யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 34

861

அத்தியாயம் – 34

நந்தனும் அவளது சிநேகிதர்களும் அந்த வீட்டை விட்டுச் சென்றபிறகு கைப்பாவை சக்கரத்திலிருந்து விடுப்பட்டனர். ஆனால், அவந்திகா மட்டும் இன்னமும் கைப்பாவையாகவே இருந்தாள். நந்தன் தந்த தைரியத்தில் அச்சமயம் அவள் மனம் சற்று இயல்பான போதும், அவந்திகாவின் மனதுள் இன்னமும் ஏதோ நெருடலாகவே இருந்தது.

இனம்புரியாத நடுக்கம் அவளுள் இருப்பதை முழுதும் அவளால் ஒதுக்கமுடியவில்லை. அவளுக்கான அறையில் அமர்ந்திருந்த அவந்திகா, ‘எப்போதும் நந்தனையே எதிர் நோக்கிக் காத்திருப்பது நல்லதல்ல. கைப்பாவை சக்கரத்திலிருந்து தானாகவே வெளியில் வர வேறேதுவும் வழி இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும்.’ என்று தீவிரமான யோசிணைக்குள்ளானாள்.

அவள் சிந்தனையின் பலனாக அவளுக்குக் கொடியின் நினைவு வந்து, ‘என் கொடியை நான் கைப்பாவையாக இருக்கும் இந்த நிலையில் பயன்படுத்த முடிகிறதா என்று பார்ப்போம்.’ என்று தன் ஆன்மீக விளிப்பில், தன் உயிருடன் இணைந்திருக்கும் கொடியை அழைத்தாள்.

“கொடி. நான் பேசுவது கேட்கிறதா?” என்றாள். கொடியும், ஒரு சின்ன முனுங்களுடன் அவள் கையிலிருந்து எட்டி பார்த்தது. அவள் ஆன்மீக விளிப்பில் அழைத்திருந்தப் போதும் கொடியைப் பார்க்காமல்வெளியில், அவள் சிலைப் போல எங்கோ வெறித்து அமர்ந்திருப்பதை கொடி உணர்ந்து ஆன்மீக விளிப்பிற்கு பதில் அளிப்பதுப் போல அவள் உடலை ஒருமுறை சுற்றி வந்து அவள் முன் நின்றது.

கொடி விருப்பம்போல அவள் கைக்களை கொண்டு அதனை வருட முடியவில்லை என்ற போதும், கைப்பவையாக அதுவும் அவளுடன் கட்டுபட்டு இருக்காமல் சுதந்திரமாக நகர்வரை பார்த்து அவந்திகா நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.

“கொடி, என் கைக்காப்பிற்குள் உன்னால் சென்று வர முடிகிறதா என்று பார்” என்று கொடியிடம் கேட்டாள். கொடியும் அவள் கைக்காப்பின் அருகில் சென்று ஒரு நொடி மறைந்து மீண்டு, ‘முடிகிறது.’ என்று அவளுக்கு உணர்த்தியது. அதனை அறிந்ததும் அவந்திகாவின் மன பாரம் பாதி குறைந்து போனது.

‘ஒரு வேளை தான் கைப்பாவையாக இருக்கும்போது நந்தன் இல்லாத வேளையில் கை மீறி ஏதேனும் நடக்க கூடுமானால்?’ என்று யோசித்தவள், ‘என் உடல் அனுமதிக்கும் அளவு 4 சக்கரம். சிறிது எல்லை மீறினாலும்,

கொடியைக் கொண்டு மரகதக்கல்லை கைக்காப்பிலிருந்து வெளியில் எடுத்து, என் உடல் அனுமதிக்கு அளவைவிட ஒரு சக்கரம்தானே அதிகம். அதனால் 5 சக்கர அளவு வரும் வரை ஆன்மீக ஆற்றலை அந்த மரகத கல்லிலிருந்து உறிஞ்சி இந்தக் கைப்பாவை சக்கரத்தை உடைக்க வேண்டும்.

கைப்பாவை சக்கரம் உடைந்த பிறகு அதிகமாக உறிஞ்சபட்ட ஆன்மீக ஆற்றலை மீண்டும் மரக கல்லில் உடனே சேர்த்துவிட்டால் என் உடலுக்கு அதிக பாதிப்பு இருக்காது.’ என்று மனதுள் ஒருவாறு ஒரு திட்டத்தை வகுத்தாள்.

