யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 38

746

அத்தியாயம் – 38

ஆனால் அவந்திகாவையோ, இந்தப் பவளன் என்ற புதியவனையோ அவர்கள் இருவருக்கும் நினைவில் இல்லை. குழப்பமுடன் யாரென்று கேட்டனர். முதல் முறையாக அதித்ரி அவள் திட்டம் பாதிக்கப் பட்டுவிடுமோ என்று பயந்தாள்.

நந்தன் அவர்களது கேள்விக்குப் பதில் சொல்லாமல், அவர்களை நோக்கி விஷமமாகப் புன்னகைத்தான். அவந்திகா கையில் குழந்தையுடன் போலியான பௌதிகாவாக அதுவரை நடித்த உண்மையான பௌதிகாவின் அத்தை மகள், புவனாவும் மதியும் நின்றிருந்த இடத்திற்கு பறந்துச் சென்றாள்.

குழந்தை உயிர் மீட்கும் சக்கரத்திலிருந்து தூரமாகச் செல்வதை உணர்ந்து, அதித்ரி நந்தனை விடுத்து, “இன்பன். அவளைக் கைப்பாவையாக்கி குழந்தையை எடுத்து வரவை.” என்று அவந்திகாவை பார்த்துச் சொல்லித் தொடர்ந்து, “மற்றவர்களையும் கைப்பாவையாக்கு.” என்றாள்.

இன்பனும் அவந்திகாவை பார்த்து வாயில் மந்திரத்தை முனுமுனுத்தவிதமாக அவன் கைகளை அவள்புரம் நீட்டிக் கைப்பாவை சக்கரத்தை உருவாக்கினான். அவந்திகா கைப்பாவை சக்கரத்தில் அகப்பட்டுத் தன் கைக்கால்கள் அசைக்க முடியாமல் அப்படியே நின்றாள்.

அவந்திகாவின் பறக்கும் சக்கரம் போன வழியே திரும்பி, மீண்டும் அந்தக் குளத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. மதி மற்றும் முகிலனும் கூட இன்பனது கைப்பாவையாகி ஒருவரை ஒருவர் தாக்கும் எண்ணமுடன் மதி முகிலனின் அருகில் சென்று வாளை வீசினாள். முகிலன் மதியை நோக்கி அம்பை ஏய்தான்.

நந்தன் கைப்பாவை சக்கரத்தில் அகப்பட்டான என்று சந்தேகம் வருவது போல நொடியில் மதி முகிலனை நோக்கி இரு சம்பால் நிற பட்டாம்பூச்சிகளை வீசினான். அவர்கள் சரியான நேரத்தில் கைப்பாவை சக்கரத்திலிருந்து விடுபட்டு, அவர்களை நோக்கி அவர்களாலே ஏற்பட்ட தாக்குதலிலிருந்து விலகிக் காயம் ஏற்படாமல் தப்பினர்.

புவனா அப்போதுதான் கைப்பாவைச் சக்கரத்திலிருந்து விடுப்பட்டதால், அவள் மட்டும் மீண்டும் இன்பனது கைப்பாவை சக்கரத்தால் பாதிக்கப்படவில்லை. அதனை உணர்ந்த அவந்திகா, உடனே ஆன்ம விளிப்பில் கொடியிடம், “கொடி. குழந்தையைப் புவனாவிடம் எடுத்துச் செல்.” என்றாள்.

கொடி உடனே அவந்திகாவின் கையிலிருந்த குழந்தையைச் சுற்றி புடவை தொட்டில் போலக் குழந்தையைத் தூக்கிச் சென்று புவனாவிடம் சேர்த்தது.

இதனை எதிர்பார்க்காத அதித்ரி பற்களை நரநரவெனக் கடித்து, “வீணர்கள். கடைசி நேரத்தில் இப்படி வந்து இம்சை கொடுக்கிறார்கள்.” என்று அவள் ஒரு கையில் தண்டாயுதத்தை எடுத்தாள்.

கூடவே அவளது மறுக் கையிலிருந்து அவளது ஆன்மீக ஆற்றலால் உள்ளங்கை அளவான பல கூர்மையான சிறிய நட்சத்திர வடிவ ஆயுதத்தை எதிரில் இருந்த நால்வரையும் நோக்கி வீசினாள்.

