யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 36

879

அத்தியாயம் – 36

அவளிடம் வந்து அவள்மீது அமர்ந்த அந்தப் பட்டாம்பூச்சியை பார்த்த அவந்திகா, அதன் இறகை லேசாக வருடி, “நன்றி நந்தன்.” என்று மனதில் இதம் பொங்க சிரித்தாள்.

அவந்திகா இயல்புக்கு மாறிவிட்டத்தை பார்த்த நந்தன் மென்னகையிட்டு, “நான் கிளம்புகிறேன் இளவரசி.” என்றான்.

அதுவரை பட்டாம்பூச்சை ஆசையாகப் பார்த்திருந்தவள் அவன் கிளம்புவதை உணர்ந்து, “ம்ம்.” என்றாள். சற்று நிறுத்தி, “நந்தன். ஒரு நிமிடம். உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்.” என்றாள்.

நந்தன், “ம்ம்?”.

பின் அவனை நேராகப் பார்க்காமல், தன் தோள்மீது இருந்த பட்டாம்பூச்சை விரல் நுனியில் பற்றித் தன் உள்ளங்கையில் வைத்து அதனை மற்றொரு கையால் லேசாக வருடிய விதமாக,“நான் ஆபத்திலிருக்கும் போதெல்லாம் எப்படி சரியான நேரத்திற்கு நீங்க நான் இருக்கும் இடத்திற்கு வரீங்க.

உங்களுக்கு யாளி உலகம் முழுதும் ஒற்றர்கள் இருப்பதாக என் சிநேகிதர்கள் சொன்னாங்க. இருந்தும் என் அருகில் யாரும் ஒற்றர்கள் என்னைக் கூர்ந்து பார்ப்பதாக நான் என்றும் உணர்ந்ததில்லை. அதனால் அது எப்படி நான் சங்கடத்தில் இருக்கும் போதெல்லாம் உங்களுக்குத் தெரிகிறது?” என்று அவளுள் ஏற்பட்டிருந்த பல நாள் சந்தேகத்தைக் கேட்டாள்.

நந்தன், “… ‘@_@’”.

அவன் அவளுக்குப் பதில் சொல்லாமல் அவளைப் பார்த்திருப்பதை உணர்ந்த அவந்திகா, “ம்ம்?” என்று மீண்டும் கேள்வியாக அவனைப் பார்த்தாள்.

அதற்குச் சின்ன சிரிப்பை உதிர்த்த நந்தன், “இளவரசி, யாளி உலகம் முழுதும் உள்ள என் ஒற்றர்கள் பறவைகள். பறவைகளின் விழியில் நான் நினைக்கும் நேரத்தில் எங்கிருந்தாலும் அதன் அருகில் உள்ள சூழலை என்னால் நான் இருக்கும் இடத்திலிருந்து கவனிக்கும் சக்கரத்தை உருவாக்கி அறிய முடியும்.

யாரும் அவ்வளவு எளிதில் அந்தப் பறவை ஒற்றர்களைக் கண்டறிய முடியாது. ஆனால் உங்களுடன் நான் எந்தப் பறவையையும் அப்படி ஒற்று வேலை செய்ய அனுப்பவில்லை.” என்று சற்று நிறுத்தி அவந்திகாவின் கழுத்தை ஒரு நொடி பார்த்து, “உங்க கழுத்தில் இருக்கும் நான் தந்த அந்தக் கருப்பு கயிறு என் ஆன்மாவுடன் இணைந்த ஒன்று.

எப்போதெல்லாம் உங்க இதயம் படப்படக்கிறதோ, உங்க மனம் எதனாலோ சஞ்சலப்படுகிறதோ, அப்போதெல்லாம் என்னால் உங்க இதயத்தின் அருகிலிருக்கும் அந்தக் கயிற்றின் மூலம் என்னால் உணர முடியும்.

அதனோடு உங்களைச் சுற்றி இருப்பற்றையும் என்னால் அறிய முடியும். அந்தக் கயிறால் நான் நினைக்கும்போது நீங்க இருக்கும் இடத்திற்கு இடமாற்றும் சக்கரத்தின் மூலம் என்னால் உடனே வர முடியும்.” என்றான் மென்னகை மாறாமல்.

