Advertisement

அத்தியாயம் – 19

அதே சமயம் அவன் கைகள் அவள் வயிற்றை தொடுமுன் அன்னிச்சை செயலாக அவந்திகா ஒரு அடிபின் எடுத்து வைத்தவள், திகைப்பு மாறாமல் நந்தன்?” என்று அவனைப் பார்த்தாள்.

அவளது விழிப்பில் நினைவு வந்தவனாக, அவனது கையைப் பின் மீட்டுக் கொண்டான். ஆனால் அவனது கண்கள் அவனது இயலாமையைச் சொல்வது போலச் சிவந்து போயிருந்தது.

ஆனால் அவந்திகாவிற்குதான் அவனது மனநிலை என்னவென்று தெளிவாகப் புரியவில்லை. ‘தன் காயத்தைப் பார்த்த பிறகே அவனுள் இந்த மாற்றம்என்பதை உணர்ந்த அவந்திகாவின் முகத்தில், ‘இந்தச் சின்னக் காயத்திற்காகவா கவலைபடுகிறான்’என்று லேசான புன்னகையே அரும்பியது.

மென்னகையுடன், “நந்தன். இது ஒரு காயமே இல்லை. 400 வருடங்களுக்கு முன் இதுபோலப் பல நூறு கோடுகள் என்மீது விழுந்திருக்கிறது. அதனால்…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே திடுமென அவளருகில் வந்து அவள் தோள்பட்டை மீது முகம்பதித்து சாய்ந்துக் கொண்டான்.

அவனது இந்தச் செயலில் என்ன நிகழ்ந்தது என்று யூகித்து, அவள் அவனை விலக்க எண்ணி தன் கையை உயர்த்தினாள். ஆனால் அப்போது லேசாக நடுங்கிய(shiver) நந்தனின் உடல் அவளுக்குச் சிலிர்ப்பைத் தர அப்படியே உயர்த்திய கையைப் பாதியிலே நிறுத்தினாள்.

அவன் அவளைப் பற்றியிருந்தவிதம் யாரும் அவளை அவனிடமிருந்து பிரித்து எடுத்துச் சென்று விடுவார்களோ. எங்குத் தன் கைப்பிடியிலிருந்து அவளை விடுவித்தால், மீண்டும் அவளை இழந்துவிடுவோமோ என்று எண்ணியவனின் செயல் போல இருந்தது.

அதே சமயம் அவனது அணைப்பு எங்கு இறுக பற்றி ஏற்கனவே காயம்பட்ட அவளது மேனி இன்னமும் வலியால் துன்புறுமோ என்று எண்ணியவன் போலவும் இதமாகவும் இருந்தது.(1)

அவனது இந்தச் செயலில் அவன் சொல்லாமலே அவளுக்கு அவன் மனம் புரிந்தது. ‘400 வருடங்களுக்கு முன் நான் எப்படி இறந்தேன் என்று இவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். மற்ற யாளிகளைப் போலல்லாமல் என்மீது அன்புள்ளவனாக அப்போதிருந்தே இவன் இருந்திருக்க வேண்டும்.

அதனால் அன்று கத்தியால் என் உடலெங்கும் காயம் உண்டானதுப் போல இந்தச் சின்ன வயிற்று காயமும் இருக்கிறது. அதனால் இதைப் பார்த்ததும் முன்பு நிகழ்ந்தது போல மீண்டும் தனக்கு எதுவோ ஆகிவிடுமோ என்று பயப்படுகிறானோஎன்று எண்ணியவளின் இதழ்கள் மேலும் விரிந்தது.

இவ்வளவு நேரம் வீராதி வீரன் போல இருந்தவன் எங்கே? இப்போது தாய்மடி தேடும் குழந்தையைப் போல அரவணைப்பை தேடுகிறவன் எங்கே?!’ என்று அவள் மனம் இளகிதான் போனது.

நந்தன். எனக்குதான் எதுவுமில்லையே. உங்க முன் நல்லாதானே இப்போது இருக்கிறேன். மனதில் கடந்த காலத்தை நினைத்து வருத்திக் கொள்ளாதீங்க.” என்று அவளையும் அறியாமல் அவன் முதுகில் வருடிக் கொடுத்தாள்.

