யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 47

788

அத்தியாயம் – 47

வன்னி கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போக, காவலர்கள் பயந்து அவளை தேட ஆரம்பித்தனர்.

ஒரு கடையின் பின்னே சுவர் மறைவிலிருந்து அவளது பாதுகாவலர்கள் திண்டாடித் தேடுவதை பார்த்து வன்னி மீண்டும் கிளுக்கி சிரித்தாள். ‘முகிலனை மட்டும் எப்படியாவது உடன் அழைத்துக் கொள்ளலாம். அவன் என்னை பார்க்கிறானா?’ என நோட்டமிட்டாள்.

ஆனால் அவன் அந்தக் காவலர்களுக்கும் மேலாக படப்படத்து அவளைத் தேடுவதை பார்த்து, “ம்ம் ‘-_-’. இந்த முகிலனுக்கு யாருமறியாமல் என்னைப் பின் தொடரக் கூடத் தெரியவில்லை. இவன் இல்லாமல்தான் ஊர் சுற்ற வேண்டும் போல.” என்று சலிப்புற்று அங்கிருந்து எதிர்புரம் செல்ல எத்தனித்தாள்.

அப்போது அந்தப் பாதுகாவலர்களுள் ஒருவன், “கவனிக்கும் சக்கரத்தை உருவாக்கி இளவரசியின் இருப்பிடம் அறிய முயற்சிங்க.” என்று அவர்களுடன் வந்த சேவகி காவலர்களிடம் பதற்றமுடன் சொன்னாள்.

சேவகி சொன்னது, “சரி.” என்று காவலர்களுள் ஒருவனும் நெற்றியில் தன் வலது கையின் இரு விரல்களை வைத்து கண் மூடி கவனிக்கும் சக்கரத்தை உருவாக்கினான்.

சற்று தள்ளியிருந்த போதும் வன்னியின் காதில் அது விழுந்தது. “அச்சோ. இதை மறந்து போனேனே.” என்றவள் சட்டெனத் தன் வெண்ணிற கைக்காப்பின் உள்ளிருந்து அவள் குரு, பேரரசர் தந்ததாக அவளுக்குக் கொடுத்திருந்த கருவியை அவள் கைக்காப்பின் மீது அணிந்துக் கொண்டாள்.

அந்தக் கருவி அணிந்ததும் பின் திரும்பி, ‘அவர்கள் தன்னை கண்டுக் கொண்டார்களா?’ என்று இரகசியமாக எட்டி பார்த்தாள் வன்னி. அது அணிந்துக் கொண்டதால் கவனிக்கும் சக்கரத்தில் காவலர்கள் தேடியபோது வன்னியை ஆன்மீக சக்தி நிலையற்ற சாதாரண சிறுப்பிள்ளையாக அவர்களுக்குக் காண்பித்தது.

ஆனால் இருச்சக்கர சக்தி நிலை உடைய எந்தக் குழந்தை பரியாளியும் அந்த காவலாளியின் கவனிக்கும் சக்கரத்தின் தேடலில் அகபடவில்லை. அதனால் மீண்டும் குழம்பி, “அதற்குள் இளவரசி எவ்வளவு தூரம் சென்றார்கள். என்னால் என் எல்லைக்குள் அவரை அறிய முடியவில்லையே.” என்றான்.

அவன் சொன்னதை கேட்டதும் மற்ற மூவரும் முகம் வெளுத்து ஒருமுறை அவர்கள் பங்குக்குக் கவனிக்கும் சக்கரத்தில் தேடினர். ஆனால் அவர்களாலும் அவளை உணர முடியவில்லை. பிறகு நொடியும் தாமதிக்காமல் ஆளுக்கு ஒருபுரம் தேட ஆரம்பித்தனர்.

ஆனால் யாரும் இரு கடைகளின் சந்தில் இருந்த ஒருவர் மட்டுமே குறுகிய பாதையை பார்க்கவில்லை. உண்மையில் அந்த குறுகிய பாதையில் வன்னி முகிலனின் குட்டி உடல் மட்டுமே நுழையக் கூடும். அதனாலே வன்னி எளிதில் அங்கிருந்த யாரும் அறிய முடியாமல் மறைந்து போனாள்.

அவர்கள் தன்னை கண்டுபிடிக்கவில்லை, தன்புரம் திரும்பியும் பார்க்கவில்லை என்று உறுதிபட்டதும், குதுகலத்துடன், “ஹய்யா! நான் மாலை மங்கும் நேரம்வரை யாருடைய தொந்தரவுமல்லாமல் ஊரெல்லாம் சுற்றி பார்க்கப் போகிறேன்.” என்று முனுமுனுத்து துள்ளி குதித்தாள்.

