யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 45

930

அத்தியாயம் – 45

சத்திரத்தின் அறைக்கே வந்துவிட்டிருந்த காலை உணவின் நறுமணத்தில், கண்கள் கசக்கியப்படி எழுந்த பாவனா கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி நெட்டி முறித்தப்படி, “ஏய் குதிரைவால் அதற்குள் உணவு வந்துவிட்டதா?” என்றாள்.(1)

ஆனால் அவளுக்குப் பதில் சொல்லதான் அங்கு யாருமில்லை. எந்தப் பதிலும் வராததால் திரும்பி அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தவள் மேகன் அறையில் இல்லாததை பார்த்துத் திடுக்கிட்டாள். அவசரமாக அறையின் கதவைத் திறக்கச் சென்றாள்.

ஆனால் வெளியில் சென்று அவனைத் தேட அவளுள் தைரியம் எழவில்லை. ‘தெரியாத ஊரில் கையில் இந்த ஊர் பணமும் இல்லாமல், எங்குச் சென்று என்னவென்று கேட்டுத் தேடுவது. அந்தக் குதிரைவாலின் பெயர் மேகன், ஏதோ இதயன் என்ற குருவின் சீடன் என்பது தவிர வேறெதுவும் தெரியாதே.

அதனோடு மேகனைப் பற்றிக் கேட்கும்போது யாரேனும் என்னை நான் யாரென்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது. கூடவே அவந்தியின் இந்தக் கைக்காப்பு வேறு எதாவது ஆபத்தைத் தந்துவிட்டால் ?!’ என்று நினைத்தாள்.

“இந்த மேகன் எங்குச் சென்று தொலைந்தான்.” என்று முனுமுனுத்தவள் சில நொடிகள் செய்வதறியாது கோபமாக அறையின் கதவையே முறைத்தாள்.

பிறகு வேறு வழி இல்லாமல் காலை உணவை முடித்துக் கொண்டு மேகன் திரும்ப வருவான் என்று நம்பி அவன் வருவதற்காகக் காத்திருந்தாள். நண்பகல் முடிந்தும் அவன் வராமல் போக அவளுள் மெல்ல அச்சம் குடியேறியது.

பசியில் அவள் வயிறும் லேசாகக் கத்த ஆரம்பித்தது. வயிற்றை தடவியவள், ‘இந்த மேகன் எங்காவது போவதென்றால் கொஞ்சம் பணமாவது வைத்துவிட்டு போயிருக்கலாம். எனக்கு மிகவும் பசிக்கிறது. நான் என்ன செய்வேன்.’ என்று அறையின் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள்.

பின் பொறுமை இழந்த பாவனா, “திரும்பி வா. உனக்கு இருக்கிறது குதிரைவால். என்னுடையது விடவும் நீண்டு வளர்ந்திருக்கும் உன் குடுமியை பிடித்து ஒன்றையும் விடாமல் பிடுங்கி எரிந்துவிடுக்கிறேன்.’ என்று தன் கையைச் சூடு பரப்பத் தேய்தாள்.

அவள் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தில் எச்சரிக்கையுடன் அறைக்கதவை பார்த்தாள் பாவனா. நல்லவேளையாக வந்தது மேகன். அவனைப் பார்த்ததும் மனதிலிருந்த அச்சமும் பசியும் மறந்தவளாக மகிழ்வுடன் அவனை நோக்கி ஓடினாள்.

“ஏய் குதிரைவால். எங்குப் போன. நான் கொஞ்சம் பயந்துவிட்டேன் தெரியுமா?” என்று அவன் அருகில் சென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். அதற்குப் பதிலேதும் சொல்லாமல் புன்னகையுடன், அவன் கையிலிருந்த உணவு பொட்டலத்தை அவள் முன் விரித்தான்.

“முதலில் சாப்பிடு. பிறகு சொல்கிறேன் பவி.” என்றான்.

உணவைப் பார்த்ததும், பாவனா எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு ஒரு ஏப்பத்தையும் விட்டு வயிற்றை திருப்தியாகத் தடவினாள். பின், “குதிரைவால், இங்கேயே இவ்வளவு நேரம் ஆகிவிட்டதே. இன்றிரவுக்குள் நம் மகர அரசுக்குள் போய்விட முடியுமா?” என்று கேட்டாள்.

