அத்தியாயம் – 29

ஆனால் எதிரில் இருந்தவன் பளிச்சென்ற புன்னகையுடன், “இளவரசி, என் முழு பெயர் பவளநந்தன்.” என்றான்.

பவளனை எதிர்பார்த்து இருந்தவளுக்கு நந்தன் எதிரில் வந்து நிற்க அதிர்ந்து, தலை நிமிர்ந்து எதிரில் புன்னகையுடன் நின்றிருந்தவனை விழி மூடாமல் பார்த்தாள். தன் பெயரைப் பவளநந்தன் என்று பவளனும், நந்தனும் மாறி மாறிச் சொன்ன போதும் இன்னமும் அவளால் இருவரும் ஒருவரே என்று நம்ப முடியவில்லை.

ஏதோ பேச எண்ணி அவள் உதடுகள் திறந்து மூடிய போதும் அவளுள் வார்த்தைகள் வரவில்லை. தொண்டை வரண்டு விட்டதுப் போல எச்சில் விழுங்கி, மெல்லிய குரலில், “நந்தன்!” என்று ஒற்றை வார்த்தையைச் சிரமப்பட்டு உதிர்த்தாள்.

அவள் குழப்பம் உணர்ந்தவனாக நந்தன் உருவில் இருந்த பவளநந்தன், “இளவரசி.” என்று அழைத்தான்.

பின் மேலும் பேசாமல் விழி விரித்துப் பார்த்திருந்த அவந்திகாவின் முன்னே, எங்கிருந்தோ ஒரு சோடாபுட்டி கண்ணாடியைக் கொணர்ந்து தன் மூக்கு தண்டில் பொருத்தினான். தன் வலது கையை உயர்த்தி தன் தலையை லேசாக வருட, அது அவன் கைப்பட்டவுடன் மாயம் போல் கழுத்து வரை இருந்த அவனது சிகையை தலை ஒட்டிக் குறைத்து பவளனாக அவள் முன் மாற்றியது.

அதனைப் பார்த்திருந்த அவந்திகா, “பவளன்!” என்று மேலும் விழிவிரிக்க செய்தது. அவளுள் சஞ்சலம் குடியேறியது. அவள் நெற்றி பொட்டு சுருங்கி அவள் மனம் யோசனைக்குள்ளானது.

‘இன்றுதான் தன் சிநேகிதர்கள் பவளனிடமும், நந்தனிடமும் எச்சரிக்கையாக இருக்கும்படி சொன்னனர். இன்றே இவன், இந்தப் பவளநந்தன், இரு வெவ்வேறு நபர்களும் ஒன்று என்று, என் முன் வந்து நிற்கின்றனர். இப்படி இரு உருவில் இவன் தன்னை நெருங்கி வந்ததன் நோக்கம்தான் என்ன!?’ என்று நினைத்தவளுக்கு ஏனென்றே தெரியாத கோபம் வந்தது.

அவள் கோபத்தை அடக்குபவள் போல அவளது கீழுதடை தன் பற்களால் கடித்து அவனைத் தொடர்ந்து பாராமல் உடனே தன் தலைத்தாழ்த்தி சற்று இடப்புறமாக முகம் திருப்பி, அவனை நிமிர்ந்தும் பாராமல், “ஏன்!” என்று ஒற்றை வார்த்தையைக் கேட்டாள்.

அவள் முகம் மாற்றத்தைப் பார்த்திருந்த பவளநந்தன், அவள் முகம் திருப்பி ஏன் என்று கேட்டத்தில் அவள் கோபத்தை உணர்ந்தான். மீண்டும் நந்தனைப் போல் மாறி, அவள் அருகில் வந்தான். அவந்திகா தலைதாழ்த்தி இருந்தப் போதும், அவன் அருகில் வந்தது அவன் காலைப் பார்த்ததும் தெரிந்தது. இருந்தும், அவள் இன்னமும் மெத்தை மீதுதான் அமர்ந்திருந்தாள்.

அவளருகில் வந்து நின்றிருந்த நந்தன் தன் உடலை வளைத்து அவள் காதருகே குனிந்து மெல்லிய குரலில், “இளவரசி. என்மீது கோபமா?” என்றான்.

அவன் அருகில் வந்ததை அறிந்தப் போதும் அவன் அவள் காதருகில் வந்து பேசக் கூடுமென்று எண்ணவில்லை. அப்படி பேசியவன் அறிந்தோ அறியாமலோ அவனது சூடான சுவாசக் காற்றை அவள் காதருகில் விட அவளுக்கு அவள் காதில் அக்குளிப்பு தோன்றியது.

