யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! -22

879

அத்தியாயம் – 22

தன் அருகில் ஒரு ஆட்டுக் குட்டியைப் பார்த்ததும் ஆ… ஆட்டு குட்டி… ஆ…” என்று மீண்டும் அலர ஆரம்பித்துவிட்டாள்.

அப்போது, “பாவனாபயப்படாதீங்க நான்தான். “ என்று மேகனின் குரல் எங்கிருந்தோ கேட்டது.

மேகனின் குரலைக் கேட்டதும் அவள் கத்துவது மெதுவாக அடங்கி, அவன் குரல் எங்கிருந்து வருகிறது என்று இங்கும் அங்கும் அந்த அறையில் திரும்பிப் பார்த்தாள். ஆனால் அந்த அறையில் அவள் மற்றும் அந்த ஆட்டுக் குட்டி தவிர வேறு எந்த உயிருமில்லை.

குழம்பிப் போய் அந்த மெத்தையிலிருந்து எழுந்து கீழறங்கியவள், கவனமாக எதிரிலிருந்த ஆட்டுக்குட்டி அருகில் வந்துவிடாதப்படி அந்த ஆட்டுகுட்டியின் மீது ஒரு கண் வைத்தப்படி மெதுவாகத் தரையில் ஒரு ஓரமாகக் கால் பதித்து அந்த ஆட்டுக்குட்டியை கடந்துச் சென்று, “மேகன். எங்கு இருகீங்க. இது என்ன இடம்?” என்றாள்.

அப்படி கேட்டப்போதுதான், அவளுக்கு முன்பு நிகழ்ந்தது சட்டென நினைவு வந்தது. ‘கடைசியாக எனக்கு நினைவுத் தெரிந்து நான் அந்த மும்பை விளையாட்டுத் திடலில் அனைவருடனும் விளையாடிக் கொண்டிருந்தேன்.

இரங்கராட்டினத்திலிருந்து இறங்கியதும், அனைவருக்கும் குளிர்பானம் வாங்கிவர நானும் கார்திக்கும் அங்கு ஒரு கடைக்குச் சென்றோம். அங்கு எதிர்பாராதவிதமாக மேகனைப் பார்த்தோம். அப்போது மேகன் என்னிடம் தனியாகப் பேச வேண்டும் என்றான்.

அதனால் கார்திக்கை அனுப்பிவிட்டு, மேகனுடன் சென்றேன். மேகன் எதுவோ சொல்ல ஆரம்பித்தப்போது எனக்கு மயக்கம் வருவதுப் போலத் தோன்றியது. அதன் பிறகு என்ன நிகழ்ந்தது? எனக்கேன் எதுவும் நினைவில்லை?

நான் மயங்கியதும் எனக்கு ஏதோ ஆகிவிட்டதாக எண்ணி என்னை மருத்துவமனைக்கு மேகன் அழைத்து வந்திருக்கிறானா?! இது மருத்துவமனையா?! அப்படியென்றால் மருத்துவனை அறையில் ஆட்டுக் குட்டி எப்படி வந்தது.’ என்று திரும்பி அந்த ஆட்டுக்குட்டியைப் பார்த்தாள்.

அவள் அதனைப் பார்ப்பது உணர்ந்தோ என்னமோ, அந்த ஆட்டுக்குட்டியும் அவளையே பார்த்திருந்தது. பின் ‘இல்லை. இல்லை. இது மருத்துவமனையில்லை. எந்த மருத்துவ மனையில் இவ்வளவுப் பெரிய மெத்தை தருகிறார்கள்.’ தன் தலையைச் சிலுப்பியவள் மீண்டும், “மேகன்?” என்றாள்.

அந்த அறையை முழுதும் ஆராய்ந்தவள், என்ன தோன்றியதோ, கட்டிலின் அடையிலெல்லாம் குனிந்து பார்த்தாள். அந்த அறை ஒன்றும் பெரிதாக இல்லை. அது ஒரு பெரிய மெத்தையும் ஒரு சிறு டீபாயும், இரண்டு மர நாற்காலியும் அடங்கிய சிறிய அறை.

அந்த டீபாய் மீது ஒரு ஊதுவத்தி நிறுத்தியும்(stand) ஒரு மண்ணினால் ஆன நீர் குடுவையும் இருந்தது. மல்லிகை மணம் போல அங்கு எரிந்துக் கொண்டிருந்த ஊதுவத்தியிலிருந்து நறுமணம் வீசிக் கொண்டிருந்தது.