பின் திரும்பிப் பார்க்காமல், கடை சந்திலே நடந்து கடை வீதிக்கு பின்புரம் இருந்த மற்றொரு வீதிக்குச் சென்றாள். இடை வரை நீண்டிருந்த இரட்டை ஜடை பின்னலில், வலது புரம் இருந்த பின்னலை கையில் தூக்கி தனக்கு தானே தன் முகத்தின் அருகில் தன் முடியால் சாமரம் வீசிக் கொண்டு துள்ளி குதித்துக் கொண்டு வீதியின் இருபுரமும் பார்த்துக் கொண்டு நடந்தாள்.

அரண்மனையைப் போலல்லாமல் சின்ன சின்ன வீடுகளாக ஓலையிலும் ஓட்டிலும், ஓரடக்குடனுமாக வீடுகள் வரிசையாக அமைந்திருந்தது. எப்போதும் அரண்மனையிலே இருந்த வன்னி, எதிரில் தெரிந்த வித்தியாசமான கட்டட அமைப்புகளை ஒவ்வொன்றாக நின்று ஆர்வமாக ஆராய்ந்து பார்த்தாள்.

ஒவ்வொரு வீட்டின் முற்றத்தில்இருந்த திண்ணைகளையும், சில திண்ணைகளில் அமர்ந்திருந்த வயது முதிர்ந்த மனித யாளிகளையும் பார்த்தாள். சிலர் வீதியை வேடிக்கை பார்த்தவிதம் அமர்ந்திருந்தனர்.

சிலர் ஒன்றாக அமர்ந்து அவர்களுக்குள் ஏதோ கதை பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர். சிலர் வெற்றிலையை ஏதோ ஒரு குடுவை போன்ற கல்லில் இடித்து அதனை வாயில் இட்டு மென்றுக் கொண்டிருந்தனர்.

இவையெல்லாம் பார்த்தவளுக்கு, ‘அவர்கள் என்ன செய்கிறார்கள்.? ஏன் அப்படி செய்கிறார்கள்.? எதனால் அவர்களின் தோல் சுருங்கி இருக்கிறது.? ஏன் பலவீனமாகத் தெரிகிறார்கள்?’ என்று வயதான மனித யாளிகளை அரண்மனைக்குள் பார்த்திராத அவளுள் பல கேள்விகள் எழுந்தது. ஆனால் பதில் சொல்லதான் யாருமில்லை.

பேச ஆள் இல்லாமல் கொஞ்சம் சலிப்புற்ற வன்னியின் முகம் சுருங்கியது. தன் கைக்காப்பின் உள்ளே முன்பு வாங்கியபோது அடுக்கி வைத்திருந்த பலகாரங்களில், கையளவு பெரியதாக இருந்த பொறியுருண்டை ஒன்றை எடுத்து வாயில் கடித்தவிதமாக, “பேசாமல் திரும்பிப் போய் முகிலன் மற்றும் காவலர்களுடனே வரலாமா?” என்று யோசித்தாள்.

அப்போது சற்று தூரத்தில், “நீ தோற்றுவிட்டாய்… வெளியில் வா. இப்போது என் ஆட்டம்.” என்று ஒரு சிறுவனின் குரல் கேட்டது.

அதனைத் தொடர்ந்து, “ஏய் குகன் ஏமாற்றாதே. நான் ஒழுங்காக விளையாடிக் கொண்டிருக்கும்போது, நீ தான் பொய்யாகக் கோட்டை தாண்டிவிட்டாய் என்று ஏமாற்றினாய். அதனால்தான் நான் என் காலைத் தரையில் வைத்தேன். உன்மேல் தான் குற்றம். நீ எனக்கு மற்றொரு வாய்ப்பு தர வேண்டும்.” என்றது ஒரு சிறுமியின் குரல்.

அதனோடு கூடப் பல சிறுவர் சிறுமிகளின் சலசலப்பான சத்தமும் கேட்டது. அந்த சலசலப்பான சத்தத்தில், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற ஆர்வம் மேலிட சத்தம் கேட்ட திசை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் வன்னி.

அப்படி நடந்தவள் மதில் சுவருடன் விளையாட்டு பூங்காவை அடைந்தாள். நின்று பெயர் பலகையை வாய்விட்டு படித்தவள், குதுகலத்துடன் அந்த பூங்காக்குள் கண்ணில் நட்சத்திரம் தெரிய நுழைந்தாள்.

அங்குக் கிட்டத்தட்ட, 15லிருந்து 20 சிறுவர்கள் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும், பாதி உண்டுக் கொண்டிருந்த பொறி உருண்டையை மீண்டும் கைக்காப்பில் வைத்துவிட்டு அவர்கள் அருகில் ஓடிச்சென்றாள்.

சில சிறுவர்கள் ஒன்றாகச் சேர்ந்து தரையில் கட்டம் போட்டு, ஒரு கால் உயர்த்தி, நொண்டி நொண்டி ஏதோ விளையாடிக் கொண்டிருந்தனர். சிலர் ஏதோ, “ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரே பூப்பூத்தது. இரண்டு குடம் தண்ணீர் ஊற்றி, இரண்டு பூப்பூத்தது.” என்று பாட்டு பாடி வட்டமாகக் கைகளைக் கோர்த்து சுற்றி சுற்றி விளையாடிக் கொண்டிருந்தனர்.