அன்னிச்சை செயலாக அக்குளிப்பு தந்த காற்றை தவிர்க்க எண்ணி நந்தனின் முகமிருந்த வலது புரம் தன் தலைசாய்த்து, அக்குளிப்பு தோன்றிய காதுமடலில் தேய்த்துவிட எண்ணி தன் வலது கையை உயர்த்தினாள் அவந்திகா.

ஆனால் இன்னமும் அவள் காதருகில் நந்தனின் முகம் இருப்பதை அவள் உணரவில்லை. அவள் காதுவரை உயர்ந்த அவந்திகாவின் கைகள் அதன் குறிக்கோளான அவள் காதினை அடையுமுன்னே முன்னவனின் கன்னத்தைத் தடவியது.

அதே சமயத்தில் அவள் தலை சாய்க்க கூடுமென்று எண்ணியிராத நந்தனின் உதடுகள் அவன் அனுமதியில்லாமலே அவந்திகாவின் செவிமடலை தீண்டி முத்தமாகப் பொதிந்தது.

இதனை இருவருமே எதிர் பார்க்கவில்லை போலும். உடல் சிலிர்க்க அவளிடமிருந்து நந்தன் தள்ளி நின்றான். அவந்திகாவும் மெத்தை மீதிருந்து எழுந்து அவனிடமிருந்து வெகுதொலைவிற்குச் சென்று நின்றாள்.

அவளது மூச்சு சீரற்று வேகமாகத் துடித்தது. முன்பு நந்தனின் இதழ்பட்ட அவளது காதுமடல் இன்னமும் அவனது மூச்சுக்காற்றும் இதழும் அதன் மீதிருந்து போகவில்லையென்பதுப் போலப் பிரமையை அவளுள் ஏற்படுத்தியது. இருந்தும் அவள், அவளது காதைத் தொட்டு சமாதனம் செய்யத் துணியவில்லை.

அவள் நிலை இதுவென்றால், தன் கன்னத்தை இதமாகத் தடவிய அவந்திகாவின் மிருதுவான விரல்கள் இன்னும் தன் கன்னத்தில் இருப்பதுப் போலவும், அதனைத் தன் கைக்கொண்டு பற்றி நிறுத்தும் எண்ணத்திலும், நந்தன் அவன் கன்னத்தில் தன் வலது கையை வைத்தான்.(1)

இருவரும் மிரண்டு ஒருவரை ஒருவர் பார்த்தனர். இருவருக்குமே தெரியும் இது எதிர்பாராமல் நடந்த நிகழ்வு. இருவருள்ளும் வேறெந்த எண்ணமும் அப்போது இல்லை என்று. இருந்தும் உடனே அவர்களால் இயல்புக்கு வர முடியவில்லை.

வெகுநேரம் சில நிமிடங்கள்போலக் கரைய அவந்திகாவின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கூடவே, “அக்கா. தூங்கிடீங்களா?” என்றது விதுனாவின் குரல்.

உடனே நினைவுக்கு வந்த அவந்திகா, “அ…அங். இல்லை விதுனா. தூங்க போகிறேன்.” என்று குரல் கொடுத்துக் கண்ணசைவில், எதிரில் இருந்த நந்தனுக்கு கதவு மறைவில் நிற்கும்படி சைகை செய்தாள்.

அவள் இப்போது இருப்பது மனித உடலில், பவளனோ எந்த யாளி கைக்காப்பும் இல்லாமல் இருக்கிறான். யாரேனும் இவர்களைப் பார்த்தால், இருவரும் ஆண், பெண் மனித யாளிகளாகவே எண்ணுவர்.

பூமியைப் போல, இளம் வயது வேறூபால் கொண்ட இரு மனித யாளிகள் ஒன்றாக இரவில் இருப்பது தவறாக யாளி உலகிலும் எண்ணுவர். இதுவே பவளனுக்கு பதிலாக முகிலன் இருந்தால் இதுபோல மறைந்து எதுவும் செய்ய வேண்டியதில்லை.

அதனோடு இந்த வீட்டில் இருப்பர்கள் நந்தனை இன்னும் பார்க்கவில்லை. அதனால் அன்னிச்சை செயலாக எச்சரிக்கை உணர்வுடன் நந்தனை மறைந்திருக்க சொல்லிவிட்டு, கதவைத் திறந்து விதுனாவிடம் பேசினாள்.

