யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 43

776

அத்தியாயம் – 43

அவந்திகா கண்கள் மூடியதும், அங்குக் கருநிற முக்காடு உருவம் அவள் எதிரே உருவானது.

அவந்திகாவின் களைத்து உறங்கிக் கொண்டிருந்த முகத்தைப் பார்த்து அந்தக் கருநிற உருவம், “மாறுவதாக இல்லை. மீண்டும் இறப்பதுதான் உன் விருப்பமென்றால், அதனை நிறைவேற்ற நான் தயார்.” என்றவன், சிவப்பு நிற பழத்தைக் கையில் கோலி உருண்டையை உருட்டுவது போலச் சில முறை உருட்டிப் புன்னகைத்தான்.

அதே நேரத்தில் உவா மதியிடம், “மதி உங்க சிநேகிதி அவந்திகா, சின்ன சின்ன நுணுக்கங்களையும் வெகுநேர்த்தியாகக் கவனித்து விந்தியாவின் செயல் காரணம்குறித்து எளிதில் கண்டுபிடித்துவிட்டாங்க. அவந்திகா இப்படி விளக்கம் தரவில்லையென்றால், நாம் விந்தியாவும் இன்பன், அதித்ரீயை போலச் சம அளவு குற்றாவாளியென்றே நினைத்திருப்போம்.

இப்போது விந்தியாவை இன்பன் அதித்ரீ பயன்படுத்திக் கொண்டது உறுத்திப்பட்டால், விந்தியாவின் சிறைகாலம் குறைவதோடல்லாமல் இல்லாமலே கூடப் போகலாம். உங்க சிநேகிதி, அசாதாரணமாகச் சிந்திக்கும் புத்திசாலி.” என்று புகழ்ந்து கிளுக்கிச் சிரித்தாள்.

அதற்கு மதி எதுவும் சொல்லாமல் தலையசைத்து, தன் சிநேகிதி வன்னியை நினைத்துப் பெருமையாக உணர்ந்து லேசாகப் புன்னகைத்தாள்.

உவா மதியின் விழிப்பார்த்து குரல் மாறி, “ஆனால் ஏன் நீங்க அவந்திகாவை வன்னி எங்கிறீர்கள். முகிலன் அவளை அவந்தி என்றும் மாதங்க யாளியாக இருந்த போதும், நான் இதுவரை பார்த்திராத அந்தப் பவளன் ஏன் அவந்திகாவை இளவரசி என்று மூவேறு விதமாக அழைக்றீங்க.” என்று புன்னகை மாறாமல் கேட்டாள்.

வன்னி என்று உவா சொன்னதுமே அவள் முகத்தை ஊடுருவும் பார்வை பார்க்க ஆரம்பித்திருந்த மதி, ‘சிறுப்பிள்ளை போல எதிலும் அக்கறையற்று இருப்பது போல் இருந்த உவா எல்லாவற்றையும் தீவிரமாகக் கவனித்ததோடு மட்டுமல்லாமல், பொறுத்திருந்து கேள்வியும் கேட்கிறாள்.’ என்று எச்சரிக்கை உணர்வுடன் பார்த்தாள்.

மதி தன்னை ஆராயும் பார்வை பார்ப்பது தெரிந்த போதும், அவளுக்குச் சலிப்பு இல்லாமல் உவாவும் அவள் பதில் சொல்வதற்காக அவளைப் பார்த்தாள். இன்னமும் உவாவின் இதழ் விரிந்திருந்த போதும், அதில் விளையாட்டுதனமில்லை. விஷமமான புன்னகை இருந்தது.

இப்படி மதியும், உவாவும் ஒருவரை ஒருவர் பார்த்திருந்த போதே, அவள் கழுத்திலிருந்த கழுத்தணியுடன் இணைந்த பளிங்கு போன்ற வட்ட வடிவ பதக்கம்(Pendant)(1) அதிர ஆரம்பித்தது. உடனே உவாவின் முகம்மாறியது.

அந்தப் பதக்கத்தைக் கையில் எடுத்துப் பார்த்த உவா எதிரிலிருந்த மதியை மறந்து தாவிக் குதித்து அந்த அறையையிலிருந்து அவந்திகா இருந்த அறை நோக்கி ஓடினாள்.

என்ன நிகழ்ந்தது என்று மதி உணர்ந்து உவாவை பின் தொடர்ந்துச் செல்வதற்குள் உவா அவந்திகா இருந்த அறையின் கதவை ஒரு உதையிலே உடைத்து அறையினுள் வேகமாக நுழைந்தாள். மதி உவாவின் செயலில் திகைத்து ஒரு நொடி அப்படியே நின்றாள்.