மேகன், “ம்ம்… போய்விடலாம்.” என்றவன் பவனாவின் முகத்தைப் பார்த்து, முகத்தில் ஒரு வித தயக்கமும் ஏதோ அச்சமும் பரவ அவள் கைப்பற்றி, “பவி, நேற்று நீ சொன்னதை யோசித்து பார்த்தேன்.

உனக்கு எதுவும் விபரீதமாக நிகழாது என்று நான் நினைத்தாலும், என்னால் எப்போதும் உன்னுடன் இருக்கவோ உனக்கு வேறு யாராளும் தீங்கு நிகழாது என்று உறுதி தரவோ முடியாது.” என்றான்.

இதனை ஏற்கனவே யூகித்திருந்த பாவனா முகம் சோர்ந்தாள். அவனது கையிலிருந்து தன் கையை விலக்கிக் கொண்டவள் தலை தாழ்த்தி, “ம்ம். புரிகிறது.” என்றாள். பின் முகம் உயர்த்தி மேகனின் முகத்தைப் பார்த்துக் குழந்தையின் கபடமற்ற புன்னகையை போலப் புன்னகைத்தாள்.

“எது நடந்தாலும், நீ என்ன செய்ய முடியும் மேகன். இதுதான் நடக்குமென்று இருந்தால் எதுவும் எதிர்கொள்ள நான் தயார். மிஞ்சி மிஞ்சிப் போனால் என்ன நிகழ்ந்துவிடும்? நான் செத்துவிட கூடும். இப்போது எனக்கு இருக்கும் மனநிலையில் எனக்கு எது நடந்தாலும் கவலையில்லை.” என்றாள்.

பாவனாவின் அந்தப் புன்னகையில் மேகனது இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. அதனைத் தொடர்ந்து அவள் செத்துவிட கூடுமென்றபோது அவனையும் அறியாமல் முகம் வெளுத்து, அவனுள் இனம் புரியாத குளிர் பரவியது.

“பவி…” என்று எதிரில் அமர்ந்திருந்த பாவனாவின் கன்னத்தில் தன் இடது கையை வைத்து அவள் விழிகளைப் பார்த்தான். அவனது விழிகள் அவளை இழந்துவிடுக் கூடுமென்ற நினைவில் வலியில் துடித்துடித்தது.

திடீரென்று தன் கன்னத்தை மேகன் இதமாகத் தொடக் கூடுமென்று நினைக்காத பாவனா அவனது தொடுகையில் திடுக்கிட்டாள். அதனோடு அவன் விழியில் தெரிந்த வலியின் காரணம் புரியாமலும், என்ன சொல்வதென்று தெரியாமலும் இமைக்க மறந்து அவனைப் பார்த்தாள்.

மிரண்ட மானைப் போன்ற அவளது பார்வையில், அவளைத் தன் மார்போடு அணைத்து கொண்ட மேகன், “உனக்கு எதுவும் ஆகாது பவி. அப்படியெல்லாம் சொல்லாதே.” என்றான்.

மேகனின் திடீரென்ற அணைப்பில் திகைத்த பாவனா, ஒரு நொடி சிலைப் போல அவன் கையணைப்பில் இருந்தாள். ஆனால் மேகனின் உடல் சூடு அவளுள்ளும் பரவ அசௌகரியமாக நெழிந்தாள்.

விரும்பியவனே என்ற போதும், மேகன் அவளை விரும்புவது போன்ற எந்த உணர்வும் அவனுள் இல்லையென்பதை இந்த இரு வாரத்தில் உணர்ந்திருந்த பாவனா அவன் அணைப்பை ஏற்க விரும்பவில்லை.

உடனே விடுவித்துவிடுவான் என்று எண்ணியிருந்த பாவனா வெகுநேரம் ஆகியும் அவளை விடாமல் அணைத்திருப்பதிலும், அவனது சூடான மூச்சு காற்று அவள் காதின் மீது விழுந்து அவளுள் இம்சிப்பதையும் உணர்ந்து,“ஏ…ஏய்…கு…குதிரைவால். எ…என்ன செய்கிறாய்.

என்னை விடு.” என்று கொஞ்சம் சக்திக்கொண்டு அவனது மார்பில் கை வைத்து அவனைத் தள்ள முயன்றாள். ஆனால் அவள் போராட போராட அவனது அணைப்பு இறுகியது. மேகனின் இந்த முரட்டுதனத்தை இதுவரை தெரிந்திராத பாவனாவினுள் ஏதோ அச்சம் பரவியது.

