Advertisement

அத்தியாயம் – 27

ஆனால், “எட்டாவதாகவும் ஒன்பதாவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்களில் வெளிப்படையாக எந்தப் பாதிப்பும் தெரியவில்லை. ஒருவேளை, அவர்களின் உள்ளுறுப்பு பாதிப்புற்றிருக்குமோ?” என்று முகவாயில் கைமுஷ்டியாக்கி வைத்தவிதமாக அவர்களைக் கேட்டாள் அவந்திகா.

முகிலன், “வாய்பிருக்கிறது.” என்று அருகிலிருந்த அவந்திகாவின் தோள்மீது முன்பு யாளியாக இருக்கும்போது கைப்போடுவதுப் போலக் கைப்போட்டு, அவள்புரம் முகம் திருப்பி, “ஒருமுறை நீ கடைசி இருவரின் நாடியைப் பிடித்துப் பார்த்தால் கண்டுபிடித்துவிட மாட்டாய் இளவரசி.?” என்றான்.

நாடிப் பிடித்துப் பார்ப்பது என்றதும், லேசாக முகம் வெளுத்த அவந்திகா, “அ…அது…நா…நான்” என்று தினறினாள்.

அவள் முகம் மாற்றத்தை உணர்ந்த மதி அவந்திகாவின் மீதிருந்த அவனது கையைத் தட்டிவிட்டு, “வன்னி, நீ பல நூறு வருடங்களாக நாடிப் பிடித்துப் பார்க்காமல் இருப்பதால், அது உனக்கு மறந்திருக்கும். நான் அவர்களின் நாடிப் பிடித்துப் பார்க்கிறேன்.” என்றாள்.

மதியின் பதிலில் நிம்மதி பெருமூச்சுவிட்டாள் அவந்திகா. அவந்திகா வன்னியாக இருக்கும்போது அவளது நாடி பார்க்கும் முறை, பிரதேகமான ஒன்று. எப்படிப்பட்ட வியாதியையும் கை நாடி பிடித்துப் பார்த்தே எந்த உறுப்பு எவ்வளவு பாதித்திருக்கிறது என்பதை சில நொடியில் அறிந்துவிடுவாள்.

அவளது அந்தப் பிரதேகமான திறமையினால் விளைந்த விளைவால்தான் என்னமோ அவளது பெற்றோர்களை இழந்துவிட்டதாக அவந்திகா இதுவரை நம்பினாள். அதனால் அவள் பெற்றோர்கள் இறந்தப் பிறகு யாருக்கும் இயல்பில் நாடிப் பிடித்துப் பார்ப்பதை தவிர்த்து வந்தாள்.

அவள் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்பே அவளது பெற்றொர்கள் இறந்திருந்தனர். அதனால் அவளது இந்த மன நிலை நெருங்கிய சிநேகிதர்களான மதி மற்றும் முகிலனுக்கு கூடத் தெரியாது.

ஆனால் அவள் முகத்தையே பார்த்திருந்த மதி, வன்னியின் முகம் மாற்றம் உணர்ந்து வன்னியின் சங்கடத்தைப் போக்கும்விதமாகத் தான் நாடிப்பிடித்து பார்ப்பதாகச் சொன்னாள்.

இதை எதையும் உணராத முகிலன் பல வருடங்களுக்குப் பின் கிடைத்துவிட்ட தன் சிநேகிதியின் மீதிருந்து தன் கையை மதி தட்டிவிட்டதில் கோபமுற்று, “ஏய் மதி, ஏன் கையைத் தட்டிவிட்டாய்.” என்று மீண்டும் அவந்திகாவின் தோள்மீது கைப்போட போனான்.

உடனே எழுந்து மீண்டும் அவன் கை அவந்திகாவின் தோள்மீது விழும் முன்னே அவன் மணிக்கட்டைப் பிடித்துக் கண்களை உருட்டி எங்கோ பார்த்து, “அப்படிதான் செய்வேன். என்ன செய்வாய்.?” என்று விற்றேற்றியாகச் சொல்லிவிட்டு அவன் கையை உதறிவிட்டாள்.