அவனது பதிலில் அதிசயித்து பார்த்த அவந்திகா, குனிந்து அவள் கழுத்தில் அணிந்திருந்த கயிற்றைத் தடவியபடி, “அது அப்படியா? என்னால் இந்தக் கழுத்தணியில் எந்தப் பேதத்தையும் உணர முடியவில்லையே. உண்மையில் மிகவும் நேர்த்தியாக இதனை வடிவமைத்திருக்கீங்க நந்தன்.” என்றாள்.

சிறிது நிறுத்தி, நிமிர்ந்து எதிரில் இருந்தவனை பார்த்துப் புன்னகைத்து மீண்டும் குரலில் நெகிழ்ச்சியுடன், “நன்றி.” என்றாள்.

அவள் மீண்டும் மீண்டும் நன்றி சொல்வதை நந்தன் விரும்பவில்லை. அவன் முகம் உடனே கருத்து சுருங்கி தீவிரமான குரலில், “என் இளவரசியை பாதுகாப்பதற்காகதான் நான் உயிர் வாழ்வதே! இது என் கடமை.” என்றான்.

அவன் முகம் கருத்ததின் காரணத்தை அவன் சொல்லாமலே உணர்ந்த அவந்திகா, ‘இவனுக்கு நான் என்ன செய்தேன் என்று என்மீது இவ்வளவு விசுவாசம்!’ என்று திகைத்தாள். மனதுள் நந்தனை நோக்கி ஏதோவித கிளர்ச்சி அவளையும் அறியாமல் உண்டாகி அவள் இதழ் விரிவதை அவளால் தடுக்க முடியவில்லை.

புன்னகையுடன், “ம்ம்.” என்றாள். பின் அவனிடம் அவளைப் பற்றிய அனைத்தும் சொல்லிவிட எண்ணி, சற்று நிறுத்தி, “நந்தன் அந்த முக்காடு உருவம்.?” என்று சொல்ல ஆரம்பித்துத் தயங்கி தலை தாழ்த்தி நின்றாள் அவந்திகா.

அவள் தயக்கம் உணர்ந்த நந்தன், “இளவரசி, அவனைப் பற்றிச் சொல்லவதால் உங்களுக்கு மன சங்கடமோ, அச்சமோ, வருத்தமோ ஏற்படுமானால் சொல்ல வேண்டாம். நானே சில தினங்களில் அவனைப் பற்றிஅறிந்துவிடுவேன்.” என்றான்.

நந்தனை நிமிர்ந்து பார்த்த அவந்திகா, “அ…அவன்…” என்று மீண்டும் சொல்ல முயன்றாள். ஆனால் முடியாமல், ஒரு பெருமூச்சுவிட்டு, “சரி…” என்று தலையசைத்தாள். பின், “ஆனால் நீங்களும் அவனைப் பார்த்துவிட்டதால், அவன் உங்களைத் தேடியும் வர வாய்ப்பிருக்கு. அதனால் அவனிடம் இருக்கும் அந்தச் சிவப்பு நிற பழத்திடம் நீங்களும் எச்சரிக்கையாக இருங்க. ” என்று எச்சரித்தாள்.

நந்தன் அதன் காரணம் முழுதும் புரியவில்லை என்ற போதும், “சரி.” என்றான். பின் அதிக நேரம் அவளுடன் பேசிக் கொண்டிராமல், அவந்திகாவை உறங்கச் சொல்லிவிட்டு நந்தன் அங்கிருந்து கிளம்பி, அவந்திகாவின் சிநேகிதர்கள் இருந்த சத்திரத்திற்கு சென்றான்.

நந்தன், மதி, முகிலன் மூவரும் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்களின் அறை கதவு தட்டப்பட்டது. இதனை எதிர்பார்த்தே இருந்த நந்தன், விஷமமாகச் சிரித்தான். இந்த நடுநிசியில் யாரையும் எதிர் பாராத மதியும், முகிலனும் எச்சரிக்கையாகக் கதவைப் பார்த்தனர்.

உடனே முகிலன் விழி மூடிக் கவனிக்கும் சக்கரத்தை உருவாக்கி வந்திருப்பது யாரென்று பார்த்தான். தலையில் சணல் கோணிப்பையால் ஆன முக்காடுடனும், கையில் குழந்தையுடனும் ஒரு பெண் உருவம் தெரிந்தது.

வந்திருப்பவரால் ஆபத்தில்லை என்பதை உணர்ந்து, கதவைத் திறந்த முகிலன் எதுவும் பேசாமல் வந்திருப்பவளை பார்த்தான். அதற்குள் மதியும் அவன் அருகில் வந்திருக்க, “என்ன வேண்டும்?” என்று நேரடையாகக் கேட்டாள்.

