யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 35

830

அத்தியாயம் – 35

இந்தக் கனவு சக்கரத்திற்குள் நந்தனால் அவனது ஆன்மீக ஆற்றலை முழுதும் மீளுருவாக்கம் செய்ய முடியவில்லை. அதனால் நந்தன், அந்தக் கருநிற உருவத்தைக் குறைத்து எடை போடவில்லை.

நந்தன், எதிரில் இருந்தவனின் பலம் பலவீனம் அறியும் எண்ணமுடன் அவனை ஆராயும் பார்வை பார்த்தான். ஆனால் முக்காடு மனிதன் அவனையும் சரி, அங்கு மெத்தையில் நினைவற்று படுத்திருந்த அவந்திகாவையும் ஒரு பொருட்டாக எண்ணி திரும்பியும் பார்க்கவில்லை.

மாறாகக் குத்துகாலிட்டு அமர்ந்ததிலிருந்து எழுந்து தன் இருக்கைகளையும் தன் முதுகுப்பின் இயல்பாகப் பிடித்துக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்தவிதம் அந்த உருவம், “ம்ம்….!” என்று எதையோ சொல்ல யோசிப்பவன் போல நிறுத்தி,

“நீ வன்னியுடன் ஆன்ம பிணைப்பு (Soul Binding)(1) ஏற்படுத்திக் கொண்டது அவளுக்குத் தெரியுமா?” என்று நடப்பதை நிறுத்தி நந்தனை பார்த்துக் கேட்டான்.

அந்த உருவத்தின் கேள்வியில் நந்தன் ஒரு நொடி அதிர்ந்து, ‘எனக்கும், என் இளவரசிக்கும் பிணைப்பு ஏற்பட்டு திருமணம் நடந்தது, என்னைத் தவிர யாருக்கும் தெரியாதே. இ…இவனுக்கு எப்படி தெரிந்தது.’ என்று ஒரு நொடி திகைத்து விழித்து, பின் அவந்திகா அதனைக் கேட்டுவிட்டாளோ என்று எச்சரிக்கையாகவும் அன்னிசை செயலாகவும் திரும்பி, அவந்திகாவை பார்த்தான்.

அவள் இன்னமும் நினைவற்று முகமெல்லாம் வியர்த்துப் படுத்திருந்தாள். அவள் ஆன்ம பிணைப்புபற்றிக் கேட்கவில்லை என்று நிம்மதியுற்ற போதும், முகம் வெளுத்துக் கிடந்த அவந்திகாவின் முகம் அவனை வலிக்கச் செய்தது.

இருந்தும் பலம் தெரியாத எதிரி எதிரில் இருக்கும்போது, அவன் நோக்கம் அறியாமலும், அவனை முழுதும் வீழ்தாமலும் அவந்திகாவின் உடல் நிலை பார்ப்பது இப்போது கடினமான காரீயமென்று மீண்டும், எதிரில் இருந்தவனை பார்த்தான் நந்தன்.

அவனின் செயலையே பார்த்திருந்த அந்த உருவம், “ஹா…ஹா…ஹா…உண்மையிலே அந்தப் பெண்ணுக்கு உன்னுடன் ஏற்பட்ட பிணைப்பு தெரியாதா?” என்று கலகலவென்று சிரித்தான்.

அவனது சிரிப்புக்குப் பதிலடி கொடுக்கும்படி சொல்லவோ, செய்யவோ நந்தனிடம் அப்போது உண்மையில் எதுவும் இல்லை. அவந்திகாவிடம் உண்மையை இன்னமும் சொல்லாததால் வந்த குற்ற உணர்வில் நந்தனின் நெற்றி புருவம் சுருங்கி எதிரில் இருந்தவனை வெறித்தான். இருந்தும் எதுவும் பேசவில்லை.

அந்த உருவம், “நான் உயிர் இறைப்பு சக்கரத்தில் வன்னியின் உயிர் சிதற ஆரம்பித்த அன்று ஒரு பேச்சுக்குதான், ‘ஆன்ம பிணைப்புமூலம் வன்னியின் ஆன்மாவை மீட்க முடியும்.’ என்று ஒரு புரளி போல அவளைக் கொல்ல வந்த யாளிகளிடம் பரப்பிவிட்டிருந்தேன்.

