யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 40

742

அத்தியாயம் – 40

முகிலன் எரிச்சலுற்று, “மதி… நீ…நீ…” என்று பற்களைக் கடித்தான். உவா அவர்களின் பேச்சைக் கேட்டுச் சுவாரசியமான கண்களுடன் பார்த்துக் கிளுக்கி சிரித்தாள்.

பின் சிரிப்புடனே, “நீங்க இருவரும் வெவ்வேறு யாளிகளாக இருந்த போதும், நெருங்கிய சிநேகிதர்கள் போல ஊடல் செய்துகிறீங்க. எனக்கும் கூட உங்களைப் போலச் சிநேகமுடன் ஒரு தோழன் வேண்டும். வேறு யாளியாக இருந்தாலும் பரவாயில்லை.” என்றாள் உவா.

அதனைக் கேட்ட மதியும் முகிலனும் ஒரு சேர உவாவை பார்த்து முறைத்து, “யார் நெருங்கிய சிநேகிதர்கள்.” என்று கத்தி, “இவளா?” என்று முகிலனும், “இவனா?” என்று மதியும் சொல்லிவிட்டு மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, “வாய்ப்பேயில்லை.” என்று ஒரு சேர சொல்லிக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் முதுகை காட்டிக் கொண்டு நின்றனர்.

‘என்ன நிகழ்ந்தது என்று இவர்கள் இருவரும் இப்படி முகம் திருப்பிக் கொண்டு நிற்கின்றனர்.’ என்று புரியாமல் குழப்பமாக இருவரையும் மாறி மாறி வியப்புடன் பார்த்தாள் உவா. ஆனால் எதுவும் பேசினாள் இல்லை.

அவந்திகா இவர்களை மாற்ற முடியாது என்பது போல மறுப்பாகத் தலையசைத்து அவர்கள் இருவரையும் விடுத்து அங்கிருந்த புல் தரையில் உறங்கிக் கொண்டிருந்த விந்தியாவை நோக்கிச் சென்றாள்.

உவாவுடன் வந்த வேதன் அந்தக் குளத்தின் அருகில் வந்ததுமே மற்றது மறந்து தரையில் விழுந்திருந்த தன் அண்ணன் மகளைப் பார்த்துப் பயந்து அங்கே ஓடிச் சென்று அவளைத் தன் மடியில் கிடத்தி அவள் கன்னம் தட்டி, “விந்தி குட்டி, விந்தி குட்டி. என்ன ஆனதுமா. கண் விழித்திடு.” என்று பதட்டமுடன் அவளை எழுப்ப முயன்றார்.

வேதனின் அருகில் வந்துவிட்டிருந்த அவந்திகா, அவரது பதட்டத்தை உணர்ந்து, “ஐயா. கவலை வேண்டாம். அவள் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறாள். அவளுக்கு எதுவுமில்லை.” என்றாள்.

அவந்திகாவின் குரல் கேட்டு நிமிர்ந்த வேதன் அவளது பதிலில் நிம்மதி பெருமூச்சுவிட்டு, “அதுதான் இல்லையா? நான் மிகவும் பயந்துவிட்டேனம்மா.” என்றவர் தன் மகளின் முகத்தை மறைத்துக் கொண்டு கலைந்திருந்த கேசத்தை லேசாக விலக்கிக் கனிவாக அவளைப் பார்த்தார்.

பின் அவருக்குள் முனுமுனுப்பவர் போல, “15 நாட்களுக்கு முன் என் பெண் விந்தியாதான் பரியாளி அரசுக்குத் தகவல் தரச் சொல்லி என்னிடம் சொன்னாள். நான் தான் இந்த ஊரின் நிலைகுறித்து உங்களுக்குத் தகவல் அனுப்பினேன்.” என்றார் கண்ணில் வெறுமையுடன்.

அதுவரை அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த முகிலனும் மதியும் திரும்பி வேதனை பார்த்தனர். உவாவும் என்னவென்று புரியவில்லையென்ற போதும் அவர்களைத் தொடர்ந்து அங்கு வந்து நின்றாள்.

முகிலன் வேதன் அருகில் வந்து, “என்ன சொல்றீங்க வேதன். விந்தியாதான் எங்களுக்கு இந்த ஊரின் நிலைகுறித்து தகவல் சொல்லச் சொன்னாளா?” என்றான்.

