Advertisement

அத்தியாம் – 18

வெளிர் மஞ்சள் நிற ஆன்மீக ஆற்றல் நந்தனின் உதடுகளிலிருந்து அவந்திகாவின் உதடுகளில் நுழைந்து, மெதுவாக அவளது நரம்புகளில் ஒளி கோடுகளாக மாறி உடல் முழுதும் அது பரவ ஆரம்பித்தது.

அது, கலைத்திருந்த அவந்திகாவின் உடல் முழுதும் பரவப் பரவ அவளையும் அறியாமல் இதமாக உணர கண்கள் மூடி, “ம்ம்…” என்று முனங்கினாள். முன்பு அவன் பிடியில் உடல் இறுக்கமுடன் இருந்தவள், இப்போது எதிர்க்கும் சக்தியற்றவளைப் போல அந்தச் சுகத்தில் அவன் கைகளில் லேசாக இளக ஆரம்பித்தாள்.

அவளது இந்த மாற்றத்தை உணர்ந்த நந்தனின் இதழ்கள் இணைந்திருந்தப் போதும் கண்கள் மின்னலென மின்னி மீண்டது. தொடர்ந்து ஆன்மீக சக்தியைச் செலுத்திய நந்தன், அவளது மனித உடல் தற்போது அதிக பட்சமாகத் தாங்கக் கூடிய எல்லையான 4 சக்கர சக்தி அளவுவரை ஆன்மீக சக்தியை அவளுள் செலுத்தினான். அதன் பிறகே அவளை அவன் பிடியிலிருந்து விடிவித்தான்.

அவனது பிடியிலிருந்து விலகியதும் ஏதோ சுகமான கனவிலிருந்து விழித்ததுப் போல ‘என்ன நிகழ்ந்தது?’ என்று நொடி குழம்பி விழித்து எதிரில் நின்றிருந்தவனை பார்த்தாள். பின் என்ன நிகழ்ந்தது என்று உணர்ந்த அவந்திகாவின் முகம் இரத்தமெனச் சிவக்க சட்டென முகம் திரும்பி அந்த உருளை வடிய சக்கரத்தில் அவனுக்கு முதுகு காட்டி நின்றாள்.

அவளுக்குள் படபடவெனத் துடித்துக் கொண்டிருந்த அவள் இதயம், ‘எங்கேனும் இவன் கண் படாத இடத்தில் மறைந்துவிட கூடாதா’ என்றது. அவளது இந்தச் செயலை எதிர் பார்த்திருந்தான் போலும் அவனும் உடனே எதுவும் பேசாமல் அவள் உள்ளம் நிலை படக் காத்திருந்தான்.

அவளுக்கு நன்றாகத் தெரியும். யாளிகளுக்கு உணர்வுகள் அதிகம் வெளிபடாது என்று. ஒருவருக்கு ஒருவர் ஆன்ம பிணைப்பு(soul binding between soul-mates) (1) இருந்தால் மட்டுமே மனிதர்களில் சாதரணமாகத் தொடுவதாலும், முத்தங்களாலும் உண்டாகும் உடல் சிலிர்ப்பும், இராசாயன மாற்றங்கள் ஏற்படும்.

அதிலும் ஒரு விதி விலக்கு உண்டுதான். மனித யாளிகளால் மட்டுமே மனிதர்களைப் போல இந்த உணர்வுகளை ஆன்ம பிணைப்பு இல்லாமல் உணர முடியும். ஆனால் அருகில் இருக்கும் நந்தனின் ஆன்மீக சக்தியின் அளவை பார்க்கும்போது நிச்சயம் அவன் மனித யாளி அல்ல. அதனால் என்னுள் உண்டான இந்தக் கிளர்ச்சி அவனுள் துளியும் உண்டாகியிருக்காது.

அப்படி இருக்க சுவாசமற்று இறக்க இருந்த எனக்கு முதலுதவியாகச் செய்த அந்த இதழணைப்பை அவன் அவளுக்குச் செய்யும் உதவியாக மட்டுமே எண்ணி செய்திருக்க வேண்டும். அதனால் அதனை வேறு விதமாக நாமும் தவறாக எண்ணக் கூடாது.’ என்று அவளுக்கு அவளே பல முறை சொல்லிக் கொண்டாள்.

