந்தகாரரை கடினப்பட்டு பார்த்தான். அங்குத் தேவதைபோல வெண்ணிற ஆடையில் வன்னியின் குட்டி உருவம் அவன் கண்ணுக்குத் தெரிந்தது.

அவன் அவளை நன்றாகப் பார்க்க எண்ணி விழிவிரித்தவன், அப்போது அவளும் அவனைப் பார்க்கஎட்டி பார்க்க வன்னியின் மான் விழி பார்வையில் மெய்மறந்து போனான். உடலின் அனுவெல்லாம் இருந்த வலி இருக்கும் இடம் தெரியாமல் போனது.

அவனது விழியும் வன்னியின் விழியும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டது. அவளை விடுத்து அவனது கண்களில் வேறேதுவும் தெரியவில்லை.

கையில் புல்லாங்குழலை இப்படியும் அப்படியுமாகச் சிறுப்பிள்ளையின் துடுக்குடன் ஆட்டியவண்ணம் தன்னைவிடவும் இருமடங்கு உயரமாக நின்றிருந்த நால்வரிடமும் வன்னி இளவரசியின் தோரணையுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

வன்னி அந்தக் குதிரைக் குட்டியின் பார்வையை உணரவில்லை போல. சற்று தள்ளியிருந்த போதும் ஒருநொடி அவனை எட்டி பார்த்ததில், உடலெல்லாம் அவ்வளவு காயங்கள் இருந்தும் அவன் கண் விழித்துவிட்டதை உணர்ந்து உயிருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று நிம்மதியுற்றாள்.

பின் குதிரைகுட்டியின் மீதிருந்த அதீத இரத்தத்தை உணர்ந்து கோபமுற்றவளாக, ‘எதிரில் இருந்தவர்களுக்கு நிச்சயம் தண்டைனை கொடுக்க வேண்டும். எவ்வளவு திமிரு இருந்தால் இப்படி ஒருவனை அடித்திருப்பார்கள்.?!’ என்று மனதில் கறுவினாள்.

நால்வரில் ஒருவன் வன்னியின் கேள்விக்குப் பதில் சொல்பவன் போல, “அவன் என்ன செய்தான் தெரியுமா? அவனால் எங்களுக்கு எவ்வளவு நட்டம் தெரியுமா? தினமும் இரண்டு மூன்று பழங்களையாவது எங்க கடையிலிருந்து திருடி விடுவான்.

இது கிட்டத்தட்ட மூன்று மாதமாக அவ்வப்போது நடக்கிறது. எங்க பெற்றோர்கள் இவனைப் பிடித்து அவனுக்குத் தண்டனை கொடுத்தால் எங்களுக்குப் பரிசு தருவதாகச் சொன்னார்கள்.” என்றான்.

மற்றொருவன், “நாங்க பல வாரங்களாக எங்களிடம் ஓட்டம் கண்டு ஒழிந்துக் கொண்டவனை, இன்றுதான் எங்க திட்டத்தில் அகப்பட்டு மாட்டியிருக்கிறான். அவனுக்கு இன்று தண்டனை கொடுத்துவிட்டால் எங்களுக்குப் பரிசு கிட்டிவிடும்.” என்றான்.

மூன்றாமவன், “அதைக் கெடுக்கவென்று வந்திருக்கிறாயே. சீக்கரம் அந்தக் கருவியை அகற்று. அந்தக் குதிரையாளிக்கு 100 அடிகள் கொடுக்கச் சொல்லி என் பெற்றோர் சொன்னனர். நாங்க 43 அடிகள்தான் கொடுத்தோம்.” என்று வன்னியை அவசர படுத்தினான்.

நான்காமவன் ஒருபடி மேலாகப் போய், “வேண்டுமென்றால் நீயும் அவனை அடி. என் பெற்றோர்களின் பரிசில் உனக்கும் ஒரு பங்கு தருகிறோம். உன்னுடைய இந்தக் கருவிபோல வேறு ஏதாவது எளிதாக மற்றவர்களை அடிக்கவென்று கருவி இருக்கிறதா?” என்றான்.

ஏற்கனவே கோபத்தில் இருந்த வன்னியின் கண்கள் அவர்கள் பேசுவதை கேட்டு இன்னும் சிவந்தது. ‘என்ன நட்டம்? என்ன திட்டம் தீட்டிப் பிடித்தனர்? என்ன பரிசு? அப்படி என்ன குற்றம் செய்துவிட்டான்.