அதற்கு ஆமாம் என்பது போலத் தலையசைத்தவர், “ரிஷிமுனிகளே என் வீட்டுக்குச் சென்று மற்றது சொல்கிறேன். என் பெண் நீரில் நனைந்து அப்படியே உறங்கிவிட்டிருக்கிறாள். அவளுக்குக் காய்ச்சல் வந்துவிடும்.” என்றவர் மற்றவர்களின் சம்மந்தம் வருமுன்னே விந்தியாவை கையில் தூக்கிக் கொண்டு எழுந்து வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

முகிலனும் மதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவந்திகா ஏற்கனவே விந்தியாதான் தகவல் அனுப்ப காரணமென்று யூகித்திருந்த போதும், திடீரென்று விந்தியா மனமாறி இந்த ஊரின் நிகழ்வுகளை பரிஅரசுக்கு தெரிய படுத்தியதன் காரணம் புரியாமல் வேதனை பார்த்தாள்.

பின் மதி, முகிலன் உவாவை திரும்பிப் பார்த்த அவந்திகா, “முகிலன் நீங்க மூவரும் முதலில் இன்பன், அதித்ரீயை கைதுச் செய்யப் போங்க. நான் நீங்க வரும் வரை வேதனின் இல்லத்தில் காத்திருருக்கிறேன்.” என்றாள்.

முகிலன், “சரி அவந்தி. எதற்கும் நீ எச்சரிக்கையாய் இரு. பவளன் நாங்க சொன்னது நினைவிருக்கட்டும். நாங்க வரும் வரை தூர இருந்து அவந்தியை பத்திரமாகப் பார்த்துக்கொள்.” என்று பறக்கத் தயாராகி வெள்ளை நிற பறக்கும் சக்கரத்தை உருவாக்கினான்.

நந்தன், முகிலன் சொன்னதை மட்டுமல்ல, முன்பு மற்றவர்கள் பேசிக்கொண்ட எதையுமே பொருட்படுத்துவதாக இல்லை. அவந்திகா முன்பு முகம் சோர்ந்து, ‘தன்னாலும் முகிலன் மதியுடன் குற்றம் செய்தவர்களைச் சிறைபிடிக்க செல்ல முடியவில்லையே!’ என்று முகம் சோர்ந்ததிலிருந்து அவளது முகத்தைத் தாண்டி அவனது விழிகள் வேறு எதையும் பார்க்கவில்லை.

சில அதிருப்தி நந்தன் மீது முகிலனுக்கு இருந்த போதும், அவன் அவந்திகா மீது வைத்திருக்கும் அக்கறை உண்மையானது என்று மதி முகிலன் இருவரும் உணர்ந்திருந்தனர். அதனால் முகிலன் நந்தனின் அலட்சியத்தை பெரிதாக நினைக்கவில்லை.

மதியும் ஒரு தலையசைப்புடன் தங்க நிறத்தில் பறக்கும் சக்கரத்தை உருவாக்கிக் கொண்டு வானில் உயர்ந்தாள். அவந்தி என்று முகிலன் உடனிருந்த மனித யாளி பெண்ணை அழைத்ததில் உவா ஒரு நொடி திகைத்து அவந்திகாவை பார்த்தாள்.

ஆனால் எதுவும் பேசாமல் சாம்பல் நிறத்தில் பறக்கும் சக்கரத்தை உருவாக்கி மதி முகிலனை தொடர்ந்தாள். இருந்தும் மற்றொரு முறை அவந்திகாவை திரும்பிப் பார்த்தாள். மனதில் லேசான குழப்புடன், ஏற்கனவே சற்று தூரம் சென்றுவிட்டிருந்த மதியை அடைந்துவிட எண்ணி தன் வேகத்தைத் துரித படுத்தினாள்.

அவந்திகா அவர்கள் செல்வதையே ஒரு நொடி பார்த்தவள், ஏற்கனவே சற்று தொலைவுவரை நடந்துவிட்டிருந்த வேதன் மற்றும் விந்தியாவை நோக்கி விரைந்து சென்றாள். நந்தனும் அவந்திகாவினை பார்த்தவிதமாக மெதுவாக அவளைத் தொடர்ந்தான்.

அவர்கள் வேதன் வீட்டை அடைவதற்குள் பொழுது விடிந்து மக்கள் நடமாட்டம் வர ஆரம்பித்திருந்தது. சிலர் கையில் விந்தியாவுடன் வேதன் நடந்து வருவதை பார்த்துக் கூட்டம் கூடி அவர்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர்.

