யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 33

878

அத்தியாயம் – 33

உள்ளூர விஷமமாகப் புன்னகைத்தவிதமாக, வெளியில் லேசான சங்கடமுடன் பொம்மி என்ற பெண்ணுடன் நடந்தான் நந்தன்.

பொம்மி தன் அக்காவின் நிலையையும் தனக்கு மாமாவாக வரவிருப்பவரின் ஆர்வத்தையும் பார்த்து அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் விரும்புவதாக நினைத்தாள்.

அக்காவின் மீது அளவில்லாத பாசமுடன் இருந்த பொம்மி, அதே நினைவில் தன்னோடு வந்த நந்தனை பார்த்துத் தயங்கி தயங்கி, “மாமா. என் அக்காவைத் திருமணத்திற்கு பிறகு என்னைப் பார்க்க அழைத்து வருவீங்களா?” என்றாள்.

அவளது குரலில் அவளைப் பார்த்த நந்தன் கைப்பாவையாக அவர்களை இயக்குபவன், பொம்மிக்கு என்ன பதில் அவனைச் சொல்ல வைக்கிறான் என்று ஒரு நொடி காத்திருந்தான். ஆனால் அவன் உதடுகள் தானாக அசையாமல் இருப்பதை உணர்ந்தான்.

பின் எதிர்பார்ப்புடன் அவன் கண்களைப் பார்த்திருந்த பொம்மியை பார்த்துப் புன்னகைத்தான் நந்தன். “உன் அக்காவின் விருப்பம் எதுவென்றலும் நிச்சயம் செய்வேன்.” என்றான்.

அந்தப் பதிலில், ‘அக்காவின் மீது மாமாவுக்கு நிச்சயம் ரொம்ப அன்புதான். அவளது விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.’ என்று நினைத்துக் கிளுக்கி சிரித்தாள் பொம்மி. பின் அவன் முன் ஓடிச் சென்று ஓர் அறையின் கதவின் முன் நின்று, “மாமா. இதுதான் என் அக்காவின் அறை. அவள் உள்ளேதான் இருக்கிறாள். நீங்க உள்ளே போங்க. நான் இங்கே காத்திருக்கிறேன்.” என்றாள்.

நந்தன் ஒரு சிறு தலை அசைப்புடன் அவந்திகா இருந்த அறைக்குள் சென்றான். அங்கு அவந்திகா அந்த அறையிலிருந்த ஜன்னல் நோக்கி வெளியில் பார்த்தவிதமாக அவனுக்கு முதுகு காட்டி நின்றிருந்தாள். பின்னிருந்து பார்க்க அமைதியாக நின்றிருந்தப் போதும் அவளுள் பல சிந்தனைகள்.

‘நேற்று நந்தன் சொன்னதிலிருந்து பார்க்கும்போது தடைச் செய்யப்பட்ட உயிர் மீட்கும் சக்கரம் உருவாக்குவது அவ்வளவு எளிதில்லை என்று தெரிகிறது. அந்தச் சக்கரம்போல இந்தக் கைப்பாவை சக்கரமும் தடைச் செய்யப்பட்ட(forbidden) ஒன்றுதான்.

இந்தக் கைப்பாவை சக்கரம் உருவாக்குவதும் எளிதல்ல. உயிர் மீட்கும் சக்கரம் வேண்டுமென்றால் எல்லோராலும் அறியப்படாமல் இருக்கலாம். ஆனால் கைப்பாவை சக்கரத்தை எளிதில் எல்லாராலும் அறிய முடியும்.

இதனை எளிதில் அறிவதற்கான குறிப்புகளையும், அதனை முழுதும் உடைக்கும் வரை முறைகளையும் நான் முன்பு எழுதிய சக்கரங்கள்குறித்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தேன். என் குறிப்பைப் பார்த்த யாராலும் இதனை எளிதில் அறிய முடியும்.

