யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 46

761

அத்தியாயம் – 46

425 வருடங்களுக்கு முன்பு…

பரி அரசின் அரசவையில் அனைவரும் அடுத்த வரவிருப்பது குட்டி ராணியா அல்லது குட்டி ராஜாவா என்ற சலசலப்பில் இருந்தனர். ஆன்ம பிணைப்பு ஏற்பட்டு 600 வருடங்களுக்குப் பிறகு பரி அரசின் ராணி நண்மலர் கருவுற்று இன்று பிரசவ வலியில் இருந்தாள்.

பிரதான அரண்மனையில் உள்ள அனைவரும் பதட்டமுடன் குழந்தை பிறந்துவிட்டது என்ற தகவலுக்காகக் காத்திருந்தனர். மனித யாளிகளை போலல்லாமல் மற்ற யாளிகளால் பிரசவ வலி இல்லாமல் குழந்தை பெற்றெடுவிட முடியும் என்றபோது, அரசி நண்மலர் அந்த வலியைத் தன் ஆன்மீக ஆற்றலில் குறைத்திட விரும்பவில்லை.

வலியில், “ஆ…ஆ…” என்று அவ்வப்போது கத்திக் கொண்டிருந்தாள் நண்மலர். அரண்மனை அறையில் மருத்துவர் ஒருவர், நண்மலரின் வயிற்றில் கை வைத்து ஆன்மீக ஆற்றலைச் செலுத்தி, மெதுவாக வயிற்றிலிருந்து, குழந்தை வெளியில் வர வழி செய்துக் கொண்டிருந்தார்.

வெளியில் பதட்டமுடன் பரிஅரசர் பூவேந்தன்அந்த அறையின் முன் குறுக்கும் நெடுக்கும் நடந்துக் கொண்டிருந்தார். உயிர் பாதிப்பு இருக்காது என்ற போதும், வரவிருக்கும் குட்டி உயிரை எதிர் பார்த்து ஆர்வமுடனும் பதட்டமுடனும் இருந்தார்.

அவருடன் ராஜாகுருவும் புது உயிருக்கு ஆருடம் காண காத்திருந்தார். அறையின் உள் அரசின் அருகில் மெத்தையில் மெய்காப்பாளி ஞிமிலி அரசி நண்மலரின் கையைப் பற்றி எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்.

சில நாழிகள் நீடித்த பிரசவ வலி ஒரு குழந்தையின் அழுகுரலில் நின்றது. கூடவே “இளவரசி பிறந்துவிட்டாள் என்ற மருத்தவரின் குரலும் கேட்டது.” அதனைக் கேட்டதும் நேரத்தைக் குறித்து ஆருடம் கணிக்க கிளம்பினார் சந்திரகுரு.

பூவேந்தன் ஒரு நொடி தாமதித்து, பின் அரசியின் அறையில் நுழைந்தார். மருத்துவர் மகிழ்ச்சியுடன் அரசரைத் திரும்பிப் பார்த்து, “அரசே! குட்டி இளவரசி பிறந்திருக்கிறாள்.” என்றார்.

பூவேந்தன் வாயெல்லாம் புன்னகையாக, ஓடி வந்துஅரசியின் கைவளைவுக்குள் ஒரு துணியால் சுற்றப்பட்டு அடங்கியிருந்த வெண்மையும் சிவப்பும் கலந்திருந்த குட்டி உருவை பார்த்தார். மருத்துவர் அரசருக்கு வழிவிட்டு விலகித் தள்ளி நின்றார்.

ஞிமிலி அரசருக்கு மரியாதைக் கொடுக்கும் நிமித்தமாக மெத்தையிலிருந்து எழுந்து அருகில் தலை தாழ்த்தி நின்றாள். நண்மலர் அரசரைப் பார்த்து, “நம் கண்மணி உங்களின் கண்ணைக் கொண்டு பிறந்திருக்கிறாள்.” என்று குழந்தையைப் பூவேந்தரின் கையில் கொடுத்துச் சொன்னாள்.

கையில் குழந்தையை வாங்கிய பூவேந்தர், “அவள் உன் நிறத்தைக் கொண்டு பிறந்திருக்கிறாள்.” என்றவர் பூரிப்புடன், “என் குட்டி இளவரசி பிறந்துவிட்டாள்.” என்று குதுகலத்துடன் குதிரைப் போலக் கனைத்தார்.

