யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 31

825

அத்தியாயம் – 31

ஒரு அடிபின் நகர்ந்த போதும், அவந்திகாவை பற்றியிருந்த பிடியை மதியும் முகிலனும் விடவில்லை.

எதிரில் இருந்த இருவரையும் பார்வையாலே எரித்து விடுபவன் போலப் பார்த்த பவளநந்தன் தன் வலது கையை உயர்த்தினான். அவன் விரல் நுனிகளிலிருந்து சாம்பல் நிறத்தில் மினுமினுக்கும் ஒளித்துகள்கள் உண்டாகி, சிறியதுமல்லாமல் பெரிதென்றுமல்லாமல் ஒரு முள் போன்ற தண்டாயுதம்(1) உருவானது.

அதனைப் பார்த்த முகிலனும் மதியும் எச்சரிக்கையாகினர். முகிலன் உடை வாளில் தன் வலது கையை வைத்தான். மதி தன் கேடயத்தை எங்கிருந்தோ தன் இடது கையில் எடுத்துக் கொண்டு நின்றாள். இருந்தும் அவந்திகாவின் கையை இருவரும் விடவில்லை.

எதிரில் இருந்த மூவரின் நிலையையும் மாறி மாறிப் பார்த்த அவந்திகா விக்கித்து போனாள். என்ன இருந்தும் மதியும், முகிலனும் இணைந்து போரிட்டாலும், 1000 யாளிகளின் ஆன்மீக இதய வேரைச் சில நாழிகைகளில் அழித்ததாகச் சொல்லும் நந்தனை எதிரித்து போரிட்டு வெற்றி பெற முடியாது.

எங்கு நந்தன் தன் சிநேகிதர்களை காயப்படுத்திவிடுவானோ என்று பதறி, நடுங்கிய குரலில், “ப…பவளன்?!” என்று அவனை நினைவுக்குக் கொணர முயன்றாள் அவந்திகா.

அவந்திகாவின் குரலைக் கேட்டதும் தாக்கத் தயாராக இருந்த பவளன் எதுவும் செய்யாமல் ஒரு நொடி உறைந்து, இயல்புக்கு மாறினான். அவன் கையிலிருந்த தண்டாயுதம் காற்றில் கரைந்து மறைந்து போனது.

பின் எதிரில் எச்சிரிக்கையுடன் அவனையே பார்த்து நின்றிருந்த மதியையும் முகிலனையும் ஏளனமாகப் பார்த்து, “ம்ம்.!” என்று கண்ணை எட்டாத விஷமதனமான(2) சிரிப்பை உதிர்த்து,

“இன்று என் இளவரசியை பாதுகாப்பதாக எண்ணிக் கொண்டு அவரது கைகளை இறுக பற்றி இருக்கும் நீங்க, 400 வருடத்திற்கு முன் என் இளவரசி இறந்தப் போது எங்குச் சென்றீர்கள்.” என்று கேட்டான்.

அதனைக் கேட்ட மதியும் முகிலனும் அதிர்ந்து முகம் வெளுத்து நந்தனை பார்த்தனர். அவர்களின் ஆயுதத்திலிருந்து கையைத் தளர்த்தினர்.

ஆனால் அதோடு நந்தன் நிறுத்துவதாக இல்லை. அவனுள் 400 வருடங்களாக விடாமல் தொடரும் கொடுங்கனவை(nightmare) நினைவு கூர்பவன் போல அவன் முகம் கோபத்தால் சிவந்து நடுங்கியது. அவன் கண்களும் சிவந்திருந்தது. அடக்க முடியாதவனாகத் தொடர்ந்து பேசினான்.

“அன்று என் இளவரசியின் ஆன்மீக ஆற்றலைப் பயன்படுத்த முடியாதப்படி சதி செய்து மந்திர கட்டிட்டு அவளை அந்தக் காட்டில் இருந்த கல் மேடையில் கிடத்தி பல யாளிகள் சேர்ந்து என் இளவரசியின் உடலில் கத்தியால் பல நூறு வெட்டிட்டு அவள் ஆடை முழுதும் இரத்ததில் நனைந்து வலியில் துடித்துடித்தாள்.

