யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 39

878

அத்தியாயம் – 39

பின் அவர்களைச் சுற்றி போடப்பட்டிருந்த பாதுகாக்கும் சக்கரத்தை விலக்கி அங்கிருந்து இடம்மாற்றும் சக்கரம் மூலமாக மீண்டும் ஊர் எல்லையிலிருந்த குளத்தை அவந்திகாவும் நந்தனும் அடைந்தனர்.

தங்கள் எதிரில் இருந்த குளத்தில் தாமரை கொடி கருகி காற்றில் மறைந்த போதே மதியும் முகிலனும் உயிர் மீட்கும் சக்கரம் உடைப்பட்டதை உணர்ந்தனர். அவந்திகாவும் நந்தனும் குளத்திலிருந்து வெளியில் வருவதற்காக இருவரும் குளத்தையே பார்த்திருந்தனர்.

அப்போது அவந்திகாவும் நந்தனும் நீரிலிருந்து வெளியில் வராமல், இடமாற்றும் சக்கரத்தின் மூலமாக வெளியில் எங்கிருந்தோ அங்கு வந்து சேர்ந்தனர். இப்படி எதிர்பாராதவிதத்தில் வந்த அவர்களை மதியும் முகிலனும் கேள்வியாக நோக்கினர்.

அவர்கள் குழப்பம் உணர்ந்த அவந்திகா, “இந்தக் குளம் ஊர் நடுவில் உள்ள மற்றொரு குளத்துடன் ஒரு நீர் சுரங்க பாதையினால் இணைந்துள்ளது. உண்மையான உயிர் மீட்கும் சக்கரம் அந்தக் குளத்தில்தான் இருந்தது.

இந்தக் குளத்தின் நீரின் வழியே அந்தக் குளத்தை அடைந்த நாங்க, அதில் இருந்த உயிர் மீட்கும் சக்கரத்தை முழுதும் உடைத்துவிட்டோம். இப்போது மீதமிருக்கும் உயிர் உறிஞ்சும் சக்கரத்தை மட்டும்தான் எதிர் திசையில் திருப்பிச் சரி செய்ய வேண்டும்.

அதன் பிறகு, இந்தக் கிராமத்தில் பாதிக்கபட்டு இருந்த ஒன்பது பெண்களின் உறிஞ்சபட்ட உயிர் பிரிவுகளும் அவரவர் இடத்தில் சேர்ந்து விடும்.” என்று விளக்கம் சொன்னாள்.

முகிலன் வியந்து, “இரு குளத்தையும் இணைத்து, எவ்வளவு துல்லியமாகத் திட்டமிட்டு செயல்பட்டிருக்கின்றனர்.!!” என்றான்.

மதி, “வன்னி, சரி இப்போது உயிர் உறிஞ்சும் சக்கரத்தைச் சரி செய்வோம். மற்றது பிறகு பேசலாம்.” என்று அவந்திகாவை துரித படுத்தினாள்.

அவந்திகா, “ம்ம்…” என்று தலையசைத்து, “நந்தன்…” என்று நந்தனை நோக்கித் திரும்பினாள்.

அவந்திகா நந்தன் என்று பவளனை அழைத்ததில் மதி முகிலன் இருவரும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் இருவரும் அப்போது எதுவும் பேசவில்லை.

அவந்திகா தன்னை விளித்ததின் காரணம், அவள் விளக்கிச் சொல்லாமலே உணர்ந்த நந்தன் அவந்திகாவின் அருகில் வந்து அவளது இருக்கைகளையும் பற்றி அவள் நெற்றியோடு தன் நெற்றியை பொருத்த முற்பட்டான்.

ஆனால், “ஏய் பவளன். என்ன செய்கிறாய்.” என்று கத்தியவிதமாக முகிலன் நந்தனை தள்ளிவிட்டு, “அவந்தியிடமிருந்து தள்ளி நில்.” என்று அவந்திகாவிற்கும் அவனுக்கும் குறுக்காக நின்றான்.

முன்பு குளத்தின் அருகில் வந்தபோது இன்பனிடம் எச்சரிக்கையாக அவனைக் கவனித்திருந்ததால், அவந்திகாவின் நெற்றியில், நந்தன் அவன் நெற்றியை வைத்துக் கவனிக்கும் சக்கரத்தை உருவாக்கிக் குளத்தினுள் இருந்த அதித்ரியை கண்டதை முகிலனும் சரி மதியும் சரி அப்போது கவனிக்கைவில்லை.

