Advertisement

அத்தியாயம் – 25

“அதனோடு கடைசியாக அவர்கள் இப்படி மாறுவதற்கு முன் அவர்கள் செய்த செயல், என்று இவைகுறித்து தகவல் இருக்கிறதா?” என்று கேட்டாள் அவந்திகா.

முகிலன் தன் நெற்றியை தடவியவிதமாக, “பழக்க வழக்கம், விருப்பு வெறுப்பு பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் விசாரித்ததில் சில ஒற்றுமைகளை உணர்ந்தேன். எல்லா பெண்களும் 18லிருந்து 24 வயது வரையிலான தோற்ற மற்றும் எலும்பு வயதுள்ளவர்கள்(1).

அனைவரும் தலைத்து பிறந்த பெண்கள். அவர்களுடன் பிறந்தவர்கள் என்று குறைந்தது ஒருவராவது இருந்தனர்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே முகிலனின் பேச்சைத் தடைச் செய்வதுப் போல, “பாதிக்கப்பட்ட அக்காக்கள் எல்லோருக்கும் திருமணம் நிச்சியிக்க பட்டிருந்தது. என் அக்காவுக்கும் கூட” என்றது ஒரு பருவ பெண்ணின் குரல்.

முகிலன் சொல்வதை கேட்டிருந்த அனைவரும் அன்னிச்சை செயலாக அந்தப் பெண்ணின் குரல் வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தனர். அங்கு அறை கதவின் மறைவில் 16 வயது பெண் சிறிது கூச்சமுடன் அவ்வப்போது எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

நிமிர்ந்து தன் இளைய மகளைப் பார்த்த வேதன் கனிவாக, “உள்ளே வா விது. ஏன் கதவு மறைவில் நிற்கிறாய்?” என்று அழைத்தார்.

பின் அறையிலிருந்த மற்றவர்களிடம், “பேசும்போது தடை செய்ததாக என் மகளைத் தவறாக நினைக்க வேண்டாம். இவள் என் இளைய மகள் விதுனா. அவள் அக்கா அப்படி ஆனதிலிருந்து என் இளைய மகள் மிகவும் கலங்கி போயிருக்கிறாள். அதனால் இடம் பொருள் அறியாது பேசிவிட்டாள்.” என்று மன்னிப்புகோரும் குரலில் கூறினார்.

அதற்கு, “பரவாயில்லை ஐயா. விதுனா, உள்ளே வாமா.” என்றாள் அவந்திகா.

தன் தந்தையின் குரலிலும் அவந்திகாவின் மென்னகையிலும், மெல்ல தயங்கி தயங்கி உள்ளே வந்த விதுனா, “ம…மன்னித்துவிடுங்க ரிஷிமுனிகளே.யோசிக்காமல் எனக்குத் தெரிந்ததை உடனே சொல்லிவிட்டேன்.” என்று அவள் பங்கிற்கு ஒருமுறை கை வணங்கிச் சொன்னாள்.

பின் தன் தந்தையின்புரம் திரும்பி, “அப்பா, காலை உணவு தயாராகி விட்டது. விருந்தாளிகளை அழைத்துக் கொண்டு அம்மா சாப்பிட வரச் சொன்னார்கள்” என்றாள்.

அதற்கு, “சரிமா. நீ போ. நாங்க வருகிறோம்.” என்று தன் மகளை அனுப்பியவர், பின் அறையிலிருந்த மதியையும் முகிலனையும் நோக்கி, “ரிஷிமுனிகளே, சாப்பிட்டுக் கொண்டே பேசலாமா. உங்க தோழி மனித யாளி என்பதால் அவருக்குப் பசித்திருக்கும். அதனால்…” என்று அவந்திகாவையும் ஒரு பார்வைப் பார்த்துக் கேட்டார் வேதன்.

முகிலன் அப்போதுதான் அவந்திகா மனிதப் பெண் என்பதை உணர்ந்து, “சரிங்க வேதன். போகலாம்.” என்றான்.

