Advertisement

அத்தியாயம் – 24

அவளது செயலில் மேலும் இதழ் விரிய, “சரி.” என்று அவள் கைப்பற்றி அழைத்துச் சென்றான். சத்திரத்தில் அப்போதுதான் உணவு பந்தல் போட ஆரம்பித்திருந்தனர். பாவனாவும் மேகனும் அதிக நேரம் காத்திருக்காமல் பலரோடு அமர்ந்து உணவு உண்ண ஆரம்பித்தனர்.

வாழை இலையும் அதில் பலவித பலகாரங்களும் வைக்கப்பட பாவனா “இப்படி எல்லோருடனும் அமர்ந்து சாப்பிடும்போது ஏதோ எங்க ஊர் திருமண விழாப் போலத் தோன்றுது” என்று உச்சுக் கொட்டிக் கொண்டு சாப்பிட ஆர்மபித்தாள்.

அதற்குப் புன்னகைத்த மேகன் எதுவும் பேசவில்லை. அது இரவு தொடங்கும் நேரம் என்பதால் அந்த உணவு பந்தல் முழுதும் வெளிர் நீல நிற ஒளி குழல்கள் ஒவ்வொரு தூணிலும் பொருத்தப்பட்டு அந்த இடத்திற்கு ஒளி கொடுத்துக் கொண்டிருந்தது.

பாவனா உணவே கவனமாக இருக்க, மேகன் அவர்களைச் சுற்றி யாரும் சந்தேகம் தரும்படி இருக்கிறார்களா என்று அதில் பாதியும் பாவனாவின் மீது பாதி கவனமுமாக உண்டுக் கொண்டிருந்தான்.

இந்த 15 நாட்களில் மேகன் பாவனாவை நன்கு புரிந்திருந்தான். அதிகம் சாப்பிடுகிறாளோ இல்லையோ. சாப்பிடுவதை இரசித்து சாப்பிடுகிறாள். பசி வந்தால் பொறுக்க மாட்டேன் என்கிறாள். நேரத்திற்கு உறங்கிவிடுகிறாள்.

அவள் அதிகம் பேசுவதென்றால் சாப்பிடும் போதும் மட்டுமே. ஏனோ முதலில் இருந்த துடுக்குதனம் அவளுள் இப்போது குறைந்து கிட்டத்தட்ட இல்லை என்பது போல் மாறியிருக்க மேகன் சோர்ந்தான். ஆனால் அவளிடம் எதுவும் கேட்டான் இல்லை. என்ன செய்து பாவனாவை பழையபடி மாற்றுவதென்று அவனுக்குத் தெரியவில்லை.

அப்போது பாவனா, “ஏய் குதிரைவால், எனக்கொரு சந்தேகம்” என்று தன் இலையில் கடைசியாக இருந்த வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்தவிதமாகக் கேட்டாள்.

அவள் குரலில் அவள்புரம் திரும்பிய மேகன், “என்ன?” என்றான்.

“ஒருவேளை என்னால் உன் குருவின் பிரச்சனையைச் சரிச் செய்ய முடியவில்லையென்றால் என்ன நிகழும். எனக்குதான் எந்தப் பூர்வ ஜன்ம நினைவும் இல்லையே!” என்று வாழை பழத்தை மென்றபடி கேட்டாள்.

அவள் கேள்விக்கு மேகனுக்குமே பதில் தெரியவில்லை. ‘பிரச்சனை பெரியது என்பதாலும், யாளி உலகில் வேறு யாராலும் அதனைத் தீர்க்க முடியாமலும்தான் 20 வருட கால தாமதம் ஆனப் பிறகும் கூட வன்னியை இங்கு அழைத்து வரப் போராடினர். அப்படியிருக்க பாவனாவால் உதவ முடியவில்லை என்றால் என்ன நிகழும்.’ என்று அவனுமே சிந்தனையில் ஆழ்ந்தான்.

அவன் இன்னமும் யோசனையில் இருப்பதை பார்த்து, “மேகன், என்னால் பலன் இல்லையென்றால் என்னைக் கொன்று விடுவார்களோ! அதனால்தான் பதில் சொல்லாமல் மௌனமாக இருக்கிறாயா?” என்றாள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல்.

