யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 44

776

அத்தியாயம் – 44

பரி அரசின் அரண்மனை அருகில் செல்லச் செல்ல அவந்திகா அவளையும் அறியாமல் லேசாகப் பதற்றமுற்றாள். இப்போது வேறு உருவில் இருந்தபோதும் தன்னை வன்னி என்று யாரும் இனம் கண்டுக் கொள்ள கூடுமோ என்ற தடுமாற்றம் அவளுள் இருந்தது.

இருந்தும் ஒரு பெருமூச்சுவிட்டு இயல்புக்கு வந்தாள். பறக்கும் சக்கரத்தில் ஒவ்வொரு வருடமும் தாமரை தீபவிழா நிகழும் ஆற்றைக் கடக்கும்போது அவளையும் அறியாமல் நந்தன் வரைந்த ஓவியம் நினைவுக்கு வந்தது.

‘நான் பதினான்கு வயதிருக்கும்போது அப்படி திருட்டு தனமாக எந்தச் சேவகர்களும் உடன் இல்லாமல் தனியாக இங்கே வந்ததை உடன் இருந்து பார்த்தது போல் எப்படி நந்தன் வரைந்தான்.?’ என்று அவளுள் கேள்விக் கேட்டு இதழ் விரித்தாள்.

உடனே முகம் சுருங்கி, ‘ஆனால் என்னுடன் நந்தன் வரைந்த அந்தப் பத்து வயது சிறுவன் யார்? நந்தன் என்னைவிடச் சிறியவன் என்றால் அது நந்தன்தான் என்று நினைக்கலாம். ஆனால் நந்தனின் எலும்பு வயது நான் உயிருடன் இருந்தால் என்னைவிடவும் 4 வருடமாவது பெரியது.

அவன் எப்படி என்னைவிட குள்ளமாக இருக்க முடியும். அதனோடு அந்த ஓவித்தில் வரையப்பட்ட சிறுவனை நான் பார்த்ததாக நினைவில்லையே. ஒருவேளை நந்தன் எதர்ச்சையாக மற்றவர்களோடு ஒருவனாக அந்தச் சிறுவனைச் சேர்த்திருப்பாரோ.’ என்று யோசித்தவள், ‘அப்படிதான் இருக்க வேண்டும்.’ என்று ஒருமனதாக முடிவெடுத்தாள்.

இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவர்கள் பரியரசின் தலைநகர நுழைவாயிலுக்கு வந்து சேர்ந்திருந்தனர். முகிலன் பறக்கும் சக்கரத்தில் இறங்கினான். அவந்திகாவும் அவனுடன் சேர்ந்து தரையை அடைந்தாள்.

எதிரில் ஓங்கி உயர்ந்திருந்த தலை நகர மதில் சுவர் கோட்டையை நிமிர்ந்து பார்த்தாள். 400 வருடங்களுக்குப் பிறகு பார்த்த கோட்டைச் சுவர், அவளுள் மறந்துவிட்டேன் என்று எண்ணியிருந்த வலியை நினைவூட்டியது.

அவளையும் அறியாமல் விந்தியாவை பற்றியிருந்த கைப்பிடி லேசாக இறுக்கியது. திடீரென்ற கையில் ஏற்பட்ட அழுத்ததின் காரணம் புரியாமல் விந்தியா, “அவந்திகா?” என்று கேள்வியாகக் கேட்டுப் பார்த்தாள்.

அப்போதுதான் அவந்திகா அவள் செயல் உணர்ந்து தொண்டையை செறுமி, “ஒன்றுமில்லை.” என்று அவள் கையை அவளிலிருந்து விடுவித்தாள். அவளது இந்தச் செயல் உவாவின் கண்ணிலிருந்து விலகவில்லை.

முகிலன், கையில் அரச முத்திரையை நுழைவாயிலிருந்த காவலாளியிடம் காண்பித்து ஓரிரு வார்த்தைகள் அவனிடம் பேசிவிட்டு திரும்பிச் சற்று தள்ளி நின்றிருந்த உவா, விந்தியா அவந்திகாவை நோக்கித் திரும்பி வரும்படி சைகை செய்தான்.