அதனால் கைப்பாவை சக்கரத்தைப் பயன்படுத்துவதால் இவற்றைச் செய்பவன் எளிதில் மாட்டிக் கொள்ள வாய்ப்பிருப்பதை உணராமலா இருப்பான். அதனோடு கைப்பாவை சக்கரத்தின் பிடியிலிருந்து 5 சக்கர சக்தி நிலைக் கொண்ட யாராலும் மீள முடியும்.

இந்த 5 சக்கர சக்தி கொண்ட முகிலன் அதிலிருந்து விடுபடவில்லையா? அவன் ஏன் முன்பிட்ட திட்டத்தின் படி பேசாமல் திருமண நாள் நிச்சையிப்பதுப் போல் உளறினான். ’ என்று ஒரு நொடி குழம்பி போனாள்.

பாவம் அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவள் உருவாக்கிய அந்தச் சக்கர நிலைகள்பற்றிய புத்தகம் ஒரு திருட்டு பூனையிடம் மாட்டிக்கொண்டதும். அதனைப் பல நூறு முறை அந்தப் பூனை புரட்டிப் புரட்டிப் பார்த்து ஒரு வழியாக்கியதும்(1), அப்படியொரு புத்தகம் இருப்பது இன்னமும் யாளி உலகத்தில் இருப்பவர்களுக்கு யாருக்கும் தெரியாது என்பதும்.

ஏன் மதி மற்றும் முகிலனுக்கும் கூட அந்தப் புத்தகம் எழுதப்பட்டது தெரியுமே தவிர இப்போது அதன் இருப்பிடம் எங்கென்று தெரியாது. இதெல்லாம் யாளி உலகில் இவ்வளவு காலம் இல்லாத அவந்திகாவிற்கு தெரிவதற்கில்லை என்பதில் பேதமில்லை.

இவ்வாறு அவளுள்ளே சிந்தனையிலிருந்த அவந்திகாவும் சரி, கைப்பாவையாக இருந்த பௌதிகாவும் சரி நந்தன் அவளது அறைக்குள் வந்ததையும் அறியவில்லை. அவள் அருகில் வந்ததையும் அறியவில்லை.

எதுவும் உணராமல் மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தாள் அவந்திகா, ‘கைப்பவை சக்கரம் தடை செய்யப்பட்டது என்றாலும், உயிர் மீட்கும் சக்கரம் உருவாக்குவதற்கு போல் பெரிய தியாகமெல்லாம் அதற்குச் செய்ய வேண்டியதில்லை.

என்ன கைப்பாவை உருவாக்குவதற்கு ஒருவனுக்கு அதிக சக்தி தேவைப்படும். அதனோடு அதனை வரைவதும் கொஞ்சம் சிக்கலனாது. அதனைக் கற்பதும் எளிதல்ல.

தடைச் செய்யப்பட்டது என்பதால் நான் அறிந்திருந்த போதும், என் புத்தகத்தில் எப்படி அதனை உணர முடியும் என்றும், எப்படி உடைக்க முடியும் என்பதையும் குறிப்பிடிருந்தேனே தவிர, அதனை எப்படி எளிதில் உருவாக்குவது என்று நான் அறிந்திருந்த போதும் அதனைக் குறிப்பிடவில்லை.’ என்று நினைவு கூர்ந்தாள்.

அவள் இவ்வாறு யோசனையிலிருக்கும்போது அமைதியாக அவள் அருகில் வந்துவிட்டிருந்த நந்தன், பின்னிருந்து அவள் காதருகில் குனிந்து, “என்னை உங்களுக்கு உண்மையில் பிடித்திருக்கிறதா?” என்றான்.

திடீரென்று கேட்ட அவனது குரலில் உடனே துடுக்குற்று திரும்பியவள் அங்குப் பட்டு வேட்டி சட்டையில் புன்னகையுடன் நின்றிருந்தவனை பார்த்துச் சட்டென்று நாணம் பூசி நின்றாள்.

பின் திக்கி திக்கி, “நீ… நீங்க.எப்படி இங்கே?! நா…நாம். இப்படி திருமணத்திற்கு முன் தனியாக இருக்கக் கூடாது.” என்றாள் அவந்திகா. ஆனால் மனதுள், ‘ஐயோ.’ என்றிருந்தது அவளுக்கு.