பின் இன்னமும் படபடத்துக் கொண்டிருந்த இதயத்தில் கை வைத்து, ‘என்ன இருந்தும் இந்த மனித உடல் மிகவும் சௌகரியமாகதான் இருக்கிறது’ என்று பெருமூச்சுவிட்டாள். அதனைத் தொடர்ந்து உடன் இருக்கும் அவனிடம் எதுவும் பேசாமல் இப்படி அமைதியாய் இருப்பது நன்றாயிராது என்று எண்ணி, அவனது உதவிக்கு நன்றி சொல்லும் விதமாக அவன்புரம் திரும்பாமலே, “ந…நன்றி” என்றாள்.

அதுவரை சுவாரசியமுடன் ஒருபுரம் அவள் முதுகை ஓர கண்ணில் பார்த்தவிதமாகவும், மற்றொருபுரம் எதிர்பாராத எரி நட்சத்திரத்தால் பழுதான இடம்மாற்றும் சக்கரத்தைத் தனது வலது கையால் தொட்டு ஆன்மீக ஆற்றலால் சீர்படுத்திக் கொண்டும் இருந்தான் நந்தன்.

அப்போது கேட்ட அவளது மெல்லிய குரலில், இதழ்களில் மெல்லிய நகை இழையோட “ம்ம்?” என்று கேட்டான்.

அவனது குரலில் சிறிது வெட்கித்து(awkward), இனியும் இப்படி தயங்கிக் கொண்டு நின்றிருந்தால் நாகாரீகமாகாது என்று உணர்ந்து, “கவ்…கவ்…” என்று வராத வரட்டு இருமலை இரும்பி, அவன்புரம் திரும்பி, “நன்றி” என்றாள்.

எதுவும் பேசாமல், “ம்ம்” என்றான் நந்தன். அந்தச் சில கால அவகாசத்தில் எதிரில் இருந்த அவந்திகாவின் முக சிவப்பு தெளிந்திருந்தப் போதும் அவள் இன்னமும் நிலைக்கு வரவில்லை என்பதை அவள் பால் வண்ண காதுமடலின் நுனி சிவந்திருந்ததில் அறிந்துக் கொண்டான்.

உடனே சின்ன சிரிப்பை உதிர்த்து தன் பார்வையை அவளிடமிருந்து விலக்கி இடம்மாற்றும் சக்கரத்தின் மேலே செலுத்தியவிதமாக, “உண்மையில் மனித உடல் மிகவும் அசௌகரிமாகதான் இருக்கும் போலும்!” என்றான்.

அவனது பதிலில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்க, அவள் முகம் மீண்டும் சிவந்து போனது. அவளை மேலும் வார்த்தைகளால் இம்சிக்காமல், “இன்னமும் 2 மணி நேரத்தில் யாளி உலகம் அடைந்துவிடுவோம்?” என்று அவளிடம் தகவல் சொல்லியவிதமாக அந்த இடம்மாற்று சக்கரத்தின் சுவரில் தன் கையை எடுக்காமலே ஆன்மீக சக்தியால் அதன் வேகத்தை அதிகரித்தான்.

அவனது பேச்சு மாற்றத்தில் நிம்மதியுற்ற அவந்திகா, “ம்ம்” என்றாள்.

பின் பல வருடங்களாகக் கிடைக்காத வாய்ப்பாக அவன் அருகில் இருக்க, அமைதியாக எதிரில் நின்றிருந்தவனை ஆராயும் பார்வை பார்த்திருந்தாள். அவள் தன்னை பார்க்கிறாள் என்று தெரிந்தும் அவன் கவனத்தை சிதறவிடாமல் இடம்மாற்றும் சக்கரத்தின் வேகத்தை அதிகரிப்பதிலே கண்ணாயிருந்தான் நந்தன்.