“மேகன். உங்க ஊரில் இப்படி ஆண் பெண் நண்பர்கள் தோழமையுடன் அணைத்துக் கொள்வது தவறள்ளாமல் இருக்கலாம். ஆனால் எங்க ஊரில், ஒருவரை ஒருவர் விரும்புபவர்களைத் தவிர வேறு யாரும் இப்படி இறுக்கமாக அணைப்பது தவறு.” என்று மீண்டும் அவனைத் தள்ளிவிட முயன்றாள்.

பாவனாவின் எதிர்ப்பைக் கொஞ்சமும் சட்டைச் செய்யாமல், “பவி. என்னை இப்படியே இருக்க கொஞ்சம் விடு. ஒருவரை ஒருவர் விரும்புபவர்கள்தான் இப்படி அணைத்திருப்பார்கள் என்றால், நான் உன்னை விரும்புகிறேன். நீ என்னை விரும்புவதும் எனக்குத் தெரியும். அதனால் இது தவறல்ல.” என்று கொஞ்சமும் தடுமாற்றம் இல்லாமல் சொன்னான்.

மேகன் இப்படி திடீரென்று தான் அவளை விரும்புவதாகச் சொல்லக் கூடுமென்று பாவனா துளியும் நினைக்கவில்லை. அவளின் இதயம் பல முறை துடித்து மீண்டது. ‘என்ன மேகன் என்னை விரும்புகிறானா?’ என்று நினைத்தவளுக்கு என்ன சொல்வதென்று புரியாமல்,“கு…குதிரைவால்?” என்று தற்போது நிகழ்வது கனவோ என்று அப்படியே நின்றாள்.

அவன் சொன்ன, ‘நான் உன்னை விரும்புகிறேன்.’ என்ற வார்த்தைகள் அவளது காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது. அவள் அப்படியே அதிர்ந்து நிற்கச் சில நிமிடங்களில் அவளை விடுவித்தான். அவளது அதிர்ந்த முகத்தைப் பார்த்த மேகன் உடனே புன்னகைத்து அவளது மூக்கை பிடித்து ஆட்டினான்.

பாவனா மூச்சு தடை படவும், நினைவுக்கு வந்தவள் உடனே முகம் சிவந்து தலைத் தாழ்த்தி முகத்தை வேறுபுரம் திருப்பி, “குதிரைவால். என்னை வி…விரும்புவதாக, சு….ம்மா விளையாடாதே.எ…எனக்கு உன்னை நன்றாகத் தெரியும்.” என்று திக்கி திணறிச் சொன்னாள்.

பாவனாவின் நாணத்தை பார்த்த மேகனுக்கு சிரிப்பே வந்தது. “பவி உனக்கு வெட்கம் கூட வருமா? எப்போதும் வாயடிக்கும் உனக்கு வெட்கம் வருமென்று நான் துளியும் நினைக்கவில்லை.” என்றான். அவள் இன்னும் முகம் சிவக்க நிற்பதை பார்த்து மேலும் சங்கடத்திற்கு உள்ளாக்காமல்,

பேச்சை மாற்ற எண்ணி அவளை அவன்புரம் திருப்பி, அவள் கையில் ஒரு நீல நிற கயிறை வைத்தான். அவள் நெற்றியில் கலைந்து அசைந்தாடிய முடியை ஒதுக்கி, “பவி. இதனை உன் இடையில் கட்டிக் கொள்.” என்றான்.

புரியாமல் நிமிர்ந்து மேகனை கேள்வியாகப் பார்த்தாள். பாவனாவிடம் தன் காதலை சொல்லிவிட்டதாலோ என்னமோ, மேகனுக்கு இரண்டு வாரமாக ஏதோ நெருடலாக அவனுள் இருந்த உணர்வு விலகியது போலப் பாவனாவின் ஒவ்வொரு அசைவையும் எந்தச் சங்கடமும் இல்லாமல் இரசிக்க ஆரம்பித்தான்.

படப்படத்து கேள்வியாக அவனைப் பார்த்த அவளது விழிகளைத் தன் இதழ் கொண்டு அணைக்கவேண்டுமென்ற உந்துதலை கட்டு படுத்திக் கொண்டு முகத்தை வேறுபுரம் திருப்பிக் கொண்டான்.