அதற்கு வந்திருந்த பெண், “உள்ளே வந்து பேசலாமா?” என்றாள்.

முகிலனும், மதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பின் திரும்பி நந்தனை பார்த்தனர். நந்தன் வரசொல் என்பது போலத் தலையசைத்தான்.

மதி விலக, முகிலன், “வா…” என்று வந்திருந்த பெண்ணை உள்ளே அழைத்து மீண்டும் கதவைத் தாழிட்டு மற்றொருமுறை பாதுகாப்பு சக்கரம் சிறப்பாக இருக்கிறதா என்று ஆராய்ந்தும், பக்கத்து இரு அறைகளிலிருந்த பௌதிகாவும், மாப்பிள்ளை வீட்டு ஆட்களும் பாதுக்காப்பாக இருப்பதை உறுதி செய்தான்.

உள்ளே வந்த பெண் தன் முக்காடை விலக்கி, அந்த அறையில் சுற்றும் முற்றும் யாரையோ தேடுவது போல் பார்த்தாள். பின் எதிரில் கேள்வியாக அவளைப் பார்த்திருந்த இருவரை பார்த்தாள். அவளாகப் பேசட்டும் என்று பொறுமையாகக் காத்திருந்த நந்தனையும் பார்த்தாள்.

பின் அவர்கள் இருவரையும் விலக்கி, அவர்கள்பின் நின்றிருந்த நந்தனிடன் சென்று, “ரிஷிமுனி, உங்க பெயர்தான் பவளனா?” என்று கேட்டாள்.

அதற்கு ஆமாம் என்பது போலத் தலை அசைத்தான் நந்தன். உடனே முகம் மலர்ந்த அந்தப் பெண், “ரிஷிமுனி அவந்திகா இங்கில்லையா?” என்றாள்.

யாரென்றே தெரியாத பெண் திடீரென்று அவர்கள் அறைக்கு வந்து தன் சிநேகிதியை பற்றிக் கேட்க மதி முகிலன் இருவருமே எச்சரிக்கையாகினர். அதுவும் அவந்திகா இப்போது போலியான மணப்பெண்ணாக நடிக்க ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில் அவளைத் தேடி வந்திருப்பதை அவர்கள் சாதாரணமான செயலாக உணரவில்லை.

அவர்கள் அப்படி இருக்க, நந்தன், “முக்கிய வேளையாக வெளியில் சென்றிருக்காங்க. நீ சொல்ல வந்ததை எங்களிடம் சொல்லலாம். இல்லை அவரிடம்தான் சொல்ல வேண்டும் என்றால், அவர் வர இன்னும் இரு நாட்கள் ஆகும். நீ அதுவரை காத்திருப்பதென்றாலும் சரி.” என்றான்.

அதனைக் கேட்ட அந்தப் பெண், அவசரமாக, “என்ன? இரு நாட்கள் ஆகுமா?” என்று மறுப்பாகத் தலையசைத்து எங்கோ பார்த்தவிதம், “அதுவரை என்னால் காத்திருக்க முடியாதே. அதற்குள் எ…என் குழந்தை…” என்று அவளுள் முனுமுனுத்துக் கொண்டிருக்கும் போதே மனதுள் முடிவெடுத்தவளாக,

நிமிர்ந்து, “ரிஷிமுனிகளே. என் பெயர் விந்தியா. இந்த ஊர் பஞ்சாயித்து தலைவர் வேதன் என் சித்தப்பா. இந்த ஊரில் திடீரென்று நினைவற்று போன பெண்களைக் காப்பாற்றுவதற்கு உதவ நான் இங்கு வந்திருக்கிறேன்.” என்றாள்.

அவள் பதிலில் சற்று தள்ளியிருந்த மதி, நந்தன் அருகில் வந்து அந்தப் பெண் முன் நின்று அவளை ஆராயும் பார்வை பார்த்தாள். முகிலன், “முதலில் உட்கார். பிறகு என்னவிதத்தில் நீ உதவ முடியுமென்று சொல்.” என்று அவளிடம் நாற்காலியைக் காட்டி சொல்லி விட்டு நந்தனின் மறுப்புரம் வந்து நின்றான்.