அவள் வார்த்தைகளைக் கேட்டபிறகு அவனிடம் பதிலேதும் வரவில்லை. ஆனால் அவளைப் பற்றியிருந்த பிடி இன்னும் இறுக்கமானது போல அவந்திகா உணர்ந்தாள். அதனை உணர்ந்த அவந்திகா பெருமூச்சுவிட்டு, அதே நிலையில் அவனே நிலைபட காத்திருந்தாள்.

அவளது கொடி மீண்டும் அவளது கையிலிருந்து வெளியில் வந்து அவர்களைச் சுற்றி முனங்கியது. ஆனால் அதனைக் கவனிக்கும் மனநிலையில் அவந்திகா இல்லை. எவ்வளவு நேரம் அவள் அப்படியே அவனைத் தன் கைவளைவில் அரவணைத்திருந்தாளோ தெரியவில்லை.

அவனது நடுக்கம் குறைந்து இயல்பாக மாறி அவளது கையிலிருந்து அவனே விலகி அவளுக்கு முதுகு காட்டி திரும்பி நிற்கும் வரையும் அவந்திகா எதுவும் பேசவில்லை. அவனும் எதுவும் பேசவில்லை.

தன்னிடமிருந்து விலகியிருந்த நந்தனின் பக்கவாட்டு முகத்தைப் பின்னிருந்து அவந்திகா எட்டி பார்த்தாள். கொடி தலைவியின் எதிர்பார்ப்பை உணர்ந்ததுப் போல் துடுக்குதனமுடன் நந்தனின் முன் சென்று அவனை நோட்டமுட்டது.

அவனிடம் அவள், ‘இப்போது பரவாயில்லையா?’ என்று கேட்கும் முன்னே, அவனது கட்டளையை உணர்ந்ததுப் போல முன்பு அவர்களைத் தரையில் கொணர்ந்த வெளீர் நீல நிற பட்டாம்பூச்சிகள் அவந்திகாவின் அருகில் வந்து அவள் உடலில் காயமுற்ற இடத்தில் எல்லாம் பட்டு அதனைக் குணப்படுத்த ஆரம்பித்தது.

பட்டாம்பூச்சுகள் தன் மேனியில் பட்டதும் அக்குளிப்பு(tickle) தோன்ற சிறிது நெளிந்தாள் அவந்திகா. அவள் பேச எண்ணியதை மறந்தும் போனாள். லேசாக அவளது முகமும் ஹா… ஹா…என்று சிரிப்பை உதிர்த்தது.

அவள் புன்னகையில் அவள்புரம் திரும்பிப் பார்த்த நந்தனின் முகம் பழைய பொழிவுக்கு(demeanor) மாறியிருந்தது. சிரித்ததால் உண்டான சிறு கண்ணீருடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் இயல்புக்கு மாறியிருப்பது புரிய அவளுள் மேலும் புன்னகை அரும்பியது.

அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனது கால் சட்டைபையில் கையை விட்டவிதமாகச் சின்ன சிரிப்பை உதிர்த்தான் நந்தன். பின் அவந்திகா எதிர்பார்க்காதப் போது அவளது வலது கையை நந்தன் பற்றினான். அவள் மூளை என்னவென்று யோசிக்கும் முன்னே ஒரு கருமை நிற முத்தாலான கைக்காப்பை அவள் கையில் அணிவித்தான்.

அதனைப் பார்த்ததும் தன்னுடைய கைக்காப்பைப் போலவே இந்தக் கைக்காப்பும் இருக்கிறதே. ஆனால் தன்னுடையது வெள்ளை நிறம். இது கருமை நிறம்.’ என்று எண்ணியவள், அவனை நிமிர்ந்து என்ன இது?” என்று கேள்வியாகக் கைக்காப்பையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தாள்.

அவனிடம் பதில் வருமுன்னே அவந்திகா அந்தக் கைக்காப்பின் மூலம் ஆன்மீக சக்தி அவள் கை மணிக்கட்டில் வெளீர் மஞ்சள் நிறத்தில் ஒரு ஒளி பந்துப் போல உருவாகுவதை பார்த்தாள். அதன் பிறகு அந்த ஒளி பந்து மெல்ல அவளது நாடிகளில் பாய்ந்து அவள் உடலில் சங்கமிப்பதை உணர்ந்தாள்.