வேதனின் வீட்டின் முன் ஏற்கனவே அந்த எட்டு பெண்களின் பெற்றோர்களும் கூட்டம் கூடிவிட்டிருந்தனர். இருந்தும் வேதனுடன் அவந்திகாவும், அப்போது மாதங்கயாளியாக இருந்த நந்தனும் வருவதைப் பார்த்துத் தயங்கிவேதனிடம் எதுவும் கேட்கவில்லை.

ஆனால் அவர்களுக்குள், “உண்மையிலே இந்தப் பெண்தானா சூனியாகார வேலைச் செய்தது.?” என்று ஒருவரும், “இருக்கும் இடம் தெரியாமல் அமைதியான குணமான பெண் என்று பார்த்தால் எல்லாம் வெளி வேடம்போல,” என்று மற்றொருவரும்,

“ஒன்பது பெண்களை முடமாக்கிவிட்டு அப்படி என்னத்தை பெற்று மகிழ்வுடன் இவள் வாழப் போகிறாளாம்?” என்று இன்னொருவரும், “ஊர் தலைவராக இருந்துக்கொண்டு எப்படிப்பட்ட பெண்ணை வளர்த்து வைத்திருக்கிறார் பார்?” என்று மாற்றி மாற்றி அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.

ஆனால் அவர்களின் எந்த வார்த்தைகளும் வேதனின் வேக நடையை பாதிக்கவில்லை போல.யார் சொல்வதும் காதில் விழாதவர் போல விந்தியாவை கையில் ஏந்திக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்.

தன் மகள் வினோதா கண் விழித்ததிலே என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை உணர்ந்த வேதனின் மனைவி, விந்தியாவை எதிர் நோக்கி வீட்டின் வாசலில் ஒரு கண்ணும், வீட்டினுள் கண் விழித்துவிட்ட தன் மற்றொரு மகள்மீது மற்றொரு கண்ணுமாகத் தவித்துக் கொண்டு தாழ்வாரத்திற்கும், வினோதாவின் அறைக்கும் நடந்துக் கொண்டிருந்தாள்.

வினோதா கண் விழித்துவிட்டிருந்த போதும், சக்தியற்று அவளது அறையில் மிகவும் சோர்வாகக் கட்டிலில் படுத்திருந்தாள். விதுனா, காய்ச்சிய கஞ்சியை கொஞ்சம் கொஞ்சமாக வினோதாவிற்கு ஊட்டிக்கொண்டிருந்தாள்.

மற்றொரு அறையில் புவனாவும், பௌதிகாவும், கையில் குழந்தையுடன் அமர்ந்து அவர்களுக்குள் அன்று நிகழ்ந்த நிகழ்களை பேசிக் கொண்டிருந்தனர். புவனாவின் மடியில் அந்தக் குழந்தைஉறங்கிக்கொண்டிருந்தான்.

வேதன் வீட்டிற்குள் வந்ததும், அவர்கள் வீட்டின் முற்றத்தில் கூடியிருந்த கூட்டம் சலசலக்க, அந்தச் சத்ததில், வேதனின் மனைவி வேகமாக வெளியில் ஓடி வந்தாள். வந்தவள், வாடிய வாழை இலைபோல வேதனின் கையில் கிடந்த விந்தியாவை பார்த்துப் பயந்துவிட்டாள்.

வேதனின் அருகில் வந்து விந்தியாவின் கைப்பற்றி, “எ…என்னஆச்சு. என் விந்தி குட்டிக்கு என்ன ஆச்சு.” என்று பதறினாள்.

வேதன் பதில் சொல்லும்முன்னே, “ஏன் எல்லா கஷ்டங்களும் இவளுக்கே வருகிறது? நான் என்ன செய்வேன்.? எப்போதும் எளிதில் உடைந்து போய்விடக் கூடியவள் என்று நான் பெற்ற பிள்ளைகளுக்கும் மேலாகச் செல்லம் பாராட்டி வளர்த்தேனே.

இப்படி துவண்டு கிடக்கிறாளே. நான் என்ன செய்வேன்?” என்று அவளையும் அறியாமல் சொல்லித் தேம்ப ஆரம்பித்திருந்தாள் வேதனின் மனைவி.

“கவலை படாதேமா. அவள் உறங்கிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஆடை மாற்றி அவள் கூந்தலை உலர்த்து. நான் ரிஷிமுனிகளிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு வருக்கிறேன்.” என்றவர் விந்தியாவை அவளது அறையில் படுக்கையில் கிடத்தினார்.