அதற்குள் கொடி புவனாவின் கையில் குழந்தையைக் கொடுத்துவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்திருந்த அவந்திகாவின் கையிழுப்பில், மீண்டு அவந்திகாவை நோக்கி வர ஆரம்பித்திருந்தது.

முகிலன் தன்னை நோக்கி வந்த நட்சத்திர வடிவ ஆயுதத்தை வேகமாக ஏய்யப்பட்ட தன் அம்புக் கொண்டு தடுத்து நிறுத்தித் தண்டாயுதத்துடன் அவர்களை நோக்கி முன்னேறி வந்த அதித்ரியை நோக்கி மற்றொரு அம்பை ஏய்தான்.

மதியும் அவளை நோக்கி வந்த நட்சத்திர வடிவ ஆயுதத்தைத் தன் வாள் கொண்டு தடுத்து அதித்ரியை நோக்கி வாளை வீச அவளை நோக்கிச் சென்றாள்.

கைப்பாவைச் சக்கரத்திலிருந்து இன்னமும் விடுப்படாத அவந்திகா, அவசரமாகக் கொடியைகொண்டு அந்த நட்சத்திர வடிவ ஆயுதத்தைச் சுற்றி இருந்த காற்றை சுழற்றி அந்த ஆயுதத்தைத் திருப்பி அதித்ரியையே நோக்கிச் செலுத்தினாள்.

நந்தன் ஒரு கையின் உள்ளங்கையிலிருந்து சாம்பல் நிறத்தில் ஒரு ஒளி பந்தை உருவாகி அவனை நோக்கி வந்த நட்சத்திர ஆயுதம் நோக்கி வீச அது தூள் தூளாகியது. அவனது மறுக்கை விரல் அசைவில் சாம்பல் நிற பட்டாம்பூச்சி உருவாகி அவந்திகாவை கைப்பாவை சக்கரத்திலிருந்து விடுவித்தது.

இப்படி அனைத்து ரிஷிமுனிகளும் சண்டையிட தயாராகி நிற்பதை உணர்ந்த புவனா பயத்துடன் நிமிர்ந்து எதிரில் நடப்பதை நோக்கினாள். இந்த ரிஷிமுனிகளுக்கு இடையூறாக இங்கேயே நின்றிருக்க கூடாது என்று எண்ணி, ஒரு குளத்திலிருந்து விலகித் திரும்பி நடக்க முயன்றாள்.

ஆனால் அதற்குள் அதித்ரி அவளைக் கண்டுவிட புவனாவை நோக்கிப் புதிய நட்சத்திர வடிவ ஆயுதத்தை வீசினாள். அதுவும் அவளது வலது காலைப் பதம்பார்த்தது. சட்டெனத் தன் காலில் ஏற்பட்ட வலியால் புவனா, “ஆ…” என்று கத்தியவிதமாக ஒரு கால் முட்டிப் போட்டுத் தரையில் விழுந்தாள்.

விழுந்த போதும் அன்னிச்சை செயலாகக் கையிலிருந்த குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படாமல் மார்போடு அணைத்துக் கொண்டாள். புவனாவின் கத்தலில் அனைவருமே திரும்பி ஒரு நொடி புவனாவை பார்த்தனர்.

நந்தன் புவனா மற்றும் அந்தக் குழந்தையுடன் இடமாற்றும் சக்கரத்தின் மூலமாக அங்கிருந்து மறைந்தான். பின் மீண்டும் நந்தன் மட்டும் தனியாக அந்தக் குளத்திற்கு வந்தான்.

மறுநொடி நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கண்களாலே செய்தி பரிமாறிக் கொண்டு செயலில் ஈடுபட்டனர். அதன்படி, மதி இன்பனை நோக்கித் தன் வாளை வீசினாள். முகிலன் ஒன்றை அடுத்து மற்றொன்று என அம்புகளை அதித்ரியை நோக்கி விச ஆரம்பித்தான்.

அங்கு நிகழ்வதை அதிர்ச்சியுடன் நகரவும் சக்தி இல்லாமல் ஸ்தம்பித்து பார்த்திருந்த விந்தியாவின் கழுத்து வளைவில் கொடியினை வீசி உறங்குவதற்கான குத்தூசியிட்டு உறங்க வைத்தாள் அவந்திகா.

