யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 42

782

அத்தியாயம் – 42

பின் சரி என்பது போலத் தலையசைத்து, விந்தியாவின் குத்தூசியை எடுத்தாள் அவந்திகா. விந்தியாவும் கண் விழித்தாள்.

கண் விழித்த விந்தியா அங்கிருப்பவர்கள் அனைவரையும் கோபமுடன் மாறி மாறிப் பார்த்து, எழுந்து அமர்ந்து, “என்ன செய்ய நினைத்துக் கொண்டிருக்கிறீகள். என்ன கேட்டாலும் நான் உங்களிடம் நான் எதுவும் சொல்லத் தயாரில்லை.” என்று கத்தினாள்.

அவளது கோபத்தை விக்கித்து பார்த்த வினோதா ஒரு நொடி நடுங்கி, “அக்கா…” என்று கண்கலங்கினாள்.

வினோதாவின் குரலில் ஒரு நொடி விந்தியா அமைதியானாள். தன் மீது சிறு வயதிலிருந்து, ‘அக்கா, அக்கா.’ என்று பாசமாகத் தன்னை சுற்றி வந்த வினோதாவிற்கே தீங்கு இழைக்க இருந்ததை எண்ணி அவளுள்ளே குற்ற உணர்வு அதிகரிக்க விந்தியா மேலும் வார்த்தை வராமல் மனம் நொந்துக் கொண்டாள்.

எதிரே அமர்ந்திருந்த வினோதாவின் விழி பார்த்து அதற்கு மேலும் அடக்க முடியாமல், “வினோ!” என்று தேம்ப ஆரம்பித்தாள் விந்தியா. “நான் மோசமான பெண். உன் உணர்வுக்கான(consciousness) உயிர் பிரிவை(1) உன்னிலிருந்து பிரித்துக் காலம் முழுதும் படுக்கையில் இருக்க வைக்க முயன்ற பாவி நான்.

எ…என்னை அக்கா என்று அழைக்காதே. அதற்கு நா…நான் தகுதியானவள் அல்ல. நான் இரக்கமற்றவள். நான் பெற்ற பிள்ளையைக் கொல்ல நினைத்த கொலைகாறி. பத்து பெண்களை முடமாக்கி அதில் இன்பம் காண இருந்தவள்.

மற்றவர்களுக்கு அமைய இருந்த திருமண வாழ்வை அழித்து, அதனால் நான் என் இல்லற வாழ்வை அமைக்க நினைத்தவள். உன்னுடைய கள்ளம் கபட மற்ற அன்பை சொல்வார் பேச்சுக் கேட்டு உதாசினம் செய்து உன் மனம் நோகும் படி பேசியவள்.

அ…அன்று அந்த முக்காடு மனிதன் வந்து அந்த மாதங்க ரிஷிமுனிகளின் நோக்கத்தைச் சொல்லாமல் இருந்தால், கனநேரம் நான் அந்தக் கடிதத்தை எழுத உதவாமல் இருந்திருந்தால்,” என்றவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து உடல் நடுங்க,

கைகளில் முகம் பொதிந்து அழுதவண்ணம், “அச்சோ! என்ன காரியம் செய்ய நினைத்தேன். ஏன் அந்தப் பெண் மாதங்க ரிஷிமுனி வேலைகாரியை போல் நம் வீட்டுக்கு வர வேண்டும் என்று நான் யோசித்திருக்க வேண்டாமா?

என் மூளை ஏன் கொஞ்சமும் மாறாக யோசிக்கவில்லை. இவ்வுலகில் பிரதிபலன் இல்லாமல் உதவுவர் யாருமுண்டோ. அவள் சொல்வதையெல்லாம் கேட்டு இரத்தம் கொண்டு ஒப்பந்தத்தில் சேர்ந்துக் கொண்டேனே. “ என்று அப்போதுதான் குழந்தையின் நினைவு வந்தவளாக,

