Advertisement

அத்தியாயம் – 23

முகம் இறுக மேகனை பார்த்து, “கார்திக் இப்போது எங்கே?” என்று கேட்டாள் பாவனா.

அவள் முக மாற்றத்தைக் கண்டுக் கொண்ட மேகன் தலை குனிந்து சிறிது நிறுத்தி, “தெரியவில்லை.” என்றான்

அதனைக் கேட்டதும் கோபமாக அவனை முறைத்து, “தெரியவில்லையென்றால்? என்னை வன்னி என்று நினைத்து அழைத்து வந்துவிட்டாய். கார்திக்கை என்னவென்று எண்ணி அழைத்து வந்தாய்?” என்று அவனை நோக்கிச் சீரினாள் பாவனா.

அவள் கோபம் உணர்ந்து மேகன் கொஞ்சம் விதிர்விதித்து போனான். ‘அவள் கடத்தப்பட்டதை எளிதாக எடுத்துக் கொண்ட பாவனா, கார்திக்கை நினைத்து ஏன் இவ்வளவு கோபப் பட வேண்டும்.’ என்றே அவனுக்குத் தோன்றியது.

இருந்தும் அதை மறைத்து, “பவி…நான் சொல்வதை நிதானமாகக் கேள். நான் கார்திக்கை அழைத்து வரும் எண்ணமுடனில்லை. அவராகதான் நான் கவன குறைவாக இருந்த சமயத்தில் சட்டென இடம்மாற்றும் சக்கரத்தில்(Teleporting Array) நுழைந்துவிட்டார்.

அவரும் இடம்மாற்றும் சக்கரத்தில் இருப்பதை உணர்ந்து நான் அதற்கான நடவடிக்கை எடுப்பதற்குள் நாம் பூமியிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டிருந்தோம். அதனோடு, எனக்கு இடம்மாற்றும் சக்கரம் புதிதாக உருவாக்கத் தெரியாது.

என் குருவும், என் அரசவை சக்தி வாய்ந்த மகரயாளிகளும் இணைந்து எனக்கு இடம்மாற்றும் சக்கரத்தை உருவாக்கும் கருவியைப் பூமிக்கு வருமுன் கொடுத்தனுப்பினர். என்னால் அதனை ஒருமுறைதான் பயன்படுத்த முடியும்.

ஒருவேளை நான் கார்திக்கிற்காக இடம்மாற்றும் சக்கரத்தை நிறுத்தியிருந்தால் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து நாம் மூவருமே இறந்து போயிருக்க கூடும். குறைந்தபட்சம் நாம் இருக்கும் இடம் அறிய முடியாமல் காலச்சக்கரத்தால் காணமல் போயிருக்க கூடும்.

அதனால் வேறு வழி இல்லாமல் கார்திக்கையும் உடன் அழைத்து வர நிகழ்ந்துவிட்டது.” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தான்.

அவன் விளக்கம் தகுந்த காரணத்தை எடுத்துச் சொன்னப்போதும் பாவனாவால் அதனை முழுதும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. கோபம் தனியாமல், “இப்போது அவர் எங்கே? மற்றது எனக்கு அவசியமில்லை.” என்றாள் சற்றும் குரலில் இளக்கம் இல்லாமல்.

அவளது இறுகிய முகம் மேகனை என்னென்னமோ செய்ய, “பவி, நான் பொய் சொல்லவில்லை. உன்னை அழைத்து வரப் போவது எனக்கு முன்னே தெரியும். தற்போது நீ மனித உடலில் இருப்பதால் நீ சுவாசிக்க தடங்கள் ஏற்படக்கூடுமென்று காற்றுள்ள சிறிய குழல் போன்ற அறையினை உனக்காக என் குரு என்னிடம் கொடுத்தனுப்பிருந்தார்.

அதனால் நீ மயங்கியதும் உன்னை அதனுள் பாதுகாப்பாக வைத்துவிட்டேன். நான் 4 சக்கர சக்தியின் முதல் நிலையில் உள்ள யாளி. என் சக்தியைக் கொண்டு என்னை மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றால் அதில் எந்த வித சங்கடமும் இருக்காது.

