Advertisement

அத்தியாயம் – 17

அவந்திகா எதுவும் பேசுமுன்னே அவள் கைப்பற்றிப் பவளன் இடம்மாற்றும் சக்கரத்திற்குள் நுழைந்தான்.

அவர்கள் உள் நுழைந்ததும் குளுமையாக உணர்ந்த அவந்திகா விழிகளால் அவர்கள் இருந்த இடத்தை அலசினாள். நீல நிற உருளை வடிவ வெளிச்ச குழலின் அடியில் வட்ட வடிவ சமதளம் போல இருக்க அதன் மீது இருவரும் எதிர் எதிரே நின்றிருந்தனர். அந்த உருளை, 200 சதமமீற்றர்(cm) சுற்றளவே இருக்கும்

அவர்கள் மேலே அந்த உருளை வடிவ நீல நிற வெளிச்சம் விழிகளால் அடுத்த முனை காண முடியாத அளவு முடிவில்லாமல் நீண்டிருந்தது. கீழே அவர்கள் தூரம் கடக்க கடக்க அந்த நீல நிற வெளிச்சம் மறைந்துக் கொண்டே வந்தது.

இந்த இடம்மாற்றும் சக்கரத்தை நோட்டமிட்டவள், ‘பரியாளி என்பதால், தான் உருவாக்கும் இடமாற்றும் சக்கரம் வெள்ளை நிறத்திலிருக்கும். இந்த நீல நிறம் பொதுவில் மகரயாளிகளின் நிறம். அதனால் பவளனும் மேகனைப் போல மகர யாளியாக இருப்பானோ!’ என்று யோசித்தாள். இருந்தும் தன்னை பற்றிச் சொல்வதைத் தவிர்க்கும் பவளனிடம் அதுக் குறித்து கேட்க அவளுக்கு விருப்பமில்லை.

அப்படி நினைக்கும் போதே அவளையும் அறியாமல் அவள் பார்வை எதிரில் தன் கால் சட்டைப்பையில்(pocket) கைகளை விட்டிருந்தவனின் வலது கை மணிக்கட்டை நோக்கியது.

முன்பு போல் இன்றும் அவன் கைக்காப்பு அணியவில்லை. கைக்காப்பு இல்லை என்ற போதும் இவன் கண்டிப்பாக மனித யாளி இல்லை. அப்படி இருந்தால் அவனிடம் ஆன்மீக சக்தியே இருக்காது. அதனோடு மனித யாளிகளால் எந்தச் சக்கரமும் (1) கற்க முடியாது.

சக்கரங்களை(Arrays) கற்க அவர்களுள் ஆன்மீக இதய வேர் (Spiritual Heart Root) உருவாகி இருக்க வேண்டும். அது சிம்மயாளி, பரியாளி, மாதங்கயாளி மற்றும் மகரயாளிகளால் மட்டுமே உருவாக்க முடியும். வெறும் ஆன்மீக சக்தியை மரகதகல்லிலிருந்து உறிஞ்சும் மனித யாளிகளால் ஆன்மீக இதய வேர்(Spiritual Heart Root) உருவாக்க முடியாது.

அதனால் இவன் நிச்சயம் மனிதயாளி கிடையாது. அப்படி இருக்க கைக்காப்பு இல்லாமல் இருக்கும் இவன் யார்? தனக்கு உதவி செய்யும் இவனது நோக்கம் என்ன?’ என்று அவளுள் அவனை அறியும் ஆர்வம் கூடியது.

அவளையே பார்த்திருந்த பவளனுக்கு அவளது விழிகள் தன் கையையே பார்த்திருப்பது தெரிந்தது. அவள் கவனத்தைத் திசைத் திருப்பும் எண்ணமுடன் அவன் தன் வலது கையை மேல் உயர்த்தி தன் சோடாபுட்டி கண்ணாடிமீது வைத்து அதை மூக்கு தண்டின் மேல் நகர்த்தியபடி அவளைப் பார்த்தான்.

தன் கண்ணாடியிலிருந்து கையை நகர்த்தாமலே லேசாக இதழ் விரிய சுவாரசியமாக அவள் கவனம் திரும்பும் வரை அவளையே பார்த்திருந்தான். அன்னிச்சை செயலாக, மிகவும் கவனமாக அவன் கையைப் பார்த்தவிதமே யோசித்திருந்தவள், அவன் கை, கால்சட்டை பையிலிருந்து நகர்ந்து அவன் கண் அருகே போகும் வரை அவள் பார்வை அந்தக் கையையே தொடர்ந்தது.