சிலர் கில்லி என்று சொல்லியவண்ணம் சிறு மரக்குச்சால் மற்றொரு குச்சியை அடித்துத் தூர வீசிக் கூச்சலிட்டிருந்தனர். சிறு விளையாட்டுப் பூங்காபோல் பரந்திருந்த அந்த இடத்தின் நுழைவாயில் வன்னி நுழைந்து அங்கிருந்தவர்களை பார்த்தாள்.

ஓரிரு சிறுவர்கள் விளையாடி களைத்தனறரோ அல்லது விளையாட பிடிக்காமலோ அங்காங்கே இருந்த கல் இருக்கையில் அமர்ந்து மற்றவர்களை வேடிக்கை பார்த்தனர். சிலர் தன்னையும் ஆர்வமாக பார்ப்பது வன்னிக்குத் தெரிந்தது.

ஒவ்வொரு விளையாட்டையும் அவர்கள் விளையாடும் முறையையும் இனம்புரியாத சுவாரசியத்துடனும் துள்ளளுடனும் பார்த்துக் கொண்டு வந்தவள், அவளையும் அறியாமல் பூங்காவிற்கு வெளியில் இருந்த போது கேட்ட சிறுவன் சிறுமி விளையாடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு வந்தாள்.

அந்த சிறுவந் குகனின் குரல் கொஞ்சமும் குறையவில்லை. சத்தமாக பேசினால் எல்லோரும் பயந்து அடிபணிந்துவிடுவர் என்ற எண்ணமோ, அவன் கத்தி கத்தி அவனது நிலையை நியாயபடுத்தும் விதமாக எதிரில் இருந்த சிறுமியிடம் கத்திக் கொண்டிருந்தான்.

இப்படி சத்தமாக யாரும் அரண்மனையில் பேச மாட்டார்கள். அதனால் ஆர்வமாக அவர்கள் பேசுவதை அருகில் வந்து நின்று ஆர்வமாக பார்த்தாள். பின் அவர்கள் விளையாட்டு புரியாமலும், எதற்காக இருவரும் சண்டையிருகிறார்கள் என்று குழம்பியும் அவர்களிடம் பேச்சுக் கொடுத்தாள்.

அந்தச் சிறுவன் அங்கு வந்து நின்ற வன்னியை சட்டையே செய்யாமல் இன்னும் அந்தச் சிறுமியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். என்னவென்று புரியாததால் இருப்புக் கொள்ளாமல், “சிறுவனே! என்ன நிகழ்ந்தது? ஏன் நீங்க இருவரும் வாய்ச் சண்டையிடுகிறீர்கள்?” என்று கேட்டாள் வன்னி.

அவளது மிடுக்கான குரலிலும், அங்கிருப்பவர்களுக்கு முற்றிலும் மாறுபட்டவிதமாகவும், சிறு கட்டளையிடும் தோரணையிலும் வன்னி கேள்விக் கேட்டவிதத்தில், அந்தச் சிறுவன் சிறுமி மட்டுமல்லாமல் அருகில் விளையாடிக் கொண்டிருந்த மற்றவர்களும் விளையாடுவதை நிறுத்திவிட்டு வன்னியை நிமிர்ந்து பார்த்தனர்.

திடீரென்று சலசலப்பு நின்று அமைதியாகஅவளை நிமிர்ந்து பார்ப்பது, அவ்வப்போது அவள் தந்தையை பார்க்க அரசவைக்கு போகும்போது வன்னி உணர்ந்தது உண்டு. அதனால் அப்படி மற்றவர்கள் அவளைப் பார்ப்பது அவளுக்குப் பேதமாகத் தெரியவில்லை.

சற்று மமதையுடன் மேவாயை உயர்த்தி நின்று அந்தச் சிறுவனது பதிலுக்காக அவனை ஆர்வமாகப் பார்த்தாள் வன்னி. அந்தச் சிறுவன் அவளது இந்தத் தோற்றத்தில் எரிச்சலாகப் பார்த்து, “யார் நீ.? என்னையே கேள்விக் கேட்கிறாயா? என்ன திமிர்.?” என்று முறைத்தான்.

மனித யாளி சிறுவனாக இருந்ததால் பெரிதாக உலகம் அறியாத குகன், வன்னியின் கைக்காப்பு கண்ணில் தெரியாததால், அவளது வெண்ணிற ஆடையின் அர்த்தம் புரியாமல் அவளைமனித யாளி என்று நினைத்துக் குரல் உயர்த்தி அப்படி கேள்வி கேட்டான்.