ஆனால் அதனை உண்மையென்று நம்பி நீ அவளுடன் ஆன்ம பிணைப்பை ஏற்படுத்தி அவளை மீட்டிருப்பாய் என்று துளியும் எதிர் பார்க்கவில்லை.” என்று மீண்டும், “ஹா…ஹா…ஹா…” என்று சிரிக்க ஆரம்பித்தான்.

அவனது பதிலில் முகம் வெளுத்த நந்தன், ‘யாரிவன்.?’ என்று குழம்பினான். அவன் மனதில் சில நொடி கடந்த 400 வருடங்களாக யாளி உலகம் முழுதும் சேகரித்த தகவல்களை ஒருமுறை புரட்டிய நந்தன், ‘இப்படிபட்ட மர்ம யாளியாளனை அறிந்ததாக நினைவில்லையே!’ என்று முகம் சுளித்தான்.

இவ்வாறு நந்தன் யோசனையில் இருக்கும்போது, அந்த உருவம் தொடர்ந்து பேசியது, “ஆனால் அப்படி துணிந்து யாரும் ஆன்ம பிணைப்பை வன்னியுடன் ஏற்படுத்திவிடக் கூடாது என்று நான் வேறெதுவோவும் பரப்பிவிட்டிருந்தேனே. என்ன சொன்னேன்.?” என்று “ம்ம்?” என்று தீவிரமாக யோசிப்பவன் போல மீண்டும் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.

“ஆங்… நினைவு வந்துவிட்டது. ஒருவேளை யாராவது தன் வாழ்நாளின் பாதியை இறந்த வன்னியின் ஆன்மாவிற்கு கொடுத்து, அவள் ஆன்மாவுடன் ஆன்ம பிணைப்பை உண்டாக்கினால்தான் அவள் மறுப்பிறப்படைய வாய்ப்பிருக்கு.

ஆனால் எங்கு வன்னி மறுப்பிறப்படைய கூடுமென்று அவன் அறிவது கடினம். அதே சமயம் அவளுடன் ஆன்ம பிணைப்பு ஏற்படுத்திக் கொண்ட யாளி உயிர் வாழும் காலம் முழுதும் தனியாக இருக்க நேரிடலாம்.

அதனோடு வாழ்நாளின் பாதியை தியாகமாகக் கொடுத்த அந்த யாளி இடையில் இறந்தால் வன்னியின் உயிரும் இறந்து மீண்டும் சிதறுண்டுவிடும்.” என்று நிறுத்தி நந்தனை பார்த்து, “வன்னியை மீண்டும் பார்க்க வாய்பு இல்லாமல் போகலாம் என்று தெரிந்துமா நீ வன்னியை உன்னுடன் பிணைத்துக் கொண்டாய். வன்னியை போலவே நீயும் சுவாரசியமாக ஆள்தான்.” என்று ஏதோ வரம் கிடைத்ததுப் போலக் குதுகலத்துடன் சொன்னான்.

‘எதிரில் இருந்தவனின் வார்த்தைகள் எதுவும் நல்லவேளை என் இளவரசியின் காதில் விழவில்லை.’ என்று பெருமூச்சுவிட்ட நந்தன், ‘இவனுடைய பூர்வீகம் அறிவது மிகவும் முக்கியம். இவன் பேசுவதிலிருந்து என் இளவரசியை கொன்ற யாளிகளுக்கும் இவனுக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கு.’ என்று நினைத்தான் நந்தன்.

மனதில் ஒரு முடிவுடன், அந்த உருவத்தைப் பார்த்து நந்தன், “யார் நீ? உனக்கென்ன வேண்டும்.? என்ன செய்ய நினைத்து என் இளவரசியிடம் வந்தாய்?” என்று கேட்டான்.