சட்டென்று தான் பார்த்துக் கொண்டிருந்ததில் ஏதோ மாற்றம் தோன்ற அவள் நினைவலைகள் கலைந்தது. உடனே முகம் சிலுப்பி தன் எதிரே நோக்கியவளுக்கு தெரிந்தது பவளனின் மென்னகையே. அவள் கவனம் நிலைக்கு வந்ததைப் பார்த்ததும் தன் புருவம் உயர்த்தி என்ன?’ என்று கேள்வியாக நோக்கினான்.

அவனை இவ்வளவு நேரம் வெறித்துப் பார்த்திருந்ததை உணர்ந்த அவந்திகா, வெட்கித்து (Embarrassing), தன் வலது கைவிரல்களை உள்ளங்கையுள் மடக்கி தன் வாயருகே கொணர்ந்து வராத இருமலை, “கவ்… கவ்…” என்று வரட்டு இருமலாக இரும்பி ஒன்றுமில்லைஎன்பதுப் போல் தலை அசைத்து முகம் திருப்பிக் கொண்டாள்.

மென்னகையுடன் இருந்த பவளனின் இதழ்கள் மேலும் விரிந்து சின்ன சிரிப்பை உதிர்த்தது (chuckle). அதனைக் கேட்டப் போதும் அவந்திகா எதுவும் சொல்ல முடியாமல் முகத்தை அவன்புரம் திருப்பாமல் எங்கோ பார்த்திருந்தாள்.

ஆனால் நாணத்தால் அவள் காதுமடல் சிவந்திருந்தது. அதிலிருந்து தப்ப, கடினபட்டு அவள் கவனைத்தை வேறும் திருப்பினாள்.

முன்பு நந்தனுடன் இடமாற்றும் சக்கரத்தில் சில காத தூரங்களே சென்றேன். அதனால் கண் இமைக்கும் நேரத்தில் தங்கும்விடுதிக்கு சேர்ந்துவிட்டேன். இப்போது போவது பல கோடி காத தூரங்கள். இந்தப் பயணம் முடிய பல நாட்கள் ஆகக்கூடும்என்று அவந்திகா ஏற்கனவே யூகித்திருந்தாள்.

அவள் ஆன்மாவாக மஹர்லோகத்திலிருந்து பூமிக்கு வந்தப் போது அவளுக்கு முழுதும் சுய நினைவு இல்லை. அதனால் உண்மையில் அவளுக்குப் பூமியிலிருந்து யாளி உலகம் செல்லவோ அல்லது யாளி உலகிலிருந்து பூமிக்கு வரவோ எவ்வளவு நாட்கள் ஆகக் கூடுமென்று தெரியவில்லை.

அதனைத் தெரிந்து கொள்ள எண்ணி பவளனிடம் திரும்பி, “பவளன், நாம் யாளி உலகம் செல்ல எவ்வளவு நாட்கள் ஆகும்?” என்றாள்.

அதற்குப் பதிலாக என் ஆன்மீக சக்தியால், இதமான வேகத்தில் சென்றால் 7 நாட்களில் செல்ல முடியும் இளவரசி.” என்றான் பவளன்.

அதனைக் கேட்டதும் அவந்திகாவிற்கு ஏழே நாட்களிலா?’ என்று திகைப்பே உண்டானது. அவள் விழி விரித்து நின்றதை பார்த்த பவளின் முகத்தில் மீண்டும் ஒரு சின்ன சிரிப்பு உதிர்ந்தது. அவனது இந்தச் சிரிப்பு பழகிவிட்டதாலோ என்னமோ அவந்திகா பேதமாக உணரவில்லை.

அவன் பதிலில் அவளுக்கு வேறு தோன்ற, “அப்போது, மேகன் யாளி உலகம் அடைய எவ்வளவு நாட்கள் ஆகும்.?” என்றாள்.

அவள் கேள்வியில் தன் புருவம் சுருக்கி தன் வலது கையை மடக்கி தன் முகவாயின் மீது வைத்துக் கணித்தவிதமாக, “என் கணிப்பு சரியென்றால் 20 நாட்கள்வரை ஆகலாம். ஆனால் அவனுடைய குரு அவனிடம் இடமாற்றும் சக்கர்த்தின் வேகத்தை அதிகரிக்கவென்று வேகக்கருவியை கொடுத்திருக்க வேண்டும். அதனால் இப்போது கண்டிப்பாக எவ்வளவு நாளில் அவர்கள் யாளி உலகம் சேர்வர் என்று சொல்ல முடியாது இளவரசிஎன்றான்.