ஆனால் கார்திக்கும் மனிதன் அவனைக் காக்கவென்று உனக்குப் போல் என்னிடம் எதுவும் கருவியில்லை. என்னுடைய சக்தியை நாங்க இருவரும் பயன்படுத்த வேண்டியிருந்தது. போதாத குறைக்கு இடம்மாற்றும் சக்கரத்திலிருந்தும் சற்று ஆன்மீக சக்தியை நான் உறிஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதனால் ஒரு வாரத்திற்குள் வரவிருந்த நாம் 14 நாட்களுக்குப் பிறகே இங்கு வந்தோம்” என்றான்.

மேகன் சொன்னதில் பாதி புரியாதப் போதும், ‘14 நாட்களாகவா நான் சுயநினைவு இல்லாமல் இருக்கிறேன்!’ என்று வியந்தாள் பாவனா. இருந்தும் அவனிடம் அதுகுறித்து எதுவும் கேட்காமல் அவன் சொல்வதை வெறித்துக் கேட்டாள்.

மேகன் தொடர்ந்து, “உன்னை அழைத்து வரச் சொல்லிதான் எனக்கு உத்தரவு. மற்ற மனித உயிருக்கு என்னால் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது. என்பது எனக்கு இடப்பட்ட கட்டளை. அதனால் என் சக்தி முழுதும் கரைந்து நான் மூர்ச்சையாகியப் போதும் கூட நான் கார்திக்கிற்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்துவிட்டே மயங்கினேன்.

நான் மயங்கியப் போது கார்திக் நம்முடன்தான் இருந்தார். எல்லாம் நாம் யாளி உலகம் வந்தப் பிறகே நாம் கார்திக்கை தொலைத்துவிட்டேன்.” என்று பெருமூச்சுவிட்டு, “இடம்மாற்றும் சக்கரத்தின் ஆன்மீக சக்தி குறைந்ததாலும், குறித்த காலத்தில் யாளி உலகம் அடையாததாலும் யாளி உலகத்தில் நுழைந்ததும் நாம் மூவரும் மூன்று வெவ்வேறு இடத்தில் வீசப்பட்டுவிட்டோம்.

நீ இருந்த அந்தக் காற்றுக் குழல் என்னுடைய ஆன்மவுடன் இணைந்தது. அதனால் என் ஆன்ம விளிப்புக்கு பதிலளித்ததால் உன்னை என்னால் கண்டுப்பிடிக்க முடிந்தது. ஆனால் என்னுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்த கார்திக்கை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனோடு அவரைத் தேட எனக்குச் சக்தியும் இப்போது இல்லை.

ஆனால் நிச்சயம் அவருக்கு எதுவும் நிகழாது. இது மனித யாளிகள் இருக்கும் இடம். யாளி உலக மனிதயாளிகள் உன் பூமி வாழ் மனிதர்களைப் போலதான். அதனால் அவருக்குப் பெரிதாக எந்தவித பாதிப்பும் ஏற்படாது.” என்று வெகுவாக அவளைச் சமாதன படுத்த முயன்றான்.

அவன் சொன்னதை கேட்ட பாவனா, அவனைத் திட்டவும் முடியாமல், சரி விடு என்று சமாதனமடையவும் முடியாமல் அவனைப் பார்க்கப் பிடிக்காதவள் போல முகத்தை வேறுபுரம் திருப்பி, “கார்திக்கை நான் பார்க்கும் வரை உன்னிடம் பேச எனக்கு விருப்பமில்லை. இங்கிருந்து போ” என்று பற்களைக் கடித்தவிதமாகச் சொன்னாள் பாவனா.

அவளது இந்தப் பாரா முகம் மனதில் வலிக்கச் செய்வதறியாமல் சில நிமிடம் அவளையே பாவம்போல முகத்தை வைத்துக் கொண்டு பார்த்திருந்தான். அவள் திரும்பும் எண்ணமற்று மெத்தையின் அந்தபுரம் திரும்பி அமர்ந்திருப்பதை பார்த்து வேறு வழியில்லாமலும், அவன் சக்தி குறைந்ததாலும் பெருமூச்சுவிட்டு

“பவி…நாம் மகரயரசவைக்கு சென்றதும் கார்திக்கை தேட உடனே ஆள் ஏற்பாடு செய்கிறேன். நீ கவலைப்படாதே” என்று அவள் பதிலுக்கும் காத்திராமல் மெல்ல அவள் கனவிலிருந்து மறைந்தான்.