வேதன் உடனே தன் இருக்கையிலிருந்து எழுந்து அவர்களுக்கு வழிக்காட்டும்விதமாக முன் நடந்தார். முன் வேதன் நடக்க, அவந்திகாவும் முகிலனும் தோளோடு தோளாக அவர்பின் நடக்க, இறுதியாக மதி நடந்து வந்தாள்.

நடந்த விதமாக, முகிலன் அவந்திகாவின் பக்கம் திரும்பி, “அவந்தி, பசிக்குமென்றால் என்னிடம் சொல்லியிருக்கலாமே. பசியோடு எப்படி நாம் தெளிவாகச் சிந்திக்க முடியும்.” என்று கேட்டான். அதற்கு என்ன சொல்வதென்று புரியாமல், வெற்று புன்னகையாகச் சிரித்தாள் அவந்திகா.

முகிலனின் கேள்விபின் வந்துக் கொண்டிருந்த மதியின் காதிலும் விழ, அவள் கண்களை உருட்டி, “எல்லோரும் உன்னைப் போல நினைத்தாயோ. பசியென்றால் ஒரு பெரிய அண்டா அளவு உணவை உண்டு ஏப்பம் விட்டால்தான் உனக்கு மற்ற யோசனையே வரும்.” என்று எள்ளி நகையாடினாள்.

அவள் குரலில் திரும்பிய முகிலன் அவள் சொன்னதன் அர்த்தம் புரிந்து, “யாரை சாப்பாட்டு ராமன் என்கிறாய். நீ தான் விட்டால் உலகையே மென்று தின்றுவிடும் சாப்பாட்டு ராமன்.” என்று அவளிடம் சண்டையிட ஆரம்பித்தான்.

அவர்கள் மீண்டும் அடுத்த சண்டையை ஆரம்பிப்பது உணர்ந்து தலையை மறுப்பாக அசைத்துப் பெருமூச்சுவிட்டு, எதுவும் சொல்லாமல் அவர்கள் இருவரையும் விட்டு முன்னே சென்ற வேதனுடன் நடக்க ஆரம்பித்தாள் அவந்திகா.

“வேதன் ஐயா. உங்க இளைய மகளிடம் நான் கொஞ்சம் பேச வேண்டும். நாம் சாப்பிட்டு முடித்தப் பின் அவளை என் அறைக்கு அனுப்புகிறீர்களா?” என்றாள் அவந்திகா.

அதற்கு அசடு வலிவதுப் போலத் தலையைச் சொறிந்த வேதன், “அவள் ஏதோ அறியா பெண். அவளிடம் நீ என்னமா பேசப் போகிறாய்.” என்று அவள் வேண்டுகோளுக்கு மறுப்பதுப் போல் சொன்னார். அப்போது ஒரு பெண் இடுப்பில் ஒரு குழந்தையும், ஒரு கையில் உணவு தட்டுடனும் அவர்களைக் கடந்துச் சென்றாள்.

அவந்திகாவையோ, அல்லது முகிலன், மதியையோ அவள் கண்டுக் கொண்டதுப் போலத் தெரியவில்லை. ஏன் வேதன் கூட அவள் கண்ணில் படவில்லை. தலை தாழ்த்தி எங்கும் கவனம் இல்லாமல் சென்றுக் கொண்டிருந்தாள். குறைந்தது 26 வயதேனும் தோற்ற வயதுடையவள் போல இருந்தாள்.

அவந்திகாவிற்கு அவளது சோகமான முகம் என்னமோ சொல்ல, அன்னிச்சை செயலாக வேதனின் இளைய மகளைப் பற்றி மறந்து, “யாரந்த பெண் ஐயா.” என்றாள் ஆர்வமாக.

பேச்சில் ஏற்பட்ட மாற்றம் உணர்ந்து, அவந்திகா காட்டிய திசையில் திரும்பிப் பார்த்த வேதன் ஒரு பெருமூச்சுவிட்டு, “அவள் என் அண்ணன் மகள். சில மாதங்களுக்கு முன்தான் அவளுக்குக் குழந்தைப் பிறந்தது. அவள் குழந்தை பிறந்த சில வாரங்களிலே அவள் கணவர் எதிர்பாராத விதமாக இறந்துவிட அவள் இங்கேயே இருக்கிறாள்.” என்று விளக்கம் தந்தார்.

