யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 30

773

அத்தியாயம் – 30

அவள் விழி மறைவில் குறும்பு செய்யும் குழந்தைப் போல நந்தனின் இதழ் ஒரு புரமாக விரிந்து அவன் கண்ணில் ஒரு ஒளி வெட்டு ஏற்பட்டு மீண்டது.

அதன் பிறகு அவந்திகா, “நந்தன், நான் தூங்க போகிறேன். நீங்க?” என்று பேசாமல், ‘எங்குத் தங்குவதாக இருக்கீங்க?’ என்பது போல அவனைப் பார்த்தாள்.

அவளது பார்வையின் அர்த்தம் புரிந்தவனாகச் சின்னச் சிரிப்பை உதிர்த்து, பவளநந்தன், “இளவரசி, நான் இந்த ஊர் எல்லையில் இருக்கும் சத்திரத்திற்கு போகிறேன். காலை நான் எப்போது வர வேண்டுமென்று சொல்லுங்க. அப்போது நான் இங்கு வருகிறேன்.” என்றான்.

நந்தனை தன்னுடன் இந்த அறையில் இருக்க சொல்வதில் அவந்திகாவிற்கு எந்தவித வெறுப்பும் இல்லைதான். ஆனால் அவள் இப்போது மனிதபெண். அவன் கலப்பின யாளி என்ற போதும், அவன் உடலில் மனித யாளியின் இரத்தம் இருக்கிறது. அதனால் அவளுள்ளான வேறுபாலினம் என்ற தயக்கம் அவனுள்ளும் இருக்கும்.

அதனாலே அவள் அவனை நோக்கி, ‘கிளம்பு.” என்பதுப் போலப் பார்த்தாள். அவனும் அவளை உணர்ந்தவனாக அவளுக்குப் பதிலளித்தான். அவன் பதிலில் திருப்தியுற்றவளாக அவள் இதழ் விரிந்தது. அதனுடன், ‘அவனை எப்போது வரச் சொல்லலாம்.’ என்று தன் முகவாயில் தன் வல கை முஷ்டியை வைத்து, “ம்ம்?” என்று யோசிக்கலானாள்.

சில நிமிடங்களுக்குப் பின், “நந்தன். நீங்கச் சத்திரத்திலே இருங்க. நாங்களே நாளை அங்கு வருகிறோம். மற்றது அங்குப் பேசிக் கொள்ளலாம்.” என்று சொல்லிவிட்டு கையிலிருந்த பாதி பாலை ஏனோ குடிக்க தோன்றாததுப் போல் டீபாய் மீது வைத்து விட்டு மெத்தை விரிப்பை உறங்குவதற்கு சரி செய்துவிட்டு நந்தன் கிளம்புவதற்காக அவனைப் பார்த்தாள்.

அவளையே பார்த்திருந்த நந்தன், “சரிங்க இளவரசி. நான் இப்போது கிளம்புகிறேன்.” என்று சொல்லிவிட்டு பட்டாம்பூச்சி மின் துகள்களாக மாறி அந்த அறையைவிட்டு காணாமல் போனான்.

அவன் கிளம்பியதும், ‘இந்த நந்தன், முதல் முறையாகச் சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறான்.’ என்று முனுமுனுத்து, இதழ் விரித்தாள்.

பின் பெருமூச்சு விட்டு, “கொடி விளக்கை அணை.” என்று சொல்ல அது அவந்திகாவின் கையிலிருந்து சென்று அந்த அறையில் எரிந்துக் கொண்டிருந்த விளக்கை அணைத்துவிட்டு அவளுள் வந்து அடங்கியது. அதன் பின் அவளும் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு கண்ணயர்ந்தாள்.

பாவம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அவந்திகாவிற்கு, ‘அவள் உறங்கிச் சீரான சுவாவசம் வர ஆரம்பித்ததும், திருட்டு பூனை ஒன்று மீண்டும் ஒளி துகள்களாக நந்தன் வடிவில் அந்த அறையில் உருப்பெற்று, அவள் மீதி வைத்திருந்த பாலை கமலிகரம் செய்துவிட்ட சென்றது.’ கொஞ்சமும் தெரியவில்லை.