அவனிடம் பேச விருப்பமில்லை என்ற போதும் பாவனாவின் மனம் இயல்பிலே அதிக நேரம் கோபமுடன் இருக்க தெரியாதது. அவன் அவளையே அப்பாவிபோலப் பார்திருந்தது பாவனா உணராமல் இல்லை. அவள் மனம் சிறிது இளகவும் செய்தது.

அதேசமயம் அவள் மனம் மறுபுரம், ‘ஆனால் இது விளையாட்டுச் செயல் அல்லவே. அவனை விரும்பியதால் என் பெற்றோரைப் பிரிந்து வேறு உலகம் வந்த பிரிவாற்றாமையைக் கூடத் தூர நிறுத்தியிருந்தேன். ஆனால் கார்திக். அவர் என்ன தவறு செய்தார் என்று அவரை இப்படி இழுத்து வந்தான் இந்த மேகன்.’ என்று

முதல் முறையாக, ‘இவன் சொல்வதெல்லாம் உண்மையென்று யாருக்கு தெரியும். பூமியில் இருக்கும்போது என்னிடம் நடித்து ஏமாற்றியவன்தானே.’ என்று மேகனின் வார்த்தையில் சந்தேகத்தை உணர்ந்தாள்.

பின், ‘கார்திக் அவர் குடும்பத்திற்கு ஒரே மகன். அவந்தியை விரும்பியப் போதும் மற்ற ஆண்களைப் போல அவந்தியை தொந்தரவுச் செய்யாமல் அவள் பதிலுக்காகப் பொறுமையாகக் காத்திருக்கிறார்.

எத்தனை ஆண்கள் அப்படி கன்னியமாக இருக்கிறார்கள். இவை எல்லாவற்றிருக்கும் மேலாக அவர் என் சகோதரனைப் போல என்மீது எப்போதும் அக்கறையுடன் இருப்பார். அவருக்கு என்ன நிகழ்ந்ததோ’ என்று கார்திக்கை நினைத்தவளின் உள்ளம் மீண்டும் இறுகியது.

அப்படியே இருந்தவளின் நினைவுகள் எப்போது கலைந்து, எப்போது ஆழ்ந்த உறக்கத்திற்கு போனாள் என்று பாவனாவிற்கு தெரியவில்லை. மணக்கும் சம்பாரும், ஆவி பறக்க இட்லியும் அந்த அறையின் டீபாய் மீது இறக்க அதன் மணம் அவள் மூக்கில் நுழைந்து அவள் வயிற்று பசியை கிள்ளய போதே மெதுவாகக் கண் விழித்தாள்.

கண் விழித்ததும் மெதுவாகப் போர்வையை அவள் மீதிருந்து பிரித்து ஒரு சின்னக் கொட்டாவியுடன் எழுந்து அமர்ந்தாள்.

கண்ணைக் கசக்கி எதிரில் இருந்ததை காண முயன்ற பாவனா, அவள் காலுக்கு அருகில் அந்த மெத்தையின் அடுத்த மூலையில் ஒரு ஓரத்தில் பாவமே ஜன்மமாக அந்த ஆட்டுக் குட்டி கழுத்தை வளைத்து அதன் நான்கு கால்களின் மீது தன் தலையை வைத்து அவளையே லேசான கலங்கிய கண்களுடன்(with puppy face) பார்த்திருந்தது.

அதனைப் பார்த்த பாவனாவின் இதயம் ஒரு நிமிடம் வேகமாகத் துடித்து இயல்பாகியது. ‘இந்த மேகன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான். பார்வையைப் பாரு. நான் என்னமோ அவனைக் கொடுமை படுத்திவிட்டதைப் போலப் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டால் அவன் செய்ததை மன்னித்துவிடுவேனா!’ என்று மனதில் கருவி, “ம்கும்.” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு மெத்தையிலிருந்து எழுந்தாள்.