அதன் பிறகு அதிக சிந்தனை இல்லாமல் கைப்பாவையாக அவளுக்கு இடப்பட்ட செயல்களை அமைதியாகக் கைப்பாவை செய்வதை உள்ளிருந்து கவனித்தாளே ஒழிய வேறுதுவும் செய்ய முயலவில்லை. அன்று இரவு உணவின் பின், மிக விரைவிலே மெத்தையில் படுத்துக் கொண்டாள் கைப்பாவை அவந்திகா.

கைப்பாவைவின் கண்கள் மூடியிருந்த போதும் உண்மையான அவந்திகா தூங்கவில்லை. வெளியில் நடக்கும் ஒலி மாற்றங்கள் அவள் காதில் விழுந்துக் கொண்டுதான் இருந்தது. பௌதிகாவின் பெற்றோர்கள் அடுத்த அறையில் திருமண ஏற்பாடுகள்குறித்து தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

பொம்மியும் அன்று விருந்தாளியாக வந்த பௌதிகாவின் அத்தை மகள்களும், மகன்களும் ஏதோ விளையாட்டு பேச்சாகப் பேசிக்கொண்டு தாழ்வாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். இப்படி வீடே திருவிழாபோலச் சத்தமும் கூச்சலுமாக இருந்தது.

ஆனால் சில நிமிடங்களில் அந்தக் கோலாகலமான சத்தம் திடீரென்று நின்று நிசப்தம் ஆனது. இந்தத் திடீர்நிசப்தம், மெத்தையில் கண் மூடிப் படுத்திருந்த அவந்திகாவினுள் எச்சரிக்கை உணர்வைத் தூண்டியது.

‘ஒருவர் இருவர் அமைதியாவதென்றால் அதில் பேதமில்லை. எப்படி திடீரென்று வீட்டில் உள்ள அனைவரும் மயங்கி விழுந்ததுப் போல ஒரே நேரத்தில் பேச்சற்று அமைதியாகினர்.’ என்று நினைத்த அவந்திகா, “கொடி, எச்சரிக்கையாக இரு. சண்டையிட நேரிடலம்.” என்று சொன்னாள்.

கொடியும், அவள் கையிலிருந்து வெளியில் வந்து எச்சரிக்கையாக நின்றது. அவந்திகா கழுத்து வரை போர்வை போர்த்தியிருந்தாள். அவளால் கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் போர்வையின் விளிம்பில் எட்டி பார்த்திருந்த கொடியின் மூலம் ஆன்மீக விளிப்பில் சுற்றத்தை அவந்திகா எச்சரிக்கையுடன் பார்த்திருந்தாள்.

பாதி நிலவொளி சாளரத்தின் வழியே அவந்திகாவின் அறையில் பட்டு அவள் முகத்தின் மீதும் படர்ந்து முகமூடி அணிந்திருந்த போதும் அவளது புருவ அழகை எடுத்துக் காண்பித்துக் கொண்டிருந்தது.

அப்போது அந்த நிலவொளியை மறைக்கும் விதமாக அவந்திகாவின் முகத்தில் ஒரு நிழலாடியது. கண்கள் மூடியிருந்த போதும் கொடியினால் வந்திருந்த புதியவனை பார்த்த அவந்திகா விக்கித்து, ‘இ…இது…’ என்று மனதிலும் திகைத்து வந்திருந்தவனை பார்த்து அதிர்ந்து போனாள்.

அவந்திகாவின் அறையில் அவள் எதிரே வந்து நின்ற கருநிற முக்காடு அணிந்திருந்த 6 ஆடி ஆண் உருவம் அவளையே பார்த்தவிதமாக அந்த மெத்தையின் அருகிலே குறுக்கும் நெறுக்குமாக நடந்தது.

பின், “உண்மையிலே வந்திருப்பது வன்னிதான் இல்லையா? நீ இங்கு அவ்வளவு அனுபவித்த பிறகும் யாளி உலக மக்களுக்கு நீ உதவ உன்னையே தூண்டில் புழுவாக்கி கொண்டு இன்று நிற்பதை பார்க்கப் புல்லறிக்கிறது. ” என்று, “ஹா…ஹா…ஹா…” எனக் கலகலவெனச் சிரிக்க ஆரம்பித்தது அந்த உருவம்.