மறுநாள் காலை, அவந்திகாவும் அவளது சிநேகிதர்களும், அவர்களின் அடுத்த முயற்சியை மற்றவர்களிடம் மறைக்க எண்ணி அந்த வீட்டைவிட்டு செல்ல முடிவெடுத்தனர்.

அதே எண்ணமுடன் வேதனிடம், “வேதன். இது பெரிய பிரச்சனையாக இருக்கும் போலத் தெரிகிறது. அதனால் நாங்க என் குருவிடம் ஆலோசனைக் கேட்டுவிட்டு ஒரு வாரத்திற்குள் இங்கு வருகிறோம். அதற்குள் வேறு எதாவது சந்தேகம் தரும்படி நிகழ்வு நடந்தால் எங்கள் பரி அரசவை பொது தகவல் இணைப்பிற்கு சொல்லுங்க.” என்றான் முகிலன்.

அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்பதை ஏற்கனவே யூகித்தாரோ என்னமோ, வேதன் ஒரு நெடிய பெருமூச்சுவிட்டு, அவர்களை வழி அனுப்புவதற்காக அவர்களுடன் வீட்டின் வாசல்வரை வந்து, “ரிஷிமுனிகளே. உங்களது உதவிக்கு நன்றி. உங்களது வரவுக்காக நாங்க காத்திருக்கிறோம்.

விரைவில் வேண்டிய தகவல் பெற்று நீங்க வந்து என் ஊர் பெண் பிள்ளைகளின் உயிரைக் காக்க வேண்டும்.” என்று கைக்கூப்பு வணங்கி அவர்களை அனுப்பி வைத்தார்.

அவரின் கவலை உணர்ந்த போதும், அந்த நேரத்தில் அவந்திகாவோ அல்லது முகிலன் மதியோ நம்பிக்கை தரும்படியாக எதுவும் சொல்ல முடியவில்லை. விதுனா அவள் அக்காவை விழிக்கச் செய்யாமல் அவர்கள் கிளம்புவதை கதவின் மறையில் நின்று விழியில் நீருடன் பார்த்திருந்தாள்.

அதனைப் பார்த்த அவந்திகா, விதுனா நோக்கிக் கைச் செய்கை செய்து அவளை அருகில் அழைத்தாள். பின் அவள் தலை வருடி, “உன் அக்காவைக் காப்பாற்ற முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. விதுனா. ஆனால் உனக்கு விருப்பென்றால் உன் அக்கா கண் விழிக்கும் வரை என்னை உன் அக்காவை நினைத்துக்கொள்.

நான் மீண்டும் உன்னை ஒரு வாரத்திற்கு பின் வந்து பார்க்கிறேன். நீ தானே இப்போது உன் பெற்றோர்களுக்குப் பலமாக இருக்க வேண்டும். இப்படி கண்கலங்கினால் எப்படி. உன் அக்கா இன்னமும் வீட்டில் தான் இருக்கிறாள். அவளுக்கு எதுவும் ஆகவில்லை. தெரியும்தானே?” என்றாள் குழந்தைக்குச் சொல்வது போல.

அவளது பதிலில் விதுனா மெதுவாகத் தேம்பலை குறைத்து கன்னத்தைக் கடந்திருந்த தன் கண்ணீரை துடைத்து, “ஆமாம் அக்கா. என் அக்கா வீட்டில்தான் இருக்கிறாள். நான் உங்களை நம்புகிறேன். என் அக்காவை நீங்கக் கண் விழிக்கச் செய்துடுவீங்க. ” என்றாள் லேசான கரகரப்புடன்.

அவந்திகா மீதான கலங்கமில்லாத விதுனாவின் நம்பிக்கையில் அவந்திகா ஒரு நொடி திகைத்து விழித்தாள். உடனே முகத்தைச் சரிச் செய்து, “ம்ம். நீ சமத்து.” என்று சொல்லித் தன் கைச்சட்டை வரை வளர்ந்திருந்த விதுனாவை சில நொடி தன்னோடு சேர்த்து அணைத்து விடுவித்தாள்.