“எ…என் குழந்தை. அவன். அச்சோ ஒப்பந்தமிட்டு அவன் உயிரை அல்லவா பேரம் பேசிவிட்டேன். இந்தப் பெண் அவந்திகா வரவில்லையென்றால், அந்த ரிஷிமுனிகள் வரவில்லையென்றால், என் குழந்தை… ” என்று முழு வார்த்தையும் சொல்லாமல், மெத்தையிலிருந்து எழுந்து அருகிலிருந்த அவந்திகாவின் இருக்கைகளைப் பற்றிக் கெஞ்சிய தோற்றமுடன்,

“அவன் நலமுடன் தானே இருக்கிறான். அ…அவனுக்கு எதுவும் ஆகவில்லை இல்லையா. அவனைக் காப்பாற்றிவிட்டீர்கள் தானே.” என்று கண்ணீர் கோடுகள் கன்னம் கடந்து முகவாயில் சொட்ட தன் மகனைப் பற்றிக் கேட்டாள்.

அவந்திகா, பித்தம் பிடித்ததுப் போல் பிதற்றும் விந்தியாவை பார்த்து, என்ன பதில் சொல்வதென்று புரியாமல் ஆமாம் என்பது போல் தலையசைத்தாள்.

அவந்திகாவின் தலையசைப்பில், கண்ணீரும் சிரிப்புமாக, “என் பிள்ளை… நலமுடன் இருக்கிறான்.” என்றவளின் முகம் உடனே சுருங்கி, “ஆனால், அவன் வளர்ந்து நான் அவனைக் கொல்ல நினைத்தது தெரிந்தால் என்னை வெறுப்பானே. அம்மா என்றும் என்னை அழைக்கமாட்டான். “ என்று மீண்டும் தேம்ப ஆரம்பித்தாள்.

விந்தியாவின் பல உணர்வுகள் கொண்ட பேச்சைக் கேட்ட அந்த அறையிலிருந்த அனைவரும் பேச்சற்று அவளைப் பார்த்தனர். தன் மகளின் தோற்றம் பார்த்து வேதனின் மனைவி மனம் தாளாமல் வேதன் மீது சாய்ந்து அழுக ஆரம்பித்தாள்.

விதுனா, வினோதாவின் கண்களிலும் கண்ணீர். மதியும் முகிலனும் உவாவும் எதுவும் பேசமால் விந்தியா பேசியதில் மறைந்திருந்த உண்மைகளை ஆராய்ந்தவிதமாக இருந்தனர். அவந்திகா மனித உடலில் இருந்ததாலோ என்னமோ விந்தியாவின் கலக்கத்தால் லேசாகப் பரிதாபப் பட்டாள்.

விந்தியாவின் பதிலில் வினோதா, “அக்கா. உன் மகன் அப்படியெல்லாம் நினைக்கமாட்டான். நீ எந்தப் பெண்களையும் துன்ப படுத்தவில்லை. நானும் உணர்வற்று படுத்துக் கிடக்கவில்லை. தவறு செய்வது மனிதனின் இயல்பு.

ஆனால் அதனை நீ சரியான நேரத்தில் சரி செய்து அனைவரையும் காப்பாற்றிவிட்டாய். அதனால் உன்னை நினைத்து உன் குழந்தை பெருமையே படுவான். இப்படி கவலை படாதே அக்கா?” என்று விந்தியாவை தன் தோளோடு அணைத்து ஆருதல் சொல்ல முயன்றாள்.

வினோதாவின் அரவணைப்பில் குழுங்கி தேம்பிக் கொண்டிருந்த விந்தியாவின் உடல் நடுக்கம் லேசாகக் குறைந்தது. ஆனால் உடனே விழுக்கென்று வினோதாவை தூர தள்ளிய விந்தியா, “இல்லை. நான் கொலைகாறி தான்.” என்று கத்தினாள்.

பின், “அந்த மாதங்க யாளி ரிஷிமுனி அதித்ரீயின் உண்மை நோக்கம் தெரியாமல் போயிருந்தால், உண்மையில் உங்க எல்லோருக்கும் தீங்கு விளைவித்திருப்பவள் நானே. என் மகனையும் இழந்திருப்பேன். என் கணவனும் எனக்குக் கிடைத்திருக்க மாட்டார்.” என்று குரல் உடைந்து பயத்துடன் நடுங்கி சொன்னாள்.