குதிரையின் கனைப்பை கேட்டதும், அவர் கையிலிருந்த குழந்தை சட்டென வெள்ளை நிற குதிரையாக(1) மாறியது. அதனைப் பார்த்த அறையிலிருந்த அனைவரும் திகைத்தனர். பொதுவில் எல்லா வகை யாளிகளும் மனித உருவிலிருந்து அவற்றின் பூர்வீக உருவிற்கு மாறக் குறைந்தது 5 வருடமாவது ஆக வேண்டும்.

ஆனால் அவர்களின் குட்டி இளவரசி பிறந்தவுடனே தங்களின் பூர்வீக உருவிற்கு மாறியதும் திகைப்புடன் மகிழ்ச்சியும் பொங்க ஞிமிலி, “நம் இளவரசி மிகவும் சக்தி வாய்ந்தவள். அதற்குள் பூர்வீக உருவிற்கு மாறிவிட்டார்.” என்று ஆர்வமாகக் குட்டி குதிரையின் அசைவுகளைப் பார்த்தாள்.

நண்மலரும் பூவேந்தனும் திகைத்துப் பின் பூரிப்புடன் தன் மகளைப் பார்த்தனர். குட்டி குதிரை இளவரசியை தன் கையிலிருந்து தரையில் விட்ட பூவேந்தர் அவரும் அவரின் பூர்வீக உருவிற்கு மாறிப் பெரிய கரு நிற குதிரையாகத் தன் மகளுடன் குதுகலத்துடன் கனைக்க ஆரம்பித்தார்.

இருவரும் அந்த அறையில் இருமுறை மெதுவாக வட்டமிட்டுப் பின் நண்மலரின் அருகில் வந்து நின்றனர். மீண்டும் மனித உருவிற்கு மாறிய பூவேந்தர், “நான் சொன்னேனே நம் மகள் பூர்வீக உருவில் என்னைப் போலக் கருநிறத்தில் இல்லாமல் உன்னைப் போல வெண்மை நிறமென்று.” என்று தன் மகளை லேசாக அள்ளித் தன் கையில் பிடித்துக் கொண்டார்.

குட்டி குதிரையின் உருவிலிருந்து அவளும் மனித குழந்தை உருவிற்கு மாறினாள். “என் மகளின் வெண்மை நிறத்தைச் சொல்லும் விதமாக, வெண்ணிற பரி என்ற பொருள் கொண்ட வன்னி என்று பெயரிடுகிறேன்.” என்று மெல்ல வன்னியை உயர்த்தி அவளது நெற்றியில் இதழ் பதித்தார் பூவேந்தர்.

பின் ஞிமிலியிடம் திரும்பி, “இளவரசி வன்னி பிறந்த செய்தியைத் தண்டோரமிட்டு பரி அரசு முழுதும் உடனே பரப்ப ஆணையிடுகிறேன். உடனே செயல்படுத்து ஞிமிலி.” என்றார் பூவேந்தர்.

ஞிமிலி புன்னகையுடன், “உத்தரவு அரசே.” என்று கரம் குவித்து வணங்கி அந்த அறையிலிருந்து சென்றாள்.

மருத்துவர், “அரசே அரசி சில நாழிகைகள ஓய்வெடுக்க வேண்டும். குழந்தையும் பசியாற வேண்டும்.” என்று முழுதும் சொல்லாமல் இழுத்தார்.

மருத்துவரின் வார்த்தையின் பொருள் உணர்ந்து, பூவேந்தர் 650 எலும்பு வயதுடையவர் போலல்லாமல் சிறுப்பிள்ளை மகளுடன் சேர்ந்து இதுவரை துள்ளி குதித்ததை உணர்ந்து சங்கூச்சமுற்றார். உடனே தொண்டையை கனைத்து, “ஓ…ம்ம்… சரி…” என்றார்.

மெதுவாகக் கையிலிருந்த குழந்தையை நண்மலரிடம் கொடுத்துவிட்டு, “மலர்… நான் ராஜாகுருவை பார்த்துவிட்டு வருகிறேன். நீ ஓய்வெடு.” என்று எதையோ வென்றுவிட்டவர் போன்ற மமதையுடன் அறையிலிருந்து வெளியில் வந்தார்.

வெளியில் வந்தவர் அறையின் வெளியில் கவலையும் கேள்வியுமாக அவசரமாக அங்கு வந்துவிட்டிருந்த அரசவை மந்திரிகளைப் பார்த்துத் திகைத்தார் பூவேந்தர்.

