யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 28

851

அத்தியாயம் – 28

சில வினாடி அமைதிக்குப் பின் ஆன்ம இணைப்பில், “இளவரசி…” என்றது பவளனின் குரல்.

பவளனைத் தொடர்பு கொள்ள நினைத்து அவனை அழைத்துவிட்ட போதும் அவந்திகா, அவன் உடனே தொடர்பில் பேசக் கூடுமென்று எண்ணவில்லை. அதனால் அவன் குரல் கேட்டதும் அவளையும் அறியாமல் அவள் முகம் மலர்ந்தது.

குரலில் ஒரு பொழிவுடன், “பவளன் உங்களிடம் சிலது கேட்க வேண்டும். உங்களுக்குத் தெரிந்தால் உதவ முடியுமா?” என்று கேட்டாள்.

அதனைக் கேட்ட பவளன் சின்ன சிரிப்பை உதிர்த்து, “இளவரசி, நீங்க எது கேட்டாலும் நான் உங்களுக்கு உதவுவேன். நீங்க எதுச் செய்தாலும் உங்களுடன் இருப்பேன். அதனால் தயங்காமல் கேளுங்க, தயக்கம் இல்லாமல் எதுவும் செய்யுங்க.” என்றான்.

பவளனின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவந்திகாவின் மனதில் சொல்லொணாத இதத்தை பரப்பியது. கூடவே, ‘இப்படி பவளன் சொல்ல வேண்டுமென்றால், அவனுக்கு என்மீது எவ்வளவு நம்பிக்கை இருக்க வேண்டும்.!’ என்று வியந்தாள். அவளையும் அறியாமல் அவனைச் சார்ந்து இருக்க அவள் மனம் துடித்தது. அவள் முகம் காரணமே இல்லாமல் சிவந்தும் போனது.

உடனே தொண்டையை செருமி, அவளது மாற்றத்தை மறைக்க முயன்று, “அது…உங்களுக்கு உயிர் உறுஞ்சும் சக்கரம்பற்றித் தெரியுமா?” என்று மெலிந்து விட்ட குரலில் கேட்டாள்.

பவளன், “ம்ம்…” என்று யோசிப்பதுப் போல் அவனது குரல் கேட்டது. பின், “தெரியும். உயிர் உறிஞ்சும் சக்கரம் மூலமாக ஒருவரின் சம்மதமுடன் அவர்களின் உயிரைப் பறிக்க முடியும். கிட்டத்தட்ட நரபலி கொடுப்பதுப் போல.” என்றாள்.

இது அவந்திகாவிற்கும் தெரிந்த ஒன்றுதான். அதனால், “ம்ம். வேறேதும் தெரியுமா?” என்றாள்.

பவளன், “ம்ம். இந்த உயிர் உறிஞ்சும் சக்கரம் மூலமாக ஒருவரின் உயிரை முழுதும் அழிக்காமல், பலரின் உயிரின் ஒரு பகுதியை மட்டும் பிரித்து ஒன்றாகச் சேர்த்து ஒரு முழு உயிரை உருவாக்கி அதனைப் பலியாகக் கொடுக்க முடியும்.

இப்படி செய்வதால், வெளிப்படையாக யாருடைய உயிரும் பரி போகாது. ஆனால் அவர்களின் உயிரில் ஒரு குறைப்பாடு அவர்கள் இறக்கும் வரை இருக்கும். அவர்களின் உயிரில் ஒரு பகுதி இல்லையென்று பரிசோதித்தாலொழிய அவர்களாலே கூட அவர்களின் குறைப்பாட்டின் காரணம் அறிய முடியாது.” என்றான்.

இதனைக் கேட்ட அவந்திகாவின் மனதில் ஒரு ஒளி உண்டானது. இருந்தும் பவளன் பேசியதில் பாதி புரியவில்லை. தெளிவு பெற வேண்டி, தன் நெற்றி புருவம் சுருக்கி, தன் கை முஷ்டியை முகவாயில் வைத்து, “ம்ம். உயிரின் ஒரு பகுதி என்றால்? புரியவில்லையே!” என்றாள்.