மதியின் இந்த அலட்சியம், முகிலனுக்கு எரிச்சலூட்ட, “நீ…நீ…நீ…” என்று நிறுத்தி நிறுத்தி அவள் முன் தன் கை ஆட்காட்டிவிரல் நீட்டிப் பேச வேறு வார்த்தை இல்லாமல் கத்தியபடி எழுந்து அவள் எதிரில் வந்து நின்றாள்.

பின் தன் வாளை எங்கிருந்தோ எடுத்து, “வா. நாம் சண்டையிடலாம்.” என்று அவள் தோள் பட்டைமீது அந்த வாளை நிறுத்தினான் முகிலன்.

“ஹப்பா…” என்று தன் தலையில் கை வைத்த அவந்திகா, “இந்த 400 வருடத்தில் நீங்க மாறி இருப்பீங்கனு நினைத்தேன். ஏன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒற்றுமையாக என்னிடம் பேசியப் போது கூட என் சிநேகிதர்கள் முன்பு போலச் சின்னப் பிள்ளைகளாக இல்லாமல் முதிர்ந்து முடிவெடுத்து செயல்படுகின்றனர் என்று நினைத்தேன்.

அதெல்லாம் என் நப்பாசையாகதான் இருக்கும் போல.” என்றவள் முகிலனின் கை மணிக்கட்டில் ஒரு தட்டு தட்டி, அப்போது அவனது கையிலிருந்து நழுவிய அவன் வாளைத் தன் கைக்கு மாற்றினாள் அவந்திகா.

பின், “இருவரும் அமைதியாக அமர்ந்து கிராமப் பிரச்சனை பேசப் போறீங்களா இல்லையா?” என்று வாளின் முனையை இருவர் முகத்தின் முன்னிலையிலும் நீட்டிக் கேட்டாள்.

ஆனால் பாவம் அவந்திகாவின் செயலை மதிக்கதான் அங்கு யாருமில்லை. அவந்திகாவை சட்டையே செய்யாமல், மதி முகிலனை பார்த்து முறைத்து முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள். முகிலனும் மதிக்கு முதுகு காட்டி, “ம்கும்.” என்றான்.

‘இந்த இருவரும்!!’ என்று செய்வதறியாது பெருமூச்சுவிட்டு, “மதி, உன்னையும் முகிலனையும் அந்த 10வது பெண்ணாகவும், அவள் மாப்பிள்ளையாகவும் தோற்றமளிக்கும்படி செய்யலாமென்று நான் நினைத்தேன். ஆனால் இப்போது,” என்று அவந்திகா சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

இதனைக் கேட்ட, “என்னது இவனோடு ஜோடியாகவா?!” என்று மதியும், “என்ன இவளோடு ஜோடியாகவா?” என்று முகிலனும் ஒரே நேரத்தில் சொல்ல முகம் திருப்பியிருந்த இருவரும் ஒருவரை ஒருவர் ஒர் நொடி திரும்பித் திகைத்துப் பார்த்து, “கற்பனையில் கூட முடியாது.” என்று ஒரு சேர சொல்லி மீண்டும் முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.

அப்படி சொன்ன போதும், மதியின் கன்னங்கள் சூடேறி சிவந்து போனது. முகிலனின் காது மடல் லேசாகச் சிவந்திருந்தது. இருவருமே அவர்கள் எண்ணங்களை வேறுபுரம் திருப்ப முயன்றனர்.

முகிலன், “எனக்குத் தீடீரென்று எதாவது சாப்பிட வேண்டும் போல இருக்கிறது. நான் சாப்பிட்டு வருகிறேன்.” என்று அவசரமாக வெளியில் சென்றுவிட்டான்.

மதி, “நான் நான், வினோதாவின் நாடிப் பிடித்துப் பார்த்துவிட்டு வருகிறேன்.” என்று கதவை ‘தட்.’ என்று மூடிவிட்டு, முகிலன் சென்ற திசைக்கு எதிர் திசையில் வேகமாகச் சென்றுவிட்டாள்.

அவர்கள் இருவரின் செய்கையின் காரணம் புரியாமலும், செய்வதறியாமலும் தொண்டையை கணைத்து, ‘இவர்களை இந்த விசயத்தில் நம்ப முடியாது போல. நான் தான் அந்த மணப்பெண்ணாக நடிக்க வேண்டும் போல.’ என்று பெருமூச்சுவிட்டாள்.