அவனது செயலில் வியப்பாக ‘அப்போதுதான் அவன் அதிக ஆன்மீக சக்தியைத் தனக்கு தந்தான். அதற்குள் இடம்மாற்றும் சக்கரத்திற்கு ஆன்மீக சக்தியைப் பயன்படுத்த வேண்டுமென்றால் எவ்வளவு வேகத்தில் அவனது ஆன்மீக சக்தி மீளுருவாக்கம் (Regeneration)(2) ஆகியிருக்க வேண்டும்.’ என்று நினைத்தாள்.

ஆம் ஆன்மீக இதய வேர்(Spiritual Heart root)(3) உள்ள யாளிகள் எல்லோராலும் ஆன்மீக ஆற்றலை மீளுருவாக்கம்(Regeneration) செய்ய முடியும். ஆன்மீக இதய வேர்(Spiritual Heart root) யாளிகள் முதல் முறையாக ஆன்மீக சக்தியை இயற்கையிலிருந்து கிரகித்து முதல் சக்கர நிலை சக்தியை அடையும்போது அவர்களுள் உருவாகும்.

முதலில் இது உருவாக ஒவ்வொரு யாளிகளின் திறமையைப் பொறுத்து 10 வருடத்திலிருந்து பல வருடம் வரையிலான தவம் தேவைப்படும். யாளிகளின் திறமை அவை பிறக்கும் போதே நிர்ணயிக்கப்படும்.

அவந்திகாதான் பலஆயிரம் வருடம் கழித்து வெள்ளிவேர் எலும்புடன் (silver root bone)(4) பிறந்த யாளி. வெள்ளிவேர் எலும்புள்ளவர்களால் மட்டுமே 7 சக்கர நிலைகளையும் கடந்து பிறப்பும் இறப்பு அற்ற சஞ்சீவ நிலையை அடைய முடியும். மற்றவர்களுக்கு அதன் வாய்ப்பு மிகவும் குறைவு.

வன்னி(அவந்திகா) அவள் பிறந்து 4 வருடத்திலே ஆன்மீக இதயவேரை உருவாக்கி முதல் சக்கர நிலையை அடைந்துவிட்டாள். ஆனால் மற்ற யாளிகளுக்கு அது குறைந்தது தவம் செய்ய ஆரம்பித்ததிலிருந்து 10 வருடங்களாவது ஆகும்.

அப்படிபட்ட வன்னி, சஞ்சீவ நிலை அடையுமுன்னே தன் இருபது வயதில் ஆறு சக்கர நிலையை அடைந்த சில நாட்களிலே யாளி உலகை விட்டுப் போக நேர்ந்தது. அப்படிபட்ட சக்தி வாய்ந்த அவளால் கூட இவ்வளவு விரைவில் பயன்படுத்திய ஆன்மீக சக்தியை மீளுருவாக்கம் (Regenerate) செய்திருக்க முடியாது.

அதனாலே அவனை வெறிக்கிறோம் என்று தெரிந்தும், விழிவிரித்து ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள். அவள் தீவிர பார்வையை உணர்ந்த நந்தன், “என்ன ஆனது இளவ” என்று நிறுத்தி, “ம்கும்” என்று தன் இடது கையை உதடருகில் வைத்துக் கணைத்து, குரல் மாற்றி “வன்னி…ஏன் அப்படி பார்கிறீங்க?” என்றான் நேரடையாக.

அவளுள் அவனிடம் கேட்கப் பல கேள்விகள் இருந்தது. அவன் வன்னி என்று தன் உண்மை பெயரை அழைத்ததில் அவன் பேச்சில் தெரிந்த மாற்றத்தை உணராமல் அவள் மனதில் சிறு வயதிலிருந்து அரித்துக் கொண்டிருந்த கேள்வியைக் கேட்க முடிவெடுத்தாள்.