‘என்னுள் 5 சக்கர சக்தி இருந்தால், இப்படி உண்மையிலே அவனைத் திருமணம் செய்துக் கொள்பவள் போல அனுமதியற்று பேசும் தன் உதடுகளைப் பேசவிடாமல் கைப்பாவை சக்கரத்தை இந்நேரம் உடைத்திருப்பேனே’.’ என்று மனதுள் புலம்பினாள்.

அப்போது சின்ன சிரிப்பை உதிர்த்த நந்தன் அவளது இருக்கைகளையும் பற்றித் தன் உள்ளங்கையில் வைத்து அவள் நெற்றி நோக்கிக் குனிந்தான்.

அவனது அந்தச் சிரிப்பு கைப்பாவையின் சிரிப்பா அல்லது உண்மையில் நந்தனின் சிரிப்பா என்று புரியாமல் விழி விரித்து நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்திருந்தப் போதே அவன் முகம் அவள் முகம் நோக்கி அருகில் வருவது அவந்திகாவிற்கு தெரிந்தது.

அவன் என்ன செய்கிறான் என்பதை உணர்ந்த அவந்திகா, உண்மையிலே உடல் விறைத்துச் சிலையைப் போல நின்றாள். கூடவே, ‘நந்தனாலும் கைப்பாவை சக்கரத்திலிருந்து மீள முடியவில்லையா? இவன் என்ன செய்ய நினைக்கிறான்?’ என்று திகைத்தாள்.

அவள் எண்ணி முடிக்குமுன்னே, நந்தனின் இதழ் அவளது நெற்றியில் மென்மையாகப் பதிந்து முத்தமாக மாறி, அவனது சூடான சுவாசக்காற்று அவள் நெற்றி முடிமீது பட்டு அதனை அசைந்தாட செய்து அவளுக்கு அக்குளிப்பை உண்டாக்கியது.

அவந்திகாவும், கைப்பாவையும் ஒன்றே நினைப்பதுப் போல, அவள் உடல் சிலிர்க்க ஒரு அடி பின்னோக்கி வைத்து அவன் கையிலிருந்து அவள் கையை விடுவிக்க முயன்றாள்.

அப்போது அவள் கையை அழுந்தப் பற்றிய நந்தன் அவன் பதித்த உதடுகள் மூலமாகவோ என்னமோ ஆன்ம இணைப்பில், “இளவரசி. பயப்பட வேண்டாம்.” என்றான்.

ஆன்ம இணைப்பில் நந்தனின் குரலைக் கேட்டதும் புத்துயிர் வந்தவள் போல, ‘நந்தனுக்கு கைப்பாவை சக்கரத்திலிருந்து மீளும் முறை தெரிந்திருக்கிறது.’ என்று பெருமூச்சுவிட்டு மேலும் பேச நினைத்தாள்.

கூடவே அவனது குரல் ஆன்ம இணைப்பில் வந்ததுப் போலல்லாமல் அவன் உதடுகள் அவள் நெற்றியில் நரம்பில் பதிந்ததால் வந்தது என்பதை அதிர்ந்து உணர்ந்தாள். அதனால் பின்னோக்கி போகாமல் அப்படியே நிற்க எத்தனித்தாள். முன்பு போலல்லாமல் அவளால் அவளை இப்போது கட்டுப்படுத்த முடிந்தது.

“நந்தன். கைப்பாவை…” என்று அவள் மேலும் மனதுள் பேச முயன்றபோது,

“இளவரசி. அதிகம் பேச வேண்டாம். சொல்வதை கேளுங்க. கைப்பாவை சக்கரத்தை நான் முழுதும் உடைக்கவில்லை. இப்போது நாம் கைப்பாவை சக்கரத்தை உடைத்தால் நம் திட்டம் வீணாக வாய்ப்பிருக்கு.