அவனது மரியாதையற்ற பேச்சில் வன்னி திகைத்தாள். அவள் பிறந்ததிலிருந்து அவள் தாய் தந்தையை தவிர வேறு யாரும் அவளை நீ என்று ஒருமையில் பேசியதில்லை. அதனோடு தான் ஒன்று சொன்னாள், உத்தரவு இளவரசி என்ற வார்த்தையைக் கேட்டுப் பழகியவளுக்கு இந்தச் சிறுவனின் பேச்சு அவளை முகம் வெளுக்கச் செய்தது.

அதுநாநானும் உங்களுடன் விளையாட விரும்பி, உங்களிடம் பேசினேன். மற்றபடி திமிரென்றால் என்ன.?” என்று இது நாள்வரை உணராத தடுமாற்றத்தில் பேசினாள். இவர்களைப் பார்த்து வன்னிக்கு பயமில்லை. எதிரில் இருந்தவர்கள் பத்து வயதுக் கூட நிரம்பாத மனித யாளி சிறுவர்கள்.

அவர்களால் அவளை எதுவும் செய்துவிட முடியாது. ஆனால் அந்தச் சிறுவனைப் போல யாரும் தைரியமாக இதுவரை அவளைக் கேள்வி கேட்டதில்லை. அதனால் அதற்கு எப்படி பதிலளிப்பது என்று புரியாமல் திணறினாள்.

வன்னி விளையாட வந்ததாகச் சொன்னதிலும், திமிரென்றால் என்ன என்று புரியாமல் விழிவிரித்து அவள் கேட்ட விததித்திலும், அந்தச் சிறுவன் அவளை மேலும் கீழுமாகப் பார்த்தான்.

தேவதைபோல வெள்ளை நிற மேல் சட்டையும், அதே வெள்ளையிலே பாவடையும், வெண்ணிற முத்தால் ஆன காதணியும். கழுத்தணியும், நெற்றியில் வெண்ணிற பொட்டும், நெற்றி சூடியும் அணிந்திருந்த அவளது தோற்றம், அங்குக் குதுகலத்துடன் மண்ணும் தூசியுமாக விளையாடிக் கொண்டிருந்த மனித யாளிகளின் அழுக்குபடிந்த ஆடைகளுக்கு முற்றிலும் எதிர் மறையாக இருந்தது.

சட்டெனச் சிரித்த சிறுவன், “இந்த ஆடைக் கொண்டு… நீ…விளையாட வந்திருக்கிறாய்? ” என்று நிறுத்தி நிறுத்திச் சொல்லிச் சிரித்தான். அவனோடு மற்றவர்களும் அவளைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தனர்.

என்ன இந்த ஆடைக்கு?’ என்று புரியாமல் குழம்பிய வன்னி, அவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்று புரியாமல் கோபமும் பதிலுக்குப் பேசத் தெரியாததால் வந்த இயலாமையுமாக அவர்களைப் பார்த்து முறைத்தாள். லேசாக அவள் கண்கள் இயலாமையில் கலங்கியது.

அப்போது, அமைதியாக வன்னி பூங்காவின் நுழைவாயில் நுழைந்ததிலிருந்து தீவிரமான பார்வையுடன் அவளையே கவனித்திருந்த ஒரு எட்டு வயது சிறுப்பெண் அந்த சிறுவனின் பேச்சில் பொறுமை இழந்தவள் போல, “ப்ச்…என்று சலிப்புடன் உச்சுக்கொட்டிக் கொண்டு எழுந்தாள்.

அதுவரை அங்கிருந்த கல் இருக்கையில் சாய்ந்தவிதமாகக் கைகளை உடலுக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு, வாயில் நீளப் புல்லின் அடியினை வைத்துக் கொண்டிருந்தவள் வாயிலிருந்த புல் குச்சியை கீழே போட்டுவிட்டு வன்னியின் அருகில் வந்து நின்றாள்.

வன்னி குகனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் வாயடைத்து நின்றிருக்கும் போதே அந்தச் சிறுமி, “ஏன் இந்த ஆடைக்கு என்ன? ஏன் அவள் விளையாடக் கூடாது.?” என்று அந்தச் சிறுவனைப் பார்த்துக் கேட்டாள் புதிதாக வந்த அந்த 8 வயது சிறுப்பெண்.

எதிரில் இருந்த எல்லோரும் தன்னை விதிவிலக்கு போல பார்த்திருக்க, புதிதாகத் தன் அருகில் தோழமையுடன் வந்து நின்ற 8 வயது சிறுப்பெண்ணை வன்னி நிமிர்ந்து பார்த்தாள். வன்னியை விட ஓரிரு வயது பெரியவளாக இருந்தபோதும், அந்தச் சிறுமி மெலிந்து தெரிந்தாள்.

அந்த பெண்மஞ்சள் நிற கந்தலான பருத்தி ஆடையை அவள் அணிந்திருந்தாள். சில இடங்களில், ஒட்டு போட்டுக் கிழிச்சலை மறைக்கும் விதமாக அந்த ஆடை இருந்தபோதும் அவள் தோரணையாக நின்று அந்த சிறுவனிடம்கேட்டவிதத்தில், வன்னிக்கு அவளை மிகவும் பிடித்துவிட்டது.