உவா அந்த அறையினுள் நுழைவதற்கும் அந்தக் கருநிற உருவம் அவந்திகாவின் அருகில் சென்று அவள் கழுத்து வளைவில் தன் இடது கைக்கொண்டு அவளைத் தூக்கி அவள் உதட்டருகில் சிவப்பு நிற பழத்தைக் கொண்டுச் செல்வதற்கும் சரியாக இருந்தது.

உவா அவள் அறையிலிருந்து ஓடி வருவதை முன்பே அறிந்துவிட்டிருந்த கருநிற உருவம் உவாவை திரும்பிப் பார்த்து, “ஹா…ஹா…ஹா… அல்லியின் மகளை இங்குக் காணக் கூடுமென்று நான் நினைக்கவில்லை.” என்றான்.

தன் அன்னையின் பெயரைச் சொன்னதும் பற்களை நரநரவென்று கடித்த உவாவின் விழிகள் சிவந்தது. கோபத்தில் அவள் கன்னங்களும் சிவந்து, எதிரில் இருப்பவனை வெல்ல முடியாது என்று தெரிந்த போதும் கையில் கதாயுதத்தை எடுத்து, “என் அன்னையின் பெயர் சொல்ல உனக்குத் தகிதியில்லை.” என்று அவனை நோக்கிச் சண்டையிட சென்றாள்.

ஆனால் வந்திருந்தவனுக்கு அவளுடன் சண்டையிட விருப்பமில்லையோ என்னமோ, உவாவிற்கு பதிலேதும் சொல்லாமல், “ஹா…ஹா…ஹா…” என்று மீண்டும் சிரித்து அவனையும் அவந்திகாவையும் சுற்றி பாதுகாக்கும் சக்கரம்(2) போட்டான்.

அதிக சக்தி வாய்ந்த பாதுகாக்கும் சக்கரத்தை நெருங்கிய உவா அதனை நெருங்கியவுடனே அவள் தூக்கி வீசப்பட்டு அந்த அறையின் சுவரில் இடித்துக் கீழே விழுந்தாள்.

உவாவின் முதுகில் அடிப்பட்டு உடனே அடிவயிற்றிலிருந்து தொண்டை நோக்கி அவளுள் இரத்தம் வர ஆர்மபித்தது. லேசாக இரும்பி அந்த இரத்ததை துப்பினாள். பின் தன் காதாயுதத்தை தரையில் முட்டுக் கொடுத்து எழுந்து அந்தக் கருநிற உருவத்தை வெறிப்பிடித்தவள் போல முறைத்தாள்.

அந்த முக்காடு மனிதன் கொன்று விழுங்கிவிடுபவள் போலப் பார்த்திருந்த உவாவை பொருட்படுத்தாமல் அவந்திகாவின் இதழின் அருகில் அந்தப் பழத்தைக் கொண்டுச் சென்றான். அந்த நேரம் பல வெந்நிற பட்டாம்பூச்சிகள் அவன் தொட முடியாதபடி அவந்திகாவின் உடல் முழுதும் மூடியது.

இதனை எதிர் பாராத முக்காடு மனிதன் ஒரு நொடி திகைத்தான். பின் உடனே, “ஹா…ஹா…ஹா…இரட்ஷன்… ஓ…இராட்ஷன்… ஹா…ஹா…ஹா…இந்தப் பட்டாம்பூச்சி என்னைத் தடுக்குமென்று நினைக்கிறாயா?!” என்று கலகலவெனச் சிரிக்க ஆரம்பித்தான்.

அவனது கேலியை உணர்ந்தோ என்னமோ, அந்தப் பட்டாம்பூச்சி அவந்திகாவின் கழுத்தை பற்றியிருந்த முக்காடு மனிதனின் கை விரல்களைப் பல சிறிய கத்திகளாக மாறிக் கிழிக்க ஆரம்பித்தது. அவந்திகாவும் லேசாக நினைவுக்கு வந்தாள்.

கண்களை லேசாக விழித்தவள், எதிரில் தெரிந்த முக்காடு மனிதனையும் அவனது கையில் தெரிந்த சிவப்பு நிற பழத்தையும் பார்த்து முகம் வெளுத்தாள். சட்டெனத் தன் கொடியை விரட்டி அவன் கையிலிருந்த பழத்தைத் தட்டிவிட்டாள். அது அவன் கைலிருந்து நழுவி தரையில் விழுந்தது.