“ஓ…” என்று யோசனையாக மீண்டும் திரும்பிப் பார்த்த அவந்திகா, “அதனால்தான் அவள் கண்ணில் அப்படியொரு வெறுமையோ!?” என்றாள் முனுமுனுப்பாக. அதற்குள் தாழ்வாரத்திற்கு வந்துவிட்டிருந்தது. அவர்கள் அனைவரும் தரையில் சமனமிட்டு சாப்பிட அமர்ந்தனர்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மீண்டும் வேதனிடம், “ஐயா, விதுனா இந்த ஊர் பெண். நாங்க பாதிக்கப்பட்ட பெண்களைப் பார்க்கப் போக இருக்கிறோம். அவள் உடன் வந்தால் கொஞ்சம் உதவியாக இருக்கும். அவளை எங்களுடன் அனுப்ப முடியுமா?” என்று கேட்டாள் அவந்திகா.

அதற்கு ஏனோ வேதன் சில நொடி தயங்கினார். பின், “சரிமா. அவளைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கோங்க. வினோதா, என் முதல் மகள் இப்போது நினைவிழந்து இருக்கிறாள். எனக்கு இப்போது இருப்பது விதுனா மட்டும்தான். அதனால் கொஞ்சம்…” என்று தன்னிலை விளக்கம் தந்தார்.

அவர் தயக்கம் புரிய, “கவலை வேண்டாம் ஐயா. உங்க இரு பெண்களும் நலமுடன் நூறு வருடமேனும் வாழ்வர்” என்று தைரியம் கொடுத்தாள் அவந்திகா. அவளது பதிலில், வேதனின் கண்ணில் ஒளி பெருகி, முகம் மலர்ந்தது.

விதுனா, அவள் அம்மாவுடன் அனைவருக்கும் உணவு பரிமாறியப் போதும், அவ்வப்போது அவந்திகாவை ஏதோ தயக்கமும், நாணமும், கலக்கமும் கலந்து பார்த்துக்கொண்டிருந்தாள். விதுனாவின் செயல் அவந்திகாவின் முகத்தில் புன்னகை அரும்ப செய்தது.

மதி மற்றும் முகிலனின் சண்டை எப்போது அடங்கியதோ தெரியவில்லை. அவந்திகா வேதனிடம் பேசி முடித்து அவர்களை நோக்கித் திரும்பியப் போது அவர்கள் இருவரும் அமைதியாக உண்டுக் கொண்டிருந்தனர். முகிலனின் முகம் கடுகடுப்பை காட்ட, மதியின் முகம் அலட்சியமான தோற்றத்தில் இருந்தது. ‘இவர்களை என்ன செய்வது?’ என்று மற்றொரு முறையாக நினைத்தாள்.

அவர்கள் இருவரும் இன்னமும் உண்டுக் கொண்டிருக்க முதலில் அவந்திகா பந்தியிலிருந்து எழுந்து வெளியில் கைக்கழுவும் இடத்திற்கு வந்தாள். அங்குக் கைத்துடைக்கும் துண்டுடன் விதுனா நின்றிருந்தாள். அவந்திகாவைப் பார்த்ததும் முகம் மலர, “அக்கா…” என்று அழைத்தாள்.

அவளிடமிருந்து துண்டை வாங்கி கைதுடைத்த அவந்திகா, “ம்ம்? சொல்லு விதுனா.” என்றாள்.

அவந்திகாவின் இதமான பேச்சு விதுனாவிற்கு தைரியம் தர, “அக்கா, என் அக்கா மீண்டும் வந்துவிடுவாள்தானே அக்கா.” என்றாள் முகத்தில் சிறு படப்படப்புடன்.

அவளை நிமிர்ந்து பார்த்த அவந்திகா, “ம்ம்…வந்துவிடுவாள். அதற்கு நீ எனக்குக் கொஞ்சம் உதவி செய்ய வேண்டும்.” என்று கண் சிமிட்டினாள்.