அவளது இந்தப் பதிலில் அறையிலிருந்த அனைவருமே அதிர்ந்தனர். உவா பொறுமையில்லாதவள் போல், “என்ன? உன் கணவனும் உனக்குக் கிடைத்திருக்க மாட்டானா? ” என்று திகைப்பு குறையாமல் கேட்டாள்.

உவா பேசியதுமே விந்தியா எல்லை மீறிப் பேசியது நினைவு வந்தவளாக, அழுவதையும் மறந்து, அறையிலிருந்த அனைவரையும் மாறி மாறிப் பார்த்தாள். பின் தன் இதழ்களை அழுந்த மூடி மேலும் பேசமாட்டேன் என்பது போல் கண்கள் மூடி முட்டிக் கால் போட்டு முகம் பொதித்து அமர்ந்தாள்.

விந்தியாவின் மாற்றம் உணர்ந்த அனைவரும் உவாவை திரும்பிப் பார்த்தனர். விந்தியா முழுதும் சொல்லி முடிக்கட்டுமென்றே, யாரும் அவள் பேசும்போது அவசியம் இல்லாமல் பேசுவதை தவிர்த்துக் கேட்டிருந்தனர்.

உவாவின் திடீரென்ற விழிப்பில், விந்தியா பேசுவதை நிறுத்த, மதியும், முகிலனும் உவாவை முறைத்தனர். அவர்களின் பார்வையில் தன் தவறு உணர்ந்து சங்கூச்சமாக(Embarrassing) உணர்ந்து உவா, “மன்னித்துவிடுங்க.

நீங்கச் சொன்னபடி இந்தப் பெண் அவள் கணவனுக்காகவே இவ்வளவு பெரிய வேலை செய்தாள் என்று நினைத்தேன். ஆனால் இவள் அப்படி இல்லை என்பது போலச் சொல்லவும் கொஞ்சம் உணர்ச்சி வச பட்டுவிட்டேன்.” என்று அசடு வழிந்தாள்.

முகிலன் பதிலேதும் சொல்லாமல் பெருமூச்சுவிட்டான். மதி கண்களை உருட்டி, விந்தியாவை ஊடுருவும் பார்வை பார்த்தாள். அவந்திகா உண்மை உணர்ந்தவளாகப் பெருமூச்சுவிட்டு சொல்ல ஆரம்பித்தாள். “அந்தப் பெண் ரிஷிமுனி அதித்ரீ உன் கணவர்மீது விருப்பம் கொண்டிருந்தாள்.

உன்னை உன் கணவர் திருமணம் செய்யும் முன்னே உன் கணவரை விரும்பி இருந்தாள். ஆனால் உன் கணவன் மனிதயாளி என்பதால் அவள் விருப்பத்தை உன் கணவரிடம் சொல்லாமல் இருந்திருக்க வேண்டும்.

உன் கணவர் உன்னைத் திருமணம் செய்துக் கொண்டு, உன்னை அவர் ஊருக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சியாக உன்னுடன் வாழ்வது பார்த்து அவளுக்குப் பொறாமை உண்டாகியிருக்க வேண்டும். மனித யாளிகளை போலல்லாமல் மற்ற யாளிகளுக்கு ஒருவர் மீது அவ்வளவு எளிதில் விருப்பம் வராது.

ஆனால் ஒருவரை விரும்பிவிட்டால், அவரை அடையவில்லையென்றால், அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம். அதனாலே பொதுவாக மனித யாளிகளை தவிர மற்ற யாளிகள் அவ்வளவு எளிதில் விருப்பமோ அல்லது ஆன்ம பிணைப்பையோ(soul binding) கொள்வதில்லை.

ஒருமுறை ஆன்ம பிணைப்பென்ற திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுவிட்டால் கணவன் மனைவி இருவரும் இறப்பதும் பொதுவில் ஒரே நேரத்தில் நிகழும். ஆன்ம பிணைப்பை முறிப்பதற்கும் மிகப் பெரிய தியாகம் செய்ய நேரலாம்.