பின் சிறிது நேரம் தவம் செய்ய நினைத்து மெத்தையின் மீதிருந்த விரிப்பை சரிச் செய்தாள் அவந்திகா. அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்தாள்.

அங்கு அந்த வீட்டின் சமயல்கார பெண் கையில் உணவு தட்டுடன் அவந்திகாவின் அறையினுள் வந்தாள். குறைந்தது 60 வயதேனும் இருக்க கூடிய மனிதயாளி வகைப் பெண். கண்டாங்கி போலச் சேலையை இழுத்துப் பிடித்துக் கட்டியிருந்தாள்.

“அம்மா. நீங்கச் சாப்பிட ஐயா உங்க அறைக்கே உணவை எடுத்து வந்து தந்துவிட சொன்னரம்மா.” என்று அந்த அறையிலிருந்த டீபாயின் மீது உணவுத் தட்டை வைத்தாள்.

அதற்கு அவந்திகா, “ஓ. சரி.” என்று தன் மெத்தையின் புரம் திரும்பினாள் அவந்திகா.

அந்தச் சமயல்கார பெண், அங்குத் தேனீர் அருந்திவிட்டு வைக்கப்பட்டிருந்த காலியான கிண்ணங்களை எடுத்தவிதமாக அவந்திகாவை ஓரக் கண்ணால் திரும்பித் திரும்பிப் பார்த்தாள். அந்தப் பெண் மனம் ஏதோ இருப்புக் கொள்ளாமல் தடுமாறுவது அவந்திகா திரும்பிப் பாராமலே உணர்ந்தாள்.

வேறேதுவும் பேசாமல் போர்வையை உதரியவிதமாக ஏதோ யோசித்து, “நீங்கக் கொஞ்சம், விதுனாவை வரச் சொல்ல முடியுமா?” என்றாள் அவந்திகா.

அவந்திகா பேசியதும் தயங்கியவிதமாக இருந்த அந்தப் பெண், “விதுனாவா? எதுக்குமா? நா… என்னாலும் உங்களுக்கு உதவ முடியும். என்னனு சொல்லுங்க.” என்றாள்.

அவளது பதிலில் முகம் திருப்பி நேராக அவளைப் பார்த்த அவந்திகா, ஒரு நொடி தீவிரமாகப் பார்த்து, “ம்ம்…” என்று மீண்டும் திரும்பி, “ஒன்றுமில்லை. உடன் அவள் இருந்தால் எதாவது பேசிக் கொண்டிருக்கலாம். தனியாகச் சாப்பிட சலிப்பு இல்லாமல் இருக்குமென்று கேட்டேன். நீங்க என்னிடம் எதாவது கேட்க வேண்டுமா?” என்று கேள்வி கேட்டு மெத்தை மீது அமர்ந்தாள்.

அதற்கு அவசரமாகக் கையைத் தன் முந்தானையில் கசக்கியவிதமாக, “இல்லை. இல்லை. நான் எதுவும் கேட்க வேண்டுமென்று இல்லை. நான் விதுனாவை வரச் சொல்கிறேனம்மா.” என்று அவசரமாக அறை கதவின் முனைவரை சென்றுவிட்டாள் அந்தப் பெண்.

அவளது ஒவ்வொரு அசைவையும் கவனித்திருந்த அவந்திகா, ‘எதுவோ சரியில்லை.’ என்பதை உணர்ந்தாள்.

அவள் யோசித்து முடிவெடுக்குமுன் அவந்திகாவின்புரம் திரும்பி, “எங்க வினோதா பெண் கண் விழித்திடுமா மா.” என்று கேட்டாள் அந்தப் பெண்.

அந்தப் பெண்ணை ஊடுருவும் பார்வைப் பார்த்த அவந்திகா, எதிரில் இருந்தவளிடம் தெரிந்தது வினோதாவின் மீதான அக்கறையா அல்லது எங்கு வினோதா கண் விழித்துவிடுவாளோ எங்கிற பயமா என்று அவந்திகாவால் யூகிக்க முடியவில்லை.

சில நொடியில் பெருமூச்சுவிட்ட அவந்திகா, டீபாய் மீதிருந்த உணவுத் தட்டை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டு, “விழித்துவிடுவாள். முயற்சி செய்துக் கொண்டிருக்கிறோம். என்ன காரணம் என்று கண்டுப் பிடிக்கவே குறைந்தது ஒரு வாரமாவது ஆகக் கூடுமென்று நினைக்கிறோம்.” என்று வேண்டுமென்றே உண்மையை மறைத்து அந்தப் பெண்ணின் முக அசைவைக் காணததுப் போல் கவனித்தாள்.