அவளது பதிலில் அவன் இதயம் நின்று துடிக்க அதிர்ந்து அவசரமாக, “இல்லை. இல்லை அப்படியெல்லாமல் இருக்காது பவி. உன்னைப் பூமிக்கே மீண்டும் கொண்டு சேர்த்துவிடுவோம்.” என்று சொன்னவன், மனதில், ‘என்று நினைக்கிறேன் பவி. எது எப்படியோ உனக்கு எது நேரவும் நான் விடமாட்டேன்.’ என்று நினைத்தான்.

அவள் சாப்பிட்டு முடித்தவள் போலவும் அவன் பதில் காதில் விழாதவள் போலவும்அவள் இருக்கையிலிருந்து எழுந்து அவனுக்குப் பதில் சொல்லாமல் தண்ணீர் இருக்கும் இடம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள். மேகனும் அவள்பின் அமைதியாக நடந்தான்.

பின், அங்கிருந்த பணியாளிடம் சில வெள்ளி காசுகளைக் கொடுத்து ஒரு அறையைப் பதிவு செய்தவன், பாவனாவை அழைத்துக் கொண்டு அவர்களுக்கான அறைக்குச் சென்றான். அவர்கள் அறைச் சென்றதும் அமைதியாக அங்கிருந்த மெத்தை மீது அமர்ந்து மேகனை பார்த்தாள் பாவனா.

“ஏய் குதிரைவால், எனக்கு எது நடந்தாலும் சரி. கார்திக்கை மட்டும் எப்படியாவது பூமி சேர்த்துவிடு.” என்றவள் மனதில்,

‘நீ இங்கு இருப்பதால், இங்கேயே இருந்தாலும் பரவாயில்லை. இறந்தாலும் பரவாயில்லை. நீ என்னிடம் பூமியில் இருந்தபோது நடித்திருந்தால், நான் உன்னை விரும்புவது உன் நடிப்பை நினைக்கும்போது மாறிவிடும் என்று எண்ணினேன்.

ஆனால் நீ இல்லாமல் என்னால்…’ என்று முழுதும் நினைவில் கூடத் தொடராமல் பெருமூச்சுவிட்டு, அவன் பதிலுக்கும் காத்திராமல் அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்.

“பவி… உன்னையும் கார்திக்கையும் பத்திரமாகப் பூமி சேர்ப்பது என் பொறுப்பு. அதனை எண்ணி கவலைப்படாதே.” என்றான். அவளது முகத்திலும், வார்த்தையிலும் ஏதோ வலி இருப்பதுப் போல உணர்ந்த மேகன் செய்வதறியாது அவளையே பார்த்தவிதமாகச் சில நிமிடம் நின்றான்.

வெகுநேரம் கழித்து பாவனாவிற்கு என்ன தோன்றியதோ மிகவும் சன்னமான குரலில், “நான் உன்னை நம்புகிறேன் குதிரைவால்” என்று முனுமுனுப்பதுப் போல அவளிடமிருந்து கேட்டது.

“ம்ம்” என்ற மேகன் அதன்பிறகு தரையில் விரிப்பை விரித்து, பத்மாசன நிலையில் அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தான். இதுவே யாளி உலகம் வந்தபிறகு பாவனா மற்றும் மேகனின் இரவு வேளைகளில் நடந்தது. இன்றும் அதுவே நிகழ்ந்தது.

ஆனால் முன்பு போல மேகன் முழுதும் தவம் புரிய முடியவில்லை. பாவனாவின் கேள்வி அவனுள்ளும் பல சஞ்சலங்களை உண்டாக்கியது. பத்மாசன நிலையிலே அதனைக் குறித்து யோசித்துக் கொண்டிருந்தான்.

15 நாட்களுக்கு முன்பு அவந்திகா தங்கியிருந்த கிராமத்தில்…

பவளன் வந்துக் கொண்டிருப்பதாகச் சொன்னதில் அவந்திகா மறுநாள் அவனைக் காண்போம் என்ற எண்ணத்தில் அவளையும் அறியாமல் சிறிது உறுசாகமுடன் எழுந்தாள். வழக்கமான வேலையான ஒரு நாழிகை தியானத்தை மேற்கொண்ட அவந்திகா அது முடித்து மெத்தையிலிருந்து எழுந்தாள்.