பவளநந்தனும் எந்தக் குறப்பாடும் இல்லாமல், அவந்திகாவின் செய்கையில் சின்னசிரிப்பை உதிர்த்து அவள் சொன்னதுப் போலச் செய்தான்.

இன்னும் அவந்திகாவின் அறையில் விளக்கு எரிந்திருந்ததால், விதுனாவின் தாய் அவந்திகா ஏதோ வேலையாக இருப்பதாக எண்ணி, இவ்வளவு நேரத்தில் மீண்டும் பசித்திருக்கும் என்று விதுனாவிடம் பால் கொடுத்து அனுப்பியிருந்தாள்.

விதுனாவிடம் புன்னகையுடன் ஓரிரு வார்த்தை சொல்லிவிட்டு, அவள் கையிலிருந்து பாலை வாங்கிக் கொண்டு அவளிடம் தன்னைப் பற்றிக் கவலை இல்லாமல் தூங்கச் சொல்லி அனுப்பினாள் அவந்திகா.

விதுனா சென்றதும் கதவை அடைத்துத் தாழிட்டவள், கையிலிருந்த பாலை அங்கிருந்த டீபாய் மீது வைத்தாள். பின் திரும்பிப் பவளநந்தன் இருந்த திசை நோக்கிப் பார்த்தாள்.பார்த்தவள் அவன் என்னவென்று யோசிக்கவும் நேரம் தராமல் தன் கொடியை அவளிலிருந்து செலுத்தி, “கொடி, அவன் கைகளைப் பற்றிக் கட்டிடு” என்றாள்.

கொடியும் அவன் வலது கை மணிக்கட்டை பற்றி அவள் அருகில் இழுத்தது. எதிர்பாராமல் இழுக்கப்பட்டத்தில் அவந்திகாவினை மோதாமல் ஒரு கை அளவு இடைவெளியில் தடுமாறி, அவள் கண்களை நோக்கி நின்றான்.

அவந்திகாவும் கொடி இப்படி அவனைத் தன் அருகில் இழுக்குமென்று எண்ணவில்லை. திகைத்து அவள் அவன் கண்களை நோக்கினாள். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்திருக்கும் வேளையிலே அவனது மற்றோரு கையையும் இழுத்துப்பிடித்து கொடி ஒன்றாகக் கட்டியது.

சில வினாடியில் அவந்திகாவிடமிருந்து சற்று விலகி நிற்க எண்ணி நகர்ந்தவன் அப்போதுதான் தன் இரு கைகளையும் எதற்கும் பயன்படுத்த முடியாதப்படி கொடி இழுத்து பிடித்திருப்பதை பார்த்தான். இப்படி அவந்திகா செய்யக் கூடுமென்று அவன் நினைக்கவில்லை.

அவன் திகைத்து, திகைப்பு மாறாமல் அவளை அவனைப் பார்த்தான். அவன் பார்த்திருக்கும் போதே, அவந்திகா அவனிலிருந்து அவள் விழியை மாற்றி, தன் இடது கையில் கொடி கையைவிட்டு நழுவாதப்படி பற்றி, தன் வலது கையால் பவளனின் கை மணிக்கட்டை பற்றிக் கண் மூடினாள்.

அவளது கையிலிருந்து ஆன்மீக ஆற்றலை அவனுள் செலுத்தி அவன் எந்த வகை யாளி என்று அறிய முயன்றாள். அவளது ஆன்மீக விளிப்பு(spiritual Conscious)(2) அவனது நாடி நரம்பில்லெல்லாம் பாய்ந்து அவன் பூர்வீகம் அறிய பரப்பரத்தது.

அவன் உடலெங்கும் சென்ற அவளது ஆன்மீக விளிப்பு, எங்கும் எந்த யாளி வகை சார்ந்த தொடர்பும் அவனுள் கண்டுபிடிக்க முடியாமல் சோர்ந்து துவண்டு மீண்டும் அவந்திகாவினுள் சங்கமிக்க நினைத்துச் சோர்வுடன் திரும்பியது.

அப்போது அவள் காதருகே, “என் ஆன்மீக இதய வேரில்” என்றது நந்தனின் கனத்த குரல். கூடவே அவளது ஆன்மீக விளிப்பு செல்வதற்கு வழிப் போல அவள் முன்னோக்கி ஒரு ஒளிபாதை நந்தனின் நரம்பில் உண்டானது.

