Advertisement

அத்தியாயம் – 32

பின் மதியும் முகிலனும் சாதாரண மனித யாளிகள் போல இயல்பான ஆடைகளுக்கு மாறி, அவர்களின் ஆன்மீக ஆற்றலைத் தளர்த்தி, 25 தோற்ற வயதிலிருந்து, 50 தோற்ற வயதிற்கு இருவரும் மாறினர்.

நந்தன் வெள்ளை நிற பட்டு வேஷ்டி சட்டைக்கு மாறினான். எல்லோரும் அடுத்த இரண்டு நாள் நடக்க விருக்கும் நாடகத்திற்கு தயாராகி நின்றனர். ஒருவரை ஒருவர் பார்த்து அனைவரும் திருப்தியுற்றனர்.

இவ்வாறாக அந்த அறையிலிருந்த ஒவ்வொருவரின் நொடி பொழுதில் ஏற்பட்ட தோற்ற மாற்றத்தை ஆர்வமுடன் பௌதிகா பார்த்திருந்தாள்.

இறுதியாக அவந்திகா பௌதிகாவிடம் வந்து, “பௌதிகா. நான் உன் பழக்க வழக்கங்களையும் உன் பேச்சு முறைகளையும் அறிய வேண்டும். அப்போதுதான் யாருக்கும் சந்தேகம் வராமல் நான் நீயாக நடிக்க முடியும். முகமூடி அணிந்திருப்பதற்கு தொண்டை இருமல் என்று சமாளிக்கலாம்.

ஆனால் பேச்சு முறை பழக்க வழக்கங்கள் மாறாக இருந்தால் நம் எதிரி வெளியில் வருமுன்னே எல்லா முயற்சியும் வீணாகிவிடும். அதனால்!?” என்று முழுதும் சொல்லாமல் அவளை நிமிர்ந்து பார்த்தாள்.

பௌதிகா அவந்திகா பேச ஆரம்பித்ததிலிருந்து அவளையே பார்த்திருந்தாள். அவளுள்ளும் அவந்திகா சொன்னது போன்ற சந்தேகமே. ‘அவந்திகாவின் நேர் கொண்ட பார்வையும், தயக்கமற்ற பேச்சும், தைரியமான தோரணையும் என்னோடு ஓப்பிடும்போது நேரெதிர் மாதிரியான குணங்கள்.’

அதனால் அவளுமே இதுகுறித்து கொஞ்சம் கவலையுறதான் செய்தாள். ‘இதனால் அவந்திகா என்னுடைய போலி உருவம் என்று தெரிவதோடு வேறு எதுவும் ஆபத்து அவந்திகாவிற்கு வரவும் வாய்ப்பிருக்கு. அதே நினைவில், “நான் என் குண நலங்களை சொல்லட்டுமா அவந்திகா? அதுபோல நீங்க நடக்க முடியுமா?!” என்று கவலையும் அக்கறையுமாகப் பார்த்துக் கேட்டாள்.

அவளது பதிலில் புன்னகைத்த அவந்திகா, “சொல்லிக் கற்க இப்போது நேரமில்லை. நான் கனவுச் சக்கரம் (dream array) மூலமாக உன் ஆழ்மனதிற்கு சென்று கடந்த 4 மாதத்தில் உன் பழக்க வழக்கங்களை மனனம் செய்துக் கொள்ள போகிறேன்.

மகரயாளிகளைப் போல ஆழ்ந்த கனவுச் சக்கரத்தை என்னால் உருவாக்க முடியாது என்றாலும், இந்த நாடகத்திற்கு அவசியமான அளவு என்னால் தகவல்களைக் கனவு சக்கரம்மூலம் அறிய முடியும்.

அதனால் யாரேனும் உனக்கு முந்தைய நாட்களில் நடந்தது என்னிடம் கேட்டால் நான் குழம்ப வேண்டியும் இருக்காது. அதனோடு உன் பழக்க வழக்கங்களும் என் மனதில் பதிந்து விடும். ஆனால் உன் கனவில் நான் நுழைய எனக்கு உன் அனுமதி வேண்டும்.” என்று பௌதிகாவை கேள்வியாகப் பார்த்தாள்.