அந்த அணைப்பு விதுனாவிற்கு இன்னும் தெம்பை தந்ததோ என்னமோ, “நீங்க வரும் வரை, என் அப்பா அம்மாவையும் நான் பார்த்துக் கொள்வேன் அக்கா. விரைவில் வந்திடுங்க.” என்றாள் திடமான குரலில். அதற்கு அவந்திகா மென்னகையை பதிலாக அளித்துத் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

அவளுடன் முகிலனும் மதியும் நடந்தனர். வேதனின் வீட்டிலிருந்து குறிப்பிட்ட தூரம் வந்தப்பின் யாருமற்ற ஒரு பாதை முனையில் மூவரும் எதுவும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்து ஒரு தலையசைப்புடன் மூன்று வெவ்வேறு திசைகளில் பிரிந்துச் சென்றனர்.

அவந்திகா, வழியில் பார்பவர்களிடம் அந்தக் கிராமத்தின் அருகில் இருக்கும் சத்திரத்திற்கு செல்லும் வழிக் கேட்டுப் பவளநந்தன் தங்கி இருப்பதாகச் சொன்ன சத்திரத்தை அடைந்தாள். அவந்திகா அவன் இருக்கும் இடத்திற்கு வருவதாக முன்னே பவளனிடம் ஆன்ம இணைப்பில் சொல்லிவிட்டிருந்தாள்.

அதனால் பவளன் அந்தச் சத்திரத்தின் பணியாளிடம் ஏற்கனவே சொல்லியிருந்தானோ என்னமோ, அவந்திகா சத்திரத்தின் முற்றத்தில் பணியாளிடம் பவளன் என்று பெயர் சொன்னவுடன், அவன் அவளிடம் அறை எண்ணை மட்டும் சொல்லிவிட்டு விலகாமல் அவளைக் கையோடு அழைத்துச் சென்று பவளனின் அறை முன் விட்டுவிட்டுச் சென்றான்.

அந்தப் பணியாளிடம் நன்றி கூறி அந்த அறை கதவை, “பவளன்?” என்று குரல் கொடுத்துத் தட்டினாள் அவந்திகா. சில நொடிகளில் அறை கதவு திறக்கப்பட்டது.

கதவு திறந்ததும் உள்ளே நுழைந்த அவந்திகா, “பவளன். என் நண்பர்கள்…” என்று ஏதோ சொல்லிக் கொண்டே நிமிர்ந்து எதிரில் இருந்தவனை பார்த்தாள்.

பார்த்தவளின் வார்த்தைகள் எதிரில் இருந்தவனின் நிலைக் கண்டு விக்கித்து பாதியிலே நின்றது. அவன் அப்போதுதான் குளித்துவிட்டு அவசரமாக வந்திருப்பான் போல, கால் சட்டை அணிந்திருந்தப் போதும், மேல் சட்டை அணியாமல் ஒரு துணி துண்டைக்(Towel) கொண்டு ஒரு கையால் தலைத் துவட்டிக் கொண்டும், ஒரு கையில் கதவின் தாழ்பாலை பிடித்துக் கொண்டும் நின்றிருந்தான்.

குளித்தபிறகு ஒழுங்காக நீர் துவளைகளை துடைக்காததால் மினுமினுப்புடன் அவனது தேன் நிற கழுத்து வளைவிலிருந்து ஒவ்வொரு சொட்டாக நீர் துளிகள் கீழிறங்கி, அவனது வயிற்றில் இருந்த 8 தசைக்கோளங்களின் பள்ளம் மேடுகளில் வழிந்து, பின் அவனது கால் சட்டையை லேசாக நனைத்துக் கொண்டிருந்தது.