அவனது வார்த்தைகளைக் கேட்ட அவந்திகா கண்கள் மூடியிருந்தப் போதும் திகைத்தாள். அவள் ஆன்மீக இணைப்பு முன்னோக்கியும் செல்லாமல் பின்னோக்கியும் செல்லாமல் இருக்கும் இடத்திலே அவன் உடல் நரம்பில் அப்படியே நின்றது.

‘ஆன்மீக இதய வேர் ஒவ்வொரு யாளியின் பூர்வீக உருவில் அவர்களின் நிறத்திற்கு ஏற்ப இருக்கும். அதாவது, சிம்மயாளியின் ஆன்மீக இதயவேர் தங்க நிறத்திலான சிங்க உருவில் இருக்கும். அதுபோல, பரியாளியின் இதயவேர் வெள்ளைநிறத்திலான குதிரை உருவில் இருக்கும்.

எந்த யாளிக்கும் அவர்களின் ஆன்மீக இதய வேர், மிக முக்கியமான ஒன்று. அதனை எளித்தில் யாராலும் ஆன்மீக விளிப்பில் கூட நெருங்க முடியாது. மருத்துவர்களிடமும் உயிர் போகும் நிலையில் கூட எந்த யாளிகளும் அதன் இதய வேர் இருக்கும் இடத்தைக் காண்பிக்க மாட்டார்கள்.

ஆனால் இந்த நந்தன் எனக்கு இதய வேர்மூலம் யாளி வகையை அறிய முடியும் என்பதை நினைவூட்டியது மட்டுமல்லாமல், என் ஆன்மீக விளிப்பு எந்தத் தடையும் இல்லாமல் செல்ல அவனுள் பாதையும் ஏற்படுத்திக் கொடுக்கிறான்.’ என்று நினைத்தாள்.

அதனோடு, ‘இவனுக்குத் தன் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால், இப்படி எதிர்பு இல்லாமல் ஆன்மீக இதய வேரைக் காண்பிக்க வேண்டும்.’ என்று நினைத்தாள். நினைத்தவுடன் அவள் கன்னங்களும் காதுமடலும் காரணமின்றி சிவந்து போனது.

அவளையும் மீறி அவளது ஆன்மீக விளிப்பு அவன் ஏற்படுத்திய ஒளி பாதையில் முன்னோக்கி சென்று அவனது ஆன்மீக இதய வேர் இருக்கும் இடத்தை அடைந்தது. அங்கு அவள் முன் தெரிந்த உருவம் பார்த்த அவந்திகா திகைத்துப் போனாள்.

அவள் எதிரில் தெரிந்தது ஆறு வெவ்வேறு உருவங்கள் கொண்ட மிருக உருவங்கள் ஒன்றிணைந்து உருவான உருவம். ‘இவனது பூர்வீக உருவம் கலப்பின வகையினது. தந்தமும் மூக்கும் மாதங்கயாளியது, கொம்புகள் மகரயாளியது, காதுகள் பரியாளியது, உடலும் கால்களும் சிம்மயாளியது. கண்கள் மனித யாளியது. ஆனால் அந்த இறகுகள்? எந்த வகை யாளியது?’ என்று அவளுள் கேள்வி எழுந்தது.

அந்நிய ஆன்மீக சக்தி ஆன்மீக இதய வேரினுள் வந்துவிட்டத்தை எதிர்த்துப் போரிடாமல், அந்த ஆன்மீக இதய வேரின் உருவம், அவளைக் கண்டதும் அந்த 6 உருவங்களின் சங்கமமாக இருந்த அந்தப் பெரிய உருவம் சிதைந்து 6 குட்டி உருவமாக மாறி அவளுக்காகவே காத்திருப்பதுப் போல் அவளை நோக்கி ஓடி வந்தது.

முதல் உருவமாக, உடல் முழுதும் கரு நிறமாக இருந்த குட்டி குதிரை காற்றைப் போல அவளருகில் ஓடி வந்து ஆன்மீக விளிப்பு மூலம் நந்தனுள் இருந்த அவளது இடையில் தன் தலையை வாஞ்சையாகத் தடவியது.

அடுத்து, பால் மனம் மாறாத இரண்டு வயது மனித குழந்தை தத்தி தத்தி ஓடி வந்து அவளது காலைப் பற்றிக் கொண்டது.

கையளவே ஆன செந்நிற சிங்ககுட்டி ஓடி வந்து அவளது பாதத்தின் அருகில் நின்று அவளைத் தூக்க சொல்லி உறுமி அவளது ஆடையைக் கடித்து இழுத்து அழுச்சாட்டியம் செய்தது.