அதற்குள் அந்த அறை நோக்கி வந்துவிட்டிருந்த மதி, “யார் நீ?” என்று கேட்டுக் கையில் வாளை எடுத்துச் சென்று எச்சரிக்கையுடன் முக்காடு மனிதனை பார்த்தாள். உவா கதவை உடைத்தபோது கேட்ட சத்ததில் முகிலனும், வீட்டிலிருந்த மற்றவர்களும் அந்த அறை நோக்கி வர ஆரம்பித்திருந்தனர்.

பலருக்கு தன்னை காண்பித்துக் கொள்ள விரும்பாத முக்காடு மனிதன் அவந்திகாவை பார்த்து, “ஹா…ஹா…ஹா… வன்னி என் பிடியிலிருந்து நீ தப்ப முடியாது. ஹா…ஹா…ஹா… இப்போது நான் வருகிறேன்.” என்று கருநிற புகையாக மாறி அந்த அறையிலிருந்து மறைந்தான்.அவனோடு சேர்ந்து தரையில் விழுந்த அந்தச் சிவப்பு நிற பழமும் மறைந்தது.

மதி அவன் சொன்னதை கேட்டுத் திகைத்து அவந்திகாவை கேள்வியாகப் பார்த்தாள். அவந்திகா பதில் சொல்ல விரும்பாதவள் போல மதியின் விழி பார்க்காமல் முகம் திருப்பிப் படுக்கையிலிருந்து எழுந்து தலை தாழ்த்தி அமர்ந்தாள்.

ஒரு தாக்குதலிலே முழு சக்தியையும் இழந்துவிட்டிருந்த உவா, எழுந்து நின்றிருந்த போதும், பாதி குனிந்து, ஒரு கையில் கதாயுதத்தினை ஊன்றிக்கொண்டும், மற்றொரு கையில் தன் நெஞ்சில் கை வைத்து மூச்சு வாங்கிய விதமாக அறை மயக்கத்துடனும் செயல் திறனற்று எதிரில் நடப்பதை பார்த்திருந்தாள்.

மதி அவந்திகாவை பார்த்திருந்தபோது உவா, “கவ்…கவ்…” என்று மீண்டும் இரும்பினாள். அவள் நிலை உணர்ந்து அவந்திகாவை விடுத்து, உவாவை நோக்கிச் சென்றாள் மதி.

அவந்திகா முகம் வெளுத்துச் செய்வதறியாமல் உடலில் லேசான நடுக்கமுடன் சிலைபோல அமர்ந்திருந்தாள். அவளைச் சுற்றி தங்க நிறத்தில் மினுமினுத்துக் கொண்டிருந்த பட்டாம்பூச்சிகள் ஒவ்வொன்றாக மறைந்தது.

கடைசியாக ஒரு பட்டாம்பூச்சி மட்டும் அவந்திகாவின் கன்னத்தில் வெகுநேரம் அமர்ந்து குவிந்து விரிந்து அவளுக்குத் தைரியம் சொல்வது போல் அவளை வருடியது. அதனைத் தன் விரல் நுனியில் எடுத்து அதன் இறகை வருடிய அவந்திகா, “நந்தன்…” என்றாள்.

அவளையும் அறியாமல் அவள் மனம் லேசாகி அவள் இதழ் நந்தனின் நினைவில் விரிந்தது. அவள் புன்னகையுடன் பார்த்திருக்கும் போதே அந்தப் பட்டாம்பூச்சி அவள் கண்மீது சில வினாடி அமர்ந்து, பின் அதுவும் மின்னும் துகள்களாக மாறி மறைந்தது.

ஒரு வழியாக நிலைக்கு வந்த அவந்திகா அப்போதுதான் உவாவை பார்த்தாள். படுகாயமுடன் உதடின் ஒருபுரம் லேசாக இரத்தம் வர நிற்க முடியாமல் நின்ற உவாவின் கைபற்றி அவளது உடல் பாதிப்பின் தீவிரத்தை மதி அவளுள் தன் ஆன்ம விளிப்பை செலுத்தி ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.

பின் உவாவை நோக்கி மதி கோபமாக, “பத்மாசன நிலையில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பி.” என்று கத்தினாள். எதிரியின் பலம் தெரியாமல் தலை முதலாகச் சண்டையிட சென்ற உவாவை பார்த்து மதிக்கு கோபமே வந்தது.