எழுந்தவள் டீபாயின் மீதிருந்த இட்லி, மெதுவடை மற்றும் சம்பாரை பார்த்ததும் பல நாட்கள் உணவுண்ணாததால் வந்த விளைவோ என்னமோ நாவில் எச்சில் ஊர, உடனே சாப்பிட எண்ணி முகம் கழுவி வரக் குளியல் அறைக்குச் சென்றாள்.

குளியல் அறைச் சென்றப் போதும் தலை முதல் கால்வரை அவள் சுத்தமாக இருப்பதைப் போல ஆச்சரியமாக உணர்ந்து, ‘எது எப்படியோ முதலில் சாப்பிட வேண்டும்.’ என்று அவளுள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவள் வயிறு பசியால் சத்தமிட்டது.

அதன் பிறகும் அங்கே காலம் கடத்திக் கொண்டிருக்க அவள் முட்டாளில்லை. இயல்பிலே நன்கு ருசித்து உண்ணும் இயல்புடைய பாவனா மேகனை சட்டைச் செய்யாமல், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து டீபாய் மீதிருந்த இட்லியை உண்ண ஆரம்பித்தாள்.

அப்படி உண்டுக் கொண்டிருக்கும்போது, மெத்தை மீதிருந்த ஆட்டுக்குட்டி அவள் எதிரே வந்து நின்று, “பவி.” என்றது. மேகனின் குரலைக் கேட்டப் போது உண்டுக் கொண்டிருந்தவளின் கை இடையில் ஒரு நொடி நின்றது. பின் அவன் அழைத்தது காதில் விழாததுப் போல மீண்டும் சாப்பிட ஆரம்பித்தாள்.

‘என்னைக் கடத்திக் கொண்டு வந்தாயில்லை. உனக்கு எதுவும் வைக்காமல் எல்லாவற்றையும் நானே சாப்பிட்டுவிடுக்கிறேன். பிறகு நீ பட்டினி கிட’.’ என்று மனதுள் விஷமமாக எண்ணி புன்னகைத்தாள்.

அவள் தூங்கி எழுந்ததும் இயல்பாகி விடக்கூடும் என்று எண்ணியிருந்த மேகனுக்கு அவளது செயல் வருத்ததை தந்தது. அவள் உண்டு முடிக்கும் வரை அவளையே பார்த்திருந்த மேகன், சிறிது நிறுத்தி, “அந்தக் கிண்ணத்தை எனக்கு எடுத்துத் தர முடியுமா?” என்று தன்னாலே எடுத்துக் கொள்ள முடியும் என்ற போதும்,

‘கல்லின் சூடு குளிர்ந்துவிட்டதா? எனத் தொட்டுப் பார்ப்பதுப் போல,’ அவளின் கோபம் தணிந்துவிட்டதா என்பதை அறிய பாவனாவிடம் உதவிக் கேட்டான்.

அவன் கிண்ணம் என்று சொன்ன பிறகே பாவனா, அந்த டீபாயின் ஓரத்தில் சுத்தமாக மணமே இல்லாமல், பச்சை நிற திரவம் ஒரு பாத்திரத்தில் கிடப்பது அவள் கண்ணில் பட்டது. எல்லாம் சாப்பிட்டு முடித்துப் பின் ஒரு சின்ன ஏப்பத்தை விட்ட பாவனா அந்தக் கிண்ணத்தில் இருப்பதும் ஏதோ பழச்சாறு என்று நினைத்து அதனையும் மேகனுக்குக் கொடுக்கக் கூடாது என்று எண்ணி அவள் உதடருகில் அந்தக் கிண்ணத்தை வைத்தாள்.