இதையெல்லாம் தெரிந்திருந்த அதித்ரீ, ஒரு வழியாக உன் கணவன் உன்னுடன் வாழ்வதை ஏற்றுக் கொண்டு விலகிப் போக நினைத்த நேரத்தில், அவன் கொள்ளையர்களால் இறந்தச் செய்தி அதித்ரீயை மனம் உடைய செய்தது.

உன்னாலும் உன் குழந்தையாலும்தான் உன் கணவர் இறந்ததாக எண்ணினாள். உன்னைப் பழிவாங்கும் நோக்கமுடன் தன் தோற்ற வயதை 50 வயது தக்க நடுத்தர மனித யாளி பெண்ணாக மாற்றிக் கொண்டு இந்த வீட்டுக்கு வேலைக்கு வந்தாள்.

வந்தவள் அமைதியாக இல்லாமல் முதல் ஒருமாதம் வீட்டின் நிகழ்வுகளையும் வீட்டாரின் செயல்களையும் கவனித்திருக்க வேண்டும். அப்போது வேதனும் அவர் மனைவியும் உன் உண்மை பெற்றோர்கள்குறித்து அவர்களுக்குள் பேசிக் கொண்டதை அவர்கள் அறியாமல் கேட்டு அதனை உன்னிடம் சொல்லியிருக்க வேண்டும்.

அன்புடன் பிணைந்திருந்த உன் சகோதிரிகள் மீது பொறாமையும், வெறுப்பும் வரும்படி அவர்களைப் பற்றிப் பழிச் சொல் சொல்லி உன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக அவள் பக்கம் ஈர்த்திருக்க வேண்டும்.

கடைசியாக உயிர் மீட்கும் சக்கரம்பற்றிச் சொல்லி, உன்னிடம் ஆசை வார்த்தைக் காட்டி கடைசியாக உன்னை அந்தக் கொடுமையான ஒப்பந்ததில் இணைத்திருக்க வேண்டும். ஆனால் அதித்ரீயின் உண்மையான நோக்கம் உனக்கு உன் கணவனை மீட்டு தருவதில்லை.

அது உனக்கு அப்போது தெரியவில்லை. 7 பெண்கள் நினைவிழக்கும் வரை எல்லாம் அதித்ரீயின் விருப்பம்போல நடக்க ஒரு நாள், நீ சொன்ன அந்த முக்காடு மனிதன் உன்னைச் சந்தித்து அதித்ரீயின் நோக்கத்தை உனக்கு விளக்கமாகச் சொல்லியிருக்க வேண்டும்.

அநேகமாக அந்தமுக்காடு மனிதன் உன்னிடம், ‘அதித்ரீ நோக்கம் உனக்கு உன் கணவனை மீட்டு தருவதில்லை. உன் கணவன் உயிருடன் வந்தாலும், உன்னை மறந்திருப்பான். கைப்பாவை சக்கரம் இல்லாமல் உயிர் உறிஞ்சும் சக்கரம் மற்றும் உயிர் மீட்கும் மட்டுமே கொண்டு உன் கணவனை மீட்டிருந்தால் அவனுக்கு உன்னை நினைவிருந்திருக்கும்.

உன்னோடானா ஆன்ம பிணைப்பும் அப்படியே இருந்திருக்கும். ஆன்ம பிணைப்பு ஒருவரின் ஒவ்வொரு உயிர் பிரிவுடனும் உண்டாவது. அதனால் உங்க ஆன்ம பிணைப்பை உடைத்து, உன் கணவனுடன் அதித்ரீ ஆன்ம பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதே அவளது நோக்கம்.

அதனாலே அவள் கைப்பாவை சக்கரம் மூலமாக உன் திருமணம் நடந்தப் போது நிகழ்வுகளை ஒவ்வொரு உயிர் பிரிவைப் பிரிக்குமுன்னும் அந்தப் பெண்களின் வாழ்வில் நிகழ்த்தினாள்.