அதனோடு இன்னமும் இருக்கும் இரண்டு நாளில் நீங்கப் போலி என்று அறிந்தால், உங்களுக்குப் பதிலாக வேறு பெண்ணின் பத்தாவது உயிர் பிரிவைக் கொண்டு வருகிற செந்நிற பௌர்ணமி உயிர் மீட்கும் சக்கரத்தைப் பூர்த்தி செய்ய வாய்ப்பிருக்கு.

அதனால் கடைசி வரை நாம் இப்படியே நடிப்பது நல்லது. அதனால் எதிரியின் திட்டத்தை முழுதும் உடைப்பதோடு யாருக்கும் எந்தப் பாதிப்பும் வராமல் தடுக்க முடியும். நான் உங்களுடனே இருப்பேன். கவலை பட வேண்டாம்.” என்றான்.

அதற்கு அவந்திகா, “ம்ம்.” என்றாள். ‘அவன் சொல்வதும் சரிதான்.’ என்பது போல நிம்மதி பெருமூச்சுவிட்டு அவனிலிருந்து விலகி நிற்க முயன்றாள். அதன் பிறகு அவள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் கைப்பாவையாக மாறினாள். அவன் முகம் பார்க்க முடியாமல் நாணித்து முகம் சிவந்து தலை குனிந்து நின்றாள்.

அடுத்த நொடி, “நீங்க வெட்க படும்போது மிகவும் அழகாக இருக்கீங்க.” என்றவன் அவள் முகம் மறைத்திருந்த முகமூடியை விலக்கி அவள் மூக்கை பிடித்துச் செல்லமாக ஆட்டினான்.

எதுவும் பேசாமல் வெளியில் மேலும் நாணித்த அவந்திகா, உள்ளூர, ‘இது நந்தன் கைப்பாவையாகச் செய்த செயலா இவை? அல்லது உண்மையான நந்தனின் செயலா? ‘-_-’.’ (2)என்று இம்மசையாக உணர்ந்தாள்.

கூடவே, ‘நல்லவேளை மாப்பிள்ளையாக நந்தனையே நடிக்க வந்தான். பழக்கமானவன் என்பதால் அவனது தொடுகை உடல் சிலிர்ப்பை தந்தப் போதும் அருவருப்பாகத் தோன்றவில்லை.’ என்று உள்ளூர பெருமூச்சுவிட்டாள்.

அவள் மனம் இப்படி அதுவென்றும் இதுவென்றும் யோசித்துக் கொண்டிருக்க, நந்தன் அவள் மனம் உணர்ந்தானோ என்னமோ மீண்டும் அவளை ஒரு முறை இழுத்து அவன் மார்போடு அணைத்துக் கொண்டு அவளது தலைக்கு மேல் அவனது முகவாயை வைத்து, “இன்னும் 10 நாட்களில் நாம் கணவன் மனைவியாகியிருப்போம்.” என்று பெருமூச்சுவிட்டான்.

அவந்திகாவின் முகம் நந்தனின் அகன்ற மார்பில் பொதிந்து அவனது உடல் வெட்பம் அவள் முகத்தில் பதிந்து அவளைத் திணரடித்தது.

உண்மையான அவந்திகா, ‘-_-’. உண்மையான நந்தன், ‘^_^’.

அவனிலிருந்து நெளிந்து விலகிய அவந்திகா, “அ…அதுவரை எனக்காகக் காத்திருங்க. இ…இப்போது இனியும் நீங்க இந்த அறையில் இருப்பது சரியாகாது.” என்று அந்தக் கதவை நோக்கிச் செல்ல முயன்றாள்.

ஆனால் அதற்குள் அவள் கைப்பற்றிய நந்தன், மெதுவாக அவள் முகமூடியை அவள் முகத்தில் மீண்டும் அணிவித்து அவள் விழிகளைப் பார்த்துக் கண்கள் சிமிட்டினான். எதுவும் செய்யத் தோன்றாமல் அவனை நிமிர்ந்து பார்த்த அவந்திகா அவன் முகமூடியின் கயிறை அவள் காது மடலில் தடவி அவள் தலைப்பின் கட்டிவிடும் வரை அசைவற்று சிலைப் போல மூச்சு பேச்சற்று நின்றாள்.