குத்தூசி அவள் கழுத்தில் பட்டதும் விந்தியா உடலின் சக்தியெல்லாம் இழந்தவளாகக் கண்கள் சொருக இருக்கும் இடத்திலே சரிந்துவிழுந்து உறங்கிப் போனாள்.

மதி முகிலனுடன் இன்பனும் அதித்ரியும் சண்டையிட்டுக் கொண்டிருந்த போதும், புவனா மற்றும் குழந்தையின் மீது இருவருமே ஒரு கண்ணாயிருந்தனர். இடத்திற்கு இடம் ஆன்மீக ஆற்றல் மாறுபட்டு இடமாற்றும் சக்கரம் பாதிக்கபடும் என்று கொஞ்சமும் பயம் இல்லாமல் எந்தவித கருவியும் இல்லாமல் நந்தன் அதனைப் பயன்படுத்தியதை நினைத்து இருவருமே அதிர்ந்தனர்.

‘இடமாற்றும் சக்கரம் உருவாக்குவதை கற்பதற்கு குறைந்தது ஆறு சக்கர ஆன்மீக ஆற்றல் இருக்க வேண்டும். அப்படியென்றால் இந்த மாதங்கயாளி அவர்களை விடவும் சக்தி வாய்ந்தவன்.’ என்று நந்தனை ஓர கண்ணில் பார்த்து அதித்ரி அதிர்ந்தாள்.

‘ஆறு சக்கர ஆன்மீக ஆற்றலாவது இருக்கும் இந்த ஆள் ஏன் நேற்றைக்கு முந்தைய நாள் என் கைப்பாவை சக்கரத்திற்கு கட்டுபட்டான்.’ என்று யோசித்த இன்பனின் முகமெல்லாம் உண்மை உணர்ந்து வியர்த்தது.

‘வந்திருப்பவர்கள் தங்களைவிடவும் பலமற்றவர்கள் என்ற எண்ணமிருந்ததாலே, தேவையில்லாத கலவரத்தை இந்தக் கிராம மக்களிடம் உருக்காமல், சத்தமின்றி உயிரை மீட்கும் சக்கரம்மூலம் உயிரை மீட்டுவிட்டு பிறகு இவர்களைக் கவனிக்கலம் என்று நினைத்தோம். ஆனால்…’ என்று யோசித்த அதித்ரி, “இன்பன்…” என்று கத்தினாள்.

அதித்ரியின் குரல் கேட்குமுன்னே எதிரில் இருப்பவர்களின் பலம் உணர்ந்து தன்னை முதலில் பாதுகாத்துக் கொள்வது மேல் என்று இன்பன் மதியின் பிடியிலிருந்து விலகிப் பின்னோக்கி வேகமாகச் சென்றான்.

அதற்குள் அதித்ரியும் பின்னோக்கி வர இருவரும் சேர்ந்து அவர்களின் கைக்காப்பிலிருந்து உருண்டை வடிவ சாம்பல் நிற கல்லை எடுத்துக் கைவிரல்களால் அதனைப் பொடியாக்கினர். அது பொடியானதும் இடமாற்றும் சக்கரம் அவர்கள் எதிரில் உருவாகி அவர்கள் இருவரும் மறைந்தனர்.

அவர்கள் பின்னோக்கி செல்வதை பார்த்ததுமே துரத்திக் கொண்டு வந்த மதியும் முகிலனும் அங்கிருந்து அவர்கள் திடிரென்று மறைந்ததை பார்த்து, “என்ன?!! பயந்து ஓடிவிட்டனரா?” என்று ஒன்றாகச் சொன்னனர்.

இதை எதிர்பார்த்த நந்தன், “அவர்களால் அதிக தூரம் போக முடியாது. முதலில் இந்த உயிர் உறிஞ்சும் சக்கரத்தையும் உயிர் மீட்கும் சக்கரத்தையும் உடைக்க வேண்டும். பிறகு அவர்களைக் கவனிக்கலாம்.” என்றான்.