பவளன் மென்னகையிட்டு, “சொல்கிறேன் இளவரசி.” என்று சொல்ல ஆரம்பித்தான். “ஒரு உயிரை இரண்டு வேறு பிரிவுகளாகவும், 10 சிறிய பகுதிகளாகவும் பிரிக்கலாம்.(1) ஒன்று தூய ஆன்மா (Ethereal Soul). மற்றொன்று சரீர ஆன்மா (Corporal Soul)(2).

தூய ஆன்மா, யாளி இறந்தப் பிறகும் உயிருடன் இணைந்திருக்கும். உயிர் சொர்க்கத்துக்கு போனாலும், நரகத்துக்கு போனாலும் அல்லது மறுப்பிறப்புக்கு போனாலும் அது உடன் இருக்கும். இது மனிதனின், உயிர்ப்பு(Spirit), உணர்வு(consciousness) மற்றும் அறிவுக்கு(intelligence) காரணமாகிறது.

சரீர ஆன்மா, யாளியின் உடல் தாயின் கருவாக உருவாகும்போது உருவாகிறது. பின் அவன் இறக்கும்போது இது மண்ணுள் உடலுடன் சேர்ந்து அழிந்துவிடுகிறது. இது நம்மால் தொட முடிய கூடிய உடல்.

இதில் தூய ஆன்மாவை மூன்று பகுதிகளாக (உயிர்ப்பு(Spirit), உணர்வு(consciousness) மற்றும் அறிவு(intelligence) பிரிக்கலாம். சரீர ஆன்மாவைக் கண்கள் இரண்டு, காதுகள் துவாரங்கள் இரண்டு, மூக்கு துவாரங்கள் இரண்டு, வாய் என்று ஏழு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கலாம்.

இப்படி இந்த மூன்று தூய ஆன்மாவும், ஏழு சரீர ஆன்மாவும் இணைந்தே ஒரு முழு உயிர் உருவாகிறது. இந்த 10 பகுதிகளில் ஒன்று குறைந்தாலும், உயிருடன் இருக்கலாம், ஆனால் அவர்களது உயிர் முழுமையற்றதாகக் குறையுடன் இருக்கும். (3)

இதைதான் உயிரின் ஒரு பகுதி என்று சொன்னேன்.” என்று நெடிய நீண்ட விளக்கம் சொன்னான்.

அதனைக் கேட்ட அவந்திகா வியப்பில் புருவங்கள் உயர்த்தி, “அப்படியென்றால், ஒருவரின் ஒரு கண் பார்வை கருப்பாவை அற்று இருந்தால், அவரின் சரீர ஆன்மாவின் ஒரு பகுதி உறிஞ்சபட்டுள்ளது என்று சொல்லலாமா?” என்று கேட்டாள்.

பவளன், “ஆமாம். அவரின் உடலில் இப்போது 9 ஆன்மா மட்டுமே இருக்கும். ஆனால் அது அவரைக் கொல்லாது.” என்றான்.

இதனைக் கேட்டதும் “ஓ…” என்ற அவந்திகாவிற்கு எல்லாம் வெளிச்சம் போட்டது போலப் புரிந்தது. “ஆக, முதல் 7 நபர்களின் உடல் உறுப்புகள் பாதித்திருப்பது அவர்களின் சரீர ஆன்மாவின் ஒரு பகுதி உயிர் உறிஞ்சும் சக்கரத்தால் உறிஞ்சப் பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ளது.