அரசே, “என்ன நிகழ்ந்தது. உங்களின் பூர்வீக உருவின் குரல் கேட்டு நாங்க பயந்து ஓடி வந்தோம். குழந்தை சுகம் தானே!” என்றார் பிரதம மந்திரி.

அதன் பிறகே பூவேந்தருக்கு நினைவு வந்தது. தவிர்க்க முடியாத காரணங்களிலும் போரிடும் தருணங்களிலும் தவிர மற்றபடி எந்த யாளிகளும் அவர்களின் பூர்வீக உருவிற்கு மாற மாட்டனர். பூவேந்தன் குதிரை உருவுக்கு மாறியது மட்டுமல்லாமல், குதுகலத்துடன் பல முறை சந்தோஷ மிகுதியில் கனைத்தார்.

‘அநேகமாக என் கனைப்பு பிரதான அரண்மனையின் அருகிலிருந்த அரசவையிலும் கேட்டிருக்க வேண்டும். அதனைக் கேட்ட இவர்கள் பயந்து ஓடி வந்திருக்கின்றனர்.’ என்று உணர்ந்த பூவேந்தர் உடனே மீண்டும் சங்கூச்சமாகத் தொண்டையை கனைத்து, “கவலை படக்கூடியது எதுவுமில்லை மந்திரியாரே.” என்றார்.

சற்று நிறுத்தி, “குட்டி இளவரசி வன்னியும், அரசி நண்மலரும் நலமுடன் இருக்கின்றனர். உடனே இளவரசி பட்டம் சூட்டும் விழாவிற்கு ஏற்பாடு செய்யுங்க. மற்றது நாளைய அரசவையில் பேசலாம். இப்போது எல்லோரும் கலைந்து செல்லுங்க.” என்றார்.

அவரின் முகத்தில் தெரிந்த மகழ்ச்சியிலும், பிறந்திருப்பது குட்டி ராணி என்பதையும் புரிந்துக் கொண்ட அனைவரும், “வாழ்க இளவரசி. வாழ்க பரி அரசர். வாழ்க பரி அரசி.” என்று வாழ்த்திவிட்டு கலைந்துச் சென்றனர்.

பிறகு தன் பின்னே கைக்கட்டிக் கொண்டு இராஜகுருவின் இருப்பிடம் நோக்கி நடந்தார் பூவேந்தர். அவருடன் சற்று தள்ளி இரு சேவகர்கள்பின் தொடர்ந்தனர்.

அரசர் வருவதற்காகவேக் காத்திருந்த இராஜகுரு, “வணக்கம் அரசே.” என்று வரவேற்று அவரை அமர வைத்தார் சந்திரர்.

பூவேந்தர், “சந்திரகுரு, என் மகள்குறித்து ஆருடம் கணித்துவிட்டீர்களா? என் மகள் மிகவும் சக்தி வாய்ந்தவளாக வளர்வாள். அதற்குள் பரியாளிகளின் பூர்வீக உருவிற்கு மாறிவிட்டாள். பிறகு என் கையில் கொண்டு அவளைச் சமாதனம் செய்வது பிறகே மீண்டும் மனித உருவிற்கு மாறினாள்.” என்று பூரிப்பும் குறைப்படுவது போலவும் புன்னகைத்தார்.

அதனைக் கேட்ட ராஜாகுரு, “ம்ம்…” என்று தலையசைத்தார். கையிலிருந்த ஓலைச்சுவடியில் கவனமாக இருந்தவர் பின் நிமிர்ந்து, “அரசே, நான் என் கணிப்பைத் தருமுன், இளவரசியை பார்க்க வேண்டும்.” என்று குரலில் மகிழ்ச்சி இல்லாமல் வெகுதீவிரமாகச் சொன்னார்.

ராஜாகுருவின் முகத்தில் புன்னகை இல்லாமல் இருப்பதை உணர்ந்து பூவேந்தர், “என்ன? எதுவும் விபரீதமாக இருக்கிறதா?” என்று பதட்டமுடன் கேட்டார்.

ராஜாகுரு, “ம்ம்… நான் இளவரசியை பார்த்த பிறகுசொல்கிறேன்.” என்று எழுந்தார்.