அவந்திகாவின் முதல் வாக்கியத்தில் பதற்றமுற்ற அந்தப் பெண், பின் முகம் வியர்த்து, ஒரு வாரம் என்று அவந்திகா சொன்னதில் லேசாகக் கண்ணில் மின்னல் வெட்ட முகம் மலர்ந்து, பின் அவசரமாகத் தன் முக மாற்றத்தை மறைத்துச் சோகமாக வைத்துக் கொண்டு அவந்திகாவிடம் பேசினாள். இது எதுவும் அவந்திகாவின் கண்ணிலிருந்து தப்பவில்லை.

“ஓ. எப்படியாவது வினோதா பெண்ணைக் காப்பாற்றிடுங்கமா.” என்று கவலை தோய்ந்த குரலில் சொல்லிவிட்டு அவந்திகாவின் பதிலுக்கும் காத்திராமல், “நான் விதுனாவை வரச் சொல்கிறேன்.” என அந்த அறையை விட்டுச் சென்றுவிட்டாள்.

அவள் போவதையே கவனித்திருந்த அவந்திகா, அதுவரை ஏனோ இருப்புக் கொள்ளாமல் தன் கையில் முனங்கிக் கொண்டிருந்த கொடியை வெளியில்விட்டு கொடியின் எண்ணம் உணர்ந்தவளாக, “நானும் கவனித்தேன் கொடி. அந்தப் பெண்ணிடம் ஏதோ குற்ற உணர்வு தென்படுகிறது.” என்றாள்.

கொடியும் தலையை அசைப்பதுப் போல அசைத்தது. பின் மூன்று தினங்களுக்குப் பின் கிடைந்த சுதந்திரம் போல மீண்டும் அவந்திகாவின் கைக்குள் வர மறுத்து அந்த அறையினுள் இங்கும் அங்கும் அலைந்து விளையாடிக் கொண்டிருந்தது.

அவந்திகாவும் கொடியைப் பற்றிச் சட்டைச் செய்யாமல் உண்டுவிட்டு தரையின் விரிப்பில் சமனமிட்டு அமர்ந்தாள். பின், கண்கள் மூடித் தியானம் செய்ய ஆரம்பித்தாள்.

மூன்று தினங்களாக அலைந்து திறிந்ததில் முன்பு பயன்படுத்திய ஆன்மீக ஆற்றலைத் தவத்தின் மூலம் மீளுருவாக்கம் செய்ய அவளுக்கு நேரம் இருக்கவில்லை. தவம் இல்லாமல் சிறிது ஆன்மீக சக்தி உடலில் மீளுருவாக்கம் ஆனப் போதும் 4 சக்கரம் முழுதும் மீளுருவாக்கம் அடையவில்லை.

அதனால் கிடைத்த இந்த நேரத்தில் தவம் செய்ய ஆரம்பித்தாள். அவள் தவம் செய்ய ஆரம்பித்ததும், அவளது மணிக்கட்டிலிருந்த கருநிற கைக்காப்பினுள் ஒளி ஏற்பட்டு ஆன்மீக சக்தி அவளது நம்புகளில் வெண்ணிற ஒளியாகப் பாய்ந்து அவளுள் சக்தியைச் சேகரிக்க ஆரம்பித்தது.

அவந்திகா தவம் செய்வதை உணர்ந்து கொடி சிறிது நேரம் விளையாடிவிட்டு அமைதியாக அவந்திகாவின் எதிரில் தரையில் சுருண்டு படுத்துக் கொண்டு அவள் கண் விழிப்பதற்காகக் காத்திருந்தது. இப்படியாக 10 நாழிகைகள் கடந்திருக்க அவந்திகா லேசாகக் கண் விழித்தாள்.

அவந்திகா கண் விழித்ததை உணர்ந்த கொடி, அவந்திகாவின் உடலை முனங்கியப் படி செல்லம் கொஞ்சுக் கொண்டு இரு முறை சுற்றி அவள் முன் வந்து நின்றது.