அடுத்த இருவருக்கு வெளி உடலில் பாதிப்பு இல்லை. ஆனால் அவர்களுக்குத் தூய ஆன்மாவின் பிரிவான, உயிர்ப்பு(Spirit), உணர்வு(consciousness) மற்றும் அறிவு(intelligence) இதில் ஏதாவது ஒன்று பாதிப்பிற்கு உள்ளாகி இருக்க வாய்ப்பிருக்கு.

இவையெல்லாம் செய்யக் கூடியவன், உண்மையில் இந்த 10 பெண்களையும் கொல்ல எண்ணவில்லை. ஒவ்வொரு பெண்களிடமிருந்து ஒரு ஆன்மாவின் பகுதியை உறிஞ்சி ஒரு முழு ஆன்மாவாக உருவாக்கி அப்படி உருவாக்கப்பட்ட புது உயிரைப் பலியிட எண்ணியிருக்கிறானா?” என்று வாய்விட்டே முனுமுனுத்தாள்.

அதனைக் கேட்ட பவளன், “10 சிறிய பகுதிகளை இணைத்து உருவான உயிரைப் பலியிடவும் பயன்படுத்தலாம். அல்லது அப்படி உருவான இந்த உயிரை ஏற்கனவே இறந்த ஒருவரின் உடலுள் இணைத்து, இறந்தவரை உயிர்பிக்கவும் செய்யலாம்.” என்றான் கேட்காத தகவலாக.

“என்ன?!” என்று திகைத்த அவந்திகா, “உயிர் உறிஞ்சும் சக்கரம் ஒருவரை இறக்க செய்யும் என்று தெரியும். ஆனால் இறந்தவரை உயிர்க்க செய்யுமா? இது எப்படி சாத்தியம்?” என்று கேட்டாள்.

அதற்குப் புன்னகைத்த பவளன், “இளவரசி, இது சாத்தியம். ஆனால் இதனைச் செய்ய யாரும் முயன்றதில்லை. நான் ஒருமுறை ஒரு பழங்கால ஓலை சுவடியில் இதுகுறித்து படித்திருக்கிறேன்.” என்றான்.

அவந்திகா டீபாய் மீதிருந்த தண்ணீரை எடுத்து அருந்தியவிதம், “என்ன அது?” என்று கேட்டாள்.

பவளன், “உயிர் உறிஞ்சும் சக்கரத்தை, உயிர் மீட்கும் சக்கரமுடன் (Soul Retrieving Array) இணைத்து நம்மால் இறந்த உயிரை மீட்க முடியும். ஆனால் இந்த உயிர் மீட்கும் சக்கரம் இயற்கைக்கு எதிரானது என்பதாலோ என்னமோ, பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தடைச் செய்யபட்ட(Forbidden)சக்கரமாக ஒதுக்கபட்டுவிட்டது.

அவற்றைப் பயன்படுத்த வேண்டுமென்றால் அதனைப் பயன்படுத்துபவர்கள் அதற்குச் சமமாக ஏதேனும் தியாகம் செய்ய வேண்டி இருக்கும்படி நம்முன்னோர்கள் இயற்கை நிதியை யாளி உலகில் ஏற்படுத்தி இருக்கின்றனர். அதனால் பொதுவில் இதனை யாரும் பயன்படுத்தாமல் விட்டுக் கால போக்கில் அப்படி ஒன்று இருப்பது பலரும் அறியாமல் போனது.

இதில் விநோதம் என்ன வென்றால், மற்ற சக்கரங்களைப் போல இதனைக் காற்றில் வரைந்து பயன்படுத்த முடியாது. தரையில் 5 முனைக் கொண்ட நட்சத்திர வடிவில், உயிர் உறிஞ்ச வேண்டிய உடல்களை அந்த நட்சத்திர முனைகளில் வைத்து அதனைக் கொண்டு உருவாக்க வேண்டும்.