ஆறுயிர் நண்பர்களான நீங்க அன்று என் இளவரசியுடன் இல்லாமல் எங்கு ஓடி ஒழிந்துக் கொண்டிருந்தீங்க. அவளைத் தனியாக அந்தக் காட்டுக்கு அனுப்பிவிட்டு அவள் இறப்பு செய்தி அறிய காத்திருந்தீங்களா?” என்று எதிரில் இருந்தவர்கள் மனம் வலிக்கும் என்று சிறிதும் யோசியாமல் அவர்களைப் பார்த்துச் சீறினான்.

பின் என்ன நினைத்தானோ, முகம் வாடத் தலைத் தாழ்த்தி, தொடர்ந்து, “அதனோடு என் இளவரசியை விடாமல், எங்கு விழித்ததும் அவள் ஆன்மீக சக்தி மீண்டால் பலிவாங்க வந்துவிடுவாளோ என்று எண்ணி கொல்லவும் திட்டமிட்டனரே.

சாதரணமாக இறக்க செய்தால் மறுஜன்மம் கொண்டு வந்து பலிவாங்க வாய்ப்பு இருப்பதாக எண்ணி என் இளவரசியின் ஆன்மாமீது உயிர் இறைப்பு சக்கரத்தையிட்டு (Soul Scattering Array) அவளைத் தகிக்கும் நெருப்பிலிட்டு அல்லவா கொன்றனர். (3)

என் இளவரசி அன்று நெருப்பில் துடிதுடித்து இறந்தப் போது என்ன செய்து கொண்டிருந்தீங்க. இன்று மனித உடலில் இருக்கும் என் இளவரசியின் கைகள் இறுக பற்றினால் வலிக்குமென்றும் உணராமல் பாதுக்காப்பதாக நினைத்துக் கொண்டு அவளுக்கு வலியைக் கொடுத்துக் கொண்டு நிற்கீறீங்க.” என்று மீண்டும் முகம் வெளுத்து நின்ற மதி மற்றும் முகிலன் முகத்தைப் பார்த்துக் கண்களாலே எரித்துவிடுப்பவன் போலக் கோபமாக உறுமினான்.

அவனது வார்த்தைகளின் உண்மையை உணர்ந்த மதியும் முகிலனும் அவந்திகாவை பற்றியிருந்த பிடியை அன்னிச்சை செயலாக லேசாகத் தளர்த்தினர். இருவரும், ஏன் அவந்திகாவுமே முகம் வெளுத்து எதிரிலிருந்தவனை நோக்கினர்.

மதிக்கும் முகிலனுக்கும் வந்த தகவல்படி, ‘வன்னி மன்னிக்க முடியாத பெரிய தவறு செய்ததாகவும், அதனால் அவமானம் தாங்காமல் தீக்குள் விழுந்து தற்கொலைச் செய்துக் கொண்டாள்.’ என்று மட்டுமே தெரியும். அப்படி இருக்க நந்தனின் வார்த்தைகள் தந்த உண்மை அவர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

அவந்திகா, ‘நந்தனுக்கு இவை எப்படி தெரியும்?’ என்று ஒரு நொடி திகைத்தாள். அவளது இறந்த காலத்தைக் கேட்டத்தில் தன் சிநேகிதர்களின் மனம் வலிப்பது மட்டுமல்லாமல், அதனைப் பேசியதில், பவளனும் துன்புறுவதை பார்த்த அவந்திகா, அது பொறுக்காமல் நந்தன் தொடர்ந்து பேசுவதை நிறுத்த எண்ணி, “பவளன்?” என்று மீண்டும் விழித்தாள்.

அவள் குரலில், நந்தன், அவந்திகாவின் முகத்தைப் பார்த்தான். அவனது முகம் அடிப்பட்ட குழந்தையின் முகம்போலக் கண்ணில் வலியும் சிவப்புமாக இருந்தது. அவளைப் பார்த்ததும் வலியை மறைப்பவன் போல அவனது இதழ்கள் லேசாக விரிந்தது.