…” என்ற அவந்திகா அவளையும் அறியாமல், “உங்களுக்கு நிறைய தகவல் தெரிகிறது பவளன்.!” என்று ஆச்சரியமாகச் சொல்லியவிதமாகப் பார்வையை அவனிலிருந்து அகற்றி பக்கவாட்டில் பார்த்து ஏதோ யோசித்தாள்.

அதற்குப் பதிலேதும் சொல்லாமல் சின்ன சிரிப்பை உதிர்த்த பவளனின் முகம் சட்டென மாறியது. மேலும் அவனிடம் ஏதோ கேட்க நிமிர்ந்தவள் பவளன் இருந்த இடத்தில் வெற்றிடத்தை காண திகைத்தாள்.

அதே திகைப்புடன் தீடீரென்று எங்கே மாயமாகப் போனான்என்று அந்த இடம்மாற்றும் சக்கரத்தினுள்ளே இங்கும் அங்கும் பார்த்தாள்.சில நிமிடங்கள் பொறுத்து பார்த்தவள் பவளன் காணாமல் போனதால் இந்த இடம்மாற்றும் சக்கரம் ஆன்மீக சக்தி இல்லாமல் இணைப்பு துண்டிப்பாகிவிடுமோ என்று படபடத்தாள்.

அவசரமாகத் தன் கைப்பையிலிருந்து மரகதக்கல்லை எடுத்துக் கண்கள் மூடித் தன் நெற்றியில் வைத்து அதிலிருந்து ஆன்மீக சக்தியை உறிஞ்ச ஆரம்பித்தாள். அவள் படப்படப்பை உணர்ந்தவன் போலப் பவளன் இளவரசி. கவலைபட வேண்டாம்என்று ஆன்ம இணைப்பில் அவளிடம் சொன்னான்.

அவன் குரலில் மரகதக்கல்லை நெற்றியிலிருந்து எடுத்தவள் கண்களைத் திறந்து, “என்ன ஆனது பவளன். எங்கே சென்றீர்கள்.” என்று படப்படப்பு மறையாமல் கேட்டாள்.

சிறு அமைதிக்குப் பின், “எனக்கு அவசர வேலையொன்று வந்ததால் சொல்லவும் நேரம் இல்லாமல் நான் பூமீக்கு கிளம்பிவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்க இளவரசி. ஆனால் நீங்க யாளி உலகம் செல்லும் வரை இடமாற்றும் சக்கரம் கலையாது. அதனால் பயப்பட வேண்டாம். “ என்றான்.

அவனது பதிலில் உ… உங்களுக்கு எதுவுமில்லையேஎன்று அவள் மனதுள் ஏதோ உருத்த கேட்டாள்.

பவளன், “…”.

மனதில் கலக்கமுடன் அவந்திகா பவளனின் பதிலுக்காகக் காத்திருந்தாள். வெகுநேரம் ஆன பிறகும் பதில் வராமல் போக மீண்டும், “பவளன்?” என்று விழித்தாள்.

எனக்கு எதுவுமில்லை இளவரசி. நான் நீங்க யாளி உலகம் செல்வதற்குள் அங்கு வந்துவிடுவேன்என்றான்.

அவனிடம் என்ன ஆனது என்று கேட்க வேண்டுமென்ற துடிப்பு இருந்தப் போதும் அவனிடம் பதில் வராது என்று உணர்ந்து, “சரி…” என்றாள்.

பவளன், “இளவரசி, நான் வரும் வரை என் ஆன்மீக சக்தி இல்லாததால் இடம்மாற்றும் சக்கரத்தின் வேகம் சிறிது குறைவாகவே இருக்கும். நான் வரவில்லையென்றால், யாளி உலகம் செல்லக் குறைந்தது 15 நாட்களிலிருந்து 1 மாதம்வரை ஆகும்என்றான் கேட்காத தகவலாக.

அதனைக் கேட்ட அவந்திகா, “பரவாயில்லை பவளன்என்றாள்.

இளவரசி, நான் செல்ல வேண்டும். பிறகு அழைக்கிறேன்.” என்றான் பவளன்.

அவந்திகா, “ம்ம்“.