ஆனால் இப்போது அவர்களையே பார்த்திருந்த முகிலன், நந்தன் அவந்திகாவிடம் நெருங்குவதை விரும்பாமல் எதிர்த்து நின்றான். மதியும் அதிருப்தியாக நந்தனை பார்த்து முறைத்துக் கொண்டு நின்றாள். அவந்திகாவின் கைப்பற்றி அவளை நந்தனிடமிருந்து பிரித்து இழுத்துச் சென்றாள்.

தன் சிநேகிதர்களின் செயலில் திடுக்குற்ற அவந்திகா என்ன ஏது என்று உணரமுன்னே நந்தனை முகிலன் அவந்திகாவிடமிருந்து தூர தள்ளியிருந்தான். அதே போல மதியும் அவந்திகாவை நந்தன் முன்பிருந்த இடத்திலிருந்து தூரத்தள்ளி கொணர்ந்து நிறுத்தினாள்.

குழப்பமாக, “மதி, முகிலன் என்ன செய்றீங்க.” என்று மதியின் கைப்பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவர்களின் செயல் காரணம் புரியாமல் கேட்டாள் அவந்திகா. ஆனால் அவளுக்குப் பதில் சொல்லதான் அங்கு யாருமில்லை.

மதியும் முகிலனும் நந்தனை எதிரியைப் பார்ப்பது போல் வெறித்துக் கொண்டு நின்றனர்.முகிலன் தள்ளிவிட்ட விசையில் நந்தன் சில அடி பின்னோக்கி நகர்ந்து, ஒரு நொடி கோபமுடன் முகிலனை பார்த்தான்.

பின் அவந்திகா திரும்பிப் பார்பதற்குள் உடனே அடிப்பட்ட குழந்தை அன்னைக்கு ஏங்குவது போல முகத்தைப் பாவம்போல வைத்துக் கொண்டு அவந்திகாவை பார்த்தான். நந்தனின் அந்த முகத்தைப் பார்த்த அவந்திகாவின் உள்ளம், வெகுவாக இளகி போனது.

‘இதுபோலத் தன் சிநேகிதர்கள் நந்தனிடம் நடந்துக் கொள்வது இது மூன்றாவது முறை. ஏன் மதிக்கும் முகிலனுக்கும் நந்தனை பிடிக்கவில்லை.’ என்று குழம்பி கவலையுற்றாள். நந்தனுக்கு ஆருதல் சொல்ல வேண்டுமென்று தோன்றிய போதும், தன்னை மறைத்துக் கொண்டு நிற்கும் தன் சிநேகிதர்களை மீறி எதுவும் செய்ய அவந்திகா முயலவில்லை.

முகிலனிடம் திரும்பி, “முகிலன். பவளன் என்னைப் பலமுறை பாதுகாத்திருக்கிறார். அதனால் அவரால் எனக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. நீங்க இருவரும் அவரை வேற்றாள் போல் நினைப்பதை விடுங்க.

அவர் எனக்கு உங்களைப் போல ஒரு நண்பர். அவரைச் சங்கடபடுத்தினால் எனக்கும் துன்பமாக இருக்கும். புரிகிறதா? இந்த ஒரு விஷயத்தில் நான் சொல்வதை கேளுங்க.” என்று பொறுமையாகத் தன் சிநேகிதர்களிடம் எடுத்துச் சொன்னாள் அவந்திகா.

முகிலன் அவந்திகாவிடம் திரும்பி, “அவந்தி உனக்கு எதுவும் தெரியாது. திடீரென்று உன்னைத் தேடி பூமிக்கு வந்து இங்கு உன்னை அழைத்து வந்திருக்கும் இவனது நோக்கம் என்னவோ. தூர இருந்து உனக்கு உதவுவதென்றால் சரி. அவன் உன்னைத் தொட்டு எதுவும் செய்யக் கூடாது.” என்றான் குரலில் கடுமையுடன்.

மதியும், “முகிலன் சொல்வது சரி. முன்பானால் நீ யாளி உடலில் இருந்தாய். அதனால் இதுபோலத் தொட்டு பேசுவது பரவாயில்லை. ஆனால் நீ இருப்பது மனித உடலில். ஆண் பெண் இருவருக்கும் இடைவெளி நிச்சயம் வேண்டும்.” என்று நந்தனை பார்த்து மீண்டும் முறைத்தாள்.