மேகன், “பவி… அது வேண்டாம் பவி…” என்று அவன் சொல்லுமுன்னே பாவனா தலை குனிந்து அந்தக் கிண்ணத்தை அவள் இதழ்களில் பதித்து, ஒரு மிடறு அருந்திவிட்டிருந்தாள். அருந்தியவள் நாவிலும் தொண்டையிலும் லேசான கசப்பை உணர்ந்து, உடனே எதிரிலிருந்த ஆட்டுக் குட்டியின் முகத்திலே, “ப்ர்ர்ர்ர்ர்ர்.” என்று அருந்திய அனைத்தையும் துப்பினாள். கூடவே தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டதுப் போல இரும்ப ஆரம்பித்தாள்.

உடனே அந்த ஆட்டுக் குட்டி மேகனாக மாறி அவள் தலையில் மெதுவாகத் தட்டி, “அதனை ஏன் அருந்தினாய். அது எனக்கானது.” என்றான்.

ஏற்கனவே சுவையான இட்லி வடையின் மணம் நாவிலிருந்து போய் ஏதோ மருந்து கசாயம் போல நாவில் மாறிவிட்ட கடுப்பிலிருந்த பாவனா, “ஏய் குதிரைவால், என்னை எதாவது விஷம் வைத்துக் கொல்ல முடிவெடுத்துவிட்டாயா? என்ன விஷச்சாறு அது.” என்று இன்னமும் இரும்பியப்படி அந்தக் கிண்ணத்தை மீண்டும் டீபாய் மீது வைத்தாள்.

அவள் பேசிவிட்டதை எண்ணி மென்னகையிட்ட மேகன், “அது அருகம்புல் சாறு. நான் ஆட்டுக் குட்டியாக இருக்கும்போது அதனை மட்டும்தான் அருந்துவேன். நீ அதனை அருந்தக் கூடுமென்று நான் எங்கு உணர்ந்தேன்.” என்று தன் மீது தவறு இல்லை என்பதுப் போல அவளுக்கு விளக்கம் கொடுத்தான்.

அவனது பதிலில் அவனை முறைக்க நினைத்து நிமிர்ந்தவள் உடனே வயிற்றைப் பிடித்துக் கொண்டு “ஹா…ஹா…ஹா…” என்று சிரிக்க ஆரம்பித்தாள். “ஏய். குதிரைவால்… உன் முகமெல்லாம்…” என்று முழுதும் சொல்லி முடிக்காமல் மீண்டும், “ஹா…ஹா…” என்று சிரிக்க ஆரம்பித்தாள்.

அவள் சிரிப்பில் ஒரு நொடி திகைத்து அவளைப் பார்த்தவன், தன் முகத்தில் கையை வைத்தான். அவன் முகமெல்லாம் அவள் துப்பியதால் இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பச்சை பச்சையாக அருகம்புல் சாறு சிதறி இருக்க அவன் முகத்திலும் மென்னகை மலர்ந்தது.

அவள் கண்கள் கலங்கும் அளவு சிரித்தவள், மீண்டும் மீண்டும் அவன் முகம் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தாள். அவள் சிரிக்கட்டும் என்று எண்ணியோ என்னமோ மேகனும் எதுவும் செய்யாமல் சிலையாக அவளை எதிர் நோக்கி நின்றான். சிறிது நேரத்திலே அவள் இயல்புக்கு வந்து, “ம்க்ம்… ம்க்ம்” என்று கனைத்து தொண்டையை சரிச் செய்து அமைதியானாள்.

அவள் அமைதியானதை உணர்ந்ததும், தன் ஆன்மீக சக்திக் கொண்டு தன் மீதுள்ள அருகம்புல் சாறை சுத்தம் செய்தவன், மீண்டும் கலங்கமற்ற முகத்துடனும் அதே நீல நிற ஆடையுடனும் மாறினான். அதனைப் பார்த்த பாவனா விழி விரித்து, முன்பிருந்த கோபம் மறந்து, “எப்படி?” என்று கேட்டாள்.

உடனே இதழ் விரித்து, “உன் மொழியில், இதனை மாய சக்தியால் என்று சொல்லலாம். என் சக்தியால் நான் நீர் இல்லாமல் என்னையும் என்னோடான பொருட்களையும் சுத்தம் செய்துக் கொள்ள முடியும். என் மாயமல்லாமல் நீ 15 நாட்களுக்குப் பிறகும் எப்படி புது மலர்போலச் சுத்தமாக இருக்க முடியும்!?” என்று கேட்டான்.