அவந்திகா பௌதிகாவின் அனுமதி கேட்பதின் அர்த்தம் அவளுக்குப் புரிந்தது. அதனோடு அவள் கையில்தான் மற்ற 9 பெண்களின் உயிரும் இருப்பது காரண காரியன்ளோடு புரியவில்லையென்றாலும், மேலோட்டமாக அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

அதனால் அதிகம் சிந்திக்காமல், “சரி. 4 மாதங்கள்தானே. என்னுள் யாரிடமும் சொல்லக் கூடாத இரகசியம் இல்லை. என் காதலனை தவிர. அதனால் அவரைப் பற்றிய நினைவுகளைத் தவிர மற்றதெல்லாம் நீங்கத் தெரிந்துக் கொள்ளுங்க.” என்றாள் லேசான நாணம் கன்னத்தில் படர.

பௌதிகாவின் தயக்கம் புரிந்து, “சரி பௌதிகா. நன்றி.” என்று தன் கையில் ஆன்மீக ஆற்றல் கொண்டு வெள்ளை நிற குத்தூசியை உருவாக்கினாள் அவந்திகா. பின் பௌதிகாவை பார்த்து, “நான் உன்னை உறங்க வைக்கப் போகிறேன். பயப்பட வேண்டாம்.” என்றாள்.

அவந்திகாவின் கையில் ஆன்மீக ஆற்றலைப் பார்த்த பௌதிகா வியப்புற்றாள். வியப்பினூடே, “நீங்க. நீங்க மனித யாளி இல்லையா? எப்படி ஆன்மீக ஆற்றல் உங்களிடம்.?” என்றாள்.

அதற்குப் புன்னகைத்த அவந்திகா, “மரகதக்கல்லின் மூலம் மனித யாளிகளும் ஆன்மீக ஆற்றலை அவர்களின் ஆன்மாவைப் பொருத்து, 2 சக்கரத்திலிருந்து 4 சக்கரம்வரை தற்காலிகமாகச் சேர்த்து வைக்க முடியும். அதுதான்.” என்றாள்.

அவந்திகாவின் பதிலில், “ஓ…” என்றவள், ‘நானும் அப்பாவிடம் சொல்லி எனக்கென்று மரகதக்கல் வாங்க வேண்டும்.’ என்று முனுமுனுத்தாள். பின் அந்த அறையிலிருந்த மெத்தையில் போய்ப் படுத்துக் கொண்டு, “அவந்திகா. நான் தயார்.” என்றாள்.

சில நேரங்களில் சிறுப்பிள்ளை போலக் கேள்விகள கேட்டாலும், பௌதிகா விரைவில் சொல்வதை புரிந்துக் கொண்டு நடப்பத்தில் அந்த அறையிலிருந்த மற்ற நால்வருமே திருப்தியுற்றனர்.

அவந்திகாவும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் பௌதிகாவை உறங்க வைத்து, அவள் அருகிலே மெத்தையில் மீதியிருந்த கொஞ்சம் இடத்தில் பத்மாசன நிலையில் அமர்ந்து தன் வலது கை ஆள்காட்டி விரலைத் தன் நெற்றியில் வைத்து ஒரு வெள்ளை நிற நூலிழைப் போன்ற ஒளியை எடுத்துப் பௌதிகாவின் நெற்றியை நோக்கி அதனைச் செலுத்தி அவளது கனவில் நுழைந்தாள்.

மதியும் முகிலனும் முன்பு அமர்ந்திருந்த நாற்காலிகளில் அமர்ந்துக் கொண்டு அவந்திகா கண் விழிப்பதற்காகக் காத்திருந்தனர். நந்தன் அந்த அறையின் சாளரத்திற்கு அருகிலிருந்த சுவரில் சாய்ந்து கைகளை உடலுக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு அவந்திகாவின் மீது பாதி கவனமும், வேறு எங்கோ பாதி கவனமுமாக இருந்தான்.

விரைவிலே கனவிலிருந்து வெளியில் வந்த அவந்திகா கண்களை விழித்து, இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கும் பௌதிகா திரும்பிப் பார்த்து, ‘21 வயது ஆனப் பெண் என்ற போதும், கஷ்டம் தெரியாத சிறுப்பிள்ளையான வாழ்வுதான் இந்தப் பெண்ணுக்கு.’ என்று முனுமுனுத்து இதழ் விரித்தாள்.

கூடவே, ‘மனிதயாளியாக வாழும் வாழ்வும் சுகம்தான். பிறந்ததிலிருந்து தவம் செய்து ஆன்மீக இதய வேர் உருவாக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆன்மீக சக்தியைப் பெருக்க வேண்டுமென்று உந்துதல் தேவையில்லை. பின் யாளி உலகில் நடக்கும் வரைமுறையற்ற செயல்களைத் தடுக்க போராட வேண்டிய அவசியமில்லை.’ என்று மனதுள் எண்ணி பெருமூச்சுவிட்டாள்.