அவந்திகாவுள் ஆயிரம் கேள்விகள் இருந்தும் எதுவும் கேட்க முடியாமல் முகம் சோர்ந்து, எதிர்பாராத சூழலில் தற்காத்துக் கொள்ள சக்தி வேண்டுமென்று எண்ணி, தன் கையிலிருந்த மரகதக்கல்லை மீண்டும் நெற்றியில் வைத்து ஆன்மீக சக்தி முழுதையும் அதிலிருந்து உறிஞ்சினாள்.

மரகக்கல் மெதுவாக மஞ்சள் நிறத்திலிருந்து (3வது சக்கர நிலை) செம்மஞ்சள் நிறத்திற்கு(2வது நிலை) மாறியது. பின் சிவப்பு(முதல் நிலை) நிறமானது. பின் முழுதும் சக்தியற்றதாக மாறி நிறமற்று கண்ணாடிக்கல்லைப் போல ஆனது.

முழு சக்தியும் உறிஞ்சப்பட்டதை உணர்ந்து அவந்திகா அந்தக் கல்லைத் தன் கைப்பையில் வைத்துவிட்டு பெருமூச்சுவிட்டாள். ‘யாளி உலகம் சென்றதும் எப்படி மகரஅரசுக்கு போவது. 400 வருடங்களுக்குப் பிறகும் யாளி உலகின் வழிதடங்கள் அப்படியே இருக்குமா? அல்லது மாறி இருக்குமா?’ என்று யோசித்த வண்ணம் இருந்தாள்.

அப்போது திடீரென்று அவந்திகாவிற்கு சுவாசிக்க சிரமமாகி போனது. தன்னை சுற்றி காற்றே இல்லாததுப் போல் உணர்ந்த அவந்திகா மனித உடலில் இருக்கும் தான் சுவாசிக்க பிராணவாயு வேண்டுமே! பூமியின் வளிமண்டலத்தை கடந்து வெற்றிடம் வந்துவிட்டாதா? அதனால் சுவாசிக்க காற்று இல்லாமல் போய் விட்டதோஎன்று திகைத்தாள்.

அவள் உண்மை உணரமுன்னே அவளுக்குள் சுவாச திணரல் ஏற்பட ஆரம்பித்தது. முகம் வெளுத்து முகத்தில் முத்து முத்தாக வியர்வை துளிகள் அரும்ப ஆரம்பித்தது. அவசரமாகத் தன் வலது கையின் ஆள்க்காட்டி விரலையும் நடுவிரலையும் நீண்டி ஆன்மீக சக்தியை ஒளிரவிட்டாள்.

பின் அதனைத் தன் நுரையீரல் இருக்கும் இடத்தில் நெஞ்சில் வைத்து ஆன்மீக சக்தியைப் பிராண வாயுவாக மாற்றி அதனை உடலில் பரவச் செய்தாள். அவள் உதடுகள் மந்திரத்தை முனுமுனுக்க சில நிமிடங்களில் அவள் உடல் வெளி காற்றிலிருந்து பிராணவாயுவை தேடாமல் அவளுள் இருந்த ஆன்மீக சக்தியிலிருந்து பிராண வாயுவை எடுத்துக் கொண்டது.

ஆம் ஆன்மீக சக்தி இருந்தால் யாளிகளால் பிராண வாயுவை உடலுள் உருவாக்க முடியும். அதனால் சுவாசிக்க முடியாத இடத்தில் அவைகளால் உயிர் வாழ முடியும். அதனோடு, ஆன்மீக சக்தியினைக் கொண்டு பசியை போக்கிக் கொள்ளவும் முடியும்.

இது ஆன்மீக சக்தி வைத்துள்ள அனைவராலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அவந்திகா யாளியாக வாழ்ந்தப் போது அவளது ஆன்மீக சக்தி நிலை மிகவும் அதிகம். அதனால் இது போன்ற பயணங்களில் உணவைப் பற்றியோ, சுவாசம் பற்றியோ அல்லது உடலின் இயற்கை தேவைகளைப் பற்றியோ அவள் யோசித்ததில்லை.

ஆன்மீக சக்தியால் சீராகச் சுவாசிக்க முடிந்ததும் நிம்மதியுற்ற அவந்திகா, அப்போதுதான் தான் மனித உடலில் இருக்கிறோம், தான் உயிர் வாழ, நீர், காற்று உணவு மிகவும் அவசியம் என்பதையே உணர்ந்தாள்.

பாவனாவை உடனே காப்பாற்ற வேண்டும் என்ற உந்துதலில் உடனே மனித உலகிலிருந்து கிளம்பிவிட்டேன். தன்னிடம் யாளி உலகில் பயன்படுத்தும் காசுகள் இல்லை. பவளனும் உடனில்லை.