அதில் ஈடுபடுவர்கள் 10 செந்நிற பௌர்ணமி தினங்களில் விரதம் இருந்து, ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஒரு ஆன்மாவின் பிரிவாக 10 ஆன்மாவின் பிரிவுகளைச் சேகரிக்க வேண்டும். பின் அதனை அந்த நட்சத்திரத்தின் நடுவில் உள்ள இறந்த உடலுடன் 10 ஆன்மாவையும் இணைத்து, 10 நாழிகைகள் அதனை அசைவு இல்லாமல் காத்தால் மாண்டவர் மீள்வர்.

என்று அந்தச் சுவடியில் பார்த்ததாக நினைவு.” என்று என்றோ படித்ததை நினைவு கொணர்ந்தவன் போல அவந்திகாவின் பல புரியாத முடிச்சுகளுக்குச் சில நிமிடங்களில் விளக்கம் தந்துவிட்டான்.

இதனைக் கேட்ட அவந்திகாவிற்கு முகமெல்லாம் வியர்த்துவிட்டது. தன் வலது பின்னங்கையை நெற்றியில் ஒற்றி எடுத்து, “இந்த உயிர் மீட்கும் சக்கரத்தை உருவாக்க, எப்படிப்பட்ட தியாகம் செய்ய வேண்டி இருக்கும்? அதுகுறித்து ஏதேனும் தெரியுமா பவளன்.” என்றாள்.

பவளன், “அது செய்பவரைப் பொறுத்தது இளவரசி, மாதங்க யாளிகளுக்கு ஒருவிதமானது என்றால் மனிதயாளிகளுக்கு மற்றொருவிதமானது.” என்றான்.

மனித யாளி என்றதும், “என்ன?! மனிதயாளிகளாலும் உயிர் மீட்கும் சக்கரம் உருவாக்க முடியுமா? உயிர் உறிஞ்சும் சக்கரம் உருவாக்கவே அதிக ஆன்மீக சக்தி தேவை படுமே. அப்படி இருக்க உயிர் மீட்கும் சக்கரமும் சேர்த்து என்றால்.? நிச்சயம் அவர்களால் சாத்தியமில்லை.” என்றாள் அவந்திகா.

அதற்குப் பவளன், “சரிதான் இளவரசி. ஆனால் மனிதயாளிகள் மற்ற யாளிகளுடன் பரஸ்பர(Mutual) ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள முடியும். அதனால் மனிதயாளிகள் உயிர் மீட்கும் சக்கரத்திற்காகத் தியாகம் செய்தும், மற்ற யாளிகளி அவர்களின் ஆன்மீக சக்தியால் இந்த இரு சக்கரங்களை உருவாக்கியும் இணைந்து செயல் படலாம்.” என்றான்.

“ஓ…” என்று யோசித்தவள், அப்போதுதான். பவளனிடம் அந்தக் கிராமத்தின் தற்போதைய நிகழ்வை முழு விளக்கமாக எடுத்துச் சொன்னாள். அதன் கூடவே அந்த 10வது பெண்ணாகத் தான் இருக்க போவதாகவும் சேர்த்து சொன்னாள்.

அதனை அமைதியாக “ம்ம்…” என்று கேட்ட பவளன், அவள் 10வது பெண்ணாக இருக்க போவதாகச் சொன்னதில் ஒரு நொடி அமைதியாகி போனான். பின் சில நொடிகளுக்குப் பின், “நிச்சயம் நீங்கதான் அந்தப் பெண்ணாக இருக்க வேண்டுமா?” என்று கேட்டான்.

அதற்கு இதழ் விரித்த அவந்திகா, “ஆம். வேறு வழியும் இப்போது இல்லை.” என்று நிறுத்தியவள், தொடர்ந்து, “நீங்கச் சொன்னதில் எல்லாம் புரிந்த போதும், ஏன் எல்லா பெண்களும் மாப்பிள்ளை பார்த்தப் பின் அப்படி ஆகினர் என்று மட்டும் தெரியவில்லை.