அவந்திகாவின் முகத்தைப் பார்த்ததில் இயல்புக்கு வந்த நந்தன் மீண்டும் தொண்டையை கனைத்து, “இளவரசியின் கையை விடுங்க. ” என்று கட்டுபடுத்திய குரலில் சொன்னான்.

அதுவரை நந்தன் முன்பு சொன்னதை ஜீரணித்துக் கொண்டிருந்த முகிலனும் மதியும் சுயநினைவுக்கு வந்து அவந்திகாவின் கைப்பிடியை விட்டனர்.

ஆனால் முகிலன் ஓரெட்டில் நந்தன் முன் வந்து அவன்மேல் சட்டையினை பற்றி, “என்ன சொல்கிறாய்? யார் வன்னியை காயப்படுத்தியது. என்ன துணிவிருந்தால் என் சிநேகிதியை இப்படி துடிக்கத் துடிக்கக் கொன்றிருப்பர்? யார்? யார்? யாரென்று சொல்?” என்று ஆவேசம் கொண்ட வேங்கையாக உறுமினான்.

முகிலன் வார்த்தைகளால் கேட்டான் என்றால், மதி அவந்திகாவின் புரம் திரும்பி முறைத்து, வாய் திறவாமல் பார்வையால் ஆயிரம் கேள்விகள் அவளைக் கேட்டாள். ‘இப்படி தன் சிநேகிதர்கள் ஆவேசமடைய கூடுமென்றே.’ அவந்திகா அவர்களிடம் முழு உண்மையைச் சொல்லாமல் மறைத்திருந்தாள். அதனோடு யாரையும் அவளுக்குப் பலிவாங்கும் எண்ணமில்லை.

அதனால் எதிரில் கோபமும் கேள்வியுமாய் நின்ற இருவரையும் எப்படி கையாள்வதென்று புரியாமல் அவந்திகா, “அ…அது…” என்று தயங்கினாள்.

அவள் தயக்கம் உணர்ந்த நந்தன், மீண்டும் விஷமமான சிரிப்பை உதிர்த்து(Smirk), இம்முறை கண்ணில் சிரிப்புடன், “அவர்களை நான் பலிவாங்கிவிட்டேன்.” என்றான் குரலில் லேசான குதுகலிப்புடன்.

நந்தனின் பதிலில், தங்கள் கையால் அவர்களைப் பலி தீர்க்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்த போதும், மதி மற்றும் முகிலன் மனம் லேசாகச் சமாதனம் அடைந்தது. இருவரும் லேசான பெருமூச்சுவிட்டனர். முகிலன் அவன் பிடித்திருந்த சட்டைப்பிடியை தளர்த்தினான்.

ஆனால் அவந்திகா அதிர்ந்து பவளநந்தனை ஏறிட்டாள். அவள் முகத்தைப் பார்க்கத் துணிவில்லாமலோ என்னமோ, நந்தன், “நான் சில நிமிடங்களுக்குப் பிறகு வருகிறேன்.” என்று காற்றில் சாம்பல் நிற துகள்களாக மாறிக் கரைந்துவிட்டான்.

நந்தன் வழக்கமான கதவு வழியாகச் செல்லாமல், இதுதான் இயல்புபோல இடம்மாற்றும் சக்கரத்தின் மூலம் மறைந்ததை முகிலனும் மதியும் ஒருவித வியப்புடன் பார்த்தனர். ஆனால் அவந்திகாவிற்கு இது இயல்பான ஒன்று.

அதனால் அதுகுறித்து யோசியாமல், “ம்கும்.” என்று தொண்டையை கனைத்து, கவனத்தை வேறுபுரம் திருப்பும் எண்ணாமாக, அதுவரை அந்த அறையில் கவனிக்காமல் விட்ட பௌதிகாவை பார்த்தாள் அவந்திகா.

அந்த மனித யாளி பெண் எப்போது தரையில் விழுந்து உறங்கிப் போனாளோ தெரியவில்லை. இன்னமும் குளிர்ந்த தரையிலும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். அவந்திகா, “இந்தப் பெண் எப்போது உறங்கிப் போனாள்.”என்று பௌதிகாவை நோக்கிச் சென்றாள்.