விந்தியா, மதியின் ஆராயும் பார்வையில் வியர்த்துப் படப்படப்புடன் நிமிர்ந்து பார்க்கப் பயமுற்று, “ம்ம்…” என்று மெல்ல முகிலன் சொன்ன நாற்காலியில் அமர்ந்தாள். தோள்மீது கிடத்தியிருந்த பிள்ளையைத் தன் மடி மீது கிடத்தி, பதட்டமுடன் சொல்லத் தயங்குபவள் போல, “அ…அது…” என்றாள்.

அவளது பயம் பார்த்த முகிலன் மதியை பார்த்துக் கண்ணசைக்க மதியும் முகிலனை பார்த்துக் கண்ணசைத்து அவள் பார்வையை இயல்பாக்கி, “தயங்காமல் சொல்.” என்றாள்.

முகிலன், “எதுவென்றாலும் சொல். பயப்பட வேண்டாம். அவந்திகா எங்க சிநேகிதி. அவளைப் போலவேதான் நாங்களும். நீ முழுதும் எங்களை நம்பலாம்.” என்று விந்தியாவிற்கு தைரியம் கொடுத்தான்.

அவர்கள் தந்த ஊக்கத்தில் ஒரு பெருமூச்சுவிட்ட விந்தியா லேசாகத் தலை அசைத்து, “இந்த ஊர் பெண்களின் நினைவற்ற நிலைக்கு நான்தான் முதல் காரணம். ஆனால் இப்போது என் முடிவு மிகப் பெரிய தப்புனு புரியுது. என் தவறை சரி செய்ய எண்ணி,

ஊர் பெண்களைக் காப்பாற்ற முடியுமா என்று முயன்று பார்க்கவே நான் மகர அரசிற்கு இந்த ஊர் பெண்களின் நிலைகுறித்து பெயர் குறிப்பிடாமல் புகர் அனுப்பினேன். நல்லவேளையாக ரிஷிமுனி அடுத்த மூன்று தினத்திலே நீங்க இந்து வந்துட்டீங்க.” என்று முகிலனை பார்த்துச் சொன்னாள்.

அவள் சொன்னதில் இருந்த பல உள் உண்மையை அறிந்து மதியும் முகிலனும் திகைத்தனர். அவள் பேச ஆரம்பித்த பிறகே, அவர்களுக்கு எதிரில் இருந்த பெண்பற்றி வேதன் ஒருமுறை சொன்னது நினைவு வந்தது.

மதி, “மேலும் சொல்.” என்றாள்.

விந்தியா, “ஆனால் நீங்க வருவதற்குள் என் தங்கை விநோதாவும் நினைவற்று போய்விட்டாள். எனக்கு எதையும் மாற்ற முடியும் என்று நம்பிக்கையற்று செய்த தவறின் குற்ற உணர்ச்சியால் தவித்துக் கொண்டிருந்தபோது, ரிஷிமுனி நீங்க அவந்திகாவை உங்களுடன் அழைத்து வந்தீங்க.” என்று மீண்டும் முகிலனை பார்த்துப் பேசினாள்.

சிறிது நிறுத்தி, “முதலில் நான் என்னைப் பற்றிச் சொல்கிறேன். அப்போதுதான் என் நிலை உங்களுக்குப் புரியும்.” என்றாள்.

என்ன காரணம் இருந்தபோதும், மற்ற உயிர்களுக்கு ஆபத்து தரும்படி செய்வதை முகிலனாலும் சரி, மதியாலும் சரி ஏற்க முடியவில்லை. லேசான அதிருப்தியுடன் விந்தியாவை பார்த்தனர். அவர்களின் கோபத்தை எதிர்பார்த்தே இருந்த விந்தியா தொடர்ந்து பேசலானாள்.

“என் அன்னை நான் பிறந்தபோது ஒழுங்காகப் பாதுகாக்காததால் ஜன்னி வந்து இறந்து விட்டாள். என் தந்தை நான் பருவ வயதில் இருந்த போதே, அப்போது ஏற்பட்ட கடுமழை மின்னலில் அகப்பட்டு இறந்துவிட்டார்.