ஒரு நொடிதான் பார்த்தாள் என்ற போதும், அவனது இந்த ஆண்மையின் அழகு (Handsome) அவந்திகாவை திக்கு முக்காட செய்துவிட்டது. அவளையும் அறியாமல் அவள் கன்னங்கள் சிவந்து, சட்டென விழியை வேறுபுரம் திருப்பி, “நா…நான். வெளியில் சென்று சி…சில நிமிடங்கள் கழித்து வ…வருகிறேன்.” என்று திரும்பி வெளியில் செல்ல எத்தனித்தாள்.

ஆனால் கதவிலே இன்னமும் கையை வைத்திருந்த பவளன், “இளவரசி. அதற்கு அவசியமில்லை.” என்று அவளது பதிலுக்கும் காத்திராமல் கதவை அடைத்து, பேச்சை மாற்றும் எண்ணமுடன், “உங்க சிநேகிதர்கள் உடன் வரவில்லையா?” என்று கேட்டான்.

அரைகவனமாக இருந்த அவந்திகா, அவன் வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லை என்ற போதும் அவனை நிமிர்ந்து பார்க்கத் துணிவு இல்லாமல், எச்சில் விழுங்கி, “அ…அவர்கள்.அவர்கள்.” என்று வார்த்தைகள் வராமல் திணறினாள்.

அவள் முகம் பார்த்திருந்த நந்தனின் இதழ் லேசாக விரிந்தது. அவள் அருகில் வந்தவன் அவள் கைப்பற்றி அவளை அந்த அறையில் இருந்த மெத்தை மீது அமர வைத்து, “ஒரு நிமிடம் இளவரசி.” என்று அவளிலிருந்து விலகி எங்கோ சென்றான்.

கைப்பாவையாக அவனுடன் நடந்த போதும், அவந்திகாவின் விழி வட்டத்தில் அவனது தேகம் தெரிந்தப் போதும், நிமிர்ந்து பாராமல் அவன் சொல்வது போல் செய்தாள். பின், “ம்ம்?!” என்று கேள்வியாகக் கேட்டாள்.

அவள் கேள்விக்குப் பதில் அளிக்காமல், அவள் இருப்பதிலிருந்து சற்று தள்ளிச் சென்று தன் உடலை உதறினான். அவன் உடலிலிருந்து எல்லா நீர் துளிகளும் காற்றில் கரைந்து போனது. பின் நொடியில், தன் பணியகத்திலிருந்து சாம்பல் நிற ஆடையை எடுத்து அணிந்தான்.

சில நொடிகளில் தன் தோற்றத்தை முழுதும் மாற்றியவன், “தவறாக எண்ண வேண்டாம் இளவரசி. என்னதான் ஆன்மீக ஆற்றல் கொண்டு நம்பை நாமே தூய்மை செய்துக் கொள்ள முடியும் என்ற போதும், மனிதயாளியாகவும் நான் இருப்பதால், நான் அவ்வப்போது இப்படி நீர் கொண்டு குளிப்பதும் என் வழக்கம். நீங்க வருவதற்குள் தயாராகிவிடலாம் என்றிருந்தேன். ஆனால் காலதாமதம் ஆகிவிட்டது.” (1) என்றான்.

பாவம் அவந்திகா அதற்கு என்ன பதில் சொல்வாள். “ப…பரவாயில்லை.” என்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அந்த அறையின் மேஜை மீதிருந்த தண்ணீர் குடுவையிலிருந்து ஒரு மண் கிண்ணத்தில் நீர் நிரம்பி அவளிடம் தந்த நந்தன், “உங்க நண்பர்கள் எங்கே?” என்று மீண்டும் கேட்டு அவள் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

அவனிடமிருந்து நீரை வாங்கி அருந்திய அவந்திகா, முன்பு ஏற்பட்ட தாக்க மீண்டவளாக, ஒரு பெருமூச்சு விட்டு, “முகிலன் உயிர் உறிஞ்சும் சக்கரத்தில் முன்பு போட்ட மந்திர பூட்டை எடுத்துவிட்டு வரச் சென்றிருக்கிறான். மதி, அந்த 10வது பெண்ணை அழைத்து வரச் சென்றிருக்கிறாள்.” என்று அவனுக்கு விளக்கம் தந்தாள்.