அவன் சொல்வதை கேட்டதும் அவந்திகாவின் அடிவயிற்றில் குளிர் பரவியது. அவசரமாக, “கொடி, மரகதகல்லை கைக்காப்பிலிருந்து அசைவற்று எடுத்து என் கை மணிக்கட்டில் வை. நான் அதிலிருந்து ஆன்மீக ஆற்றலை உறிஞ்ச வேண்டும்.” என்று ஆன்மீக விளிப்பில் சொன்னாள்.

அவந்திகாவின் போர்வையுள் நிகழ்ந்த இந்தச் சிறிய மாற்றத்தைக் காணமல் கண்டுவிட்ட அந்த உருவம், சிரிப்பை உடனே நிறுத்தி அவள் முகம் அருகில் குனிந்து அவளைப் பார்த்தது. கண்கள் மூடியிருந்த போதும் அவந்திகாவின் நெற்றியில் அதற்குள் முத்து முத்தாக வியர்த்துவிட்டது.

அவனது குரல் தீவிரமாக மாறி,”உண்மையிலே நீ சுவரசியமான பெண்.” என்றது. பின் அவன் கை ஆள் காட்டி விரலை அவன் அசைக்கக் கைப்பாவை சக்கரத்தின் செயலோ என்னமோ, அவள் கழுத்து வரை போர்த்தியிருந்த போர்வையை அவளது கைகள் இட்ட கட்டளையாக விலக்கியது. அவளும் எழுந்து அந்த உருவத்தின் எதிரில் நின்றாள்.

அவசரமாகக் கொடி எதிரில் இருந்த அந்த உருவத்தின் பார்வையிலிருந்து விலகி மரகத கல்லை அவந்திகாவின் ஆடைக்கு அடியில் மார்பில் பொதித்து அவன் அறியாமல் அவள் ஆன்மீக ஆற்றலை உறிஞ்ச அவளுக்கு உதவியது.

ஆன்மீக ஆற்றலை உடலில் 4 வெவ்வேறு இடங்கள் மூலமாக உறிஞ்சவோ சேகரிக்கவோ முடியும். வேகத்தின் படி, இதழ்வழியே மிகவும் வேகமாகவும், நெற்றி வழியே அடுத்த படியான வேகத்துடனும், கை மணிகட்டில் மூன்றாம் நிலை வேகமாகவும், கடைசியாக நெஞ்சில் இதயத்திற்கு அருகில் மிகவும் வேகம் குறைவாகவும் ஆன்மீக ஆற்றல்மாற்றம் நிகழும்.

முக்காடு மனிதனின் பார்வை படும்படி இருந்த நெற்றியிலும், இதழிலும் மரகதகல்லை கொண்டு ஆற்றல் கிரகிப்பது முடியாது என்பதால், முதலில் மூன்றாம் நிலை வேகமான கை மணிக்கட்டின் மூலமாக மரககல்லிலிருந்து ஆன்மீக ஆற்றலை உறிஞ்ச அவந்திகா முயன்றாள்.

ஆனால் திடீரென்ற முக்காடு மனிதன் அவளைக் கைப்பாவையாக இயக்கியதில் மிகவும் வேகம் குறைந்த ஆற்றல்மாற்ற முறையான நெஞ்சினை பயன்படுத்தினாள். வெளியில் அவந்திகா அந்த முக்காடு உருவத்தைக் கண் திறந்து பார்த்தாள்.

அவள் கைகள் அவள் முகம் மறைத்து இருந்த முகமூடியை கழட்டியது. கைப்பாவை அவந்திகாவின் விழிகள் எந்த உணர்வைக் காட்டாத போதும், உண்மையான அவந்திகாவின் விழிகள் அவன் வலது உள்ளங்கையில் சிவப்பு நிற பழத்தைப் பார்த்ததும்அதிர்ந்து ஒரு பெரிய சீற்றத்தையே அவள் மனதில் உருவாக்கி நின்றது.

அவள் மனம் அறிந்தானோ என்னமோ அந்த உருவம், “மீண்டும் இந்தப் பழம் சாப்பிடுகிறாயா?” என்றான்.