இது போன்ற அறையை எந்தத் தங்கும் விடுதியிலும் பார்த்திராத பாவனா, “இந்த அறை எதுவோ வரலாற்று படம் எடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட செயற்கை(Historical film set) அறைப் போல இருக்கே! ஏதேனும் படப்பிடிப்புக்கு என்னை இந்த மேகன் அழைத்து வந்துவிட்டானா?” என்று முனுமுனுத்தவள் அந்த அறையின் ஓரத்தில் தெரிந்த கதவைத் திறந்தாள்.

அது அந்த அந்த அறையுடன் இணைந்த குளியலறை. ‘குளியலையறையும் வித்தியாசமா இருக்கே. இதெல்லாம் எந்தப் படத்துக்குப் போடப்பட்டிருக்கும்’.’ என்று யோசித்து பின் அந்தக் கதவை மூடிவிட்டு, அந்த அறையை விட்டுச் செல்வதற்காக இருந்த மற்றொரு கதவை நோக்கிச் சென்றாள்.

அவள் செயலையெல்லாம் அமைதியாக அந்த ஆட்டுக் குட்டி நின்ற இடத்திலே சிலையைப் போலத் தலையை மட்டும் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தது. அவள் அறை கதவை நோக்கிச் செல்வதைப் பார்த்து, “இளவரசி…” என்று மீண்டும் மேகனின் குரல் கேட்டது.

மேகனின் குரலில் அறை கதவின் தாழ்பாலில் ஒரு கை வைத்தபடியே பாவனா திரும்பி, “மேகன். எங்க இருக்கீங்க. இது என்ன சிறு பிள்ளைப் போல ஒழிந்து விளையாட்டு.” என்று சொன்னவள், என்ன தோன்றியதோ உடனே கலகலவெனச் சிரிக்க ஆரம்பித்தாள்.

பின் சிரிப்பைக் கடினப்பட்டு அடக்கியவிதமாக, “ஏய் குதிரைவால். இந்தச் செயற்கை படப்பிடிப்பு அறைக்கு அழைத்துக் கொண்டு வந்தது பத்தாது என்று இளவரசினு வேற கூப்பிட்றீங்க. என்ன ஆச்சு உங்களுக்கு.” என்றவள் ஹா… ஹா… ஹா…” என்று தொடர்ந்து சிரிக்க ஆரம்பித்தாள்.

அவள் அப்படி கேலி செய்து சிரித்தப்போதும், மேகன் வெளியில் வராததும் சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ‘ஒருவேளை இந்தச் சாளரத்தின் வெளியிலிருந்து குரல் கொடுக்கிறானோ!’ என்று நினைத்தவள், அந்த அறையிலிருந்த ஒற்றை சாளரத்தின் வழியே எட்டிப் பார்த்தாள்.

அப்படி பார்த்தவள் விக்கித்துப் போனாள். அவள் கண் முன் இருந்தது புது உலகம். கட்டிட கலைகளும் சரி, அங்கிருந்த மக்களின் நடை உடைகளும் சரி, எல்லாம் ஏதோ பழங்காலம் போல இருந்தது. ‘இவை அனைத்தும் படப்பிடிப்பின் செயற்கை வடிவமைப்பா? (Movie artificial set).’ என்று வியந்தாள்.

தொடர்ந்து அந்தக் கட்டிடத்தின் வெளியில், சாலையில் சென்றுக் கொண்டிருந்த மக்களின் செயல்களையும் பேச்சு முறைகளையும் கவனித்து, ‘அவர்கள் நடிப்பதுப் போல இல்லையே. இதுதான் அவர்களின் இயல்பான வாழ்க்கைப் போல அல்லவா தெரிகிறது.’ என்று நினைத்த பாவனாவின் முகம் மெல்லாமல் வியர்த்துவிட்டது.

இனம் புரியாத பயம் அவளுள் தொற்றிக் கொள்ள, “இல்லைஇல்லைஇது நிஜம் இல்லை.” என்று சாளரத்திலிருந்து பார்த்தவிதமாகவே பின்நோக்கி தலையை மறுப்பாக அசைத்தவிதமாகக் காலடி எடுத்துவைத்தாள்.

பின் சட்டெனத் திரும்பியவள், “மேகன் எங்க இருக்கீங்க. இது என்ன இடம்? என்எனக்குப் பயமா இருக்கு. விளையாடியதுப் போதும். வெளியில் வாங்கஎன்று கத்த ஆரம்பித்தாள்.

அவள் கத்துவது தாங்க முடியாமல், “பாவனா. பயப்படாதீங்க. நான் இங்கு இருக்கிறேன்.” என்ற குரல் கேட்கப் பாவனா திரும்பிக் குரல் வந்த திசையைப்பார்த்தாள். அங்கு இருந்தது அந்த ஆட்டுக் குட்டி மட்டுமே.