அதனோடு தன்னிடம் இருப்பில் இருக்கும் இந்த ஆன்மீக சக்தி தான் யாளி உலகம் போய்ச் சேரும் வரை போதுமா என்றும் தெரியவில்லை.’ என்று காலம் கடந்து தெளிந்தாள்.

பாதி வழியிலிருக்கும் இப்போது எதையும் யோசிப்பது முட்டாள்தனம். விரைவில் பவளன் வந்துவிட வேண்டும்என்று திரும்பித் திரும்பி எண்ணிக் கொண்டு அப்படியே அந்த உருளையின் அடியில் சமதளத்தில் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்தாள்.

சிறிது நேரத்தில் மீண்டும் தன் ஆள்காட்டிவிரலையும் நடுவிரலையும் நீட்டி ஆன்மீக ஒளியை உண்டாக்கி தன் வயிற்றில் கை வைத்துப் பசிக்காமல் இருக்கவும், தொண்டையில் கை வைத்துத் தாகம் வராமல் இருக்கவும் மந்திரம் சொல்லிவிட்டு தன் உடல் மந்திரத்திற்கு ஏற்பச் சரியாக இயங்குகிறதா என்று சில மணி நேரங்கள் கவனித்து அமர்ந்தபடியே கண்ணயர்ந்தாள்.

இப்படியே 2 வாரம் கடந்துவிட்டது. எப்போது இந்தப் பயணம் முடியுமென்று இருந்த அவந்திகா அவ்வப்போது அந்த இடம்மாற்றும் சக்கரத்தின் மேலே பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது அந்த இடம்மாற்றும் சக்கரத்தின் மிக அருகில் மஞ்சள் நிறத்தில் எரி நட்சத்திரம்போல ஒன்று சட்டெனக் கடந்துச் சென்றது.

அது கடக்கும்போது அவள் இருந்த நீல நிற இடம்மாற்றும் சக்கரம் ஒரு நொடி ஒளி இழந்து இருண்டு மீண்டும் உயிர் பெற்றது. என்ன நிகழ்ந்தது என்று திகைத்து யோசிக்கும் முன்னே அந்த எரி நட்சத்திரம் சென்ற சில நொடிகளில் அவந்திகாவின் உடலிலிருந்து ஆன்மீக சக்தி விரைவாகக் கரைய ஆரம்பித்தது.

அதனை உணர்ந்த அவந்திகா விதிர்விதித்து போனாள். சில நிமிடங்களில் ஆன்மீக சக்தி முற்றிலும் அவள் உடலிலிருந்து மறைந்து பிராண வாயு அல்லாமல் மூச்சு திணரல் ஏற்பட்டது. இனி தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்த அவந்திகா, ‘ஒரு வேளை இந்த மனித உடல் சுவாசம் இல்லாமல் இறந்து போனால் ஆன்மாவாக மாறியேனும் பவியையும் கார்திக்கையும் மனித உலகம் சேர்த்துவிட வேண்டும்என்று சடலமாக முடிவெடுத்து எதுவும் செய்யாமல் அப்படியே முகம் வெளுத்துக் கண்கள் மயங்கச் சரிந்து கீழே விழப் போனாள்.

அப்போது கண் எதிரே மங்களாக வெள்ளை நிற உருவம் அவளுக்குத் தெரிந்தது. என்னவென்று தெளிவாக உணருமுன்னரே அவள் இடையை ஒரு கரம் தழுவிக் கீழே விழாமல் நிறுத்தியது. அதன் பிறகு தன் இதழ்மீது இதமாக எதுவோ படுவதை உணர்ந்தாள் அவந்திகா.

மிருதுவான அந்நிய பொருள் ஒன்று தன் உதடுகளுக்குள் நுழைந்து இணைந்திருந்த தன் பற்கலை விலக்கிப் பிடித்து நிறுத்துவதை தடுக்க சக்தியற்று உணர்ந்தாள். குழப்பமாக அரை மயக்கத்தில் அவள் நின்றிருக்கும் போதே குளிர்ந்த காற்று உதடுகளில் பட்டு, பற்களின் இடை புகுந்து, நாவில் படர்ந்து, தொண்டையில் கரைந்து, நுரையீரலை நிரப்புவதை உணர்ந்தாள்.