அரசரும் உடன் எழுந்து, “சரி…” என்று ராஜாகுருவுடன் நடந்தார். விரைவிலே குழந்தை இருந்த அறைக்கு வந்த ராஜாகுருவும் பூவேந்தரும், ஒரு தலையசைப்பு தர அறையிலிருந்து அனைவரும் வெளியில் சென்றனர்.

ஓய்வெடுக்க சொல்லிவிட்டு சென்ற அரசர் உடனே வந்திருப்பதை கேள்வியாகப் பார்த்த நண்மலரிடம் கண்ணசைவில் தெம்பளித்தவர், அவளிடமிருந்து குழந்தையை வாங்கி ராஜகுருவிடம் காட்டினார் பூவேந்தர்.

இராஜகுரு வன்னியின் கை மணிக்கட்டை பற்றி மெல்ல ஆன்மீக ஆற்றலைச் செலுத்தினார். செலுத்தியவர் சில நொடியில் திகைத்தார். “இதனை வரம் என்று சொல்வதா! அல்லது சாபமென்று சொல்வதா?” என்று முனுமுனுத்தார்.

திகிலுடன் பார்த்திருந்த பெற்றோர்கள் ராஜகுருவின் வார்த்தையில், தன் மகள் வன்னி ஏதேனும் குணபடுத்த முடியாத வியாதியுடன் பிறந்திவிட்டாளா? என்று பதரினர். பூவேந்தரும் வன்னியின் மணிகட்டை பற்றி ஆன்மீக ஆற்றலைச் செலுத்தி அவள் உடலை ஆராய்ந்தனர்.

குழந்தையாக இருந்ததாலோ என்னமோ எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் பூவேந்தரால் வன்னியின் உடல் முழுதும் சென்று பார்க்க முடிந்தது. அப்படி பார்த்தவர், பிறந்த சில நாழிகைக்குள் எந்தவித தவமுமின்றி வன்னியின் உடலில் ஆன்மீக இதய வேர் உருவாவதற்கான அறிகுறி தென்பட்டதை பார்த்துத் திகைத்தார்.

“இ…இது. அதற்குள் எப்படி ஆன்மீக இதய வேர் உருவாகும். மிக விரைவில் என்றாலும் 5 வருட எலும்பு வயதாவது ஆக வேண்டுமே. இப்போதே ஆன்மீக இதய வேர் உருவாகிவிட்டால் என் மகளின் உடல் எலும்பு அதன் சக்தியைத் தாங்குமா?” என்று முகம் வெளுத்தார். அவர்கள் இருவரின் வார்த்தைகளைக் கேட்டிருந்த நண்மலரும் அச்சமுற்றாள்.

பெருமூச்சுவிட்ட ராஜகுரு, “இளவரசிக்கு எதுவும் ஆகாது. இன்னும் சில மாதத்திலே ஆன்மீக இதய வேர் அவளுள் உருவாகிவிடும். அவள் எலும்பு சாதரணமானதல்ல, பல ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை பிறக்கக்கூடிய வெள்ளி எலும்பு.

இவள் தவம் புரிந்தாலும், புரியவில்லையென்றாலும் இயற்கை அவளுக்கு ஆன்மீக ஆற்றலை எப்போதும் அள்ளித் தந்துக் கொண்டே இருக்கும். இவள் 30 எலும்பு வயதிற்குள்ளே 7 சக்கர நிலைகளையும் அடைந்து மிகவும் சக்தி வாய்ந்தவளாக மாறிவிடுவாள். ஆனால்…” என்றவர் நிறுத்தி அரசர் அரசியை பார்த்தார்.

இதுவரை சொன்னதெல்லாம் பெருமை கொள்ள வேண்டிய செய்திகளே அப்படியிருந்தும் ராஜகுருவின் தயங்கிய தோற்றத்தில் பூவேந்தன் நண்மலர் இருவரளும் மகிழ்ச்சிக் கொள்ள முடியவில்லை. இருவரும் ஒன்றாக, “ஆனால்…” என்றனர்.

“ஆனால் இளவரசி வெள்ளி எலும்புடன் பிறந்திருப்பது தெரிந்தால் பேராசையுடையவர்கள் அவளைக் கொன்று வெள்ளி எலும்பை எடுத்துக் கொள்ள நேரிடலாம். வெள்ளி எலும்புகுறித்து பலருக்கும் தெரியாது என்ற போதும், என்னைப் போல5000 வருடத்திற்கு மேலாக உயிர் வாழும் யாளி வகையர்களுக்கு இது தெரியும்.