பின் ஒரு பெருமூச்சுவிடும் சத்தம்போலக் கேட்ட மேகனின் குரல் அந்த ஆட்டுக்குட்டியிடமிருந்து வர அதனையே வெறித்துப் பார்த்தாள். அவள் கண் முன்னே, அந்த ஆட்டுக்குட்டி அதன் உருவத்திலிருந்து சட்டென மேகனாக உருவம் மாறி அவள் முன் வந்து நின்றது.

அதனை விழி மூடாமல் பார்த்த பாவனா அதிர்ந்துப் போய் அவளையும் அறியாமல் பின்னோக்கி நடந்தாள். அவள் மேலும் நகராமல் அவள் அருகில் சென்று அவள் கைப்பற்றிய மேகன், “இளவரசி. பயப்படாதீங்க. நான் அதிக சக்தியைப் பயன்படுத்திவிட்டதால் என்னால் அதிக நேரம் மனித உருவில் இருக்க முடியாது. நான் சொல்வதை முதலில் கேளுங்கஎன்றான் மேகன்.

அவள் கையை அவன் பற்றியதும் இன்னமும் பாவனா விதிர்விதித்துப் போனாள். அதற்கு மேல் அவன் இளவரசி என்றதும் அதனைத் தொடர்ந்து சொன்னதையும் கேட்டு அடிவயிற்றில் குளிர் பரவ அவனை வெறித்தாள்.

இது என்னவிதமான மாயம். இதெல்லாம் கனவோ. கனவாகதான் இருக்கும். எப்படி ஆட்டுக்குட்டி மனிதனாக மாறும். அதுவும் நான் விரும்பும் மேகனாக எப்படி மாற முடியும். கண்மூடி திறந்தால் இவையெல்லாம் மாறிவிடும்.” என்று அவள் வாய்விட்டே முனுமுனுத்தபடி கண் மூடித் தலை குனிந்தாள்.

அவள் வார்த்தைகளின் உள் அர்த்தம் உணர்ந்த மேகன், ‘பாவனா என்னை விரும்புகிறாளா?’ என்று திகைத்தான். அந்தத் திகைப்புடன் அவளைப் பார்த்தவன் அவள் முகம் வெளுத்து லேசாக உதடு துடிக்கக் கண்களை மெதுவாக மூடுவதைப் பார்த்துக் கவலையுற்றான்.

அவனையும் அறியாமல் அவள் கன்னத்தில் தன் மறு கையை வைத்து அவள் முகத்தை உயர்த்தி, “இளவரசி… முதலில் நீங்க வன்னி என்பதை மறைப்பதற்காக இப்படி பாவனாவாகவே முழுதும் மாறிவிட்டீங்க என்று நினைத்தேன்

ஆனால் இப்போது நிச்சயம் தெரிகிறது. உங்களது மறு பிறப்பிற்கு பின், முன் ஜன்மத்தில் நிகழ்ந்தது எதுவும் உங்களுக்கு நினைவில் இல்லை. என் குரு உங்களை அழைத்து வரச் சொன்னதால்தான் நான் உங்களைத் தேடி வந்தேன்.

நினைவு இல்லாமல் இருக்கும் உங்களால் என் குருவிற்கு எப்படி உதவ முடியுமென்று தெரியவில்லை.” என்று அவள் கண் பார்த்துச் சொன்னவன், அவள் இன்னமும் மிரட்சியுடன் பார்த்திருப்பதை உணர்ந்து,

முகம் சோர்ந்து, “உங்க அனுமதி இல்லாமல், உங்களை நான் யாளி உலகம் அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்துவிடுங்கஎன்றான் மேகன்.

அவனது கனிவான குரலைக் கேட்டுச் சற்று மனம் தெளிந்த போதும் பாவனாவுக்கு, ‘இவன் என்ன பிதற்றுகிறான்.’ என்றே தோன்றியது. அவனது வார்த்தைகளில் அவளது பயம் மேலும் அதிகரிக்கவே செய்தது. இருந்தும் தன் பயத்தினை விழுங்கி, அவனை நோக்கி

பழைய துடுக்குதனத்தை போலியாக முகத்தில் கொணர்ந்து கண்ணையெட்டாத சிரிப்பை உதிர்த்து, “ஏய் குதிரைவால் என்ன உலறுகிறாய்.? என்ன இளவரசி, என்ன வன்னி, என்ன குரு, என்ன மறுபிறப்பு? எந்தப் படப்பிடிப்பு இது. இவ்வளவு தத்துருபமாக வரைகலை (graphics) செய்திருக்கிறார்கள்.