100 அடி தொடர்ந்து கொடுத்தால் இரு சக்கர சக்தி நிலைக் கொண்ட என்னாலுமே உயிருடன் இருக்க முடிமா என்று தெரியவில்லை. 100 அடி கொடுக்கச் சொல்வதும், அந்தச் சக்தியில்லாதகுதிரையை கொல்ல சொல்வதும் ஒன்றல்லவா?

இது கூடத் தெரியாமலா இந்த நான்கு தடிமாடு மனித யாளிகள் பரிசை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வந்து நிற்கின்றன’. என்று இன்று விளையாட்டு பூங்காவில் சிறுவர்கள் பேசும்போது கேட்ட தடிமாடு என்ற வார்த்தையை இவர்களுடன் பொறுத்தி முறைத்து பார்த்தாள்.

ஆனால் என்னதான் கோபமாக வன்னி பார்த்தாலும், அவளது பால்வண்ணம் மாறாத முகத்தில் அந்தக் கோபமும் உதடு பிதுக்கலும் அழகை தந்ததே தவிர பயத்தை எதிரில் இருப்பவர்களுக்குத் தரவில்லை. ஆனால் அடிப்பட்டு வளர்ந்த மதி பார்த்ததுமே, வன்னியின் ஒவ்வொரு முக அசைவிலும் அவள் மனம் புரிந்துக் கொண்டாள்.

இந்த நால்வரும் செய்தது தவறு என்ற போதும், இரவு கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட இந்த வேளையில் சண்டையிடுவது உசிதமல்ல என்று மதி நினைத்தாள். அதனால் அந்த நால்வரையும் நோக்கி, “என்ன இருந்த போதும் அத்தனை முறை அடித்தால் அந்தக் குட்டி குதிரை இறந்துவிடும்.

அதனால் எப்படிப்பட்ட தவறென்றாலும் சரி, உங்களுக்கு எப்படிப்பட்ட அருமருந்த பரிசு கிடைத்தாலும் சரி, நீங்க அதைச் செய்யக் கூடாது. அவனைப் பரியரசிடம் ஒப்படைத்துவிடலாம். அங்கு வந்து நீங்க அவன்மீதான குற்றத்தைச் சொல்லுங்க.” என்றாள்.

அதுவரை இருக்கும் இடம் தெரியாமல் மாலை மஞ்சளில் அவளும் மறைந்திருந்த மதியின் குரலிலும், வீம்பாக நின்று அவர்களை முறைத்துக் கொண்டிருந்த வன்னியின் பார்வையிலும், நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து, நக்கலாக, “ஹா…ஹா…ஹா…” என்று மீண்டும் சிரிக்க ஆரம்பித்தனர்.

முகம் வெளுத்த மதி என்ன செய்வதென்று புரியாமல்வன்னியின்புரம் திரும்பி, “வன்னி. நாம் முதலில் சென்று பெரியவர்களை அழைத்து வரலாம். எப்படியும் பாதுகாப்பு சக்கரம் போட்டதால் அவர்களால் இப்போது எதுவும் செய்ய முடியாது.” என்று சொல்லி வன்னியின் கையைப் பற்றி அழைத்துச் செல்ல எத்தனித்தாள்.

ஆனால் மதி வன்னியின் கையைப் பற்றும் முன்னே வன்னியின் கை நழுவி சற்று தள்ளி நின்றிருந்த நால்வரின் முன் சென்று நின்று, அவர்களின் உயரத்திற்கு பறக்கும் சக்கரத்தில் உயர்ந்து அவர்கள் முகத்திற்கு நேராக முகம் பார்த்து

கோபமாக, “அவனுக்குத் தண்டனை தர நீங்க யார்? இந்நாட்டு அரசர்களா? உங்களின் இந்தச் செயல்களை என் பெற்றோர்களிடம் சொன்னால் உங்களின் இருப்பிடம் மட்டுமல்ல உங்க பெற்றோர்களின் இருப்பிடம் சிறைசாலையாக இருக்கும்.

என்ன திமிர் இருந்தால் பரியரசின் கோட்டைக்குள் இப்படியொரு அநீதி செய்வீர்கள். பரிசு கொடுத்தால் யாரையும் எந்தக் காரணம் சொல்லியும் அடிப்பீர்களா?” என்று கேட்டாள்.