அவள் உடலில் உள்ளா வெள்ளி எலும்பினை உறிஞ்சினாள், பல ஆயிரம் வருடமாக ஒரே சக்கர நிலையில் இருப்பவர்கள் விரைவில் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும்.

உதாரணமாக, 4000 வருடமாக ஐந்தாவது சக்கரத்தின் கடை நிலையிலே இருப்பவர்கள் வெள்ளீ எலும்பின் சிறு துகளை உறிஞ்சினால், சில மாதங்களில் ஆறாவது சக்கரத்தின் முதல் நிலையை அடைந்துவிடக்கூடும்.

இது யாருக்கும் தெரியாத வரை பரவாயில்லை. ஆனால் தெரிந்துவிட்டால் இளவரசியின் உயிருக்குப் பாதிப்பு ஏற்படும். அதனோடு இளவரசியினுள் இன்னும் ஒரு வருடத்தில் ஆன்மீக இதய வேர் உருவாகி விடும். விவரம் அறியுமுன்னே முதல் சக்கர நிலையையும் அவள் அடைந்துவிடுவாள்.

இது கண்டிப்பாக அவளைக் குறித்தசந்தேகத்தை பலருக்கும் ஏற்படுத்தும். அப்போது யாரேனும் இளவரசியினுள் ஆன்மீக சக்தியைச் செலுத்தி பார்த்தால், அவள் இரகசியம் தெரிந்துவிடும். ஏனென்றால் மற்றவர்களைப் போலல்லாமல், வெள்ளி எலும்பு உள்ளவர்களின் ஆன்மீக இதய வேரை யார் வேண்டுமென்றாலும் பார்க்க முடியும்.

அவளுள் நம்மைப் போல இதய வேரைக் காப்பதற்கான தடுப்பு சக்தி கிடையாது. அதனால் அவள் முதல் சக்கர நிலை அடைந்தாலும் நாம் அதனை உலகுக்கு உடனே சொல்லக் கூடாது. முடிந்தவரை இளவரசி வெளியில் தனியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

குறைந்தபட்சம் அவள் நான்கு சக்கர அளவுச் சக்தி நிலையும், அவளது நிலைகுறித்து விழிப்புணர் வையும், அடையும் வரை அவளை வெளியில் அனுப்ப கூடாது. வேறு யாரும் அவள் நாடி பிடித்து மருத்துவம் பார்ப்பதை தவிர்க்க, அவளே எல்லா மருத்துவ முறைகளையும் பயில வேண்டும்.

எந்தத் தடைச்செய்யப்பட்ட சக்கரங்களாலும் பாதிக்கப் படாமல் இருக்க, முக்கியமாகக் கைப்பாவை சக்கரம், உயிர் உறிஞ்சும் சக்கரங்களால் பாதிக்கப் படாமல் இருக்க நல்லது கெட்டது என்று எல்லா சக்கர நிலைகளையும் அவள் அறிந்து, அதிலிருந்து விடுபடும் வழிமுறையை அவள் பயில வேண்டும்.

இவ்வாறெல்லாம் செய்வதால் அவளை முடிந்த அளவு பாதுக்காக்க முடியும். இருந்தாலும்.” என்றவர், அடுத்து எப்படி சொல்வது என்ற தடுமாற்றத்துடன் தன் கையில் எந்தவித கவலையும் இல்லாமல் கண்மூடி இருந்த குழந்தையின் முகத்தைப் பார்த்தார்.

அமைதியாக அதுவரை கேட்டிருந்த நண்மலர், “சந்திரகுரு, நீங்கச் சொல்வது போல எல்லாம். செய்யலாம். அவளை வெளியில் எங்கும் அனுப்புவதில்லை. அவளுக்குச் சிறுப்பிள்ளைகளுடன் விளையாட ஏக்கம் வராதபடி அவளுக்குத் துணையாக எப்போதும் அவளுடன் இருக்க அவள் வயதிலே மெய்காப்பாளனையும் ஏற்பாடு செய்கிறேன்.

அவளை எந்த மருத்தவர்கள் பரிசோதிக்க இனி அனுமதிப்பதில்லை. அவளை உங்களது சீடனாக ஏற்று அவளுக்கு எல்லா சக்கரங்களைக் குறித்தும் நீங்களே பாடமெடுங்க. மருத்துவம் கற்று தர நம்பிக்கை குறியவர்களை சல்லையடையெனச் சலித்து நான் கண்டுபிடித்து என் மகளுக்குப் பயிற்றுவிக்க உதவுகிறேன்.