கண்ணில் ஒளியுடன் ஆர்வமாக அந்தச் சிறுப்பெண்ணை மீண்டும் மீண்டும் திரும்பி வன்னி பார்த்தாள். அந்த பெண் வந்ததும், சற்று தயங்கிய அந்தச் சிறுவன், “ஏய் மதி. நாங்க விளையாடும்போது எத்தனை முறை கீழே மண்ணில் விழுவோம் தெரியும்தானே?

இந்தச் சிறுமி அணிந்திருக்கும் இந்த ஆடை அணிந்துக் கொண்டு விளையாடினாள். இந்த ஆடை மண்ணில் பட்டு வீணாகிவிடாதா? இது கூடத் தெரியாமல் ஓடி வந்திருக்கும் இந்தச் சிறுமி அழுக்கான ஆடையுடன் வீட்டுக்குச் சென்றால் அவள் அம்மா அப்பா அவளை அடிக்கமாட்டார்கள் எந்த வீட்டு செல்வந்தரின் மகளோ!” என்று அவன் கிண்டலை நியாயபடுத்தினான்.

என் அன்னையும் தந்தையும் ஏன் என்னை அடிக்கப் போகிறார்கள். இந்த ஆடை அழுக்கானால் மற்றொரு ஆடை அணிந்து கொள்ளலாம்தானே.’ என்று எண்ணியவள், அப்போதுதான் எதிரில் இருந்த சிறுவர்களின் ஆடைகளிலும் தன்னுடைய ஆடையிலும் உள்ள பேதமை உணர்ந்தாள்.

ஓ இது தான் காரணமா? நான் மனித யாளி சிறுவர்களுடன் விளையாட வேண்டுமென்றால், நானும் இதுபோல் பருத்தியால் ஆன ஆடையை அணிய வேண்டுமோ!’ என்று ஏதோ புதிதாகக் கற்றது போல் அவர்களின் ஆடை தரத்தைக் கண்ணால் ஆராய்ந்தாள்.

ஆனால் வன்னியின் சிந்தனைகள புதிதாக அங்கு வந்த சிறுப்பெண் மதிக்கு இருக்கவில்லை. அந்தச் சிறுவனின் பதிலில் கண்களை உருட்டி அவன் முகம் பார்த்துப் பதில் சொல்லப் பிடிக்காமல் எங்கோ பார்த்து, “அது அந்தச் சிறுமியின் கவலை. அதற்கு நீ கிண்டல் செய்து சிரிப்பாயா?” என்று சுல்லெனச் சொன்னாள்.

அதனைக் கேட்ட அந்தச் சிறுவனுக்கும் கோபம் வந்தது. உடனே, “நீ…?” என்றவன் சற்று நிறுத்தி ஏளனமாகச் சிரித்து, “உனக்கென்ன கவலை. உன் ஆடை கிழிந்து தொங்கினாலும், உன்னைக் கேள்வி கேட்க ஆளில்லை. தவறு செய்தால் அடிப்பதற்கும் பெற்றோர்கள் இல்லையே.

அப்படி இருந்து அடித்தாலும் சிம்ம யாளியான உன் தோல் மிகவும் தடித்த ஒன்று. உனக்கு வலிக்கவும் வலிக்காது. அதனால் எது பற்றியும் கவலை இல்லாமல் எதுவும் பேசுவாய். அந்தச் சிறுமியின் நிறத்தைப் பார். பாலை போல வெண்மை. நம்மைப் போலவா இருக்கிறது.

அழகு சிலைபோல இருக்கு. தூர இருந்து பார்க்கலாம். கூட எப்படி விளையாடுவது. அதனோடு நாம் ஏதோ அம்மா அப்பாவுடன் பொருள் விற்க சிம்ம அரசிலிருந்து இங்கு வந்திருக்கும். இந்த ஊரிலே இருக்கும் இந்த சிறுமி நம்முடன் விளையாடும்போது அடிப்பட்டால்,

அவர்கள் பெற்றோர்கள் அவளை அடிப்பதோடு விடாமல் நம்மிடம் பிரச்சனைக்கு வந்தால் நீ வந்து தடுப்பாயா? அவளைக் கிண்டல் செய்து சிரித்ததும் ஓடி வந்து அவளுக்காக பேசுகிறாய். இரு என் அம்மாவிடம் சொல்லி உனக்கு இன்று இரவு உணவைத் தரக் கூடாது என்று சொல்கிறேன். அவ்வளவு அக்கறை இருந்தால் அந்தச் சிறுமியோடு நீயே போய் விளையாடு.” என்று கத்தினான்.