அவள் திகைத்து நிற்கும் தோற்றத்தில் மீண்டும் ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்து ஒரு தலை அசைப்புடன் அந்த அறையை விட்டுச் சென்றான் நந்தன். வெளியில் கதவின் அருகில் நின்றிருந்த பொம்மியிடமும் ஒரு தலை அசைப்புடன் சென்றுவிட்டான்.

அதன் பிறகு பொம்மி அவள் அக்காவின் அறைக்குப் போனதோ, அவள் அக்காவிடம் நந்தனின் அருமை பெருமைகளைப் பேசியதோ எதுவும் அவந்திகாவின் காதிலும் விழவில்லை. அவள் மனம் நந்தனின் செயலில் படப்படத்து இன்னமும் இயல்புக்கு வரவும் மறுத்துக் கொண்டிருந்தது.

கைப்பாவையான அவந்திகாவும் அவ்வப்போது பொம்மியின் வார்த்தைகளில் நாணித்தாளே ஒழிய, பொம்மிக்கு பதில் எதுவும் சொல்வதாக இல்லை. நந்தனும் முகிலனும் மதியும் திருமண தேதி நிச்சையித்த பின் அவர்களின் வீட்டைவிட்டு வெளியில் வந்தனர்.

வெளியில் வந்த சில தூரத்தில் கைப்பாவை சக்கரத்திலிருந்து அனைவரும் விடுப்பட்டனர். நந்தன் திரும்பி ஒரு மரத்தின் கிளையிலிருந்த சிட்டுகுருவியை பார்க்க அந்தக் குருவி ஏதோ கட்டளையை ஏற்றேன் என்பதுப் போல அவர்கள் வந்த திசையை நோக்கி அவந்திகா இருந்த வீட்டின் பக்கமாகப் பறந்து சென்றது.

இதனை அறியாத முகிலனும் மதியும், தன் உடலையும் வாயையும் இயல்பாக அசைக்க முடிவதை உணர்ந்து, அவந்திகா அந்த வீட்டிலிருந்தால் ஏதேனும் அவளுக்கு ஆபத்து வரம் என்பதை உணர்ந்து மீண்டும் அந்த வீட்டுக்குள் சென்று அவந்திகாவை அழைத்துக் கொண்டு வர நினைத்து வேகமாக வந்த வழியே மீண்டும் செல்ல எத்தனித்தனர்.

அவர்கள் எண்ணம் உணர்ந்தவனாக அமைதியாக நந்தன், “இருவரும் பொறுமையாக இருங்க. இதுவரை நீங்கக் கைப்பாவை சக்கரத்தில் மாட்டிக் கொண்டிருந்தீங்க. என் இதய இரத்தம் பதிந்த அந்தக் காதணிகள் இளவரசியுடன் இருக்கும் வரை இளவரசிக்கு எந்தப் பாதிப்பும் வராது.” என்றான்.

நந்தனின் குரலில் சற்று நின்ற மதியும் முகிலனும் திரும்பி அவனைப் பார்த்தனர். மதி நந்தனை பார்த்து முறைத்தாள். முகிலன், “உனக்கு அது கைப்பாவை சக்கரம் என்று தெரியுமா? அப்போது உனக்கு அதிலிருந்து விடுப்படும் வழியும் தெரிந்திருக்கும் தானே? ” என்று கேட்டான்.

அதற்கு ஆமாம் என்பதுப் போலத் தலை அசைத்தான் நந்தன். உடனே கோபமுற்ற முகிலன், “தெரியுமென்றால் அவந்தியையும் எங்களையும் அதிலிருந்து ஏன் மீட்கவில்லை.” என்று அவனுக்கு நேர் எதிர் சென்று நின்று கேட்டான்.