“பவி. நாம் மகர அரசுக்குச் சென்றபிறகு, என்னால் எப்போதும் உன்னோடு இருக்க முடியாது. இந்தக் கயிறு(2) மிகவும் சக்தி வாய்ந்த பாதுகாக்கும் சக்கரத்தை உன்னைச் சுற்றி ஏற்படுத்திக் காக்கும். ஆறு சக்கரம் சக்தி கொண்டவர்களால் கூட இதனை உடைக்க முடியாது.

உன்னைக் கொள்ளும் எண்ணமுடன் யாரும் உன்னை நெருங்கினால், இது உன்னை அவர்களிடமிருந்து காக்கும். அதனோடு இது ஒருமுறை இடமாற்றும் சக்கரத்தை உருவாக்கி 1000 காதத்தூரத்திற்கு உன்னை அழைத்துச் சென்றுவிடும்.

ஒரு துளி இரத்ததை இதன் மீது விட்டு இதனை உன்னுடையதாக்கிக் கொள். அதன் பிறகு நீ நினைக்கும் நேரத்தில் இது உன்னை ஒருமுறை இடமாற்றும். இது உன்னுடன் இருந்தால் எனக்கு நிம்மதியாக இருக்கும்.” என்றான்.

அவனது பதிலைக் கேட்ட பாவனா, “ஓ…” என்றுஅதிசயமாகக் கையில் நாடாவைப் போல இருந்த கயிறை பார்த்தாள். பின், “சரி…” என்று இரத்தம் எடுக்க அறையில் கத்தியிருக்கிறாதா? என்று திரும்பி இப்படியும் அப்படியுமாகப் பார்த்தாள்.

ஆனால் எதுவும் அகப்படாததால், தன் வலது கையில் ஆள்காட்டி விரலை வாயில் பற்களின் இடையில் வைத்துக் கடிக்க முயன்றாள். ஆனால் அப்படி வலியைப் பொறுத்துக் கொண்டு தன்னை தானே கடித்துக் கொள்வது அவ்வளவு எளிதாக இல்லை.

விரல் அவள் பற்களுக்கு இடையில் இருந்த போதும், அழுத்தக் கடிக்க பயந்து அவளது முகம் பல கோணல்களுக்கு மாறியது. அவளது செய்கைகளைச் சுவாரசியமாகப் பார்த்திருந்த மேகன் சிரித்து அவள் வாயிலிருந்து விரலை எடுத்தான்.

அவன் கைப்பற்றியதும் நிமிர்ந்து மேகனை பார்த்த பாவனா, அவனது புன்னகையில் சிறுப்பிள்ளை போன்ற தன்னுடைய செயலில் உடனே சங்கூச்சமுற்றாள். அதனைப் பொருட்படுத்தாமல் அவளது கையில் தன் ஆன்மீக ஆற்றலில் ஒரு ஊசியை உண்டாக்கி அவளது விரல் நுனியில் ஒரு துளையிட்டு ஒரு துளி இரத்தைத்தை அந்தக் கயிற்றின் மீது விட்டான் மேகன்.

அவள் இரத்தம் பட்டதும் அந்தக் கயிறுடனான அவள் தொடர்பை அவள் மனதில் உணர்ந்து அதிசயியைத்தாள். அதன் பிறகு அதனை இடையில் அணிய நினைத்ததுமே, அவளாகச் செய்யுமுன்னே அந்தக் கயிறு அழகாக அவளது இடையை சுற்றி ஒரு சாதாரண இடப்பணிப் போல மாறியது

அதனைப் பார்த்த பாவனா கிளுக்கி சிரித்தாள். “ஏய்… குதிரைவால். இதை வாங்கதான் காலையில் எங்கோ சென்று விட்டிருந்தாயா?” என்று அவளுள் தோன்றியதை கேட்டாள். அதற்கு ஆமாம் என்பது போலத் தலையசைத்து மீண்டும் பாவனாவின் மூக்கை பிடித்து ஆட்டினான்.

“ஸ்… ஆ.” என்று வலிக்குமுன்னே கத்திய பாவனா மேகனின் விருப்பம் தெரிந்த பின் மீண்டும் முன்பு போன துடுக்குதனம் மீண்டவளாக, “ஏய். குதிரைவால். என்ன நீ? என் மூக்கை பிடித்து ஆட்டிக் கொண்டே இருக்கிறாய்.” என்று அவனை நோக்கி மிரட்டும் தோணியில் தன் முகவாயை உயர்த்தி இடுப்பில் கையை வைத்துகேட்டாள்.