உடனே முகம் மலர்ந்து, “என்ன உதவி அக்கா. எதுவென்றாலும் நான் செய்கிறேன். என் அக்கா எவ்வளவு அழகாக இருக்கிறாள் தெரியுமா. என் அக்காவிற்கு போன வாரம்தான் திருமணம் நிச்சயம் ஆனது. என் அக்காவுக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது. அவருக்கும் என் அக்காவைப் பிடித்திருந்தது.

ஆனால் அவளுக்கு இப்படி ஆனதும் அவளைத் திருமணம் செய்துக் கொள்வதாகச் சொன்ன பக்கத்து ஊருக்காரர், எனக்கு உங்க பெண்ணைத் திருமணத்திற்கென்று பார்க்க வந்ததாக நினைவே இல்லை என்றுவிட்டார்.” என்று சோகமாகச் சொன்னாள்.

விதுனாவின் விளக்கத்தைக் கேட்டவிதமாக அவந்திகா தன் அறை நோக்கி நடந்தாள். நடந்தவிதமாக, “அப்படியா. ஒருவேளை அவர் பயந்துவிட்டாரோ என்னமோ.” என்று இயல்பாகக் கேட்டாள்.

அவந்திகாவுடன் நடந்து அவள் அறைக்கு வந்த விதுனா தொடர்ந்து, “இல்லை அக்கா. அப்படி ஒன்றும் தெரியவில்லை. என் அக்கா மட்டுமல்ல, என் அக்காவைப் போல ஆன மற்ற 8 அக்காக்களின் பெண் பார்த்துவிட்டுச் சென்ற மாப்பிள்ளைகளும் பெண் பார்த்துச் சென்ற சம்பவமே நினைவில்லை என்று சொல்லிச் சென்றுவிட்டனராம்.

உண்மையிலே அவர்கள் மாறந்திருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது.” என்று பாதி புரிந்தும் பாதி புரியாமலும் தன் சந்தேகத்தை அவந்திகாவிடம் கேட்டாள்.

அதனைக் கேட்ட அவந்திகாவின் கண்ணில் ஒரு ஒளி மின்னல் பரவி மீண்டு, “அதெப்படி உனக்குத் தெரியும்.?” என்று விதுனாவைப் பார்த்துக் கேட்டாள்.

விதுனா சிறுப்பிள்ளையின் குணம் மாறாமல், “எனக்கு எல்லாம் தெரியும். ஒவ்வொருமுறை இப்படி ஆகும் போதும் பாதிக்கப்பட்ட அக்காவின் வீட்டிலிருந்து இப்படி திருமணம் நிறுத்தியது மட்டுமல்லாமல், அப்படிப்பட்ட பேச்சு நடந்ததாகவே நினைவில்லை என்று வந்த எல்லா மாப்பிள்ளைகளுமே சொன்னதாக என் அப்பாவிடம் அனைவருமே வந்து நீதி கேட்டுச் சென்றிருந்தனர்.

நான்தான் எப்போதும் வீட்டு முற்றத்தில் அமர்ந்து ஓவியம் வரைந்துக் கொண்டிருப்பேனே. அதனால் அவர்கள் அழுகையுடன் வந்து சொல்லிவிட்டு போகும்போது நான் அவர்களைப் பார்த்திருக்கிறேன். என் அக்கா மட்டுமல்ல. எல்லா அக்காக்களையும் காப்பாற்ற வேண்டும் அக்கா.” என்று ஏனோ அவந்திகாவால்தான் எல்லாம் முடியும் என்ற நம்பிக்கையுடன் கேட்டாள்.

விதுனாவின் நம்பிக்கையுடனான முகத்தைப் பார்த்த அவந்திகா அவளது தலையை வருடி, “நிச்சயம் காப்பாற்றிவிடலாம். கவலை படாதே. உனக்கு யார் முதலில் இப்படி பாதிக்கபட்டார்கள் என்று தெரியுமா?” என்று கேட்டாள்.