அதனைக் கேட்ட பாவனா ஏற்கனவே குளியல் அறையில் இருக்கும்போது ஏற்பட்ட சந்தேகம் தெளிந்தவளாக, “ஓ…” என்றாள். பின், “எனக்கு நீ அணிந்திருப்பதுப் போல இந்த உலக ஆடைக் கொடு. நீ எனக்காக எந்த மாயமும் பயன்படுத்த வேண்டாம். நான் நீரைக் கொண்டு குளித்துக் கொள்வேன்.” என்றாள் மனதில் எண்ணமோ நினைத்து.

அவனும் வேறேதுவும் பேசாமல், “சரி” என்றவன் உடனே அவள் கையில் ஒரு நீல நிற ஆடையைத் தன் பணியகத்திலிருந்து எடுத்துக் கொடுத்துவிட்டு திரும்பிப் பாவனா முன்பு ஒரு மிடறு அருந்தி வைத்திருந்த கிண்ணத்தை தன் அருகில் வைத்துக் கொண்டு மீண்டும் ஆடாக மாறி அதனை அருந்த ஆரம்பித்தான் மேகன்.

அவனையே பார்த்திருந்த பாவனா பழையது நினைவு வந்தவளாக முகம் சுருக்கி, “உன்னிடம் நான் இப்போது பேசியது தற்செயலாக நடந்தது. நான் இன்னமும் உன் மீது கோபமாகதான் இருக்கிறேன். அதனால் நான் உன்னிடம் பேசமாட்டேன்” என்றாள் தன் கைகளை உடலுக்குக் குறுக்காகக் கட்டி தோரணையாக நின்று.

தலை குனிந்து கிண்ணத்தில் வாய் வைத்திருந்த மேகன் அவள் குரலில் நிமிர்ந்து அவளை நோக்கி, “ஆமாம்…ஆமாம்…பவி, நீ கோபமாகதான் இருகிறாய். நீ என்னிடம் பேசமாட்டாய். நான் நினைவில் வைத்துக் கொள்கிறேன். ” என்று மீண்டும் தலை குனிந்தான்.

பாவம் பாவனாவிற்கு மேகன் ஆட்டுக்குட்டி உருவில் இருந்ததாலோ என்னமோ, அவன் சொன்னப் பிறகு அவன் முகத்தில் மலர்ந்த கேலி புன்னகை தெரியவில்லை.

“ம்ம்…தெரிந்தால் சரி” என்றுவிட்டு குளியல் அறைச் சென்று ஆடை மாற்றிக் கொண்டு மீண்டும் வந்தாள். முதலில் என்னச் செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு மெத்தையில் அமர்ந்து மூலையில் தவம் செய்துக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியான மேகனை வெறித்துப் பார்த்திருந்தாள்.

பிறகு சாளரத்தில் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தச் சத்திரத்தில் நேர நேரத்திற்கு உணவு வந்தது. ஓரிரு நாள் மேகன் உணவுண்ணும் நேரத்தில் அவளுடன் அமர்ந்து அவனும் அருகம்புல் சாறு அருந்தினான். ஆனால் அதன் பிறகு அவன் முழு மும்முரமாகத் தவம் செய்திருக்க வேண்டும் அவனிடம் எந்த அசைவும் தெரியவில்லை.

பாவனாவும் அவனைத் தொந்தரவு செய்யவில்லை. ஏதோ தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்ப்பதுப் போலச் சாளரத்தில் தெரிந்த மக்களின் செயல்களைக் கவனித்துக் கொண்டிருந்தாள். சில நேரங்களில் அவர்கள் பேசுவதை கேட்டவிதமாக இந்த உலக மக்களைப் புரிந்துக் கொள்ள முயன்றுக் கொண்டிருந்தாள்.