இதுவரை அமைதியாகவே இருந்த நந்தன் திடீரென்று பேசுவதை கேட்ட அந்த உருவம், “உன்னால் பேச முடியுமா? இதுவரை என் எந்தக் கேள்விகளுக்கும் பதில் அளிக்காததால், நான் என்னமோ வாயும் காதும் கேளாதவனென்று நினைத்துவிட்டேன்.” என்று ஏமாற்றமடைந்தவன் போன்ற குரலில் சொன்னான்.

பின், “நான் யாரென்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் இருக்கும் உனக்கு, உடல் வெப்பம் அதிகமாகி மூச்சு திணறி மீண்டும் இறக்கும் நிலையில் இருக்கும் வன்னியை காப்பாற்றும் எண்ணம் இல்லை போல.” என்றவன் நந்தனை தாண்டிப் பின்னிருந்த அவந்திகாவை நோக்கித் தலை சாய்த்து பார்த்தான்.

அந்த உருவம் சொன்னதன் பொருள் உணர்ந்த நந்தன் பயந்து திரும்பி அவந்திகாவை பார்த்தான். அப்படி பார்த்தவன் பார்த்தது அதிகமான ஆன்மீக ஆற்றலைத் தாங்க முடியாத அவந்திகாவின் நரம்புகளில் பல கோடுகளாகத் தெரிந்த வெண்ணிற ஒளி கோடுகளையே.

அந்த ஒளி அவந்திகாவின் உடலில் பல இடங்களில் மெல்லிய கிரல்களை உண்டாக்கி ஆங்காங்கே லேசாக இரத்தம் வர ஆரம்பித்திருந்தது. அதனோடு மூச்சுவிடச் சிரமம்போல அவந்திகாவின் முகம் வெளுக்கக் குரல் முனங்க ஆரம்பித்திருந்தது.

பலவீனமாக உணர்ந்த போதும் கொடி தன் தலைவியின் நிலைக் கண்டு இருப்பு கொள்ளாமல், முன்பு எங்கோ வீசப்பட்ட மரகதகல்லை எடுத்து வர எண்ணி நந்தனிட்ட பாதுகாக்கும் சக்கரத்திலிருந்து விலகி மெல்ல தவழ்ந்தவிதமாகச் சென்று கொண்டிருந்தது.

அவளின் நிலையைப் பார்த்தப்பிறகு நந்தன் ஒரு நொடியும் தாமதிக்கவில்லை. ‘ஏதோ தீய எண்ணம் கொண்டவனாக எதிரில் இருந்தவன் இருந்த போதும், இதுவரை கவனித்ததில் அந்தக் கருநிற உருவத்திடம் அப்போது எந்தவித கொலையும் வெறியில்லை.’ என்பதை உணர்ந்த நந்தன்,

எதிரில் நின்றிருந்த உருவத்தில் ஒரு கவனமும் அவந்திகாவின் மீது மறுகவனமுமாக அவளை நோக்கி வேகமாக ஓடிச் சென்றான்.

நொடியும் தாமதிக்காமல் நந்தன் அவந்திகாவின் மெத்தையில் அவள் அருகில் அமர்ந்து அவளது பின்னங்கழுத்தை தன் வலது கையால் பற்றி இடது கையால் அவளது இடைப் பற்றி அவளை அமரும் நிலையில் நிறுத்தி, அவனது நெற்றியை அவந்திகாவின் நெற்றியில் வைத்து அவள் உடலிலிருந்த அதிகமான ஆன்மீக ஆற்றலை உறிஞ்ச ஆரம்பித்தான்.

இப்படி அவன் கனவுச் சக்கரம் வந்தவுடன் செய்திருந்தால் அவந்திகாவால் நினைவு மீண்டிருக்க முடியுமோ என்னமோ. ஆனால் சில நிமிடங்கள் காலம் கடந்தததிற்குள் அவளது உடல் உயிர் இருப்பதற்கான வெப்பத்தை மெதுவாக இழந்து லேசாகச் சில்லிட ஆரம்பித்தது. அவளது குரல் ஈனசுரத்தில் முனங்க ஆரம்பித்தது.