பவளன், “ஓ…” என்றான். பின், “இளவரசி, உங்களுக்கு யார் மீதேனும் குறிப்பாகச் சந்தேகம் இருக்கிறதா?” என்று கேட்டான்.

அவந்திகா, “ம்ம்…” என்று ஆமாம் என்பது போலத் தலை அசைத்தாள். ஆனால் வாய் விட்டுச் சொன்னாள் இல்லை.

சில நிமிடங்கள் அவளுள் ஏதோ யோசனைபோல நெற்றி சுருங்கி சிந்தனை ஓடியது. அவள் நிலை உணர்ந்து பவளன் அவளைத் தொந்தரவு செய்யவில்லை. அவளது கையிலிருந்து நீர் கிண்ணத்தை வாங்கி மீண்டும் மேஜை மீது வைத்தான்.

அவந்திகா அன்னிச்சை செயலாகக் கிண்ணத்தை அவனிடம் தந்த போதும், அவள் மனம் எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தது.

சில நிமிடங்களில் ஏதோ மனதில் கணக்கு போட்டவளாக நிமிர்ந்து பவளநந்தனை பார்த்து, “நந்தன். 10வது பெண் இங்கு வந்ததும், அவளுக்குப் பதிலாக இன்றே நான் அவள் வீட்டிற்கு செல்கிறேன்.

நடத்தும் நாடகம் யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்கு, ஏற்கனவே அந்தப் பெண்ணிற்கு பார்த்த மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று அந்த மாப்பிள்ளைக்குப் பதிலாக, அவனது பெற்றோர்களுடன் நீங்க மீண்டும் ஒரு முறை என்னைப் பெண் பார்ப்பதுப் போல் இன்று மாலை அந்த வீட்டு வாங்க.” என்றாள்.

பவளன், “ம்ம். ‘@_@’” என்றான்.

தொடர்ந்து பேசிய அவந்திகா, “அந்த 10வது பெண் அடுத்த செந்நிற பௌர்ணமி தினம்வரை, அதாவது நாளை மறுநாள் முடியும் வரை இந்தச் சத்திரத்தில் ஒரு அறையில் இருக்க சொல்லலாம். அவள் பாதுகாப்பிற்கு மதியையோ, முகிலனையோ உடன் இருக்கச் சொல்ல வேண்டும். நீங்க என்ன சொறீங்க நந்தன்.” என்று தன் முகவாயில் கைமுஷ்டியாக வைத்து அவனிடம் சொன்னாள்.

பவளன், “நீங்கச் சொல்வது போலவே செய்துவிடலாம் இளவரசி.” என்றான் முகத்தில் மென்னகை மாறாமல். இன்னும் சில நிமிடங்கள், யோசித்த அவந்திகா, அவளது திட்டத்தில் எந்த வித துளையும் இல்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டு பெருமூச்சு விட்டு நிமிர்ந்தாள்.

அதுவரை அவள் முக அசைவுகளை மட்டுமே பார்த்திருந்த நந்தன் அவள் நிமிர்ந்ததும் அவளை இரசனையுடன் பார்ப்பதை அவள் கண்டுவிட்டாளே என்ற எந்தவித கூச்சமும் இல்லாமல், பேச்சை மாற்றி, “நான் தந்த கைக்காப்பு ஒழுங்காக வேலை செய்கிறதா இளவரசி.?” என்று அவள் அருகில் வந்து நின்று அவளது வலது கை மணிக்கட்டை நோக்கித் தன் கையை நீட்டினான்.

அவன் எண்ணம் உணர்ந்தவளாக அவளும் அவளது கையை அவனிடம் தந்து, “ம்ம்… மிகவும் உதவியாக இருக்கு நந்தன். என்னிடம் ஆன்மீக இதய வேர் இல்லை. என் கைக்காப்புமில்லை. என் ஆன்மா பரியாளியாக இருந்த போதும், என்னால் புதிதாக ஆன்மீக இதய வேரை என் கைக்காப்பு இல்லாமல் இந்த மனித உடலில் உருவாக்க முடிந்திருக்குமா என்று தெரியவில்லை.