உவா மதியின் அதட்டலில் அரை கண் உயர்த்தி அவள் முகத்தைப் பார்த்து வலியை மீறியும் லேசாகப் புன்னகைத்து அவள் சொன்னது போல உடனே தரையில் பத்மாசன நிலையில் அமர்ந்தாள். உடலின் பல உள்ளுறுப்புகளில் இரத்த கசிவை உணர்ந்த மதியின் முகமும் பார்க்க முடியாதது போலப் பல கோணலுக்கு மாறியது.

எப்போதும் அதிகம் பேசாமல் இருக்கும் மதி கோபத்தை கட்டுபடுத்த முடியாதவள் போல, “அறிவில்லை. அவன் யார் என்ன வென்று தெரியாமல் அவன் சக்தி அறியாமல் எப்படி உன்னுடைய இரு சக்கர சக்தியைக் கொண்டு நேரடியாகச் சண்டையிடச் சென்றாய்.” என்று திட்டியவிதமாக

மதி தன் வலது கையின் ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் நீட்டித் தன் இடது கைக் கொண்டு உவாவின் வலது கை மணிகட்டைப் பற்றி ஆன்மீக ஆற்றலை அவளுள் செலுத்தி அவள் உடலின் உள்ளுறுப்பில் ஏற்பட்ட இரத்த கசிவை மெதுவாகக் குணப்படுத்த ஆரம்பித்தாள்.

அதற்குள் அவர்கள் அறைக்கு வந்த வீட்டிலிருந்த மற்றவர்கள், சுக்கு நூறாக உடைப்பட்டிருந்த அந்த அறையின் கதவைப் பார்த்துத் திகைத்து அறையின் வெளியிலே அப்படியே நின்றனர். முகிலன் தன் கையில் வாளை எடுத்து ஒரு தாவலில் அந்த அறையின் வெளியிலிருந்து உள் குதித்தான்.

எச்சரிக்கையாக உள்ளிருப்பதை பார்த்தவன், அந்த அறையின் ஒரு மூளையில் பத்மாசன நிலையில் உதட்டிலும் ஆடையிலும் இரத்த கறையுடன் அமர்ந்திருந்த உவாவை பார்த்து, ‘யார் இப்படி உவாவை காயப்படுத்தியது.’ என்று திகைத்தான்.

அவள் அருகில் மதியும் கண் மூடி உவாவின் கைப்பற்றி அவளைக் குணப்படுத்திக் கொண்டிருந்தாள். அவந்திகா மரகதக்கல்லை உவாவின் நெற்றியில் வைத்து உவா விரைவில் ஆன்மீக ஆற்றலை உறிஞ்ச உதவிக் கொண்டிருந்தாள்.

முகிலன் வாளை வைத்து விட்டு, “அவந்தி என்ன நடந்தது?” என்று கேட்டான்.

முகிலனின் குரலில் அவந்திகா, கொடியிடம் மரகதகல்லை பிடித்திருக்க வைத்துவிட்டு, அவனை நோக்கித் திரும்பி, “பெரிதாக ஒன்றுமில்லை. உவா நான் ஆபத்தில் இருப்பதாக எண்ணி என் அறைக்கு வந்து அடிப்பட்டுக் கொண்டாள். நீ வீட்டிலிருக்கும் மற்றவர்களைப் பயப்பட வேண்டாமென்று சொல்லி அனுப்பு.” என்றாள்.

அவந்திகாவின் பதிலில் கண் விழித்த உவா மதி இருவரும் அவந்திகாவை பார்த்தனர். இருந்தும் அவளது பொய்மையை இருவரும் வெளிப்படுத்தவில்லை. மீண்டும் கண்களை மூடினர். முகிலன், ‘எது எப்படி இருந்தாலும் உவா இப்படி அடிப்படும் அளவு என்ன செய்தாள்.’ என்று நினைத்தான்.

இருந்தும் எதுவும் கேட்காமல், “ம்ம்…” என்று அறையை விட்டுச் சென்று வீட்டினரிடம் பேசி அனுப்பி வைத்தான். கூடவே வேதனிடம் சொல்லி அறையின் கதவு உடைந்ததால் உண்டான சிதலங்களை சுத்தம் செய்யப் பனித்துவிட்டு மீண்டும் அறைக்கு வந்தான்.

அவந்திகா பெருமூச்சுவிட்டு அறையிலிருந்த நீரை கிண்ணத்தில் ஊற்றி அருந்தினாள். உள்ளே வந்த முகிலன், “இப்போது சொல். மற்றவர்களை அனுப்பிவிட்டேன். என்ன நடந்தது.?” என்றான் விடாமல்.