அவந்திகா எதுவும் பேசவில்லை. அவன் சொல்வதை கேட்ட அவந்திகாவின் உதடுகள் லேசாகத் துடித்தது. அதிகமாக ஆன்மீக ஆற்றலை உறிஞ்சியதால் அவள் முகம் மட்டுமல்லாமல் உடலெல்லாமும் லேசாக வியர்க்க ஆரம்பித்திருந்தது.

அவளது நரம்புகளில் மிதமிஞ்சிய ஆன்மீக ஆற்றலால் வெளிச்சம் உருவாகி, அவளது உடலில் ஆங்காங்கே மெல்லிய வெளிச்ச கோடுகள் உண்டாகியது. அவந்திகாவின் எதிரில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து பேசிக் கொண்டிருந்த அந்த உருவம், அவளுள் ஏற்பட்ட வெளிச்ச கோடுகளைக் காணவில்லை என்பது போலத் தொடர்ந்து பேசலானான்.

“மனித உலகில் 20 வருடமாக இருந்த நீ, அங்கு யாருக்கும் தானாகச் சென்றுஉதவியதாகத் தெரியவில்லை. உன்னுடைய அற்புதமான மருத்துவ குத்தூசி முறையாலோ அல்லது மாய சக்தியாலோ எத்தனையோ முறை பலரை காப்பாற்றியிருக்கலாம்.

ஆனால் அவர்களுக்கு உதவாமல் குருடனை போலக் கண்டும் காணாமல் இருந்தாய். அப்படி இருந்த நீ திடீரென்று ஏன் யாளி உலகம் வந்தவுடனே உன் சக்தி மீறியது என்று அறிந்தும் இந்த யாளிகளுக்கு தயக்க மின்றி உதவ வந்தாய்?” என்று ஆர்வாம் இருப்பவன் போலக் கேட்டான்.

அதனைக் கேட்ட அவந்திகா, ‘பூமியில் என் அதீத சக்தியைப் பயன்படுத்தி அவர்களுக்கு உதவினால், இயற்கையின் நியதியை அது பாதிக்கக் கூடுமென்று நான் அப்படி இருந்தேன். அதை உனக்கு விளக்கிச் சொல்லவேண்டிய அவசியம் எனகில்லை.’ என்று நினைத்தாள்.

அவள் இப்படி யோசித்துக் கொண்டிருக்க, அந்தக் கருநிற உருவம் தொடர்ந்து, “அந்த மேகனின் மனதை குழப்பி உன் தோழியை நீ என்று நம்ப வைத்து அவளை உனக்குப் பதிலாகஅவன் எளிதில் இங்குக் கடத்தி வரச் செய்தேன்.

உன் தோழி கடத்தப்பட்ட உண்மை உணர்ந்த நீ உனக்குப் பதிலாக வேறொருவர் இங்கு மாட்டிக் கொண்டதில் நிம்மதியடையாமல் நொடி தயக்கமும் இல்லாமல் இப்படி வந்து நிற்கிறாய். ஆனால் நீ பூமியில் யாருக்கும் உதவாமல் இருப்பதை அறிந்த நான் இங்கு நீ வராமல் நிம்மதியாகப் பூமியில் மீதி காலத்தைக் கழிப்பாய் என்று நினைத்தேன்.” என்றான்.

அவந்திகா அவனது தயக்கமற்ற பேச்சில், ‘பாவனா இங்கு வந்து மாட்டிக் கொண்டது உண்மையில் மேகனது வேலையில்லையா?! எல்லாம் இவனது வேலையா? 400 வருடத்திற்கு முன்பு இவனைக் கொன்றுவிட்டேனென்று நினைத்தேனே! ஆனால் முன்பை விடவும் பல மடங்கு சக்தியுடன் என் எதிரில் வந்து நிற்கிறானே.’ என்று அதிர்ந்து போனாள்.

அவள் மனம் உணராமல் அந்தக் கருநிற உருவம், “சரி. அதை உன் தோழிக்கு உதவ நினைத்தாயென்று விட்டுவிடலாம். இருந்தும் உன்னை உடனே உன் தோழியிருக்கும் இடத்திற்கு செல்ல விட எனக்குத் தோன்றவில்லை

அதனால் எரி நட்சத்திரம் கொண்டு மகர யாளி செல்ல இருந்த நீ பயணித்த இடமாற்றும் சக்கரத்தைப் பரி அரசின் உயிர் மீட்கும் சக்கரத்தின் பிரச்சனை இருக்கும் இடத்திற்கு மாற்றினேன். யாளி உலகில் நீ முன்பு அவ்வளவு அனுபவித்த வலியால், யாருக்கும் உதவ விருப்பமில்லாமல்தான் பூமியில் நீ கண்டும் காணாமல் இருந்தாய் என்று நினைத்தேன்.