அவளது வலி நிறைந்த குரலைக் கேட்ட நந்தன் அந்த அறையில் மூன்றாமவன் இருப்பதையும் விடுத்து, அவந்திகாவின் இதழில் தன் இதழ் பொருத்தி அவனது நாவை அவள் இதழ்களுக்கு இடையில் விட்டு அவள் வாயை நன்கு திறந்து அவள் உடலிலிருந்து வேகமாக ஆன்மீக ஆற்றலை உறிஞ்சினான்.

கூடவே அவள் இடைக்குப் பின் இருந்த அவனது இடது கை ஆள்காட்டி விரலை நீட்டி, சில நீல நிற பட்டாம்பூச்சிகளை உருவாக்கி அவந்திகாவின் உடலில் கீரல் விழுந்து இரத்தம் வந்துக் கொண்டிருந்த இடங்களில் அவற்றைச் செலுத்தி, அந்தக் காயத்தைக் குணமாக்கினான்.

இதழ்கள் இணைந்திருந்த போதே அவன் நெற்றியை அவள் நெற்றியில் மீண்டும் வைத்து, கண்கள் மூடி அவனது ஆன்ம விளிப்பை அவந்திகாவின் உடலில் செலுத்தி, அவள் உடல் உள்ளுறுப்பில் ஏற்பட ஆரம்பித்திருந்த இரத்த கசிவுகளை குணமாக்க ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் அவந்திகாவின் உடலின் ஆன்மீக ஆற்றல் 5 சக்கரத்திலிருந்து 4 சக்கரமாகக் குறைந்தது. இருந்தும் நந்தன் அவள் இதழணைபிலிருந்து மீளவில்லை. அவந்திகாவிற்கு லேசாக நினைவு வர ஆரம்பித்தது.

உடலெல்லாம் சில்லிட்டு இருந்தவள், குளிரில் வெப்பத்தை நாடுபவள் போல அவளையும் அறியாமல் அவள் உடலின் மிக அருகில் பழக்கமான மணமுடனும் இதமான வெப்பமுடனும் இருந்த நந்தனின் உடலைத் தன் இரு கைகளையும் கொண்டு அணைத்துக் கொண்டாள்.

கண்கள் மூடி அவந்திகாவின் உள்ளுறுப்புகளை குணமாக்கிக் கொண்டிருந்த நந்தன் அவந்திகாவின் அணைப்பை எதிர்பார்க்கவில்லை. அவள் கைகள் அவன் முதுகில் பட்டவுடன், கண்களைத் திறந்தான். அவந்திகாவின் இமைகள் அவன் விழியருகில் லேசாக நடுக்கமுற ஆரம்பித்தபோதும் இன்னமும் அவள் விழிக்கவில்லை.

அதற்குள் அவந்திகாவின் உடலின் உள்ளும் புரமும் ஏற்பட்ட இரத்த கசிவுகளை குணமாக்கிவிட்டிருந்த நந்தன் அவனது நெற்றியை அவளிலிருந்து பிரித்து, அவளது அதரத்திலிருந்து தன்னுடைய அதரத்தை பிரித்து அவந்திகாவின் முகத்தைப் பார்த்தான்.

அவள் முக வெளுப்பு மீண்டு, மீண்டும் உயிரோட்டமுடன் லேசான சிவப்புடன் இருப்பதை பார்த்துப் பெருமூச்சுவிட்டு அவளிலிருந்து விலகினான். அவன் அவந்திகாவின் உடல் நிலையைச் சரி செய்துக் கொண்டிருக்கும் போதே அந்த முக்காடு மனிதன் கனவு சக்கரத்திலிருந்து அவந்திகாவை விடுவித்து, அங்கிருந்து கிளம்பிவிட்டிருந்தான்.

அந்த முக்காடு மனிதனின் செயல் நந்தனுக்கு புதிராக இருந்தது. அவந்திகாவை குணப்படுத்துவதில் மும்முரமாக இருந்த போதும், அந்த உருவம் அங்கிருந்து விலகிப் போவதை உணர்ந்த நந்தன் விரலசைவில், அந்த உருவத்தைத் தொடர்ந்து செல்ல ஒரு பறவையை ஏவிவிட்டிருந்தான்.