சொல்லாமல் மீளாது என்று உணர்ந்த அவந்திகா, “விந்தியாவை சந்தித்த அந்த முக்காடு மனிதன் என் அறைக்கு வந்தான். அவன் வந்ததை உணர்ந்து இங்கு வந்த உவாவை அவன் தாக்கியிருக்க வேண்டும். அதிக சக்தியற்ற அவள் காயமுற்றாள்.” என்றாள்.

உவாவை மற்றொருமுறை பார்த்த முகிலன், “விந்தியாவிற்கு உதவியதால் முக்காடு மனிதனை நல்லவன் என்றல்லவா நினைத்தேன். அவன் ஏன் உவாவை தாக்க வேண்டும்.? அதனோடு பவளன் எங்கே போனான்? அவன் ஏன் மீண்டும் வரவில்லை.” என்று முன்பு ஏற்பட்ட சந்தேகத்தையும் கேட்டான்.

முக்காடு மனிதனை நல்லவன் என்றதில் அவள் முகம் வெளுத்த அவந்திகாவிற்கு, “நல்லவன்!?” என்று முனுமுனுத்து, விரக்தியான புன்னகை வந்தது. பின் முக்காடு மனிதனை விடுத்து பவளனை நினைத்து, “பவளன் ஏன் வரவில்லையென்று தெரியவில்லை.” என்றாள்.

‘நந்தன் மீண்டும் சொல்லாமல் கொள்ளாமல் மாயமாகிவிட்டான். இது புதிதல்லவே.!’ என்று மனதுள் நினைத்தாள் அவந்திகா. கூடவே கடைசியாக அவனைப் பார்த்தபோது நிகழ்ந்த நினைவுகள் வர லேசாக முகம் சிவந்தாள்.

அவந்திகாவின் முகத்தையே பார்த்திருந்த முகிலன் அவள் முக மாறுதலைக் கவனிக்க தவறவில்லை. இருந்தும் அதுகுறித்து கேட்காமல், “ம்ம். என்னமோ!” என்று அந்த அறையிலிருந்த மெத்தையில் அமர்ந்தான்.

அவந்திகாவும் எதுவும் பேசாமல் உவாவையும், மதியையும் பார்த்தவிதமாக அமர்ந்திருந்தாள். கூடவே, ‘உவா. எப்படி இங்கு வந்தாள். அதனோடு அந்த முக்காடு மனிதன் அவ்வளவு எளிதில் யாருடனும் சண்டையிட மாட்டானே.

பேசியே பாதி நேரம் கேட்பவர்களின் மனம் மாற்றிவிடுபவன், ஏன் உவாவை நேரடியாகத் தாக்கினான்.’ என்று குழப்பமாக உவாவை பார்த்தாள். இருந்தும் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் அறையில் அமைதி நிலவியது.

பின் முகிலன், “அவந்தி எனக்கு ஒரு சந்தேகம்.” என்று அவந்திகாவை பார்த்துக் கேட்டான்.

அவந்திகா, “என்ன?” என்றாள்.

முகிலன், “உனக்கு எப்படி தெரியும், இந்த வீட்டுக்கு வேலைக்கு வந்த அந்தப் பெண்தான் அதித்ரீ என்று?” என்று கேட்டான்.

அவந்திகா, “சில நாட்களுக்கு முன்பு இந்த அறையில் நாம் இந்த ஊரின் பிரச்சனை சரி செய்வது குறித்து பேசி முடித்து நீங்க உங்க அறைக்குச் சென்றபிறகு, அந்த நடுத்தர வயது பெண்ணான அதித்ரீ என் அறைக்கு வந்தாள்.

இயல்பாகப் பேசுவதாக எண்ணி என்னிடம், ‘பிரச்சனை எப்போது முடியும்? வினோதா எப்போது கண் விழிப்பாள்?’ என்று கேட்டாள்.

‘விரைவில் முடியாது.குறைந்தது பத்து நாட்களாவது ஆகும்.’ என்று நான் பதில் சொன்னதில் அவள் முகத்தில் தெரிந்த நிம்மதி அவள்மீது எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதனால் அவளை அப்போதிருந்தே நான் கண்காணிக்க ஆரம்பித்துவிட்டேன்.