அப்போது, “இளவரசி. ஏன் எங்களிடம் உண்மையைச் சொல்லவில்லை.?” என்றான் முகிலன்.

அவனது கேள்வியில் பௌதிகாவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தவளின் நடை ஒரு நொடி நின்று பின், இயல்புபோல் தரையில் இருந்த பௌதிகாவை தன் கைகளில் ஏந்தி மெத்தை மீது கிடத்தியவிதமாக, “அந்தக் கசந்த கடந்த காலத்தைப் பேசி என்ன நல்லது விளைய போகிறது?!” என்றாள் விற்றேற்றியாக.

அதனைக் கேட்ட மதி, “பவளனுக்கு மட்டும் எப்படி எல்லாம் தெரியும்? அவனிடம் மட்டும் ஏன் எல்லாம் நீ சொல்ல வேண்டும். அவனால் பலிவாங்க முடிகிறபோது, எங்களால் முடியாதா?!” என்றாள் குரலில் லேசான பொறாமை(Possessiveness) கொண்டு.

அவளது குரலிலே அவள் கோபத்தின் காரணம் உணர்ந்து, “பவளனுக்கு எப்படி தெரியுமென்று எனக்குமே தெரியாது. ஏன் எனக்குமே யாரெல்லாம் என் இறப்புக்கு காரணமென்று தெரியாது. ஒருவரிருவர் என்றால் நினைவிருக்கும், ஆனால் ஆயிரத்தில் என்றால்?!” என்றவளின் குரல் விரக்தியில் ஒலித்தது.

அதனைக் கேட்ட மதி மற்றும் முகிலனின் உடலில் குளிர் பரவியது. அவர்கள் முகம் வெளுக்கப் பார்த்த போதும், இனியும் இதுகுறித்து பேசத் தயாரில்லை என்பது போல் அவந்திகா மெத்தையில் கிடத்தப்பட்ட பௌதிகாவின் கை நாடிப்பிடித்து, ‘ஏன் திடீரென்று இவள் உறங்கிப் போனாள்?’ என்று ஆராய்ந்தாள்.

மதியும் முகிலனும் ஒருவரை ஒருவர் காரண பார்வை பார்த்தனர். பின் அவந்திகாவின் முகத்திலே இனியும் தொடர்ந்து இதுகுறித்து பேசினால் பதில் வராது என்பதை உணர்ந்து பேசாமல் அமைதியாக அங்கிருந்த இரு நாற்காலியில் அமர்ந்தனர்.

அவந்திகா, “பவளன் என் கடந்த காலம்பற்றிப் பேச ஆரம்பித்தபோது மனித யாளியான பௌதிகாவிற்கு தெரியாமல் இருப்பதற்காக அவளது கழுத்து வளைவில் குத்தூசியிட்டு அவளை உறங்கச் செய்திருக்கிறான்.” என்று முனுமுனுத்து இதழ் விரித்தாள். கூடவே, ‘ நந்தன் குத்தூசி முறையும் தெரிந்து வைத்திருக்கிறானே!’ என்று வியந்தாள்.

பின் பௌதிகாவின் கழுத்து வளைவிலிருந்த குத்தூசியை எடுத்தாள். சில விநாடிகளில் கண்விழித்த பௌதிகா, கண்கள் கசக்கி எழுந்து மெத்தை மீது சமனமிட்டு அமர்ந்தாள். பின் எதிரில் இருந்த மூவரையும் மாறி மாறிப் பார்த்தாள். அவந்திகா அவளைப் பார்த்துப் புன்னகைத்தாள். மதியும் முகிலனும் எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

ஏனோ தூரம் அமர்ந்திருந்த ரிஷி முனிகளை பார்த்து லேசாகத் தயக்க முற்ற பௌதிகா அவந்திகாவை பார்த்து நேசமாகப் புன்னகைத்தாள். பின், “நீங்க யார்? என்னை எதற்காக அழைத்துக் கொண்டு வந்தீங்க?” என்றாள்.

