யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 41

859

அத்தியாயம் – 41

“என்னவென்று தெரியாமல் இப்படி நிகழ்ந்துவிட்டது அதனால்…” என்றவர் அதற்கு மேலும் பேச முடியாமல் அப்படியே நிறுத்தினார் வேதன்.

முகிலன், “வேதன். இந்தக் கடிதம் எழுதப்பட்ட கால நிலை மற்றும் எழுதியது விந்தியாதான் என்ற உண்மை நிலை உறுதி செய்யப்பட்டால், அவளது தண்டனையின் தீவிரத்தை குறைக்க முயற்சிக்கலாம்.

ஆனால் முழுதும் தண்டனையிலிருந்து விடுபடுவது கடினம்.” என்று சற்று நிறுத்தி, “விந்தியா எங்கே? அவளது வார்த்தைகளையும் ஒரு முறை கேட்டுவிட்டு நான் அதற்கேற்ப அறிக்கை(Report) தயார் செய்ய வேண்டும்.” என்று குரலில் எந்த நெழிவுக்கும் இடம்தராமல் சொன்னான்.

முகிலனின் பதிலில், மோசமான தண்டனைக்குப் பதிலாகத் தண்டனை குறைப்பு மேல் என்று பெருமூச்குவிட்டு, “நன்றி ரிஷிமுனி. விந்தியா இப்போது உறங்கிக் கொண்டிருக்கிறாள். நம் காலை உணவுக்குப் பிறகு அவளிடம் நாம் பேசலாம்.” என்றார் வேதன்.

அதற்குப் பதிலேதும் சொல்லாமல் தலையசைத்தான் முகிலன். சற்று நிறுத்தி, “வேதன், இந்தக் கடிதத்தில் இருப்பதை பார்த்துதான் என்னிடம் வினோதா அந்தத் தாமரை குளத்திலிருந்து மலர் கொண்டு வந்தாள் என்றும் அதனைக் கொண்டு வந்த அடுத்த நாளே நினைவிழந்தாள் என்றும் சொன்னீர்களா?” என்றான்.

வேதன், “ஆமாம். அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டதால்தான் என்னால் எளிதில் அந்தக் குளத்தின் அருகில் உங்களை அழைத்துச் செல்ல முடிந்தது. அதனாலே, நீங்கப் பகலிலே என் வீட்டிற்கு வந்தபிறகும், இரவுவரை காத்திருக்க வைத்துத் திடீரென்று நினைவு வந்ததுப் போல உங்களை நான் அங்கு நல்லிரவில் அழைத்துச் சென்றேன்.” என்று விளக்கம் தந்தார்.

முகிலன் நெற்றி சுருக்கி, “ஓ… எப்படி உயிர் உறிஞ்சும் சக்கரத்தை உண்டாக்கியவன் எளிதில் அது இருக்கும் இடத்தைப் பாதிக்கப்பட்ட பெண் மூலமாகவே உங்களிடம் சொல்ல விட்டிருப்பான். என்று அன்று யோசித்தேன். இப்போது புரிகிறது.” என்று சொன்னான்.

வேதன், “அப்போது முழுதும் உங்களிடம் உண்மையைச் சொல்லாததற்கு என்னை மன்னித்துவிடுங்க ரிஷிமுனி. அன்று என் மகள் விந்தியாவின் நிலை சரிவரத் தெரியவில்லை.

அதனால் இந்தத் தகவல் அவளிடமிருந்துதான் வந்தது என்று உங்களிடம் சொன்னால் அவளுக்கு ஏதேனும் பாதிப்பு வந்துவிடுமோ என்று தயங்கினேன். அதனால் வினோதா நினைவிழக்குமுன் அவள் சொன்னதாக உங்களிடம் மாற்றிச் சொன்னேன்.” என்று அவரது அன்றைய நிலைக்கான காரணத்தை எடுத்துச் சொன்னார்.

முகிலன் பெருமூச்சுவிட்டு, “ம்ம்… முடிந்ததை விடுங்க. கடிதத்தில் சொல்லப்பட்டதை அசட்டையாக நினைக்காமல் சிறிது உண்மையை மறைத்து என்ற போதும் தாமதிக்காமல் நீங்கச் செய்திருக்கீங்க.