விசாரித்ததில், சிலருக்கு அவர்கள் அப்படி ஆவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பேனும் எப்படியும் திருமணம் நிச்சயம் ஆகியிருக்கிறது. அதனால் இந்த ஒற்றுமையைத் தற்செயலானது என்று ஒதுக்க முடியவில்லை.” என்று தன் கடைசி சந்தேகத்தைச் செய்தியாக அவனுக்குச் சொன்னாள்.

அமைதியாக அவள் சொல்வதை கேட்ட பவளனிடம், அவள் மீண்டும், “இதுகுறித்து நீங்க என்ன நினைக்றீங்க பவளன்?” என்று கேட்டாள்.

பவளன் என்ன யோசித்துக் கொண்டிருந்தானோ தெரியவில்லை, அவந்திகாவின் கேள்விக்கு அவன் உடனே பதில் சொல்லவில்லை.

பவளனிடமிருந்து பதில் வராததும், “பவளன்?” என்று மீண்டும் கேட்டாள்.

பவளன் அவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல் வேறு கேள்வியாக, “இளவரசி, உங்களுக்கு மாப்பிள்ளையாக இருக்க போவது யார்?” என்று நேரிடையாகக் கேட்டான்.

பவளன் இப்படி வெளிப்படையாகக் கேட்கக் கூடுமென்று அவந்திகாவும் நினைக்கவில்லை. அவளும் யாரொருவன் பொய்யாக அவளுக்கு மாப்பிள்ளையாக இருப்பது குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அதனைப் பவளனிடம் சொல்வதில் அவளுக்குள் தயக்கம் ஏற்பட்டது.

“அ…அது…” என்றவள், முகம் சிவந்து, “ஏற்கனவே அந்தப் பெண்ணிற்கு பார்க்கப்பட்டவன்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. எப்படியும் அவனுக்கு எதுவும் நிகழப் போவதில்லை. அதிக பட்சமாக அவனுக்குப் பெண்ணைப் பற்றி நினைவு இல்லாமல் போகப் போகிறது. அது பரவாயில்லை. அது இருக்கட்டும், நீங்க எப்போ வரீங்க.” என்று ஏற்கனவே பதில் தெரிந்த கேள்வியைக் கேட்டுப் பேச்சை மாற்ற முயன்றாள்.

ஆனால் பவளன் அதனைச் சட்டைச் செய்ததாகத் தெரியவில்லை. அவன், “அப்படி சொல்ல முடியாது இளவரசி. அந்த மாப்பிள்ளையாக இருப்பவனுக்கும் ஏதேனும் பாதிப்பு இருக்க வாய்ப்பிருக்கு. நான் சொன்ன அந்தத் தியாகம் ஒருவேளை மாப்பிள்ளைகளின் நினைவு மறப்பதற்கு தொடர்புடன் இருக்கலாம். அதனால் சக்தியற்ற மனித யாளியை மாப்பிள்ளையாக இருக்க சொல்வது நல்ல முடிவல்ல.” என்று அவளிடம் கேட்டான்.

இதனைக் கேட்ட அவந்திகா, “கவ்…கவ்…” என்று இருமுறை வரட்டு இரும்பலாக இரும்பி, கன்னங்கள் சூடேற, “அப்போது என்ன செய்ய? நந்தன் இருந்தால் அவரை மாப்பிள்ளையாக இருக்கச் சொல்லலாம். அவர்தான் இருக்குமிடம் தெரியவில்லையே! அதனோடு நமக்கு வேறு யோசிக்க நேரமும் அதிகமில்லையே!” என்றாள்.

அதனைக் கேட்ட பவளனின் இதழ் விரிந்து சின்ன சிரிப்பு உதிர்ந்தது. ஏனோ அது அவந்திகாவின் காதிலும் தெளிவாக விழுந்து அவள் கன்னங்கள் மேலும் சூடேறியது. இத்தனை வருடங்களில் கற்பனையில் கூடத் திருமணம், மணாளன் என்றேல்லாம் அவள் யோசித்தது இல்லை.