பின்னே வந்த அவரது மனைவி ஒரு நிம்மதி பெருமூச்சுவிட்டாள். இருந்தும் எதுவோ அசம்பாவிதம் நடந்தது போலவோ நடக்க இருப்பது போலவோ மனதுள் வலிக்க அவளது விழி நீர் நிற்கவில்லை. நிமிர்ந்து வேதனின் கைப்பற்றி அவர் முகம் பார்த்து, “அவளைக் கைதுச் சென்று சிறையில் அடைத்துவிட மாட்டார்களே!” என்றாள்.

வேதன் அதற்கு எதுவும் பேசவில்லை. அவளது கையைத் தன் கையிலிருந்து விடுவித்துக் கொண்டு, லேசாகக் கலங்கிய கண்களுடன் அந்த அறையைவிட்டு வெளியில் சென்றார். தாழ்வாரத்திலே நின்றுவிட்டிருந்த அவந்திகா மற்றும் நந்தனை பார்த்து, “வாங்க என் கணக்கு வழக்கு பார்க்கும் அறையில் அமர்ந்து பேசலாம்.” என்றார்.

அவந்திகா, “ம்ம்…” என்று தலையசைத்து அவர்பின் நடந்தாள். நந்தனும் அவள்பின் நடந்துச் சென்றான்.

வேதன் எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் லேசான பதட்டமுடன் கைகளைப் பிசைந்தவிதமாகத் தரையை பார்த்தவிதமாகத் தரையிலிருந்த விரிப்பில் அமர்ந்திருந்தார். அவந்திகாவும் நந்தனும் அவர் எதிரில் அருகருகே சமனமிட்டு அமர்ந்திருந்தனர். இருந்தும் எதுவும் கேட்கவில்லை.

சில நொடி என்று இருந்த அமைதி பல நிமிடங்கள் கடந்தும் தொடர்ந்தது. இடையில் விதுனா அவந்திகா வந்துவிட்டத்தை உணர்ந்து தேநீருடன் வந்து அவர்களிடம் தந்துவிட்டு, “நன்றி அக்கா. என் அக்கா கண் விழித்துவிட்டாள்.” என்றாள். இருந்தும் விதுனாவின் முகத்தில் முழுமையான மகிழ்ச்சியில்லை.

‘ஒரு அக்கா வந்துவிட்டாள். ஆனால் என் மற்றொரு அக்காவிற்கு என்ன நிகழுமோ!’ என்ற நடுக்கம் அவளுள் இருக்க மனதை மறைக்கத் தெரியாமல், “விந்தி அக்காக்கு எதுவும் ஆகாது இல்லையா அக்கா?” என்று அவந்திகாவை பார்த்துக் கேட்டாள்.

என்ன நிகழ்கிறது என்று தெளிவாகத் தெரியாத போதும், ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று அறியாத சின்னப் பெண்ணல்லவே விதுனா. தன் பெற்றோர்கள் தெளிவாகச் சொல்லாத போதும் அன்று காலை நிகழ்ந்த நிகழ்வுகள் அவளுள் குளிர் பரப்பியிருந்தது.

விதுனா, வினோதா கண் விழித்த மகிழ்ச்சியை சொல்ல விந்தியா அறைக்குச் சென்றபோது அவள் அங்கு இல்லாமல் போகத் திகைத்தாள். ‘எப்போதும் வீட்டிலே இருக்கும் விந்தி அக்கா எங்கே?’ என்று குழம்பினாள்.

அப்போது அவள் அப்பாவும் அம்மாவும் அவர்கள் அறையில் ஏதோ பேசுவது தெளிவற்று கேட்டது. என்ன பேசிகிறார்கள் என்று புரியாத போதும் அவள் அம்மாவின் விசும்பும் சத்தம் அவள் அழுவதை விதுனாவிற்கு உறுதி படுத்தியது.

‘வினோதா விழித்துவிட்டதில் அம்மா மகிழ்வடையாமல் ஏன் அழ வேண்டும்?’ என்று குழம்பிக் கொண்டு தாழ்வாரத்தில் நின்றிருக்கும் போதே, பௌதிகாவும், புவனாவும், விந்தியாவின் மகனைக் கையில் ஏந்தி வீட்டிற்கு வந்தனர். அவர்களைப் பார்த்ததுமே விதுனாவிற்கு குழப்பம் அதிகரிக்க ஆரம்பித்தது.

சற்று யோசித்தவளுக்கு உண்மை புரிந்து மனதுள் திடுக்கிடலும், அடிவயிற்றிள் குளிரும் பரவியது. இருந்தும் எதுவும் செய்ய முடியாமல், அவர்களை வர வேற்று தன் தந்தையிடம் சொல்லிவிட்டு கண்விழித்த தன் அக்காவின் தேவைகளைக் கவனிக்க சென்றுவிட்டாள்.