கத்தியவன் மதி பதில் சொல்லும் முன்னே, திரும்பி, வேடிக்கை பார்த்திருந்த மற்ற சிறுவர்களைப் பார்த்து, “யாரும் இந்த வெள்ளை ஆடை அணிந்த சிறுமியோடு விளையாடக் கூடாது. விளையாடினால் அவர்களையும் மற்றவர்கள் விளையாட்டில் சேர்த்துக் கொள்ள கூடாது.” என்று அங்கிருப்பவர்களுக்கு உத்தரவிட்டான்.

மதிக்கு பெற்றோர்கள் இல்லை.’ என்று சொன்னதை கேட்ட வன்னி திகைத்து அவளைப் பார்த்தாள். ‘இந்தச் சிறுமிக்குப் பெற்றோர்கள் இல்லையா? அதனோடு இவள் மனித யாளி போலவும் அல்லவே. சிம்ம யாளிகள் கிழக்கே இருப்பார்கள் என்று என் குரு சொன்னாரே. வ்வளவு தூரம் வடக்கிலிருந்து பரியரசுக்கு வந்தாளா.?’ என்று திகைத்தாள்.

குகனின் வார்த்தைகளை கேட்ட மதி எதுவும் சொல்லாமல் கோபமாகப் பெருமூச்சுவிட்டு, “வா நான் உன்னோடு விளையாடுகிறேன். இங்கு நின்று இவர்களிடம் பேசாதே.” என்று வன்னியின் கைப்பற்றி இழுத்துக் கொண்டுச் சென்றாள்.

மதியுடன் சென்ற போதும், திரும்பித் திரும்பிக் கிண்டல் செய்த சிறுவனைப் பார்த்து, “அந்தச் சிறுவனின் பெற்றோர்கள்தான் உன்னையும் பார்த்துக் கொள்கிறார்களா?” என்று மதியை பார்த்தாள் வன்னி.

வன்னியின் கேள்வியில் வன்னியை பற்றியிருந்த கைப்பிடி ஒரு நொடி இறுகியது. பின் ஆமாம் என்பது போல் மதியின் தலை சைந்தது. சற்று நிறுத்தி வன்னியை பார்த்து, “என்னைப் பார்த்துக் கொள்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களுக்கு நான் வேலை செய்கிறேன்.” என்றாள்.

அதனைக் கேட்டதும் தன் சேவகர்களும், காவலர்களும் நினைவுவர, “நீ அவர்களின் சேவகரா? அல்லது பாதுகாவலனா? இருந்தாலும், அவர்கள் குறைந்தது 20 எலும்பு வயதாக இருப்பார்களே! உன்னைப் பார்த்தால் 7லிருந்து 8 வயது தான் இருக்கும் போல் இருக்கு.? சிறுவதில் கூடச் சேவகர்கள் உண்டா?” என்று வன்னி குழம்பி கேட்டாள்.

வன்னியின் சேவகர், பாதுகாவலன் என்ற மேற்கோலில் மதி வன்னியை கூர்ந்து கவனித்தாள். பின் எதையோ அறிந்தவள் போலப் பெருமூச்சுவிட்டு, கண்களை உருட்டி எங்கோ பார்த்தாள். ஆனால் பதில் சொல்லவில்லை. கூடவே வன்னியை நீ என்று ஒருமையில் இனி பேசக் கூடாது என்றும் மதிக்கு தோன்றியது.

மதியின் முக சோர்வின் காரணம் புரியாமல் வன்னி, “என் பெயர் வன்னி. உனக்கு என்னிடம் சொல்ல விருப்பமில்லையென்றால் நீ சொல்ல வேண்டாம். நாம் விளையாட மட்டும் செய்வோம். சரியா?.” புன்னகை மலர விழி விரித்து கேட்டாள்.

வன்னியின் பதிலிலும், கோழிகுண்டு கண்ணில் தெரிந்த உலகம் அறியாத சிறுப்பிள்ளையின் துறுதுறுப்பிலும் மதியின் இதழும் விரிந்தது. அவளை பார்த்து வன்னியின் தலையை வருடி, யாரிடமும் சொல்லக் கூடாது என்று மறைப்பதற்கு அப்படி இரகசியமும் இல்லை.

என் பெயர் மதி. குகன், அந்தச் சிறுவன்சொன்னது போல் என்னுடைய பெற்றோர்கள் என்னுடன் இல்லை. அதனோடு நான் மனித யாளியும் அல்ல.

நான் ஒரு சிம்ம யாளி. எனக்கு நினைவு தெரிந்து என் பெற்றோர்களை நான் பார்த்ததில்லை.” என்று பெருமூச்சுவிட்டு, எதிரில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்தவிதமாக எதையோ நினைவு கூர்பவள் போல நின்று மேலும் சொன்னாள்.

இரண்டு வருடங்களுக்கு முன் பசியில் ஒரு வீதியில் இறக்க இருந்த எனக்குக் குகனின் தாய்தான் உணவளித்தார்கள். அதன் பிறகு நான் சிம்மயாளி என்றும், என்னால் ஆன உதவியை அவர்களுக்குச் செய்வதாகவும் அவர்களிடம் சொன்னேன்.