அதனைக் கேட்டதும், அவந்திகா ஒர் மென்னகையிட்டு, “என் பெயர் அவந்திகா. என்னவென்றே தெரியாமல்தான் இங்கு வந்தாயா?” என்றாள்.

அதற்குத் தயங்கி தயங்கி மதியை ஒருமுறை பார்த்தாள் பௌதிகா. மதி எனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்பதுப் போலக் கைகளை உடலுக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு எங்கோ பார்த்தப்படி அமர்ந்திருந்தாள்.

பின் பௌதிகா எதிரில் ஒத்த வயதினளாக இருந்த மனித யாளியான அவந்திகாவை பார்த்து, “அவந்திகா. அது அந்த ரிஷிமுனி என் வீட்டுக்கு வந்ததும் என் தோழி என்று என் பெற்றோர்களிடம் சொன்னாங்க. பின் என்னிடம் என் அறையில் தனியாகப் பேசீனாங்க.

அப்போது என் ஊர் பெண்கள் நினைவிழந்து இருப்பதில் என் உதவி வேண்டுமென்று சொன்னாங்க. பின் அவர்களுடன் அழைத்து வந்தாங்க. என் பெற்றோர்களிடம் என் தோழிபோல இருவரும் வெளியில் சென்றுவிட்டு வருவதாகச் சொல்லி என்னை அழைத்து வந்தாங்க.

அதன் பிறகு நான் என்ன கேட்டும், கண்களை உருட்டி எங்கோ பார்த்தாங்களே ஒழிய எதுவும் சொல்லவில்லை. எனக்கு மேலும் கேட்கப் பயமாக இருந்ததா, அதனால் நான் என்ன ஏதேன்று வேறேதுவும் கேட்கவில்லை.” என்றாள்.

அதனைக் கேட்டதும் அவந்திகாவிற்கு, மதிக்கும் இந்தப் பெண்ணுக்கும் நடந்திருக்கும் பேச்சு வார்த்தையைக் கற்பனையில் நினைத்துச் சிரிப்பே வந்தது. ‘மதி அப்படி செய்திருக்க கூடியவள்தான்.’ என்று நினைத்தாள்.

ஆனால் முகிலன், மதியிடம் திரும்பி, “இப்படி சின்னப் பெண்ணைப் பயமுறுத்தி இருக்கிறாயே?” என்றான்.

மதி அவனுக்குப் பதில் சொல்லாமல், கண்களை உருட்டி, தன் காதில் விழவில்லை என்பதுப் போலத் தன் வலது கையின் சுண்டு விரலால் தன் காதைக் குடைந்து கொட்டாவி விட்டாள்.

தன் வார்த்தைக்குப் பதிப்பு கொடுக்காத மதியின் செய்கையில் எரிச்சலுற்ற முகிலன், “கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்யாமல் திமிரை பார் உனக்கு!?” என்றான் மீண்டும்.

மதி அவனைத் திரும்பிப் பார்த்து, “ஆமாம் நீ சாப்பிடவில்லையா? உன் மண்டையில் ஏதேனும் சிந்தனை இருக்கா? எல்லாம் அந்தப் பெண்ணிடம் வரும் வழியில் சொல்லிக் கொண்டு வந்தால், என்ன நிகழும்?” என்று, ‘நாங்க பேசிக் கொண்டு வரும்போது யாரேனும் கேட்டால் நம் திட்டம் வீணாகிவிடாதா?’ என்பதை சொல்லாமல் கேட்டாள்.

முகிலனின் முகம் கோபத்திலும் யோசியாமல் பேசியதில் வெட்கித்தும் சிவந்து போனது, “நீ… நீ…” என்று இருமுறை அவளைப் பற்களுக்கு இடையில் சொன்ன போதும் எதுவும் பேசவில்லை.

அதுவரை பயமுடன் இரு ரிஷிமுனிகளையும் பார்த்திருந்த பௌதிகா, அவர்களின் சண்டையை ஆர்வமாகப் பார்த்துத் தன் கைகளால் வாயை மூடி, கிளுக்கி சிரித்தாள்.