ஆனால் கவனம் முழுதும் வெளியிலே இருந்தது. விந்தியா வந்தது அறிந்ததும் லேசாக எட்டி பார்த்த விதுனா, முழுதும் வெளியில் வரத் தைரியம் இல்லாமல் கதவின் பின் நின்று தாழ்வாரத்தில் நிகழ்வதையும், வீட்டின் முற்றத்தில் ஊர் மக்கள் பேசிய பேச்சுகளையும் கவனித்தாள்.

இருந்தும் உண்மை அறிந்த பிறகு சக்தியற்றவளாக வேரோடி அப்படியே நின்றுவிட்டாள். பின் வேதனுடன் சென்ற அவந்திகாவை பார்த்து, ஒரு முடிவெடுத்தவளாக, தேநீர் போட்டுக் கொண்டு வேதன் இருந்த அறைக்குச் சென்றாள்.

கடைசியாகத் தன் தைரியத்தை உருட்டித் திரட்டி இப்போது அவந்திகாவிடம் கேட்டேவிட்டாள், “விந்தி அக்காவுக்கு எதுவும் ஆகாது இல்லையா அக்கா?” என்றாள். அவந்திகாவின் முன் குனிந்து அவள் விழி பார்த்துக் கேட்ட விதுனாவின் விழியில் ஒரு துளி நீர் உருண்டு கீழே விழத் தயாராக இருந்தது.

விதுனாவின் கையிலிருந்து தேநீரை வாங்கிய அவந்திகா எதுவும் பேசவில்லை. அவள் தலையைக் கனிவாக வருடி, “நீ போய் வினோதாவை பார்த்துக்கொள். மற்றது பற்றி இப்போது கவலை பட வேண்டாம்.” என்றாள்.

அவந்திகா வாய்விட்டுச் சொல்லவில்லையென்ற போதும், விதுனாவிற்கு எல்லாம் தெரிந்துவிட்டது. அவந்திகாவிற்கு பதிலேதும் சொல்லாமல், தேம்பிய குரலுடன் அந்த அறையை விட்டு ஓடிச் சென்றுவிட்டாள்.

அவள் செல்வதையே கவலையுடன் பார்த்த அவந்திகாவின் கையை நந்தன் பற்றினான். நந்தனின் கைப்பற்றலில் நிகழ்வுக்கு வந்த அவந்திகா, அவனைப் பார்த்து லேசாகப் புன்னகைத்து, ‘நான் கவலைப்படவில்லை.’ என்று கண்களால் அவனுக்கு அறிவுறுத்தினாள்.

ஆனால் அவள் முகம் சோர்வதை தடுக்க முடியவில்லை. அப்போது முகிலனும், மதியும், உவாவும் அங்கு வந்துச் சேர்ந்தனர். போன வேகத்தில் அவர்கள் வரக் கூடுமென்று அவந்திகா எதிர் பார்க்கவில்லை. கேள்வியாக வந்தவர்களை நிமிர்ந்து பார்த்தாள்.

அவர்கள் பதில் சொல்வதற்குள் நந்தன் விஷமாகச் சிரித்து, “அவர்கள் இங்கிருந்து கிளம்பிய போதே, இன்பன் மற்றும் அதித்ரீயை மாதங்க அரசைச் சேர்ந்த மற்ற யாளிகள் சிறைச் செய்து அழைத்துச் சென்றுவிட்டனர்.” என்றான்.

அவனது பதிலையும் அவன் சிரிப்பையும் பார்த்த மதி, “உனக்கு நாங்க இங்கிருந்து செல்லும் முன்னே அவர்கள் பிடிப்பட்டது தெரியுமா?” என்று முறைத்து கேட்டாள். நந்தன் எதுவும் பேசாமல் சின்ன சிரிப்பை உதிர்த்து ஆமாம் என்று தலையசைத்தான்.

உடனே கோபம் வந்த முகிலன், “ஏய் பவளன், பிறகேன் எங்களிடம் சொல்லவில்லை. தேவை இல்லாமல் நாங்க அவ்வளவு தூரம் சென்று திரும்பினோம்.” என்று நந்தனை பார்த்து முறைத்தான்.