வன்னியின் கேள்வியில் நால்வரின் முகமும் வெளுத்தது. சிறுப்பெண் என்று பார்த்தால் நம்மையே மிரட்டுகிறது. செல்வந்தரின் பெண்போல இருக்கு. அடிக்க வேண்டாம் என்று நினைத்தால், அது சரிபடாது போல.’ என்று ஒருசேர அனைவரும் நினைத்தனர்.

அதில் இருவர் அவளை அடிக்கத் தன் கையிலிருந்த மரக்கட்டையை ஒரு சேர ஓங்கினர். நிலைமை கையை மீறிபோவதை உணர்ந்த மதி, தான் இருந்த இடத்திலிருந்து ஒரு கல்லைத் தாக்க நினைத்த இருவரில் ஒருவனின் மணிக்கட்டை நோக்கி வீசினாள்.

சரியான குத்தூசி புள்ளியில் கல் விழ அவனது கையிலிருந்து மரக்கட்டை கீழே விழுந்தது. அவர்களின் வாய்ச்சண்டையின் வீரியம் உணர்ந்து, மெல்ல மெல்ல இருட்டிலே அவர்கள் அருகில் வந்துவிட்டிருந்த குதிரைகுட்டி அவர்கள் வன்னியை தாக்க் நினைத்ததுமே தன் சக்தியெல்லாம் ஒன்றாக்கி கட்டையை உயர்த்தியவனின் முதுகிலே உதைத்தது.

அவன் குப்புற கீழே விழுந்தான். சண்டைக்குத் தயாராக இருந்த வன்னி, தன்னை அடிக்குமுன்னே சரிந்து விழுந்த இருவரை வியப்பாகப் பார்த்தாள். என்ன நிகழ்ந்தது என்று உணர்ந்து தன் பின் திரும்பி மதியை பார்த்தாள்.

மதி அதற்குள் வன்னியின் அருகில் வந்து வன்னியின் பதிலுக்கும் காத்திராமல் அவள் இடை வளைத்து அவளை அவர்களிடமிருந்து தூர கொணர்ந்து நிறுத்தினாள்.

அப்போதுதான் எதிர்புரம் ஓங்கி உதைத்தால் சரிந்து மயங்கிவிட்டிருந்த குதிரைக்குட்டியை வன்னி பார்த்தாள். அதனைப் பார்த்ததும், மீண்டும் கோபம் வந்து, “பசிக்கும்போது ஒருவனுக்கு உண்ண பழங்களைத் தானாகவே தராமல், பசியில் துவல விட்டும,

மயங்கும் அளவு அடித்துத் திமிராக நிற்கும் உங்களையும் பசியில் துவலவிட்டால் என்ன?” என்றவள் நொடியில் அந்த நால்வரில் பின்னே சென்று தரையில் கிடந்த குதிரை குட்டியை இலகுவாகத் தூக்கிக் கொண்டு அவள் அருகில் கிடத்தினாள்.

கண் இமைக்கும் நேரத்தில் தங்கள் பின்னால் இருந்த அந்தக் குதிரைகுட்டி வன்னியின் அருகில் இருப்பதை பார்த்து நால்வரும் திகைத்தனர். உடனே முகமெல்லாம் வெளுக்க ஆரம்பித்து, பேயறைந்தது போல் வன்னியை வெறித்தனர்.

அவர்களின் பயத்தை உணர்ந்த வன்னி, அவர்களைப் பார்த்து விஷமமாகப் புன்னகைத்து, தன் உதட்டில் புல்லாங்குழலை வைத்துக் கண்கள் மூடிக் குழலூத ஆரம்பித்தாள். அதிலிருந்து வந்த ஒலி வெள்ளை நிற வட்ட வட்டமான ஒளி கதிர்களாக மாறி அங்கிருந்த நால்வரை நோக்கிச் சென்றது.

ஏற்கனவே வன்னியின் சக்தியை உணர்ந்துவிட்ட அந்த நால்வரும் பயத்தில் பின் நோக்கி ஓட ஆரம்பித்தனர். ஆனால் வன்னி அவர்களை எளிதில் விடுவதாக இல்லை. புல்லாங்குழலில் வரும் ஒலியைத் துரித படுத்தினாள்.