தன் சிநேகிதர்களை மாறி மாறிப் பார்த்த அவந்திகா, என்ன பதில் சொல்வதென்று புரியாமல், ‘இதற்கு மட்டும் எப்படி ஒற்றுமையாகச் செயல்படுகின்றனர்.’ என்று வெற்று புன்னகை செய்தாள்.

பின் அவர்கள் சொன்னதன் அர்த்தம் உணர்ந்து, “கவ்…கவ்…” என்று வராத இருமலை இருமுறை வரட்டு இருமலாக மாற்றி, ‘இவர்களுக்கு நந்தன் இருமுறை இதழணை தந்து என் உயிர் காத்தது தெரிந்தால் என்ன நிகழும்.?! நெற்றியில் நெற்றி படுவதற்கே சண்டை போட நிற்கின்றனரே.!’ என்று பதட்டமுற்றாள் அவந்திகா.

ஆனால் எதுவும் பேசினாள் இல்லை. சங்கடமாக நந்தனை நோக்கினாள். அவந்திகாவின் மனநிலையை உணர்ந்த நந்தன், “இளவரசி, கவலை பட வேண்டாம். ஒரு நிமிடம்.” என்றவன் கண்கள் மூடித் தன் நெற்றியில் தன் வலது கையின் ஆள்காட்டி மற்றும் நடுவிரலை நீட்டிப் பொருத்தினான்.

சில வினாடியில் அவன் விரல்களை நெற்றியிலிருந்து எடுத்தான். அவன் எடுத்தபோது அவனது நெற்றியிலிருந்து ஒரு சாம்பல் நிற பட்டாம்பூச்சி உருவாகி பறந்துச் சென்று அவந்திகாவின் நெற்றியில் அமர்ந்தது.

அது அமர்ந்ததும் கண்களை மூடிய அவந்திகாவிற்கு நந்தனே அவள் நெற்றியில் நெற்றி பொருத்துவது போன்ற பிரமையை உருவாக்கியது. ஒரு நொடி மூச்சுவிட மறந்து மீண்டும் கண் விழித்து நந்தனை திரும்பிப் பார்த்தாள்.

அவன் சின்ன சிரிப்பை உதிர்த்து மென்னகையுடன் அவந்திகாவை பார்த்தான். அன்னிச்சை செயல்போல அவந்திகாவின் இதழும் விரிந்தது. அவள் புன்னகைப்பதை பார்த்துக் கண்கள் சிமிட்டினான் நந்தன். பின் மதியிடம் திரும்பி, “இது பரவாயில்லைதானே மதி.” என்றான்.

நந்தனின் நெற்றியில் பட்டாம்பூச்சி உருவானதிலிருந்து அதனையே பார்த்த மதியும் முகிலனும் நந்தனின் புன்னகையையோ, அவனது கண் சிமிட்டலையோ பார்க்கவில்லை. அந்தப் பட்டாம்பூச்சி அழகாக அவந்திகாவின் நெற்றியில் வந்து பொருந்தியதை ஆராய்ந்து பார்த்திருந்தனர்.

திடீரென்று நந்தன் தன்னிடம் கேட்டதில் மதி அவனைத் திரும்பிப் பார்த்து, “வன்னியை நேரடியாகத் தொட்டு பேசாதவரை எதுவும் பரவாயில்லை.” என்று கண்களை உருட்டினாள். முகிலனும் தன் எதிர்ப்பைச் சற்று தளர்த்தி நந்தன் அவந்திகாவிற்கு இடையிலிருந்து விலகி நின்றான்.

பாவம் மதிக்கும் முகிலனுக்கும் அவன் நெற்றியிலிருந்து உருவான அந்தப் பட்டாம்பூச்சி அவன் விரல்களிலிருந்து வரும் பட்டாம்பூச்சிகள் போல் அல்லாமல் அவனது உடலின் பிரதி பிம்பம் என்று தெரிவதற்கில்லை. அந்தப் பட்டாம்பூச்சி தன் நெற்றியில் அமர்ந்ததில் அவந்திகா மட்டுமே இந்த மாற்றத்தை உணர்ந்தாள்.

முகிலனும் வேறு வழி இல்லாமல், “அவந்தி. உயிர் உறிஞ்சும் சக்கரத்தைச் சரி செய்ய ஆரம்பிக்கலாம்.” என்றான்.