கூடவே, ‘யாரிவன்? என் இளவரசியின் கடந்த காலம் எல்லாம் தெரிந்த எனக்கு, இந்தக் கருநிற உருவத்தின் தகவல் மட்டும் ஏன் தெரியவில்லை? விரைவில் அறிய வேண்டும். மீண்டும் ஒரு தவறு நடக்க நான் விடமாட்டேன்.’ என்று மனதில் முடிவெடுத்தான்.

இப்படியாக நந்தன் இருக்க, அரை மயக்கத்திலிருந்த அவந்திகா, இதமான வெப்பத்திலிருந்த ஏதோ ஒன்று தன் இதழிலிருந்து பிரிந்ததை அதிருப்தியாக உணர்ந்து கண்கள் மூடியிருந்த போதும் முகம் சுளித்தாள்.

விலகிச் சென்ற இதம் தந்துக் கொண்டிருந்த வெப்ப மூலத்தைப் பற்றிவிட எண்ணி அது சென்ற திசை நோக்கி முகத்தைச் சாய்த்து மீண்டும் நந்தனின் இதழில் தன் இதழைப் பொறுத்தினாள். இதனை எதிர்பார்க்காத நந்தன், உடனே உடல் விறைபுர விழி விரித்து எதுவும் செய்யாமல் அப்படியே நின்றான்.

பின் கண்ணில் ஒரு ஒளிவெட்டு தோன்ற, இதழணைத்திருந்த போதும் அவன் இதழ் விரிந்தது. இந்த நிலை அதிக நேரம் இருக்க முடியாமல், அதற்குள் எதுவோ சரியில்லை என்பதை உணர்ந்துவிட்ட அவந்திகா லேசான படப்படப்புடன் அவளது இமைகளைத் திறந்தாள்.

கண் விழித்தவள், எதிரில் மிக அருகில் தெரிந்த மிகவும் பழக்கப்பட்ட விழிகளைக் கண்டவுடன் இமைக்க மறந்து விழிவிரித்தாள். கூடவே இன்னமும் நந்தனின் இதழ் பற்றியிருந்த தன் அதரங்களை சட்டென்று விலக்கி அவள் முகத்தைப் பின்னோக்கி நகர்த்தி, “ந…நந்தன்?!” என்று திகைத்தாள்.

உடனே எதுவோ நினைவு வந்தவள் போல நந்தனை விடுத்து, பயந்து உடல் நடுங்கி முன்பு அந்தக் கருநிற உருவம் இருந்த திசை நோக்கிச் சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அங்கு அந்த உருவம் இல்லாததை உணர்ந்து நிம்மதி பெருமூச்சுவிட்டு, இயல்புக்கு வந்தாள்.

பின்னரே அவந்திகா இன்னமும் நந்தனை தன் கை வளைவுக்குள் பற்றி அவனை நெருங்கி அமர்ந்திருப்பதை உணர்ந்தாள். “ஆ…” என்று சட்டென்று அவனிலிருந்து விலகி, சற்று தள்ளிக் குத்துகாலிட்டு அந்த மெத்தையின் ஓரத்தில், நந்தனை நிமிர்ந்து பார்க்கும் துணிவு இல்லாமல், தன் முட்டிகாலில் முகம் பொதித்து அமர்ந்தாள்.

அவந்திகாவின் ஒவ்வொரு அசைவையும் கவனித்திருந்த நந்தன், அவந்திகாவின் பயமுடனான நடுக்கத்தை கவனிக்க தவறவில்லை. ‘இப்படி இளவரசியை பயமுறுத்த வேண்டுமென்றால் அந்தக் கருநிற உருவம் எந்த அளவுப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.’ என்று நினைத்தான்.

நந்தன் அப்படி யோசித்துக் கொண்டிருந்ததால், அவந்திகாவின் கையணைப்பில் அவன் இருந்தது அவனுக்கு மறந்து போயிருந்தது. திடீரென்ற அவந்திகாவின் திகைத்த குரலில் நினைவு வந்தவனாக, அவந்திகாவிடமிருந்து அவனுமே விலகி மெத்தையிலிருந்து எழுந்து நின்றான்.