அப்போது அவந்திகா கண் விழிப்பதற்காகவே காத்திருந்த நந்தன் அவள் அருகில் வந்தான். “இளவரசி.” என்று அவளை விழித்து, அவளிடம் முன்பு அவளது பணியகத்திலிருந்து எடுத்த கருப்பும் வெள்ளையும் கலந்த காதணியை அவன் உள்ளங்கையில் வைத்துக் காட்டினான்.

அந்தக் காதணியை பார்த்த அவந்திகா, இதை எடுத்த போதுதான் முகிலன் உள்ளே வந்து, ஒரு கலவரத்தையே உண்டாக்கிவிட்டான். அதனை நினைவு கூர்ந்த அவந்திகா அன்னிச்சை செயலாக முகிலனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவளது பார்வையின் அர்த்தம் புரியாமல் முகிலன் அவள் அருகில் எழுந்து வந்தான். அவந்திகா முகிலனிடம் பேசாமல், நந்தனை பார்த்து, “சொல்லுங்க பவளன். முன்பே இதை எடுத்தீங்க. அதன் பிறகு என்ன சொல்லவந்தீங்க.?” என்று கேட்டாள்.

அதற்குப் பதில் சொல்லாமல், தன் ஆன்மீக ஆற்றலால் சாம்பல் நிற ஒளியில் ஒரு குத்தூசியை உருவாக்கி, தன் வலது ஆள்காட்டிவிரல் நுனியில் அதனால் குத்தி ஒரு சொட்டு இரத்தத்தை எடுத்தான். அதனை அந்தக் காதணிகளின் மீது தடவ அதனை அவை உறிஞ்சிக் கொண்டன.

பின் அவந்திகாவை நோக்கித் திரும்பி, “இளவரசி, இந்தக் காதணிகள் என் ஆன்மீக ஆற்றலைக் கொண்டு உருவாக்கப்பட்ட பாதுகாக்கும் சக்கரம் (Defense Array). அதனோடு இது உங்களுக்காகவே பிரத்தேகமாக உருவாக்கப்பட்ட ஒன்று. இதனை நீங்க அணிந்துக் கொண்டால், ஆன்மாவின் உயிர் பிரிவாக இருந்தாலும், உங்க உடலோடு மட்டுமல்லாமல் ஆன்மாவுடனும் இணைந்திருக்கும்.

4 சக்கர நிலைக்குக் கீழ் சக்தி உள்ளவர்கள் உங்களுக்குத் தீங்கு விளைவுக்கும் எண்ணமுடன் தாக்க முயன்றால் உங்களை அவர்களால் நெருங்க முடியாது. 5 சக்கர நிலையுடையவர்களை 3 முறைவரை தடுக்கும். 6 சக்கர நிலையுடைவர்களை 2 முறை தடுக்கும். 7 சக்கர நிலையுடைவர்களை ஒரு முறை தடுக்கும்.

அதனால் இதனை அணிந்துக் கொள்ளுங்க. நான் உங்க அருகில் இல்லாத சமயங்களில் உங்களுக்கும் உங்க ஆன்மாவுக்கும் பாதுகாப்பாக இருக்கும். உங்க கொடியைப் போல.” என்று புன்னகைத்தான்.

அவனது விளக்கத்தில், விழிவிரித்து அவன் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தாள். பதிலேதும் சொல்லாமல் லேசாகத் தலையசைத்து, அவள் காதிலிருந்து மனித உலகிலிருந்து அணிந்து வந்த காதணியை கலட்டி தன் பணியகத்தில் வைத்தாள். பின் நந்தனை நோக்கி, ‘என்னிடம் கொடு.’ என்பதுப் போல் கைகளை நீட்டினாள்.

ஒரு சின்ன சிரிப்புடன் அவள் கையில் ஒரு காதணியை வைத்துவிட்டு, மற்றொரு காதணியை கையில் கொண்டு, “இளவரசி, நான் உங்களுக்கு அணிவிக்கிறேன்.” என்று அவள் இடது காதை இதமாகப் பற்றினான்.