இப்படியாக 10 நாட்கள் கடக்க அதன் பிறகு மேகன் பாவனாவை அழைத்துக் கொண்டு மகர அரசின் அரசவையை நோக்கிப் புரப்பட்டான். பாவனாவும் எதுவும் பேசாமல் அவனுடன் நடந்துச் சென்றாள். அவ்வப்போது சில கேள்விகள் அவனிடம் கேட்டப் போதும் முன்பு போலத் தோழமையுடன் பாவனாவால் மேகனிடம் பேச முடியவில்லை.

அப்படி அவர்கள் போய்க் கொண்டிருக்கும்போது பூமியில் நடக்கும் பாட்டுக் கச்சேரி போலவோ எண்ணமோ, கதை சொல்லும் அரங்கம் ஒன்றை கடக்க நேர்ந்தது. அந்த அரக்கத்தின் எதிரில் தெரிந்த அறிக்கை பலகையைப் பார்த்த பாவனா, மேகனின் கைப்பற்றி நிறுத்தி, “நான் இந்தக் கதை கேட்க வேண்டும்.” என்றாள்.

நிமிர்ந்து அந்த அறிக்கையைப் பார்த்த மேகன், “இளவரசி வன்னியின் கதை.” என்று இருந்தது. ‘வன்னியின் கதை ஏன் மகர அரசில் பல வருடங்களுக்குப் பிறகு இப்போது ஒளிப்பரப்பட வேண்டும். இது தற்செயலான ஒன்றா? அல்லது வன்னி இவ்வுலகம் வந்ததை உணர்ந்து திட்டமிட்டு யாரோ செய்யும் செயலா?’ என்று ஒரு நொடி திகைத்துப் பாவனாவையும் அறிக்கை பலகையையும் மாறி மாறிப் பார்த்தான்.

அவன் குழப்பம் உணராத பாவனா, அவன் பார்வையின் அர்த்தம் புரியாமல், “என்னாச்சு?” என்றாள்.

உடனே தன் திகைப்பை மறைத்து, “சரி பார்த்துவிட்டுப் போகலாம். ஆனால் கார்திக்கை எவ்வளவு விரைவில் கண்டுபிடிக்கிறோமோ. அவ்வளவுக்கு நல்லது. அவரைக் கண்டுபிடிக்க நேரம் தாமதம் ஆனால் உனக்குப் பரவாயில்லையா?” என்று தன் மறுப்பை வேறுவிதமாகச் சொன்னான் மேகன்.

கார்திக்கை பற்றிக் கேட்டதும் முகம் சோர்ந்த பாவனா, அதற்கு மேலும் மேகனிடம் அடம்பிடிக்கவில்லை. “வேண்டாம் போகலாம்.” என்றாள். ஆனால் அவள் முகம், ‘அவந்தி பற்றி அறிய முடியவில்லையே!’ என்று இன்னமும் சோர்ந்து போனது.

அவள் அவளைப் பற்றிய விரும்புவதை அவள் முக சோர்விலே உணர்ந்த மேகன் புத்தக கடை எங்கேனும் இருக்கிறதா என்று பார்த்தவிதமாக உடன் நடந்தான்.

அவன் எதிர்பார்ப்பு பொய்க்காமல், சிறிது தூரம் சென்றபிறகு, ஒரு புத்தக கடை கண்ணில் படப் பாவனாவின், கைப்பற்றி அதனுள் நுழைந்தான். பின் அந்தக் கடைக்காரரிடம், “பரியாளியின் இளவரசி, வன்னியின் வரலாற்று புத்தகம் கொடுங்க.” என்று எங்கிருந்தோ சில வெள்ளி காசுகளை எடுத்துக் கொடுத்தான்.

கடைக்காரரும் வாயெல்லாம் பல்லாக, “இந்தாங்க” என்று ஒரு புத்தகைத்தை எடுத்து நீட்டியவர், “என்னவென்றே தெரியவில்லை. ஓரிரு வாரமாகத் தூசேரியிருந்த இளவரசி வன்னியின் புத்தகத்தைப் பலரும் வாங்கிக் கொண்டு போகின்றனர். எது எப்படியோ. கிடப்பிலிருந்த புத்தகமெல்லாம் தீர்ந்து போனது.” என்று சிரிப்புடனே முனங்கினார்.