“என் அப்பா ரிஷிமுனிகள் எல்லாம் மிகவும் சக்தி வாய்ந்தவங்க. அவங்களிடம் மரியாதையுடனும் பயத்துடனும் இருக்க வேண்டும் என்று சொன்னாரு. ஆனால் அவர்களும் எங்களைப் போல வேடிக்கையாகப் பேசி வாய் சண்டையிட கூடுமென்று இன்று வரை எனக்குத் தெரியாது.” என்றாள்.

அவளது வார்த்தையின் அர்த்தம் உணர்ந்த மதியும், முகிலனும் இந்த அறியா பெண் முன் சண்டையிட்டு கொண்டு இருந்ததை எண்ணி வெட்கித்து, பேசாமல் முகம் திருப்பிக் கொண்டனர்.

அவந்திகா, நிம்மதி பெருமூச்சு விட்டு, “அவர்கள் அப்படிதான் பௌதிகா. அதிகமான அன்பிலும் இது போன்ற சண்டைகள் வரும். நாம் அதனைக் கண்டுக் கொள்ள கூடாது.” என்றாள்.

அதனைக் கேட்ட பௌதிகா, “உண்மைதான் அவந்திகா. நானும் அவரும் கூட அவ்வப்போது அப்படிதான் சண்டையிட்டுக் கொள்வோம். பிறகு சேர்ந்துக் கொள்வோம். இப்போது இந்த இரு ரிஷி முனிகளை பார்க்கும்போது நாங்க சண்டையிடுவது போலவே இருந்தது.” என்று வெள்ளந்தியாகச் சொன்னாள்.

பௌதிகாவின் குரல் அவர் என்று சொன்னது அவளது காதலனையோ கணவனாகப் போகிறவனையோ என்பது அது ஒலித்த விதத்தில் கேட்கிற யாருக்கும் தெரியும். அவர்களோடு தங்களை ஒப்பிட்டதில் முகிலன் மற்றும் மதி முகம் சிவந்துவிட்டது. ஆனால் இருவரும் எதுவும் பேசவில்லை.

ஆனால் அவந்திகா, “ம்ம்!” என்று ஏதோ யோசனையோடு தொடர்ந்து, “உன் அவர் யார்? உனக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளையா?” என்றாள்.

அதற்கு லேசாக நாணம் பூச, “அது என் காதலர். என் வீட்டில் இதுகுறித்து எதுவும் தெரியாது.” என்று கேட்டாள்.

இதனைக் கேட்ட அவந்திகா, “உனக்கு இன்னமும் திருமணம் நிச்சயம் ஆகவில்லையா?” என்றாள்.

“இல்லை. சிறிது பொருள் சேர்த்தபின், அடுத்த வருடம்தான் திருமணத்திற்கு என் வீட்டில் கேட்க வருவதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் இன்று மாலை ஒருவர் திருமணத்திற்கு என்னைப் பெண் கேட்க வருவதாக என் அப்பா சொன்னார். வந்தால் பிடிக்கவில்லை என்று சொல்லலாம் என்று இருக்கிறேன்.” என்று நடக்கும் நிகழ்வின் தீவிரம் புரியாமல் சொன்னாள் பௌதிகா.

மதியும், முகிலனும், அவந்திகாவும் ஒருவரை ஒருவர் காரண பார்வை பார்த்துக் கொண்டனர். பின் பௌதிகாவிடம் திரும்பி, “பௌதிகா, நான் சொல்வதை பொறுமையாகக் கேட்க வேண்டும். பயப்படக் கூடாது.” என்றாள் அவந்திகா.

பீடிகையுடன் விழுந்த அந்த வார்த்தைகள் அவந்திகா எதுவும் சொல்லுமுன்னே பௌதிகாவின் அடிவயிற்றில் குளிர் பரப்பியது. குரலில் திடத்தை கொணர்ந்து, “ம்ம்…சரி.” என்றாள்.

பின் மேலோட்டமாக 10 வது பெண் நினைவிழக்க போவது அவள்தான் என்பதிலிருந்து அடுத்து என்ன நிகழ வாய்ப்பிருக்கு, அதனைத் தடுக்க என்ன வழி என்பதை பொறுமையாக வரி வரியாகப் பௌதிகாவிடம் சொன்னாள் அவந்திகா.