அவந்திகாவை நன்கு அறிந்திருந்த நந்தன் அவள் இயல்படைய நேரம் கொடுத்து எதுவும் பேசவில்லை. அதே சமயம் அந்தக் கருநிற உருவம் யாரென்று அறிய நினைத்து, முன்பு நந்தன் ஏவிய சிட்டுகுருவியை ஆன்மீக சக்தியால் தொடர நினைத்துக் கண்கள் மூடிக் கவனிக்கும் சக்கரத்தை அந்தக் குருவியின் விழிகள் வழியாகச் செலுத்தினான்.

அந்தப் பறவை அந்த உருவத்தைத் தொடர முடியாமல் போனதோ என்னமோ, திசையறியா பறவைபோல ஒரு எல்லைக்கு மேல் நகர முடியாமல் கீச்சு கீச்சு சத்ததுடன் ஓர் இடத்தில் குறுக்கும் நெடுக்குமாகப் பறந்திருந்தது. அதன் நிலை உணர்ந்த நந்தன் அதனைத் தன் பிடியிலிருந்து விலக்கிவிட்டு கண்களைத் திறந்தான்.

அவந்திகாவை மீண்டும் பார்த்த நந்தன் அவள் இன்னமும் முகம் பொதிந்து அமர்ந்திருக்கும் தோற்றத்தை உணர்ந்து, “இளவரசி.?” என்று அழைத்தான்.

முகம் பொதிந்து அமர்ந்திருந்த அவந்திகா, ‘தான் மயங்கி விழுந்தபோது நந்தன் வந்து அவளை அந்த உருவத்திடமிருந்து காப்பாற்றியிருக்க வேண்டும். அதன்பிறகு அவன் இதழ் மூலமாக என் உடலிலிருந்து அதிகமான ஆன்மீக சக்தியை உறிஞ்சியிருக்க கூடும். இதனை முதலுதவி எனலாம்.

ஆனால் நான் என்ன செய்ய நினைத்து அவனை அணைத்து, விலகிய அவனது இதழ்களை மீண்டும் அணைத்தேன். என்மீது மரியாதையும், அன்பும் கொண்டிருக்கும் நந்தன் என் இந்தச் செயலால் என்னைப் பற்றி என்ன நினைக்கக்கூடும்.’என்று குற்ற உணர்வும், மனசோர்வுடனும் யோசனையில் இருந்தபோது நந்தனது குரலைக் கேட்டாள்.

அவன் குரலில், “ம்ம்!?” என்று முகம் உயர்த்திய அவந்திகா நேராக அவனது விழிகளைப் பார்க்கத் துணியவில்லை. அவன் முகம் பார்க்க அவந்திகா தவிர்ப்பதை உணர்ந்த நந்தன் முகம் சுருக்கி, “இளவரசி. அந்த உருவம்.?” என்று யோசனையுடன் கேட்டான்.

அதற்குள் ஓரளவு தெளிவுற்றிருந்த அவந்திகா அவசரமாகப் பேச்சை மாற்றும் எண்ணமுடன், “நந்தன். இந்தப் பெண்களைக் காப்பாற்றிவிட முடியும் தானே.” என்று முதல் முறையாக மனதில் ஒரு சந்தேகம் வர நந்தனின் முகம் பார்த்துக் கேட்டாள்.

அவள் மயக்கமடையும் முன் அந்தக் கருநிற உருவம் பேசயதெல்லாம் அவந்திகாவிற்கு நன்றாகவே நினைவிருந்தது. தெரிந்தோ தெரியாமலோ இந்த ஊர் பெண்கள் பாதிக்கப்பட்டதற்கு அவளும் காரணமாகி போனாள்.

அந்தக் கருநிற உருவத்தைப் பார்க்கும் வரை அவளுக்கு எப்படியும் இந்த ஊர் பெண்களைக் காப்பாற்றி விட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இப்போது அவள் நம்பிக்கை லேசாக ஆட்டம் கண்டது. அதனாலே நந்தனிடம் அவள் தவிப்புடன் அப்படி கேட்டாள்.