அந்தக் கைக்காப்பு அணிந்ததும் அவளால் இயற்கையிலிருந்து ஆன்மீக சக்தியை உறிஞ்ச முடிந்தது. அதனை உணர்ந்ததும் அதிசயமாக அவனைத் திகைப்புடன் விழிவிரித்து பார்த்தாள்.

இது எப்படி சாத்தியம்? இது என்னுடைய கைக்காப்பு அல்லவே?!” என்றாள் திகைப்பு குறையாமல்.

அவளது இந்த முக மாற்றத்தை வெகுவாக இரசித்த நந்தன் மென்னகையுடன், “இது உங்களுக்காக நான் உருவாக்கிய செயற்கை கைக்காப்புஎன்றான்.

அவள் திகைப்பு குறையாமலேஎன்ன?! செயற்கையில் கைக்காப்பு உருவாக்க முடியுமா?” என்ற அவந்திகா, ‘இது எந்த யாளி மரபிலும் இல்லாத நிறமாயிற்றேஎன்று வியந்தாள். அவளது கையையே பார்த்திருந்தவனின் கண்கள், அந்த வெண்ணிற கையில் இரு முத்துகளுடன் கூடிய கருநிற கைக்காப்பு பதிந்து அவளது கையின் அழகை மெருகேற்றுவதை திருப்தியுடன் பார்த்தான்.

யாளிகளின் கைக்காப்பு அவர்களின் ஆன்மாவுடன் இணைந்தது. அதனால் ஒருவரின் கைக்காப்பை மற்றவர்கள் அந்தக் கைக்காப்பின் உரிமையாளர்களின் அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியாது. கைக்காப்பு யாளிகளுக்கு அவ்வளவு பிரதேகமான ஒன்று.

அவர்களது ஆன்மீக இதய வேர்(Spiritual Heart root) உருவாகும் போதே அந்தக் கைக்காப்பு அவர்களின் ஆன்மாவிலிருந்து உருவாகும். அது ஆன்மாவின் ஒரு பகுதி என்றே சொல்லலாம்.

ஒருமுறை கைக்காப்பு உருவாகிவிட்டால் அதன் பிறகு அது இல்லாமல் தவம் செய்யவும் முடியாது. ஆன்மீக சக்தியை இயற்கையிலிருந்து உறிஞ்சவும் முடியாது. அதனால் இந்தச் செயற்கை கைக்காப்பு அவந்திகாவின் திகைப்பை பல மடங்கு அதிகரித்தது.

திகைத்த போதும் முகமலர்ந்து அவன் பதில் சொல்லவில்லையென்றாலும் ஏற்கனவே அதன் பயனை அறிந்த அவந்திகா, “மிகவும் நன்றி. என் கைக்காப்பு இல்லாமல் எப்படி என் நண்பர்களை நான் யாளி உலகிலிருந்து அழைத்துச் செல்லப் போவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இது… இந்தக் கைக்காப்பு என் கவலையைப் போகிற்று. ” நெகிழ்ச்சியுடன் கைக்காப்பை பார்த்தவிதமாகவே சொன்னாள்.

இருந்தும் மனதுள், ‘தன் ஆன்மாவுக்கும் இந்தக் கைக்காப்புக்கும் எந்த இணைப்பும் இல்லை எப்படி இது எனக்காக ஆன்மீக சக்தியை உறிஞ்சுகிறது. இதை எப்படி உருவாக்கினான்என்று நினைத்தாள்.

அவள் மலர்ந்த முகத்தைப் பார்த்துச் சின்ன சிரிப்பை உதிர்த்தவன் எதுவும் பேசவில்லை. “போகலாமா?” என்றான் நந்தன்.

நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், தனியாகப் போக எண்ணியதை விடுத்து நந்தனனுடனே போக முடிவெடுத்தாள். எதுவரை நந்தன் உடன் வருகிறானோ! அதுவரை வரட்டும். என்று நினைத்தவள், “ம்ம்என்று அவனுடன் நடக்க ஆரம்பித்தாள் அவந்திகா.