எங்கே பாதி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் போதே பட்டாம்பூச்சியாக மாறிக் காணாமல் போய்விடுவானோ என்று எண்ணி, ஏற்கனவே இடம்மாற்றும் சக்கரத்தின் குறுகிய உருளையில் அவன் அருகிலிருந்த அவந்திகா மேலும் நெருங்கி அவன் இடது கையைப் பற்றி,

“நீங்க யார்? எனக்கு உதவ காரணம் என்ன? நான் சங்கடத்திலிருக்கும் போதெல்லாம் வருதென்றால்.? அது எப்படி சாத்தியம்? எப்படி எனக்குத் துன்பம் நேரவிருப்பது உங்களுக்குத் தெரிகிறது? அப்படி தெரிந்தாலும் எப்படி உங்களால் உடனே நான் இருக்குமிடம் வர முடிகிறது” அவனை நேராகப் பார்த்து முகத்தில் சிறிதும் இளக்கம் இல்லாமல் பதில் அறிந்திடும் எண்ணத்தில் தீர்க்கமாகக் கேட்டாள்.

அவளது இந்தத் தீர்க்கமான பார்வையை பல நூறு வருடங்களுக்குப் பிறகு பார்த்த நந்தன் அவளுக்குச் சலிக்காமல் அவனும் அவளைப் பார்த்தான். சில நொடிகள் இருவரும் எதுவும் பேசாமலே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்.

பின் பெருமூச்சுவிட்டு, அவள் கையைத் தன் கையிலிருந்து விலக்கிச் சாவதானமாக, “உங்களால் பயனுற்ற பலருள் ஒருவன் என்று சொல்லலாம். பிரதி கடனாக உங்களுக்கு உதவுவதாகச் சொல்லலாம். கடைசியாக நீங்கச் சங்கடத்தில் இருக்கும்போது எப்படி எனக்குத் தெரிகிறது?!” என்று யோசிப்பதுப் போல முகவாயில் தன் கை மடக்கி யோசிப்பதுப் போல நிறுத்தினான்.

பின் அதற்குப் பதிலளிக்காமல், “எது எப்படி இருந்தாலும். என்னால் உங்களுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது. நீங்க எது செய்தாலும், என்னுடைய முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு இருக்கும்” என்றான் இளநகையுடன்.

அவள் மேலும் கேள்விக் கேட்க நினைத்து வாயைத் திறக்கும்போது இடம்மாற்றும் சக்கரம் நிலையிழந்து ஆட ஆரம்பித்தது. உடனே எதிரில் நின்றிருந்த நந்தனின் முகம் இளநகையிலிருந்து தீவிரமாக மாறியது.

அவந்திகா என்னவென்று யோசிக்குமுன்னே இடமாற்றும் சக்கரம் யாளி உலகில் நுழைந்திருக்க வேண்டும். அந்த இடம்மாற்றும் சக்கரம் யாளி உலகில் தரை வரை நீளாமல் பாதி வானிலே முடிந்துவிட்டதா? இல்லை உடைந்து சிதறிவிட்டது. நட்ட நடு வானில் அவந்திகா அந்தரத்தில் நிற்கத் திகைத்து விழித்தாள்.

கீழே விழப் போகிறோம் என்று எண்ணிய அவந்திகா கீழே பார்த்தாள். அடர்ந்த காடு. அந்தக் காட்டில் பல நெடிய உயர்ந்த மரங்கள் தெரிந்தது. அதனைப் பார்த்ததும் நொடியும் சிந்திக்காமல், “கொடி தரை அருகில் செல்லும்போது ஏதேனும் மரக்கிளையை கீழே விழாமல் பற்றிக்கொள்.” என்றவள் எதிரில் கையெட்டும் தூரத்தில் இருந்த நந்தனையும் காக்கும் எண்ணமுடன் அன்னிச்சை செயலாக அவனது இடையை தன் இடையுடன் இழுத்து பிடித்துக் கொண்டு தன் வலது கையிலிருந்து கொடியை விடுவித்தாள்.(5)

அவளது கவனம் முழுதும் காயம் இல்லாமல் எப்படி தப்பிப்பது என்ற எண்ணத்திலே இருக்க கொடி இருவரை தாங்கும் வலுவான கிளையைப் பற்றுகிறதா என்று கீழே விழுந்துக் கொண்டிருந்தப் போதும் கொடியின் அசைவைப் பார்த்திருந்தாள்.