அவளது இந்தத் தவிப்பை பார்த்த நந்தன் அவளை அணைத்து ஆறுதல் சொல்லத் துடித்த அவனது கைகளைக் கட்டுபடுத்தி, ‘என் இளவரசியை இப்படி நடுக்கமுற செய்த அந்த உருவம் யார்?’ என்று கை முஷ்டி இறுக நின்றவன், பின் அவன் எண்ணம் மறைத்து, மென்னகையுடன் அவந்திகாவின் கைப்பற்றி, “முடியும் இளவரசி. கவலை பட வேண்டாம்.” என்றான்.

அவனது அந்தப் புன்னகை நம்பிக்கை தர அவந்திகாவின் இதழும் லேசாக விரிந்தது. பின் நெற்றி சுருங்கி, “ஆனால். நான் கைப்பாவை சக்கரத்தை உடைத்துவிட்டேன். அ…அதனோடு அந்த… அந்தக் கருநிற உருவத்திற்கு நான் உண்மையான மணபெண்ணில்லை என்றும் தெரிந்துவிட்டதே. என்னால் அவர்களை இனியும் காப்பாற்ற முடியுமா?” என்று குழப்பமும் கவலையுமாக நடுங்கிய குரலுடன் கேட்டாள்.

எப்போதும் எந்த நிலையிலும் தைரியமாகவும் எது குறித்தும் பயம் இல்லாமல் எதையும் செய்யும் தன் இளவரசியை இப்படி பயமும் நடுக்கமுமாகப் பார்க்க நந்தனுக்கு பொறுக்காமல், அதற்கு மேலும் தன்னை கட்டு படுத்தாமல் அவளை இழுத்து, அவந்திகாவை அவன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

கூடவே, “என் இளவரசியால் நிச்சயம் அவர்களைக் காப்பாற்றிவிட முடியும். எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.” என்று அவள் முதுகில் இதமாக வருடினான் நந்தன்.

அவனது திடீரென்ற அணைப்பில் முதலில் திகைத்து விழித்த அவந்திகா, பின் மெதுவாக அவன் அணைப்பு தந்த பாதுகாப்பு உணர்வில் எதுவும் சொல்லாமல் கண்கள் மூடி அவன் மார்பில் புதைந்துக் கொண்டாள். அவளது உடல் நடுக்கம் மெல்ல குறைந்து, இயல்பானது.

பின் ஒருவாறு தெம்புற்றவள், மெல்ல நந்தனின் பிடியிலிருந்து விலகி, “நன்றி.” என்றாள்.

நந்தனும் அவளைத் தன் கையணைப்பிலிருந்து விடுவித்து, மிகவும் தீவிரமான குரலில், “இளவரசி. அந்தக் கருநிற உருவம் நான் உங்களை மீட்க வருமுன் உங்களிடம் என்ன சொன்னதென்று எனக்குத் தெரியவில்லை.

ஆனால் அந்த உருவத்திற்கும் இந்தப் பெண்களின் நிலைக்கும் நேரடி தொடர்பு இல்லை. அதனால் இப்போதைக்கு அந்த உருவம் பிரதான உடனடி தீர்வு காண வேண்டிய பிரச்சனையில்லை.” என்று அவந்திகாவின் கருத்தை அறியும் நோக்கமுடன் அவள் முகம் பார்த்தான்

அவளும் ஆமாம் என்பது போலத் தலையசைத்தாள். பின் பழைய தெம்பு மீண்டவள் போல ஒரு பெருமூச்சுவிட்டு, தன் கணிப்பை நந்தனிடம் சொல்பவள் போலத் தன் முகவாயில் கை முஷ்டியை வைத்து, “நந்தன் என் கணிப்பின் படி, அந்த ஊர் தலைவர் இல்லத்தில் உள்ள மனித யாளிகளில் ஒருவன் நிச்சயம் இதில் கூட்டாளி.

அந்த மனித யாளியும் அந்தக் கரு நிற உருவமும் அல்லாமல், இன்னும் இருவர் இதில் தொடர்பில் இருக்க வாய்ப்பிருக்கு. ஏனென்றால், உயிர் உறிஞ்சும் சக்கரம், உயிர் மீட்கும் சக்கரம், கைப்பாவை சக்கரம் இவையணைத்தையும் ஒரே யாளியால் உருவாக்க முடியாது.