மனித உலகைப் போல யாளி உலகில் இடம்மாற்றும் சக்கரத்தை இயல்புக்குப் பயன்படுத்த முடியாது. இங்கு இயற்கையில் இருக்கும் ஆன்மீக சக்தியின் அளவு இடத்திற்கு இடம் மாறுப்படும். அதனால் மிகவும் அதிக ஆன்மீக சக்தியுள்ள இடங்களைக் கடக்கும்போது இடம்மாற்றும் சக்கரத்தில் எதிர்பாராத நடுக்கங்களும் விரிசல்களும் ஏற்படும்.

சில நேரங்களில் இன்று போல் திடீரென்று இடம்மாற்று சக்கரம் பாதி வழியில் உடைந்தும் போகும். அதனோடு தெரியாத இடத்திற்கு தவறாக இடம்மாற்றியும் விடும். அதனால் முன்பே பரிசோதித்த வழித்தடங்களில் மட்டுமே அது பயன்படுத்தப்படும்.

அது அவந்திகாவிற்கும் தெரியும் நந்தனுக்கும் தெரியும். அதனால் இருவரும் நடையாகவே காட்டைக் கடந்து அருகிலிருக்கும் கிராமத்திற்கோ அல்லது நகரத்திற்கோ போவதென்று முடிவெடுத்து நடந்தனர்.

அவர்கள் யாளி உலகம் வந்த போதே நண்பகல் கடந்து மாலை நெருங்கியிருந்தது. அவர்கள் பேசி முடித்துக் கிளம்புவதற்குள் சூரியன் மறைய ஆரம்பித்து அந்திமாலையாகியிருந்தது. வெளீர் மஞ்சளில் ஒரு முழு நிலவும், இளஞ்சிவப்பில் தேய்பிறையாக ஒரு நிலவும் வானின் எதிர் எதிர் முனையில் லேசாக வடிவமெற்று தெரிந்தது.

நீண்ட நெடிய மரங்களின் நிழலில் அவர்கள் நடந்துச் சென்ற இடம் சிறிது வெளிச்சம் குறைந்து தெரிந்தது. புழக்கப்படாத காட்டுபாதையில் வளர்ந்து செழித்திருந்த புதர்களும் செடிகளும் அவர்கள் நடக்க நடக்க சலசலக்கும் சப்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

நந்தன் முன் நடக்க அவந்திகா அவன்பின் இங்கும் அங்கும் பார்த்தப்படி நடந்துச் சென்றாள். எப்படி கொடி அவள் நடக்க ஆரம்பித்ததும் அவள் கையில் வந்து அடங்கிப் போனதோ, அதுபோல நந்தனின் பட்டாம்பூச்சிகளும் அவனுடன் இணைந்திருக்க வேண்டும். அவர்கள் நடக்க ஆரம்பித்தப் பிறகு அவற்றில் ஒன்று கூடக் கண்ணில் படவில்லை.

அது கார்காலம் போலும் அவர்கள் நடந்துச் சென்ற பாதையில் அவர்கள் வருவதற்கு முன்புதான் மழை பொழிந்து ஓய்ந்திருக்க வேண்டும். இன்னமும் அங்கிருந்த மரம் நெடிகொடிகளின் இலைகளிலிருந்து அவ்வப்போது நீர் துளிகள் கீழே விழுந்து, “டப்டப்…என்று சத்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. லேசான ஊதகாற்று வீசி அந்தக் குளிர்ந்த இடத்தை இன்னமும் குளிர செய்தது.(2)

ஏற்கனவே பாதி ஆடை கிழிந்திருந்த அவந்திகா, அந்த மனித உடலில் குளிரை தாங்க முடியாமல் லேசாக நடுங்கியவிதமாக அமைதியாக நடந்தாள். தன் தலைவியின் குளிரை உணர்ந்த கொடி, அவள் கையிலிருந்து வந்து முனங்கியபடி அவந்திகாவின் உடலில் சுற்றிக் கொண்டு அதனால் முடிந்த வெப்பத்தை அவளுக்குத் தந்தது.

கொடியின் சத்தத்திலோ அல்லது அவனது உள்ளுணர்விலோ திரும்பி அவளைப் பார்த்த நந்தன் அவளது தோற்றத்தைக் கண்டு திகைத்துப் போனான். குளிரால் அவள் லேசாக அவ்வப்போது நடுங்கினாள்.