மெத்தை மீதிருந்த விரிப்பை படித்து அதன் இடத்தில் வைத்தவள் போர்வையை மடிக்கும்போது அவள் கையில் அந்தக் கருநிற கைக்காப்பு அவளது வெண்ணிற தோலில் நேற்று இல்லாத புது பொருளாகப் பளிச்சென்று தெரிவதை உணர்ந்து அதனைத் தொட்டு பார்த்தாள் அவந்திகா.

அதனைப் பார்த்ததும், ‘இந்த நந்தன் எங்கே சென்றான். அவன் இஷ்டம் போல எதிர்பாராத நேரத்தில் வருகிறான். சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போய் விடுகிறான். இந்தப் பவளனாவது என்னை ஆன்ம இணைப்பில் அவ்வப்போது தொடர்புக் கொள்கிறான். ஆனால் இந்த நந்தன்!!’ என்று முகம் சுளித்தாள்.

‘இருக்கட்டும். அடுத்த முறை நந்தன் வந்து எதுவும் உதவி செய்தால் அவனைப் பற்றி முழுதும் சொல்லும் வரை அவனை அருகில் கூட அனுமதிக்க கூடாது. இந்தக் கைக்காப்புதான் அவனிடம் நான் கடைசியாக வாங்கிய உதவியாக இருக்க வேண்டும்.’ என்று அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டாள்.

பின் என்ன தோன்றியதோ அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து அவள் கையிலிருந்த கைக்காப்பின் பணியகத்தை(hidden bureau) திறந்து உள்ளே என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தாள்.

அந்தப் பணியகம் உண்மையில் அவளது சொந்த கைக்காப்பு போலவே இருந்தது. ஒரு குறையும் சொல்ல முடியாதப்படி. அதனுள் ஒரு அடுக்கில் பல அரிய மருத்துவ இலைகளும் (Herbs), ஒரு அடுக்கில் பல வெள்ளி காசுகளும், சில தங்க காசுகளும், கொஞ்சம் பளிங்கு(Crystal) காசுகளும்(1), ஒரு அடுக்கில் அவளது ஆடை அணிகலன்களும் இறுதியாக ஆபத்தில் அவளுக்கு உதவுவதற்கு ஏற்பச் சில பாதுகாக்கும் ஆன்மீக கருவிகளும்(Spiritual defense weapons) அதில் இருந்தது.

இவையெல்லாவற்றையும் பார்த்தவளின் பார்வை கடைசியாக 7 சக்கர ஆற்றலைச் சேமித்து வைக்கக்கூடிய மரகதக்கல்லை பார்த்ததும் திகைத்து நின்றது. அந்த 7 சக்கர மகரதகல் முழு சக்தியுடன் இருக்க வேண்டும். ஊதா வண்ணத்தில் இருந்தது.

‘இந்த நந்தன் மிகவும் செல்வந்தனாக இருப்பான் போல, கிட்டத்தட்ட 400 வருடத்திற்கு முன்பு பரியரசின் கஜானாவிலிருந்த செல்வத்தில் நான்கில் ஒரு பங்கு அளவான பொருட்களை இந்தச் சின்னப் பணியகத்தில் அடக்கி வைத்திருக்கிறான்.’ என்று யோசனையிலிருந்த கவனம் அப்போது தட்டப்பட்ட கதவின் மீது விழுந்தது.

பவளன் வருவதாகச் சொன்னானே, அவனாக இருக்குமோ என்று எதிர்பார்ப்புடன் கதவைத் திறந்தாள். திறந்தவள் எதிரில் நின்றிருந்தவளை கண்டு ஒரு வினாடி திகைத்து, மறுனொடி முகத்தை மாற்றி, “நீங்க??” என்று தெரியாதவள் போல் கேட்டாள்.

அவந்திகாவின் எதிரில் இருந்தவள் அவளது கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவந்திகாவைத் தலை முதல் கால்வரை ஆராயும் பார்வை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அவள் யாரென்று பார்த்ததுமே உணர்ந்த அவந்திகா, அவளது இந்த ஆராயும் பார்வை இயல்பானது என்பதை ஏற்கனவே தெரிந்து அவளுக்குச் சலிப்பு இல்லாமல் அவளை எதிர் நோக்கினாள்.