ஒவ்வொரு உயிர் பிரிவையும் கொண்ட பெண்ணைப் பார்க்க வந்த மாப்பிள்ளையின் நினைவிலிருந்து அந்தப் பெண்ணின் நினைவுகளை அழிக்கச் செய்வதால் உன் கணவர் உயிர் மீண்டாலும், உன்னைப் பார்த்த, திருமணம் செய்த நிகழ்வுகளை மட்டும் மறந்திருப்பான். அவனோடான உயிர் பிரிவும் உடைந்திருக்கும்.’ என்று சொல்லியிருக்க வேண்டும்.

அதனை அறிந்ததும்தான் அதித்ரீயின் நடவடிக்கைக்களை கவனித்திருக்க வேண்டும். அதில் தெரிந்த பேதத்தை உணார்ந்திருக்க வேண்டும். அதனோடு அந்த முக்காடு மனிதன் வந்து பேசிய அன்றுதான் உன்னுடன் பாசமுடம் வளர்ந்த உன் சொந்த தங்கை வினோதாவை பெண் பார்த்துச் சென்றிருந்தனர்.

ஏதோ பத்து பெண்களுக்கு உடல் குறைப்பாடு என்று எண்ணியிருந்த நீ, உன் தங்கையும் அதில் ஒருவள் என்பதை அவளுக்குப் பெண் பார்க்க வந்தபோது நிகழ்ந்த நிகழ்வுகளில் உணர்ந்திருக்க வேண்டும்.

அதற்கு மேலும் யோசிக்காமல் வேதனுக்கு அந்த முக்காடு மனிதன் இருந்த வேளையிலே அந்தக் கடிதத்தை எழுதி உன் தங்கையைக் காப்பாற்ற முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால் உன்னுள் அந்த இரத்த ஒப்பந்தத்தால் அவ்வப்போது மனமாற்றம் ஏற்பட்டு தவித்திருக்க வேண்டும்.

நீ செய்ய வேண்டாமென்று சிலவற்றை நினைத்திருந்த போதும், உன்னுடைய இரத்த ஒப்பந்தம் உன்னை இருப்புக் கொள்ள விடாது. அதனாலே அதித்ரீ மற்றும் இன்பன் நல்லவர்கள் அல்ல என்று தெரிந்த பிறகும் பௌதிகாவை கடத்திச் செல்ல நேற்று சத்திரத்திற்கு வந்தாய்.

வந்து, பாதி உண்மையும் பாதி பொய்யும் கலந்து, வேதன்தான் எல்லா தவறும் காரணமென்று எங்களைத் திசை திருப்பி, பௌதிகாவை கடத்திச் செல்ல முயன்றாய். நீ செய்வது தவறு என்று தெரிந்திருந்த போதும், உன்னால் எதையும் தடுக்கமுடியவில்லை.

கடைசி நேரத்தில் குழந்தையை அந்த உயிர் மீட்கும் சக்கரத்தின் பலி பீடத்தில் வைக்கும் வரையிலும் உன்னால் உன்னைக் கட்டுபடுத்த முடியவில்லை. அதன் பிறகு நான் வந்து உன் குழந்தையை என் கையில் ஏந்தியதுமே பதறிய நீ, குழந்தை நலமுடன் இருக்க போகிறான் என்று கண்ணில் ஒளித் தெரிய என்னைப் பார்த்தது எனக்கு இன்னமும் மறக்கவில்லை.

இது நீ இப்போது சொன்னது, வேதன் முன்பு சொன்னது மற்றும் பவளன் மாதங்க அரசில் அதித்ரீயின் கடந்த 3 வருடத்தின் நடவடிக்கைகளை ஆராய்ந்து சொன்னது, இவை மூன்றையும் கொண்டு நான் யூகித்த கதை. ஓரிரு நிகழ்வுகள் மாறி இருக்கலாம்.

ஆனால் ஏறதாழ இதுதான் நடந்திருக்க வேண்டும். நான் சொல்வது சரிதானே விந்தியா?” என்று விந்தியாவை பார்த்து, சிரிப்பல்லாத புன்னகையை உதிர்த்து கேட்டாள் அவந்திகா.