அவள் உடல் தாங்கும் அளவிற்கும் மேல் வெப்பம் குறைந்திருக்க வேண்டும். கன்னங்கள் மட்டுமல்லாமல் காது மடல்களும் மூக்கு நுனியும் கூடச் சிவந்து போயிருந்தது. கண்ணீல் குளிரால் கலங்கி லேசாக நீர் எட்டி பார்த்திருந்தது.

அவளைப் பார்க்க அரவணைப்பைத் தேடும் பூனைக் குட்டிப் போல உணர்ந்த நந்தன், திரும்பி அவள் அருகில் வந்தான். பின் அவள் வலது கைபற்றி, அந்தக் கைக்காப்பை சுட்டிக் காட்டி, “இதன் பணியகத்தில் (Hidden Bureau) உங்களுடைய ஆடைகள் சில இருக்கிறது. அதை மாற்றிக் கொள்கிறீர்களா?” என்றான்.

அவன் அருகில் வந்து கைப்பற்றியதும், சில்லிட்டிருந்த அவள் கை அவனது கதகதத்த கைக்குள் போனதும் இதமாக உணர்ந்த அவந்திகா அவனது பதிலில், ‘என்ன! இந்தக் கைக்காப்பு, ஆன்மீக சக்தியைக் கிரக்கிக்க(absorb) மட்டுமல்லாமல் பணியகத்தையும் உள்ளடக்கியிருக்கிறதா?’ என்றே வியந்தாள்.

பின் அவனை நிமிர்ந்து பார்த்த அவந்திகா, “அப்போது நான் என் ஆடையை மாற்றிக் கொள்கிறேன். நான் அருகிலிருக்கும் கிராமத்திற்கு போய்தான் ஆடை வாங்க வேண்டியிருக்கும் என்று எண்ணியிருந்தேன். நல்லவேளை உங்களிடம் அதிகபடியாக ஆடை இருக்கிறது.” என்று தன் கையிலிருந்த கைக்காப்பை தன் ஆள்காட்டிவிரலால் தொட்டு, எங்கு ஆடையிருக்கிறது என்று பார்த்தாள்.

அவள் அதிகம் தேட அவசியம் இல்லாமல், அவள் பணியகத்தைத் திறந்ததுமே முதலில் பார்த்தது அவளது வெள்ளை நிற ஆடைதான். அதனை வெளியில் எடுத்தவள், இன்னமும் அவளது வலது கையைப் பற்றியிருந்த அவனை ஏறிட்டு பார்த்தாள்.

அவள் ஆடை எடுக்கும் வரை காத்திருந்தவன், அவளது நெற்றி பொட்டில் தனது வலது கையின் ஆள்காட்டி விரலால் தொட்டு உடல் வெப்பத்தை அவளுள் அனுப்பினான். அவள் உடல் வெப்பம் சீராவதை உறுதி படுத்திக் கொண்ட பின் அவள் கையை விடுவித்து, “நான் மெல்ல நடந்துச் சென்றுக் கொண்டிருக்கிறேன். நீங்க ஆடை மாற்றியதும் வாருங்கஎன்று நடக்க ஆரம்பித்தான்.

அவந்திகா, நந்தனைப் போல இமைக்கும் நேரத்தில் ஆடை மாற்ற முடியும்தான். ஆனால் இந்த மனித உடல் எந்த அளவு வளைந்து கொடுக்கக் கூடுமென்று தெரியவில்லை. அதனால் நந்தன் முன் அவள் அதனைப் பரிசோதிக்க விரும்பவில்லை. அதனாலே அவனை ஏறிட்டு பார்த்தாள்.

அவள் கவலை உணர்ந்தவனாக நந்தன் அவளுக்குத் தனிமை கொடுத்துச் முன் நடக்க ஆரம்பித்திருந்தான். அவந்திகாவும் அதிக சங்கடம் இல்லாமல் நொடியில் உடை மாற்றிக் கொண்டு அவனை நோக்கி வேகமாக நடந்தாள். (3)

கூடவே, ‘இது, தான் பரியாளியாக இருக்கும்போது அணிந்த அதே ஆடை. எப்படி இவனிடம் இது கிடைத்தது? இந்த நந்தன் எத்தனை இரகசியங்களைத் தான் அவனுள் வைத்திருக்கிறானோ!. எது கேட்டாலும் ஒரு புன்னகையிலே மூடி மறைத்து விடுகிறான். கேட்டும் ஒரு பலனும் இல்லைஎன்று மனதுள் நினைத்துக் கொண்டே அவன் அருகில் வந்துவிட்டாள்.