இருந்தாலும் வேறேன்ன? எனக்கு இந்த வெள்ளி வேர் எலும்பின் சிறப்பு தெரியவில்லை. உங்களை போலச் சிலருக்குதான் அதுகுறித்து தெரியும். அதனால் நாமாக வெளியில் எதுவும் சொல்லவில்லையென்றால் யாருக்கும் என் மகளின் விஷேச நிலை தெரியாதல்லவா?” என்று கலக்கமுடன் கேட்டாள்.

“நன்றி அரசி. இப்படியொரு சீடன் எனக்குக் கிடைக்க நான் பெரும் நல்காரியம் செய்திருக்க வேண்டும். என்னால் முடிந்த வரை அனைத்தையும் இளவரசிக்கு சொல்லித் தருவது என் கடமை. ஆனால் பிரச்சனை இது மட்டுமல்ல.” என்றார் ராஜாகுரு.

முன்பிருந்த மகிழ்ச்சி முற்றிலும் துடைப்பட்டவர் போல ஆவேசமுடன் பூவேந்தர், “வேறென்ன?” என்றார்.

ராஜாகுரு மீண்டும் ஒருமுறை பெருமூச்சுவிட்டு, “இளவரசியின் பிறந்த நேரத்தைப் பொருத்து 21வது எலும்பு வயதில் அவளது உயிர் நிலைக்குப் பாதிப்பு ஏற்படும். அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம். என்னதான் நாம் அரண்மனைக்குள்ளே பொத்தி வைத்திருந்தாலும், அவளது இந்தக் கண்டம் தவிர்க்க முடியாத ஒன்று,

ஒருவேளை இதிலிருந்து தப்பிவிட்டால், அவள் எதிர்காலத்தில் பரியரசியாக இருக்க மாட்டாள். யாளி பேரரசியாக எல்லா யாளி உலகம் முழுதும் ஆள்வாள். ஆனால் அந்தக் கண்டத்திலிருந்து மீண்டாலும், அவள் இரக்க குணமும் நல் குணமும் கொண்டவளாக நீடிப்பது கடினம்.

அவள் பேரரசி ஆனாலும் நற்பெயர் பெறுவது கடினம்.” என்று அவளது ஆருடத்தை தெளிவாகச் சொல்லிவிட்டு குழந்தையைப் பூவேந்தரிடம் கொடுத்தார். குழந்தை கைமாறியதும் ஒரு திடுக்கிடலுடன் உடல் நெழித்து பின் மீண்டும் உறங்கினாள் வன்னி.

பூவேந்தரும் நண்மலரும் பேறைந்தது போல முகத்தில் இரத்தபசையே இல்லாமல் முகம் வெளுத்துச் சொல்வதறியாமலும் செய்வதறியாமலும் குழந்தையைப் பார்த்தனர்.

அவர்களின் முகத்தைப் பார்த்த ராஜகுரு, “இப்போதைக்கு எதுவும் பிரச்சனையில்லை. கவலை படாதீங்க. நான் பேரரசரை காண அடுத்த மாதம் செல்கிறேன். அவர் ஒருவர்தான் இப்போது யாளி உலகில் ஏழு சக்கர நிலை சக்தியும் பூர்த்தி பெற்று மிகவும் சக்தி வாய்ந்தவர்.

அவருக்கு மட்டும்தான் இந்த வெள்ளி எலும்பு அவசியமில்லை. அதனோடு என்னைவிட அற்புதமாக ஆருடம் கற்றவரும் அவரே. ஆருடம் கணிப்பது மட்டுமல்லாமல் ஏதேனும் பெரிய அசம்பாவிதம் நிகழாமல் அதிலிருந்து விடுபடவும் அவர் வழி அறிந்து சொல்லக் கூடியவர்.

அதனால் தற்காலிகமாகக் கவலை பட வேண்டாம். எல்லாவற்றிற்கும் தீர்வுண்டு. நீங்கக் குழந்தையின் இளரவரசி பட்டவிழாவிற்கு ஏற்பாடு செய்யுங்க. மற்றது நான் பார்த்துக் கொள்கிறேன்.