அதன் செயலைப் புன்னகையுடன் பார்த்த அவந்திகா, “சரி. சரி. விளையாடியதுப் போதும் நல்ல பிள்ளையாக என் கைக்குள் வா.” என்றாள். கொடியும் சேட்டைச் செய்யாமல் அவளுள் அடங்கிப் போனது.

அப்போதுதான் நிமிர்ந்து எதிரில் இரு துருவமாக இரு நாற்காலிகளில் அமர்ந்திருந்த இரு உருவங்களைப் பார்த்தாள். பார்த்ததும் திகைத்து, “ஏன் அப்படி பார்க்றீங்க.?” என்று கேட்டாள்.

இருவரின் கண்களும் கேள்வியாகக் கொடி முன்பு அவள் கையில் சுற்றிய மணிக்கட்டையே பார்த்திருந்தனர். அந்தப் பார்வையில் அவர்கள் கேள்விக் கேட்காமலே என்னவென்று உணர்ந்து, “அது…அதன் பெயர் கொடி.” என்றாள் அவந்திகா.

கொடி என்று அழைத்ததும் கொடி அவந்திகாவின் கையிலிருந்து ஒரு சுற்று விலகி, தலையை மட்டும் எட்டிப்பார்ப்பது போலச் செய்தது. பின் அவந்திகாவின் அமர்த்தலான பார்வையில் மீண்டும் இருக்குமிடம் தெரியாமல் போனது.

மதி முகிலனை ஒரு பார்வை பார்த்து, வியப்பாக, “என்ன அது.?” என்று கேட்டாள்.

பின் அவந்திகா விளக்கம் சொல்வதற்காக அவளையே பார்த்தனர். அவர்களின் பார்வையில், “கவ்…கவ்…” என்று இருமுறை வரட்டு இரும்பலாக இரும்பி, சூழலை இயல்பாக்க முயன்றாள் அவந்திகா.

பின் பதில் சொல்லாமல் மீளாது என்பதை உணர்ந்து, “இது என் பெற்றோர்கள் இறந்தப் பிறகு அவர்களின், ‘என்னைக் காக்க முடியவில்லையே!’ என்ற ஆற்றாமையால் உருவான பாதுகாக்கும் உயிர் (Defense Spirit).” என்ற அவந்திகா பெருமூச்சுவிட்டு மேலும் சொல்ல ஆர்மபித்தாள்.

“நாம் என் பெற்றோர்களைக் காணவில்லை என்று ஆளுக்கு ஒரு முனையாகத் தேடிக் கொண்டிருந்தோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். எங்குத் தேடியும் அவர்களைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

கடைசியாக நான் சஞ்சிகை ஏரி(1) அருகில் சென்றபோது, ஒரு இடத்தில் மல்லிகை குவியலாகப் பார்த்தின். அப்படி அந்த மல்லிகை மலர்களால் மூடப்பட்டிருந்தது என் பெற்றோர்களின் உயிரற்ற சடலங்கள். அவர்களின் சடலத்தை நான் தொட்டப் போது அது மின்னும் ஒளி துகள்களாக மாறி மல்லிகை மலர்களுடன் கலந்து இந்தக் கொடியாக மாறியது.

அப்படி உருவான இந்தக் கொடி, என் பெற்றோர்களின் கடைசியான் வார்த்தையாக, ‘எங்களால் உன்னைக் காப்பற்ற முடியுமா என்று தெரியவில்லை வன்னி. நாங்க உயிருடன் இருந்தால் உனக்குப் பாரமாகவே நாங்க இருப்போம். அதனால் நாங்க போகிறோம். எங்களால் முடிந்தது எங்கள் உயிர் சிதைத்து உருவாக்கிய இந்தப் பாதுகாக்கும் கயிறு(Defense spirit) மட்டுமே.

இதைத் தொட்டவுடன் அது உன் ஆன்மாவுடன் இணைந்து நீ எங்குச் சென்றாலும் உனக்குப் பாதுகாப்பாக இருக்கும்.’ என்று என் பெற்றோர்களின் குரலில் என்னிடம் சொல்லி என்னுடன் இணைந்துவிட்டது.