நந்தன் தோளைக் குலுக்கி, “என் இளவரசி உங்களுடன் போவதாக இருந்திருந்தால் சொல்லியிருப்பேன். உங்களுக்கு நான் ஏன் உதவ வேண்டும்?” என்றான் விற்றேற்றியாக

முகிலன் உடனே, “ஏய்…நீ…உனக்கு…” என்று சொல்ல வார்த்தை இல்லாமல், பற்களால் வார்த்தைகளைக் கடித்து நந்தனின் சட்டையைப் பற்றி உலுக்க ஒரு அடி எடுத்து வைத்தான். ஆனால் மதி முகிலனின் கைப்பற்றி மறுப்பாகத் தலையசைத்தாள்.

இது எதுவும் நந்தனை துளியும் பாதிக்கவில்லை. சிறிதும் அவர்களைப் பொருட்படுத்தாமல், அவந்திகாவின் தொடை மீதிருந்த அவளது கையைத் தன் கையால் பற்றிக் கொண்டு எங்கோ பார்த்திருந்தான்.

நந்தன், “^_^”.

அவந்திகா, ‘மதி முகிலன் இருவர் சண்டை போதாதென்று, இப்போது நந்தனும் சேர்ந்துக் கொண்டானா? “-_-”’ என்று நினைத்தாள்.

பிறகு மதி முகிலனிடம் திரும்பிய அவந்திகா, “வந்ததும் என்ன சண்டை. இந்த ஊர் பிரச்சனை முடிந்து என் தோழர்களைத் தேடி நான் போக வேண்டும். முதலில் வேதன் சொல்வதை கேட்கலாம். பிறகு உங்க மூவர் பிரச்சனை பேசலாம்.” என்றாள் தீர்க்கமாக.(1)

அப்போது மதியும் முகிலனும் நந்தனை பார்த்து முறைத்தனர். நந்தன் எனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்பது போல, அவந்திகாவின் கையைப் பற்றிக் கொண்டு அமர்ந்திருந்தான். அப்போதுதான் நந்தன் அவந்திகாவின் கைப்பற்றியிருப்பதை பார்த்த முகிலன் பற்களை நரநரவென்று கடித்தான்.

இருந்தும் அவனிடம் எதுவும் பேசவில்லை. அவந்திகாவிடம் திரும்பி, “அவந்தி, நான் உன் அருகில் அமர வேண்டும். பவளனை எழச் சொல்.” என்றான் முகிலன். அதனைக் கேட்டதும் நந்தனின் உடல் விறைப்புற்றது. அவந்திகாவை பற்றியிருந்த கைப்பிடி சற்று இறுகியது.

முகிலனின் கேள்வியையும், நந்தனின் செயலையும் பார்த்த அவந்திகா, “-_-”.

சிறுபிள்ளை போல ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு நிற்கும் முகிலன் நந்தன் மதி மூவரையும் மாறி மாறிப் பார்த்தாள் அவந்திகா. அவர்களோடு அங்கு நடப்பதை ஆர்வமாகப் பார்த்திருந்த உவாவையும் பார்த்தாள்.

கடைசியாக உவாவிடம் திரும்பிய அவந்திகா, “ரிஷிமுனி உவா, என் பெயர் அவந்திகா, இந்த மூன்று ரிஷிமுனிகளின் சிநேகிதி. உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் என் அருகில் அமர முடியுமா?” என்று கேட்டாள்.

ஏற்கனவே அங்கு நிகழ்வதை பார்த்த உவா அந்த அறையிலிருந்த மற்ற மூவரையும் கட்டிப் போடும் தலைவி அவந்திகாதான் என்பதை அறிந்துவிட்டிருந்தாள். அப்போது அவந்திகா அவளிடம் பேசியதில் மகிழ்க்கி தோன்ற கிளுக்கி சிரித்து, “வணக்கம் அவந்திகா. நிச்சயம். எனக்கு ஆட்சேபனை இல்லை.” என்று முன்னோக்கி வந்தாள்.

அவந்திகாவின் வார்த்தையில் நந்தனின் முகம் சோர்ந்தது. முகிலன் மதியின் முகம் லேசான புன்னகை பூசியது. நந்தனின் முகச் சோர்வை பார்த்த அவந்திகா தன் நெஞ்சில் கையை வைத்து, “நந்தன். நான் உங்களை விலக்க எண்ணவில்லை. என் சிநேகிதர்களுக்காக!’ என்று ஆன்ம இணைப்பில் முழுதும் சொல்லாமல் நிறுத்தினாள்.

ஆன்ம இணைப்பில் யாருக்கும் கேட்காமல் அவந்திகா அவனிடம் பேசியதில் முகம் மலர்ந்த நந்தன் நிமிர்ந்து அவந்திகாவை பார்த்து, “புரிகிறது இளவரசி.” என்று எழுந்து உவா அமர வழிவிட்டு அந்த அறையில் சுவரில் சாய்ந்து கைக்கட்டிக் கொண்டு நின்றான்.