அவளைப் பற்றிப் பறக்க எண்ணியிருந்த நந்தன், அவளது இந்தச் செயலை எதிர்பார்க்கவில்லை. ஒரு நொடி திகைத்துதான் போனான். அவள் தன் இடுப்பில் கையை வைத்ததும், அவனுக்கு அவனது கையை எங்கு வைப்பது என்று புரியாமல் ஒரு நொடி விழித்தான். பின் அவளது முதுகில் ஒரு கையும் இடையில் ம்று கையுமாகப் பிடித்துக் கொண்டான்.

காரியமே கண்ணாயிருந்த அவந்திகாவின் விழிகளைக் குனிந்து அவளைப் பார்த்தவண்ணம் இருந்தான். அவனையும் அறியாமல் அவனது இதழ்கள் விரிந்து மென்னகையாகியது. விரைவிலே இருவரும் வானிலிருந்து மரங்களுக்கு இடையில் விழுந்தனர். கொடியும் பொய்க்காமல் நீண்ட நெடிய மரத்தின் வழுவான கிளையைப் பற்றுவதை பார்த்தாள்.

கொடி மரக்கிளையை பற்றியதும் பெண்டுலம் போல இருவரும் இங்கும் அங்கும் ஆடினர். ஒரு வழியாகத் தப்பித்தோம் என்பதுப் போல் பெருமூச்சுவிட்டு நேரே பார்த்தவள். மிக அருகில் எதிரில் தெரிந்த முகத்தில் விக்கித்து போனாள்.

அதனோடு அவர்கள் இருவரும் அணைத்திருந்தவிதத்தை உணர்ந்தவள் அவனை அந்தரத்தில் விடவும் முடியாமல் பிடித்திருக்கவும் முடியாமல் திணறினாள். அவள் தடுமாற்றம் உணர்ந்த நந்தன், எதுவும் பேசவில்லை.

ஆனால் அவளது முதுகுக்கு பின் இருந்த தன் கைவிரல்களின் நுனிகளில் வெளீர் நீல நிறத்தில் ஆன்மீக ஒளியை ஒளிரவிட்டான். இமைக்கும் நேரத்தில் அவன் கைவிரல்களின் நுனியிலிருந்து வெளீர் நீல நிறத்தில் மினுமினுத்த பல பட்டாம்பூச்சிகள் உருவாகி அவளையும் அவனையும் சுற்றி அவர்கள் இருவரையும் சுற்றி பரவியது.

பிறகு அந்தப் பட்டாம்பூச்சிகள் இருவரையும் காற்றிலே மிதக்கச் செய்து தரையில் கொணர்ந்துவிட்டது. கொடியும் தன் தலைவியின் பாதுகாப்பை உணர்ந்து பற்றியிருந்த கிளையைவிட்டு அவந்திகாவின் கையில் வந்து சுற்றிக் கொண்டது.

இந்த முழு காட்சியையும் இமைக் கொட்டாமல் அவன் முகத்தைப் பார்த்த வண்ணமே அவந்திகா கடந்தாள். அவளது உள்ளம், ‘அவ்வளவு சக்தி உள்ளவனை நீ காப்பாற்ற வேண்டிய அவசியமே இல்லை. முட்டாள் முட்டாள். ‘ என்று எள்ளி நகையாடியது.

ஆனால் நந்தனுக்கு நன்றாகவே புரிந்தது. அவந்திகா வெட்கத்தில்(Embarrassing), அவளையே நொந்துக் கொள்வாள் என்று. அதனால் சூழலை இயல்பாக்கும் எண்ணமுடன் தரை அடைந்ததும் அவளிடமிருந்து விலகி, “நன்றி வன்னி. ஒரு நொடி நான் கவனம் சிதறிவிட்டேன். நீங்கவில்லையென்றால் நான் அவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்து பெரிய காயம் உண்டாகியிருக்கும்” என்றான்.