என் பெற்றோர்கள் ஏன் இறந்தார்கள் என்று என்னால் அறியமுடியவில்லை. ஆனால் அன்றிலிருந்து என் கொடி என்னுடன்தான் இருக்கிறது. அதன் பிறகு நானும் வெகுநாள் யாளி உலகில் இருக்கவில்லை. உங்களுக்கும் கொடியைப் பற்றித் தெரியவில்லை.” என்றாள்.

அதனைக் கேட்ட மதியும், முகிலனும் எதுவும் பேசாமல் முகம் சோர்ந்து அமர்ந்தனர். சில நொடிகளில் மதி, “உயிர் நீக்கிப் பாதுகாக்கும் உயிர்(Defense Spirit) உருவாக்க வேண்டுமென்றால் அவர்கள் உயிர் இறைந்து மறுபிறப்பற்று கரைந்துப் போயிருக்க வேண்டும்.” என்றாள்.

மனம் கனத்து இருந்த அவந்திகா எதுவும் பேசாமல், “ம்ம்.” லேசாகத் தலை அசைத்தாள்.

சில நிமிடங்களில் இயல்புக்கு வந்த அவந்திகா லேசாகத் தொண்டையை செருமி, “சரி இன்று பொழுது முடிந்து இரவும் வந்துவிட்டது. அடுத்த பௌர்ணமி இன்னமும் 3 தினங்களில் வரவிருக்கிறது. நாம் அடுத்து என்னசெய்வது என்று முடிவெடுக்க வேண்டும்.” என்று கிராம பிரச்சனைக்கு வந்தாள்.

முகிலனும் இயல்புக்கு வந்து, “இளவரசி, முதலில் நாளை நாம் அந்த 10வது வீட்டுப் பெண் வீட்டுக்குச் செல்வோம். பிறகு மற்றது முடிவுச் செய்யலாம்.” என்றான். முகிலனின் பதிலில் மூவருமே சரி என்பதுப் போலத் தலை அசைத்தனர்.

“மதி முகிலன், என்னை அவந்திகா என்றே வெளியில் சொல்லுங்க. என் தோழர்களைக் காக்கும் வரை என்னைப் பற்றி யாருக்கும் தெரிவதை நான் விரும்பவில்லை. அதனால் இளவரசி என்றோ வன்னியென்றொ என்னை வெளியில் அழைக்க வேண்டாம்” என்றாள்.

அதுவும் சரிதான் என்பதை உணர்ந்த மதியும் முகிலனும். “சரி” என்றனர்.

பிறகு முகிலன், “அவந்தி, அ…அது… என்னால் இவளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது.” என்று தயங்கி பின் கராராகச் சொன்னான்.

அதற்கு மதி கண்களை லேசாக உருட்டி எங்கோ பார்த்தவிதமாக, “நான் ஒன்றும் அதற்கு இங்குக் காத்துக் கிடக்கவில்லை.” என்றாள் அலட்சியமாக.

மீண்டும் இவர்கள் இருவரும் சண்டையிடப் போவதை உணர்ந்து, “மாப்பிள்ளை முக்கியமில்லை. ஏற்கனவே அந்தப் பெண்ணுக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளையே இருக்கட்டும். நானே மணப்பெண்ணாக நடிக்கப் போகிறேன்.” என்றாள்.

அதற்கு எதிரில் இருந்த இருவரும் கன நேரமும் தாமதிக்காமல், “கூடாது.” என்றனர். அவர்களின் குரலில், ‘இதற்கு மட்டும் எப்படி இருவரும் ஒற்றுமையாக இருக்கீங்க!’ என்று நினைத்துப் புருவம் உயர்த்தினாள் அவந்திகா.

அவந்திகா எதுவும் பேசுமுன்னே மதி அவந்திகாவை நோக்கி, “மணப்பெண்ணாக முகிலனை வேடமிடச் சொல்லிவிடலாம். நாம் இருவரும் வெளியிலிருந்து அவனைக் கவனிக்கலாம்.” என்றாள்.

அதனைக் கேட்ட முகிலன் முகம் சிவந்து, “நீ…” என்று தொடர்ந்து பேசுமுன்னே அவந்திகா பேச ஆரம்பித்தாள்.