அதன் பிறகு என் சித்தப்பாவும் சிற்றன்னையும், எனக்குக் குறை ஏதும் இல்லாமல் வளர்த்தனர். வினோதாவும் விதுனாவும் என் செல்லச் சகோதரிகள். அதனால் எனக்கு அதிகமாக எந்தக் குறையும் இருக்கவில்லை. எனக்கு ஒன்றரை வருதத்திற்கு முன்பு மாதங்க(யானை) அரசைச் சேர்ந்தமனித யாளியான என் கணவருடன் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு எனக்கு எல்லாமே என் கணவர்தான். அவர்மீது நான் எல்லையற்ற பாசம் வைத்திருந்தேன். அவரும் என்மீது அப்படிதான். நாங்க மிகவும் சந்தோஷமாக இருக்கும்போது நான் கருவுற்றேன். ” என்றவள் தன் கையிலிருந்த நான்கு மாத மகனின் தலைகேசத்தை லேசாக வருடியபடி

“7 மாதத்திற்கு முன்பு மகபேறுக்காக என் சித்தாப்பாவின் வீட்டிற்கு வந்தேன். ஆனால் அப்போது நான் நினைக்கவில்லை. என் கணவரை உயிருடன் நான் பார்ப்பது அதுவே கடைசி முறையாக இருக்கும் என்று.” என்றவளின் குரல் லேசாகக் கம்ம, கண்ணில் ஈரம் பணிக்கச் சொன்னாள்.

அவளையும் மீறி, கண்ணில் இரு விழி நீர் வழிந்து, கையிலிருந்த குழந்தையின் முகத்தில் விழுந்தது. அந்த அறை முழுதும் அமைதியாகி விந்தியாவின் விசும்பும் சத்தம் மட்டுமே சில நொடிகள் கேட்டது.

முகிலன் நகர்ந்து சென்று நீர் குடுவையிலிருந்து சிறிய கிண்ணத்தில் நீர் ஊற்றி விந்தியாவிடம் கொடுத்தான். தலை குனிந்து தேம்பிக் கொண்டிருந்த விந்தியாவின் விழி வட்டத்தில் வந்த தண்ணிரை பார்த்தவள், உடனே தன் சேலை முந்தானையில் தன் கண்களைத் துடைத்து அவனிடமிருந்து நீரினை வாங்கி அருந்தினாள்.

பின் ஒருவாறு ஆசுவாச படுத்திக் கொண்டு, “நன்றி ரிஷிமுனி.” என்றாள்.

மதி, “உன் கணவனுக்கு என்ன ஆனது.?” என்றாள்.

விந்தியா மதியை பார்த்து, “4 மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். எனக்குக் குழந்தை பிறந்த செய்திக் கேட்டு என்னையும் என் செல்வத்தையும் பார்க்கப் பல பொருட்களையும் வாங்கி வந்தவர், வரும் வழியில் காட்டு பாதையில் கொள்ளையர்களால் கொல்லப்பட்டுவிட்டார்.

என் மகனின் தொப்புள் கொடி காய்ந்து விழுமுன்னே என் கணவரின் இறப்பு செய்தி என் காதில் விழுந்தது. என் வாழ்வே இருண்டு போனது. ஏன் கடவுள் என்னிடமிருந்து என்னை உயிராக நேசித்தவர்களை ஒவ்வொருவராகப் பிரிக்க வேண்டும். நான் என்ன தவறு செய்தேன்.

இதுவரை எந்த உயிருக்கும் எந்தத் தீங்கும் கனவிலும் நினக்காத எனக்கு மட்டும் ஏன் எல்லாம் இப்படி ஆனது. என்று என்னையே நான் நொந்துக் கொண்டு உண்ணவும் உறங்கவும் இல்லாமல் இருந்தபோது, என் அறைக்கு என் சித்தப்பா வந்தார்.” என்று அன்று நடந்ததை சொன்னாள்.

அன்று விரக்தியான விந்தியாவை வேதன் சந்தித்தபோது…

வேதன் மெத்தையில் உயிரற்று படுத்திருந்த விந்தியாவின் தலையை வருடி, “விந்தியா. இப்படி சாப்பிடாமல் இருந்தால் எப்படி? நடந்ததையே நினைத்திருந்தால் எதுவும் மாறப் போவதில்லை. உனக்கென்று இப்போது உன் குழந்தை இருக்கிறான். அவனைப் பார்க்க வேண்டாமா?” என்று,

விந்தியாவின் அருகில் உணவு தட்டைக் கொடுத்து, “முதலில் சாப்பிடு.” என்றார்.