அவளது மலர்ந்த முகத்திலும், குழந்தை போன்ற பேச்சிலும், “ஹா…ஹா…ஹா…” என்று சிரித்து, “உன் மூக்கை மட்டுமல்ல, உன் காதையும் பிடித்து ஆட்டுவேன். பார்கிறாயா?” என்று அவளது காதுமடலை பிடித்துத் திருகினான்.

அவனது குறும்பு தனம் உணர்ந்த பாவனா, “உன்னை!!! “ என்று அவனது வயிற்றில் ஒரு குத்துவிட்டாள். மேகன் வலிக்கவில்லை என்ற போதும், உடனே வயிற்றை பிடித்துக் கொண்டு, “அய்யோ” என்றான்.

அவனது செயலில், தன் கையை உயர்த்தி, மேற்கையை காட்டி, “வலிக்கிறதுதானே. என் கையைப் பார்த்தாயில்லையா? தொடர்ந்து பயிற்சி செய்து குட்டிஎலி போலத் தசைக்கோலம் உருவாக்கி வைத்திருக்கிறேன். அடுத்தமுறை என் மூக்கை தொடுமுன் நினைவில் வைத்துக்கொள்.” என்றாள் சிரித்தவிதமாக.

மேகனின் முகம் இன்னும் புன்னகை பூசியது. “ஆமாம் ஆமாம். என் பவிதான் மிகவும் பலசாலி. நான் நினைவில் வைத்துக் கொள்கிறேன்.” என்று கட்டுபடுத்தி புன்னகைத்தான்.

“ம்ம்…” என்றவள் அவனை விடுத்து அவள் இடுப்பில் சுற்றிக் கொண்ட நீல நிற கயிறை தடவினாள். பின் முன்பு பசியில் தவித்தது நினைவுவர, “ஏய் குதிரைவால். என்னிடம் இந்த ஊர் காசு கொஞ்சம் கொடு. நீ மீண்டும் காணாமல் போய்விட்டால் எனக்குப் பசிக்கும்போது நான் என்ன செய்ய?” என்று கேட்டாள்.

அவளது கேள்வியில் அசடு வலிவது போலத் தன் தலையைத் தடவிய மேகன், “என்னிடம் இப்போது எந்தப் பணமும் இல்லை பவி. இருக்கும் எல்லாவற்றையும் செலவு செய்துதான் இந்தக் கயிற்றை ஏலத்தில் வாங்கி வந்தேன்.

சொல்லப் போனால் என்னிடம் இருந்த சில பொருட்களையும் விற்றுதான் அதனை வாங்கினேன். அதனால் என்னிடம் வேறெதுவும் விற்று பணம் பெற கூடப் பொருளில்லை. நாம் இரவுக்குள் மகர அரசுக்குப் போகவில்லையென்றால் அநேகமாக இரவில் ஆன்மீக ஆற்றலில்தான் பசியாற்றிக் கொள்ள நேரும்.” என்றான்.

அவனது பதிலில், “என்ன?” என்று ஆச்சரியமுற்றாள். பின், “அப்போது இன்னும் ஏன் நாம் காத்திருக்கிறோம். வாப்போகலாம். எதுவென்றாலும் பொறுத்துக் கொள்ளலாம். பசியை பொறுக்க முடியாது. உன் ஆன்மீக ஆற்றலை நீயே சாப்பிடு. எனக்குச் சாப்பாடுதான் வேண்டும்.” என்றாள்.

அதனைக் கேட்ட மேகனின் இதழ் விரிந்தது, “சரி போகலாம்.” என்றான். அதன் பிறகு அவர்கள் பயணம் துரிதப்பட்டது. மனதுள் மகிழ்விருந்ததாலோ என்னமோ பாவனா துள்ளி குதிக்கும் மானாக மேகனுக்கு முன்னாக ஓட்டமும் நடையுமாகச் சென்றாள்.

அதனால் இரவுக்குள்ளே அவர்கள் மகர அரசினை அடைந்தனர். முதன்மை அரண்மனைக்கு அருகில் இருந்த விருந்தினர் மாளிகைக்குப் பாவனாவை அழைத்துச் சென்று அவளுக்கு உணவு ஏற்பாடு செய்து ஓய்வெடுக்க சொல்லிவிட்டு மேகன் சென்றான்.