அவள் சந்தேகத்தைக் கேட்காமல், “நன்றி நந்தன்என்று மட்டும் சொன்னாள் அவந்திகா.

அதற்குப் பதிலளிக்காமல், “வன்னி, ஆன்மீக சக்தியால் உடல் குளிரை போக்கிக் கொள்ளுங்க. நீங்க அணிந்திருக்கும் கைக்காப்பு விரைவிலே பயன்படுத்தபடும் ஆன்மீக சக்தியை உறிஞ்சிக் கொள்ளும். அதனால் சக்தி வீணாகிவிடுமே என்று அஞ்ச வேண்டாம்என்றான் நந்தன்.

அவள் ஆன்மீக சக்தியை வீணாக்கக் கூடாது என்றே குளிரையும் பொறுத்துக் கொண்டு வந்திருக்கிறாள் என்பதை அவள் சொல்லாமலே அறிந்து அவன் சொன்னதில், வெட்கித்து(Embarrassing) திரு திருவென விழித்து, “கவ்கவ்என்று வராத வரட்டு இரும்பலை இரும்பி, “ம்ம்சரிஎன்றாள்.

இப்படியே அவர்கள் 5 நாழிகை(2 hours)(4) போல நடந்திருக்க வேண்டும். அவர்கள் ஒரு நதிகரையை அடைந்தப் போது முழுதும் இருட்டிவிட்டது. இரு நிலவுகள் இருந்தப் போதும் மரங்கள் அடர்ந்த காட்டில் அவந்திகாவால் அதிகம் எதிரில் இருப்பதை பார்க்க முடியவில்லை.

ஆனால் நீரின் சலசலப்பு அருகில் கேட்டது. உடனே தன் ஆள்காட்டி விரலை நீட்டி ஆன்மீக ஆற்றலால் ஒளியை ஒளிரவிட்டாள்… அவள் எதிர்பார்த்ததுப் போலவே அருகில் ஒரு சிறிய ஓடை சலசலத்துக் கொண்டிருந்தது. (5) அதனைப் பார்த்ததும், “நந்தன். ஒரு நிமிடம். நான் நீர் அருந்த வேண்டும். ” என்று அவன் பதில் சொல்லும் முன்பேநீரை நோக்கிச் சென்றாள்.

அவள் நீரை நோக்கி அருகிலிருந்த பாறைகளில் கால்வைத்து நடப்பதை பார்த்த நந்தன், ஓரெட்டில் அவள் கைப்பற்றி, “வன்னிஇங்கேயே இருங்கஎன்றுவிட்டு ஓடையின் அருகில் இருந்த சிறு தேக்கத்தில் தெரிந்த தாமரை செடியின் இலையை பறித்து அதை குவலையாக்கி அதில் நீர் சேகரித்து அவளிடம் கொணர்ந்து தந்தான்.

அவனிடமிருந்து தண்ணீர் வாங்கி அருந்திவிட்டு, “ஹப்பா! நீரும் உணவும் அருந்தாமல், இந்த ஆன்மீக சக்தியால் உயிர் வாழ முடியும் என்றாலும், இந்த மனித உடல் உண்மையான நீருக்கும், உணவுக்கும் ஏங்கதான் செய்கிறதுஎன்று வாய்விட்டுச் சொல்கிறோம் என்பதை மறந்து முனுமுனுத்தாள் அவந்திகா.

அதனைக் கேட்ட நந்தனின் முகத்தில் மென்னகை அரும்பியது. அவள் சொன்னதை கேட்காததுப் போல், “வன்னி, இரவாகிவிட்டது. நீங்களும் இடம்மாற்றும் சக்கரத்தில் அவ்வளவு தூரம் பயணித்துவிட்டு ஓய்வெடுக்கவே இல்லை. அதனால் இங்குக் கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு விடியக் காலைப் போகலாம்என்றான்.