அவந்திகா எதுவும் யோசித்து சொல்லும் முன்னே நந்தனின் கைவிரல்கள அவள் காதைத் தொட்டது. இதனை எதிர் பாராத அவந்திகா, உடனே உடல் சிலிர்த்து விறைத்துப் போனது. இதுபோல அவள் இளவரசியாக இருக்கும்போது பணியாட்கள் செய்வதுதான். ஆனால் இன்று நந்தனின் கைவிரல்கள் அவளுக்குச் சிலிர்ப்பை தந்தது.

இதனை அருகிலிருந்து பார்த்திருந்த முகிலன் என்ன நினைத்தானோ, அவந்திகாவின் காதைப் பற்றியிருந்த நந்தனது கையைத் தட்டிவிட்டு, “நான் என் சிநேகிதிக்கு காதணி அணிவிக்கிறேன். நீ போய் அங்கு உட்கார். அதிக நேரம் நின்றுக் கொண்டிருக்கிறாய்.” என்று அவனது கையிலிருந்து வெடுக்கென்று காதணியை பிடுங்கி பவளனை முறைத்தான்.

மதியும், நந்தன் அவந்திகாவின் காதைத் தொட்ட உடனே அவள் இருக்கையிலிருந்து எழுந்து வேகமாக அவள் அருகில் வந்துவிட்டிருந்தாள். மதி எதுவும் சொல்லுமுன்னே முகிலன் பேசியதில் நிம்மதியுற்று, பின் திரும்பி நந்தனை முறைத்தாள்.

எங்கு மீதமிருக்கும் அடுத்த காதணியை எடுத்துக் கொண்டு அவந்தியின் மற்றொரு காதைத் தொடுவானோ என்று எண்ணிக் கொண்டு மற்றொரு காதில் மதியே காதணியை அணிவித்தாள். நந்தன் எதுவும் பேசாமல் முன்பு நின்றிருந்த இடத்திலே போய் நின்றுக் கொண்டு அவந்திகாவை பார்த்தான்.

காலையில் முகிலன் அவந்திகாவின் கையைப் பற்றியப் போது கோபமாகச் சண்டைக்குப் போன நந்தன், இப்போது வலிக்கும் அளவு அவன் கையைத் தட்டிவிட்டப் போதும் முகிலனை அவன் எதுவும் செய்யவில்லை.

400 வருடத்திற்கு முன்பு மதியும், முகிலனும் வன்னியுடன் அந்தக் காட்டுக்குச் செல்லாதப் போதும், அது சூழலால் ஏற்பட்ட நிகழ்வே தவிர, அவர்கள் உண்மையில் வன்னியின் உயிர் சிநேகிதர்கள். அதனால் தனக்காக அவர்களைக் காயப்படுத்த நந்தனுக்கு தோன்றவில்லை.

‘அவர்களுக்குப் பிடித்தாலும், இல்லையென்றாலும் என் இளவரசியின் நண்பர்கள் என்னுடைய நண்பர்களும்தான்.’ என்று நினைத்தான். அதனாலே அவர்களின் எச்சரிக்கை உணர்வும் வேறுபாடான பார்வையும் பவளநந்தனுக்கு சங்கடத்தைத் தரவில்லை.

எதிரில் நடந்த இந்த நிகழ்வுகள் உடல் சிலிர்க்க இருந்த அவந்திகாவிற்கு சற்று கால தாமதமாகதான் உறைத்தது. அதற்குள் அவள் காதணிகளை அவள் இரு சிநேகிதர்களும் அணிவித்திருந்தனர். முகிலனின் செயல் அவளுக்குமே சங்கடத்தைத் தர, ‘நந்தன் என்ன நினைத்தானோ?’ என்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவனது தோற்றம் அவந்திகாவிற்கு, ‘தனக்கு இடமில்லையே!’ என்று நந்தனின் ஆன்மீக இதய வேரில் தன் ஆன்ம விளிப்பின் மூலம் சந்தித்த யானைக்குட்டி, அவள் முன் பிளிறிப் பொத்தென்று விழுந்தப் போது இருந்த தோற்றத்தை நினைவுறுத்த, அவள் மனம் இளகியது.

பாவம்போல நிற்கும் நந்தனை அவளுக்கு எப்படி சமாதனம் செய்வதென்று தெரியவில்லை. ‘முந்தையை பவளனை போல மென்மையாகவும் இல்லாமல், நந்தனை போல அதிரடியாகவும் இல்லாமல், இரண்டும் கலந்த கலவையாக மாறி மாறி நடக்கும் இந்தப் பவளநந்தனை எப்படி கையாள்வதென்றே எனக்குத் தெரியவில்லை.’ என்று மனதுள் குற்றம்சாட்டினாள்.