அவர்கள் அருகில் வந்ததும் அவர்களுடன் பரியரசின் கோட்டைக்குள் நடந்த முகிலன், “அவந்தி தலைநகருக்குள் அவசரகாலம் அல்லாமல் பறக்கும் சக்கரம் பயன்படுத்தக் கூடாது என்று முன்னூறு வருடத்திற்கு முன்பு நம் அரசர் சட்டம் ஏற்படுத்தியிருக்கிறார்.

அதனால் ஒன்று நாம் நடந்துச் செல்ல வேண்டும். அல்லது ஆன்மீக ஆற்றல் கொண்டு தரையில் இயங்கும் வண்டியை வாடகை பேசி அதில் செல்லலாம். “ என்றான்.

அதனைக் கேட்ட அவந்திகா, “ஓ…” என்று திரும்பிச் சோர்ந்திருந்த உவாவையும், விந்தியாவையும் ஒருமுறை பார்த்தாள். பின் முகிலனிடம் திரும்பி, “முகிலன். நண்பகல் ஆகிவிட்டது. உணவுண்டப்பின் வண்டி வாடகை பேசிக் கொண்டு கிளம்பலாம்.” என்றாள்.

முகிலனும் வண்டி பேசுவதே மேல் என்று நினைத்திருந்தான். அதனால், “ம்ம். ஒரு 500 மீற்றர் தூரத்தில் ஒரு சத்திரம் இருக்கிறது. நீ சொல்வது போல் செய்யலாம். நீங்க முன் செல்லுங்க, நான் வண்டி பேசிவிட்டு வருகிறேன்.” என்று சாலையோரத்தில் இருந்த வண்டிகள் வடகை பலகையிருந்த கடை நோக்கிச் சென்றான்.

முகிலன் சென்றதும், அவந்திகா பழகிய வீதி என்பதால் எங்குச் சத்திரம் இருக்கிறது என்று நேரடையாக உவாவையும் விந்தியாவையும் அழைத்துச் சென்று சத்திரத்தில் மூவருமாக உணவுண்ண ஆரம்பித்தனர். முகிலனும் விரைவில் வந்து அவர்களுடன் கலந்துக் கொண்டான்.

பின் நால்வருமாகத் தேர் போல இருந்த வண்டியில் ஏறினர். பல்லாக்கு போல் திரைசீலையுடன் இருந்த அந்தத் தேரின் உள்ளே இருவர் இருவர் என்று நால்வர் அமரும் விதமாக எதிர் எதிரில் நான்கு இருக்கையும் நடுவில் சிறு தீபாயும் இருந்தது.

தீபாய் மீது நீர் குடுவையும் பழரச குடுவையும் சில மண் கிண்ணங்களும் இருந்தது. வண்டியில் ஏறியதும் விந்தியா லேசாகக் கண்ணயர்ந்தாள். உவா பத்மாசன நிலையில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தாள்.

தேரோட்டி இருசக்கர சக்திக் கொண்ட ஆண் பரியாளி வகையாளன். தேரின் முன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துக் கொண்டு தன் கையிலிருந்து வெள்ளை நிற நூல் போன்ற ஆன்மீக ஆற்றலைத் தேரின் சக்கரங்களுடன் இணைத்து அதனை இயக்கிக்கொண்டிருந்தான்.

இரு பெண் மனிதயாளிகள் தேரில் இருப்பது உணர்ந்து, பள்ளம் மேடு நிறைந்த வீதியில் வேகமாகவும் செல்லாமல், மெதுவாகவும் செல்லாமல் மிதமான வேகத்தில் தேரை செலுத்தினான. அமைதியாக அவர்களின் பயணம் இரு நாழிகை தொடர்ந்தது.

தேரின் திரைசீலையை லேசாக விலக்கி அவந்திகா வெளியில் வேடிக்கை பார்த்தவிதமாக வந்தாள். சில சில மாற்றங்கள் இருந்தப் போதும் பரியரசு இன்னமும் தன் தாயும் தந்தையும் ஆட்சி செய்தபோது இருந்தது போலவே இருந்தது.