வேகமாக ஆமாம் என்பதுப் போல் தலையாட்டி, “ம்ம். தெரியும் அக்கா. முதலில் அமுதா அக்கா…” என்று விரல் விட்டு எண்ணி, “கடைசியாக என்னுடைய அக்கா வினோதாதான் பாதிக்கப் பட்டது.” என்று ஒன்பது பேரையும் வரிசையாகச் சொன்னாள்.

பெயரை மட்டுமல்லாமல் வரிசையையும் சரியாக நினைவில் வைத்திருந்த வினோதாவின் ஞாபகச் சக்தியை நினைத்து வியந்த அவந்திகா, “நீ சமத்தாக இருப்பாய் போல, தெளிவாக அனைவரையும் நினைவில் வைத்திருக்கிறாய்.” என்றாள் அவந்திகா.

அதனைக் கேட்ட விதுனா, கிளுக்கி சிரித்து உடனே முகம் சோர்ந்து, “என் அக்காவும் அப்படிதான் சொல்லுவாள்.” என்றாள்.

இப்படியாக அவந்திகா விதுனாவுடன் பேசிக் கொண்டிருக்க, சாப்பிட்டு முடித்துவிட்டு முகிலனும் மதியும் அவந்திகாவின் அறைக்கு வந்தனர். எலியும் பூனையுமாக ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு அவர்கள் வருவதைப் பார்த்துச் செய்தவறியாது தன் தலையினை தடவியபடி அவர்கள் அருகில் சென்றாள் அவந்திகா.

“ரிஷிமுனிகளே. நாம் பாதிக்கப்பட்ட பெண்களை இப்போது பார்க்கப் போகலாம். அங்கு அனைவர் முன்னிலையிலும் தயவு செய்து என்முன் போல் சண்டையிட்டு நேர விரயம் செய்ய வேண்டாம்.” என்று கெஞ்சும் பார்வையில் சொன்னாள் அவந்திகா.

அவளது வேண்டுதலில், மதி, முகிலன் இருவருமே ஒருவரை ஒருவர் காரண பார்வைப் பார்த்துக் கொண்டனர். பின் ஒருசேர, “சரி.” என்றனர்.

அதனைக் கேட்ட அவந்திகா பெருமூச்சுவிட்டு, விதுனாவின்புரம் திரும்பி, “வா விதுனா. நாம் போகலாம். நீ இப்போது சொன்ன வரிசையில் எல்லோரையும் பார்த்துவிட்டு அவர்களிந் வீட்டில் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டுவிட்டு வரலாம்.” என்று முன்னோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

இவ்வாறாக 4 நபர்களும், வேதன் அனுப்பிய ஒரு பணியாளும் ஒன்றாக ஒவ்வொரு பெண்களின் இல்லத்திற்கும் சென்றனர். கிட்டத்தட்ட 4 முழு தினங்களுக்குப் பின் 9 பெண்களைப் பற்றியும் விசாரித்ததில் அவந்திகாவிற்கும், மதி மற்றும் முகிலனுக்கும் சில விவரங்கள் புரிந்தது.

அவந்திகாவின் அறையில் இருந்த இரு நாற்காலிகளில் மதியும் முகிலனும் அமர்ந்திருக்க அவந்திகா மெத்தை மீது அமர்ந்திருந்தாள். அவர்களுடன் 4 நாட்களாக அலைந்திருந்த விதுனா, “நான் எல்லோருக்கும் தேனீர் எடுத்து வருக்கிறேன்.” என்று சிட்டெனக் குதித்துக் கொண்டு அந்த அறையிலிருந்து வெளியில் சென்றாள்.

அவள் வெளியில் சென்றதும், கதவை அடைத்துத் தாழிட்ட அவந்திகா தன் ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் நீட்டி, அந்த அறையைச் சுற்றி ஒலி அடைக்கும் சக்கரம் (Silent Array) (2) வரைந்தாள்.

பின் மதியையும் முகிலனையும் நோக்கி, “நீங்க இதுவரை விசாரித்ததில் என்ன நினைக்கிறீங்க.?” என்று கேட்டாள்.