அவந்திகாவும் நந்தனை ஒப்பி, “ஆமாம். இந்தப் பெண் விந்தியா சொன்னது எல்லாம் உண்மையில்லை என்ற போதும், அவள் குழந்தையைப் பலி கொடுப்பதாக ஒப்பந்தமிட்டதுமட்டும் உண்மை. அதனால் முதலில் இந்த உயிர் மீட்கும் சக்கரத்தை உடைக்க வேண்டும்.

ஒப்பந்தபடி குழந்தை அருகில் இல்லையென்றாலும் அது குழந்தையை முழுதும் கொல்லாது என்ற போதும், ஒப்பந்தம் உடைத்த காரணத்தால் குழந்தையின் உடல் நிலை பாதிக்கபட வாய்ப்பிருக்கு. அதனால் முதலில் உயிர் மீட்கும் சக்கரத்தை உடைக்க வேண்டும்.

பின் உயிர் உறிஞ்சும் சக்கரத்தை எதிர்திசையில் மாற்றி, அதனால் உறிஞ்சபட்ட உயிர் பிரிவுகளை அந்த ஒன்பது பெண்களிடமும் சேர்க்க வேண்டும்.” என்று கூறி சற்று நிறுத்தி, “மதி முகிலன், நானும் நந்தனும் குளத்திற்கு அடியில் சென்று உயிர் மீட்கும் சக்கரத்தை உடைக்க வழி முறைகளைப் பார்கிறோம்.

நீங்க இருவரும் குளத்தின் மேல் இருந்து எந்தவித அசம்பாவிதமும் வாராதபடி பாதுக்காக்க வேண்டும்.” என்றாள்.

மதியும் முகிலனும் அவந்திகாவிற்கு சரி என்பது போலத் தலை அசைத்துக் குளத்தின் இருப்புரம் பிரிந்து நின்று காவலை போல் நின்றனர். அவர்களைத் தொடர்ந்து அவந்திகா குளத்தில் இறங்க ஆரம்பித்தாள். நந்தன் எதுவும் பேசாமல் அவந்திகாவுடன் குளத்தில் குதித்தான்.

வெளியில் உயிர் மீட்கும் சக்கரம் கொண்டு பிணைக்கப்பட்டு குளத்தின் வெளியில் தெரிந்த தாமரை இலையின் காம்பை பின் தொடர்ந்து அதன் வேரைத் தேடிச் சென்றாள் அவந்திகா. அங்கிருந்து உயிர் மீட்கும் சக்கரத்தினை உடைப்பது எளிதாக இருக்குமென்று நினைத்தாள்.

வெளியில் பார்க்க ஆழமற்ற சிறிய குளம்போல் இருந்த போதும், தண்ணீரில் சென்றபிறகு அந்தக் குளம் மிகவும் ஆழம் என்பது போலத் தெரிந்தது. ஆன்மீக ஆற்றலில் தன் சுவாசத்தை சீர் செய்த அவந்திகா முன்னே நீந்திச் செல்ல நந்தன் அவள் பின்னே நிந்தி சென்றான்.

ஏற்கனவே விடியற்காலை என்பதால் இருண்டு இருந்த குளத்தின் மேற்பரப்பு, அவர்கள் நீந்தி ஆழம் செல்லச் செல்லக் கும்மிருட்டாகியது. இருந்தும் வேர் இருக்கும் இடத்தை அடைந்ததுப் போலத் தோன்றவில்லை.

எங்குத் திரும்பியும் இருளை பார்த்த அவந்திகா ஒரு கையால் அந்தத் தாமரை கொடியின் தண்டைப் பற்றியவிதமாக, ‘சே மனிதனாக இருப்பதால் என் விழியால் எதிரில் என்ன இருக்கிறது என்று கூடச் சரியாகப் பார்க்க முடியவில்லை. எந்நேரமும் கவனிக்கும் சக்கரத்தை உருவாக்க முடியுமா?’ என்று குறைப்பட்டாள்.

அவள் எண்ணம் உணர்ந்தானோ என்னமோ, நந்தன் வேகமாக நீந்தி வந்து அவந்திகாவின் வலது கையைத் தன் இடது கையால் பற்றி, தன் இடது கையில் வெள்ளை நிற ஒளியினை ஏற்படுத்தினான். ‘யார் தன் கையைப் பற்றியது.’ என்று சற்று எச்சரிக்கையுடன் அவந்திகா நந்தன் இருந்தபுரம் திரும்ப அவனும் அவள் அருகில் முகம் திருப்பியிருப்பான் போல, அவன் எழுப்பிய ஒளியால் அவள் முன் நந்தனின் முகம் மிக அருகில் தெரிந்தது.