உண்மையில் நீ ஆட்டுக்குட்டியிலிருந்து வந்துவிட்டதாகவே நினைத்துவிட்டேன் போஎன்று தன் கன்னத்திலிருந்தும் கையைப்பற்றியிருந்தும் அவனது கைகளை விலக்கி அவனிலிருந்து தூரமாகப் போய் நின்று எச்சரிக்கையாக அவனைப் பார்த்தாள் பாவனா.

அவளது செயலில் பயங்கொண்ட பூனைக்குட்டி தன் பயத்தை மறைத்து எதிரில் இருப்பவர்களைப் பயமுறுத்தச் சின்னக் கருவிழிகளால் முறைப்பதுப் போல அழகாக (cute) தோன்ற பெருமூச்சுவிட்டு, அவன் மீண்டும், “இளவரசி. நீங்க ஒத்துக் கொண்டாலும் இல்லையென்றாலும், உங்க கையிலிருக்கும் கைக்காப்பு நீங்க வன்னி என்பதை இந்த உலகுக்கு பறைச்சாற்றிவிடும். இதற்கு மேலும் என்னிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம்என்றான் மேகன்.

அவன் கைக்காப்பு என்றதுமே தன் வலது கை உயர்த்தி நெற்றி சுருக்கி அதனைப் பார்த்தாள், ‘இது அவந்தியோட கைக்காப்பு. இந்தக் கைக்காபைக் கொண்டு தன்னை ஏதோ இளவரசி என்று இவன் சொல்வதை பார்த்தால்!’ என்று யோசித்தவள் சட்டென உண்மையை உணர்ந்து விழிகள் விரித்தாள்.

இவன்இவன் தேடி வந்தது அவந்தியை. இவனை அவந்திக்கு ஏற்கனவே தெரிந்திருந்ததால்தான் அவந்தி இவனிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொன்னாளோ! இந்த மேகனைப் போல அவந்தியும் மாயம் எல்லாம் தெரிந்தவளோ! அவளும் இவனைப் போல என்னிடம் அவளைப் பற்றிய உண்மைகளைச் சொல்லாமல் இவ்வளவு காலம் இருந்திருக்கிறாளா?!

ஏதோ உலகம் சொன்னானே இந்த மேகன். ஆன் யாளி உலகம். இந்த உலகிற்கும் அவந்திக்கும் என்ன தொடர்பு?’ என்று இன்று தொடர்ந்து ஏற்பட்ட பல அதிர்ச்சிகளால் பாவனா நிலைக் கொள்ளாமல் இதயம் படப்படக்க மூர்ச்சையானாள்.

உண்மையை அறிந்ததும் பாவனா அதிர்ச்சி அடைய கூடும். இல்லை சண்டையிட கூடும். என்று ஏற்கனவே மேகன் யூகித்திருந்தான். ஆனால் எப்போதும் துடுக்குதனம், துறுதுறுவெனவும் இருக்கும் பாவனா, இப்படி முகம் வெளுக்கப் பயப்படக்கூடும் என்று எண்ணவில்லை. அதற்கு மேல் பயத்தாலும் அதிர்ச்சியாலும் இப்படி மயங்கி விழக் கூடுமென்றும் அவன் எண்ணவில்லை.

அவள் தரையில் விழும் முன்னே ஓரெட்டில் அவளைத் தாங்கிப் பிடித்த மேகன் அவளைத் தன் இரு கைகளில் ஏந்திச் சென்று மீண்டும் படுக்கையில் படுக்க வைத்தான். பின் அவள் கழுத்து வரை போர்வையை இழுத்து போர்த்திவிட்டு, அவள் முகத்தை மறைத்து ஆடிக் கொண்டிருந்த கூந்தலை விலக்கி ஒரு பெருமூச்சுவிட்டான்.

பின் அவள் அருகில் பத்மாசன நிலையில் அமர்ந்து கண்கள் மூடிக் கனவுச் சக்கரத்தை (Dream Array) உருவாக்கினான். ஒரு நீல நிற ஒளிக் கோடு அவன் நெற்றியில் உருவாகி பாவனாவின் நெற்றியில் விழுந்தது. அந்தக் கோடு விழுந்ததும் அதிர்ந்தவிதமாக இருந்த பாவனாவின் மூளை அலைகள் மெதுவாக அமைதி அடைந்தது.

அதிர்ச்சி மெல்ல குறைய குறைய சுகமாக உணர்ந்தோ என்னமோ பாவனாவின் நெற்றி சுருக்கம் இளகியது. அதே சுகத்தில், “ம்ம்…என்று முனங்கி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டாள்.