ஒரு பெருமூச்சுவிட்டு பவளனை ஏறிட்டு, “நன்றி பவளன்.” என்றாள். பின் ஒரு நொடி தாமதித்து, “ஒரு நிமிடம் இங்க வாங்க.” என்று அவனை அருகில் அழைத்தாள்.

நந்தனும் எதுவும் சொல்லாமல் அவள் எதிரில் வந்து நின்றான். பின் அவந்திகா அவன் அனுமதிக்கு காத்திராமல், அவன் வலது கை மணிக்கட்டை பற்றித் தன் கண்கள் மூடித் தன் ஆன்மீக விளிப்பை அவனுள் செலுத்தி, அவனது ஆன்மீக இதய வேர் நோக்கிச் சென்றாள்.

அவந்திகா இப்படி செய்யக் கூடுமென்று நந்தன் எதிர்பார்க்கவில்லை. திகைத்து எதிரில் கண் மூடி நின்ற அவந்திகாவை பார்த்தான். பின் அவனது இதழ் விரிந்து மென்னகையாக மாறியது. மதி மற்றும் முகிலனுக்கு அவந்திகாவின் செயலின் காரணம் புரியவில்லை.

இருவரும் ஒருவரை பார்த்துக் கொண்டு, “இவனுக்கு உடலில் ஏதேனும் குறையா?” என்று மதியும், “அதனால்தான் அவந்தி அவனது உடல் நிலையைப் பரிசோதிக்கிறாளா?” என்று முகிலனும் சொல்லிக் கொண்டு நந்தனை பார்த்தனர்.

ஆனால் அவர்கள் இருவரையும் காணவும் அவர்களின் தவறான கணிப்பிற்கு விளக்கம் சொல்லவும்தான் யாருமில்லை. நந்தனும் கண்கள் மூடி அவந்திகாவின் ஆன்ம விளிப்பை தன் ஆன்மீக இதய வேரில் காண்பதற்கு காத்திருந்தான்.

அவந்திகா அவனது ஆன்மீக இதய வேரை அடைந்தப் போது அவன் பவளநந்தனின் மனித யாளி உருவில்தான் இருந்தான். அவளது ஆன்ம விளிப்பை பார்த்ததும் பாளிரென்று புன்னகைத்தான். ‘அவனது பாவம் போன்ற முகத்தைப் பார்த்ததும் ஒரு வேகத்தில் இங்கு வந்துவிட்டேன்.

ஆனால் இப்படி இவன் மனித உருவில் இருப்பான் என்று என்னத்தை கண்டேன். அந்த 6 குட்டி உருவங்களில் ஒன்றான உருவத்தில் இருந்தால் கையில் அள்ளி, “தன் சிநேகிதர்களின் செயலைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.” என்று சொல்லலாம். ஆனால் இப்படி ஆண்மையுடன் என்னைக் குள்ளமாக்கிக் கொண்டு நிற்கும் இவனிடம் என்ன பேசுவது.!’ என்று திணறினாள்.

அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல், தலை குனிந்து, “அ…அது…நந்தன்.” என்று தடுமாறிக் கொண்டிருக்கும் போதே அவள் மனம் உணர்ந்தவனாக அவள் முன் குட்டி யானையின் உருவத்திற்கு மாறிச் சென்று அவள் கையைப் பற்றினான்.

குட்டியானையை பார்த்த அவந்திகாவின் முகம் மகிழ்ச்சியில் பிரகாசமானது. உடனே முன்பிருந்த தயக்கம் மாறி, அவன் முன் முட்டிப் போட்டு அமர்ந்தவள், அதன் கன்னங்களைப் பற்றி அதன் நெற்றியில் தன் நெற்றியை முட்டுக் கொடுத்துக் கண்கள் மூடிப் பெருமூச்சுவிட்டாள்.

சில வினாடிகள் அப்படியே இருந்தவள், “என் சிநேகிதர்களின் செயலைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இயல்பிலே என்மீது அவர்களுக்கு அக்கறை அதிகம். அதுவும் முன்பு நடந்த நிகழ்வுக்குப் பின் அவர்கள் என்னை விவரம் அறியா சிறிய பெண், எல்லோரையும் வெள்ளந்தியாக நம்புபவள் என்று நினைத்து, என்னைப் பாதுகாப்பதாக(Over protective) நினைத்துக் கொண்டு அப்படி செய்றாங்க.

