Advertisement

அத்தியாயம் – 26

அப்போது, “இளவரசி.” என்று ஆன்ம இணைப்பில் பவளன் அழைத்தான். அவந்திகாவின் முகம் அவளைச் சுற்றியிருப்பவர்களையும் மறந்து பிரகாசமானது.

இந்த 4 நாட்களில் மதியும் முகிலனும் உடன் இருந்ததாலோ என்னமோ அவந்திகா பவளனை மறந்தே போயிருந்தாள். எதிர்பாரத தருணத்தில் கேட்ட அவனது குரல் அவந்திகாவிற்கு அவன் கடைசியாக இங்கே வருவதாகச் சொன்னதை நினைவூட்டியது.

அவனிடம் அதுகுறித்து,“பவளன். எங்க இருக்கீங்க? எப்போ வருவீங்க?” என்று ஆர்வமாகக் கேட்டாள்.

பின் தொடர்ந்து, “இங்கு வந்துக் கொண்டிருப்பதாகச் சொன்னீங்க. நான் அடுத்த நாளே உங்களை எதிர்பார்த்தேன். தெரியுமா?” என்று அவன் விரைவில் வராததால் ஏற்பட்ட மனதின் திருப்தியின்மை முகத்திலும் தோன்ற அவனிடம் ஆன்ம இணைப்பில் சொன்னாள்.

பவளனுடன் ஆன்ம இணைப்பில் பேசும் ஆர்வத்தில் பாவம் அவள் எதிரில் இருந்தவர்களை மறந்தே போனாள். அவள் முகமாற்றத்தை கவனித்திருந்த முகிலனும் மதியும், அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பது கூட அவந்திகாவின் கருத்தில் படவில்லை.

400 வருடங்களுக்கு முன் யாளி உலகில் அவளுக்கு நிகழ்ந்த நிகழ்வுகளாலோ என்னமோ யாளி உலகில் இருக்கும் ஒவ்வொரு நாளும் வெளியில் இயல்பாக இருந்தாலும், அவந்திகாவினுள் நடுக்கம் இருக்கத்தான் செய்தது.

‘தன்னை நன்கு புரிந்திருந்த, பவளனோ அல்லது நந்தனோ உடன் இருந்தால்,’ என்று யோசிக்கும் போதே மனதுக்குள் இனம் புரியாத தைரியம் வருவதை அவளால் மறுக்க முடியவில்லை.

அந்த நினைவிலே, பல நூறு வருடங்களுக்குப் பின் யாரென்றே தெளிவாகத் தெரியாத ஒருவனின் வரவை ஆர்வமுடன் எதிர்பார்த்து பவளனிடம் பேசுகிறோம் என்ற நினைவே அவளுக்கு இல்லை.

அவளது படபடத்த கேள்வியையும், அவன் வரவிற்காக அவள் ஆவலுடன் காத்திருப்பதையும் உணர்ந்த பவளன் சின்ன சிரிப்பை உதிர்த்த, “நாளைக் காலையில் அங்கிருப்பேன் இளவரசி.” என்றான்.

அவனது பதிலில் முகம் மலர்ந்து, “ம்ம். நேரில் என்னைப் பார்த்தால், உங்களைப் பற்றிய உண்மையை என்னிடம் சொல்ல வேண்டி இருக்கும் என்று தயங்கியே நீங்க வரவில்லையோ என்று நினைத்துவிட்டேன்.” என்றாள் அவந்திகா.

அவளது இந்தப் பதிலில் சில நொடி அமைதியாக இருந்த பவளன், “இளவரசி, நானும் நந்தனும்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே நந்தன் என்றதில், ‘பவளனுக்கு நந்தனை எப்படி தெரியும்! அவர்கள் இருவரும் நண்பர்களோ!’’ என்று ஆச்சரியமுற்று, அவன் பேசுவதை இடைமறித்து அவந்திகா அவளையும் அறியாமல் அன்னிச்சை செயலாக, “நந்தனா?” என்று வாய்விட்டே சொன்னாள்.

அதுவரை ஆன்ம இணைப்பில் மனதில் பேசிக் கொண்டிருந்தவள் நந்தனின் பெயரை வாய்விட்டுச் சொல்லிவிட, நிஜத்தில் இழுத்துப்பிடித்து பொறுமையாக அவள் முக மாற்றத்தை மட்டும் கவனித்துக் கொண்டிருந்த இரு ஜோடி கண்கள், கண்ணில் இன்னமும் தீவிரம் தெரிய அவந்திகாவின் முன் வந்து நின்றன.