வெள்ளை நிற ஆட்டுக்குட்டி அவள் எதுவும் யோசிக்குமுன்னே அவள் கையை நோக்கித் தாவிக் குதித்தது. அன்னிச்சை செயலாக அவந்திகா அதனைக் கையில் பிடித்துக் கொண்டாள்.

என்ன இனமென்றே தெரியாத சிறிய பறவை தட்டு தடுமாறி பறந்து வந்து அவந்திகாவின் தோள்மீது அமர்ந்து அவள் கழுத்து வளைவில் உரசியது.

கடைசியாகத் தடுமாறி விழுந்து எழுந்து வந்த மாதங்கக்குட்டி(யானை) அவளை நெருங்க வழி இல்லாமல் எல்லா பக்கமும் அதன் மற்றொரு உருவங்கள் இருக்க சோகமாக ஒரு பிளிறளை விட்டு அவள் முன் சோகமாகத் தட்டென்று அமர்ந்துக் கொண்டது.

இதனைப் பார்த்த அவந்திகாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆறுருவ பூர்வீக உடலைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீளாத அவந்திகா, யாரென்றே தெரியாத என்னிடம் இப்படி செல்லம் கொஞ்சிக் கொண்டு நிற்கும் இந்த ஆறு குட்டி உருவங்களை எப்படி கையாள்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை.

அவற்றின் அன்பில் கொஞ்சம் தினறித்தான் போனாள். அவளது எண்ணங்கள் கண்கள் மூடியிருந்தப் போதும் அவள் முகம் காண்பிக்க, அவள் எதிரில் அவள் முகம் பார்த்திருந்த பவளநந்தன் சின்ன சிரிப்பை உதிர்த்து அதனை இரசிக்க தவறவில்லை.

தன்னை உரசிக் கொண்டு நிற்கும் இந்தக் குட்டிகளை உதறி தள்ளிவிட்டு ஓடிவிடலாமா என்று கூட அவந்திகா நினைத்தாள். அப்போது அவள் காலினை பற்றியிருந்த குழந்தை கிளுக்கி சிரித்தது. அதன் சிரிப்பில் குனிந்து பார்த்த அவந்திகா திகைத்துப் போனாள்.

குழந்தையாக இருந்த போதும் அந்தச் சிரிப்பு நந்தனின் சின்ன சிரிப்பை நினைவுறுத்த, “பவளநந்தன்.!” என்று அழைத்தாள். அவள் அழைத்ததும், அந்த ஆறு குட்டி உருவங்களும் ஒளி துகள்களாக ஒன்றிணைந்து பவளநந்தனின் தற்போதைய மனித உருவிற்கு மாறி அவள் முன் நின்றது.

அதனைப் பார்த்தவள் திகைத்துப் போனாள். “மனித உருவில் ஆன்மீக இதயவேர்.” என்று முனுமுனுத்தாள்.

அவள் முன் நின்ற பவளனின் ஒளி வடிவான ஆன்மீக இதயவேர், “இளவரசி.” என்றது. அதனைக் கேட்ட அவந்திகா, ‘இதற்கு மேலும் என்னால் முடியாது.’ என்று நினைத்து, உடனே நந்தனின் உடலிலிருந்து தன் ஆன்மீக விளிப்பை வேகமாகத் தன்னுள் இழுத்துக் கொண்டாள்.

அவனைப் பற்றியிருந்த கையினை விலக்கி, கண்களைத் திறந்தாள். அவனது கையைக் கட்டியிருந்த கொடியிடம், “நந்தனை விடுவித்துவிட்டு என்னிடம் வா.” என்றாள்.

அவனை விடுவித்துவிட்டு அவனிடமிருந்து தள்ளி வந்தப் போதும் எங்கோ பார்த்தவிதம் இருந்த அவள் மனதிலிருந்து, அழகே உருவான அந்த 6 குட்டி உருவங்களும் இன்னும் விலகவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னிடம் வர முடியவில்லையே என்று அந்தக் குட்டி யானை சோகம்போல முகத்தை உடனே மாற்றிக் கொண்டு பொத்தென்று அவள் எதிரில் அமர்ந்தது இன்னமும் அவள் கண்ணைவிட்டு நீங்கவில்லை.