அழுது அழுது கண்ணீரெல்லாம் வற்றிவிட்டதோ என்னமோ, அவள் முகத்தில் கண்ணீர் வழிந்த காய்ந்த கோடுகளும் லேசான விம்மலும் மட்டுமே அவளின் தோற்றமாக அப்போது இருந்தது. அவளது சித்தப்பாவின் தேற்றுதலில் எழுந்து உண்ண ஆரம்பித்தாள் விந்தியா.

அவள் உண்ணும் வரை அமைதியாக அவள் அருகில் அமர்ந்திருந்த வேதன் திடீரென்று அவளிடம் திரும்பி, “உன் கணவரை உயிருடன் மீட்க ஒரு வழி இருக்கிறது.” என்றார்.

அதனைக் கேட்ட விந்தியா திகைப்புற்று வேதனை பார்த்து, “என்ன சித்தப்பா… என்ன சொல்றீங்க. இறந்தவர்களை மீட்க முடியுமா?” என்று இதயத்தில் லேசான படபடப்பு தோன்ற கேட்டாள்.

வேதன் விஷமமாகச் சிரித்து, “முடியும். ஆனால் அதற்குச் சில தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கும். உனக்கு விருப்பம் இருந்தால் சொல். நான் வழிமுறைகளைச் சொல்கிறேன்.” என்றார்.

விந்தியா விழி விரித்து வேதனை சந்தேகமும், குழப்பமுமாகப் பார்த்தாள். பிறகு, “அதெப்படி சாத்தியம்.? என்ன தியாகச் செய்ய வேண்டும்.?” என்றாள்.

வேதன், “உயிர் மீட்கும் சக்கரத்தைக் கொண்டு உன் கணவரை உயிர் மீட்க முடியும். உயிர் உறிஞ்சும் சக்கரம் மூலமாக உயிருடன் இருப்பவர்களின் உயிரிலிருந்து பத்து உயிர் பிரிவுகளைப் பிரித்து உன் கணவரின் உடலில் உயிர்பிரிவுகளாக மாற்றி அவனை மீண்டும் உயிருடன் வர வைக்க முடியும்.

ஆனால் உயிர் மீட்கும் சக்கரம் உருவாக்க உன் கணவரின் இரத்த சொந்ததில் இருப்பவர் ஒருவரின் உயிரைத் தியாகம் செய்ய வேண்டும். அதாவது உன் குழந்தையைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கும்.

அதே சமயம், யார் யார் உயிரிலிருந்து நாம் உயிர் பிரிவை எடுக்கிறோமோ, அவர்கள் உன் திருமணம் நிச்சயமானபோது நிகழ்ந்த உணர்வுகளை உணர்ந்திருக்க வேண்டும். அப்படி செய்வதல் உன் கணவன் உயிர் மீளும்போது உன்னை மறக்காமல் இருப்பான். என்ன சொல்கிறாய்.?” என்றார்.

அவர் சொல்வதின் பொருளைப் பாதி உணர்ந்தும் பாதி புரியாமலும் பார்த்திருந்த விந்தியா திகிலுடன் எதிரில் சித்தப்பாவாக அமர்ந்திருந்த வேதனை பேயைப் பார்ப்பது போல் பார்த்தாள்.

அன்னிச்சை செயலாகத் தன் அருகில் மெத்தையில் கிடந்த குழந்தையைப் பார்த்தவள் குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு அவன் முகமெல்லாம் முத்தமிட்டவள், “இல்லை…இல்லை…முடியாது. இந்தப் பிஞ்சுக் குழந்தையைக் கொல்ல நான் அனுமதிக்க மாட்டேன்.

அதே போல என் கணவருக்காக மற்றவர்களின் உயிரைப் பாதிக்கச் செய்வதும் தவறு. அதற்கு நான் ஒருநாளும் சம்மதிக்க மாட்டேன்.” என்று அமைதியற்று, “இங்கிருந்து வெளியில் போங்க.” என்று கத்தினாள் விந்தியா.

இதனை எதிர் பார்த்திருந்தாரோ என்னமோ வேதன், “விந்தியா… உன் கணவர் உயிருடன் வந்தால் உன் மகனைப் போலப் பல மகன்கள் பிறக்கலாம். அதனோடு யோசித்து பார், எந்தத் தவறும் செய்யாமல் நீ இப்படி விரக்தியில் உளன்றுக் கொண்டிருக்கும்போது,

பல தவறுகள் செய்த போதும் எந்தத் துன்பமும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பவர்களை நினைத்து நீ ஏன் வருந்துகிறாய். உனக்கு அவர்களைப் போல ஆனந்தமாக வாழ ஆசையில்லை.? இரண்டு நாள் யோசி. பிறகு முடிவைச் சொல்.” என்றவர் அவள் யோசிக்க நேரம் கொடுப்பவர்போல அந்த அறையை விட்டுச் சென்றுவிட்டார்.