என்னை வேலையில் சேர்த்துக் கொள்ளும்படியும் சொன்னேன். முதலில் தயங்கிய போதும், இரக்க குணமுள்ள குகனின் தாய், மூன்று வேளை உணவும் தங்க சிறு இடமும்தான் தர முடியும் என்று சொன்னார்கள். அப்படியே செய்யவும் செய்தார்கள்.

அப்போது அதுவே எனக்குப் போதுமானதாக இருந்தது. பின் நான் வேலை செய்யும் திறமையைப் பார்த்து, இப்படி மாதம் ஒருமுறை சிம்மர அரசிலிருந்து பரி அரசுக்கு முத்து, பவளம், என்று கடல் ஆபரணங்களை விற்க வரும்போது என்னையும் அழைத்து வருவார்கள்.

அதிக கனமான பொருட்களை அவர்களைவிட 5 மடங்கு அதிகமாக என்னால் தூக்க முடியும். அதனால் இப்படி உதவ வரும்போது உணவுடன் எனக்குச் சில காசுகளும் செலவுக்குத் தருவார்கள். அதனைக் கொண்டு நானாக எழுதப் படிக்கப் பயின்றேன்.

ஓரளவு காசு சேர்ந்ததும் சிம்ம அரசின் குருகுலம் சேர வேண்டும் என்பது என் விருப்பம். மற்றபடி நான் சேவகரா? அல்லது பாதுகாவலனா?. என்று உங்களால் நான் சொன்னதிலிருந்து உணர முடியும்.” என்று சொன்னாள்.

மதியின் பதிலில், சிலது வன்னிக்கு புரியவில்லை. ‘பசி என்றால் வயிறு வலிக்குமென்று தெரியும்? பசியால் இறப்பார்களா?’ என்ற கேள்வி வந்தது.கொஞ்சம் கொஞ்சம் மருத்தவம் கற்க ஆரம்பித்திருந்த போதும், வன்னிக்கு நாடி பார்த்து எந்த வகை யாளி என்றும் சில அத்தியாவசிய மருத்துவ முறையும்தான் தெரியும்.

அதனால் மதியின், ‘பசியால் இறக்க இருந்த.’ என்ற வாக்கியம் கண் திறப்பாக வன்னிக்கு இருந்தது. அதனோடு மதியின் மன வலிமை அவள் பேச்சிலே உணர்ந்து, வன்னி ஏதோ முடிவெடுத்தவள் போல், “நீ… நீ என் சேவகராக வருகிறாயா?

நான் என் குருவை உன்னுடைய குருவாக இருக்கவும் கேட்கிறேன். நாநான் சொன்னால் என் தந்தை நிச்சயம் மறுப்பேதும் சொல்லமாட்டார்.” என்று எதிர்பார்க்கும் விழிகளுடன் மதியை பார்த்துக் கேட்டாள்.

வன்னியின் பதிலில் மதி ஒரு நொடி திகைத்தாள். கள்ளமற்ற வன்னியின் உள்ளம் மதிக்கு பூரிப்பாக இருந்தது. மதியின் இதழ் லேசாக விரிந்தது. மெல்ல, “சரி. முதலில் நான் குகனின் அன்னையிடம் இது குறித்து சொல்கிறேன்.

நாங்க இங்கு வந்து ஒருவாரம் ஆகிவிட்டது. நாளை இரவு அவர்கள் கிளம்பும் போது, அவர்களுக்கு உதவிவிட்டு வருகிறேன். நாளைக்குள் உன் பெற்றோர்களிடம் என்னை குறித்து சொல்லி அனுமதி கேட்டுச் சொல்.

ஒருவேளை உங்க பெற்றோர்கள் என்னை உன் சேவகியாக அனுமதிக்க விருப்பமில்லையென்றால், நாளை நான் கிளம்பிவிடுவேன். நீங்க உங்க பெற்றோர்களை வற்புருத்த கூடாது.” என்று ஏற்கனவே வன்னி அரண்மனையைச் சேர்ந்தவள் என்று அறிந்ததில் சொன்னாள்.

மதியின் பதிலில், “ஹய்யா! ம்ம். சரி. என் பெற்றோர்கள் என் விருப்பத்திற்கு மாறாக எதுவும் சொல்லமாட்டார்கள். வா இப்போதே போய் அனுமதி கேட்கலாம்.” என்று மதியின் கைப்பற்றி நடக்க ஆரம்பித்தாள். வன்னியின் குதுகலம் அவளுள்ளும் தொற்றிக் கொள்ள மதி உடன் நடந்தாள்.

அவர்கள் சில அடிகள் நடந்திருப்பர். ஆனால் வன்னி மேலும் நடக்காமல் எங்கோ வலியில் துடிப்பது போல் கேட்ட குதிரையின் கனைப்பை கேட்டு அப்படியே நின்றாள். எந்தச் சத்தத்தையும் உணராத மதி, திடீரென்று அசையாமல் நின்ற வன்னியை கேள்வியாகப் பார்த்தாள்.