முன்பு அவர்களிடம் உண்மையை நான் மறைத்ததால் அவர்கள் இன்னமும் முழுதும் நான் நிச்சயமாக அவர்கள் முன் இருக்கிறேனா. எந்த நேரத்தில் காணாமல் போய்விடுவேனோ(insecure). என்று பயப்படுறாங்க. அதனால்.” என்று அவள் சொல்லிக் கொண்டே போனாள்.

அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, “புரிகிறது இளவரசி. எனக்கு வருத்தமில்லை. நீங்க என்னுடன் இதுபோல எப்போதும் இருந்தால் போதும்.” என்று நந்தனின் குரல் ஒளித்தது. உடனே நினைவு வந்தவளாக யானைகுட்டியின் தலையிலிருந்து விலகி அதன் கண்களைப் பார்த்தாள். ஆனால் எதுவும் பேசவில்லை.

அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே யானைக்குட்டியிலிருந்து மனித உருவமாக அவன் மாறினான். அவளைப் போலவே முட்டிப் போட்டு அமர்ந்திருந்த அவன் முகத்தில் கன்னங்களை இன்னமும் அவந்திகாவின் இருக்கைகளும் பற்றியிருந்தது. (1)

அழகான(cute) யானைக்குட்டியிலிருந்து, ஆண்மையான(Handsome) பவளனந்தனின் முகமாக மாறியதும் அவந்திகாவின் முகம் சூடேறியது. உடனே அவனிலிருந்து கைகளை விலக்கியவள், “அ…அப்போது நான் அந்தப் பெண் வீட்டு கிளம்புகிறேன். என் சிநேகிதர்களுடன் மாலை அங்கு வாங்க.” என்று எழுந்து நின்றாள்.

நந்தன், “ம்ம்…. ‘@_@’” என்றான்.

அதன்பிறகு வேகமாக நந்தனிடமிருந்து வெளியில் வந்த அவந்திகா, “நான் கிளம்புகிறேன். நம் திட்டத்தின்படி எல்லாரும் நடக்க வேண்டும். எதிரியைக் கண்டுப்பிடிக்கும் வரை யாரும் சின்ன சின்னக் காரணம் கொண்டு சண்டையிடக் கூடாது.” என்று மதியையும் முகிலனையும் பார்த்துச் சொன்னாள்.

முகிலன், “கேட்டுக்கோ மதி. என்னிடம் சும்மா வம்புக்கு வராதே.” என்றான். மதி அதற்குப் பதிலேதும் சொல்லாமல் கண்களை உருட்டி எங்கோ பார்த்தாள். அவளது செயலில் முகிலன் பற்களைக் கடித்தப் போதும் எதுவும் சொல்லவில்லை.

அவர்களின் செயலில், தலையில் கையை வைத்து, ‘இவர்களைத் திருத்த முடியாது.’ என்பதுப் போலத் தலை அசைத்து நந்தனை நோக்கித் திரும்பினாள். “பவளன், வருகிறேன்.” என்றாள்.

அதன்பிறகு எழுந்து சென்ற அவந்திகாவின் நடை பாவனை, பேசும் முறை எல்லாம் பௌதிகாவை போல மாறியது. நல்ல வேளையாகப் பௌதிகாவும் அவந்திகாவின் உயரமே. அதனால் அவள் முகத்தை மிக அருகில் பார்த்தாலொழிய யாராலும் பேதம் அறிய முடியாது என்று மதியும், முகிலனும் பெருமூச்சுவிட்டனர்.

அன்று மாலை…

திட்டமிட்டப்படி மதி, முகிலன் நந்தன் பௌதிகாவின் வீட்டுக்கு வந்தனர். எல்லாம் இயல்பான பெண் பார்க்கும் படலம்போல நடக்க அவந்திகா அவர்கள் முன் சேலையில் அமர்ந்தாள்.

அவள் முகமூடி அணிந்திருந்தைப் பார்த்த சிலர் கேள்வி கேட்க நந்தன் அங்குச் சலசலத்துக் கொண்டிருந்த கூட்டத்தின் குரல்களை உடைத்து கணீரென்ற குரலில், “எனக்கு மனைவியாக வரவிருப்பவள், அவள் விருப்பப்படி உடை அணிவதில் எனக்கு எந்த ஆட்சபேனையும் இல்லை. அவள் முகம் பாதி மறைந்திருந்த போதும், அவள் அழகை என்னால் அறிய முடிகிறது.” என்றான்.