அதனை உறுதி படுத்திக் கொள்ளவே இந்தக் கிராம பிரச்சனை அறிந்தும் நீ அவர்களுக்கு உதவ மாட்டாய் என்று நினைத்தேன். ஆனால் என்ன செய்ய?! உன்னைத் தவறாகக் கணித்துவிட்டேன் போல.

நீ உண்மை அறிந்ததும், இந்த ஊர் மக்கள் எப்படியாவது போகட்டும் என்று நினைத்து மகர அரசுக்குப் போகாமல், தூண்டில் புழுவாக மாறி இன்று இப்படி வந்து என்னிடம் மாட்டிக் கொண்டாய்.

நீ இன்னமும் மாறவில்லை. உனக்குக் கொடுமை செய்தவர்களுக்கும் நன்மை செய்ய நினைக்கும் உன் குணம் என்னே.” என்று ஏளனமாகச் சொல்லிச் சிரித்து நடப்பதை நிறுத்தி அவள் முன் வந்து நின்றான்.

அவன் இவ்வளவு பேசி முடிப்பதற்குள் 5 சக்கர அளவு ஆன்மீக சக்தியை உறிஞ்சி கைக்காப்பு சக்கரத்தை முழுதும் உடைக்கும் விதமாக ஆன்மீக சக்தியை அவள் உடலில் ஒரு சீரான தாளத்துடன் செலுத்தி அதனை முழுதும் உடைத்தாள் அவந்திகா.

அவனிடமிருந்து தப்பும் எண்ணமாகக் கைப்பாவை சக்கரத்திலிருந்து விடுப்பட்ட அவந்திகா எச்சரிக்கை உணர்வாக முதலில் அவனிலிருந்து தள்ளி நின்று கையில் கொடியை வெளியில் எடுத்து அவனை எதிர் நோக்கி வெறித்து,

“அற்ப பலனுக்காக உலகமே ஒருவரின் இறப்பை வேண்டி நிற்கலாம். ஆனால் ஒரு உயிரேனும், சுயநலமற்று மற்றவர்களுக்குத் தீங்கு செய்யாமல் இந்த உலகில் இருக்குமேயானால் அத்தகைய உயிரைக் கொண்ட உலகை காக்க நான் தயக்கமின்றி எதுவும் செய்வேன்.” என்று அவனுக்குப் பதிலளித்தாள்.

அவனுக்கு வாய்விட்டு அப்படி பதிலளித்த அவந்திகா மனதில், ‘அப்படி சுயநலமற்ற ஓர் உயிர்தான் 400 வருடத்திற்கு முன்பு என் உயிர் இறைப்பு சக்கரத்திலிருந்து (Soul scattering Array) என்னைக் காப்பாற்றியிருக்கிறது. அது யாரென்று எனக்குத் தெரியாது. அதனால்தான் நான் இன்று உயிருடன் இருக்கிறேன் என்று மட்டும் தெரியும். அதனால்…’ என்று நினைத்து,

“நான் அறிந்த இந்த உலகில் இன்னமும் நல்லவர்கள் இருக்கும் வரை நான் மாறாமாட்டேன். ஒரு சிலர் எனக்கு இழைத்த கொடுமைக்காக அவர்களுடன் சேர்த்து மறு சில நல்ல மனம் கொண்டவர்களை நான் வெறுக்க தயாரில்லை.” என்றாள்.

இவ்வாறு தைரியமாகப் பேசிய போதும் நடுக்கமாக அவன் கையிலிருந்த அந்தச் சிவப்பு பழத்தைப் பார்த்தாள் அவந்திகா. மனித உடலில் இருந்த போதும் அவள் திறமையாகக் கைக்காப்பு சக்கரத்தை உடைத்ததில் பெருமையாகக் கருநிற உருவம் உணர்ந்து, “பிரமாதம்.” என்றது

பின் அவளது வார்த்தைகளின் உண்மையை உணர்ந்து, “ஹா…ஹா…ஹா…” என்று சிரித்த அந்த உருவம், “பார் வன்னி, யாளி உலக மக்களால் உன் அருமருந்த வெள்ளி வேர் உடல் அழிந்தது. நன்றி கெட்ட இவர்களுக்கு 400 வருடத்திற்கு முன்பு நீ உயிர் காக்கும் உதவி செய்திருந்த போதும் அவர்கள் உனக்குப் பதிலாகத் தந்தது வலி நிறைந்த மரணத்தைதான்.