“இருவரும் முதலில் நான் சொல்வதை கேளுங்க.” என்றவள் தலையில் தன் கையைக் கொண்டு தடவி, “நீங்கச் சென்றபிறகு நான் நன்கு யோசித்தேன். இவ்வளவு திட்டமிட்டு செயல்படும் அந்த ஆள், நீங்க நடிக்கச் சென்றால், நீங்க இருவரும் மனிதயாளி அல்ல என்பதை உடனே கண்டுப்பிடிக்க வாய்ப்பிருக்கு.

அதனோடு உங்க தோற்ற வயது 25 ஆக இருந்த போதும், உங்க எலும்பு வயது 421. அதனால் நான்தான் இதற்குச் சரியான தேர்வு.” என்று காரணத்துடன் கூறி முடித்தாள்.

மதியும், முகிலனும் அவள் விளக்கம் உணர்ந்து வேறு வழியில்லாமலும், மனமே இல்லாமலும், “சரி.” என்றனர்.

முகிலன், “ஆனால் உனக்கு ஏதேனும் விபரீதமாகத் தோன்றினாள், உடனே உன் முடிவைக் கைவிட வேண்டும்.” என்றான்.

மதி எதுவும் சொல்லாமல் கண்களை உருட்டி, “உன்னிடம் பாதுகாக்கும் ஆன்மா(Defense Spirit) கொடி இருப்பதால் சம்மதிக்கிறேன்.” என்றாள்.

அதற்கு, “ம்ம்.” என்று புன்னகைத்த அவந்திகா, சிறிது நிறுத்தி மதியம் உணவுடன் வந்த அந்தச் சமயல்கார பெண்மணியின் செயலைக் கூறினாள்.

பின், “அதனால் நம்முடைய அடுத்த நடவடிக்கை இனி யாருக்கும் தெரியாமல் இருப்பது நல்லது. நான் மணப்பெண்ணாக நடிப்பது, பாதிக்கவிருக்கும் பெண்ணைத் தவிர அவள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு உள்பட தெரியாமல் இருப்பது நல்லது.” என்றாள்.

அதற்குச் சரிதான் என்பது போல மதி மற்றும் முகிலனும் தலையசைத்தனர். பின் மதி, “வன்னி, மற்றுமொன்று, வினோதாவின் நாடிப்பிடித்து பார்த்ததில் என்னால் சரிவர என்னவென்று அறிய முடியவில்லை.” என்று தான் பரிசோதித்த விவரத்தைச் சொன்னாள்.

அதனைக் கேட்ட அவந்திகா, அவளாக வினோதாவை பரிசோத்தால்தான் சரியாக இருக்குமோ, என்று எண்ணி, “சரி. நாளை நானும் பார்கிறேன். ” என்றாள். பின், ‘இப்படி 10 பெண்களின் உயிரைக் கொண்டு என்ன செய்வதாக இதைச் செய்பவர்களின் நோக்கம். நினைவிழந்து இருப்பது போதாதுதென்று உடல் உறுப்புகளுமல்லவா பாதித்திருக்கிறது. உயிர் மீண்டாலும் அவர்காளின்ட் உறுப்புகள் மீளுமா.’ என்று யோசித்தாள் அவந்திகா.

உடனே மின்னலென யோசனை ஏற்பட்டு, ‘எவ்வளவோ விவரம் அறிந்த பவளனுக்கு இது குறித்தும் தெரிந்திருக்குமோ! அவனிடம் கேட்களாம்.’ என்று முடிவடுத்து, “சரி இப்போது சிறிது நேரம் உறங்கலாம். நீங்க உங்க அறைக்குப் போறீங்களா?” என்று அவர்கள் பதிலுக்கும் காத்திராமல், அவர்களை வெளியில் அனுப்பி கதவை அடைத்தாள் அவந்திகா.

அப்படி அவர்களை அனுப்பிய போதும் அவந்திகா சமனமிட்டு மெத்தை மீது அமர்ந்து, முன்பு பவளன் சொன்னது போல், தன் நெஞ்சில் கை வைத்து, “பவளன்.?” என்று அழைத்துப் பார்த்தாள்.

சில வினாடி அமைதிக்குப் பின் ஆன்ம இணைப்பில், “இளவரசி…” என்றது பவளனின் குரல்.

Author Note:

(1) சஞ்சிகை – மல்லிகை பூ. மல்லிகை செடிகள் சூழ்ந்து இருபதால் அந்த ஏரிக்குச் சஞ்சிகை ஏரினு பெயர் வைத்தேன்.

Advertisement