மேகன் போகும் முன் மந்திர பை ஒன்றை பாவனாவிடம் கொடுத்து, “இதில் 1000 வெள்ளி காசுகளும், 10 தங்க காசுகளும் இருக்கிறது. அதனோடு உனக்கு வேறேதுவும் வேண்டுமென்றால் இந்தப் பையில் வைத்துக் கொள்ளலாம்.

அதனோடு உன் அளவில் இரு ஆடைகளும் இதில் ஏற்கனவே வைத்திருக்கிறேன். இதனை எப்போதும் வைத்துக்கொள். நாளை நான் வந்து உன்னைப் பார்கிறேன். இப்போது நான் என் குருவைப் பார்க்க.

அதனால் உன்னுடன் இன்று இருக்க முடியாது. நீ சாப்பிட்டு ஓய்வெடு.” என்று பாவனாவின் விரலிலிருந்து ஒரு துளி இரத்ததை அந்த மந்திரபையில் விட்டு அவள் நினைவில் அது செயல் படும்விதமாக மாற்றித் தந்துவிட்டு சென்றான்.

இவ்வுலகம் வந்ததிலிருந்து மேகனுடனே இருந்த பாவனா, அவன் இல்லாமல் தனியே இருக்க கொஞ்சம் பயந்தாள். இருந்தபோதும், மேகனுக்கு வேறு வேலைகள் இருக்கும் என்று நினைத்து எதுவும் சொல்லாமல் பெருமூச்சுவிட்டு, “சரி.” என்று அந்த அறையிலிருந்த மெத்தையில் அமர்ந்தாள்.

அமர்ந்தவள் அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தாள். ‘ஒரு அறையே 400 சதுரடி அளவு பெரியதாக இருக்கிறது. இந்த மெத்தை நால்வர் என்றாலும் தாராளமாக உறங்கக் கூடுமென்ற அளவு பெரியதாக இருக்கிறது.’ என்று மெத்தையில் இங்கும் அங்குமாகப் புரண்டாள்.

பின் எழுந்து அருகில் இருந்த பெரிய மேஜையில் வைத்திருந்த உணவுத் தட்டை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தாள். அருகிலிருந்த பல பழங்கள் நிறைந்த தட்டையும்நீர் குடுவையையும் பார்த்து, “இதெல்லாம் உண்மை என்று இப்போதும் நம்ப முடியவில்லை.” என்று முனுமுனுத்தாள்.

சாப்பிட்ட பிறகு மேகன் தந்த மதிரப்பையை கையில் எடுத்தாள் பாவனா. “கையளவே இருக்கும் இந்தப் பையில் எவ்வளவு பொருள் அடங்கி விட்டது.” என்று அதிலிருந்து காசுகளை எடுத்துப் பார்த்தாள்.

பின் தன் இடையில் சொருகி வைத்திருந்த வன்னியின் கதை புத்தகத்தை எடுத்து அந்தப் பையில் போட்டாள். அவ்வளவு பெரிய புத்தகம் அந்தப் பையில் நுழைந்த போதும் அதன் வெளிப்புர தோற்றம் மாறவில்லை.

மீண்டும் உள் வைத்த புத்தகதை எடுத்து மெத்தை மீது வைத்தாள். தன் கையிலிருந்து கைக்காப்பை கழற்றி அந்தப் பையில் போட்டாள். ஏதோ புதுவித விளையாட்டுப் பொருள்குழந்தையில் கையில் கிட்டியது போல அந்தப் பையில் பொருட்களை உள்ளே வைத்தும் எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளையும் அறியாமல், பையில் மாயத்தில் சில முறை கிளுக்கி சிரித்தாள். பின் சின்ன சுருக்கு பைபோல இருந்த அந்தப் பையைத் தன் இடையில் ஏற்கனவே இருந்த நீல நிற நாடவில் கோர்த்து இடையோடு இணைத்துக் கொண்டு ஒருமுறை தட்டி பார்த்துக் கொண்டாள்.

பின் திரும்பி மெத்தையின் மீது முன்பு எடுத்து வைத்திருந்த வன்னியின் கதை புத்தகைத்தை, விரித்து, “அவந்தியின் அப்படி என்னதான் செய்தாள் என்று பார்ப்போம்.” என்று படிக்க ஆரம்பித்தாள்.

Author Note:

(1) யாரேனும் பாவனாவையும் மேகனையும் மறந்திருந்தால் அத்தியாய்ம் 24-ல் பார்க்கவும்

(2) மந்திரகயிறு