மருத்துவர்களை இளவரசியின் அருகில் நெருங்க விட வேண்டாம். குறைந்தபட்சம் நான் சொல்லும் வரை அறியாதவர்களிடம் குழந்தையை ஒப்புவிக்க வேண்டாம்.” என்று சூழலை இயல்பாக்க முயன்றார்.

அவரது இந்த வார்த்தைகளில் பேரரசரின் சக்தியும், திறமையிலும் அபரிவிதமான நம்பிக்கையுடைய பூவேந்தர், மனதில் குடியேறியிருந்த அச்சம் லேசாகக் குறைய, “ராஜகுருவை நம்பிதான் நாங்க இருக்கிறோம்.

பேரரசரிடம் பேசும் போதும் இது என்னுடைய பிரதேக வேண்டுகோள் என்று கேளுங்க. என் மகளுக்கு உதவினால், அதற்குப் பிரதியாக எதுவும் செய்ய நான் தயார் என்று சொல்லுங்க.” என்றார்.

ராஜாகுரு, “நிச்சயமாக. நான் இவையெல்லம் சொன்னது உங்களைப் பயமுறுத்த இல்லை. ஆருடத்தின் உண்மை நிலை சொல்ல. இதனை முற்றிலும் தவிர்க்க வழி இல்லாமல் இல்லை. நல்லதே நடக்கும் என நம்புவோம். கூடவே கொஞ்சம் எச்சரிக்கையாகவு ம் இருப்போம்.” என்றார்.

கடைசியாகச் சொன்ன வார்த்தையில் நம்பிக்கை துளிர, “நிச்சயமாக.” என்று புன்னகைத்தாள் நண்மலர்.

வன்னியின் ஐந்தாவது வயதில்…

தன் பெற்றோர்களிடம் பலமுறை வேண்டியபிறகு அரண்மனையை விட்டு வெளியில் சென்று வர வன்னி அனுமதி பெற்றாள். அதன்படி அவளும், அவளுடன் சிறுவயதிலிருந்து வளரும் முகிலனும் தேரின் பல்லாக்கில் அமர்ந்து புறப்பட்டனர்.

தேரில் திரைசீலையை விலக்கி வேடிக்கை பார்த்தவிதமாக வந்தாள் வன்னி. அவர்களுடன் ஒரு சேவகியும், தேரின் நால் முனையிலும், நான்கு சக்கர சக்தி நிலைக் கொண்ட நான்கு காவலர்களும் நடந்துவந்தனர்.

முதல் முறையாகக் கடைவீதிகளையும் அங்கு விற்ற பலவித பொருட்களையும் தேரிலிருந்து பார்த்த வன்னி வியந்தாள். குதுகலத்துடன், “சேவகரே. நான் அருகிலிருந்து அவற்றைப் பார்க்க வேண்டும்.” என்று கடைவீதியை காட்டினாள்.

கூடவே, “தேரை நிறுத்துங்க.” என்று ஓட்டுனர் இருக்கையிலிருந்தவரிடம் திரைசீலையை விலக்கிக் கத்தினாள் வன்னி. வன்னியின் குரல் கேட்டு வண்டியை நிறுத்திய ஓட்டுநர், “உத்தரவு இளவரசி.” என்றார்.

வண்டி நின்றதும் தேரிலிருந்து துள்ளி குதித்த வன்னி, வெளியில் இருப்பவர்களைப் பார்த்து கிழுக்கி சிரித்தாள். அவள் வெளியில் செல்வதை பார்த்து, “இளவரசி. வெளியில் செல்ல வேண்டாம்.” என்று சொல்லிக் கொண்டு முகிலனும் அவளுடன் குதித்தான்.

“முகிலன். என்னை வன்னி என்று சொல்லச் சொன்னேன்தானே. வா நாம் இந்த கடைகளைச் சுற்றி பார்க்கலாம். மீண்டும் என் அன்னை எப்போது எனக்கு அனுமதி தருவார்களோ.! பேசிக் கொண்டு இராதே.” என்று முகிலனின் கையை ஒரு கையால் பற்றியும், தன் கால்வரை படர்ந்திருந்த பாவடையை ஒரு கையால் தூக்கிக் கொண்டும் கடை வீதிக்கு ஓடினாள்.

இளவரசியின் அசைவைப் பார்த்திருந்த நான்கு காவலர்களும் அவளுடன் சென்று அவளுக்குப் பின்னால் யாரும் அவள் அருகில் வந்தால் நெருங்க விடாமல் நின்றனர்.