அதனால்தான் உடனே அந்தத் தாமரை குளத்தை அறிந்தோம். அதனைத் தொடர்ந்து சில நல்லதும் நிகழ்ந்தது.” என்று அவந்திகாவை ஒருமுறை பார்த்துப் பின், “யாருக்கும் பாதிப்பு ஏற்படுமுன்னே அவர்களைக் காப்பாற்றிவிட்டோம்.” என்றான்.

வேதன், பெருமூச்சுவிட்டு ஆமாம் என்பது போலத் தலையசைத்தார். சில நிமிடங்கள் அங்கு அமைதி நிலவியது. பின், “ரிஷிமுனிகளே. இப்போது கொஞ்சம் ஓய்வெடுக்கிறீர்களா? நான் காலை உணவு தயாரானதும் சொல்லி அனுப்புகிறேன்.” என்று இருக்கையிலிருந்து எழுந்தார்.

அதுவரை அமைதியாக ஏதோ யோசனையிலிருந்த அவந்திகா அவருடன் எழுந்து, “சரிங்க ஐயா.” என்றவள் நந்தனை திரும்பி ஒருமுறை பார்த்து, பின் திரும்பி, “விந்தியா எழுந்ததும் நாம் மீண்டும் பேசலாம்.” என்றாள்.

வேதன், “சரிமா. ஆனால் என் வீட்டில் மூன்று அறைதான் இருக்கு. நீங்க ஐவரும் அறைகளைப் பகிர்ந்து கொள்கிறீர்களா? இல்லையென்றால் நான் பக்கத்து வீட்டு ஆளிடம் கேட்கட்டுமா?” என்றார்.

நந்தன் முன் வந்து, “எனக்கு அறை வேண்டாம். இளவரசி நான் சிறிது நேரம் கழித்து இங்கு வருகிறேன்.” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

மதி அவந்திகாவை திரும்பிப் பார்த்தாள். அவந்திகா, “மதி. நான் சிறிது உறங்க வேண்டும். அதனால் நீங்க உங்களுக்குள் இரு அறைகளைப் பகிர்ந்துக் கொள்ளுங்க. என்னைக் கொஞ்ச நேரத்திற்கு தொந்தரவு செய்ய வேண்டாம்.” என்றுவிட்டு அவளும் நந்தன் பின் தொடர்ந்தாள்.

மதியும் முகிலனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின் மதி உவாவிடம் திரும்பி, “உவா, நாம் போகலாம்.” என்றாள். உவாவும் முகிலனை திரும்பி ஒருமுறை பார்த்துவிட்டு மதியுடன் நடந்தாள்.

அவந்திகா தன் அறைச் சென்று கதவை அடைத்து அங்கிருந்த மெத்தையின் மீது அமர்ந்து கைகளை ஒன்றாகக் கோர்த்து நெற்றியில் வைத்து எதையோ யோசித்தவிதமாகக் கண்கள் மூடி, நந்தன் வருவதற்காகக் காத்திருந்தாள்.

அதிக நேரம் காத்திராமல் நந்தன் மின்னும் துகள்களாக அவள் அறையில் தோன்றி, “இளவரசி.” என்று விளித்தான்.

உடனே கண் விழித்த அவந்திகா, “நந்தன்.” என்று எழுந்து நின்றாள். பின் தன் ஒரு கைவிரலை நீட்டி அவர்களைச் சுற்றி ஒலி தடுக்கும் சக்கரம் வரைந்து, “அ…அந்த முக்காடு மனிதன்தான் விந்தியாவின் மனம் திடீரென்று மாறக் காரணமாக இருந்திருப்பான் என்று தோன்றுகிறது.” என்றாள் லேசான நடுக்கம் குரலில் தோன்ற.

நந்தன் அதற்கு ஆமாம் என்பது போலத் தலையசைத்து, “அவன் நீங்கப் பூமியிலிருந்து இங்கு வருவதை அறிந்து, அதன் பிறகு உங்களை இதில் ஈடுபட வைக்க வேண்டுமென்றே இந்த நிகழ்வு நீங்க வரும் தினத்தில் நடுக்குமாறு ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

ஒருவேளை நீங்க இங்கு வரவில்லையென்றால், இந்த ஊர் மக்கள் என்ன காராணமென்றே தெரியாமல் தன் பெண்கள் ஏதோ தீடீர் நோயால் முடமானதாகவே எண்ணியிருப்பர். யாருக்கும் சந்தேகமே வந்திருக்காது.” என்றான்.