அவந்திகா, ‘அதித்ரீ தன் கணவனை விரும்பினாள்.’ என்று சொன்னதிலிருந்து விழுக்கென்று நிமிர்ந்து அவந்திகா சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளையும் இமைக்க மறந்து கேட்டுக்கொண்டிருந்தாள் விந்தியா.

அவந்திகா பேசி முடிக்கும் வரை அந்த அறையில் குண்டூசி விழும் சத்தம் கூடக் கேட்கும் அளவு நிசப்தம் நிழவியது. அவந்திகா விந்தியாவை சரிதானே என்று கேள்வி கேட்டதும்தான் அவள் கண்களை மூடித்திருந்தாள்.

பின் அவந்திகாவின் மீது விந்தியாவிற்கு மதிப்பேறியது. விந்தியா ஆமாம் என்பது போல் தலையாட்டினாள். “நான் முதலிலிருந்தே யாருக்கும் தீங்கு நினைக்கவில்லை. நடுவில் அந்த முக்காடு மனிதனால் உண்மை உணர்ந்தபோது, அதித்ரீ மற்றும் இன்பனின் செயல்களை வெளிப்படையாகச் சொல்ல முயன்றேன்.

என் அப்பாவிற்கு அந்தக் கடித்தத்தை, நான் மிகவும் கடினப்பட்டு எழுதினேன். அப்போது ஏன் என்னால் தவறு என்று தெரிந்தும் முழுதும் அவர்களை எதிர்த்து எதுவும் பேசவோ, செய்யவோ முடியவில்லை என்று எனக்குக் குழப்பமாக இருந்தது.

ஆனால் இப்போது புரிகிறது. எல்லாம் அந்த இரத்த ஒப்பந்தத்தால் என்று. அந்த இரத்த ஒப்பந்ததிற்கு நான் எப்படி ஒத்துக் கொண்டேன் என்று எனக்குச் சரிவர நினைவில்லை. அதனால்தான் இப்போதும் நான் உண்மையில் குற்றம் செய்ய நினைக்கவில்லை என்று சொல்லத் துணியவில்லை.

ஏனேன்றால் நான் சொல்வதை நம்புவது உண்மையென்ற போதும், என்னாலே முடியாது. அதனால் அதனை எடுத்துச் சொல்லிப் பலனில்லையென்று நினைத்தேன். “ என்று அவள் முன்பு பேசாததிருந்ததின் காரணத்தைச் சொன்னாள் விந்தியா.

அவந்திகா, “இரத்த ஒப்பந்தம் இருப்பதிலே மிகவும் மோசமானது. அந்த ஒப்பந்ததால் அதித்ரீ உன் எண்ண அலைகளை எப்போதும் கட்டுக்குள் வைத்திருந்தாள். என் கணிப்பு சரியென்றால் இன்பன் மூலமாக உன்னைக் கைப்பாவையாக்கி அப்போது இரத்த ஒப்பந்தமிட செய்திருக்க வேண்டும்.” என்றாள்.

அதனைக் கேட்ட விந்தியா விழி விரித்து அவந்திகாவை பார்த்து, “உண்மையாகவா?” என்று கேட்டாள்.

அதற்கு அவந்திகா ஆமாம் என்பது போல் தலையாட்டினாள். சற்று நிறுத்தி, “என்ன இருந்தும், எந்தத் தாயும் பெற்ற பிள்ளையைக் கொன்று அதன் மூலம் எவ்வளவு பெரிய செழிப்பான வாழ்வையும் அடைய மாட்டாள். அதனால் நிச்சயம் நீயாக ஒப்பந்தமிட்டிருக்க மாட்டாய்.” என்று நிச்சயமாகச் சொன்னாள்.

அதுவரை அமைதியாக இருந்த உவா, “முகிலன், நான் இன்பன் விசாரத்து இது இப்படிதானா என்று முடிவுகளைச் சொல்கிறேன். அதிலிருந்து விந்தியா கைப்பாவையாக்கப்பட்டாளா? என்று தெரிந்துவிடும்.” என்றாள்.