கனவில்

அவள் கண் விழித்துப் பார்த்தப் போது ஒரு வெண்ணிற மேகம் போன்ற மெத்தை மீது பாவனா படுத்திருந்தாள். அவள் பார்க்கும் இடமெல்லாம் வெண்ணிறமாகத் தோன்ற கண்கள் கசக்கி எழுந்து அமர்ந்தாள். இருந்தும் அந்த மெத்தையை விட்டு அவளால் நகர முடியவில்லை.

அப்போது அவள் எதிரே நீல சட்டையும், தூக்கி கட்டியிருந்த குதிரைவாலும் கையில் நீல நிறக்காப்புடனும் அந்த மேகன் வந்து நின்றான். அவனைப் பார்த்ததுமே தான் மயக்கம் அடைவதற்கு முன் நிகழ்ந்தது பாவனாவிற்கு நினைவு வந்தது.

அவனிடமிருந்து எங்காவது தப்பி ஓடிவிட முடியுமா என்பதுப் போல் எழுந்து ஓட நினைத்தாள் பாவனா. அனால் பாவனாவால் விழி விரித்து அவனைப் பார்க்க முடிந்ததே தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. ஏன் பேசவும் கூட முடியவில்லை. அவள் குழம்பி இதழ் பிரித்து மூடி, அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவன் பேச ஆரம்பித்தான்.

பாவனா. என்னைக் கண்டு பயப்பட வேண்டாம். நான் சொல்வதை முதலில் கேளுங்க. பழையது நினைவில் இல்லாததால் நான் சொல்வது எல்லாம் உங்களுக்கு அதிர்ச்சியாகதான் இருக்கும். ஆனால் அவை அனைத்தும் உண்மை.” என்று மேகன் சொல்வதை கேட்டதும் எதுவோ கேட்க நினைத்து மீண்டும் வாயைத் திறந்த பாவனாவால் எதுவும் பேச முடியவில்லை.

அவள் எண்ணம் உணர்ந்தவனாக, “பாவனா. இது என் கனவுச் சக்கரம். இதில் நான் நினைக்காமல் உங்களால் பேச முடியாது. நான் முழுதும் சொல்லி முடிக்கும் வரை காத்திருங்க.” என்று பெருமூச்சு விட்டு அவள் அருகில் வந்து அவள் எதிரே அதே மெத்தையில் அமர்ந்தான். வேறு வழி இல்லாமல் அவனையே பார்த்தவிதம் இருந்தாள் பாவனா.

நான் ஒரு மகர யாளி. நீங்கப் பரியாளி. என்னுடைய பூர்வீக உருவம் ஆடு. அதுதான் நீங்க இன்று கண்விழித்ததும் பார்த்தீங்க. அதே போல உங்க உருவம் குதிரை. நான் உங்களைத் தேடி வந்தது எங்க மகர அரசின் குருவான இமயகுருவின் ஆணைப்படி.

அதன் காரணத்தை மேலோட்டமாகச் சொல்கிறேன். கேளுங்க. கிட்டதட்ட 20 வருடத்திற்கு முன்பு எங்க மகர அரசில் ஏதோ நிகழக் கூடாத அசம்பாவிதம் ஏற்பட்டதாக என் குரு சொன்னார்.

அந்த நிகழ்வின் காரணத்தை உங்களால்தான் அறிய முடியும் என்றும், அதனைச் சரி செய்வதும் உங்களால்தான் முடியும் என்றும் என் குருவின் நெருங்கிய தோழர் சொல்ல, அதற்காக நாங்க கிட்டத்தட்ட 20 வருடமாக உங்க ஆன்மாவின் இருப்பிடத்தை தேடிக் கொண்டிருந்தோம்.

எனது குருவின் நண்பர் என் குருவிற்கு உயிர் அறியும் சக்கரம் (Soul Finding Array) குறித்த பழங்கால ஓலைச் சுவடியைத் தந்தார். அதனைக் கொண்டு நீங்க எங்கு மறு பிறப்பு கொண்டிருக்கீங்க என்பது அறிய முடியும்.

ஆனால் அந்தச் சுவடியில் இருந்த உயிர் அறியும் சக்கரத்தைக் கற்பது அவ்வளவு எளிதாக இல்லை. இதில் வேறு அந்தச் சுவடியின் ஒரு இலை சிதைந்திருக்க அந்த இலையிலிருந்த வாக்கியத்தின் ஒரு வார்த்தையைச் சரியானதாகக் கண்டுப்பிடிக்கவே 20 வருடங்கள் ஆகிவிட்டது.

ஒவ்வொரு முறை தவறான மந்திரம் சொல்லி உயிர் அறியும் சக்கரம் பயன்படுத்தியப் போதும் அது எதிர்மறை(Backslash) விளைவாக என் குருவைத் தாக்க அவர் சக்தி வெகுவாக விரயம் ஆகியது. ஒவ்வொரு முறையும் மீண்டும் சக்தி அடைய அவர் குறைந்தபட்சம் 1 வருடத்திலிருந்து 3 வருடம்வரை தவம் செய்ய வேண்டியிருந்தது.