இவர்களை உன்னால் மாற்ற முடியாது. நீ இன்று அந்தப் பெண்களின் உயிரைக் காப்பாற்றி கொடுத்தாலும், நாளை வேறு பலன் தரக்கூடிய காரணம் கிடைத்தால் உன்னை முன்பு போல இவர்கள் கொல்ல மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்.” என்று எள்ளி நகையாடினான்.

அவன் தொடர்ந்து, “இப்போதும் தாமதம் இல்லை. நீ 100 நாட்களில் நான் சொல்கிற யாளிகளை அழித்தால், உனக்காக நான் சக்திவாய்ந்த ஒரு பரியாளியின் உடலை உருவாக்கித் தருகிறேன். அதனோடு நீ நிம்மதியாகப் பல ஆயிரம் வருடம் யாளியுலகில் எந்தக் கவலையும் இல்லாமல் வாழலாம். என்ன சொல்கிறாய்?” என்று அவளைத் திரும்பிக் கேட்டான்.

அவன் முழுதும் சொல்லி முடிக்கும் வரை காத்திராமல், “நான் ஒரு நாளும் ஒருவரையும் அநீதியாக அழிக்கமாட்டேன். எனக்கு எந்த உடலும் தேவையில்லை. எனக்கு ஆயிரமாயிரம் வருட செழிப்பான வாழ்வும் தேவையில்லை. இன்று வரை எனக்கு ஒன்று புரியவில்லை.

என்னை இப்படி நீ செய்யச் சொல்வதின் நோக்கமென்ன? உனக்கிருக்கும் சக்தியில் நீ யாரை வேண்டுமென்றாலும் எளிதில் அழிக்க முடியும் அப்படியிருக்க என்னிடம் நீ இப்படி கேட்கக் காரணமென்ன?” என்றாள் அவனை வெறித்துப் பார்த்தவிதமாக.

அவளது வார்த்தைகளைக் கேட்ட அந்த உருவம், “ஹா…ஹா…ஹா…” என்று மீண்டும் சிரித்தான்.

சிரிப்பூனூடே, “என் நோக்கம்?!… என்ன?…” என்று நிறுத்தி, “பெரிதாக ஒன்றுமில்லை. உன் குணம் எனக்குப் பிடித்திருக்கிறது. உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. ஏனென்றால் நீ நான் இளம் வயதில் இருந்ததுப் போல் சிந்திக்கிறாய். செய்கிறாய். ஆனால் நிச்சயம் நான் இன்று இருப்பது போல நீயும் மாறுவாய்.” என்றான் நம்பிக்கையாக.

அவனது பதிலில் திகைத்த அவந்திகா, “யார் நீ. உன் பெயர் என்ன?” என்றாள் அவந்திகா.

அவள் கேள்விக்குப் பதில் சொல்லாமல், கையிலிருந்த பழத்தை எடுத்துப் பர்த்தவன், “மீண்டும் ஒருமுறை 400 வருடத்திற்கு முன் போல வலியை அனுபவித்தால் நீ மாறிவிடுவாய் என்று நினைக்கிறேன்.

400 வருடத்திற்கு முன்பு போல எளிமையாகப் பேசி உன்னிடம் இந்தப் பழத்தை உண்ண வைக்க முடியாது. அதனால்…” என்றவன் அந்த நெல்லிக்காய் அளவு இருந்த சிவப்பு நிற பழத்தை அவந்திகாவின் வாய் நோக்கி அவன் இருந்த இடத்திலிருந்தே வீசினான்.

அவன் எண்ணம் உணர்ந்தவளாக அவந்திகா உடனே கொடியினை வீசி அந்தப் பழத்தை அவள் இதழையும் தொடாமல் விலக்கித் தட்டிவிட்டாள். அவன் ஒரு தாவில் அந்தப் பழம் கீழே விழாமல் எட்டி அதனைப் பிடித்து அவளை நோக்கி மெச்சுதலாகப் புன்னகைத்தான்.