ஒரு பெருமூச்சுவிட்டு, “முகிலன் பரியரசில் பெரிதாக மாற்றமில்லை போல.” என்றாள் அவந்திகா.

தேரில் ஏறியதிலிருந்து அவளையே பார்த்திருந்த முகிலன், “ம்ம்… நம் அரசர் முன் இருந்த அரசியான அவர் தங்கையின் வேண்டுகோலுக்கு இணங்க அரியணை ஏறியவர். அப்படி இருக்க அவர் தங்கை அமைத்த பரியரசின் தலைநகரை அவர் எளிதில் மாற்ற விரும்பவில்லை.” என்றான்.

அவந்திகா முகிலன் சொன்னதன் உள் பொருள் உணர்ந்து ஒரு நொடி திகைத்தாள். ‘என் மாமா குமணன் தான் இப்போதைய அரசரா?! அவரை நான் பிறந்ததிலிருந்து பார்த்ததில்லையே. என் பெற்றோற்கள் இறந்த பிறகு தற்காலிகமாகப் பிரதம மந்திரியும், இராஜகுருவும், படைதளபதியும் பரியரசை நிர்வகிப்பதாக நான் இறக்கும் முன் அறிந்தேன்.

இவர்களுள் யாரவது ஒருவர் அரியணை ஏறியிருக்க கூடுமென்று நினைத்திருந்தேன். ஆனால் என் மாமா எப்படி!?’ என்று யோசித்தவள், பின், ‘அவர் பார்க்க எப்படி இருப்பார்? அரியணை ஏற விருப்பமில்லையென்று என் தாயிடம் பரியரசை ஒப்படைத்துவிட்டு பயற்சிக்காக யாளி உலகம் முழுதும் சுற்றி திறிந்தார் என்று கேள்வி.

கடைசியாக யாரும் தொடர்புக் கொள்ள முடியாதபடி ஏதோ ஒரு காட்டில் தவம் புரிய சென்றுவிட்டார். என்று என் தாய் சொல்லக் கேட்டது எனக்கு நினைவிலிருக்கிறது. எப்படி அவருக்குத் தகவல் தெரிந்து எப்போது அரியணை ஏறினார்.’ என்று அவந்திகாவுள் கேள்வியோடியது.

அவள் முகம் பார்த்திருந்த முகிலன் அவள் கேள்வி உணர்ந்து ஆன்ம இணைப்பில், “வன்னி, உன் பெற்றோர் இறக்குமுன், அப்போது உன் தாயின் மெய்காப்பாளனாக இருந்த ஞிமிலியை அனுப்பி உங்க மாமாவைத் தேடி அழைத்து வரும்படி ஏற்பாடு செய்திருந்தார்.

உன் பெற்றோர்கள் ஆபத்தில் இருப்பது அறியாமல் உன் தாயின் கட்டளையை ஏற்று ஞிமிலி அவர்களை விட்டுவிட்டு உன் மாமாவைத் தேடி கிளம்பிவிட்டார். அவர் உன் மாமாவைத் தேடி கண்டுபிடித்து அவரை அழைத்து வருவதற்குள் நேரம் மிகவும் கடந்துவிட்டிருந்தது.

பல இடையூறுகளுக்குப் பிறகு இங்கு வந்தவர்களுக்குத் தெரிந்தது உன் இறப்பும், உன் பெற்றோர்கள் இறந்தச் செய்தியும், உன் தாய் எழுதிய அடுத்த அரியணை பிரகடனம் குறித்த அரச முத்திரையும்தான்.

அந்த அரியணை குறிப்பில் அவர்களுக்குப் பின் உன் மாமாவைப் பிரகடனம் செய்ய வேண்டும் என்றிருந்தது. திருமணமல்லாமல் அரியணை ஏறக் கூடாது என்பதாலும், ஏற்கனவே சில வாரங்கள் அரசர் அல்லாமல் பரியரசு இருப்பதாலும் உன் மாமா முதலில் தயங்கினார்.