அதற்கு, “விளக்கமாகப் பேச இது இடமில்லை. நாம் சத்திரத்திற்கு போகலாம். அறைக்கு வந்து சேருங்க. இப்போது மீண்டும் நீங்க அந்த வீட்டுக்குப் போனால்தான் இளவரசிக்கு ஆபத்து நேரும்.” என்று விட்டுக் காற்றில் சாம்பல் நிற மின்னும் துகள்களாக மாறி அங்கிருந்து காணாமல் போனான் நந்தன்.

மதியும் முகிலனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மதி, “வன்னியின் மீது அக்கறையுடன் இருக்கிறான் என்ற போதும் இந்தப் பவளனை எதுவரை நம்பலாம் என்று தெரியவில்லையே.” என்றாள்.

முகிலன், “பேசாமல் என் குருவை உதவிக்கு அழைக்கலாமா?” என்றான்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவர்களது ஆன்ம இணைப்பில், “இவ்வாறு செய்வதால் என் இளவரசி மறுப்பிறப்பை இந்த உலகுக்கு நீங்கத் தெரிய படுத்துவது மட்டுமல்லாமல், இளவரசியின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும்.

அப்படி மறுமுறை நேரும் என்றால் என் இளவரசியின் சிநேகிதர்களாக இருந்த போதும் உங்களை உயிருடன் விடுவேன் என்று நினைக்க வேண்டாம்.” என்றது நந்தனின் கோபமான குரல்.

‘இந்தப் பவளனுக்கு எப்படி நம் ஆன்ம இணைப்பின் கடவுச்சொல் தெரியும்.’ என்று ஒருபுரம் மதியும், முகிலனும் திகைத்த போதும், அவன் சொன்னதன் அர்த்தம் புரிந்து இருவருமே அதிர்ந்து விழித்து அமைதியாகச் சத்திரத்தை நோக்கிச் சென்றனர்.

இது அவர்கள் உயிர் போகும் என்பதால் வந்த அதிர்வல்ல. மீண்டும் அவர்களின் சிநேகிதியின் உயிருக்கு ஆபத்து என்றதால் வந்த அதிர்வு.

‘முகிலனின் குருவான சந்திரகுரு அவந்திகாவிற்கு பாதிப்பு ஏற்படுத்தமாட்டார் என்ற நம்பி இருந்தப் போதும், பவளனின் வார்த்தைகளில் ஒரு நூலளவு உண்மை இருக்குமேயானால்?’, என்று எண்ணிய சிநேகிதர்கள் இருவருக்குமே அவந்திகாவின் உயிருக்கு ஆபத்து தரும் செயலைச் செய்யத் துணியவில்லை.

அதே நினைவில் விரைவில் சத்திரத்தின் அறைக்கு வந்த மதியும் முகிலனும் நாற்காலியில் அமர்ந்திருந்த நந்தனை சில நிமிடங்கள் ஆராயும் பார்வையுடன் பார்த்து நின்றனர்.

பின் நந்தனை பார்த்து, “உனக்கு எப்படி இளவரசியை தெரியும்.” என்று கேட்டான் முகிலன். “நீ அவளை நெருங்கி வந்ததன் நோக்கம் என்ன?” என்றாள் மதி.

அவர்களை நிமிர்ந்து பார்த்த நந்தன் முன்பு அவந்திகாவின் முன் இருந்த பணிவான பவளனுக்கும் இவனுக்கும் தொடர்பில்லை என்பது போலான பாவனையில் திமிராக அமர்ந்து, “அதனை உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை.

என் இளவரசியின் விருப்பப்படி இப்போது இந்த ஊர் பிரச்சனை சரிச் செய்ய வேண்டும். உடன் இருந்து உதவ முடியவில்லையென்றால், ஒதுங்கி இருங்க. உதவி செய்வதாக நினைத்துக் கொண்டு அவருக்கு ஆபத்தை உண்டாக்கிவிடாதீங்க.” என்றான் இளக்கமற்ற குரலில்.

அவனது திமிரான பதிலில் கோபமுற்றா முகிலன் அவனைச் சட்டையைப் பற்ற ஒரு அடி எடுத்து வைத்தான். ஆனால் அதற்குள் மதி அவன் கையைப் பற்றி, ‘அவசரபடாதே!’ என்பதுப் போல் மறுப்பாகத் தலை அசைத்தாள். அவன் கை முஷ்டி இறுக அவனை வெறித்து நின்றான்.