அப்படியே உருவாக்க முடிந்திருக்கும் என்றாலும், அதற்கெல்லாம் எவ்வளவு காலம் ஆகியிருக்குமோ. அதற்குள் என் தோழர்களுக்கு ஏதேனும் ஆகிவிடகூட வாய்ப்பிருக்கு. நல்ல வேளையாக நீங்க இந்தக் கருநிற கைக்காப்பை தந்தீங்க.

இது மற்றவர்களின் கண்ணுக்குத் தெரியாதப் போதும், என்னால் ஆன்மீக ஆற்றலை எந்த எச்சரிக்கை உணர்வும் இல்லாமல் மீளுருவாக்கம் செய்ய முடிகிறது. மிகவும் நன்றி.” என்று ஆத்மார்த்தமாக அவனுக்கு நன்றி கூறினாள்.

அவளது பதிலில் பவளன், சின்ன சிரிப்பை உதிர்த்து, “இது என் கடமை.” என்றான். அவளது கையைப் பற்றிக் கைக்காப்பினை தொட்ட நந்தன், அதிலிருந்து கருமையும் வெண்மையுமான நிறத்தில் இரு காதணிகளை அதிலிருந்து எடுத்தான்.

அப்போது கதவைத் தட்டும் எண்ணம் இல்லாமல், முகிலன் கதவைத் திறந்துக் கொண்டு அந்த அறைக்குள் வந்து நின்றான். வந்தவனின் கண்களில் பட்டது அவந்திகாவின் கைக்காப்பு அல்ல, அவளது கையைப் பற்றி இழுப்பதுப் போலிருந்த பவளநந்தனின் கைகள்தான்.

அதனைப் பார்த்ததும், முகிலன் நொடியும் தாமதிக்காமல், “நீ… என்ன தைரியம் உனக்கு? எப்படி நீ இளவரசியின் கைப் பற்றலாம்?” என்று நந்தனை ஒரு கையால் விலக்கித் தள்ளி, அவந்திகாவின் கையை அவனிலிருந்து விலக்கி, தன் பின் இழுத்து அவளை நந்தனிடமிருந்து மறைத்தவிதமாக நின்றான்.

திடீரென்று உள்ளே வந்த முகிலனை நந்தன் மற்றும் அவந்திகா இருவருமே ஒரு வித திகைப்புடன் பார்த்திருக்க, அவர்கள் என்ன என்று யோசிக்கும் முன்னே முகிலன் அவந்திகாவை பலமாக நந்தனிடமிருந்து பிரித்து இருவருக்கும் குறுக்காகப் பெரிய பாதுகாப்பு அரணைப் போல நின்றது அவர்களை முற்றிலும் அதிர செய்தது.

முகிலனுக்கு நந்தனோ, அவந்திகாவோ, பதிலளிக்கும் முன்னே மதியும் அந்த 10வது பெண்ணான பௌதிகாவுடன் அந்த அறைக்கு வந்தாள். அறை கதவு மூடியிராமல் திறந்திருப்பதை ஒரு எச்சரிக்கை உணர்வுடன் பார்த்து உள் நுழைந்தவள் பார்த்தது, முகிலன் கோபமாக எதிரிலிருந்த யாரென்றே தெரியாதவனை நோக்கி ஒரு விரல் நீட்டி, வெறித்துக் கொண்டிருந்ததுதான்.

அதற்கு மேல் முகிலனின் மற்றொரு கை அவந்திகாவை இறுக்க பற்றியிருந்தது. அதனைப் பார்த்ததும் மதிக்கு என்ன தோன்றியதோ, பௌதிகாவையும் உள்ளே விட்டுக் கதவைத் தாழிட்டு வந்து முகிலனுடன் சேர்ந்து அவந்திகாவின் மற்றொரு கையைப் பற்றி அவந்திகாவிற்கும் நந்தனுக்கும் குறுக்காகத் தடுப்பு சுவர்போல நின்றாள்.