மதி, “பாதிக்கப்பட்ட பெண்களின் இல்லங்கள் எல்லாம் ஒரே சீரான மாதிரி(pattern)யில் இருக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் 5 முனைக் கொண்ட நட்சத்திரம்போல (3)இருக்கிறது.” என்று மஞ்சள் நிற ஒளிக் கோடாகத் தன் கை ஆட்காட்டி விரலில் ஆன்மீக ஆற்றலைக் கொண்டு காற்றில் நட்சத்திரம் வரைந்தாள்.

பின் ஒவ்வொரு நட்சத்திர முனையிலும் ஒவ்வொரு பெண்ணின் பெயரையும் எழுதியவள் கடைசியாக இன்னமும் பாதிக்கப்படாத பெண்ணின் வீடு இருந்த நட்சத்திர முனையில் கேள்விக் குறி வரைந்தாள் மதி.

“ம்ம்…” என்று தன் முகவாயில் கைமுஷ்டி மடக்கி யோசனையாகக் காற்றில் தெரிந்த நட்சத்திரத்தைப் பார்த்த அவந்திகா, “நானும் அதனை உணர்ந்தேன். இந்த நட்சத்திரம், உயிர் உறுஞ்சும் சக்கரமுடன்(Soul Absorbing Array) வெகுசமார்த்தியமாக இணைத்திருக்கின்றனர். அது அவ்வளவு எளிதல்ல. அவர்களின் நோக்கமும் சாதரணமானதாக இருக்க முடியாது.” என்றாள்

முகிலன் கண்ணில் தீவிரமுடன், “உண்மைதான். அனைவருமே காட்டின் அருகிலிருந்து ஓடையிலிருந்து தங்கள் வீட்டுக்கு நீர் எடுத்து வரக் கூடியவர்கள். அப்படி போனவர்கள் எதனாலோ அந்தத் தாமரை குளம் சென்றிருக்க வேண்டும். அவர்களையும் அறியாமல் அந்தத் தாமரை குளத்திலிருந்து உயிர் உறுஞ்சும் சக்கரத்துடன் அவர்கள் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.” என்றான்.

அங்கிருந்த டீபாய் மீதிருந்த தண்ணீரை எடுத்து அருந்தியவிதமாக அவந்திகா, “நீ சொல்வது சரிதான். ” என்று சில நிமிடம் அனைவருமே யோசனையில் ஆழ்ந்தனர்.

அப்போது அறை கதவு தட்டப்பட முகிலன் கதவைத் திறந்தான். விதுனா தேனீரை அனைவருக்கும் தந்தாள். பின் “அக்கா. நான் என் அம்மாவுக்கு உதவி செய்யப் போகிறேன். ஏதேனும் வேண்டுமென்றால் நான் வீட்டு பின்புரத்தில் இருப்பேன். ஒரு குரல் கொடுங்க.” என்றாள்.

அவளது தலையை வருடிய அவந்திகா, “சரிமா. நீ போ. வேண்டுமென்றால் நான் உன்னை அழைக்கிறேன்.” என்றாள்.

அவள் வெளியில் போகும் வரை பார்த்திருந்த முகிலன் யோசனையாக விதுனா போன திசையைப் பார்த்து, “பாதிக்கப்பட்ட அனைவருமே இளைய சகோதரி உடையவர்களாகவும், தன் சகோரிகள் மீது அன்பும் அக்கறையும் உடையவர்களாகவும் இருந்திருக்கின்றனர். அனைவருமே நினைவிழக்கும் முன் எந்தக் குறையுமின்றி நல்ல உடல் ஆரோகியத்துடன் இருந்திருக்கின்றனர்.” என்றான்.

அவந்திகாவிற்கும் இந்த ஒற்றுமை முதல் மூன்று பெண்களைப் பார்த்ததுமே புரிந்தது. முகிலன் சொல்வது சரி என்பது போல, “ம்ம்” என்று தலையசைத்தாள்.