திடீரென்று ஒளி மறைந்து எதிரில் நிழலாட அவந்திகா நிமிர்ந்து எதிரில் நின்ற இருவரையும் பார்த்தாள். பார்த்தவள் விக்கித்து போனாள். எதிரில் மதியும் முகிலனும் விழிகளாலே அவளை வீழ்த்துவதுப் போல முகத்தில் கோபமுடனும், எச்சரிக்கையுடனும் அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தனர். அதனைப் பார்த்த அவந்திகாவின் முகம் வெளுத்து வியர்க்க ஆரம்பித்துவிட்டது.

இருந்தும், தன் இடது கையால் நெற்றியிலிருந்த வியர்வையை ஒற்றி எடுத்தவள், ‘இவர்கள் ஏன் என்னை இப்படி வெறிகின்றனர்.’ என்று நினைத்து அவர்களிடமிருந்து விழி மாற்றிப் பவளனிடம் ஆன்ம இணைப்பில், “பவளன், நந்தனை எப்படி உங்களுக்குத் தெரியும்? இப்போது அவர் எங்கே இருக்கிறார்? 5 நாட்களுக்கு முன்பு என்னை நடுகாட்டில் விட்டுவிட்டு எங்கோ போய்விட்டார்.” என்று குற்றம் சாட்டும் குரலில் கேட்டாள்.

அதனைக் கேட்ட பவளனின் இதழ் விரிந்து மென்னகையானது, பாவம் வெறும் ஆன்ம இணைப்பில் இருந்த அவந்திகாவிற்கு அவன் முகமாற்றம் தெரியவில்லை. அவளுக்குப் பதிலாக, “உங்க சிநேகிதர்களை நீங்கச் சந்தீங்க இருப்பதை உணர்ந்தே உங்களைத் தனியாக விட்டு விலகிச் சென்றேன்.” என்றான்.

அவன் சொன்னது முழுதும் கருத்தில் படுமுன்னே, அவன் சிநேகிதர்கள் என்றதும் மீண்டும் நிமிர்ந்து எதிரில் இருப்பவர்களைப் பார்த்தாள் அவந்திகா. அவர்களின் முகம் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அளவுக்குக் கருத்து அவளை வெறித்துக் கொண்டிருந்தது.

உடனே, இதற்கு மேலும் பவளனிடம் பேசிக் கொண்டிருந்தால் தவறாகிவிடும் என்பதை உணர்ந்து, எதிரில் இருந்தவர்களை பார்த்தவிதமாக, “ப…பவளன். நாம் நாளைப் பார்க்கலாம். இ…இப்போது நான் போக வேண்டும்.” என்று சொன்னாள்.

பவளனும் அவளுக்குச் சங்கடம் கொடுக்காமல், “சரிங்க இளவரசி.” என்றான். அதன் பிறகு எதுவும் பேசினான் இல்லை.

இணைப்பு துண்டிப்பானதும், அவந்திகா மெத்தையிலிருந்து எழுந்து எதிரில் நின்றிருந்த மதியையும், முகிலனையும் எதிர் நோக்கி நின்றாள். வராத இருமலை வரட்டு இருமலாக இரும்பி, ஏதோ இருமல்தான் அவளது சங்கடமான உணர்வைப் போக்கும் போலத் தொண்டையை கனைத்து, “என்ன?” என்று இருவரையும் பார்த்துக் கேட்டாள்.

முகிலனும் மதியும் அவந்திகாவை ஊடுருவும் பார்வை பார்த்த போதும் உடனே எதுவும் பேசவில்லை. பிறகு குரலில் கடுமையுடன் முதலில் அந்த அமைதியை உடைத்தது முகிலனே.

“யாரிடம் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தாய்.?” என்றான்.

அவந்திகா ஏனோ மறைக்கும் என்னமின்றி, “என் தோழனிடம்.” என்றாள் தயக்கமுடன்.

உடனே மதி இடைபுகுந்து, “தோழனா?! யார் அது.? எப்படி அவனைத் தெரியும்?” என்றாள்.