வன்னி மதியின் பார்வையை உணராதவள் போல், மதியின் கையைப் பற்றியவிதமே, முன்பு நடந்ததற்கு எதிர்புரமாக ஓட்டமாக எதையோ தேடுபவள் போல ஓடினாள். அவ்வப்போது கண்கள் மூடித் தன் வலது கையின் இரு விரல்களை நெற்றியில் வைத்துக் கவனிக்கும் சக்கரத்தை உருவாக்கிச் சத்தம் வந்த இடத்தை நோக்கிச் சென்றாள் வன்னி.

மதிக்கு ஒன்றும் புரியாமல் வன்னி இழுத்த இழுப்புக்கு ஓடினாள். பலவீனமான சிறுமி என்று நினைத்திருந்த வன்னிக்கு இவ்வளவு பலம் இருக்கும் என்று மதி உணரவில்லை. வன்னியின் பிடியிலிருந்து தன்னை மதியால் விடுவித்துக் கொள்ள முடியவில்லை.

அந்த விளையாட்டு பூங்காவில் ஒரு எல்லையில் மாலை மங்கிய அந்த நேரத்தில் பல மலர்கள் வரிசையாக அமைந்து நந்தவனம் போல் காட்சி அளித்தது. ஆனால் அவை எதுவும் வன்னியின் கண்கள் இரசிப்பதாக இல்லை.

அவள் கண்ணில் பட்டதெல்லாம் அந்த நந்தவனத்தின் நடுவில் இளவயது மனித யாளிகள் நால்வர் ஒன்றாகச் சேர்ந்து கருநிற குட்டி குதிரையைக் காலால் உதைத்தும், மரகட்டையால் அடித்துக் கொண்டும் இருந்ததுதான்.

அந்தக் குட்டி குதிரை வலி தாங்காமலோ அல்லது வேறு காரணங்களாலோ கனைக்க கூடச் சக்தியற்று ஈனசுரத்தில் கத்தியது. அதைப் பார்த்த வன்னி நொடியும் தாமதிக்காமல் மதியை பற்றியிருந்த கையை விட்டு, தன் கைக்காப்பை சுற்றி இருந்த கருவியை விலக்கிக் கைக்காப்பிலிருந்து தன் புல்லாங்குழலை எடுத்து வாயில் வைத்தாள்.

வன்னியின் கையில் கைக்காப்பை பார்த்து மதி திகைத்தாள். ‘கைக்காப்பு!!’சிம்மயாளியான மதி, விரைவில் சக்தியடைய வேண்டுமென்று தானாகவே எழுதப் படிக்கக் கற்றது மட்டுமல்லாமல் நான்கு யாளி அரசுகளைப் பற்றிய நிலவரங்களையும் அறிந்திருந்தாள்.

வன்னியின் வெள்ளை நிற ஆடையைப் பார்த்ததுமே மற்ற சிறுவர்களைப் போலல்லாமல் வன்னியை பரியாளி என்று யூகித்திருந்தாள். ஆனால் 5 வயதுக்குள் சக்கர நிலை அடைந்தவள் என்று எண்ணியிருக்கவில்லை.

5 வயது பரியாளியான வன்னி ஏற்கனவே ஆன்மீக இதய வேர் கொண்டு அவளுக்கென்று கைக்காப்பும் உருவாக்கிவிட்டிருக்கிறாள்! பாவம்போல் நிற்கிறாளே, என்று முன்பு அந்தச் சிறுவர்களிடமிருந்து காக்க, நான் உதவிக்குச் சென்றனே!’ என்று நினைத்து மதி உடனே முட்டாளைப் போல் உணர்ந்தாள்.

மதி, ‘-_-.’

மதியின் இந்த மன மாற்றம் வன்னி உணரவில்லை. வன்னியின் கவனம் முழுதும் குதிரையின் கனைப்பிலே இருந்தது. புல்லாங்குழலை வாயில் வைத்ததும் அவள் மூச்சுகாற்று இன்னிசை ஒலியாக உருவாகி, காற்றில் வெள்ளை நிற மின்னல் போன்ற மென்னலைகளை உருவாக்கி, அந்தக் குட்டி குதிரையைச் சுற்றி பாதுகாப்பு சக்கரத்தை உருவாக்கியது.

அது உருவானதும், அந்தக் குதிரையை அடிக்க முயன்ற அந்த நான்கு மனித யாளிகளும் அந்தப் பாதுகாப்பு சக்கரத்தால் தாக்கபட்டு தூக்கி வீசப்பட்டனர். என்ன நிகழ்ந்தது என்று புரியாமல் விழித்துப் பார்த்த அந்த நால்வரும், சற்று தொலைவில் கண்கள் மூடிப் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டு நின்றிருந்த வன்னியை கோபமாக முறைத்தனர்.