பிராணவாயு மெல்ல மெல்ல அவள் நுரையீரலில் நிரம்ப போன சக்தி மீண்டவளாகக் கண்களை விரித்துப் பார்த்தாள். தன் இதழ்களைத் தன் எதிரிலிருந்தவனின் இதழ்கள் மூடியிருந்தது. அவனது நா அவள் பற்களின் இடையில் நின்று அவை மூடி சுவாசத்தை தடுக்காமல் இருக்குமாறு அவளது நாவினை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தது.

இதழணைப்புஎன்று திகைத்தவள், அன்னிச்சை செயலாக எதிரிலிருந்தவனின் மார்பில் தன் இருக்கைகளையும் வைத்து அவனைத் தள்ளிவிட்டு நகர்ந்து நிற்க முயன்றாள். ஆனால் அவன் இதழ் அவள் இதழிலிருந்து பிரிந்த வினாடி காற்று இல்லாமல் மீண்டும் மூச்சு திணர மீண்டும் கண்கள் அயரச் சரிய ஆரம்பித்தாள்.

அவள் நிலை உணர்ந்த எதிரிலிருந்தவன் அவளை மீண்டு இழுத்து அணைத்து அவள் இதழ்களைத் தன் இதழ்களால் மூடினான். அவனிடமிருந்து திமிரி விலக மீண்டும் முயற்சித்த அவந்திகாவின் செயலை ஏற்கனவே யூகித்தவனாக, அவளது இடையினை இடது கையால் இழுத்து தன் இடையுடன் இறுக்க அணைத்து அவளை நகரவிடாமல் பிடித்துக் கொண்டான்.

அவளது பின்னந்தலையை தன் வலது கையால் பிடித்து அவள் மீண்டும் விலகிவிடாமல் செய்தான். அவனது அந்தச் செயலிலும் மிதம் மிச்சிய பலத்திலும் நகர முடியாமல் அவள் கைகள் இருவருக்கும் இடையில் அவனது மார்பு சட்டையில் மடங்கி கொண்டது.

பிறகு இந்த இதழணைப்பை தவிர்க்க முடியாது என்பதை விதியே என்று உணர்ந்த அவந்திகா எதிரில் இருந்தவனை யாரிவன்?’ என அறிந்திட முயன்றாள். விழி விரித்து அவன் முகத்தைப் பார்த்தவள், “நந்தன்என்று திகைத்தாள். கண்கள் மூடி அவளுக்குச் சுவாவசம் கொடுத்துக் கொண்டிருந்தவன் திடீரென்று கண் விழிக்க, மிக அருகிலிருந்த அவந்திகாவின் விழிகள் அவன் விழிகளைப் பார்த்தது.

அவன் கண்களை அப்போது திறக்க கூடும் எண்ணியிராத அவந்திகா நாணத்தில் உடலெல்லாம் சிவக்க அவள் மீண்டும் அவன் பிடியிலிருந்து விலக நினைத்துத் திமிர ஆரம்பித்தாள்.

ஆனால் அவளை விடும் எண்ணம்தான் அவனுக்கு இல்லையே!’ அவள் தத்தளிப்பை சட்டைச்செய்யாமல் அவளைப் பற்றியிருந்த பிடியை விடாமல் இணைந்திருந்த இதழ்களிலே ஆன்மீக சக்தியைத் தன் உடலிலிருந்து அவந்திகாவின் உடலுக்குள் அனுப்பினான்.

வெளிர் மஞ்சள் நிற ஆன்மீக ஆற்றல் நந்தனின் உதடுகளிலிருந்து அவந்திகாவின் உதடுகளில் நுழைந்து, மெதுவாக அவளது நரம்புகளில் ஒளி கோடுகளாக உடல் முழுதும் அது பரவ ஆரம்பித்தது.

Author Note:

(1) – எந்தச் சக்கரமும் என்றது Defense Array, Teleporting Array & Locking Array. கற்க தான் ஆன்மீக இதய வேர் (Spiritual heart root) வேண்டும். பயன்படுத்த ஆன்மீக சக்தி நிரம்பிய மரகதக்கல் இருந்தாலு போதும்.

(2) ஏழு சக்கரங்களின் நிறங்கள்மறந்திருந்தால் தெரிந்துக் கொள்ளுங்க ஊதா(7st), கருநீலம்(6nd), நீலம்(5rd), பச்சை(4th), மஞ்சள்(3rd), செம்மஞ்சள்(2nd), சிவப்பு(1st). இதில் ஊதா நிறமே அதிக சக்தி வாய்ந்தது.

Advertisement