மதியின் கேள்விக்குப் பதில் சொல்லும் முன்னே, முகிலன், “எவ்வளவு நாளாக அவனைத் தெரியும். அவனது நோக்கம் என்ன என்று அறிந்தாயா? எதுவரை உன்னைப் பற்றி அவனுக்குத் தெரியும்?” என்று படப்படப்புடன் பல கேள்விகளை அடுக்கிக் கேட்டான்.

யோசிக்கவும் நேரம் கொடுக்காமல் மாறி மாறிக் கேள்விகள் கேட்ட முகிலனையும் மதியையும் மாறி மாறிப் பார்த்த அவந்திகாவிற்கு திகைப்பில் மூச்சு திணரலே ஏற்பட்டுவிட்டது. அவளையும் அறியாமல், “அ…அது…” என்று தயங்கி, பின்னோக்கி கால் எடுத்து வைத்தவள், அங்கு மெத்தையில் இடித்துப் பொத்தென்று மெத்தை மீது அமர்ந்தாள்.

கூடவே, ‘இது என்ன உணர்வு? நான் என்னமோ என் காதலனிடம் இரகசியமாகப் பேசியது போலவும், இவர்கள் என் பெற்றோர்கள் போலவும். அவர்களிடம் நான் கையும் களவுமாக மாட்டிக் கொண்டது போலவும் அல்லவா, இவர்கள் மாறி மாறி இப்படி என்னிடம் கேள்விகள் கேட்கின்றனர்’ என்று திகைத்தாள்.

உடனே மனம் தெளிவுற்றவள், எழுந்து அவர்களை எதிர் நோக்கி நின்று, முகிலனிடம் திரும்பி, “ரிஷிமுனி, என்னைப் பற்றிக் கேட்கக் கூடாது என்று சொல்லிதான் நான் உனக்கு உதவிக்கு வந்தது. இப்படி என்னிடம் கேள்விகள் கேட்பதற்கு என்ன அர்த்தம்?” என்று முகத்தில் போன தீவிரம் மீட்டு கேட்டாள்.

இதனைக் கேட்ட மதி முகத்தைத் திருப்பி முகிலனைப் பார்த்தாள். முகிலன் எதுவும் பேசாமல் தலைத் தாழ்த்தினான். பிறகு மதி அமைதியாகச் சென்று தான் முன்பு அமர்ந்திருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

சில நிமிடம் அங்கு அமைதி நிலவியது. முகிலன் மீண்டும் தலை நிமிர்ந்து அவந்திகாவைப் பார்த்து, “இளவரசி. இன்னமும் எங்களிடம் உனக்கு நம்பிக்கை இல்லையா?.” என்றான்.

இளவரசி என்ற அழைப்பைக் கேட்ட அவந்திகா அதிர்ந்து முகிலனைப் பார்த்தாள். முகிலனின் கண்கள் சிவந்து ஈரம் பணித்திருந்தது. எதையோ மறைக்க முயற்சிப்பவன் போலத் தன் உதடை அழுந்தக் கடித்தவனின் வலது கை முஷ்டி இறுகி அவனது உள்ளங்கையில் அவனது கை நகங்கள் பதிந்து இரத்த காயம் ஏற்பட்டிருந்தது.

அவந்திகாவிற்கு அவள் வேஷம் கலைந்துவிட்டது என்பது புரிந்தது. “முகிலன்” என்று அவன் கண்ணிலிருந்து கன்னத்தை அடைந்திருந்த நீர் துளியைத் தன் கையால் துடைத்தாள். ஆனால் வேறேதுவும் பேசவில்லை.

கூடவே, ‘தான் வன்னி என்ற சந்தேகம் இருந்ததாலே முகிலன், உறுதி படுத்திக் கொள்ள மதியை இங்கு வரவழைத்திருக்க வேண்டும். நான் என்ன செய்கிறேன் என்பதை அறியவே என் முன் இருவரும் சண்டையிடுவதுப் போல நடந்திருக்க வேண்டும்.’ என்று நினைத்து அவன்பின் அமர்ந்திருந்த மதியையும் எட்டி பார்த்தாள்.