ஆனால் அப்போது பேரரசரிடமிருந்து(1) திகிலான தூது வந்து சேர்ந்தது. அதில், ‘இன்னும் ஒரு வாரத்தில் பரியரச பரம்பரையின் இரத்ததில் அரசர் அரியனையில் யாரும் அமரவில்லையென்றால் பரியரசவை கலைக்கபடும். யாளி உலகின் மற்ற மூன்று அரசும் பரியரசை பகிர்ந்து தரப்படும்.’ என்று இருந்தது.

அதனால் பரியரசை காப்பதற்காக வேறுவழி இல்லாமல், அவசர அவசரமாக உன் மாமா குமணன், மெய்காப்பாளியாக அவரைத் தேடி அழைத்து வந்த ஞிமிலியுடன் ஆன்ம பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு அரியணை ஏறிவிட்டார்.

இல்லையென்றால் இன்று பரியரசு இருந்திருக்குமா என்பதே சந்தேகம்தான்.” என்று அவள் சந்தேகத்திற்கு விளக்கம் தந்தான்.

அதனைக் கேட்ட அவந்திகாவிற்கு முகமெல்லாம் வியர்த்துவிட்டது. ‘இது போலதான் நந்தன் உடலில் இருக்கும் தீப்பறவை (phoenix) யாளி வகையின் அரசும் அழிந்து போயிருக்குமோ?!’ என்று நினைத்தாள்.

இருந்தும் எதுவும் வெளிப்படுத்தாமல், “ஓ…புரிகிறது.” என்று மட்டும் முகிலனிடம் சொன்னாள். பின் திரும்பிச் சாளரம் வழியே வெளியில் பார்த்த அவந்திகாவின் முகம் திடீரென்று வெளுத்தது.

அவளது அரண்மனை இருந்த இடத்தில் புதர்களாக இருந்தது. பல கட்டிடங்கள் அருகில் இருந்த போதும், அவள் அரண்மனையிருந்த இடம்மட்டும் பராமரிக்கப் படாமல் புற்களும் கற்களும் சில செடிகளும் இருந்தது.

அவந்திகா எதுவும் கேட்காமலே முகிலன், “இன்னும் பரியரசில் இளவரசியோ அல்லது இளவரசனோ பிறக்கவில்லை. அதனால் இப்போது அரண்மணை கட்ட வேண்டிய அவசியமில்லை என்று அரசர் சொல்லிவிட்டார். அதுதான் இந்த இடம் இப்படியே இருக்கிறது.” என்றான் எதையோ மறைப்பவன் போல.

அவந்திகா முகிலனின் பதிலில் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அந்தப் பார்வையில் வார்த்தைகள் வராமலே, ‘உண்மையாகவா?’ என்ற கேள்வி இருந்தது. அவள் பார்வையை நேரடையாகப் பார்க்க முடியாமல் முகிலன் முகம் திரும்பினான்.

அந்த முள்புதரை பார்த்த அவந்திகா பார்த்தவுடனே ஏன் அரசர் இதனைப் பராமரிக்க அனுமதிக்கவில்லையென்று சொல்லாமலே உணர்ந்தாள்.

‘இளவரசர் இல்லை என்றாலும், குறைந்தது ஊரின் நடுவில் இருக்கும் இந்த இடத்தைச் சாதாரண விளையாட்டு திடல் போலாவது பரமாறித்திருக்கலாம். ஆனால் இப்படி இந்த இடம் இருப்பதை பார்க்கும்போது அநேகமாக என் மாமாவும் என்னை வெறுத்திருக்க வேண்டும்.’ என்று அதனை நினைத்தவுடனே விரக்தியாக அவள் இதழ் விரிந்தது.

இருந்தும் பெரிதாக எதுவும் எண்ணாமல் பெருமூச்சுவிட்டு, ‘நான் இங்கேயே இருக்க வரவில்லை. கார்திக் பாவனாவை அழைத்துக் கொண்டு கூடிய விரைவில் இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும். அவசியம் இல்லாமல் எதிலும் மனம் சஞ்சலபடுவதில் அவசியமில்லை.