அவந்திகா நந்தனை நிமிர்ந்து பார்த்து, “நந்தன், எ… எனக்கு… அ… அவன்… அவனை…” என்று முழுதும் சொல்ல முடியாமல் எச்சில் விழுங்கினாள்.

அவள் தயக்கம் உணர்ந்த நந்தன், “இளவரசி.” என்று அவள் இருக்கைகளையும் அவனது இரு உள்ளங்கைகளுள் வைத்து ஒருமுறை அழுத்தி எடுத்தான்.

அவந்திகா, ‘எனக்கு முன்பு போல என்னால் மற்றவர்களுக்கு ஏதேனும் நிகழ்ந்துவிடுமோ என்று பயமாக இருக்கு.’ என்று நினைத்து அவன் விழிகளைப் பார்த்தாள். ஆனால் எதுவும் பேசினாள் இல்லை.

அவளது விழிகள் நிகழ்வில் இல்லாமல் எதையோ யோசிப்பதை உணர்ந்து, அவள் கைப்பற்றி அழைத்துச் சென்று அவளை மெத்தை மீது அமர வைத்து அவனும் உடன் அமர்ந்து,

“உங்களுக்கு என்னிடம் நேரடையாகச் சொல்ல முடியவில்லையென்றால், கனவுச் சக்கரம் மூலமாக உங்களின் கடந்த காலத்தை நீங்கச் சொல்லலாம். ஆனால் இப்படி நீங்கத் துன்பப் படக் கூடாது. நீங்கச் சொல்லவில்லையென்றாலும், நான் எப்படியும் உண்மையைக்கூடிய விரைவில் அறிந்துவிடுவேன்.

இந்த முக்காடு மனிதன் பற்றி எனக்கு முன்பே தெரியவில்லை. தெரிந்திருந்தால் நீங்க அவந்திகாவாகப் பிறக்கும் முன்னே அவனைப் பழிதீர்த்திருப்பேன்,” என்று கண்ணில் மின்னல் வெட்டப் பற்களைக் கடித்த வண்ணம் எங்கோ பார்த்துச் சொன்னான்.

அவன் முகத்தையே பார்த்திருந்த அவந்திகா எப்போதும் நிதானமாகப் பேசும் நந்தனின் இந்தச் சிறுப்பிள்ளை போன்ற வீராப்பான பேச்சு அவளது இதழை விரிக்கச் செய்தது. கூடவே அவன் கேசத்தை தடவி, ‘பழி தீர்ப்பெல்லாம் வேண்டாம். நீ இப்போது போல் என்னிடம் எப்போதும் இருந்தால் போதும்.’ என்று சொல்லவேண்டுமென்ற உந்துதலை அவளுள் ஏற்படுத்தியது.

அதனைச் செய்யத் துடித்துடித்த கைகளையும் உதடுகளையும் கட்டுபடுத்தி, முகத்தை வேறுபுரம் திருப்பி, “நான் உங்களுக்கு என்ன செய்தேன் என்று என்மீது உங்களுக்கு இவ்வளவு அக்கறையென்று எனக்குத் தெரியவில்லை.” என்றாள்.

அவந்திகாவின் மனமாற்றத்தை உணர்ந்த நந்தன் சின்ன சிரிப்பை உதிர்த்தான். ஆனால் அதுகுறித்து எதுவும் சொல்லவில்லை.

அவந்திகா அவன் சிரிப்பில் மீண்டும் அவன் முகத்தை நோக்கித் திரும்பி, “என் தோழி பாவனா எப்படி இருக்கிறாள். என்ன காரணத்திற்காக அவளை மேகன் கடத்திச் சென்றான் என்று ஏதேனும் தெரிந்ததா?” என்றாள்.

நந்தன், “மேகன் உங்க தோழியை அழைத்துக் கொண்டு மகர அரசுக்குச் சென்றுக் கொண்டிருக்கிறான்.” என்றவன் கண் மூடிக் கவனிக்கும் சக்கரத்தின் மூலம் பாவனாவின் நிலை அறிந்து,

“இப்போது அவர்கள் ஒரு சத்திரத்தில் இருக்கின்றனர். இன்று இரவுக்குள் பரி அரசுக்குச் சென்றுவிடுவர். முன்பு நாம் பேசியது போல ஏதோ மகர அரசின் பிரச்சனை சரி செய்யவே இவர்கள் உங்களைத் தேடி பூமிக்கு வந்திருக்கின்றனர்.