அவந்திகாவும் அவனுக்குத் தலையசைத்து குளத்தில் இறங்கினாள். பின் மெதுவாக ஒன்பது இதழ்கள் கொண்ட தாமரை மலரை அடைந்து நந்தனை ஒருமுறை பார்த்துக் கண் மூடினாள். நந்தனும் அவன் இருந்த இடத்திலிருந்தே கண்கள் மூடினான்.

இருவரும் இணைந்து தாமரை மலரின் முதல் இதழில் இணைந்திருந்த உயிர் உறிஞ்சும் சக்கரத்தை எதிர் திசையில் ஆன்மீக ஆற்றலைச் செலுத்தி முதல் பெண்ணின் உயிர் பிரிவை விடுவித்தனர்.

அந்த உயிர் பிரிவு தாமரை மலரிலிருந்து பிரிந்து ஒரு ஒளி புள்ளிபோல மாறி முதல் பெண் அமுதாவின் உடலில் சேர்ந்தது. அதனோடு தாமரை மலரின் ஒன்பது இதழ்களில் ஒரு இதழ் மின்னும் துகள்களாக மாறிக் காற்றில் கரைந்தது.

அதே போல அடுத்திருந்த எட்டு இதழ்களிலிருந்தும் எட்டு உயிர் பிரிவுகள் பிரிந்து ஒளிபுள்ளியாக மாறிக் காற்றில் வேகமாகப் பறந்துச் சென்று அதன் உரிமை பெண்களிடம் சேர்ந்தது. தங்களின் உயிர் பிரிவு உடலில் சேர்ந்ததும் அந்த ஒன்பது பெண்களும் அவரவர் வீட்டில் கண் திறந்திருந்தனர்.

ஒரு வழியாக எல்லா பெண்களின் உயிர்களையும் மீட்டதில் நிம்மதியுற்று அவந்திகா கண்களைத் திறந்தாள். உயிர் மீட்கும் சக்கரத்தைப் போலல்லாமல் உயிர் உறிஞ்சும் சக்கரம் அவந்திகாவிற்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று.

அதனால் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல், நந்தனின் ஆன்மீக ஆற்றலைக் கொண்டு விரைவில் உயிர் உறிஞ்சும் சக்கரத்தைத் தகர்த்துவிட்டாள்.

ஒரு பெருமூச்சுடன் குளத்தின் நீரிலிருந்து மேலே ஏறி வந்த அவந்திகா ஆன்மீக ஆற்றலைக் கொண்டு தன் ஆடையிலிருந்த நீரை உலர்த்தியபடி தன் நெற்றியில் இன்னும் அமர்ந்திருந்த பட்டாம்பூச்சியை தடவியவிதமாக, “நந்தன்.” என்று விளித்தாள்.

அவள் வருடலில் நந்தன் அவள் கன்னத்தை அவள் வருடுவது போல் உணர்ந்து, பட்டாம்பூச்சியாக இருந்த தன் இறகை மகிழ்வுடன் குவித்து விரித்தான். பின் அந்தப் பட்டாம்பூச்சி அவளிலிருந்து விலகிச் சென்று நந்தனின் நெற்றியில் மீண்டும் சேர்ந்து, நந்தனும் கண்விழித்தான். அவளுக்குப் பதில் சொல்லும்விதமாக, “இளவரசி. ‘^_^’”என்றான்.

அவந்திகா, “நன்றி.” என்றாள் புன்னகையுடன். நந்தன் உடனே முகம் லேசாக வாட, “இளவரசி… இது என் கடமை.” என்றான்.

முகிலன் இடைபுகுந்து, “அவந்தி. நான் மாதங்க அரசுக்கும், நம் அரசுக்கும் இன்பன் மற்றும் அதித்ரியின் செயல்குறித்து ஆன்ம இணைப்பில் நீங்க நீரில் குதித்த போதே தொடர்பு கொண்டு தகவல் அனுப்பிவிட்டேன். நாளைக்குள் மாதங்க அரசவையிலிருந்து ஆட்கள் இங்கு வருவார்கள்.

இந்தக் கிராம பெண்களின் பெண்களின் உயிர்கள் காக்கபட்ட இந்தத் தகவலையும் அனுப்பிவிடுகிறேன். பிறகு நாம் இப்போது காணமல் போன அந்த இன்பன், அதித்ரி எங்கே என்று தேடுவோம். வேறு எதுவும் அசம்பாவித நிகழ்வுகளை அவர்கள் நிகழ்த்துவதற்குள் நாம் அவர்களைச் சிறைப் பிடிப்பது நல்லது.” என்றான்.