ஆவி பறக்க இருந்த தேனீர் கிண்ணத்தின் மேல் பறந்த சூடான காற்றை ஊதியபடி, மதி, “பல நாட்கள் உறங்கி இருந்தப் போதும் அவர்கள் எந்த இயற்கை தேவைகளையும் எதிர் நோக்கி இல்லை. உணவும் உண்ணவில்லை.

இருந்த போதும் அவர்களின் உயிர் எதற்காகவோ யாராலோ இன்று வரை பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. இப்படி எது நாள்வரை அவர்கள் உயிருடன் இருப்பர் என்பது!!” என்று யோசனையாகச் சொன்னவிதம் ஒரு மிடறு தேனீர் அருந்தினாள்.

அதற்கு அவந்திகா, “ஒருவேளை கடைசி பெண்ணும் உயிர் உறுஞ்சும் சக்கரமுடன் இணைந்துவிட்டால் அனைவரும் இறந்துவிட வாய்ப்பிருக்கிறது. ஆனால் எப்போது அடுத்த பெண் பாதிக்கக்கூடும் என்பது…” என்றவளின் முகம் லேசாக வியர்த்துவிட்டது. ‘அது நடக்க விடக் கூடாது.’ என்று தன் மனதுள்ளே நடந்தாள்.

அப்போது மனதில் ஏதோ கணக்கு போட்ட விதமாக இருந்த முகிலன் உடனே முகம் மலர்ந்து, “அவந்தி, ஒவ்வொருவர் உறங்க ஆரம்பித்த தேதியைக் கொண்டு ஒன்று கண்டுபிடித்துவிட்டேன். அவர்கள் அனைவருமே செந்நிலவின் பௌர்ணமி தினங்களிலே அவர்கள் முதலில் நினைவிழந்து இன்று வரை உறங்கிக் கொண்டிருக்கின்றனர்.” என்றான்.

யாளி உலக வெண்ணிலவு பூமியில் உள்ள நிலவைப் போல 28 நாட்களுக்கு ஒருமுறை பௌர்ணமியை தரும். ஆனால் செந்நிலவு 10 தினங்களுக்கு ஒரு பௌர்ணமியை தரும். அந்தச் செந்நிற பௌர்ணமியிலே அந்தப் பெண்கள் முதலில் வசம் இழந்திருக்கின்றனர்.

மதி தேனீர் அருந்திவிட்ட கிண்ணத்தை டீபாய் மீது வைத்துவிட்டு, “இன்னும் மூன்று தினங்களில் அடுத்த சிவப்பு பௌர்ணமி.” என்றாள்.

முகிலனின் கணிப்பை ஏற்கனவே யூகித்துவிட்டிருந்த அவந்திகா, மதி மற்றும் முகிலனுக்கு, “ம்ம். ” என்று ஏதோ முடிவடுத்தவள் போல், “அன்று உண்மையில் பாதிக்கவிருக்கும் பெண்ணுக்குப் பதிலாக நம்முள் ஒருவர் நடிக்க வேண்டும். அப்போதுதான் விபரீதம் ஏற்படாமல் தடுக்க வாய்ப்பிருக்கும்.” என்று தலை அசைத்தாள்.

அப்போது, “இளவரசி.” என்று ஆன்ம இணைப்பில் பவளன் அழைத்தான். அவந்திகாவின் முகம் அவளைச் சுற்றியிருப்பவர்களையும் மறந்து பிரகாசமானது.

Author Note:

(1) தோற்ற வயது- தற்போது பார்பதற்கு எந்த வயதில் தோற்றமளிக்கிறார்களோ அது. எலும்பு வயது – அவர்கள் பிறந்ததிலிருந்து இன்று வரை ஆன வயது.

(2) ஒலி அடைக்கும் சக்கரம் – Silent Array – it blocks the sounds/talk leaking out of the particular location. அந்தச் சக்கரத்திற்குள் இருப்பவர்கள் பேசுவது வெளியில் இருப்பவர்களுக்குக் கேட்காது.

(3) 5 முனைக் கொண்ட நட்சத்திரம்

 

Advertisement