கிட்டத்தட்ட 3 முறை தவறாக மந்திரம் உபயோகித்து, அதனால் அதிக சக்தியும் வீணாகி, கடைசியாக 3 மாதத்திற்கு முன்புதான் நீங்க இருக்கும் இடத்தைத் துல்லியமாக என் குரு உயிர் அறியும் சக்கரம் மூலமாகக் கண்டறிந்தார்.

ஆனால் உயிர் அறியும் சக்கரத்திற்கு அதிக சக்தி தேவைப் பட்டதால் மீண்டும் சக்தி அடைய அவர் தவம் செய்ய வேண்டியிருந்தது. அவர் தவம் முடிந்து மீண்டும் உங்களைத் தேடி வருவதற்கு நேரம் ஆகும் என்பதால், அனைத்து விவரங்களையும் சொல்லி என்னைப் பூமிக்கு அனுப்பி வைத்தார்.

அவர் ஆணைப்படி உங்களை அழைத்து வர நான் பூமிக்கு வந்தேன். நான் உங்களை உங்க தோழி அவந்திகாவுடன் உங்க கல்லூரியில் அந்தப் பூ மரத்தடியில்தான் முதலில் பார்த்தேன்.

என் குரு சொன்ன இடத்தில் இருந்தது நீங்களும் அவந்திகாவும்தான். முதலில் அவந்திகாதான் பரியரசின் இளவரசி வன்னி என்று எண்ணினேன். ஆனால் என் குரு, இயல்பிலே வன்னி துடுக்குதனமுடன் இருக்கும் பெண் என்றும், சுற்றி இருப்பவர்களைச் சிரிக்க வைக்கும் இயல்புடையவள் என்று சொல்லியிருந்தார்.

அதனால் எபோதும் அமைதியுடனே இருந்த அவந்திகாவிலிருந்து என் கவனம் எப்போது மகிழ்ச்சியுடன் இருக்கும் உங்கபுரம் திரும்பியது. இருந்தும் இருவரில் யார் வன்னி என்ற சந்தேகம் முழுதும் தெளியவில்லை.

அது அறிய எண்ணியே உங்களுடன் பழக நினைத்து அன்று விமான நிலையத்தில் உங்களுடன் முதல் சந்திப்பை ஏற்படுத்திக் கொண்டேன்.

பழகியபிறகு நீங்கதான் வன்னியாக இருக்க முடியும் என்று வெகுவாக நினைத்தேன். ஆனால் அன்று வன்னியின் கைக்காப்பை அணிந்து நீங்க வந்ததைப் பார்த்ததும்தான் முழுதும் உறுதிக் கொண்டு காலம் தாமதிக்காமல் உங்களை இங்கு அழைத்து வர முடிவெடுத்தேன்.

ஏனென்றால் இந்தக் கைக்காப்பு வன்னியல்லாமல், வேறுயாராலும் எடுக்க முடியாது. ஏன் என்னாலும் உங்க கையிலிருந்து அதைப் பிரிக்க முடியாது. அதனால் நீங்க என்ன சொன்னாலும் வன்னியில்லை என்று என்னால் மட்டுமல்ல என் குருவாலும் நம்ப முடியாது.

அதே சமயம் நீங்க வன்னி என்ற உண்மை யாளி உலகில் இருப்பவர்கள் அறிந்தால் உங்க உயிருக்கே கூடப் பாதிப்பு வரும். அதனால் உங்களைச் சுற்றி நான் என் மந்திர சக்தியால் பாதுகாப்பு சக்கரம் (Defense Array) வரைந்திருக்கிறேன்.

இனி யாராலும் உங்களை அறிய முடியாது. அதனோடு நீங்களும் யாரிடமும் நீங்க வன்னி என்ற உண்மையைச் சொல்லிவிட வேண்டாம். நீங்க வன்னி என்று அறிந்தால் உங்க உயிர் பறிக்க எண்ணமுள்ளவர்களிடமிருந்து உங்களை என்னால் பாதுக்காப்பது கடினம்என்று ஒரு நெடிய பெருமூச்சுவிட்டான்.

அவன் சொல்வதையே விழி இடுங்க ஜீரணிக்க முடியாமல் பல முறை எச்சில் விழுங்கியவிதமாக அவனையே பார்த்திருந்தாள் பாவனா.