நீரில் அவன் தலை முடி அசைந்தாடிய போதும் அவனது கண்கள் அவளையே வசிகரமாகப் பார்த்தது. நீரில் இருந்த போதும், அவனது இதழ்கள் அவன் வழக்கமாக உதிர்க்கும் சின்ன சிரிப்பை உதிர்த்து அவனது உதடுகளின் இடையில் வெண்ணிற பற்களை அவளுக்குக் காண்பித்தது.

விழி விரித்து அவனைப் பார்த்த அவந்திகாவின் இதயம் ஒரு நொடி வேகமாகத் துடித்து மீண்டது. சட்டென வேறுபுரம் முகம் திருப்பினாள். அவனிலிருந்து சற்று விலகிச் செல்ல எத்தனித்தாள் அவள் எண்ணம் உணர்ந்தவனாக நந்தன் அவளை விலகிச் செல்ல விடாமல் இழுத்து பற்றி அவளது இடைவளைத்தான்.

அவனது செயலின் காரணம்புரியாமல் திடுக்கிட்டு மீண்டும் நந்தனை திரும்பிப் பார்த்த அவந்திகா, நந்தனின் கண்ணசைவில் அவர்களைச் சுற்றி பார்த்தாள். நந்தன் அவன் கையிலிருந்த ஒளியை இன்னும் அதிக படுத்தி சுற்றி இருக்கும் சூழலை அவந்திகா தெளிவாகப் பார்க்க உதவினான்.

அந்த ஒளி அவளைச் சுற்றிபரவிய பிறகே அவந்திகாவிற்கு அவர்கள் இருக்கும் இடத்தின் நிலை புரிந்தது. இப்போது அவர்கள் நீந்திச் சென்றுக் கொண்டிருப்பது குளம் போலில்லை. ஏதோ நீரினுள் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட சுரங்க பாதைப் போல் தெரிந்தது.

அந்தச் சுரங்க பாதையில் அதிக பட்சமாக அருகருகில் என்றால் இருவர் ஒன்றாக நீந்திச் செல்ல முடியும். ஆனால் குளத்தின் மேலிருந்த தாமரை இலையின் தண்டை மையமாகக் கொண்டு அதிக பட்சமாக 4 மீற்றர் சுற்றளவே கொண்ட உருளை வடிவ குழல்போல அந்தப் பாதை நீண்டு எங்கோச் சென்றது.

வியப்பாக எல்லை இல்லாமல் நீண்டிருந்த அந்தத் தாமரை தண்டினை பார்த்த அவந்திகா திரும்பி நந்தனை பார்த்தாள். இருவருள்ளும் ஒரே எண்ணம்போல, விரைந்து முன்னேறி நிந்தினர். அவந்திகாவின் இடைப்பற்றியிருந்த நந்தன், அவளை அவனிலிருந்து விடுவிக்கும் எண்ணமுடன் இல்லை.

அவளையும் அவனுடன் சேர்த்து பிடித்து நீந்தும் வேகத்தை வெகுவாக அதிகபடுத்தினான். அந்தச் சுரங்க பாதை பல வளைவுகளைக் கடந்துச் சென்றது. பின் கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சுரந்த பாதையின் சுற்றளவு பெரியதாகி பின் மற்றொரு குளத்துடன் அது இணைந்தது.

எவ்வளவு நேரம் அவந்திகாவும் நந்தனும் நீரினுள் நீந்திக் கொண்டிருந்தனரோ. அவர்கள் அடைந்த அந்த மற்றொரு குளத்தின் மேற்பரப்பிலிருந்து லேசாக ஒளி வீச ஆரம்பித்ததை பார்த்ததில் வெளியில் சூரியன் உதித்து வெளிச்சம் பரவத் தொடங்கி இருப்பது தெரிந்தது.