இருந்தும் மதி முகிலனை திரும்பிப் பார்க்கவில்லை. உவா அமைதியாக அவந்திகாவின் அருகில் அமர்ந்தாள். மதியும் முகிலனும் ஆளுக்கு ஓரத்தில் நின்றனர். அவந்திகா வேதனிடம் திரும்பி, “ஐயா. நீங்க என்ன நிகழ்ந்தது என்று சொல்கிறீர்களா?” என்றாள்.

இவ்வளவு நேரத்திற்குள் ஓரளவு மனதை தயார் படுத்திவிட்டிருந்த வேதன் பெருமூச்சுவிட்டு பேசலானார். “விந்தியா, என் அண்ணன் மகளாக இருந்த போதும், அவள் எங்களுக்கு மூத்த மகளைப் போன்றவள். எங்களுக்குத் திருமணமாகிமுதல் 4 வருடங்களுக்குப் பிறகுதான் வினோதா பிறந்தாள். ஆனால் அதற்கு முன்னே விந்தியா எங்களது மகளாகி போனாள்.

அவள் என் அண்ணன் மகள் என்ற உண்மையை அவளுக்குத் தெரியாமல் எங்கள் மகளாகவே வளர்த்தோம். ஆனால் 4 மாதத்திற்கு முன்பு அவள் கணவர் கொள்ளையர்களால் இறந்தபோது யார் அவளிடம் என்ன சொன்னார்களோ, அவளுக்கு உண்மை தெரிந்துவிட்டது.

அதன் பிறகு அவள் எங்களைப் பார்க்கும்விதமும் மாறிவிட்டது. எவ்வளவு நாங்க அவளை எங்க மகளாக நடத்திய போதும், அவளுள் ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டாகிவிட்டது. அதனோடு அவளை இனி எங்க மகள் என்று யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் அண்ணன் மகள் என்றே சொல்ல வேண்டும் என்றும் ஒரே பிடிவாதாம்.

நாங்க என்ன செய்ய முடியும். ஏற்கனே கணவனை இழந்து துவண்டிருக்கும் பெண்ணிடம் வாக்குவாதம் செய்ய மனம் இல்லாமல் விட்டுவிட்டோம். அவள் கணவன் இறந்த பிறகும் எங்க மகள் இல்லையென்ற உண்மை அறிந்த பிறகும், அவள் அதிகம் பேசுவது குறைந்து போனது.

கால போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்று நாங்க காத்திருந்தோம். அப்படியே அமைதியாக மூன்று மாதங்கள் கடந்தது. ஊர் மக்கள் ஒவ்வொருவராக அவர்களின் பெண்கள் திடீரென்று நினைவிழந்தச் செய்தியை வந்து என்னிடம் சொல்லிச் சென்றனர்.

ஆனால் அப்போதெல்லாம் இதற்கும் என் பெண்ணிற்கும் தொடர்பிருக்குமென்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

நான் முதலில் ஏதோ தீர்க்க முடியாத வியாதி இந்த ஊர் மக்களுக்கு வந்துவிட்டது என்று எண்ணி, பல ஊர்களிலிருந்து மருத்துவர்களையும் வர வைத்து அந்தப் பெண்களைப் பரிசோதிக்க வைத்தேன். எல்லோரும் ஒன்று போல மூன்று மாதத்திற்குள் அவர்கள் கண் விழித்துவிடுவர் என்றனர்.

நானும் மூன்று மாதத்திற்கு பிறகும் பாதிக்கப்பட்டவர்கள் கண் விழிக்கவில்லையென்றால், பரி அரசுக்குச் சிறந்த மருத்துவரை இங்கு அனுப்பச் சொல்லித் தகவல் அனுப்பலாம் என்று எண்ணியிருந்தேன்.

ஆனால் பதினைந்து நாட்களுக்கு முன்பு வினோதாவை பெண் பார்க்கப் பக்கத்து ஊரிலிருந்து மாப்பிள்ளை வந்துவிட்டுச் சென்றனர். எல்லாம் நல்லவிதமாக முடிந்து மாப்பிள்ளையும் நிச்சயம் ஆகிவிட்டது.