அவனது பதிலில் ‘இவனுக்குக் காயம் ஏற்படுமா.? தன்னை இயல்பாக்க இப்படி சொல்கிறானா அல்லது கேலி செய்கிறானா’ என்று புரியாமல் இருக்க அவந்திகா மக்கு அல்லவே. இன்னமும் சங்கடமாக உணர்ந்த போதும், “ப…பரவாயில்லை” என்றாள்.

அப்போது கொடி அவள் கையிலிருந்து வெளியில் வந்து அவளைச் சுற்றி முனங்கியது. அதன் முனங்களில் என்ன என்பதுப் போலக் கொடியைப் பார்த்தவள் அப்போதுதான் அவளது உடையின் நிலையைப் பார்த்தாள். அங்கொன்றும் இங்கொன்றுமாக அவளது ஆடை கிழிந்திருந்தது.

அவளது துப்பாட்டா விழுந்த இடம் தெரியவில்லை. அவளது வயிற்றில் கத்தியால் தோலை கிழித்ததுப் போலான காயம் அவள் ஆடையையும் மீறி ஏற்பட்டிருந்தது. அந்தக் காயத்திலிருந்து இரத்தம் வலிய ஆரம்பித்திருந்தது.

அவள் அணிந்திருந்த கருநீல நிற சுடிதாரின் மேல் சட்டையில் இரத்தம் வருவது உன்னிப்பாகப் பார்த்தாலே தெரியும். அதனால் அதனை முதலில் அவளும் உணரவில்லை. எதிரில் நின்றிருந்த நந்தனும் உணரவில்லை. ஏற்கனவே 15 நாட்களாகத் தன் ஆன்மீக சக்தியால் அந்தப் பருத்தியால் ஆன சுடித்தாரை சுத்தம் செய்ததாலோ என்னமோ அந்த ஆடை மிகவும் நைந்து போயிருந்தது.

பொதுவாக யாளிகள் இது போன்ற பயணங்களிலும் தவம் செய்யும் போதும் ஒருவித ஆன்மீக பட்டுபூச்சியினால்(Spiritual silk worm) ஆன உடைகளை அணிந்துக் கொள்வர். இது பலவிதத்தில் சௌகரியமாக இருக்கும். ஏன் நந்தனும் தற்போது அது போன்ற வெள்ளை நிற ஆடையையே அணிந்திருந்தான்.

ஆன்மீக பட்டுப்பூச்சியால் ஆன ஆடையை எளிதில் கிழிக்க முடியாது. ஆன்மீக சக்தியால் அவற்றை நினைக்கும்போது தூய்மை படுத்திக் கொள்ளலாம். ஆனால் பருத்தி ஆடை எப்படி சக்தி வாய்ந்த ஆன்மீக சக்தியால் தூய்மை செய்வதை தாங்கும். அதனால் கீழே விழுந்தப் போது ஏற்பட்ட சில உரசல்களில் அது கிழிந்து அவளது வயிற்று தோலை கிளைகள் பதம்பார்த்திருந்தது.

அதனைப் பார்த்ததும்தான் வலியை உணர்ந்தவள் போல முகம் வெளுக்கக் கொடியின்புரம் திரும்பினாள். பின் “சரியாகிவிடும் கொடி. கவலை படாதே” என்று தன் முன் வட்டமடித்துக் கொண்டிருந்த கொடியினை அருகழைத்து அதனைத் தடவிக் கொடுத்தாள்.

கூடவே தன் ஆன்மீக சக்தியைக் கொண்டு வலிந்துக் கொண்டிருந்த இரத்ததை தற்காலிகமாக நிறுத்தினாள். தன்னிடம் இருப்பில் இருக்கும் ஆன்மீக சக்தியால் அதனை முழுதும் குணபடுத்திக் கொள்ள முடியும்தான். ஆனால் அவளுக்கு இது பெரிய காயமாகப் படவுமில்லை.