அவர்கள் அந்த நந்தவனத்தை விட்டு வெளியில் செல்லுமுன் அவர்களைச் சுற்றிஅந்த வளையம், விரத சக்கரமாக மாறி அந்த நால்வரையும் அதற்குள் சிறைப்பிடித்தது. அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒருவேளை பசியை உணர்ந்தனர், பின் ஒரு நாள் பசியை உணர்ந்தனர்.

அந்தப் பசியையே தாங்க முடியாமல்,“ஆ… பசிக்கிறதே. எதாவது சாப்பிட வேண்டும். யாராவது எதாவது கொடுங்க.? ஐய்யோ பசிக்கிறது. தண்ணீர் வேண்டும். பழம் வேண்டும். சோறு வேண்டும்.” என்று மாற்றி மாற்றி முனுமுனுக்க ஆரம்பித்தனர்.

ஒரு நாழிகைக்குள்ளே, இரண்டு நாள் பசியை உணர ஆரம்பித்த நால்வரும், “குட்டிப் பெண்ணே! நாங்க செய்தது தவறு. பசிப்பவர்களுக்கு இனி நாங்களே உணவுதருவோம். எந்த வித பரிசுக்காகவும், பகட்டாக யாரையும் துன்புறுத்தமாட்டோம். எங்களை மன்னித்துவிடு.

எங்களை விட்டுவிடு. அந்தக் குதிரைகுட்டியிடமும் நாங்க மன்னிப்பு கேட்டுகிறோம். நாங்க இனி இப்படியொரு தவறை செய்யமாட்டோம். மாதம் ஒருமுறை என் பெற்றோர்களை அன்னதானம் செய்யவும் வைக்கிறோம்.” என்று ஒருவர் மாற்றி ஒருவர் சொன்னனர்.

அவர்கள் சொன்னதை கேட்டதும் வன்னி மெதுவாகப் புல்லாங்குழலை வாயிலிருந்து எடுத்தாள். மெதுவாகத் தரையில் அரைமயக்கத்திலிருந்த நால்வரை நோக்கி நடந்தாள். பின் கிளுக்கி சிரித்து, புல்லாங்குழலை வலது கையில் பிடித்து, இடது கையின் உள்ளங்கையில் தட்டிக் கொண்டு,

துள்ளி குதுத்துக் கொண்டு, “ம்ம்… நீங்க எனக்குக் கொடுத்த வாக்கு நினைவிருக்கட்டும். சொன்னது நினைவிருக்கட்டும். சரியா? மீண்டும் ஒருமுறை உங்களை நான் இப்படி பார்த்தால் பசியில் வயிற்றில் காயம் வர வைத்துவிடுவேன்.”

என்று தன் கைக்காப்பிலிருந்து முன்பு வாங்கியிருந்த கொய்யா கனிகளையும் கடலை மிட்டாய்களையும் அவர்களின் கையில் கொடுத்துவிட்டு, “இப்போது இதைச் சாப்பிடுங்க. பசியில் வயிறு மிகவும் வலிக்கும் என்று எனக்கும் தெரியும்.

அதனால்தான் குறைந்த கால அளவான இரண்டு நாள்வரை இருக்குமாறு விரதசக்கரத்தைதான் உங்களுக்குப் பரிசாகத் தந்தேன்.” என்று கண்ணடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அவளிடமிருந்து கொய்யா கனிகளை வாங்கிய நால்வரும் வன்னியின் செயல் காரணம் புரியாமல் திகைத்தனர். “நமக்கு இப்போ தண்டனை கொடுத்தது இவளா? அல்லது தண்டைனையிலிருந்து நிவாரணமாக உணவைக் கொடுத்தது இவளா?

ஆனால் ஒன்று மட்டும் இன்று அறிந்துக் கொண்டோம். பசியால் இருப்பவர்களுக்கு இலாப நட்டம் பார்க்காமல் உணவளிக்க வேண்டும். இப்படி பட்ட வலியைத் தினமும் அனுபவிபதற்கு செத்துவிடலாம். அதனால்தான் என்னமோ! அந்தக் குதிரைகுட்டி எந்த எதிர்ப்பும் இல்லாமல் நாம் அடிப்பதை வாங்கிக் கொண்டது!”

என்று ஒருவர் மாற்றி ஒருவராகப் பேசிக் கொண்டு சிக்கலான உணர்வுடன் திரும்பிச் சென்றுக் கொண்டிருந்த வன்னியை பார்த்தனர். கையிலிருந்த பழத்தைக் கடித்து மென்றவிதமாக மெல்ல எழுந்து பூங்காவிலிருந்து வெளியில் சென்றனர்.