அதனை முகம் வெளுக்கக் கேட்ட பௌதிகா, “அப்போது, நீங்க எனக்குப் பதிலாக என் வீட்டு போகப் போறீங்களா? உங்களுக்கு எதுவும் ஆகிவிடாதே அவந்திகா?” என்றாள்.

அவள் நல்லெண்ணம் உணர்ந்த அவந்திகா இதழ் விரித்து, “எதுவும் ஆகாது. ஆனால் நீ முழு ஒத்துழைப்பு தர வேண்டும். நீ உன் காதலினிடம் கூட இந்த இரு நாட்களும் பேசக் கூடாது.” என்றாள்.

அதற்கு, “சரி. நீங்கச் சொல்லும் வரை நான் இந்த அறையை விட்டு எங்கும் செல்லமாட்டேன்.” என்றாள்.

அதற்கு, “நல்லது.” என்றாள் அவந்திகா. பின் பேசியது முடிவடுத்தப்படி பௌதிகா அணிந்திருந்த தாவணி போன்ற ஆடையை அவந்திகா மாற்றி அணிந்துக் கொண்டாள். அவளைப் போலவே நேர் வடுகெடுத்து இழுத்து பிடித்திருந்த கூந்தலை தளர பின்னிக் கொண்டாள்.

பின் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க முகத்தில் பாதி மறைக்கும்படி முகமூடிப் போல அணிந்துக் கொண்டாள். (4) அவள் மாற்றத்தை முகிலன், மதி, பௌதிகா மூவருமே பார்த்து வியந்தனர். பாதி முகம் மறைந்திருந்த போதும் அவந்திகாவின் விழியழகு பார்ப்பவரை மறுமுறை பார்க்கும்படி செய்தது.

திகைத்து மூவரும் நிற்பதை பார்த்து, “என்ன என் முகத்தில் ஏதேனும் குறையா?” என்று கேட்டாள். அதற்கு மூவரும் ஒன்றாக, “இல்லை.” என்றனர்.

அவர்களின் பதிலில் நம்பிக்கை இல்லாதவள் போலத் தன் பணியகத்திலிருந்து முகம் பார்க்கும் கண்ணாடி எடுத்துத் தன் முகத்தைப் பார்த்தாள். அப்போது அவள்பின் நந்தன் தோன்றி கண்ணடியிலே அவளைப் பார்த்து, “இளவரசி. நீங்க அழகாக இருக்கீங்க. உங்களிடம் எந்தக் குறையுமில்லை.” என்றான்.

உடனே திரும்பிய அவந்திகா, “அ… அது. பவளன்.” என்று நந்தனை பார்த்ததும், சில மணி நேரத்திற்கு முன்பு நடந்த நிகழ்வு நினைவு வந்தவளாக, அவனிடம் என்ன சொல்வதென்று புரியாமல் திணறினாள்.

அவளை மேலும் தவிக்க விடாமல் நந்தன் தொடர்ந்து பேசினான். “இளவரசி. நான் அந்தப் பெண்ணைப் பார்க்க இன்று வரும் அந்த மாப்பிள்ளையிடமும் அவன் பெற்றோர்களிடமும் எல்லா விவரங்களையும் சொல்லிப் பக்கத்து அறையில் தங்க சொல்லியிருக்கிறேன்.

எதற்கும் எச்சரிக்கையாக இருக்க அந்த அறைக்கும் இந்த அறைக்கும் யாரும் வர முடியாத படி மந்திர பூட்டு சக்கரமிட்டுவிட்டேன். இன்று மாலை நான் உங்க மாப்பிள்ளையாகவும், உங்க சிநேகிதர்கள் இருவரும் என் பெற்றோர்களாகவும் அந்தப் பெண் வீட்டுக்கு உங்களைப் பெண் பார்க்க வருகிறோம்.” என்றான்.