அவனது குரலில் உடனே சலசலப்பு அடங்கியது. அவந்திகா அவனது பதிலிலிருந்து திகைத்து நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். உடனே அவளுள் பௌதிகாவைப் போன்ற நாணம் உண்டாகி தலை குனிந்தாள். கூச்சத்தில் உடலும் நெளிந்தது. முகமூடிக்கு மறைவில் என்றப் போதும், அவள் இதழ்கள் ஏதோ குதுகலத்தில் விரிந்தது.

அவளது இந்த நிலை அவந்திகாவிற்கே அதிச்சியாக இருந்தது. லேசான நாணம் வரும்படி செய்ய வேண்டுமென்றே அவந்திகா எண்ணினாள். உண்மையில் அவன் வார்த்தைகளில் அவள் கன்னங்கள் சூடாகவும் செய்ததுதான்.

ஆனால் இந்தக் கூச்சமும், இதயப்படப்படப்பும், உடல் நெளிவும், அவளையும் மீறி உண்டான புன்னகையும், யாரோ அவளைக் கட்டுப்படுத்துவதுப் போல நடந்தேறியது. அவந்திகா உள்ளூர திகைத்தாள். ஆனால் வெளியில் அவள் முகம் நாணத்தை மட்டுமே காண்பித்தது.

அவளால் அவளது உண்மை உணர்வை வெளியில் காண்பிக்க முடியவில்லை. எதுவோ சரியில்லை என்று அவந்திகா உணர்ந்தாள். நிமிர்ந்து நந்தனை பார்த்துக் கண் சைகையில் அதனைச் சொல்ல நினைத்தாள். ஆனால் அவளால் அவள் தலையை நிமிர்ந்தவே முடியவில்லை. மாறாக அவனைப் பார்க்க நினைக்கும்போது அவள் காது மடல்கள் சிவந்து போனது.

இப்போது அவளுக்கு நிச்சயமாய் பட்டது. உடனே ஆன்ம இணைப்பில் நந்தனை தொடர்புக் கொள்ள நினைத்து அவள் நெஞ்சில் கையை வைக்க முயன்றாள். ஆனால் அவள் கைகள் பதட்டமுடன் ஒன்றோடொன்று பிசைந்துக் கொண்டு அவள் மடியில் கிடந்ததே தவிர அவள் சிந்தனையின் இசைவுக்கு பதில் அளிக்கவில்லை.

என்ன செய்வது என்று திகைத்து அவள் மனம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவளது உதடுகள், “அப்பா, எனக்கு அவரைப்பிடித்திருக்கிறது. அடுத்து செய்ய வேண்டியதை நீங்கப் பார்த்துக் கொள்ளுங்க.” என்று சொன்னது. அதனோடு நில்லாமல், அவள் நொடியும் அங்கு அமர்ந்திருக்காமல் எழுந்து நாணமும் வெக்கமுமாகப் பௌதிகாவான, அவந்திகா அவள் அறை நோக்கி ஓடினாள்.

அவள் பதிலுக்காகவே காத்திருந்ததுப் போல, மாப்பிள்ளையின் அப்பாவாக இருந்த முகிலன், “பிறகென்ன? பெண்ணுக்கும் மாப்பிள்ளையைப் பிடித்திருக்கு. மாப்பிள்ளைக்கும் பெண்ணைப் பிடித்திருக்கு. இன்னும் 10 நாட்களில் வரும் செந்நிற பௌர்ணமியிலே திருமணத்தை முடித்துவிடலாம்.” என்றான். அது அறை கதவைத் திறந்த அவந்திகாவின் காதிலும் இது விழுந்தது.

அவந்திகாவின் மனம் படப்படத்தது. ‘நான் மாப்பிள்ளையைப் பிடித்திருக்கு என்று சொல்ல நினைக்கைவில்லை. ஆனால் அது நடந்தேறியது. அதேபோல் திட்டத்தின்படி, திருமண தேதி மட்டும் குறிக்கக் கூடாது என்று ஒருமனதாக அனைவரும் முடிவெடுத்திருந்தோம். ஆனால் முகிலனின் வார்த்தைகள் அப்படி இல்லையே.

அப்படியென்றால், அவனையும் என்னைப் போல யாரோ கட்டுப்படுத்துகிறார்கள்.’ என்று யூகித்த அவந்திகா, சில நொடி யோசனைக்குள்ளானாள். பின் நினைவு வந்தவளாக, ‘கைப்பாவை சக்கரம்?!(Puppet Array)’ என்று திகைத்து விழித்தாள்.