முகிலனும், சரி என்பது போல உவாவை பார்த்துத் தலையசைத்தான். பின் திரும்பி அவந்திகாவை பெருமையாகப் பார்த்து, ‘ஒரு நூலிழை அளவு செய்தியில் ஒரு முழு ஆடையையும் நெய்வதுவிட்டது போல, ஓரிரு வார்த்தைகளில் முழு நிகழ்வையும் கணித்துவிட்டாள் என் சிநேகிதி. வன்னி இன்னமும் மாறவில்லை.’ என்று நினைத்து இதழ் விரித்தான்.

அவந்திகா பேசியதுமே உண்மை உணர்ந்து மனம் லேசாக விந்தியா மகிழ்வில் கண்ணீர் விட்டாள். அவளையும் அறியாமல் அவந்திகாவை நோக்கித் தாவி அவளை அணைத்துக் கொண்டு, “நன்றி…ந…நன்றி…நன்றி…” என்று தேம்பியவிதமகா,

‘நன்றி என் குற்ற உணர்வைப் போக்கியதற்கு. நன்றி நான் மற்றவர்களுக்குத் தீங்கிழைப்பவளில்லை என்று எனக்கு உணர்த்தியதற்கு. எல்லாவற்றிற்கும் மேலாக என் மகனைக் காப்பாற்றியதற்கு ஒரு கோடி நன்றி.’ என்று மனதுள் நினைத்தாள்.

தன் மகளின் நிலையை உணர்ந்த வேதனும் அவரது மனைவியும் அவந்திகாவின் வார்த்தைகளில் மனம் நெகிழ்ந்து அவளை நன்றியுடன் பார்த்தனர். விதுனாவின் கன்னத்தில் கண்ணீர் கோடுகள் எப்போதோ காய்ந்து அவள் இதழ்கள் விந்தியாவின் செயலில் லேசாகப் புன்னகை பூசியது.

விந்தியாவின் அருகில் அமர்ந்திருந்த வினோதா அவள் பின்னே முதுகில் அரவணைப்பாகச் சாய்ந்துக் கொண்டு, “எனக்குத் தெரியும். என் அக்கா யாருக்கும் துன்பம் நிகழக் காரணமாக இருக்க மாட்டாள். என்று.” என்று மகழ்ச்சியில் தேம்பினாள்.

திடீரென்று தன்னை அணைத்ததில் அவந்திகாவிற்கு என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து அமர்ந்திருந்தாள். எதுவும் செய்யாமல் விந்தியாவின் நடுக்கம் குறைய காத்திருந்தாள். சில நிமிடங்கள் அங்கு விந்தியாவின் விசும்பும் சத்தமே கேட்டது.

பின் அதுவும் நின்று விந்தியா மெல்ல அவந்திகாவிலிருந்து விலகி, வினோதாவிடம் திரும்பி, “வினோ எப்படி இருக்க. உடம்புக்கு எதுவும் செய்கிறாதா? கண் விழித்ததும் இங்கு ஓடி வந்துவிட்டாய். கண் விழித்ததும், உடல் சோர்வாக இருக்கும் என்று அந்த அதித்ரீ சொல்லக் கேட்ட நினைவு.” என்று தங்கைக்கு அக்காவாக மாறி அக்கறையாக அவள் தலை வருடிக் கேட்டாள்.

வினோதா தன் அக்கா மீண்டு விட்டதை உணர்ந்து, பலீரென்று புன்னகைத்து, “நானா. எனக்கு ஒன்றுமில்லை அக்கா. நான், விதுகுட்டி கொடுத்த கஞ்சியை வயிறு முழுதும் நிரப்பிக் கொண்டுதான் உன்னைப் பார்க்க வந்தேன்.” என்று செல்லம் கொஞ்சினாள்.

அதனைக் கேட்ட வேதன் குடும்பத்தினர் கலகலவென்று சிரிக்க ஆரம்பித்தனர். விந்தியா கட்டிலின் அருகில் நின்றிருந்த விதுனாவை பார்த்து, “விதுக் குட்டி அக்காமீது கோபமா. உன்னை இந்த மூன்று மாதத்தில் நிறைய முறை திட்டிவிட்டேன். ஆனால் இரவில் அழுவேன். இருந்தும் என்னால் என்னைக் கட்டுபடுத்த முடியவில்லை.” என்று அவளை நோக்கிக் கை நீட்டினாள்.