அவந்திகாவிற்கும் ஓய்வு தேவைபடதான் செய்தது, அதனால் அவளும் அதிகம் பேசாமல், “ம்ம்என்று தலையசைத்தாள். இருந்தும் அதிக நேரம் ஓய்வெடுக்க விருப்பமின்றி, “விடியக் காலை வரை வேண்டாம். சில நாழிகைகளுக்கு பிறகு போகலாம்என்றாள்

அவளை நன்கு அறிந்திருந்த நந்தன், “சரிஎன்றான். அதன் பிறகு அவன் கைவிரலைச் சுண்டிவிட்டான். அதனால் பல மின் மினி பூச்சிகள் அவளைச் சுற்றி வந்து அவள் இருந்த இடத்தில் வெளிச்சம் பரப்பி, அந்த இரவுப் பொழுது ஓடை அருகில் இரம்பயமான அழகை அள்ளித் தந்தது.

நந்தன் அருகிலிருந்த காய்ந்த மரசருகுகளையும், உலர்ந்த செடிக்கொடிகளையும் கொண்டு தணல் (campfire) ஏற்படுத்தினான். கொடியும் நந்தனுடன் சென்று தணல் தொடர்ந்து எரிய தேவையான விரகுகளை அவனுக்கு உதவியாக எடுத்து வந்து ஒரு இடத்தில் சேர்த்தது.

அவளும் அவர்களுக்கு உதவ எண்ணி நந்தன் பின் செல்ல எத்தனித்தாள். ஆனால் அவள் வருவதை பார்த்த நந்தன், கையிலிருந்த சுல்லிகளைப் போட்டுவிட்டு அவள் அருகில் வந்து அவள் கைப்பற்றி அந்தத் தணலின் அருகில் அமரச் சொல்லி, “இள… வன்னி. கொஞ்ச நேரம் தணல் அருகிலே இருங்க. நான் பார்த்துக் கொள்கிறேன்என்றான் ஒருவித ஆழ்ந்த குரலில்.

பின், “வன்னி. நான் இதோ வந்துவிடுகிறேன். எங்கும் செல்லாமல் இங்கே காத்திருங்க.” என்றுவிட்டு சென்றான்.

ம்ம்…” என்றவளுக்கு, ஏனோ நந்தனில் தெரிந்த தன்மையான பேச்சு பவளனை நினைக்கத் தூண்டியது. ‘அவசரமாகச் சென்ற பவளன் என்ன செய்துக் கொண்டிருக்கிறனோ!’ என்று நினைத்தாள்.

அவளை விட்டு எங்கோ சென்ற நந்தனின், அவள் எண்ணத்தை உணர்ந்ததுப் போல, இதழ் விரிந்து சின்ன சிரிப்பை உதிர்த்தான்(chuckle).

Author Note:

(1) –யார் சொன்னது கவலையும் துன்பமும் கண்ணீரும் Heroin –க்கு மட்டும் வருமென்று. Who said always Hero needs to Comfort Heroin.? இழப்பும் இறப்பும் இயலாமையும் Hero க்கும் துன்பத்தைத் தரும். So Hero also needs comfort from Heroin.

(2) கார்கால காடு

 

(3) அவந்திகா அணிந்த ஆடையைக் கற்பனை செய்ய ஜோதா அக்பர் படத்தில ஐஸ்வர்யாராய், ரித்திக் கூடச் ச

ண்டை போடும்போது போட்டுருக்குமே அதுபோலக் கற்பனை செய்துக் கோங்க. (Kinda salwar)

(4) 1 நாழிகை = 24 mins.

(5) அந்த ஓடை

Author have somethings to say: I know story going little slow. ஆனால் யாளி உலகம் பற்றியும், யாளிகள் பற்றியும் தெளிவாகத் தெரிந்தால்தான் நான் flawless –அ என் Adventurous Arc – start பண்ண முடியும்.

முன்னாடி episodes படிச்சிருந்த, அடுத்த அத்தியாயங்கள சின்ன சின்ன நுணுக்கங்களை நீங்கத் தானாகக் கற்பனை செய்துகுவிங்க. நான் கதையைப் பற்றி மட்டும் சொன்னால் போதுமாக இருக்கும்.

Within two Episodes, our first Adventurous Arc of the story will start. Be ready to travel in it 🙂

Advertisement