குளத்தின் மேற் பரப்பிற்கு வந்த அவந்திகா வேகமாக மூச்சை இழுத்து விட்டாள். நந்தன் எந்தவித மாற்றமும் இல்லாமல் மேல் பரப்பு வந்ததும் அவந்திகாவின் இடையைவிட்டு தள்ளிச் சென்றான்.

எப்படி இந்தத் தாமரை தண்டு இதுவரை நீண்டு வளர்ந்தது என்பது ஒரு ஆச்சரியமென்றால் அதற்கு வேர் என்பதே இல்லாமல் மற்றொரு தாமரை இலையில்அந்தத் தண்டின் முனை முடிந்தது மற்றொரு ஆச்சரியம். மேற்பரப்புக்கு வந்த அவந்திகா இது என்ன இடமென்று குழப்பமாகக் குளத்தைச் சுற்றி பார்த்தாள்.

காட்டிலிருந்த குளம் போலல்லாமல் இந்தக் குளம் சற்று பெரியதாகவும், குளத்தின் நான்குபுரம் மதில் சுவர்களும், கற்களால் ஆன படிக்கட்டுகளும் அமைந்து நேர்த்தியாகப் பராமறிக்க பட்டும் இருந்தது. அவள் மேலும் குளத்தைப் பற்றிஆராய எண்ணிக் கொண்டிருக்கும் போதே நந்தன் பேச ஆரம்பித்தான்.

“இளவரசி. இது ஊர் நடுவில் உள்ள குளம்.” என்றவன் அந்தக் குளத்தின் நடுவிலிருந்த தாமரை இலையைச் சுட்டிக் காட்டி, “இதன் மீதுதான் உயிர் மீட்கும் சக்கரத்தை வரைந்திருக்க வேண்டும். உயிர் மீட்கும் சக்கரம் சரியாக வேலை செய்ய வேண்டுமென்றால் 10 உயிர் பிரிவுகளை நட்சத்திர வடிவில் 10 முனைகளில் பொருத்தி, உயிர் மீட்கும் சக்கரத்தை அதன் மத்தியில் வைக்க வேண்டும்.

ஆனால் அந்த அதித்ரியும் இன்பனும் வெளிப்படையாக ஊரி நடுவில் இருக்கும் இந்தக் குளத்தில் அதனைச் செய்தால் அதிக நடமாட்டத்தால் அவர்களின் திட்டம் பாதிக்க வாய்ப்பிருக்கும் என்று இப்படியொரு சுரங்க பாதையும் அதனைத் தொடர்ந்து யாருமற்ற இடத்தில் ஒரு குளத்தையும் செயற்கையாக உருவாக்கி அதனை இதனுடன் இணைத்திருக்க வேண்டும்.” என்றான்.

பின் தன் விரல் அசைவில் அவர்களையும் அந்த உயிர் மீட்கும் சக்கரம் இருந்த இலையையும் சுற்றி பாதுகாக்கும் சக்கரமிட்டான்.

அவந்திகா அவனது விளக்கத்தில் சரிதான் என்பது போலத் தலையசைத்தாள். பின் தன் நெற்றி சுருக்கி செந்நிற நிலவைப் பார்த்து, “நந்தன். பௌர்ணமி முடிய இன்னும் 5 நாழிகைதான் இருக்கிறது. அதற்குள் இந்த உயிர் மீட்கும் சக்கரத்தை உடைத்து, உயிர் உறிஞ்சும் சக்கரத்தைத் திருப்பி (Reverse) அனைவரையும் காப்பாற்றிவிட முடியுமா?” என்று சற்று கவலை தோன்ற கேட்டாள்.

அவளது கவலை உணர்ந்த நந்தன், “முயற்சிக்கலாம் இளவரசி. உயிர் உறிஞ்சும் சக்கரத்தைத் திருப்பிப் பழைபடி மாற்ற நேரம் போதுமா என்று தெரியவில்லை. ஆனால் உயிர் மீட்கும் சக்கரத்தை உடைத்துவிடலாம். ஒருவேளை உயிர் உறிஞ்சும் சக்கரத்தைத் திருப்ப நேரமில்லையென்றால் அடுத்த பௌர்ணமி வரை அதனைப் பாதுகாத்து காத்திருக்க நேரலாம்.” என்றான்.