அவந்திகாவை போன்றே உயரமும், மெலிந்த இடையும், நிமிர்ந்த உடலும், தூக்கி வாரிக் கட்டியிருந்த குதிரை வால் போன்ற கூந்தல் முகிலனதை விடச் சிறிது நீண்டும் அவளைக் கம்பீரமாகவும் அழகாகவும் காட்டியது.

மஞ்சள் நிற கைக்காப்பும், மஞ்சள் நிற குண்டலம் போன்ற சிறிய தோடும், தங்க நிறத்தில் திலகமும், தங்க நிறத்தில் அவந்திகாவின் ஆடையைப் போன்றே(Yellow spiritual silk worm)ஆடையும் அவள் சொல்லாமலே அவள் சிம்மயாளி வகை என்பதை சொல்லியது.

மதி. அவள் முகிலனைப் போலவே 400 வருடத்திற்கு முன்பு வன்னியின் சினேகிதி. யாளி உலகம் வந்த இரு தினங்களிலே தன் சினேகிதர்களான மதி மற்றும் முகிலன் என்று இருவரையும் காண நேரிடும் என அவந்திகா எண்ணவில்லை. இதைதான் விதி என்பதோ என்று எண்ணியவளின் இதழ் மகிழ்ச்சியே இல்லாதவிதமாக விரிந்தது.

மதி இன்னமும் அவந்திகாவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவளை ஆராய்ந்துக் கொண்டிருக்கும்போதே, “ஏய் மதி… உன்னை யார் இங்கு வரச் சொன்னது. இது ஒன்றும் சிம்மரசு அல்ல. முதலில் இங்கிருந்து கிளம்பு” என்று கத்திய வண்ணம் வந்து அவர்கள் அருகில் நின்றான் முகிலன்.

அவனது குரலில்,“ம்ம?” என்று திரும்பிய மதி, அவனைப் பார்த்ததும் கொஞ்சமும் அசட்டையே செய்யாமல் கண்களை உருட்டி எதிரில் இருந்தவனை தவிர்த்துத் திமிராக எங்கோ பார்த்து நடந்தவிதமாக,

“யாளி உலகில் எங்கும் செல்ல எனக்கு அனுமதி உண்டு. நான் ஏன் இங்கிருந்து கிளம்ப வேண்டும். உனக்குப் பிடிக்காவிட்டால் நீ கிளம்பு” என்று விட்டு, அந்த அறை முற்றத்திலிருந்த திண்ணையில் கால்மீது கால் போட்டு அமர்ந்துக் கொண்டாள்.

அவளது செயலைப் பார்த்த அவந்திகா சின்ன சிரிப்பை (chuckle) உதிர்த்து, ‘இவள் இன்னமும் மாறவில்லை. இவர்கள் இருவருக்கும் இடையேயான இந்தச் சிறுபிள்ளைதனமான சண்டையும் இன்னமும் மாறவில்லை.’ என்று நினைத்தாள்.

முகிலனின் பேச்சைச் சட்டை செய்யாத மதியின் இந்தச் செயல் அவனது கோபத்தை தூண்ட, வேகமாக அவள் எதிரில் சென்று, “நீ…நீ…நீ…” என்று கோபத்தில் என்ன பேசுவதென்று தெரியாமல் அவளது கை மணிக்கட்டைப் பற்றி இழுத்து சென்று அந்த வீட்டை விட்டுத் தள்ளிவிட முயன்றான்.

ஆனால் மதியும் அவனது அளவே ஆன்மீக சக்கர நிலை அடைந்திருக்க வேண்டும். அவளும் நகரவில்லை. அவனது பிடியிலிருந்து அவளால் விலகவும் முடியவில்லை. அவந்திகாவின் உடல் இப்போது நான்கு சக்கர சக்தி நிலையில் இருந்தப் போதும், நேற்று செலவழிக்கப்பட்ட சக்தி இன்னமும் மீளுருவாக்கம் அடையவில்லை.