பூவனத்தின் நடுவே மயங்கிப் படுத்திருந்த குதிரைகுட்டியின் அருகில் வந்த வன்னி, முட்டிப் போட்டுக் குதிரைகுட்டியின் அருகில் அமர்ந்து அதன் தலையை வருடினாள். ஆனால் மூச்சுவிடுவதால் உயர்ந்து தாழ்ந்த மார்பை தவர அந்தக் குதிரையிடம் எந்த அசைவும் தெரியவில்லை.

மதி, “நான் கொஞ்சம் தண்ணீர் எடுத்து வருகிறேன்.” என்று அங்கிருந்து சென்றாள்.

வன்னி, “ம்ம்.” என்று சமனமிட்டு தரையில் அமர்ந்தாள்.

முதல் முறையாக இவ்வளவு இரத்தத்தை பார்த்த வன்னி அந்தக் குதிரை குட்டியின் வலியைத் தானும் உணர்வதாக எண்ணி, “குட்டிபரி, வலிக்கிறதா?” என்று சொல்லியவிதமாகக் குதிரையின் தலையைத் தன் மடியில் வைத்துக் கொண்டாள்.

ஆனால் அவளுக்குப் பதில் சொல்ல அங்கு யாரும் இல்லை. அவளுக்குள்ளே பேசுபவள் போல, “கவலை படாதே பரிகுட்டி. நான் உன்னைக் குணப்படுத்திவிடுவேன்.” என்று சொல்லிக் கொண்டு குதிரையின் கழுத்து வளைவில் இருந்த நாடி நரம்பில் தன் ஆன்மீக ஆற்றலைச் செலுத்தி பரிசோதித்தாள்.

ஆன்மீக விளிப்பை அவன் உடலெல்லாம் செலுத்தியவள், “உனக்கு எந்தவித உள்ளுறுப்பும் காயமில்லை பரிகுட்டி.” என்று குதுகலித்தாள். பின், “ஆனால் நீ பரியாளி மட்டுமல்ல போலவே? உன் உடலில் மனித யாளி இரத்தமும் இருக்கிறது.

அப்போ நீ கலப்பின யாளியா? பொதுவாகக் கலப்பின யாளிகள் ஒரு யாளி வகையிலிருந்து மற்றொரு யாளி வகையாக மாற அதிக நாட்கள் ஆகும். சிலர் மாறவே முடியாமலும் கூடப் போகலாம் என்று என் வைத்தியகுரு சொன்னார்.” என்று அவன் முதுகில் வருடினாள்.

“அப்படியென்றால் நீ பரி உருவிலிருந்து மனித உருவிற்கு மாற அதிக நாள் ஆகுமா? அதுவரை உன்னை நான் பரிக்குட்டி என்று சொல்ல முடியாதே. அதனால் உனக்கு ஒரு பெயர் வைக்க வேண்டுமே? என்ன பெயர் வைக்கலாம்.?” என்று முகவாயில் ஆள்காட்டிவிரல் வைத்து யோசித்தாள்.

அப்போது இருண்டுவிட்டிருந்த போதும், அவளைச் சுற்றிமலர்களின் மனம் வீச அவற்றைப் பார்த்தவள். இரவில் வெளிச்சத்தில் யாளிகளின் கூர்மையான பார்வையிலும் ஆங்காங்கே பறந்துக் கொண்டிருந்த மின்மினி பூச்சிகளிலும் அந்த நந்தவனம் அழக்காகத் தெரிந்தது.

அதனைப் பார்த்த வன்னி,“ம்ம். ‘^_^’ நந்தவனத்தின் நடுவே உன்னை நான் முதலில் பார்த்ததால் உன் பெயர் நந்தன் சரியா? இனி நான் உன்னை நந்தன் என்று அழைப்பேன். நீயும் முகிலனை போல, மதியை போல, என் சிநேகிதன். உனக்கு நான் வைத்த பெயர் பிடித்திருக்கிறதா?” என்று ஆர்வமாகக் கேட்டாள்.

இவை அனைத்தும் அந்தக் குதிரை குட்டியின் காதில் விழுந்த போதும், சக்தியின்மையாலும் வலியாலும் விழிகளைத் திறக்கவோ அல்லது பேசவோ முடியவில்லை. மெல்ல தன் குட்டி காது மடல்களை லேசாகச் சிலிர்த்து பிடித்திருக்கிறது என்பது போல் அறிவுறுத்தியது அந்தக் குதிரைக்குட்டி.