அதனை நினைத்த அவள் இதழ் அவளையும் அறியாமல் விரிந்தது. கொடி விடுவித்ததும், நந்தன் பின்னோக்கி சென்று அந்த அறையின் ஒரு சுவரில் சாய்ந்து ஒரு காலை மடக்கி பின் சுவரில் பதித்து, தன் கைகளை உடலுக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு அவளைப் பார்த்திருந்தான். அவனது இதழ்களும் அவள் இதழ் விரிப்பில் விரிந்தது.

பின், மென்னகையுடன், “இளவரசி.?” என்று அழைத்தான் நந்தன்.

அவனது விளிப்பில் முந்தைய நினைவில் இருந்த அவந்திகா மென்னகையுடனே அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் கேலியாக அவளைப் பார்ப்பதாக உணர்ந்த அவந்திகா, “ம்கும்.” என்று தொண்டையை செறுமி முகத்தை மாற்றி, சூழலை இயல்பாக்க முயன்றாள்.

கூடவே எதிரில் நிற்கும் நந்தனிடம் பல கேள்விகள் கேட்க வேண்டும் என்று நினைவு வந்தவளாக, “நந்தன். யார் நீங்க? எப்படி உங்களால் மனித உருவில் ஆன்மீக இதய வேர் உருவாக்க முடிந்தது. இதுவரை நான் படித்ததிலும் சரி.

என் குரு சொல்லித் தந்ததிலும் சரி, மனிதயாளிகளால் ஆன்மீக இதய வேர் உருவாக்க முடியாது. அப்படி இருக்க உங்களால் மட்டும் எப்படி. அதனோடு, அந்த ஆறு உருவங்கள் கலந்த உருவம்?” என்று கேள்வியை முழுதும் முடிக்காமல் அவனிடம் கேட்டாள்.

அவளது வார்த்தைகளை இடைமறித்து நந்தன், “இளவரசி. நீங்க நினைப்பது சரிதான். நான் கலப்பின யாளி. என் இரத்ததில் ஆறு வகையான யாளிகள் இருக்கிறது. அதனால் என்னால் எந்த வகை யாளியாகவும் இருக்க முடியும். அதனால் கைக்காப்புக் கொண்டு என்னை நான் கட்டுபடுத்த வேண்டிய அவசியமில்லை.” என்று அவளைப் பார்த்துப் புன்னகை மாறாமல் சொன்னான்.

அதனைக் கேட்ட அவந்திகா, “இது எப்படி சாத்தியம். கலப்பின யாளிகள் மனித யாளிகளை விடவும் சக்தி குறைந்தவர்கள் ஆயிற்றே! அவர்களால் இரு உருவில் இருப்பதே கடினம் ஆயிற்றே!” என்றாள்.

அதற்குச் சின்ன சிரிப்பை உதிர்த்த நந்தன், “நான் ஒரு விதிவிலக்கு என்று வைத்துக் கொள்ளுங்க.” என்றான்.

அவந்திகா, “ஆ…” என்று திகைத்துப் போனாள். கூடவே மற்றொன்று தோன்ற, “அ… அது ஏன் உங்களது கலப்பின உருவில், இறகுகள் இருந்தது. அது, அந்த, அந்தப் பறவை. அது என்ன?” என்று கேட்டாள்.

நந்தன், “அதுவும் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த யாளி வகைகளுள் ஒன்று. அதன் பெயர் தீப்பறவை(phoenix) யாளி(4). அதனை என்னுள் விழிக்கச் செய்ய நான் நெருப்பில் குளித்து எழுந்தேன்.” என்று வெதுநீரில் குளித்தெழுந்ததுப் போல இயல்பாகச் சொன்னான்.

இமை உயர்த்தி அவனைத் திகைப்பும் அதிர்ச்சியுமாக முகம் வெளுத்துப் பார்த்தாள். அவளது முக மாற்றத்தைப் பார்த்த நந்தன், அது பொறுக்க முடியாமல் அவள் அருகில் வந்து, “இன்று நீங்கத் தெரிந்துக் கொண்டது போதும். அந்தப் பாலை அருந்திவிட்டு, நீங்கத் தூங்குங்க.

மற்றது நாளைப் பேசலாம்.” என்று அவள் கைப்பற்றி அழைத்துச் சென்று மெத்தை மீது அமர வைத்து அவள் கையில் பாலை கொடுத்தான்.

அவளும், அவன் கையில் கைப்பாவைப் போல அவன் கையிலிருந்து பாலை வாங்கி அருந்த ஆரம்பித்தாள். அவளுக்கும் அவனிடம் மேலும் எதுவும் கேட்டுக் குழம்பிக் கொள்ள அப்போது துணிவில்லை.