அழகிய மெழுகு சிலை போலச் சின்னக் கைகளும் சின்னக் கால்களும் வாயெல்லாம் புன்னகையும், கண்களில் மின்னலெனக் குறும்புதனமும் வன்னியின் தோற்றம் பரியரசின் மக்களை திரும்பித் திரும்பி பார்க்கச் செய்தது.

கூடவே, “நம் இளவரசி.”, “மிகவும் அழகாக இருக்கிறாள்.”, “அதிசயமாக வெளியில் வந்திருக்கிறாள்.” என்று மாறி மாறி ஊர் மக்கள் கிசுகிசுத்துக் கொண்டனர். இரண்டாவது சக்கரத்தின் கடைநிலையில் இருந்த வன்னிக்கு அவர்கள் பேசுவது காதில் விழாமலில்லை.

இருந்தாலும் அதற்கு எந்தப் பதிலும் சொல்ல அவளுக்குத் தோன்றவில்லை. எள்ளுருண்டை வரிசையாக அடுக்கி வைத்திருந்த கடையின் எதிரில் நின்று அங்கு அமர்ந்திருந்த நடுத்தர வயது மனித யாளி பெண்ணை ஆர்வமாகப் பார்த்தாள்.

அவர் புதிதாக வறுத்த எள்ளில் வெல்லம்பாகுவை ஊற்றி உருண்டை உருண்டையாகப் பல ஒருபிடி எள்ளில் ஒரு உருண்டையென உருட்டிக்கொண்டிருந்தார். அடுத்த கடையில், தேங்குழல் எண்ணையில் பிழிந்து கொண்டிருந்தனர். அடுத்த கடையில் பல வித வடிவங்களில் முறுக்குகளை அடுக்கிக் கொண்டிருந்தனர்.

எல்லாவற்றையும் பார்த்து, “அதனை வாங்கு. அது வேண்டும். இது வேண்டும்.” என்று அவற்றை வாங்க அருகிலிருந்த சேவகர்களுக்கு ஒவ்வொன்றாக ஆணையிட்டுக் கொண்டு வந்தாள் வன்னி. எல்லாவற்றையும் பார்க்க அவளது கண்ணில் மகிழ்ச்சியினாளும் ஆச்சரித்தாலும் நட்சத்திரங்கள் பரவியது.

ஆனால் அவள் மகிழ்ச்சிக்கு தடைபோல அவ்வப்போது அவளிடம் பேச வருபவர்களைத் தடுக்கும் விதமாக அவளைச் சுற்றியிருந்த காவலர்கள் பேச, அவளுக்குக் கோபமாக வந்தது. அடிக்கடி தன் பெற்றோர்களுடன் வெளியில் சுற்றியிருந்த முகிலனுக்கு, ‘இதிலெல்லாம் என்ன அதிசயம் இருக்கு!’ என்றிருந்தது.

இருந்தும் அதுகுறித்து எதுவும் பேசாமல் அரசியும் அரசரும் திரும்பத் திரும்ப அதிகம் தேரியிலிருந்து வெளியில் இறங்க கூடாது என்ற அறிவுரை சொன்னது நினைவு வர, “வன்னி வாங்கிவிட்டால் வாங்க போகலாம்.” என்று அவ்வப்போது சொல்லிக்கொண்டிருந்தான்.

ஆனால் வன்னி யாருடைய பேச்சையும் கேட்பதாக இல்லை. துரு துருவென சுற்றியவளுக்கு அந்த காவலர்களும் இல்லாமல் சுற்றி பார்க்க வேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்டது. உடனே மனதில் ஒரு திட்டமிட்டவள் போல, முகிலனின் காதருகில் குனிந்து, “முகிலன், நான் சைகையிடும் போது, என்னுடன் ஓடி வா.” என்றாள்.

அவள் சொன்னதன் அர்த்தம் புரியாமல் வன்னி பார்த்து விழித்த முகிலன், ஒரு நாழிகையில் சிட்டென கூட்டத்தில் ஓடி மறைந்த வன்னியை பார்த்ததும்தான் அவள் சொன்னதன் அர்த்தம் புரிந்தது. வன்னி கண் இமைக்கும் நேரத்தில் காணமல் போக, காவலர்கள் பயந்து தேட ஆரம்பித்தனர்.

Author Note:

(1)Baby வன்னி