அதனாலே அவள் போக்கில் விட்டுப் பிடிக்க எண்ணி, நானும் பவளனும் பௌதிகாவின் இல்லத்தில் அவளுக்குத் தெரியும்படியே பொய்யான பௌதிகாவாகக் கைப்பாவையாகினோம். பவளனால் அந்தக் கைப்பாவை சக்கரத்தை உடைத்திருக்க முடியும் என்றபோதும், அவர்கள் எச்சரிக்கையாக வேறு எதுவும் செய்வதை தடுப்பதற்காக, பவளன் அதனை அப்போது உடைக்கவில்லை.

நாங்க நினைத்தப்படி, நாம் சக்தியற்றவர்கள் என்று இன்பன் மற்றும் அதித்ரீ இருவருமே நம்பினர். எதாவது பெரிய சண்டை நேர்ந்தால், நம்மால் உடைக்க முடியாத கைப்பாவை சக்கரத்தைக் கொண்டு நம்மைக் கட்டுபடுத்திவிடலாம் என்று அவர்கள் நினைத்திருந்தனர்.

அந்த வேலைக்கார பெண் அதித்ரீ என்று தெரிந்த பின்னே பவளனால் இரண்டு வருடத்திற்கு முன்பான அவளது காதல் கதையை அறிய முடிந்தது. அதன் பிறகு என்ன காரணத்திற்காக இந்தக் கைப்பாவை சக்கரம், உயிர் உறிஞ்சும் சக்கரம், உயிர் மீட்கும் சக்கரம் ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டது என்று எளிதில் அறிந்தோம்.

இந்த மூன்று சக்கரமல்லாமல் மறக்கடிக்கும் சக்கரமும் (Amnesia Array) பயன்படுத்தி அந்த மாப்பிள்ளைகளின் நினைவுகள் அழிக்கப்பட்டது அவர்களின் இல்லம் சென்று வந்த பவளன் சொன்னார்.

எது எப்படியோ, இனி விந்தியாவால் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது. இரத்த ஒப்பந்தத்தை உடைத்ததால், அவள் குழந்தை ஓரிரு வருடம் அடிக்கடி நோய் வாய்படும். இருந்த போதும் ஒழுங்காகப் பராமரித்தால் பெரிய பாதிப்பு ஏதும் இராது.” என்று சொல்லிப் பெருமூச்சுவிட்டாள்.

அவள் சொல்வதை அமைதியாகக் கேட்ட முகிலன், “ஓ…” என்று பின் பவளனிடம் மட்டும் தன் சிநேகிதி எல்லாம் சொல்லியிருப்பதை உணர்ந்து, “ஏன் எங்களிடம் அனைத்தையும் சொல்லவில்லை.?” என்று முகம் சோர்ந்து கேட்டான்.

அவந்திகா, “எங்க கனிப்பு நிச்சயமாகத் தெரியவில்லை முகிலன். தேவை இல்லாமல் உங்களைக் குழப்ப நான் விரும்பவில்லை. அதனோடு வேறு விதமாகச் சிந்திக்கவும் இருவர் வேண்டும். என் கனிப்பை முதலிலே தெரிந்துவிட்டால், நீங்க வேறுவிதமாக யோசிக்க முடியாது.

அதனாலும் நான் சொல்லவில்லை. அதனோடு அதித்ரீ மீது சந்தேகம் என்று மட்டும்தான் நான் பவளனிடம் சொன்னேன். மற்ற அனைத்தும் அவனே கண்டறிந்து என்னிடம் சொன்னார். அதனை உங்களிடம் சொல்ல எனக்குக் காலவகாசமிருக்கவில்லை. அதனால் அவசியமானது மட்டும் உங்களுக்குத் தெரிய படுத்தினேன்.” என்றாள்.

முகிலன் அவள் சொல்வதும் சரிதான் என்பது போல் தலையசைத்தான். அதற்குள் மதி உவாவை ஒரளவு குணப்படுத்திவிட்டு நெற்றியில் பூத்திருந்த வியர்வையை தன் பின்னங்கையில் ஒற்றி எடுத்தபடி,

“சில நாட்களுக்கு இவள் ஓய்வெடுக்க வேண்டும். இவளை உடனடியாக மாதங்க அரசுக்கு அனுப்ப ஏற்பாடு செய் முகிலன்.” என்று எழுந்து வந்து தண்ணீர் அருந்த நீரை கிண்ணத்தில் ஊற்றியவிதமாகச் சொன்னாள்.

முகிலன், “ம்ம்…” என்று அதிகமாக ஆன்மீக சக்தியைப் பயன்படுத்தியதாலோ என்னமோ, முகம் வெளுத்து இருந்த மதியை பார்த்து, “மதி. உனக்கெதுவுமில்லையே!” என்று எழுந்து வந்து அவள் கைப்பற்றினான்.