“பரவாயில்லையே. கீழான சக்தியுள்ள மனித உடலில் இருந்த போதும் லாவகமாக என் தாக்குதலைச் சமாளிக்கிறாய்.” என்று சிரித்தான்.

ஆனால் அவந்திகா அவனது நகைப்பில் கலக்கவில்லை. சீறும் சிறுத்தைபோல எச்சரிக்கையாக அவனையும், அவன் கையில் இன்னமும் உருண்டு சுழன்றுக் கொண்டிருந்த அந்தப் பழத்தையுமே இமைக்காமல் பார்த்திருந்தாள்.

அதிகமான ஆன்மீக சக்தி உறிஞ்சியதால், அவந்திகாவின் உடல் முழுதும் வெப்பம் அதிகமாகி வியர்க்க ஆரம்பித்திருந்தது. அவளது உடலில் அதிக பட்சமாக இருந்த சக்தியை மீண்டும் மரகத கல்லில் அனுப்ப அவளுக்கு நேரமிருக்கவில்லை.

ஏன் வேறு எதுவும் நினைக்கக் கூட எதிரில் இருந்தவன் அவளுக்கு இடம் தரவில்லை. ஒரு கையால் முகத்தில் சொட்ட ஆரம்பித்திருந்த வியர்வையை துடைத்தவள், மறுக்கையால் கொடியை லாவகமாக வீசி எதிரில் இருந்தவனின் கழுத்து வளைவில் குத்தூசி இட முயன்றாள்.

ஆனால் கொடி, அவனது உடலை வெற்றிடம் போலக் கடந்து சென்றதே தவிர அவனது உண்மையான உடலைத் தொடவில்லை. அப்போதுதான் அவந்திகா உண்மை உணர்ந்தாள். “கனவுச் சக்கரம்!” என்று அதிர்ந்து விழித்தாள். அதற்கு மேலும் அதிக சக்தியால் உடல் வெட்பம் தாங்க முடியாமல் சுருண்டு தரையில் விழுந்தாள்.

கொடி சட்டென எதிரில் இருந்தவனை விடுத்து மரகதகல்லை எடுத்து அவந்திகாவின் நெற்றியில் வைக்க அவள் மீண்டும் அதிகபட்சமாக இருந்த ஆன்மீக சக்தியை அதனுள் செலுத்த முயன்றாள்.

அவள் நிலை கண்ட அந்தக் கருநிற உருவம் எதையோ சாதிக்க இருப்பது போன்ற சிரிப்புடன் அவளை நெருங்கி வந்தது. அவள் அருகில் வந்து தரையில் விழுந்திருந்த அவந்திகாவின் முன் குத்துகாலிட்டு அமர்ந்து அவளது முகவாயை பற்றி அவளது வாயை திறக்கச் செய்தது.

அரை மயக்கத்தில் இருந்த அவந்திகா எதிரில் இருந்தவனை பார்த்தாள். அவ்வளவு அருகிலிருந்த போதும் முக்காடுடன் இருந்தவனின் முகம் அவளுக்குத் தெரியவில்லை. தலை இருக்கும் இடத்தில் ஒரு கருப்பு துளை மட்டுமே தெரிந்தது.

அவள் நெற்றியை தொட்டுக் கொண்டிருந்த கொடி, அந்த முக்காடு மனிதனின் செயல் உணர்ந்து, மரககல்லை விட்டுவிட்டு, அந்தப் பழத்தைப் பற்றியிருந்த அந்த உருவத்தின் கையைப் பற்றி அவந்திகாவின் உதடருகில் அந்தப் பழத்தைச் செல்லவிடாமல் எதிர்புறமாக இழுத்தது. ஆனால் அவன் மிகவும் எளிதாகக் கொடியை இழுத்து தூர வீசினான்.

கொடி அந்தத் தாக்குதலில் அதிர்ந்து அந்த அறையின் சுவரில் அடித்துச் சுருண்டு அசைவற்று தரையில் விழுந்தது. அவந்திகாவின் உடலும் கொடியைப் போலவே ஒரு அதிர்வு அதிர்ந்து மீண்டும் அசைவற்று போனது.