உடனே கண்கள் மூடி, ‘யாரேனும் அருகிலிருந்து கைப்பாவை சக்கரத்தை இயக்குகிறார்களா?’ என்று அறிய கவனிக்கும் சக்கரத்தை(Observing Array) உருவாக்க முயன்றாள். ஆனால் என்ன முயன்றும் அவளது ஆன்மீக சக்தியைப் பயன்படுத்த முடியவில்லை.

இவ்வாறாக அவந்திகா அவள் அறையில் தவித்துக் கொண்டிருக்க, வெளியில், அவந்திகா மற்றும் முகிலனின் வார்த்தைகளில், மதி திகைத்து விழித்தாள். அவள் மாற்றிப் பேச நினைத்து வாயைத் திறந்தப் போது அவளால் எதுவும் பேச முடியவில்லை. ஏன் முகிலனுமே அவனது வார்த்தைகளில் திகைத்துதான் போனான்.

ஆனால் நந்தன் எதையோ உணர்ந்தவன் போல, ஓரகண்ணால் அந்த வீட்டின் வாசலைப் பார்த்தான். அவனது இதழ் ஒருபுரம் விரிந்து, விஷமதனமாக (smirk) ஒரு சிரிப்பை உதிர்த்து. அவன் வாய் திறந்து பேசுமுன்னே திருமண தேதியும், பூப்பழம் மாற்றலும் நடந்தேறியது.

மனதில் குழப்பமுடன் மதியும், முகிலனும் இருக்க, அவர்களது கைகள் பழத்தட்டை பெண் வீட்டாரிடம் நீட்டியது. அவர்களது இதழ்கள் காதுவரை நீண்டுவிடும் போலப் புன்னகையை பூசிக்கொண்டிருந்தது. சுற்றி இருந்த அனைவரின் முகத்திலும் அச்சுப் பதிவு(X-xerox) போல் ஒரே மாதிரியான் புன்னகை.

கைப்பாவை சக்கரத்தின் ஆளுமையிலிருந்து மீள முடியுமென்ற போதும் நந்தன், சூழலை மாற்ற முயலவில்லை. நடக்கும் நிகழ்வுகளில் அவனும் கைப்பாவையாக நடந்தான். அவன் உதடுகள் ஏதோ சொல்லத் துடிப்பதை உணர்ந்த நந்தன் அவனது எதிர்ப்பைத் தளர்த்தினான்.

அவனது உதடுகள், “நா…நான். பெண்ணிடம் தனியாக ஓரிரு வார்த்தைகள் பேச வேண்டும்.” என்று திக்கி திணறி வார்த்தைகளை உதிர்த்தது. இதுவரை இப்படி திக்கி நந்தன் பேசியதில்லை எனபதால் அவனது வார்த்தைகள் அவனுக்கே மிகவும் அந்நியமாகப் பட்டது.

ஆனால் மற்ற கைப்பாவைகள் அவன் இந்த வார்த்தைகளுக்காகவே காத்திருந்ததுப் போலக் கலீரென்று சிரித்தனர். பின், “அதற்கென்ன மாப்பிள்ளை. பேசிவிட்டு வாங்க. பொம்மி, மாமாவை அக்கா இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்.” என்று தன் இளைய மகளிடம் சொன்னார் பௌதிகாவின் தந்தை.

அதனைக் கேட்ட நந்தன், ‘இதே நிகழ்வுதான் மற்ற 9 பெண் வீட்டிலும் நடந்திருக்கும். அடுத்து பெண்ணைத் தனியாகப் பார்த்ததும் அந்தக் கைப்பாவை சக்கரத்தை உருவாக்கியவன், என்னை என்ன செய்யச் சொல்கிறான் என்று பார்ப்போம்.’ என்று உள்ளூர விஷமமாகப் புன்னகைத்தவிதமாக, வெளியில் லேசான சங்கடமுடன் பொம்மி என்ற பெண்ணுடன் நடந்தான்.

Author Note:

(1) Readers, நீங்களே சொல்லுங்க. இப்படி அவள் கன்னங்களைப் பற்றியிருக்கும் போதே யானைகுட்டியிலிருந்து மனிதனாக மாறின நம்ம Hero -வ நான் திருட்டு பூனைனு சொன்னதுல எதாவது தப்பு இருக்கா?

Advertisement