பாதிப் பால் அருந்தியிருக்கும் போதே ஏதோ நினைவுவந்தவளாக நிமிர்ந்து அவனைப் பார்த்த அவந்திகா, “நந்தன், நீ…நீங்க என் சிநேகிதர்கள் முன் ஏதாவது ஒரு வகையாளியாக மட்டும் கைக்காப்புடன் இருக்க முடியுமா? என்னாலே உங்களது உண்மையை ஜீரணிக்க முடியவில்லை. அவர்களுக்கு இந்த உண்மையை எப்படி!?” என்று

அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “இளவரசி, உங்க விருப்பம் எதுவோ, அதன்படி செய்ய நான் காத்திருக்கிறேன்.” என்று அவள் முன் ஒரு கால் முட்டிப் போட்டு மறுகால் நிமிர்த்தி, நெஞ்சில் தன் வலது கையை வைத்து, தன் முதுகுப் பின் இடது கையை வைத்து, தன் சிரம் தாழ்த்தி சொன்னான்.

அதனைப் பார்த்த அவந்திகாவின் உடலெல்லாம் புல்லரித்தது. அவள் இளவரசியாக இருக்கும்போது சேவகர்கள் அவள் கட்டளையை ஏற்கும்போது இதுபோல் பணிந்து ஏற்பர். அந்த நினைவில் இருந்தவள் அவன் சொன்னதை கேட்டதில் இன்னமும் நெகிழ்ந்து போனது.

அவள் புன்னகை மாறாமலே, “நந்தன். நீங்கப் பவளன் உருவில் இப்படி செய்திருந்தால் எனக்கு எதுவும் பேதமாகத் தோன்றியிராது. ஆனால் நந்தன் உருவில் இப்படி முட்டிப் போட்டுப் பேசுவதை பார்க்கும்போது எனக்கு இது உண்மைதானா என்று தோன்றுகிறது.” என்றாள்.

அவள் குரலில் நிமிர்ந்த நந்தன், அவள் புன்னகை பார்த்து, எழுந்து நின்று, அவனும் இதழ் விரித்து, தன் கைகளை விரித்து, “நான் என்ன செய்வது இளவரசி. பவளனிடம் இயல்பாக இருக்கும் நீங்க நந்தனிடம் அப்படி இல்லை. எனக்கே(நந்தன்) என்மீது(பவளன்) பொறாமை வரும்படி செய்துவிட்டீங்க” என்று பெருமூச்சுவிட்டான்.

அதனைக் கேட்ட அவந்திகா, அவளையும் அறியாமல் வாய்விட்டுச் சிரித்துவிட்டாள். பின் ஒருவாறு தன்னை கட்டு படுத்தி, “இதில் என் தவறு என்ன? நந்தனாக இருக்கும்போது பதிலளிக்காமல் அந்த மும்பை தங்கும் விடுதியில் பட்டாம்பூச்சியாக மாறியது யார்?” என்றாள்.

அதற்குக் கண்ணில் குறும்புடன், “அது உங்க தோழி வர இருந்த காரணத்தால் நான் செல்ல வேண்டிய கட்டாயம்.” என்றான் அன்றைய செயலுக்குக் காரணமாக.

சற்று நிறுத்தி, “நீங்கப் பவளனிடம் இயல்பாக இருப்பதால், நான்தான் நந்தனும் என்று என்னால் வாய்விட்டுச் சொல்ல முடியவில்லை. இதற்கு மேலும் மறைத்தலாகாது என்றுதான் நான் இன்று என் முழு பெயரைச் சொன்னேன்.

என்ன இருந்தும் யாளி உலகில் இல்லாத பழக்கமாகச் சோடாபுட்டி கண்ணாடியுடன் என்னால் உங்களுடன் இருக்க முடியாது பாருங்க?” என்றான் தன்னிலை விளக்கமாக.

அதனைக் கேட்ட அவந்திகா முன்பிருந்த கோபம் மறைந்தவளாக, “ஹா…ஹா…ஹா…” என்று மீண்டும் நகைக்க ஆரம்பித்தாள்.

அவள் புன்னகைப்பதை பார்த்த நந்தன், அவள் அமைதியாகக் காத்திருந்து பின், “நான் எந்த யாளியாக உங்களுடன் இருக்க வேண்டும்.?” என்று கேட்டான்.