இந்த மனித உடல் உண்மையிலே சின்ன சின்னத் தகவல் பேதமாக அறிந்தாலும் அவசியம் இல்லாமல் திடுக்கிடுகிறது, படப்படக்கிறது. 1000 வருட எலும்பு வயதுக் கொண்ட என் மாமாவை நான் பார்த்தது கூட இல்லை. அவர் என்னை வெறுத்தால் என்ன? அல்லது தீங்கிழைத்தவள் என்று நினைத்தால் என்ன?’ என்று அவளுள் நினைத்தாள்.

விரைவிலே முதன்மை அரண்மனையை அவர்கள் அடைந்தனர். அரண்மனை அடைந்ததும் முகிலன் உவாவையும் அவந்திகாவையும் காத்திருப்பவர்களுக்கான அறையில் இருக்க வைத்துவிட்டு, விந்தியாவை சிறைக்கு அழைத்துச் சென்றான்.

சில நிமிடங்களிலே மீண்டும் வந்த முகிலன், “அவந்தி நாம் அரசரைச் சந்தித்து தாமரைகுளக் கிராமத்தில் நிகழ்ந்த நிகழ்வின் அறிக்கையைச் சுருக்கமாகத் தந்துவிட்டு பிறகு மகர அரசுக்குப் போகலாம்.” என்றான்.

அவந்திகா, “ம்ம்…” என்று தலையசைத்தவள் சற்று நிறுத்தி உவாவை திரும்பிப் பார்த்து, “முகிலன் நான் முதலில் மாதங்க அரசுக்குப் போகலாமென்று இருக்கிறேன். பவளன் என் மற்றொரு தோழர் மாதங்க அரசில் இருப்பதாகச் சொன்னார்.

அதனால் நானும் ரிஷிமுனி உவாவுடன் மாதங்க அரசுக்குப் போய் என் தோழரை அழைத்துக் கொண்டு பின் மகர அரசுக்கு என் தோழருடன் போகலாமென்று நினைக்கிறேன். நீ இங்கு அந்தக் கிராம பிரச்சனைகுறித்து எல்லாம் முடித்தப்பின் வந்தால் போதும்.” என்றாள்.

முகிலன் அதனைக் கேட்டு, “ஓ… சரிதான். அப்போது நீ பரிஅரசரை பார்க்க என்னுடன் வரவில்லையா?” என்று கேள்வியும் ஆவலுமாகக் கேட்டான். புன்னகைத்த அவந்திகா இல்லை என்பது போல் தலையசைத்தாள்.

“ஏற்கனவே நான் இங்கு வந்து இருவாரம் ஆகிவிட்டது. என் தோழர்கள் நலமுடன் இருப்பதை பவளன் அவ்வப்போது சொன்ன போதும், என்னால் இதற்கு மேலும் தாமதிக்க முடியாது. புரிந்துகொள்வாய் என்று நினைக்கிறேன்.” என்று அவன் விழி பார்த்து மறு செய்தியும் தெரியும்படி சொன்னாள்.

முகிலன் அவள் விழி பார்த்ததும் அவள் தயக்கம் உணர்ந்து, “சரி…அப்போது வாங்க. இடமாற்றும் சக்கரம் இருக்கும் இடம் செல்வோம். அவந்தி, நான் உனக்கு இடமாற்றும் சக்கரத்தில் அனுமதி சீட்டு வாங்கி தந்துவிட்டு பிறகு செல்கிறேன். உவாவிற்கு ஏற்கனவே மாதங்க அரசுக்குத் திரும்பச் செல்லச் சீட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். சரிதானே உவா?” என்றான்.

உவா களைப்பாலோ என்னமோ தாமரை குளக்கிராமத்திலிருந்து கிளம்பியதிலிருந்து இப்போது வரை அவள் எதுவும் பேசவில்லை. இப்போதும் ஆமாம் என்று தலையசைத்தாலே தவிர எதுவும் பேசவில்லை.