மதியும் எதுவும் பேசாமல் அவந்திகாவை பார்க்க முடியாமல், முகத்தைத் திருப்பி இருந்தப் போதும் அவளது கண்ணிலும் சிவப்பு. அவந்திகாவிற்குள் அவர்களின் கலங்கிய முகம் என்னனென்னமோ செய்ய, ‘தான் இறக்கும் முடிவை எடுத்தப் போது இவர்களுக்கு எதுவும் நேரக் கூடாது என்பதற்காக, அவர்களிடமிருந்து பிரிந்து, சொல்லாமலே மரணித்தும்விட்டேன்.

பின்உயிர் சிதருண்டு மறுப்பிறப்பின்றி போயிருக்க வேண்டிய நான், எதிர் பாராத அதிர்ஷ்டமாக மீண்டும் ஜனனித்தும் விட்டேன். என் முடிவை இவர்களிடம் சொல்லவில்லையென்ற வருத்தமா இவர்களுக்கு?.’ என்று நினைத்தாள்.

‘எப்படி என் அன்றைய முடிவிற்கானவிளக்கம் தருவது?’ என்று குழம்பி குற்ற உணர்வு மேலோங்க, “மதி…மு…கிலன்…அ…அது.” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எழுந்து அவள் அருகில் வந்த மதி எதுவும் சொல்லாமல் அவளை அணைத்துக் கொண்டாள்.

கூடவே, “உன் விளக்கம் எங்களுக்கு வேண்டாம். நீ…உயிருடன் வந்துவிட்டாய். நீ நலமுடன் இருக்கிறாய் வன்னி. அது போதும். இ…இனி ஒரு நொடியும் உன்னைப் பிரிந்து நாங்க போகமாட்டோம்.” என்று குரல் தழுதழுக்க சொன்னாள் மதி.

முகிலனும் ஒரு எட்டு அவர்கள் இருவர் அருகிலும் வந்து இருவரையும் ஒன்றாக அணைத்த படி, “மீண்டும் முன்புபோல அசம்பாவிதம் நடக்க நாங்க விடுமாட்டோம். நாங்க உன்னை எப்போதும் நம்புகிறோம். நீ அப்படி செய்திருக்க மாட்டாய்.” என்றான்.

இருவரின் அணைப்பில் இருந்த அவந்திகாவின் உள்ளம் அவர்கள் சொன்னதை கேட்டதில் நெகிழ்ந்து அவளையும் அறியாமல் அவள் கண்ணிலும் ஈரம் பணிந்தது. அந்த மோன நிலை மனம் கனமுற்று இருந்த அந்த மூவருக்குமே தேவைப்பட்டது. சில நிமிடங்கள் அப்படியே இருந்தனர்.

சில நிமிடங்களில், “எப்படி கண்டு பிடிச்சீங்க?” என்றாள் அவந்திகா.

அணைப்பிலிருந்து பிரிந்த முகிலனும் மதியும் தொண்டையை கணைத்துக் கொண்டு நிற்க, அவந்திகா மெத்தை மீது அமர, அவர்களும் அவளது இருப்புரம் அமர்ந்தனர். பின் முகிலனே பேச ஆரம்பித்தான்.

“என்ன எப்படி தெரியும்? எந்த மனிதயாளிக்கு உயிர் உறுஞ்சும் சக்கரம்பற்றித் தெரியும்.? அது மட்டுமா, நீ எங்களுடன் இதுபோல மற்ற யாளிகளின் பிரச்சனைகளைத் தீர்க்கும்போது அணிந்திருக்கும் ஆடையையே அணிந்திருக்கிறாய். வெள்ளை நிற பறக்கும் சக்கரம் உருவாக்கினாய். இதெல்லாம் எந்த மனித யாளியால் செய்ய முடியும்? கூடவே எந்த மனிதயாளி 5 சக்கர சக்திக் கொண்ட பரியாளியான என்னையும், சிம்மயாளியான இவளையும் நீ வாப்போ என்று ஒருமையில் அழைத்துப் பேசுவர்?” என்று புன்னகைத்தான்.

அதற்கு அசடு வலிந்து தன் கை முஷ்டியை வாயருகில் கொணர்ந்து இரண்டு முறை, “கவ்…கவ்…” என்று இரும்பி, “அதுதான் இல்லையா?” என்றான்.

“ம்ம்.” என்ற முகிலன் புன்னகைத்து, மீண்டும் முகத்தில் தீவிரமாக, “ஆனால் உன் கைக்காப்பு எங்கே!? அது இல்லாததால்தான் உன்னைப் பார்த்தால் மனித யாளிதான் என்று தோன்றிவிட்டது. அதனால்தான் மதியை வரச் சொன்னேன்.” என்றான்.