அவன் கேள்வியில்,“ம்ம்!…” என்று யோசித்த அவந்திகா, அந்தக் குட்டி யானையின் நினைவு வந்தவளாக, “மாதங்க யாளி.” என்றாள்.

அவள் கூறியதும், நந்தனின் வெள்ளை நிற சட்டை, சாம்பல் நிறத்திற்கு மாறியது. அவனது கையில் சாம்பல் நிற கைக்காப்பு உருவாகியது. பின், “இப்போது சரியா?” என்று கேட்டான்.

அவள் கண் முன்னே ஏற்பட்ட மாற்றத்தில் திருப்த்தியுற்றவளாக, “ம்ம்.” என்றாள். கூடவே, “இன்னும் ஒரே ஒரு மாற்றம் தேவை. அதற்கு முன் என் கேள்விக்குப் பதிலும் தேவை.” என்றாள்.

அவளுக்குப் பதில் சொல்லாமல், அவள் என்ன கேட்க இருக்க போகிறாள் என்பதிய யூகித்தவன் போல, “உங்க சிநேகிதர்கள் சொன்ன அந்த இரட்சசன் நானே. அந்த நந்தன் நான்தான். அதனால் நான் பவளன் என்ற பெயரிலே உங்க சிநேகிதர்களுக்கு நான் அறிமுகமக வேண்டும். அதுதானே.” என்றான் முகத்தில் சிறு மாற்றமும் இல்லாமல்.

அவந்திகாவுமே 90 சதம் இவன்தான் அந்த இரட்சசன் என்று வதந்தியாக அழைக்கபடுபவன் என்று யூகித்திருந்தாள். அதனைச் சரி என்பது போல லேசாகத் தலை அசைத்து, ஏதோ யோசிப்பதுப் போல “ம்ம். சரி தான்.” என்று தன் முகவாயில் தன் கை முஷ்டியை வைத்தாள்.

பின் நிமிர்ந்து, “பவளனாக நாளை உங்களை அவர்களுக்கு அறிமுக செய்கிறேன்.” என்றாள்.

அவன், “ம்ம்…” என்று சின்ன சிரிப்பை உதிர்த்தான்.

பின், “இளவரசி, உங்க விருப்பப்படி எல்லாம் செய்யலாம். உங்களுக்கு மாப்பிள்ளையாக நான் நடிக்க இருப்பது உள்பட.” என்றான் புன்னகை மாறாமல்.

அவன் மாப்பிள்ளை என்றதும் அவந்திகாவின் கன்னங்கள் கதகதக்க ஆரம்பித்தது. கடினப் பட்டு முகமாற்றத்தை தடுத்தாள். இருந்தும் அவள் காது மடல் சிவந்துவிட்டது.

அவன் அவளது பதிலுக்காகக் காத்திருப்பது போல அவளைப் பார்த்திருக்க, அவள் தலை தாழ்த்தி, “கவ்…கவ்…” என்று இருமுறை வரட்டு இருமலாக இரும்பி, “ம்ம்… சரி சரி.” என்றாள்.

அவள் விழி மறைவில் சிலுமிசம் செய்யும் குழந்தைப் போல நந்தனின் இதழ் ஒரு புரமாக விரிந்து கண்ணில் ஒளி வெட்டு ஏற்பட்டு மீண்டது.

Author Note:

(1) அன்று இடம்மாற்றும் சக்கரத்தில் இதழணைத்தப் போது நந்தனிடம் எந்த மாற்றமும் இல்லை. ஏனென்றால் அவன் அந்த இதழணைப்பு நடக்க இருப்பது ஏற்கனவே அவனுக்குத் தெரிந்த ஒன்று. ஆனால் இன்று எதிர்பாராத அவந்திகாவின் இந்தச் சின்னக் கன்னத்தின் வருடல் அவனை மிரளச் செய்துவிட்டது.

(2) இங்கு ஆன்மீக விளிப்பு என்பது, அவளது consciousness.அவளே சிறிய உருவில் அவனது நரம்புகளில் பயணிப்பதுப் போலக் கற்பனை செய்துக் கொள்ளுங்க.

(3) கலப்பின யாளியான நந்தனின் பூர்வீக உருவம்.

(4) தீப்பறவை அல்லது பீனிக்ஸ் எனபது நான் கற்பனையாக வைத்த பெயர். உண்மையில் பறவை வகை யாளிகளை எப்படி அழைப்பர் என்று தெரியவில்லை.