முகிலனும், மதியும் ஆளுக்கொரு கையெனப் பற்றியிருந்த போதும், அவந்திகாவின் முகம் முன் நின்றிருந்த நந்தனுக்கு தெரியாதப்படி, அவந்திகாவை அவர்கள் முழுதும் மறைத்துக் கொண்டிருந்தனர்.

அவந்திகாவின் வார்த்தைக்காகப் பவளனை பார்க்க வந்த போதும், அவந்திகாவின் நண்பன் என்று சொல்லிக் கொண்டு அவந்திகாவினை நெருங்கியிருக்கும் அந்தப் பவளனிடம் மதிக்கும் முகிலனுக்கும் அவ்வளவு நம்பிக்கை இல்லை. கூடவே அவனிடம் எச்சரிக்கையுணர்வுடன் இருக்க வேண்டுமென்ற உணர்வே மேலோங்கி இருந்தது.

அதனோடு ஏற்கனவே ஒருமுறை வன்னியை இழந்த இந்தச் சிநேகிதர்களுக்கு மீண்டும் ஒருமுறை அவந்திகாவிற்கு எதுவும் ஏற்பட்டு விடக் கூடுமோ என்ற பயம், எச்சரிக்கை உணர்வு மேலோங்கி இருந்தது.

அதனாலே சாதரணமான கைப்பற்றலைக் கூடத் தவறாக எண்ணி, என்ன ஏது என்று அறியுமுன்னே, இந்தப் புதியவனான பவளனிடமிருந்து அவந்திகாவை காப்பாற்றுவதாக எண்ணி அவன் முன் இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு நின்றனர்.

சூழல் கையை மீறிப் போவதை உணர்ந்த அவந்திகா, “மதி, முகிலன். என்ன செய்றீங்க. இவர் நான் சொன்ன என் நண்பர் பவளன். என் கையை முதலில் இருவரும் விடுங்க.” என்று அவர்களிடமிருந்து விடுப்பட முயன்றாள்.

ஆனால் அவர்களது பிடி தளரவில்லை. அவந்திகாவிற்கு இருவருமே பதில் சொல்லவில்லை. “நீ அவந்தி கையைப் பற்றி என்ன செய்ய நினைத்தாய்?” என்று மீண்டும் கேட்டான் முகிலன்.

அவந்திகாவிற்கு தன் சிநேகிதர்களின் பிடியிலிருந்து விடுபடக் கூடத் தனக்கு சக்தியில்லையே என்று ஒரு நொடி, முகம் சோர்ந்து மனம் கசந்தது. அவளது கொடிக் கொண்டு அவளது சிநேகிதர்களை தாக்கவும் அவளுக்கு மனமில்லை.

அதுவரை எதிரில் இருந்தவர்களுக்கு சட்டைச் செய்யாமல் அவந்திகாவையே பார்த்திருந்த நந்தன், அவள் முகம் சோர்வை கண்டு, முகம் கடுகடுத்து, “இளவரசியின் கையை விடுங்க.” என்றான் குரலில் கடுமையுடன்.

நந்தனை சுற்றி அவனது ஆன்மீக ஆற்றல் ஒரு நொடி வெளி வந்து அந்த அறையில் ஒருவித அழுத்ததை ஏற்படுத்தி எதிரில் நின்ற இருவரையும் லேசாக நடுங்க செய்தது. ஒரு அடிபின் நகர்ந்த பிறகும், அவந்திகாவை பற்றியிருந்த பிடியை மதியும் முகிலனும் விடவில்லை.

Author Note:

(1) Hero sir நீங்க என்ன தான் விளக்கம் தந்தாலும், அவந்திகா நம்பலாம். ஆனால் Readers-அ நீங்க ஏமாத்த முடியாது. Readers எல்லாருக்கும் தெரியும். நீங்க அவள் வரும் வரை வேண்டுமென்றே குளியல் அறையில் நேரம் கடுத்திக் கொண்டிருபீங்கனு. 😛