குட்டி காது சிலிர்த்ததில் குதிரை குட்டியின் முகத்தைத் திரும்பிப் பார்த்தவள் அதன் கண்ணின் அருகில் இருந்த நீர் கோடுகளைப் பார்த்துத் திடுக்கிட்டாள்.

களைப்பில் ஏதோ உறங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைத்த வன்னி, அதன் கண்ணில் இருந்த கண்ணீரிலும், நெற்றி புருவம் சுருங்கி இருந்த விதத்திலும், குழம்பி, “உள்காயம்தான் எதுவும் இல்லையே. பிறகேன் நீ அழுகிறாய். எங்கு வலிக்கிறது?” என்று தான் ஒழுங்காகப் பரிசோதிக்க வில்லையோ என்று எண்ணி அவசரமாக மீண்டும் நந்தனின் உடல் உள்ளுறுப்பு முழுதும் சரி பார்த்தாள்.

எந்தப் பிரச்சனையும் இல்லை என்று உறுதி பட்டதும், வெளிகாயங்களை நோட்டமிட்டாள். “அச்சோ! புற காயமாக இருந்த போதும் இந்த மூன்று காயங்களும் மிகவும் ஆழமாக இருக்கே. அதனால்தான் அழுகிறாயா?

எனக்கு எல்லா காயங்களையும் குணப்படுத்த சக்தியிருக்காது. குறைந்தபட்சம் இந்த மூன்றை மட்டும் இப்போது குணப்படுத்துகிறேன்.” என்று கொஞ்சம் கொஞ்சமாகக் குதிரை குட்டியின் உடலில் இருந்த காயங்களைத் தன் ஆன்மீக ஆற்றல் கொண்டு குணப்படுத்த ஆரம்பித்தாள்.

சில நிமிடங்களில் வலி குறைந்ததோ, சக்தி மீண்டதோ அல்லது வன்னியின் மடி கொடுத்த இதமோ நந்தன் மெதுவாக உடலை நெழித்தான். லேசாகச் சினுங்கள் போன்ற கனைப்பு அவனது தொண்டையிலிருந்து வந்தது.

இமைகள் நடுங்க மெல்ல விழிவிரித்து எதிரில் இருந்த வன்னியை பார்த்தான். அவன் கண் விழித்ததில், “ஹய்யா.! கண் விழித்துவிட்டாயா? அவ்வளவு இரத்தத்தையும் பார்த்துப் பெரிய உள்காயம் இருக்குமென்று பயந்தே போனேன்.

நல்ல வேளை எல்லாம் புறகாயம். மீதமிருக்கும் காயத்தை அரண்மனை சென்றதும் குணப்படுத்தி விடுகிறேன்.” என்று சொல்லிக் குதிரையின் நெற்றியை தன் நெற்றியில் வைத்துச் சிரித்தவிதமாகச் சொன்னாள் வன்னி.

நந்தன் திடீரென்று தன் மீது அன்பு காட்டும் அந்தக் குட்டி தேவதையை இமைக்க மறந்து பார்த்தான். எங்கே கண் மூடித் திறந்தால் காணாமல் போய்விடுவாளோ என்று பயந்து இமைக்கவும் தயங்கினான்.

பின் சில முறை கண் மூடித் திறந்து எதிரில் அவள் இன்னமும் இருப்பதை உறுதிக் கொண்டு மகிழ்ந்து மெல்ல அவள் மடியிலிருந்து அவனது கழுத்தை உயர்த்தி அவளது கழுத்து வளைவில் தன் கழுத்தை வைத்து அணைத்துக் கொள்ள முயன்றான்.

ஆனால் அவனிடம் கையில்லையே. அதனால் வெறும் கழுத்தில் ஆசையாக வருடினான் அவளது தோள் பட்டையில் தன் கழுத்தை நெருங்கிப் பொருத்தி அமர்ந்துக் கொண்டான். ‘என் தேவதை.’ என்று மனதுள் நினைத்துக் கொண்டான்.