முதலில் பார்த்தபோது கலகலவென்று பேசிய உவா இப்படி சோர்ந்து இருப்பதை பார்த்து முகிலனுக்கு என்னமோ போல இருந்தது. அவளைத் தனியே அனுப்ப வேண்டுமே என்று யோசித்திருந்தபோது, அவந்தியும் உவாவுடன் செல்கிறேன் என்றது அவனுக்கு நிம்மதியாகி போனது. முகிலன் ஒரு மூச்சுவிட்டு முன்னோக்கி நடந்தான்.

அவந்திகா உவாவிடம் திரும்பி, “ரிஷிமுனி உவா, உங்களை நான் தொந்தரவு செய்வதற்கு என்னை மன்னித்துவிடுங்க. என் தோழரைக் கண்டுபிடிக்க உங்க உதவி வேண்டும். என் நன்றிகள்.” என்று கரம்குவித்து சொன்னாள்.

உவா சக்தியற்றவள் போல, “பரவாயில்லை அவந்திகா. என்னால் முடியும் எல்லைவரை நான் உனக்கு உதவ தயார்.” என்று சோர்ந்த முகத்துடன் புன்னகைத்தாள்.

பின் அதிக நேரம் பேசிக் கொண்டிருக்காமல் உவாவையும் அவந்திகாவையும் இடமாற்றும் சக்கரத்தில் நுழையச் செய்துவிட்டு முகிலன் அரசரையும் அரசியையும் காண பரிஅரசவைக்குச் சென்றான்.

இடமாற்றும் சக்கரம் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் 5 நாழிகைக்குள்ளே அவர்களை மாதங்க அரசுக்குக் கொணர்ந்து சேர்த்துவிட்டது. பின் உவாவிற்காகவே காத்திருந்தது போல் அங்கு நின்றிருந்த சில மனித யாளி சேவகர்கள் அவளை நோக்கி வந்தனர்.

அவர்களிடம் விருந்தினர் அறையை ஏற்பாடு செய்யச் சொல்லிய உவா அவந்திகாவிடம் திரும்பி, “அவந்திகா நீ அவர்களுடன் சென்று ஓய்வெடு. நாளைக் காலை நான் உன் அறைக்கு வருகிறேன்.” என்றாள்.

அவந்திகா, “ம்ம்…நன்றி ரிஷிமுனி உவா.” என்றாள் சிரம் தாழ்த்தி பணிவுடன்.

அவந்திகாவின் பணிவை பார்த்த உவா அவள் காதருகில் குனிந்து, “பரியரசின் இளவரசி வன்னி, என்னிடம் இப்படி பணிவாக உதவி கேட்பதை பார்க்க உண்மையிலே வேடிக்கையாக இருக்கிறது.” என்று கிசுகிசுத்து இகழ்வாகப் புன்னகைத்தாள்.

உவா அவந்திகாவை வன்னி என்று இனம் கண்டுக் கொண்டதில் ஒரு நொடி அதிர்ந்து திகைப்புற்று விழித்த அவந்திகா ஒரு நொடி நிமிர்ந்து உவாவை பார்த்தாள். பின் இதழ் விரித்து, “மாதங்க அரசின் இளவரசிக்கு என் உண்மை நிலை தெரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.” என்றாள்.

இப்போது திகைப்புறுவது உவாவின் முறையானது. உடனே எதுவும் பேசாமல் உவா திரும்பி நடக்க ஆரம்பித்தாள். சில அடி நடந்த பிறகு திரும்பிப் பார்க்காமல், “நாளைப் பார்க்கலாம். உங்களிடம் நிறைய பேச வேண்டும் அவந்திகா.” என்று கை அசைத்தவிதமாக அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

Author Note:

(1) பேரரசர் – Emperor- பல அரசர்கள் இவருக்குக் கீழே இருப்பாங்க. நம்ம கதைல, பரி, மாதங்கம், சிம்மம், மகரம்னு 4 kings owned by 1 Emperor. இன்னும் நான் Emperor பத்தி எதுவும் சொல்லல. ஆனால் அவரும் நம்ம hero sir அளவு powerfulனு ஒரு இடத்துல நான் சொன்னது நினைவிருக்கு.