மதி, “ஆமாம். நான் உன்னைப் பார்த்ததும் எனக்குச் சந்தேகம் வந்தது. உன் சாப்பிடும் பழக்கம், உன் நடை, பேசும் தோரணை இதெல்லாம் பழையபடி இருந்ததால்தான் எங்களுக்கு உறுதியாக நீதான் என்று பட்டது. ஆனால் இவ்வளவு நாள் எங்கிருந்தாய்? எப்படி உன் முகம் எங்களால் அடையாளம் அறிய முடியாதப்படி மாறியது.” என்று தங்கள் கணிப்பைச் சொல்லிக் கேட்டாள்.

அதற்குப் பதிலாகச் சின்ன சிரிப்பை உதிர்த்த அவந்திகா உடனே முகம் சோர்ந்து, “அது பெரிய கதை. என் கைக்காப்பு இப்போது மகரஅரசில் இருக்கிறது. அதனைத் தேடிக் கொண்டுதான் நான் போய்க் கொண்டிருந்தேன்.” என்றாள்.

முகிலன் முகம் தெளிந்து, “ஓ…அது எப்படி அங்குப் போனது?” என்றான்.

அவந்திகா, “அது…” என்று ஆரம்பித்துச் சுருக்கமாகத் தான் பூமியில் அவந்திகாவாகப் பிறந்து மேகன் வந்து தன் தோழர்களைக் கடத்தி வந்தது வரை சொன்னாள். பவளனைப் பற்றிச் சொன்ன அவந்திகா, இருந்தும் நந்தனைப் பற்றிச் சொன்னாள் இல்லை.

இதனைக் கேட்ட முகிலன் பற்களை நரநரவென்று கடித்து, “வேறுலகம் சென்ற போதும் இந்தச் சுயநலமுற்ற யாளிகள் உன்னைக் கடத்தி வர முயன்றிருக்கிறது. இவர்களை.” என்று கோபமாக உறுமினான்.

அவந்திகா அவன்புரம் திரும்பி, “என் தோழர்களுக்கு இதுவரை எதுவும் நிகழவில்லை. ஆனால் எனக்கு அதிக நேரமில்லை. எதிர்பாராதவிதமாக என்னால் அவர்கள் இங்கு மாட்டிக் கொண்டனர். அதனால் மற்றது பற்றிப் பிறகு பேசலாம். இப்போது இந்தக் கிராம பிரச்சனையைப் பற்றிப் பேசலாம். இதன் பிறகு நான் அங்குச் செல்ல வேண்டும்.” என்றாள்.

முகிலன் அவந்திகாவிடம் மேலும் கேள்வி கேட்கவில்லை. ஆனால் முகிலனின் கண்கள் மதியின் கண்களைப் பார்த்து மீண்டது. உடனே மதி ஏதோ நினைவில் தீவிரமாகி, “சரி. இதற்கு மட்டும் கடைசியாகப் பதில் சொல் வன்னி. ஆன்ம இணைப்பில் இப்போது பேசினாயே! யாரந்த நந்தன்?” என்றாள்.

மதியின் கேள்வியைக் கேட்டதும் அவந்திகாவிற்கு, ‘திரும்பவுமா?’ என்று இருந்தது. கூடவே, ‘எனக்கே அவன் யாரென்று தெரியாதே!’ என்றும் இருந்தது. ‘என்னவென்று இவர்களிடம் சொல்வது?’ என்று திகைத்து யோசித்துக் கொண்டிருக்கும் போதே முகிலன் பேச ஆரம்பித்தான்.

அவள் பதில் சொல்லாமல் திருதிருவென விழிப்பதைப் பார்த்து,“இளவரசி. நாங்க ஏன் கேட்கிறோமென்றால், நீ யாளி உலகிலிருந்து சென்ற அடுத்த 100 வருடத்தில் நந்தன் என்ற பெயரில் ஒரு இரட்சன் உருவாகினான். அவன் எந்த வகை யாளி அரசுடனும் சேர மறுத்துவிட்டான்.