அவளை அப்படி பார்த்த அந்த உருவம், “போன முறை இந்தப் பழம் அருமையாக இருப்பதாகச் சொன்னாய். அதே மரத்திலிருந்து வந்த பழம்தான் இதுவும். இதையும் நீ விரும்புவாய்.” என்றவன் அந்தப் பழத்தை அவந்திகாவின் உதடருகில் கொணர்ந்தான்.

அப்போது அவந்திகாவின் அருகில் நந்தன் தோன்றி அவள் முகவாயை பற்றியிருந்த அந்த முக்காடு மனிதனின் கையைத் தட்டிவிட்டு அவனது பிடியிலிருந்து நொடியில் அவந்திகாவை பிடித்து இழுத்து அவளை அவன் மார்போடு போட்டுக் கொண்டு கருநிற மனிதனிடமிருந்து பத்து மீட்டர் தள்ளி நின்றான்.

எதிரில் நின்ற கருநிற உருவத்தை வெறித்துப் பார்த்த நந்தன் ஒரு கையில் வாளை எடுத்துச் சண்டையிட தயாராகி நின்றான். மற்றொரு கையில் அவந்திகாவின் இடையை வளைத்துப் பிடித்து அவள் மீண்டும் தரையில் விழுந்துவிடாதபடி பிடித்தான். அவந்திகாவின் தலை சக்தியற்று நந்தனின் கழுத்து வளைவில் பொதிந்து நின்றது.

அவன் விழிகள் எதிரில் இருந்தவனை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனது உடலிலிருந்து வெண்மை நிற ஒளியில் பல பட்டாம்பூச்சிகள் உருவாகி அவந்திகாவை அவன் கையிலிருந்து தூக்கி சென்று அவளை மெத்தை மீது கிடத்தியது.

பின் பாதுகாப்பு அரண்போல அவளைச் சுற்றி பல பட்டாம்பூச்சிகளால் ஆன பாதுகாப்பு சக்கரத்தை உருவாக்கியது. தரையில் விழுந்திருந்த கொடி, மெல்ல தவழ்ந்து வந்து அவந்திகாவின் கையில் சுற்றிக் கொண்டது.

இந்த நிகழ்வுகளை எந்த வித எதிர்க்கும் எண்ணமும் இல்லாமல் பார்த்திருந்த முக்காடு உருவம், “உண்மையில் நீ திறமையானவன் தான். என்னுடைய கனவு சக்கரத்தையும் உடைத்துக் கொண்டு வந்திருக்கிறாய். உன்னை இராட்சசன் என்று எல்லோரும் சொல்வதில் ஆச்சரியமில்லை.” என்று சிரித்தான்.

‘தன்னை பார்த்ததும் இனம் கண்டுக் கொண்ட இவன் யார்?’என்று திகைப்பு நந்தனுள் இருந்த போதும், முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் எதிரில் இருந்தவனிடமிருந்து அவந்திகாவை பாதுகாக்கும் எண்ணமுடன் அவளுக்கும் அவனுக்கும் இடையில் நின்றான் நந்தன். ஆனால் எதுவும் பேசினான் இல்லை.

பெரிய சண்டையை எதிர் நோக்கி நின்ற நந்தன் எதிரில் இருந்தவனின் சக்தியைக் குறைத்து எடை போடத் தயாராக இல்லை. அவந்திகா ஆபத்தில் இருப்பதை உடனே உணர்ந்துவிட்ட போதும் நந்தனால் இந்தக் கனவுச் சக்கரத்தை எளிதில் உடைக்க முடியவில்லை.

இந்தக் கனவு சக்கரத்தின் நுனுக்கங்களை அறிந்து அதனை உடைக்க அதற்கான எதிர்மறையான வகையில் அவனது ஆன்மீக சக்தியைச் செலுத்தியவனின் சக்தி, பல வருடங்களுக்குப் பிறகு அதிக பட்ச நிலையிலிருந்து குறைந்து இப்போது 6 சக்கர சக்தி நிலைக்கு மாறியிருக்கிறது.

இந்தக் கனவு சக்கரத்திற்குள் அவனால் அதனை முழுதும் மீளுருவாக்கம் செய்ய முடியவில்லை. அதனால் நந்தன், அந்தக் கருநிற உருவத்தை அவன் குறைத்து எடை போடவில்லை.