வன்னி புதிதாக அறிமுகமான குதிரையின் இந்த நெருங்கத்தில் பேதமாக எதுவும் உணராமல் பேச முடியாத கலப்பின யாளி தன் மீதுள்ள அன்பை இப்படி காட்டுகிறது என்று நினைத்து, “நந்தன். எனக்கும் கூட உன்னை மிகவும் பிடித்திருக்கிறது.” என்று அவனது குதுகை வருடினாள்.

வன்னியின் பதிலில் உடல் சிலிர்த்த நந்தனின் விழிகள் லேசாக ஈரம் பணித்தது. அவன் உடல் சிலிர்த்தை தவறாக யூகித்த வன்னி, “என்ன ஆச்சு. எங்கேனும் வலிக்கிறதா?” என்று மீண்டும் அவன் கழுத்தில் தன் கை விரல் வைத்து ஆன்மீக ஆற்றலைச் செலுத்தினாள்.

எதுவும் பேதமாக உணராத வன்னி, அப்போதுதான் ஒட்டிக் கிடந்த வயிறை பார்த்தாள். “உ…உனக்கு.பசிக்கிறதா நந்தன்? இரு என்னிடம் சாப்பிட எதாவது இருக்கும்.” என்றவள் அவசரமாகத் தன் கைக்காப்பில் தேடினாள்.

ஆனால் அவள் பாதி தின்று வைத்திருந்த பொறி உருண்டையைத் தவிர எல்லாவற்றையும் அந்த நால்வருக்கும் தந்துவிட்டிருந்தாள். அந்தப் பொறி உருண்டையை வெளியில் எடுத்தவள், “நந்தன். என்னிடம் பாதி தின்ற இந்தப் பொறி உருண்டைதான் இருக்கிறது.” என்று சோகமாகத் தன் கையில் எடுத்துக் காட்டி சொன்னாள்.

பின் சற்று நிறுத்தி, “வா நாம் கிளம்பலாம். அரண்மனை சென்றதும் உனக்கு நிறைய உணவு தரச் சொல்கிறேன்.”

அதிவரையும் வன்னியின் கழுத்து வளைவை விட்டு நகராத நந்தனின் கழுத்து மெல்ல அவளிலிருந்து விலகி, அவள் கையில் இருந்த வெல்லம் பாகில் உண்டாக்கியிருந்த பொறிஉருண்டையின் ஒரு முனையில் தெரிந்த சிறு பல்களால் கடிப்பட்ட இடத்தைப் பார்த்தான்.

மெல்ல குனிந்து வன்னியின் கையில் இருந்த அந்தப் பொறி உருண்டையை முதலில் தன் நாக்கை கொண்டு நக்கினான். பிறகு பசியோ, ருசியோ அல்லது வேறு எந்த உணர்வோ அவனை ஆக்ரமிக்க சில நொடியில் அந்த பொறிஉருண்டை அவன் வயிற்றுள் நுழைந்தது.(1)

நந்தனின் குட்டி முகத்தைப் பார்த்துக் கிளுக்கி சிரித்த வன்னி, “உன்னைப் பார்த்தால் ஓரிரு வருடம் கூட நிரம்பாத பரி போலத் தெரிகிறது.(2) ஆனால் நான் பேசிவதையெல்லம் புரிந்துக் கொள்கிறாய். எனக்கு உன்னை மிகவும் பிடித்திருகிறது!” என்று அவன் நெற்றியில் இதழ் பதித்தாள்.

Author Note:

(1)பாருங்க. நம்ம Hero sir, 10 வயதுலே திருட்டு வேலை செய்ரது.

(2) வன்னி அவனுக்கு ஓரிரு வயது இல்ல. அவன் பரிகுட்டியா மாறி ஓரிரு வருடம் ஆகுது. ஆனா அதுக்கு முன்னாடி அவன் 8 வருடம் மனித யாளி சிறுவனாக இருந்தான். அதனால் அவன் தோற்றம் 2 வயது போலக் காட்டுது. குழம்பாதா.

I have to say something. எனக்குத் தெரியும் readers எல்லாம் என்ன திட்டுவீங்கனு. நம்ம Hero sir 400 வருடத்துக்கு முன்னாடி ரொம்ப powerless little poor guy. அவன் அப்போ சக்தியுள்ளவனா இருந்திருந்தா வன்னியை யாரும் துன்புறுத்திருக்க விட்டிருக்க மாட்டான். அதனால கதைக்கு இது அவசியமாகி போனது.

(Hero sir Mind voice – கதைக்கு இது அவசியமா? இல்ல Author -ஒட வன்முறையா?)