அதுவும் இன்று இந்த மனித உடலின் இரசாயன மாற்றம் என்றும் சொல்ல முடியாமல், தன் சிநேகிதர்களிடம் இயல்பாக இதுபற்றிப் பேசிய போதும், பவளனிடம் பேசியப் போது அவளது நாணத்தை தவிர்க்க முடியவில்லை. அதனால் அவனிடம் என்ன பேசுகிறோம் என்று தெளிவாக உணராமல் உலரினாள்.

அவள் மனம் சில நொடி எங்கோ பறக்க, பவளனின், “நீங்கச் சொன்னது நினைவில் இருக்கட்டும்.” என்ற குரலில் மீண்டது.

உடனே தெளிந்த அவந்திக, ‘என்னது நினைவிருக்கட்டும் என்கிறான்.’ என்று யோசித்தவள், உடனே. ‘அச்சோ நந்தனை பவளனுக்கு தெரியுமல்லவா. முன்பு பேசியபோது கூட ஏதோ சொன்னானே. நான் இப்படி நந்தனை மாப்பிள்ளையாகச் சொன்னதை அவனிடம் பவளன் சொல்லிவிடுவானோ! “-_-”’ என்று

அவசரமாக, “பவளன் நான் ஒரு பேச்சுக்குச் சொன்னேன். இதனையெல்லாம் நந்தனிடம் சொல்ல வேண்டாம்.” என்றாள்.

அதனைக் கேட்ட பவளன், “@_@”.

பவளன் எதுவும் பேசவில்லையென்ற போதும் அவந்திகா அவனிடம் மீண்டும் இதுகுறித்து சொல்லத் தயங்கி, பேச்சை மாற்ற முயன்று, “பவளன், என் ஆன்ம இணைப்பின் கடவுச்சொல்(password) என்ன? எனக்கே என் ஆன்ம இணைப்பின் கடவுச் சொல் மறந்துவிட்டது.

முன்பு நான் யாளி உலகில் இருந்தபோது என் சிநேகிதர்கள் 2 சக்கர சக்தியுடையவர்களாகவே இருந்தனர்(4). அதனால் அவர்களுக்கு என் ஆன்ம இணைப்புகுறித்து தெரியாது. என் கடவுச் சொல் அவர்களிடம் இப்போது கொடித்தால், அது சமயத்தில் உதவும்.” என்று அவசியமே இல்லாமல் விளக்கம் சொன்னாள்.

அதற்குப் பவளன், “பவளன்.” என்றான்.

அவனது பதிலில் புரியாமல், “ம்ம்?” என்றாள்.

பவளன், “உங்க ஆன்ம இணைப்பின் கடவுச்சொல் பவளன்.” என்றான்.

அதனைக் கேட்ட அவந்திகா திகைத்துப் போனாள். அவளையும் அறியாமல், “பவளனா? நான் ஏன் உங்க பெயரை என் கடவுச்சொல்லாக வைத்திருக்க வேண்டும்.?” என்றவளுக்கு ஆன்ம இணைப்பைக் கற்றப் போதும் அதனை அவள் யாருடனும் பயன்படுத்தியதில்லை என்பது நினைவு வந்தது.

அதன் காரணம், ஒன்று 5 சக்கர ஆன்ம சக்தி உடையவர்கள் யாரும் அவளுடன் ஆன்ம இணைப்பில் தொடர்புக் கொள்ளும் அளவு நெருக்கமில்லை. மற்றொன்று அதற்கான அவசியமில்லை.

அதனால் எப்போது அவள் ஆன்ம இணைப்பை உருவாக்கினாள் என்றே அவளுக்கு மறந்திருந்தது. இப்போது பவளன் அவன் பெயரையே கடவுச்சொல்லாகச் சொல்லவும் திகைத்துப் போனாள்.