அவந்திகா, “ம்ம். நாம் நால்வரும் இங்கிருந்து நான்கு திசைகளில் சென்று கவனிக்கும் சக்கரத்தின் மூலமாக நான்குபுரம் தேடுவோம். இடமாற்றும் சக்கரம் கொண்ட கருவியை அவர்கள் பயன்படுத்தியிருந்த போதும், அதனைக் கொண்டு அவர்களால் 50 காததூரத்திற்கு(1) மேல் சென்றிருக்க முடியாது.” என்றாள்.

அதற்கு மதி, “சரி. நான் கிழக்கே செல்கிறேன். முகிலன் தெற்கில் செல்லட்டும். வன்னி நீ வடக்கிலும், பவளன் மேற்கிலும் போங்க.” என்றாள்.

நந்தன் அவந்திகாவை பார்த்து, “இளவரசி. அதற்கு அவசியமில்லை.” என்றான். பின் சில வினாடி கண்கள் மூடித் திறந்தவன், “அவர்கள் இங்கிருந்து 30 காதத் தூரத்தில் தென்மேற்கு திசையில் உள்ள சத்திரத்தில் ஓர் அறையில் இருக்கின்றனர்.” என்றான்.

அவன் இப்படி சொன்ன போதே அவந்திகாவிற்கு நந்தனின் ஒற்றர்கள் நினைவுக்கு வந்தது. அநேகமாக அவர்கள் இடமாற்றும் சக்கரத்தில் சென்ற போதே நந்தன் அவர்களுடன் ஒரு பறவை ஒற்றனை அனுப்பியிருக்க வேண்டும் என்று உண்மை உணர்ந்தாள்.

உடனே புன்னகைத்து, “அருமை நந்தன். நாம் அனைவரும் இப்போதே அங்குச் செல்வோம்.” என்று சொன்னாள் அவந்திகா. (2).

நந்தன், “சரிங்க இளவரசி.” என்று மென்னகைத்தான்.

முகிலன், “அவந்தி, நீ இந்தப் பெண் விந்தியாவை அவர்கள் வீட்டில் சேர்த்துவிட்டு இங்கேயே இரு. நானும் மதியும் போய் அவர்களைப் பார்த்துக் கொள்கிறோம். அதனோடு மாதங்க அரசுக்கும் நான் தகவல் தந்துவிட்டதால் அவர்களும் உதவிக்கு வருவார்கள். நீ எங்கும் அலைய வேண்டாம்.” என்றான்.

அவந்திகா முகிலன் அப்படி சொல்வது, ‘தான் தற்போது மனித யாளி உடலில் இருப்பதால்.’ என்ற அர்த்தம் புரிந்து அவனை ஏறிட்டு பார்த்தாள். பின் மதியின் முகத்தைத் திரும்பிப் பார்த்தாள். மதியின் முகமும் முகிலன் சொன்னதை ஒப்பி தலையசைப்பதை உணர்ந்து முகம் சோர்ந்து, “சரி.” என்று தலையசைத்தாள்.

ஆனால் நந்தன் அவள் முக சோர்வது பிடிக்காமல், “இளவரசிக்கு அங்குப் போக வேண்டுமென்றால் நாம் போகலாம்.” என்றான்.

அவந்திகா புன்னகைத்து, “இல்லை. அவசியமில்லை நந்தன். குற்றவாளி யாரென்றுதான் உறுதியாகியாயிற்று. காப்பாற்ற வேண்டியவர்களையும் காப்பாற்றியானது. பிறகென்ன. பரவாயில்லை. முகிலன் வரும் வரை நான் காத்திருந்து, பின் மேகன் கடத்திக் கொண்டு வந்த என் தோழர்களைப் பார்க்கச் செல்ல வேண்டும்.” என்று பெருமூச்சுவிட்டு புன்னகைத்தாள்.

நந்தன் அவந்திகாவின் முகத்தைச் சிந்தனையோடு பார்த்தான். ஆனால் எதுவும் பேசவில்லை. அவர்கள் அப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே மாதங்க அரசிலிருந்து ஒரு பெண் மாதங்க யாளி பெண் அந்தக் கிராம தலைவர் வேதனுடன், அவர்கள் இருந்த அந்தக் குளத்திற்கு வந்தாள்.