கருநிற உருவம் சக்தி வாய்ந்ததாக இருந்த போதும், இந்தச் சக்கரங்களைச் சாதாரண மனித யாளிகளுக்காக நிச்சயம் நான் அறிந்த அந்த உருவம் நேரிடையாகச் செய்யாது.அதனால்.!” என்று முழுதும் சொல்லாமல் நந்தனை பார்த்தாள்.

தன் பழைய இளவரசி மீண்டு விட்டத்தை பார்த்து ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்த நந்தன், தன் கண்டுபிடிப்பை அவளிடம் சொன்னான். “உண்மைதான் இளவரசி. கைப்பாவை சக்கரத்தை உருவாக்கியது ஒரு மாதங்க யாளி.

இன்று நாம் கைப்பாவை சக்கரத்திலிருக்கும்போது, அவன் இருப்பதை அறிந்தேன். பின் அவனைத் தொடர்ந்துச் சென்று அவன் இருக்கும் இடத்தைக் கண்டுப்பிடித்துவிட்டேன். அவனின் செயல்களைக் கண்கானிக்கவும் ஏற்பாடு செய்துவிட்டுதான் வந்தேன்.

இப்போது அவன் தூங்கிவிட்டான். அதனால் நீங்கக் கைப்பாவை சக்கரத்திலிருந்து மீண்டது அவனுக்குத் தெரியாது. அந்தக் கருநிற உருவம் தானாகச் சொல்லாதவரை, உங்களிடம் வெளிப்படையாக எந்த மாற்றமும் தெரியாத வரை மீண்டும் நீங்கக் கைப்பாவையாக நடிப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

அவனில் ஏதேனும் மாற்றம் தெரிந்தாலோ அல்லது அந்தக் கருநிற உருவம் அந்த மாதங்க யாளியை தொடர்பு கொண்டாலோ, நான் உடனே உங்களை வந்து அழைத்துச் சென்றுவிடுவேன். ஆனால் எக்காரணம் கொண்டும் நீங்க ஆன்மீக ஆற்றலை எல்லை மீறி உறிஞ்ச கூடாது.” என்று விளக்கம் கொடுத்து, கடைசியில் அவளைக் குற்றம் சாட்டும் பார்வையுடன் சொன்னான்.

அதனைக் கேட்ட அவந்திகா, உண்மையிலே அவள் செயலின் தீவிரமும் விளைவும் உணர்ந்து தலை குனிந்து, “ச…சரி” என்றாள்.

அவளது பதிலில் திருப்தியுற்ற நந்தன், “ஒரு வேளை தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால்.?” என்று இன்று நிகழ்ந்த நிகழ்வை நினைவு கூர்ந்தவன், நெற்றி சுருக்கி, தன் கை விரலின் நுனியில் சாம்பல் நிற ஒளியில் ஒரே ஒரு பட்டாம்பூச்சியை உருவாக்கி அவந்திகாவை நோக்கிச் செலுத்தினான்.

அந்தப் பட்டாம்பூச்சி, பறந்து சென்று அவந்திகாவின் தோள் பட்டையில் அமர்ந்து அதன் சிறகுகளைக் குவித்து விரித்தது. “இது கைப்பாவை சக்கரத்திலிருந்து சில நிமிடங்களுக்கு உங்களை விடுவிக்கும். மீண்டும் நீங்கக் கைப்பாவையாக மாறுவதர்குள் எப்படியும் நான் வந்துவிடுவேன்.” என்று மீண்டும் எந்த அசம்பாவிதமும் நடக்க வழி இல்லாமல் ஏற்பாடு செய்தான் நந்தன்.

அவளிடம் வந்து அவள்மீது அமர்ந்த அந்தப் பட்டாம்பூச்சியை பார்த்த அவந்திகா, அதன் இறகை லேசாக வருடி, “நன்றி நந்தன்.” என்று மனதில் இதம் பொங்க சிரித்தாள்.

Author Note:

(1)  ஆன்ம பிணைப்பு – யாராவது மறந்திருந்தீங்கனா, சொல்றேன். It is kind of Marriage.soul binding between soul mates.