அவனை அன்று முழுதும் பார்த்ததில் மதி முகிலன் இருவருக்குள்ளுமே நந்தனின் சக்தி அவர்களை விடவும் மிகவும் அதிகம் என்பது தெளிவாகத் தெரிந்தது. கூடவே, ‘அந்த இரட்சசன் நந்தன் இவனாக இருக்குமோ!.’ என்ற சந்தேகமும் அவர்களுள் எழதான் செய்தது.

ஏனென்றால், ‘அவனது ஒரு துளி இரத்தம் 7 சக்கர சக்தியுள்ளவர்களின் தாக்குதலைத் தடுக்கும் என்றால் அவன் எவ்வளவு சக்தி வாய்ந்தவனாக இருக்க வேண்டும். அவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் இப்போது இந்த யாளி உலகிலே மொத்தம் இருவர்தான்.

ஒன்று யாளி உலக பேரரசர். மற்றொன்று அந்த இரட்சசன் நந்தன் மட்டுமே. அந்தப் பேரரசரை மதி முகிலன் இருவருமே பார்த்திருக்கின்றனர். நந்தனைதான் அவர்கள் பார்த்ததில்லை. அதனால் இந்தச் சக்தி வாய்ந்த பவளன் அந்த நந்தனாக இருக்க அதிக வாய்ப்பிருப்பதை உணர்ந்த சிநேகிதர்கள் இருவரும் அவனிடம் எச்சரிக்கை உணர்வுடன் இருந்தனர்.

அதனால் இந்த ஊர் பிரச்சனை முடிந்ததும் அவந்திகாவை இவனிடமிருந்து எப்படியாவது பிரித்து எங்காவது இவன் அறிய முடியாதபடி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று விட வேண்டும்.’ என்று அவந்திகாவின் சிநேகிதர்கள் பெரிய திட்டமே போட்டு வைத்துவிட்டிருந்தனர்.(3)

அவர்களின் எண்ணத்தை ஏற்கனவே அறிந்தவன் போல ஏளனமாக அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தான்(Smirk). அப்படி சிரித்துக் கொண்டிருக்கும் போதே சட்டென அவனது முகம் மாறித் தீவிரமாக மாறியது.

உடனே அவன் இருப்பிடத்திலிருந்து எழுந்து நின்றான். நந்தனின் திடீர் மாற்றத்தைப் பார்த்த மதியும் முகிலனும் கேள்வியாக அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவன் சாம்பல் நிற மின் துகள்களாக மாறிக் காற்றில் கரைந்து போனான்.

அவனது முக மாற்றத்திலும் திடீரென்று காணமல் போனதிலும் மதியும் முகிலனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவந்திகாவிற்கு ஏதாவதோ என்று நினைத்து உடனே கிளம்பினர்.

ஆனால் அவர்கள் அறை கதவைத் திறக்குமுன்னே, “இளவரசிக்கு எதுவும் இல்லை. நான் கைப்பாவையை உருவாக்கி நம்மைக் கட்டுபடுத்தியவனை தேடிச் செல்கிறேன். வந்து விளக்கமாகச் சொல்கிறேன்.” என்று ஆன்ம இணைப்பில் நந்தன் சொன்னான்.

ஏனோ சிநேகிதர்கள் இருவருக்குமே பலவித சந்தேகங்கள் நந்தன் மீது இருந்த போதும், அவந்திகாவின் மீது நந்தனுக்கு அக்கறை இருப்பதை அவர்களால் மறுக்க முடியவில்லை. அதனால் அவனுக்குக் காத்திருப்பதென்று முடிவெடுத்து வேறெதுவும் செய்யாமல் அவனது வருகைக்காகக் காத்திருந்தனர்.