நீரை அருந்திக் கொண்டிருந்த மதி, திடீரென்று தன் கைப்பற்றிய முகிலனை, நீர் அருந்திவதை நிறுத்திவிட்டு பார்த்தாள். பின் பதில் சொல்லச் சலிப்புற்று பேசாமல் களைப்புடன் கண்களை உருட்டிவிட்டு மீண்டும் நீர் அருந்தினாள்.

முகிலன் அவள் பேசாமல் இருப்பதை பார்த்து, அவள் கையின் மணிகட்டை பற்றி அவளுள் ஆன்ம விளிப்பை செலுத்தி அவளைப் பரிசோதித்தான். பார்த்ததில் அவளுக்கு எதுவுமில்லை என்பதை உணர்ந்து பெருமூச்சுவிட்டு மீண்டும் அவந்திகாவின் அருகில் வந்து அமர்ந்தான்.

மதி அவன் இஷ்டம் போலச் செய்யவிட்டுவிட்டு, பின் அவளும் வந்து அவந்திகாவின் மறுப்புரம் அமர்ந்தாள். அப்போது கொடி மரகதக்கல்லை மீண்டும் கொணர்ந்து அவந்திகாவிடம் சேர்த்துவிட்டு அவள் கை மணிகட்டினுள் அடங்கியது.

உவா இன்னமும் கண் மூடித் தவம் செய்துக் கொண்டிருந்தாள். அப்போது, “வன்னி, உன் ஆன்ம இணைப்பின் கடவுச் சொல் என்ன?” என்றாள் மதி.

அதனைக் கேட்ட அவந்திகாவின் முகம் சிவந்தது, “அ…அது…அது…” என்று தயங்கினாள்.

முகிலன், “என்ன பவளனுக்கு மட்டும்தான் அதனைச் சொல்வாயா?” என்று ஏற்கனவே அவன் மீதிருந்த பொறாமை வெளியில் தெரிய சொன்னான்.

அவந்திகா வேறுவழி இல்லாமல், “அது… பவளன்.” என்றாள்.

மதி முகிலன் இருவருமே, “ம்ம். ‘?_?’ .” என்று குழம்பினர்.

அவந்திகா மீண்டும், “என் கடவுச்சொல் பவளன்.” என்றாள்.

முகிலன் பற்களை நரநரவெனக் கடித்து, “உன்னிடம் பேசி ஏமாற்றி உன் ஆன்ம இணைப்பின் கடவுச்சொல்லை அவன் பெயராக வைத்துக் கொண்டானா? அவனை மீண்டும் பார்த்தேன் என்றாள். இருக்கிறது.” என்று கை முஷ்டியை இறுக்கினான.

அவந்திகா, “அ…அவர்மீது தவறு இல்லை. எனக்கே நான் 400 வருடத்திற்கு முன்பு ஏன் இந்த வார்த்தையைக் கடவுச்சொல்லாக வைத்தேன் என்று தெரியவில்லை. எனக்கு அப்போது அவரை யாரென்று கூடத் தெரியாது. அதனால் இது இயல்பாகப் பொருந்திய ஒன்று.” என்று, “கவ்…கவ்…” என்று வரட்டு இருமல் இரும்பினாள்.

இந்த விளக்கத்திற்கு பிறகு முகிலன் எதுவும் பேசாமல் அதிருப்தியாக எங்கோ பார்த்தப்படி இருந்தான். அதிகமாக எதுவும் பேசாமல் மதி அவளது மற்றும் முகிலனது கடவுச்சொல்லை சொன்னாள்.

பின் மதி, “வன்னி. நான் சிம்மரசிக்கு போகிறேன். எதுவென்றாலும் என்னை எந்த நேரத்திலும் அழை. அனேகமாக நான் தவம் செய்யப் போய்விடுவேன் என்று நினைக்கிறேன். பல வருடங்களாக ஐந்தாம் சக்கரத்தின் இடை நிலையிலே நான் இருக்கிறேன்.” என்று விடைப்பெறும் பொருட்டு சொன்னாள்.

அவந்திகா மதியின் எண்ணம் உணர்ந்தும், யாரந்த அந்த முக்காடு மனிதன் என்று தொடர்ந்து கேட்காமலும் இருந்த மதியை நன்றியாகப் பார்த்து, “சரி… நான் என் தோழர்கள் பாவனா மற்றும் கார்திக்கை கண்டுப்பிடித்து அவர்களைஅழைத்துக் கொண்டு அவர்கள் சொந்த ஊருக்குச் செல்லும் முன் அழைக்கிறேன்.” என்றாள்.