விதுனா விந்தியாவின் அருகில் வந்து, “இல்லை விந்திக்கா. எனக்குத் தெரியாதா என் விந்தி அக்கவும் வினோ அக்காவும் தான் சிறந்தவர்கள்.” என்று கிளுக்கி சிரித்தாள். பின், “நீங்கச் சீக்கரம் பழையபடி ஆக வேண்டுமென்றுதான் நான் தினம் தினம் வேண்டி நின்றேன்.” என்றாள்.

விந்தியாவின் மனம் பூரித்து, “என்னை மன்னித்துவிடு விது. அப்பா, அம்மா, நீங்களும் என்னை மன்னித்துவிடுங்க. என் சொந்த பெற்றோர்களை விடவும், என்னைப் பாராட்டிச் சீராட்டி வளர்த்த நீங்களே என்றும் என் பெற்றோர்கள். உங்க மனம் நோகும்படி பேசிவிட்டேன்.” என்றாள்.

வேதனின் மனைவி தன் மகள் தன்னை சிற்றன்னை என்று அழைக்காமல் அம்மா என்று அழைத்ததிலே மனம் நெகிழ்ந்து, “என் தங்கமே.” என்று வினோதா விதுனாவோ, விந்தியாவையும் சேர்த்து ஒன்றாக அணைத்துக் கொண்டாள்.

வேதன் தன் மகள்கள் மீண்டும் ஒன்றாகி மகிழ்வுடன் இருப்பதை பார்த்து ஆனந்த கண்ணீர் உதிர்த்தார். முகிலன் வேதனிடம் திரும்பி, “நாம் கொஞ்சம் பேச வேண்டும் வேதன். நான் என் அறையில் காத்திருக்கிறேன்.” என்றுவிட்டு அந்த அறையிலிருந்து கிளம்பிவிட்டான்.

மதியும், உவாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அவந்திகாவிடம் ஒரு தலையசைப்புடன் கிளம்பிவிட்டனர். அவந்திகா ஒரு பெருமூச்சுடன் எழுந்து சென்று பௌதிகாவை விந்தியாவிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு வீடுச் செல்லப் பனித்தாள்.

அதன் பிறகு தன் அறைச் சென்று மெத்தையில் சாய்ந்த அவந்திகா, சில வினாடிகள் யோசனையிலிருந்து பின் அவளையும் அறியாமல் கண்ணயர்ந்தாள். அவள் கண்கள் மூடியதும், அங்குக் கருநிற முக்காடு உருவம் அவள் எதிரே உருவானது.

Author Note:

(1) மறந்திருந்தால், அத்தியாயம் 28ல். பார்க்கவும். தூய ஆன்மா (Ethereal Soul)வின் ஒரு பிரிவு உணர்வு(consciousness). தூய ஆன்மாவின் மூன்று பிரிவுகள் உயிர்ப்பு(Spirit), உணர்வு(consciousness) மற்றும் அறிவுக்கு(intelligence).

Chat Story -2

பவளநந்தன்: ‘Author நான் எங்க இந்த Episode -ல?’

Author: ‘Hero sir கதைக்கு இந்த இடத்துல நீங்க அவசியமில்ல. அதுதான் Add பண்ணல.’ (நீங்க இருந்தா இந்த Arc முடிய இன்னும் பத்து episode ஆகும் சாமி. Gab கிடச்சா அப்பாவி பொண்ணு அவந்திய ஏமாத்தி romance பண்ண ஆர்மபிச்சிட்றீங்க. எப்படியோ ஒரு வழியா உங்களைத் துரத்தி விட்டேன்.)

பவளநந்தன்: ‘அடுத்த episode-ல நான் வருவேனா?’ (Author-ன் உள் நோக்கம் அறியாத Hero sir. முகம் சோர்ந்து)

Author: ‘ம்ம் பாக்கலாம்.'(He He He. Evil Smile)  (last time chat story -ல என்ன கேள்வி கேட்டீனல்ல.)

பவளநந்தன்: ‘T_T’ (I miss my Princess.)