ஆனால் அது என்ன பிரச்சனையென்று மேகனுக்குமே தெரியவில்லை. பார்க்கும்போது உங்க தோழி நலமுடன் இருக்கிறாள். லேசான சோகம் மனதில் இருப்பது போல இருக்கிறது. இருந்தும் அவளுக்கு மேகனால் எந்தத் துன்பமும் நேரவில்லை.” என்றான்.

அவந்திகா நந்தனின் வார்த்தையில் தன் முகவாயில் கையை வைத்து, “யாளி உலகில் உள்ளவர்களால் தீர்க்க முடியாத எந்தப் பிரச்சனை என்னால் மட்டும் தீர்க்க முடியுமென்று என்னைத் தேடி வேறு உலகம்வரை வந்தனர்.” என்று குழம்பினாள்.

அதற்கு நந்தன் பதிலேதும் சொல்லவில்லை. ஆனால் அவன் பதில் அறிந்தவன் போலவும், அதனை வெளிப்படையாக அவந்திகாவிற்கு சொல்ல விரும்பாதவன் போலவும், பேச்சை மாற்றிக் கார்த்திக்கை பற்றிப் பேசினான்.

இளவரசி, “உங்க தோழர் கார்திக்கின் இடம்குறித்து தகவல் இருக்கு. அவன் மாதங்க அரசில் ஒரு பெண் மாதங்க யாளியால் காப்பாற்றப்பட்டு அவள் பாதுகாப்பில் இருக்கிறான். அந்தப் பெண் வேறு யாருமில்லை. இங்கு வந்திருக்கும் உவாதான்.

இன்பனை கைப்பாவை சக்கரத்தின் மூலமாக நேற்றைய முந்தினம் நாம் அறிந்ததும், மாதங்க அரசு முழுதுமாக என் ஒற்றர்களால் சந்தேகம் தரும்படி யாரேனும் இருக்கிறார்களா என்று ஆராய்ந்தேன். அப்போது உங்க தோழர், இந்த மாதங்க அரசின் இளவரசியான உவாவின் அரண்மனையில் இருந்தது தெரியவந்தது.” என்றான்.

அதனைக் கேட்ட அவந்திகா முகத்தில் புன்னகையுடன், “கார்திக் நலமுடன் இருக்கிறாரா? நான் மிகவும் பயந்துவிட்டேன். நல்ல வேளை.” என்றவள் சற்று நிறுத்தி, “உவா இளவரசியா?” என்று கேட்டாள்.

அதற்கு ஆமாம் என்று தலையசைத்த நந்தன், “உவா தற்போதைய மன்னரின் மகள். ஆனால் அவளது தோற்றமும் அவளது இளவரசி பட்டமும் இன்னமும் உலகுக்கு பிரகடனபடுத்தப் படவில்லை. அதனால் மன்னருக்கு மிகவும் நெருங்கிய உறவுகளைத் தவிர மற்றவர்களுக்கு உவாவின் உண்மை தகுதி தெரியாது.” என்றான்.

அவந்திகா, “ஓ…” என்று தலையசைத்து, “உவாவிற்கு என்ன எலும்பு வயது?” என்று கேட்டாள்.

நந்தன், “குறைந்தது 200 வருடமாவது இருக்கும். ஆனால் அவளது சக்கர நிலை வளர்ச்சி சிறுவயதில் ஏற்பட்ட விபத்தால் தடைப்பட்டிருகிறது. அதனால்தான், இவ்வளவு வருடத்தில் இரண்டு சக்கர நிலையை மட்டுமே அடைய முடிந்திருக்கிறது. ஆனால் அனுபவ அறிவு அதிகம்.” என்றான்.

அவந்திகா, “ம்ம்…எனக்கும் அவள் வயது சிறியதல்ல என்று பார்க்கும் போதே புரிந்தது. என்னால் முடிந்தால் அவள் உடல் நிலையின் குறையை அறிந்து அவளுக்கு உதவ முயற்சிக்கிறேன். “ என்றாள்.

நந்தன் சின்ன சிரிப்பை உதிர்த்து, “இளவரசிக்கு எது மகிழ்ச்சியோ, அதைச் செய்யுங்க.” என்றான்.