அவந்திகா, “ம்ம்…புரிகிறது. ” என்றாள். பின் உயிர் மீட்கும் சக்கரமிருந்த இலையை நோக்கிச் சென்றாள். நந்தனும் அவளுடன் சென்று அவள் அருகில் நின்றான்.

பின் கண்கள் மூடிக் கவனிக்கும் சக்கரத்தினால் அந்த இலையை ஊடுருவ முயன்றாள். ஆனால் 5 சக்கர சக்தியால் உருவாக்கப்பட்ட அந்த உயிர் மீட்கும் சக்கரத்தின் நுணுக்கத்தை அவளால் அறிய முடியவில்லை. இயலாமையில் பெருமூச்சுவிட்டு நந்தனை திரும்பிப் பார்த்தாள்.

நந்தன் அவள் மனம் உணர்ந்தவனாக, “இளவரசி நாம் இருவரும் சேர்ந்து இதனை உடைக்கலாம். உங்களின் நுணுக்கத்தையும் எனது ஆன்மீக ஆற்றலையும் இணைத்தால் விரைவில் இதனை உடைத்துவிடலாம்.(1)” என்றான் மென்னகையுடன்.

அவந்திகாவும் அதுவே சரி என்பது போலத் தலையசைத்தாள். அவள் தலை அசைத்ததும் அவள் அருகில் வந்த நந்தன் அவளது நெற்றியில் தன் நெற்றியை பொருத்தினான். பின் இருவரும் இணைந்து கவனிக்கும் சக்கரத்தின் மூலம் அந்த இலையைப் பார்த்தனர்.

சில நிமிடங்களிலே உயிர் மீட்கும் சக்கரத்தின் நுணுக்கத்தை உணர்ந்த அவந்திகா, நந்தனின் ஆன்மீக ஆற்றலை அந்தச் சக்கரத்தின் எதிர் திசையில் செலுத்தினாள். நந்தனின் ஆன்மீக ஆற்றல் எதிர் திசையில் செல்லச் செல்லச் செழிப்புடன் பச்சை நிறத்தில் இருந்த அந்தத் தாமரை இலை கொஞ்சம் கொஞ்சமாகக் கருக்க ஆரம்பித்தது.

அந்தக் கருப்பு மெல்ல இலையிலிருந்து தண்டிற்கு பரவியது. அந்தத் தண்டின் மூலமாகவே அது இணைந்திருந்த மற்றொரு குளம்வரை சென்று, அங்கிருந்த தாமரை இலையும் அதன் உயிர்பை இழந்தது. உயிர் உறிஞ்சும் சக்கரம் வரைய பட்டிருந்த அந்தத் தாமரையை தவிர மொத்த தாமரை கொடியும் அதன் உயிர்ப்பை இழந்து காற்றிலே கரைந்து போனது.

உயிர் மீட்கும் சக்கரம் முழுதும் உடைவதற்குள் அவந்திகாவின் நெற்றியில் லேசாக வியர்வை வர ஆரம்பித்திருந்து. ஒரு வழியாக உயிர் மீட்கும் சக்கரம் உடைந்ததை உறுதி படுத்திக் கொண்ட அவந்திகாவும் நந்தனும் ஒருவரிலிருந்து ஒருவர் விலகினர்.

அவந்திகா பெருமூச்சுவிட்டாள். நந்தன் சின்ன சிரிப்பை உதிர்த்தான். பின் அவர்களைச் சுற்றி போடப்பட்டிருந்த பாதுகாக்கும் சக்கரத்தை விலக்கி அங்கிருந்து இடம்மாற்றும் சக்கரம் மூலமாக மீண்டும் ஊர் எல்லையிலிருந்த குளத்தை அவந்திகாவும் நந்தனும் அடைந்தனர்.

Author Note:

(1) Hero sir. உங்களாலே அந்த உயிர் மீட்கும் சக்கரத்தை (Soul Retrieving Array) உடைக்கமுடியும்தானே. எதுக்கு அவந்தியோட நெற்றியோட நெற்றி வைத்துச் சேர்ந்து உடைக்கலாம்னு சொல்றீங்க. இப்படி திருட்டு வேலையெல்லாம் செய்ய வேண்டியது. அப்பறம் நாங்கதான் திருட்டு பூனை சொல்றொமுன் குறை சொல்ல வேண்டியது?!