இவனுக்கு இந்தக் கைக்காப்பு எனதில்லை, அவந்தியது என்று தெரிந்தால் என்ன நிகழும். ஏற்கனவே நான் இங்கு வந்துவிட்டேன். அதனால் எந்தப் பிரச்சனையையும் நான் சமாளிக்க வேண்டும்.

இந்தக் கைக்காப்பு வன்னி அல்லாமால் வேறு யாரிடமும் போகாது என்றால் எப்படி நான் எடுத்து அணிந்தப் போது எதுவும் ஆகவில்லை. சொல்லப் போனால் மேகனின் கையில் இதே போலக் கைக்காப்பு பார்த்ததால்தான் அதை அணிந்து அவனிடம் காட்ட எண்ணி அன்று அதை அணிந்துச் சென்றேன்.

நல்லவேளை அப்படிச் செய்தேன். இல்லையென்றால் அவந்தி அல்லவா மாட்டிக் கொண்டிருப்பாள். எது எப்படியோ அவந்தி இங்கே வந்தால் அவள் உயிருக்குப் பாதிப்பு என்று தெரிந்தப் பிறகும் இவனிடம் உண்மை சொல்ல நான் ஒன்றும் முட்டாள் இல்லை. இந்த மேகனுக்கு மட்டும்தான் நடிக்கத் தெரியுமா? இந்தப் பவியும் அவனுக்குக் குறைந்தவலில்லை.’ என்று மனதில் கருவினாள் பாவனா.

மீண்டும் பேச நினைத்தவள் மேகனை விழியாலும் கையாலும், ‘நான் பேச வேண்டும்.’ என்பதுப் போல் சைகை செய்தாள். உடனே மேகனின் கைவிரலிலிருந்து நீல நிற ஒளி கோடு உருவாகி அவள் தொண்டையில் பட்டு மீள, அவள் குரல் மீண்டது.

மேகன். நீங்கச் சொல்வதெல்லாமே எனக்குப் புதிதாகவும் புதிராகவும் இருக்கு. இப்போதைக்கு நீங்கச் சொல்வதை கேட்கிறேன். என்னால் உங்க குரு நினைப்பதுப் போல உங்களுக்கு உதவ முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் முயற்சி செய்கிறேன்என்றாள் பாவனா.

அவள் இவ்வளவு எளிதில் மனம் தெளிய கூடுமென்று எதிர்பாராத மேகன், உடனே முகம் விகசிக்க, “நன்றி இளவரசிஎன்றான்.

அவன் இளவரசி என்றதை கேட்டதும் முகம் சுளித்து, “என்னைப் பவி என்றே கூப்பிடுங்க. இளவரசியாக இருந்ததெல்லாம் எனக்கு நினைவில்லை. நீங்க அப்படி அழைக்கும்போது எனக்கே நீங்க வேறு யாரிடமோ பேசுவதுப் போல் இருக்குஎன்று தன் முன் வந்திருந்த கூந்தலை பின் தள்ளியவிதமாகச் சொன்னாள்.

அவளது செய்கையில் புன்னகைத்த மேகன், “சரி. பவி.” என்றான்.

அவன் புன்னகையை பார்த்ததும், ‘பவி, இயக்கம் பயின்றதும். என்னமா நடிக்கிறாய். பார் மேகனுக்கு நான் வன்னியில்லை என்பது அறிய முடியவில்லை.’ என்று பெருமிதமாக அவளுக்குள்ளே நினைத்தாள். அப்படி நினைத்ததும் அவளையும் அறியாமல் அவள் இதழ் விரித்தாள்.

அப்போது, “பவி. நீங்க, உங்களுக்கு ஆட்டுக்குட்டி என்றால் பயமா?” என்றான்.

அவன் அப்படி கேட்டதும்தான் அவளுக்கு, ‘மேகன் ஆட்டுக்குட்டி.’ என்பது நினைவு வந்தது. உடனே முகம் வெளுத்த பாவனா ஆமாம் என்பதுப் போல் தலையசைத்தாள்.

பின், “ஆட்டுக்குட்டி மட்டுமல்ல, எனக்கு நாய்க்குட்டி, பூனைக்குட்டி, கன்னுக்குட்டினு,’ என்று சிறுப்பிள்ளைப் போல விரல் விட்டுச் சொல்லி, ‘எந்த ரோமம் இருக்க உயிரனும் தொடப் பிடிக்காது. எட்ட இருந்து இரசிப்பேன். ஆனால் தொட பயமா இருக்கும். ஏன்னு தெரியாதுஎன்று அவனைப் பார்த்தாள்.

அவளைப் பார்த்தவிதம் இருந்த மேகனின் இதயம் ஏனோ படப்படத்தது. ‘இவள் ஏன் இவ்வளவு அழக்காக இன்று தெரிய வேண்டும்.’ என்று நினைத்தான். ‘ஒருவேளை அவள் தன்னை விரும்புவது தெரிந்ததால் என்னுள் ஏற்பட்ட மாற்றமோ.’ என்று நினைத்தான்.

அவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பதைப் பார்த்துப் பாவனாவின் முகம் சூடேறியது. இருந்தும், “ஏய் குதிரைவால். என்ன அப்படி பார்கிற?” என்று அவனை நோக்கிக் கேட்டாள்.

அவள் மீண்டும் அழைத்ததில் நினைவு வந்த மேகன், “பவி. உன்னை இங்கு அழைத்துக் கொண்டு பூமியிலிருந்து வந்ததில் என் சக்தி முழுதும் கரைந்துவிட்டது. அதனால் நான் குறைந்தது 5 லிருந்து 10 நாட்களாவது ஓய்வெடுக்க வேண்டும்.

அப்போதுதான் உன்னை என்னால் பாதுகாப்பாக என் குருவிடம் அழைத்துச் செல்ல முடியும். நான் இந்தச் சில நாட்களுக்கு என் உண்மை உருவான ஆடு உருவத்தில் இருந்தால் விரைவிலே என் சக்தி மீளுருவாக்கம் (Re-Generate) ஆகும். அதனால் நான் ஆடு உருவத்திற்கு மீண்டும் மாறி விடுவேன்.

நீங்க என்னைத் தொட வேண்டாம். ஆனால் அதே சமயம் பயப்படவும் வேண்டாம். ஒருவேளை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்க வேறு அறைக்குச் சென்றுவிடுகிறேன்என்றான்.

அவன் சொன்னதை கேட்டதும், ‘வேறு அறை போகிறானா? அச்சசோ எதுவுமே தெரியாத இந்த ஊரில், ஓ இல்லை இல்லை இந்த உலகில் தனியே விட்டு வேறு அறைச் செல்கிறானா. அதெல்லாம் சரிப்பட்டு வராது.’ என்று நினைத்து, “சரி உங்க விருப்பம். ஆனால் ஆட்டுக் குட்டியாக இருக்கும்போது என் அருகில் வரக் கூடாதுஎன்று கண்கள் உருட்டி அவனை எச்சரித்தாள்.

அவள் செயலில் பழைய பாவனா மீண்டு விட்டதை உணர்ந்த மேகன், “சரிதான் பவி. உங்கள் ஆணைப்படிஎன்றான் சின்ன சிரிப்புடன்.

ம்ம்.” என்ற பாவனா, சற்று நிறுத்தி, “குதிரைவால். நீ உன் விருப்பத்திற்கு என்னை இங்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டாய். என் பெற்றோர்களும் நண்பர்களும் என்னைக் காணவில்லையென்று பயப்படக் கூடுமேஎன்று முகத்தில் கவலை தோய கேட்டாள்.

அதனைப் பற்றி நீ கவலை பட வேண்டாம். உன்னைப் பற்றிப் பூமியில் இப்போது யாருக்கும் நினைவிருக்காது. நீ மீண்டும் பூமிக்கு போகும் போதுதான் அவர்களுக்கு உன் நினைவு வரும். என் குருவின் சொல்படி உன்னைப் பற்றி நினைவுள்ளவர்களுக்கு மந்திரத்தால் கட்டு போட்டுவிட்டு வந்துவிட்டேன்.” என்றான்.

அதனைக் கேட்ட பாவனா தன் பெற்றொரை பிரிந்த வருத்தம் இருந்தப்போதும் தன் தோழிக்காக அவள் கவலையைப் பின் தள்ளி முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு, “பெரிய திட்டம் போட்டுதான் என்னைக் கடத்தி வந்திருகிறாய்என்றாள்.

அதற்குப் பதிலாகப் புன்னகைத்த மேகன் சிறிது நிறுத்தி, “ஆனால்… உன் நண்பர் கார்திக், எப்படியோ உன்னை இங்கு அழைத்து வரும்போது உடன் வந்துவிட்டார். அவரால்தான் இப்படி என் சக்தி அனைத்தும் கரைந்து போய் நான் உடனடியாக மீளுருவாக்கம் செய்ய வேண்டியதாகி போனதுஎன்றான்.

அதனைக் கேட்டதும் பாவனாவின் முகம் வெகுவாக மாறிவிட்டது. இங்கு வந்து மாட்டிக் கொண்டது தான் மட்டும்தான் என்று எண்ணியிருந்தவளுக்கு கார்திக் இங்கு வந்து அகப்பட்டது தெரிந்ததும் முகம் இறுக மேகனை பார்த்து, “கார்திக் இப்போது எங்கே?” என்று கேட்டாள்.