அவன் பல காலம் உயிர் நடமாட்டமே இல்லாத ஒரு தீவில் தனிக்காட்டு ராஜாப் போலக் குடியேறி வாழ்ந்து வருவதாகக் கேள்வி. இதுவரை அவன் எந்த வகை யாளி என்று யாருக்கும் தெரியாது. அவன் கையில் கைக்காப்பும் அணிந்திருக்க மாட்டான் என்று முன்பு அவனுடன் சண்டையிட்டு தோற்றவர்கள் சொல்லியிருக்கின்றனர். அதனால்.” என்று முழுதும் சொல்லாமல் கேட்டான்.

அவன் விளக்கத்தைக் கேட்ட அவந்திகா முகிலன் சொன்ன நந்தன் தனக்கு தெரிந்த நந்தனாக இருக்க அதிக வாய்ப்பிருப்பதை உணர்ந்து, அதிர்ந்து, “இரட்சன்??” என்று கேள்வியாகக் கேட்டாள்.

அதற்கு மதி, “ஆமாம் இரட்சன்தான். பார்க்க ஆண்மையுடனும் அழகுடனும் இருந்தாலும், சண்டையிடும்போது அவனது ஒவ்வொரு வாள் வீச்சும் கொஞ்சமும் இரக்கமே இல்லாமல் இரத்தம் குடிக்கக் கூடியது என்று அவனுக்கு அப்படியொரு பெயரை யாளி உலகில் சொல்லியிருக்கின்றனர். உன் தோழனுடைய பெயரும் அந்த இரட்சன் பெயரும் ஒன்றாக இருக்க எச்சரிக்கைக்காக நாங்க கேட்கிறோம்.” என்றாள்.

அவந்திகாவிற்கு, நந்தனை இரட்சனாக ஒரு நொடிக் கூட எண்ண முடியவில்லை. தயக்கமுடன், “அந்த நந்தனது வரைப்படம் இருக்கிறதா?” என்று கேட்டாள்.

அதற்கு இல்லை என்பது போல் மதி லேசாகத் தலை அசைத்தாள். முகிலன், “நாங்க அவனைப் பற்றிக் கேள்வியுற்றோம். ஆனால் அந்த இரட்ஷனை நேரில் நாங்க பார்த்ததில்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில், 4 சக்கர சக்தியும் 5 சக்கர சக்தியும் கொண்ட 1000 நபர்களின் ஆன்மீக இதய வேரை(spiritual Heart root), முற்றிலும் அழித்து, அவர்களைச் சாதாரண மனித யாளிகளாகச் சக்தியற்றாவர்களாக மாற்றிவிட்டான்.

அப்படியென்றால் அவனுக்கு எவ்வளவு சக்தி இருக்கும் என்று கற்பனையில் கூட யோசிக்க முடியவில்லை. சிலர் அவன் ஏற்கனவே ஏழு சக்கரங்களையும் அடைந்து முக்தி அடைந்தவன் எங்கின்றனர்.

இதற்கு மேலும், அவனுக்கு யாளி உலகம் எங்கும் ஒற்றர்கள் என்று கேள்வி. அதனால் இதனை அறிந்த அனைவரும் அவனைப் பற்றிப் பேசுவதை பொதுவாக விலக்கப்பட்டது(Taboo) என்று தவிர்க்கின்றனர்.” என்று குரலில் எந்த ஏற்ற இறக்கமும் இல்லாமல் சொன்னான்.

அதனைக் கேட்ட அவந்திகாவிற்கு வியப்பில் புருவங்கள் மேலேறியது. தன் சிநேகிதர்களை நோக்கி, “அவ்வளவு சக்தி வாய்ந்தவனா?” என்று பெருமூச்சுவிட்டு, “எது எப்படியோ. அப்படியொரு எல்லையற்ற சக்திக் கொண்டவன், என்னைத் தேடி வந்து என்னுடன் நட்புக் கொண்டு அவனுக்கு என்ன வரப் போகிறது.

என்னிடம் என்று கொள்ளைக் கொள்ள எதுவுமில்லை. என் உயிரைத் தவிர. முன்பாவது என் உடல் பரியாளி அதனோடு விஷேச வெள்ளிவேர் எலும்பு(Silver bone root) என் உடலில் இருந்தது. இப்போது நான் ஒரு சாதாரண மனிதப் பெண். அதற்கு மேலும் இயற்கை நிதிப்படி இந்த உடல் என்னுடையதும் அல்ல. நான் எதற்குக் கவலைப் பட வேண்டும்” என்றாள் விட்டேற்றியாக.