அவந்திகாவின் இதழ் நந்தனின் வார்த்தைகளில் மேலும் விரிந்தது. பின் அவன் கையிலிருந்து தன் கைகளை விலக்கி எழுந்துச் சென்று அந்த அறையின் டீபாய் மீதிருந்த தண்ணீரை எடுத்துக் கிண்ணத்தில் ஊற்றி அதனை அருந்தினாள்.

நந்தன் அவள் தண்ணீர் அருந்தும்போது அசைந்தாடும் குரல் வளையையும் (Adam’s apple) அவள் ஈரம் பனித்த இதழையும் இமைக்க மறந்து பார்த்தான். தண்ணீர் அருந்திவிட்டு கிண்ணத்தை வைத்த அவந்திகா நந்தனின் இமைக்க மறந்த பார்வையின் காரணம் புரியாமல், “தண்ணீர் வேண்டுமா?” என்று கேட்டாள்.

அவந்திகா கேட்ட பிறகே நந்தன் அவனது விழிகளை அவளது இதழிலிருந்து மீட்டு அவள் விழிகளைப் பார்த்து, “நான் எடுத்துக் கொள்கிறேன் இளவரசி.” என்று எழுந்து வந்து அவந்திகா வைத்த அதே கிண்ணத்தில் நீரை ஊற்றி அருந்த ஆரம்பித்தான்.(1)

அவனது செயலில் அவந்திகா ஒரு நொடி திகைத்தாள். ‘வேறு கிண்ணம் இருக்க நந்தன் ஏன் தான் இதழ் பதித்து குடித்த கிண்ணத்தில் நீர் அருந்துகிறான்.’ என்று நினைத்து லேசாக முகம் சிவந்தாள். அதனைக் கவனிக்காதவள் போலக் கையை முஷ்டியாக்கி தன் உதடருகில் வைத்து, “கவ்…கவ்…” என்று இருமுறை இரும்பி திரும்பிச் சென்று மெத்தை மீது அமர்ந்தாள்.

கவனத்தை திசை திருப்புபவள் போல, “நந்தன். என் தோழர்களை இன்று காலைப் போல் உங்கள் கவனிக்கும் சக்கர்த்தை என்னுடன் இணைத்து என்னால் இங்கிருந்து பார்க்க முடியுமா?” என்று கேட்டாள்.

தண்ணீர் அருந்திவிட்டு தன் கையின் பின்னால் தன் உதடுகளைத் துடைத்த விதமாக, “ம்ம்…முடியும் இளவரசி. இப்போது பார்க்கிறீர்களா? முதலில் யாரை பார்க்க வேண்டும், பாவனாவையா? அல்லது கார்திக்கையா?” என்று கேட்டான்.

அவந்திகா ஆர்வமாக அவனைப் பார்த்து, “ம்ம்…இப்போது பார்க்க முடியுமென்றால் பார்க்கலாம். முதலில் பவியை பார்க்க வேண்டும்.” என்றாள்.

நந்தன் அவள் அருகில் வந்து அமர்ந்து அவளது நெற்றியோடு நெற்றி வைத்து, அவளது இருக்கைகளையும் தன் கைகளுள் பற்றி, “இன்னும் சில நிமிடங்களில் உங்களை அழைத்துச் செல்ல ஆள் இங்கு வருவார்கள். அதற்குள் ஒருவரைதான் பார்க்க முடியும்.

அதனால் பாவனாவை மட்டும் இப்போது பாருங்க. கார்த்திக்கை பிறகு பார்க்கலாம்.” என்றான். அப்படி பேசும்போது அவனது மூச்சுகாற்று அவளது உதடுகளில் பட்டு அவளுக்கு அக்குளிப்பையும் நாணத்தையும் உண்டாக்கியது.

ஒரு நொடி, மூச்சை நிறுத்தி, பிறகு, “ம்ம்… சரி…” என்று கண்களை மூடினாள். ஏற்கனவே இரண்டு, மூன்றுமுறை நந்தனின் கவனிக்கும் சக்கரத்தில் ஒன்றாக அவந்திகா இருந்த போதும் இம்முறை ஏதோ பேதமாக அவளுக்குத் தோன்றியது. அவளுள் இனம்புரியாத படப்படப்பு உண்டாவதை அவளால் தடுக்கமுடியவில்லை.