சில நாழிகைகள்(4) கழித்து மீண்டும் வந்த நந்தன் தீவிரமான முகத்துடன், “இந்தக் கிராமத்தில் நிகழும் இந்த நிகழ்வு சாதரணமானதல்ல. இது அவந்திகா யாளி உலகம் வரவிருப்பதை முன் கூட்டியே அறிந்த ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று” என்று பெரிய அதிர்ச்சி தகவலை முகிலன் மற்றும் மதியிடம் சொன்னான்.

“என்ன?” என்று கேட்ட இருவருமே அதிர்ந்தனர். அதற்குப் பதில் சொல்லாமல் ஆமாம் என்பது போல் தலை அசைத்தான் நந்தன்.

பின், “இதுவரை இதில் மூவர் ஈடுபட்டுள்ளனர். ஒரு மனித யாளி பெண். ஒரு மாதங்க யாளி ஆண். மற்றொருவன்?!” என்று நெற்றி சுருக்கி யோசித்த நந்தன், “மகரயாளி வகையாக இருப்பான். என்பது என் கணிப்பு.

ஆனால் அவன் உடல் முழுதும் மறைக்கும் படி கரு நிற உடை அணிந்திருந்தான். மகர யாளி போல நீல நிற உடையோ மற்ற யாளி வகைகளின் உடையோ அணிந்திருக்கவில்லை. தலையையும் மறைக்கும் விதமாகக் கருநிறத்தில் முக்காடு போல அணிந்திருந்தான்(5). இதல்லாமல் எனக்கு என்னமோ வேறு சிலருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம். என்று தோன்றுகிறது.” என்றவன்,

சிறிது நிறுத்தி அவர்களை நிமிர்ந்து பார்த்து, “உங்களில் ஒருவர் அந்தப் பெண் பௌதிகாவுடன் இருக்க வேண்டும். அவந்திகா மாற்றப்பட்டது வேறு எந்த வகையிலாவது தெரியவந்தால் முதலில் பாதிக்கப்படுவது அவந்திகாவும் அந்தப் பெண் பௌதிகாவும்தான். அதனால்?.“ என்று எதிரில் இருந்த இருவரையும் கேள்வியாகப் பார்த்தான்.

அவன் விளக்கத்தை ஒரு திகிலுடன் பார்த்திருந்த மதியும் முகிலனும் பேயரைந்தது போல நின்றனர்.

அதன் பின் முகிலன், “மதி அந்தப் பெண்ணுடன் இருப்பாள். மேலும் நீ அறிந்ததை சொல்.” என்றான். மதியும் முன்பு எதிர் பேச்சு பேசாமல் சரி என்பது போலத் தலையசைத்தாள். நந்தனும் அவன் அறிந்ததை சொல்ல ஆரம்பித்தான்.

இவ்வாறாக வெவ்வேறு விதத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த மூவரும் அவந்திகாவிற்காக ஒன்றிணைந்து அவந்திகாவையும் அந்த ஊர் பெண்களையும் மீட்கும் திட்டத்தை வகுக்கக் கூட்டாளிகளாகினர்.

Author Note:

(1) அந்தப் புத்தகம் கண்டிப்பாகச் சாதாரண காகிதத்தில் எழுதப்பட்டிருக்காது. அப்படி இருந்தால் அத்தனை முறை முரட்டு பூனை புரட்டியதிற்கு கிளிந்து நார் நாராகியிருக்கும் என்று நினைக்கிறேன். Hero sir உங்க possession உணர்வு எல்லை மீறிதான் போயிருக்கு! கற்றதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்காமல் அந்தப் புத்தகத்தை ஒழித்து வைத்துக் கொண்டு என்ன செய்றீங்க?

(2) நீங்க என்ன நினைக்கிறீங்க Readers.உண்மையான நந்தனின் செயலா? அல்லது puppet நந்தனின் செயலா?

(3) அவந்திக்கு ஒன்னுனா எப்படிதான் மதியும், முகிலனும் கூட்டாளிகளாகிறாகளோ. writer-அ எழுதுற எனக்கே தெரியலிங்க.

(4) 1 நாழிகை = 24 Minute

(5) Hooded man image. Something like below