அமைதியாகச் சில நொடி இருந்த பவளன், “இளவரசி எனக்குப் பெயர் வைத்தது நீங்கதான். கூடவே நான் கேட்டதால்தான் தயக்கம் இல்லாமல் உங்க ஆன்ம இணைப்புக்குக் கடவுச்சொல்லாக என் பெயரை வைத்தீங்க.” என்று பழைய நினைவை மனதில் கொணர்ந்து சொன்னவனாகச் சொன்னான்.

‘பவளனுக்கு நான் பெயர் வைத்தேனா?! அவன் என்னை விடவும் சிறு குழந்தையோ.’ என்று மேலும் அதிர்ந்தாள். கூடவே அன்னிச்சை செயலாக, “அப்போது, நீங்க என்னைவிட வயதில் சிறியவரா?” என்றாள்.

‘அவந்திகா எந்தத் தருணத்தில் தான் பெயர் வைத்தேன். ஏன் தான் உன் வார்த்தைக்காகக் கடவுச்சொல்லாக உன் பெயரை வைத்தேன்.’ என்று கேட்கக் கூடுமென்று எண்ணிய பவளனுக்கு, அவந்திகாவின் இந்தக் கேள்வி திகைப்பை ஏற்படுத்தியது. கூடவே அவனது இதழ் விரிந்து மென்னகையானது.

பாவம் இதனை அவந்திகா நேரில் காணவில்லை. இல்லையென்றால் அவளது சிறுப்பிள்ளைதனமான கேள்வியிலும் பவளனின் முகமாற்றத்திலும் வெட்கித்து போயிருப்பாள்.

அவளை அதிகம் யோசிக்க விடாமல் பவளன், “என்னுடைய எலும்பு வயது 425. உங்க ஆன்மாவை விடவும் 4 வயது முதிர்ந்தவன். எனக்கு நீங்க வைத்த பெயர், பவளநந்தன்.” என்றான்.

அவந்திகா, “ப…வள…நந்த…ன்” என்று ஒவ்வொரு எழுத்திற்கும் நிறுத்திச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் எதிரில் இருந்த காற்று சில மின்னும் துகள்களாக மாறி அவள் முன் நந்தன் தோன்றினான்.

அவனைத் திகைப்புடன் நிமிர்ந்து பார்த்தவள், “நந்தன்.” என்று உதடசைத்தாள். ஆனால் அவளுள் குரல் எழவில்லை.

ஆனால் எதிரில் இருந்தவன் பளிச்சென்ற புன்னகையுடன், “இளவரசி, என் முழு பெயர பவளநந்தன்.” என்றான்.

Author Note:

(1) இது முழுதும் உண்மையல்ல. உண்மையையும் கொஞ்சம் கதைக்காகக் கற்பனையையும் கலந்து எழுதியுள்ளேன்.

(2) என்னால exact தமிழ் வார்த்தைகளை Ethereal & Corporeal souls- க்கு கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால கொஞ்சம் relatedஆன வார்த்தைகளாக, தூய ஆன்மா மற்றும் சரீர ஆன்மா நு use பண்ணிருக்கேன். யாருக்காவது வேறு சரியான வார்த்தை தெரிந்தால் சொல்லுங்க.

(3) கண்டிப்பா ஒன்னு குறைந்தாலும் உயிர் வாழ முடியுமானு தெரியவில்லை. கதைக்காக இதனை நான் கற்பனை செய்தேன்.

(4) மறந்திருந்தால்- ஆன்ம இணைப்பைக் கற்க குறைந்தது 5 சக்கர சக்தி நிலையாவது ஒருவருக்கு இருக்க வேண்டும்.

Have to say something: நிறை புது தகவல்கள் இந்த அத்தியாத்தில் இருக்கு. உங்களுக்கு ஏதேனும் குழப்பமாக இருந்தால் commentல கேளுங்க.