அதற்கு மேலும், அவள் எதிரில் சிறுப்பிள்ளைப் போலச் சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரும் இப்போது அவளை விடவும் அதிக சக்தி நிலையில் இருக்க வேண்டும். அவளால் அவர்களது சக்கர நிலையை அறிய முடியவில்லை. (2) அதனால், ‘தன் சக்தியால் அவர்களைக் கட்டுபடுத்த முடியாது.’ என்று அறிந்திருந்தாள்

இவர்கள் சண்டையை நிறுத்துவது எப்போதுமே வன்னிக்கு தலைவலிதான். இன்றும் அதே தலைவலியை உணர்ந்த அவந்திகா தன் நெற்றியில் கை வைத்து. “ஹபா…நீங்க இருவரும் என்ன செய்றீங்க?” என்று அவர்கள் அருகில் சென்று நின்றாள்.

அவளது குரலில் அனிச்சை செயலாக மதியின் கைப்பற்றியிருந்த முகிலனின் கைத்தளர்ந்தது. அதுவரை அவன் கைப்பிடியிலிருந்து விலக முயன்றுக் கொண்டிருந்த மதியும் எதுவும் செய்யாமல் திரும்பி அவந்திகாவை பார்த்தாள்.

அவர்கள் எதுவும் பேசும் முன்னே அவந்திகா முகிலனிடம் திரும்பி, “என் வேலை முடித்து நான் என் தோழர்களைப் பார்க்கப் போக வேண்டும். முகிலன் உனக்கு என் உதவி வேண்டுமா வேண்டாமா.? எனக்கு உன் சண்டையைப் பார்க்க எல்லாம் நேரம் இல்லை.

உனக்கு என் உதவி வேண்டுமென்றால் வாப்பஞ்சாயித்து தலைவரைப் பார்க்கப் போகலாம். இல்லையென்றால் நான் கிளம்புகிறேன்.” என்றாள் குரலில் இளக்கம் இல்லாமல் சொல்லிவிட்டு திரும்பித் தன் அறை நோக்கி நடந்தவிதமாக.

அவள் சொன்னதை கேட்ட முகிலன் உடனே மதியை விட்டுவிட்டு அவந்திகாவின் எதிரில் வந்து நின்று, “அவந்திகா. உன் உதவி வேண்டும். வாப்போகலாம்.” என்றவன் பின் திரும்பி மதியை பார்த்து, “மதி. என்னவாவது செய், எங்காவது போ. நான் போகிறேன்” என்று அவந்திகாவுடன் நடந்து பஞ்சாயித்து தலைவரைப் பார்க்கக் கிளம்பினான்.

மதியும் அவன் சொன்னதை காதிலே வாங்காமல், தன் கண்களை உருட்டி எங்கோ பார்த்துவிட்டு, எழுந்து அவர்கள்பின் அவளும் நடந்துச் சென்றாள்.

மதி தொடர்ந்து வருவதை அரவம் கேட்டுத் திரும்பிய முகிலன், மீண்டும் சண்டையிட வாயைத் திறந்தப் போது அவன் எண்ணம் உணர்ந்தவளாக, “முகிலன். இருவருக்கு மூவராகச் சென்றால் வேளையும் விரைவில் முடியும்தானே. மதி வர நினைத்தால் உடன் வரட்டுமே.” என்றாள் அவந்திகா.

அவந்திகாவின் விளக்கத்தைக் கேட்ட முகிலன் எதுவும் சொல்லாமல், “ம்ம்” என்று முகம் சுளித்து திரும்பிப் பாராமல் முன்னோக்கி நடந்தான்.

அவந்திகா மதி என்று இளகுவாக அழைத்ததில் மதியின் விழி ஒருநொடி மின்னி இயல்புக்கு மாறியது. ஆனால் மதியும் சரி, அவந்திகாவும் சரி ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ள முயலவில்லை. மதியின் இயல்புணர்ந்த அவந்திகாவும் பெரிதாக அதுகுறித்து நினைக்கவில்லை.