அவள் மனம் நந்தன் கவனிக்கும் சக்கரத்தை உருவாக்குவதற்காகக் கண்கள் மூடிக் காத்திருக்க, அவளது இதழ்மீது ஏதோ சூடாகப் படுவது உணர்ந்து பாவனாவை பார்க்கும் முன்னே கண் விழித்தாள்.

விழித்தவள் நந்தனின் வலது கையின் கட்டைவிரல் அவள் இதழில் அழுந்த எதையோ துடைப்பது பார்த்து விக்கித்து உடனே கொடியை அவள் கையிலிருந்து விரட்டி அவனது கை மணிகட்டை பற்றி அவளிலிருந்து விலக்கி நிறுத்தி, அவளும் விலகி அமர்ந்து, “ந…நந்தன்?” என்று புரியாமல் கேள்வியாகப் பார்த்தாள்.

ஏற்கனவே முன்பு ஏற்பட்ட நாணத்தை கட்டுபடுத்தியிருந்தவள், இப்போது இவனது இந்தச் செயலில் இன்னும் முகம் சிவந்து உதடை அழுந்த மூடி அவனைப் பார்த்து முறைப்பது போலப் பார்த்தாள். இருந்தும் முழுமையாக அவன்மீது அவளால் கோபம் கொள்ள முடியவில்லை.

அவளுள் பல கேள்விகள் ஓட, அவள் இதயம் தென்றலை காற்றை போல அலைந்துக் கொண்டிருக்க, அவனது செயல் காரணம் புரியாமல் கண் இமைகளைப் பலமுறை மூடித்திறந்து அவனைப் பார்த்தாள். அவளது கொடி இன்னமும் நந்தனது கையினை பற்றியிருந்தது. அவனது விழிகள் சில நொடிகள் எதுவும் பேசாமல் அவந்திகாவின் விழிகளைப் பார்த்திருந்தது.

எதுவும் பேசாமல் சிலைபோல நின்றிருக்கும் நந்தனை பார்த்து ஒரு புருவம் உயர்த்தி, “ம்ம்?” என்று மீண்டும் கேட்டாள் அவந்திகா.

இப்படி கையும் களவுமாக மாட்டிக் கொண்டோம் என்ற சங்கூச்சம் சிறிதும் இல்லாமல் சின்ன சிரிப்பை உதிர்த்து, “இளவரசி உங்க உதடில் நீர் அருந்தியப்பின் அதிகமாக நீர் இருந்தது. அதனைத் துடைத்தேன். அவ்வளவே.” என்று இயல்பாகவும் தான் செய்ததில் தவறேதும் இல்லை என்பது போலவும் சொன்னான்.

இதனைக் கேட்ட அவந்திகா வாயடைத்து போனாள். ‘நான் என்ன என் தேவைகளைக் கூட அடுத்தவர்கள் உதவும் பழைய இளவரசியை போலவா இருக்கிறேன். நீர் இருந்தால் காற்றில் காய்ந்துவிட போகிறது. அதனை ஒருவர் துடைத்து வேறு விட வேண்டுமா?

நந்தன் உண்மையில் வேறு எதுவும் எண்ணி என் இதழ்களைத் தொடவில்லையா?’ என்று முன்பு அவள் உணர்ந்தது வெறும் பிரமையோ என்று அவனது வார்த்தைகள் அவளுள் தோன்ற செய்துவிட்டது.

அவள் இவ்வாறு மனதுள் பலதும் யோசித்துக் கொண்டிருக்க, அவளது அறை கதவு தட்டப்பட்டது. உடனே நினைவுக்கு வந்து, நந்தனை திரும்பிப்பார்த்தாள். கொடி அவனது கையினை விடுவித்தது. நந்தன் மெதுவாக இதழ் விரித்தான். பின் காற்றாக மாறி மறைந்து போனான்.

அதன் பின் அவந்திகாவும் மற்றவர்களும் காலை உணவுண்ட பின், விந்தியாவின் அறைக்குச் சென்றனர். அதன்பிறகும் கூட நந்தன் அங்கு வரவில்லை. விந்தியா கண் விழித்து மெத்தையில் குத்துகாலிட்டு தன் முட்டியில் முகம் புதைத்து அமர்ந்திருந்தாள்.