அதனோடு ஆன்மீக சக்தியை வீணாக்கவும் மனமில்லை. இன்னமும் பவியையும் கார்திக்கையும் காப்பாற்றும் வழி தெரியவில்லை. அதற்கு முன் அசட்டையாக இருக்க அவளுக்கு விருப்பமில்லை. அதனால் அதனை அப்படியே விட்டு நந்தனிடம் விடைப் பெற்றுக் கொண்டு இந்த காட்டை விட்டு வெளியில் சென்று மகர அரசின் வழிதடம்(Map) அறிந்து அங்குச் செல்ல ஆயுதமானாள்.

அதே நினைவில் இருந்தவள் எதிரில் நின்றிருந்தவனின் முகத்தை அதுவரை பார்க்கவில்லை. அவளது காயத்தைப் பார்த்ததும் அவனது முகம் சொல்லொணாத வலியை உணர்வது போல வெளுத்துத் தெரிந்தது. மறக்க நினைத்த கசப்பான நினைவுகளைக் கண் முன் கொண்டதுப் போல அவனது கண்கள் சிவந்து லேசாக அவனது கை முஷ்டி இறுகியது.

விடைப்பெரும் எண்ணமுடன் தன் கையில் கொடியினை தவழவிட்டு, மணிக்கட்டில் அது முழுதும் சுற்றிக் கொள்வதை உறுதிபடுத்திக் கொண்டே “நந்தன். மிகவும் நன்றி. நான் என் தோழர்களைக் காப்பாற்ற போக வேண்டும். இதற்கு மேலும் உங்கள் நேரத்தை நான் வீணடிக்க முடியாது. அதனால்…” , என்று நிமிர்ந்தாள். நிமிர்ந்தவள் மேலும் சொல்லுமுன்னே எதிரில் தெரிந்த அவனது அந்த இறுகிய முகம் அவளைத் திகைப்படைய செய்தது.

அவள் பேசியது அவன் காதிலே விழாததுப் போல அவனது வலது கை அவளது காயம் பட்ட வயிற்றை நோக்கி அதனைக் குணப்படுத்த துடித்தவிதமாக நடுங்கியபடி நீண்டது. அவனது இப்படியான தோற்றத்தையும் தடுமாற்றத்தையும் அவந்திகா இதுவரை பார்த்ததில்லை.

அவனது வலியை அவன் வார்த்தைகளால் சொல்லுமுன்னே உணர்ந்த அவந்திகா, அவனுள் தெரிந்த மாற்றத்தை உணரவும் தவறவில்லை. அதே சமயம் அவன் கைகள் அவள் வயிற்றை தொடுமுன் அன்னிச்சை செயலாக அவந்திகா ஒரு அடிபின் எடுத்து வைத்தவள், திகைப்பு மாறாமல் “நந்தன்?” என்று அவனைப் பார்த்தாள்.

Author Note:

(1) -ஆன்ம பிணைப்பு – இதனை யாளிகளின் திருமண முறை என்றும் சொல்லலாம்.

(2) மீளுருவாக்கம் – self healing or Regeneration of used up Spiritual Energy.

(3) ஆன்மீக இதய வேர் – Spiritual Heart Root – இது யாளிகள் முதல் முறையாக ஆன்மீக சக்தியை இயற்கையிலிருந்து கிரகித்து முதல் சக்கர நிலை சக்தியை அடையும்போது அவர்களுள் உருவாகும்.

(4)வெள்ளிவேர் எலும்பு – i wanna give some good name to differentiate heroin has special ability. So I come up with this name. It may Sounds funny. But I liked it. 🙂

(5) என்னச் செய்ய!! last episode – ல I gave chance to Hero Nandhan to save the Beauty Avanthika. This episode la Heroin Avanthika saved Handsome Nandhan from falling from sky . வாழ்க்கை ஒரு சக்கரம் பா. பாவம் அவந்திகா இன்னமும் வன்னியை போலச் சுற்றி இருக்கவங்கல காப்பாதனும்னு நினைக்கிறாள். அது நல்ல விஷயம்தான். ஆனா என்ன already almighty power – ல இருக்கிற நந்தனுக்கு அவள் உதவி தேவைபடாதுனு மறந்துப் போனாள் போங்க. poor girl.

 

Advertisement