அன்று இரவுக் கணக்கு வழக்கு பார்க்க நான் இந்த அறைக்கு வந்தேன். கணக்கெழுத என் கணக்கு புத்தகத்தைத் திறந்தபோது, அதன் நடுவில் ஒரு காகித துண்டில் யாரோ சில குறிப்புகளை எழுதி வைத்திருந்தனர். என்ன என்று புரியாமல் அதை எடுத்துப் படித்தேன். படித்ததும் என் முகம் எல்லாம் வியர்த்துவிட்டது.” என்று அந்தக் காகித குறிப்பை அவந்திகாவிடம் நீட்டினார்.

அவந்திகா அதனை வாங்கி பிரித்துப் படித்தாள். “அப்பா. என்னை மன்னித்துவிடுங்க. நான் சொல்ல முடியாத பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த ஊர் பெண்கள் வியாதியால் பாதிக்கப்படவில்லை. உடனே இந்தப் பெண்களின் நிலைக்குறித்து பரி அரசுக்குத் தகவல் அனுப்புங்க.

இந்த ஊர் எல்லையில் உள்ள தாமரை குளத்தில்தான் பிரச்சனையென்று வருபவரிடம் சொல்லுங்க. அதே சமயம் வருபவரை நல்லிரவில் அங்கு அழைத்துச் செல்லுங்க. நான்தான் உங்களிடம் இந்தத் தகவல் சொன்னதாக யாரிடமும் சொல்ல வேண்டும.

இதுகுறித்து நேரில் என்னிடம் எதுவும் கேட்க வேண்டும். என்னால் பதில் சொல்ல முடியாது. உங்களிடம் துன்பப்படும்படி பேசிவிடவும் கூடும். அதனால் என்னிடம் எதுவும் கேட்காதீங்க. இப்படிக்கு விந்தியா.”

அதனை அவந்திகா படிக்க மீண்டும் கேட்ட வேதனின் கைகள் லேசாக நடுங்கியது. பின், “என் பெண்ணை நான் நலமுடம் பார்த்துக் கொள்ளவில்லை. அவள்…அவள் தனியே இப்படி துன்ப பட நான் விட்டுவிட்டேனே.” என்று குரல் கம்ம சொன்னார்.

அவந்திகாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. குற்றவாளி என்று உறுதியாகத் தெரிந்த பிறகு விந்தியா சிறை வாசத்திலிருந்து மீள்வது கடினம். இந்தத் தருணத்தில் ஆறுதலாக எது சொன்னாலும் பொருந்தாது.

அவருக்குக் குடிக்க நீர் எடுத்து வர எண்ணி அவந்திகா எழ முயன்றாள். அவள் எண்ணம் உணர்ந்தானோ என்னமோ நந்தன், “நான் செல்கிறேன் இளவரசி.” என்று அந்த அறையின் மூலையிலிருந்த முக்காலியின் மீதிருந்த நீர் குடுவையிலிருந்து நீரை கிண்ணத்தில் ஊற்றி வேதனிடம் கொடுத்தான்.

முகம் தாழ்த்தி கண்ணீரை உதிர்த்திருந்தவர் வேதன், தன் எதிரில் நீர் கிண்ணத்தை பார்த்து நிமிர்ந்தார். முன்பு வந்தபோது நந்தனை முகிலனுடன் பார்த்திராத போதும் அவனது கைப்பாப்பும் ஆடையும் அவன் மாதங்கயாளி என்பதை உணர்த்த, ஒரு ரிஷுமுனி தனக்கு தண்ணீர் எடுத்து வரக் கூடுமென்று அவர் எண்ணவில்லை போலும்.

ஒரு நொடி திகைத்து நந்தனிடமிருந்து நீரை வாங்கி, “நன்றி ரிஷிமுனி.” என்று மெதுவாக அருந்தினார். பின் நிறுத்தி, “என் மகள் சொல்லி நான் தான் பரி அரசுக்குத் தகவல் கொடுத்தேன். என் மகள் செய்தது தவறு என்ற போதும், உண்மையில் அவளுமே பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவள்தான்.

என்னவென்று தெரியாமல் இப்படி நிகழ்ந்துவிட்டது அதனால்…” என்றவர் அதற்கு மேலும் பேச முடியாமல் அப்படியே நிறுத்தினார்.

Author Note:

(1) அவந்திகா, இந்த இடத்தில யார் தப்பு பன்னதுனு உங்களுக்குத் தெரியலயா? Hero sir-ட ஏன் முன்னவே இன்பன் அதித்ரீ கைதானது சொல்லலனு கேட்காமல், மதி முகிலனை, வந்ததும் ஏன் சண்டையினு கேட்கீறீங்கா? hero sir-ம் நீங்களும், நல்ல ஜோடிதான்.