அவள் அருகில் வேதனின் மனைவி ஒருபுரம் அமர்ந்து அவளுக்கு மாம்பழத்தை நறுக்கிக் கொண்டிருந்தார். மறுப்புரம் முன்பு கண் விழித்த வினோதா அமர்ந்து விந்தியாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். விதுனா, தன் இரு அக்காக்களையும் பார்த்தவிதம், மெத்தையின் அருகில் நின்றிருந்தாள்.

வேதன் அவந்திகா, முகிலன், மதி, உவா என்று நால்வரையும் அழைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார். அவர்களைப் பார்த்ததும், மெத்தையிலிருந்து எழ முயன்ற இருவரையும் கையமர்த்திய அவந்திகா, “என்ன நிகழ்ந்தது விந்தியா.?” என்று கேட்டாள்.

வேதனும், விதுனாவும், அனைவரும் அமர, நாற்காலிகளை எடுத்து வந்து அமரசெய்தனர். அவந்திகாவின் கேள்வியில் நிமிர்ந்து பார்த்த விந்தியா, “நான் எது சொல்லவும் தயாரில்லை. எனக்கு என்ன தண்டனை தர வேண்டுமோ தாராளமாகத் தாங்க. என் கணவர் இல்லாத உலகில் எனக்கு வாழ விருப்பமில்லை.” என்றாள்.

இதனைக் கேட்ட, வேதனின் குடும்பத்தினர் ஆடிப் போயினர். வேதன் பெரும்பாடுபட்டு முகிலனிடம் தாண்டனை குறைப்பு குறித்து பேசி வைத்திருந்தார். ஆனால் விந்தியாவின் பேச்சு அவருக்குக் குளிர்பரப்பியது.

அவளது பதிலில் மதி, “இப்படி உன் கணவனை நேசிக்கும் நீ, எப்படி உன் திட்டத்தை வெளிப்படுத்தக் கடிதம் எழுதி, ஒன்பது பெண்களையும் காப்பாற்றினாய்?” என்றாள்.

மதியின் நேரடிக் கேள்வியில் திரும்பி வேதனை பார்த்து, “அ…அது…” என்று சொல்ல முடியாமல் திக்கி தினறினாள் விந்தியா.

அதற்குள், அவந்திகா, கொடியைக் கொண்டு மீண்டும் குத்தூசி முறையில் அவளை உறங்க வைத்தாள். பின் வேதனிடம் திரும்பி, “ஐயா… உங்க பெண்ணின் கனவுசக்கரம் மூலமாக அவளுள் 4 மாதமாக நடந்த நிகழ்வுகளைக் காண உங்க அனுமதி வேண்டும்.

அவள் அனுமதி இல்லாமல் அவள் ஆள்மனம் வரை போக வேண்டும் என்பதால் அவளுக்கு வலி ஏற்படலாம். அவள் உண்மையைச் சொல்லத் தயாராக இல்லாததால், வேறு வழியுமில்லை.” என்று அனுமதி கேட்டாள்.

விந்தியாவின் முந்தைய பதிலில் ஆடிப் போயிருந்த வேதன் மறு பேச்சு பேசாமல் சரி என்பது போல் தலையசைத்தார். அவர் தலையசைத்ததும், “அம்மா, நான் அங்கு அமர வேண்டும். கொஞ்ச நேரம் இங்கு அமர்கிறீர்களா?” என்று கேட்டாள்.

வேதனின் மனைவியும் சரி என்பது போல் தலையசைத்து, கையிலிருந்த பழத்தட்டை அருகிலிருந்த டீபாய் மீது வைத்துவிட்டு எழுந்து வந்து வேதன் அருகில் நின்றாள்.

பின் மெத்தையில் சமனமிட்டு அமர்ந்த அவந்திகா, கண்கள மூடிக் கனவுச் சக்கரம் உருவாக்க ஆயுதம் ஆனாள். அப்போது, “அவந்திகா. விந்தி அக்காவிடம் நான் ஒருமுறை பேசுகிறேன்.” என்று வினோதா கேட்டாள். அவளைத் திரும்பிப் பார்த்த அவந்திகா சில வினாடி அவள் கண்களைப் பார்த்தாள்.

பின் சரி என்பது போலத் தலையசைத்து, விந்தியாவின் குத்தூசியை எடுத்தாள். விந்தியா கண் விழித்தாள்.

Author Note:

(1) திருட்டு பூனை Hero sir. வேறு கிண்ணம் இருக்கிறதுதானே?