அதனைக் கேட்டதும் பாவனா மற்றும் மேகன் ஒருவரை ஒருவர் காரணப் பார்த்துக் கொண்டனர். பின் கடையைவிட்டு வெளியில் வந்தனர். மேகன் பாவனாவிடம், “இது கொண்டு நீ படித்து உன்னைப் பற்றித் தெரிந்துக் கொள்” என்றான்.

“ம்ம்…” என்ற பாவனா, இருப்புக் கொள்ளாமல், “ஏய் குதிரைவால், திடீரென்று யார் வன்னி பற்றிச் செய்திகளைப் பரப்பியிருப்பார்கள். எனக்கென்னமோ. நம்மை வேறு யாரோ தொடர்வதுப் போலத் தெரிகிறது. எனக்கு இங்க இருக்கிற மாயம் மந்திரமெல்லாம் தெரியாதுதான். ஆனால் என் உள்ளுணர்வு எதுவோ சரியில்லை என்கிறது. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றாள்.

இயல்பிலே எதையும் இளகுவாக எடுத்துக் கொள்ளும் பாவனா, அதிகவனமுடன் பேசுவது இதுவே முதல் முறை. மேகனுக்கும் அவள் சொன்னதன் முக்கியத்துவம் புரிய, “ம்ம். கவலைப்படாதே. என்னிடம் இருக்கும் சக்தி வாய்ந்த கருவியால் உன்னைக் காக்க முடியும்.” என்றான்.

அப்படி சொல்லியவன், எங்கிருந்தோ நீல நிறக் கயிற்றை எடுத்துப் பாவனாவின் இடது கையில் சுற்றிவிட்டான். அது அவள் கை மணிக்கட்டில் பட்டதும், கண்ணில் ஏதோ நீல நிற ஒளி படர, அவளுக்கு எதிரில் இருக்கும் பாதை நீல நிறத்தில் தெரிந்தது. “என்ன இது?” என்றாள்.

அவள் கையில் முழுதும் சுற்றி கட்டி முடிச்சிட்டவிதமாக, “இது என் குரு என் பாதுகாப்புகாக எனக்குத் தந்தது. இது உடன் இருக்கும் வரை, நான் எங்கு நிலையிழந்து இருந்தாலும், உடனே இடம்மாற்றும் சக்கரத்தில் என் குருவிடம் என்னைச் சேர்த்துவிடும். ஆனால் இது ஒருவரை மட்டும் தான் அழைத்துச் செல்லும்.

அதனாலே இதனை நான் பயன்படுத்தவில்லை. ஒருவேளை நாம் என் குருவைப் பார்க்கும் முன் ஏதேனும் எனக்கு நிகழ்ந்தாலும் நீ பாதுகாப்பான இடம் சேர்வாய்.” என்றான் முகத்தில் எந்த உணர்வும் தெரியாதப்படி.

அவன் சொல்லின் உண்மை உணர்ந்த பாவனா, “உனக்கெதுவும் நேராது. பித்தன் போலப் பிதற்றாதே” என்றாள் அவள் கைப்பற்றியிருந்த அவன் கையைத் தட்டிவிட்டவிதமாக.

அதற்குப் பதிலாகப் புன்னகைத்த மேகன், “இன்று அருகில் இருக்கும் சத்திரத்தில் தங்கிவிட்டு நாளைக் கிளம்பலாம். நாளை மறுநாள் நாம் மகர அரசை அடைந்துவிட முடியும். அங்கு உனக்குச் சரியாக ஓய்விருக்குமா என்று தெரியவில்லை. அதனால் இங்கு நன்கு ஓய்வெடுத்துக் கொள்” என்றான் அக்கறையாக.

அதற்கு, “சரி குதிரைவால். அது இருக்கட்டும். இப்போது எனக்குப் பசிக்கிறது. சாப்பிட ஏதேனும் வாங்கி தா” என்றாள் தன் வயிற்றை தடவி.

அவளது செயலில் மேலும் இதழ் விரிய, “சரி.” என்று அவள் கைப்பற்றி அழைத்துச் சென்றான்.

Advertisement