“ம்ம்.” என்று கிளம்புவதற்கு ஆயுதமாக எழுந்த மதியுடன் எழுந்த அவந்திகா அவளை ஒருமுறை அணைத்துக் கொண்டாள். பின் மதி, “மற்றது, பிறகு பேசலாம். எச்சரிக்கையாக இரு.” என்று முக்காடு மனிதனை எண்ணி கண்ணால் சைகைச் செய்தவள்,

பட்டாம்பூச்சி உருவாகி அவந்திகாவை முக்காடு மனிதனிடமிருந்து பாதுகாத்ததை பார்த்து, “அருகில் இல்லை என்றாலும் பவளன் உன்னைக் கவனித்துக் கொண்டிருப்பதால் நான் கவலை இல்லாமல் கிளம்புகிறேன். ஆனால் எந்த உதவியென்றாலும் முன்பு போலல்லாமல் என்னை எப்போதும் அழைக்க வேண்டும்.” என்றாள்.

உண்மை உணராத முகிலன் பவளனைப் பற்றி மதி வெளிப்படையாகச் சொன்னதில் குழம்பி, “மதி என்ன சொல்கிறாய்? அவனைப் பற்றி இப்போது ஏன் பேசிகிறாய்.?” என்று அவளிடம் முறைத்தான்.

அதற்கு மதி கண்களை உருட்டினாள். ஆனால் எதுவும் பேசாமல் கண் சைகையால் அந்த அறையில் கண் மூடி அமர்ந்திருந்த உவாவை காண்பித்து, “பிறகு அதுகுறித்து பேசலாம்.” என்று ஆன்ம இணைப்பில் முகிலனிடம் சொன்னாள்.

பின் வேறு எதுவும் சொல்லாமல், “நான் கிளம்புகிறேன். உவா எழுந்ததும் அவளிடம் சொல்லிவிடுங்க.” என்று அறையிலிருந்த உவாவை பார்த்தாள்.

அதற்குள் கண் விழித்த உவா, “நானும் கிளம்புகிறேன். என் மாதங்க அரசுக்குச் சென்று என் தவத்தை தொடர்கிறேன்.” என்று எழுந்து வந்தாள். பின் மதியிடம் திரும்பி, “நன்றி மதி.” என்று கைக்கூப்பி வணங்கினாள்.

முகிலன், “அவந்தி நாமும் கிளம்பலாம். நான் வேதனிடம் பேச வேண்டியதை ஏற்கனவே பேசிவிட்டேன். அந்தப் பெண் விந்தியாவை தயாராக இருக்கச் சொல்லிவிட்டுதான் வந்தேன்.” என்று எழுந்தான்.

பின், அனைவரும் வேதனின் வீட்டிலிருந்து கிளம்பினர். மதி பறக்கும் சக்கரத்தை உருவாக்கிக் கொண்டு அவர்களிடமிருந்து பிரிந்து பறந்துச் சென்றாள். முகிலன் உவாவின் கைப்பற்றிப் பறக்கும் சக்கரத்தை உண்டாக்கி முன்னேச் சென்றான். அவந்திகா விந்தியாவின் கைப்பற்றி முகிலன் பின்னே பரியரசுக்கு நோக்கிக் கிளம்பினாள்.

Author Note:

(1) உவாவின் பதக்கத்தின் படம்

(2) பாதுகாக்கும் சக்கரத்தில் இருப்பவற்றை நம்மால் பார்க்க முடியும். ஆனால் அந்தச் சக்கரத்தின் வட்டத்திற்குள் தீங்கு விளைவிக்கும் எண்ணமுடன் சென்றால், அவர்களைத் தூக்கி வீசிவிடும்.ஆனால் மந்திர பூட்டு சக்கரத்தில் இருப்பவற்றை நம்மால் காண முடியாது. அதனை உடைக்காமல் அதனுள் இருப்பவற்றை தொட முடியாது. ஆனால் அது எந்தவித பாதிப்பையும் அதனை உடைக்க இருப்பவருக்கு ஏற்படுத்தாது.

Finally இந்தக் கிளைக்கதை ஒரு வழியாக முடிந்ததுபா. இப்போ Readers-யிடம் ஒரு கேள்வி. புதிய கிளைகதைக்கு போகலாமா? அல்லது flashback போகலாமா?