புதிதாக வந்த அந்த மாதங்க யாளி பெண்ணை ஒரு எச்சரிக்கை உணர்வுடன் மதியும் முகிலனும் பார்த்தனர். அவந்திகா கேள்வியாக அவளைப் பார்த்தாள். நந்தன் அவந்திகாவின் முகத்தைப் பார்த்திருந்தான்.

வந்திருந்த புதிய பெண் மூன்று வெவ்வேறு வண்ணங்களின் கைக்காப்பும் ஆடையும் அணிந்திருந்த எதிரில் இருந்த நால்வரை பார்த்து, ‘இதில் யார் முகிலன்?’ என்று யோசித்து பின் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்த முகிலனை திரும்பிப் பார்த்து, “வணக்கம் முகிலன்.” என்று கைக் கூப்பினாள்.

இரண்டு சக்கரத்தின் இடை நிலை சக்தியுடன் வந்திருந்த மாதங்க யாளி பெண்ணை நந்தனை தவிர யாருக்கும் தெரியவில்லை. தன்னை விளித்ததில், “வண்ணம். நீங்க.?” என்று கேட்டான் முகிலன்.

அதற்கு வந்திருந்த புதிய பெண் புன்னகைத்து, “முகிலன். எனது பெயர் உவா. என்னை மாதங்க அரசின் சார்பில் உங்கள் உதவிக்கு அனுப்பியிருக்காங்க. எங்க அரசின் இன்பன் மற்றும் அதித்ரியை சிறைப்பிடித்து அழைத்து வர வேண்டியது எனக்கான கட்டளை.” என்று விளக்கம் சொன்னாள்.

மதி அவளைப் பார்த்துக் கண்கள் உருட்டி, “ஐந்து சக்கர ஆன்மீக ஆற்றல் கொண்ட இருவரை சிறைப்பிடிக்க இரண்டு சக்கர ஆன்மீக ஆற்றல் கொண்ட யாளியை அனுப்பியிருக்கின்றனர். மாதங்க அரசின் தீர்வுகாணும் முறை மிகவும் பின் தங்கிதான் இருக்கும் போல.” என்றாள்.

அதனைக் கேட்ட உவா தவறாக எடுத்துக் கொள்ளாமல், “நான் சக்தி குறைந்தவளாக இருக்கலாம். ஆனால் எங்க சட்டதிட்டங்கள் மிகவும் கடுமையானது. என் கையில் அவர்களைச் சிறைப்பிடிப்பதற்கான கருவியைக் கொடித்தனுப்பியிருக்கின்றனர்.” என்று ஏதோ சுவாரசியமான செய்து சொல்வது போன்ற குரலில் தொடர்ந்து பேசினாள்.

“இந்தக் கருவி இன்பன் மற்றும் அதித்ரியை சிறை பிடிப்பதற்காகவே பிரத்தேகமான ஒன்று. இதனை அவர்கள் முன்னிலையில் காட்டினால் போதும் குறிப்பிட்ட காலம்வரை அவர்களால் எந்தவித ஆன்மீக ஆற்றலையும், சக்கரங்களை உருவாக்கும் கருவிகளையும் பயன்படுத்த முடியாது.” என்று கிளுக்கி சிரித்தாள்.

முகிலன், “என்ன? இப்படியொரு கருவி இருக்கிறதா?” என்று வியந்தான்.

முகிலனின் வியப்பை பார்த்த உவா, “ஆமாம் முகிலன். இதனைப் பயன்படுத்தியபிறகு அவர்கள் என்னுடன் வருவதை தவிர வேறு சிறந்த செயல் எதுவும் இருக்க முடியாது. இது எங்களின் புதிய கண்டுபிடிப்பு. கூடிய விரைவில் உங்க அரசுக்கும் இதனை வாணிகம் செய்வதாகத் தகவல்.” என்று கிளுக்கி சிரித்தாள்.

பின் சற்று நிறுத்தி, “நான் மட்டுமல்லாமல், என்னைப் போலப் பலரும் அவர்கள் இருவரை சிறை பிடிக்க இப்போது இந்தக் கிராமம் சுற்றி இருக்கும் எல்லா இடங்களிலும் என் அரசைச் சேர்ந்த பல மாதங்க யாளியர்கள் இந்தக் கருவியுடன் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களுக்கு ஒரு பயிற்சியாக இருக்கட்டுமென்று முதல் சக்கர நிலைக் கொண்டவர்களிலிருந்து ஐந்து சக்கர நிலை உள்ளவர்கள்வரை அனைவரும் இன்பன் மற்றும் அதித்ரியை இப்போது தேடிக் கொண்டிருக்கின்றனர்.