இன்று சத்திரத்தின் அறையில்…

பிறகு நான் இரண்டு நாள் மன உளச்சலுற்று குழம்பி கடைசியாக என் சித்தாப்பாவின் முடிவுக்குச் சம்மதம் சொன்னேன். அதன் பிறகு மாதங்க யாளி ரிஷிமுனி ஒருவரை சந்திக்க என் சித்தப்பா என்னை அழைத்துச் சென்றார்.

அந்த மாதங்கயாளி என்னுள் கனவுச் சக்கரம் உருவாக்கி என்னை என் கணவர் பெண் பார்க்க வந்தபோது நிகழ்ந்த நிகழ்வுகளை அறிந்துக் கொண்டார். அந்த நிகழ்வுகளைக் கைப்பாவை சக்கரம்மூலம் இன்று வரை நினைவற்று போன அந்த 9 பெண்களின் வீட்டிலும் பெண் பார்க்கும் படலமாக மாற்றினார் அந்த மாதங்க யாளி ரிஷிமுனி.

அநேகமாக 10வது பெண்ணின் வீட்டிலும் அது போன்ற நிகழ்வு நடந்திருக்கும் என்பது யூகம். ஆனால் யார் அந்த 10வது பெண் என்று எனக்குத் தெரியவில்லை. அந்த நிகழ்வுக்குப் பின் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையின் நினைவுகள் அனைத்தும் என் கணவரின் உயிர் பிரிவில் சேர்ந்துவிடுமாம்.

அதனால்தான், பெண் பார்த்துவிட்டுச் சென்றபிறகு அந்த மாப்பிள்ளைக்கு அந்தப் பெண்ணின் நினைவு இல்லாமல் போகிவிடும் என்று என் சித்தப்பாவிடம் நான் கேட்டதற்கு சொன்னார்.

அதனோடு, ‘ஒவ்வொரு பெண்ணிடமும் ஒரு உயிர் பிரிவுதானே எடுப்பதாகச் சொன்னீங்க. ஏன் அந்தப் பெண்கள் நினைவற்று போகின்றனர்.’ என்று நான் என் சந்தேகத்தைக் கேட்டேன்.

அதற்கு உயிர் மீட்கும் சக்கரம் செயல்பட, அந்த 10 உயிர் பிரிவுகளும், குறிபிட்ட வரிசையில் இருக்க வேண்டுமாம். அவசியமற்று அந்த உயிர் பிரிவுகள் நர்ந்தால் விபரீதம் ஆகிவிடுமாம். அதனோடு ஒவ்வொரு செந்நிற பௌர்ணமி தினத்திலும் ஒரு உயிர் பிரிவை மட்டுமே எடுக்க வேண்டுமாம்.

10 உயிர் பிரிவையும் கொண்டு உயிர் மீட்கும் சக்கரம் உருவாக்கி என் கணவர் உயிருடன் வந்துவிட்ட பிறகு 10 பெண்களும் விழித்துவிடுவதாக சொன்னார். முதலில் ஒருவித பதட்டத்தில் நான் சம்மதித்துவிட்ட போதும், இப்போது எனக்கு எல்லாமே தவறாக தெரிகிறது.

நாளை இரவு 10வது செந்நிற பௌர்ணமி. என் கணவர் உயிருடன் வருவார். ஆனால் உயிர் மீட்கும் சக்கரம் உருவாக்க என் மகனை நான் தியாகம் செய்ய வேண்டும். அதனோடு அந்த10 பெண்களும் குறையுள்ளவர்களாக மாறிவிடுவர்.என்றவளின் முகம் வெளுத்து, உடல் நடுங்க குழந்தையை ஒரு முறை இறுக அணைத்து விடுவித்து, “ஆனால் என்னால் முடியவில்லை.

என் சித்தப்பாவிடம் இதெல்லாம் நிறுத்த சொல்லி 7 வது பெண் பாதிக்கப்பட்ட போதே சொன்னேன். ஆனால் ஒருமுறை ஒப்பந்தம் செய்து இதனை ஆரம்பித்துவிட்டால் அதனை மாற்ற முடியாது. என்றுவிட்டார். எனக்கு என்ன செய்வதென்று புரியாமலும் பயத்துடனும் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன்.