அவள் சொல்வதும் சரிதான். என்பது போல் உணர்ந்த மதியும் முகிலனும், “ம்ம்.” என்று தலை அசைத்தனர்.

முகிலன், “எதற்கும் உன் புது நணபர்களிடம் எச்சரிக்கையாய் இரு. உனக்கு இங்கு வர உதவிய போதும் பவளன் ஏன் பூமிக்கு வந்தான் என்று தெரியவில்லை. அவனிடமும் எச்சரிக்கையாய் இரு.” என்றான்.

அதற்குப் புன்னகைத்த அவந்திகா, “ம்ம். சரி. பவளன் நாளை இங்கு வருவான். அப்போது அவனை நீங்களும்தான் பார்க்கப் போகிறீங்க.” என்றாள்.

அதனைக் கேட்ட மதியும் முகிலனும் கேள்வியாய் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் இருவருமே எதுவும் கேட்கவில்லை. அவர்களையே பார்த்திருந்த அவந்திகாவின் கண்ணிலிருந்து இது தப்பவில்லை.

இருந்தும் அதுகுறித்து கேட்காமல், “சரி இப்போது இந்த கிராமம்பற்றிப் பேசலாமா?” என்று கேட்டாள் அவந்திகா.

“சரி.” என்றாள் மதி.

அவந்திகா மதியிடம் திரும்பி, “முன்பு வரைந்த அந்த 5 முனை நட்சத்திரத்தை உருவாக்கு.” என்றாள்.

மதியும் காற்றில் மஞ்சள் நிற ஒளிக் கோடாக நட்சத்திரத்தையும் ஒவ்வொரு முனையிலும் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களையும் வரைந்தாள்.

அதனைப் பார்த்த அவந்திகா, அவள் பங்காக வெள்ளை நிற ஒளி கோடாக, எத்தனை நாட்களுக்கு முன் அவர்கள் அப்படி நினைவிழந்தனர் என்பதையும் குறித்தாள். அதனோடு அவர்களின் உடலில் தெரிந்த குறைபாடுகளையும் முனுமுனுத்தப்படியே எழுதினாள்.

“முதல் பெண் அமுதா கிட்டத்தட்ட 87 நாட்களுக்கு முன் பாதிக்கப் பட்டிருக்கிறாள். பரிசோதித்ததில் அவளது இடது காது செயலிழந்திருந்தது.

இரண்டாமவள் 77 நாட்களுக்கு முன் உறங்க ஆரம்பித்திருக்கிறாள். அவளது வலது காது செயலிழந்திருந்தது.

மூன்றாமவள், 67 நாட்களுக்கு முன் நினைவிழந்தாள். அவளது இடது கண் கருப்பாவையின்றி வெண்ணிறமாகியிருந்தது.

நான்காமவள், 57 நாட்களுக்கு முன் மயங்கியிருந்தாள். அவளது வலது கண் கருப்பாவையின்றி வெண்ணிறமாகியிருந்தது.

ஐந்தாமவள் 47 நாட்களுக்கு முன்பிருந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள். அவளது இடது மூக்குதுவாரம் செயலற்று வலது துவாரத்தில் மட்டுமே காற்று சுவாசம் நடக்கிறது.

ஆறாமவள் 37 நாட்களுக்கு முன் உறங்கியிருக்கிறாள். அவளது வலது மூக்குதுவாரம் செயலற்று இடது துவாரத்தில் மட்டுமே காற்று சுவாசம் நடக்கிறது.

ஏழாமவள் 27 நாட்களுக்கு முன் நினைவிழந்தாள். அவளது நாவின் அளவு சிறிதாக மாறியிருந்தது. அதனோடு அவள் வாய் மூலமாகக் காற்று புகாமல் வாய்வழி சுவாசம் சுத்தமாக இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.” என்று முதல் 7 பேரை எழுதியவள் மதி மற்றும் முகிலனிடம் திரும்பி,

ஆனால், “எட்டாவதாகவும் ஒன்பதாவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்களில் வெளிப்படையாக எந்தப் பாதிப்பும் தெரியவில்லை. அவர்களின் உள்ளுறுப்பு பாதிப்புற்றிருக்குமோ?” என்று முகவாயில் கைமுஷ்டியாக்கி வைத்தவிதமாக அவர்களைக் கேட்டாள்.

Advertisement