முகிலன், நீங்கத் தகவல் அனுப்பியதால், உங்களுடன் உதவ எங்க மாதங்க அரசின் சார்பாக உங்களைச் சந்திக்கஎன்னை அனுப்பி இருக்கின்றனர். என்னோடு பலரும் மாதங்க அரசிலிருந்து பரி அரசின் இடமாற்றும் சக்கரம் மூலமாக இங்கு வந்தோம்.

ஆனால் நான் மட்டும் இந்தக் கிராமம் வந்ததும் வேதனிடம் இந்தக் குளம் பற்றியும் உங்களைச் சந்திக்க வேண்டும் என்றும் சொன்னேன். அவர் என்னை இங்கு அழைத்துக் கொண்டு வந்தார். இந்தக் கருவிக் கொண்டு நாம் சண்டையிடாமல் அவர்களை எளிதில் பிடித்துவிடலாம்.” என்று அந்தக் கருவியை எடுத்துக் காட்டி சிரித்தாள்.

மதி வியப்பாக உவாவின் அருகில் சென்று அவள் கையிலிருந்து ஒரு சிறிய குச்சிபோல் கை விரல் தடிமனுடன் இருந்த கருவியை வாங்கி ஆராய்ந்து பார்த்து, “யார் இதனைக் கண்டுபிடித்தது.?” என்றாள்.

அதற்கு உவா மகிழ்ச்சியுடன், “யாரென்று தெரியவில்லை. ஆனால் இது மிகவும் அருமையில்லை.?” குதுகலித்து பின், “தவறு செய்தவர்களின் சக்தியைத் தற்காலிகமாகத் தடை செய்கிறது. இது இருந்தால் கைதிகளை, முதல் சக்கர சக்தியுள்ள யாளியால் கூடச் சிறைப்பிடிக்க முடியும்.” என்றாள்.

அதற்கு மதி ஆமாம் என்பது போலத் தலையசைத்து சிநேகமாக உவாவை பார்த்துப் புன்னகைத்து, “என் பெயர் மதி. நான் சிம்மரசை சேர்ந்தவள்.” என்றாள்.

முகிலன் மதியின் புன்னகையை பார்த்து, “மதி. உனக்குச் சிரிக்க கூடத் தெரியுமா? எப்போது பார்த்தாலும் கண்ணை உருட்டி முறைப்பது மட்டும்தான் உனக்குத் தெரியும் என்று நினைத்தேன்.” என்று அவளை வம்புக்கு இழுத்தான்.

அவன் வார்த்தைகளைக் கேட்ட மதியின் முகம் மீண்டும் இறுகி முகிலனை பார்த்து முறைத்தாள். பின் ஏளனமாக அவனைப் பார்த்து, “ஏதோ நானும் வன்னியும் வந்ததால் இந்தக் கிராம பிரச்சனை எந்த உயிர் பாதிப்பும் இல்லாமல் பாதி தீர்ந்தது. நீ தனியாக இதைக் கையாண்டிருந்தால்.” என்று முழுதும் முடிக்காமல் கண்களை உருட்டி எங்கோ பார்த்தாள்.

முகிலன் எரிச்சலுற்று, “மதி… நீ…நீ…” என்று பற்களைக் கடித்தான். உவா அவர்களின் பேச்சைக் கேட்டுச் சுவாரசியமான கண்களுடன் பார்த்துக் கிளுக்கி சிரித்தாள்.

Author Note:

(1) 1 காத தூரம் = 1.667 km

(2) அவந்திகா செல்லமா நீ நந்தன் என்று Hero sir -ஐ சொல்வது சரி. ஆனால் உன் சிநேகிதர்களுக்கு பவளன் என்றல்லவா நந்தனை தெரியும். அவர்கள் உன்னை நந்தனுடன் இருக்கவே இனி விடப் போவதில்லை பார்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் Readers. நேற்றே சொல்லனும் நினைத்தேன் பிறகு மறந்துவிட்டேன். இந்த வருடத்தில் நீங்க எதிர் பார்த்த எல்லா வளமும் நலமும் பெற என் வாழ்த்துக்கள்.