என் குற்ற உணர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க 8 வது பெண் பாதிக்கப் பட்ட போது நான் மகர அரசுக்கு இரகசியமாக தகவல் கொடுத்தேன். நீங்க வந்த பிறகும் உங்களிடம் நேரடையாக சென்று என் சித்தப்பாவை பற்றி பேச எனக்கு துணிவில்லை. இப்படியாக நான் தவித்துக் கொண்டிருக்கும் போது, நேற்று முன் இரவு என் அறைக்கு அவந்திகா வந்தாங்க.

தனக்கு எல்லாம் தெரியும். எதை கண்டும் பயமில்லாமல் என்ன நடந்தது என்று சொல்ல நினைத்தால் இந்த சத்திரத்தில் பவளன் இருக்கும் அறைக்கு நாளை இரவுக்குள் வா.’ என்றுவிட்டு நான் வரும் போது என்னை சுற்றி பாதுகாக்கும் சக்கரம் உருவாக்கிக் கொண்டு வர ஒரு கருவியை என் கையில் கொடுத்துவிட்டு என் பதிலுக்கும் காத்திராமல் கிளம்பிவிட்டாங்க.

அதனால்தான் இன்று நான் யாரைக்கும் தெரியாமல் இங்கு வர முடிந்தது. எப்படியாவது எல்லாவற்றையும் பழைய படி மாற்றிவிடுங்க ரிஷிமுனிகளே. அந்த அறியா பெண்களின் உயிர் சிதலமடைந்து போக எனக்கு விருப்பமில்லை.

அதனோடு என் விதி என் கணவனை இழந்துவிட்டேன். ஆனால் என் பிள்ளை என்ன தவறு செய்தான் என்று அவனை கொல்ல நினைத்தேன் என்று எனக்கு தெரியவில்லை. இன்று வரை நான் எப்படி என் சித்தப்பாவுக்கு சம்மதம் சொன்னேன் என்றே தெரியவில்லை.” என்று குழப்பமும், ஏக்கமும், பயமுமாக எதிரில் நின்றிருந்தவர்களை பார்த்து சொன்னாள்.

அவள் சொல்லும் வரை அமைதியாக கேட்டிருந்த முகிலனும் மதியும் ஜீரணிக்க முடியாமல் பார்த்திருந்தனர். ஏற்கனவே அவந்திகா உயிர் மீட்கும் சக்கரம் பற்றி மேலோட்டமாக சொல்லியிருந்தாள். ஆனால் அதன் நுனுக்கத்தை ந்த மனித யாளி பெண் விந்தியா சொல்ல கேட்டு திகைத்தனர்.

ஆனால் நந்தன் இதனை ஏற்கனவே அறிந்தவன் போல் விந்தியாவிடம் வந்து, “இப்போதைக்கு உடனடியாக எதுவும் செய்ய முடியாது. ஆனால் உன் குழந்தை இல்லாமல் உயிர் மீட்கும் சக்கரத்தை உருவாக்க மாட்டாங்க. அனால் ஒப்பந்தம் என்பது எளிதில் விலக்க முடிய கூடியதில்லை. அதனால் தற்காலிகமாக நீ எங்களுடன் இருப்பது மேல்.” என்று முகிலனை பார்த்தான்.

அவன் பார்வையின் அர்த்தம் உணர்ந்து, “பக்கத்து அறையில் பௌதிகா இருக்கிறாள். அவளுடன் நாங்க சொல்லும் வரை தங்கிக்கொள். இருந்த போதும் எங்களிடம் சொன்ன எல்லா உண்மைகளையும் அவளிடம் சொல்ல வேண்டாம். மற்றது பிறகு பேசலாம்.” என்றான் முகிலன்.

விந்தியா ஏற்கனவே நம்பிக்கையற்றுதான் வந்திருந்தால், நந்தனின் பதிலில் எல்லாம் மாற்றமடையும் என்று முழுதும் நம்பிக்கை வராமல் லேசாக தலையசைத்து அறையை விட்டு செல்ல எத்தனித்தாள்.

முகிலன் மதியிடம் கண்ணசைக்க மதி, “ஒரு நிமிடம். நான் உன்னை அந்த அறைக்கு அழைத்து செல்கிறேன்.” என்று அவளுடன் சென்றாள்.