இவ்வாறாக மூவரும் அந்த வீட்டின் மறு மூலையிலிருந்த பஞ்சாயித்து தலைவரையின் அறையை அடைந்தனர். அங்குத் தரையில் விரிப்பு விரித்து அதில் அமர்ந்துக்கொண்டு ஏதோ கணக்கு பார்த்துக்கொண்டிருந்தார் வேதன். அவர் எதிரில் சிறிய மேஜையும் அதன் மீது சில நோட்டு புத்தகங்களும் எழுதுகோலுக்கு தேவையான மையும் ஒரு ஓரத்தில் இருந்தது.

அவர் எதிரில் அந்த மேஜை முன் வந்து சமனமிட்டு அமர்ந்து அவந்திகா, “வணக்கம் ஐயா.” என்றாள் சிறு புன்னகையுடன்.

அவளது புன்னகையில் அவருமே புன்னகைத்து தான் எழுதிக் கொண்டிருந்த புத்தகத்தை மூடிவைத்துவிட்டு, “சொல்லுமா.” என்றார்.

அவந்திகா தரையில் அமர்ந்த போதும், மதி அந்த அறை கதவில் சாய்ந்து நின்றப்படி அவர்கள் பேசுவதை அமைதியாகக் கேட்டிருந்தாள். முகிலன் அவந்திகாவின் அருகில் அமர்ந்து அந்த மேஜை மீதிருந்த உருண்டை வடிவ சிறிய காகித இருப்பானை(paper weight) சுழல விட்டவிதமாக இருந்தான்.

பெருமூச்சுவிட்டு, “இதுவரை என்ன நிகழ்ந்தது என்று விளக்கமாகச் சொல்ல முடியுமா? அதனோடு எத்தனை நபர்கள் உங்க பெண்ணைப் போலப் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்?” என்று கேட்டாள் அவந்திகா.

அவந்திகாவின் கேள்வியைக் கேட்டதும் முகிலன், “நான் சொல்கிறேன் அவந்தி. நான் கொஞ்சம் விசாரித்துத் தகவல் சேர்த்திருக்கிறேன்.” என்றான்.

அவன் ஆர்வாகச் சொல்வதை கேட்ட அவந்திகா, “ம்ம். சரி சொல்.” என்றாள்.

காகித இருப்பானிலிருந்து கையை எடுத்தவன், தன் முகவாயில் கைவைத்து முகத்தில் தீவிரம் தெரிய பேச ஆர்மபித்தான் முகிலன். “நான் இதுவரை விசாரித்ததில், கிட்டத்தட்ட மூன்று மாதத்தில், மொத்தம் 9 நபர்கள் இந்தக் கிராமத்தில் இப்படி பாதிக்கப் பட்டிருக்கின்றனர். அனைவருமே திருமணமாகாத வயதுக்கு வந்த கன்னி மனித யாளி பெண்கள்.” என்றான்.

இதனைக் கேட்ட அவந்திகா விழி கூர்மையுடன், “ஓ!! கன்னி பெண்கள் மட்டும்தான் இதனால் பாதிக்கப் பட்டிருக்கிறார்களா!!” என்று ஒரு நொடி யோசித்தவள் சிறிது நிறுத்தி, “பாதிக்கப்பட்ட இந்தப் பெண்களுக்குள் வேறேதேனும் ஒற்றுமை இருக்கிறதா? பழக்க வழக்கம், உடை, விருப்பமானது, அதனோடு கடைசியாக அவர்கள் இப்படி மாறுவதற்கு முன் அவர்கள் செய்த செயல், என்று இவைகுறித்து தகவல் இருக்கிறதா” என்று கேட்டாள்.

Author Note:

(1) மஹர்லோகத்தில் காசு முறை.
100 செப்பு காசுகள் = 1வெள்ளி காசு,
100 வெள்ளி காசுகள் = 1 தங்க காசு,
100 தங்க காசுகள் = 1 பளிங்கு காசு

(2) குறைந்த சக்கர நிலை உள்ளவர்கள் அதிக சக்கர நிலையில் உள்ளவர்களின் அதிகபட்ச சக்தி நிலையை அறிய முடியாது. அவந்திகா இப்போது 4 சக்கர நிலையின் முதல் நிலை. மதியும் முகிலனும், 5 சக்கர நிலையின் மத்திம நிலை. அதனால் அவளால் அவர்களது சக்தி நிலையை அறிய முடியவில்லை.

Advertisement