அதனைக் கேட்ட அவந்திகாவின் புருவங்கள் வியப்பில் உயர்ந்தது. ‘இரண்டு மணி நேரம் வெளியில் சென்றதில் மாப்பிள்ளைகுறித்து தகவல் அறிந்தது மட்டுமல்லாமல், அவர்களைக் கச்சிதமாகக் கையாண்டுவிட்டான்.’ என்று நினைத்தாள்.

அவள் எண்ணம் சொல்லாமலே உணர்ந்த நந்தன் சின்ன சிரிப்பை உதிர்த்து கண்கள் சிமிட்டினான். அவந்திகா உடனே நினைவு வந்தவளாக, “ம்கும்.” என்று தொண்டையை செருமி, வேறுபுரம் பார்த்து, “சரி. நன்றி.” என்றாள். அந்த நன்றி இப்போது இவன் செய்த உதவிக்கா அல்லது முன்பு அவன் மறையும் முன் செய்ததாகச் சொன்ன உதவிக்கா என்பது விளக்கப்படாமலே நின்றது.

இப்படி அவந்திகாவும், நந்தனும் பேசிக் கொண்டிருக்க, ‘பவளனுக்கு பெற்றோராகத் தாங்கள் இருக்க வேண்டுமா?’ என்று மதியும் முகிலனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் முன்பு மாப்பிள்ளை பெண்ணாக நடிப்பர்தற்கு சண்டையிட்டதுப் போல இருவரும் இப்போது மறுக்கவில்லை.

ஏனேன்றால், அவந்திகாவின் மாப்பிள்ளையாக நடிக்கப் பவளன் வந்த போதும், அவன் அவளுக்கு உதவியாகப் பலதும் செய்திருந்த போதும், அவனைத் தனியாக அவந்திகாவுடன் விட மதி, முகிலன் இருவருக்குமே விருப்பமில்லை.

அதனால் ஒரு அடி முன் வந்து, பவளனின் இருபுரம் நின்று, மதி அவந்திகாவை பார்த்து, “பவளன் சொல்வது போல் செய்யலாம்.” என்றாள். முகிலன் பவளனை பார்த்து, “நாங்க இருவரும், உன் அப்பா, அம்மா.” என்றான்.

இன்றும் மதியும், முகிலனும் கணவன் மனைவியாக நடிக்கச் சண்டையிட கூடுமென்று நினைத்த அவந்திகாவிற்கு அவர்களின் ஒற்றுமையான பதிலில் திகைத்து அவர்களைப் பார்த்தாள். ‘நந்தனின் வார்த்தைக்கு இவ்வளவு சக்தி இருக்குமா?! சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களையும் ஒற்றுமையாக்கிவிட்டான்.’ என்று நந்தனை ஒரு நொடி பார்த்துத் திரும்பினாள்.

பாவம் அவந்த்கியாவிற்கு தெரியவில்லை, உண்மையில் மதி மற்றும் முகிலனின் ஒற்றுமை அவந்திகாவினை பாதுகாப்பதற்காக உண்டான ஒன்று என்று.

பின் அவர்களுமே சாதாரண மனித யாளிகள் போல இயல்பான ஆடைகளுக்கு மாறி, அவர்களின் ஆன்மீக ஆற்றலைத் தளர்த்தி, 25 தோற்றா வயதிலிருந்து, 50 தோற்ற வயதிற்கு இருவரும் மாறினர்.

Author Note:

(1) பவளநந்தனின் தண்டாயுதம்.


(2) விஷமதனமனு நா வில்லத்தனத்தைத்தான் சொன்னேன். ஆனால் வில்லன் english வார்த்தை இல்லையா, அதனால விஷமம் என்று குறிப்பிட்டிருக்கிறென்.
(3) வன்னி மிகவும் கொடுமையுற்றுதான் இறந்தாள். பாவம் வன்னிக்கு எவ்வளவு வலித்திருக்கும்.?! 🙁
(4) அவந்திகா கீழே இருப்பது போல முகமூடி அணிந்தாள். Readers, முகமூடி என்றதும், spiderman போலவும், bateman போலவும் கற்பனை செய்திட வேண்டாம்.