Advertisement

அத்தியாயம் – 15

என்ன?!!” என்று புரியாமல் திகைத்து அவந்திகா அவனைப் பார்த்துக் கேட்டாள். அவள் மனது எனக்கே தெரியாமல் நான் எப்போது எனக்கானவனை சந்தித்தேன்என்றது நெரூடலாக.

அவந்திகாவின் திகைப்பை எதிர்பார்க்காத கார்திக் தான் நேற்று கண்டது தவறாக இருக்குமோஎன்று நினைத்து, ‘அதை அவளிடம் சொல்லலாமா அல்ல வேண்டாமாஎன்று தயங்கினான். ஆனால் அவள் அவனது பதிலுக்காக விழி விரித்து அவனையே பார்த்திருப்பதை உணர்ந்து மெல்ல நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தான்.

நேற்று மாலை நான் உங்களைத் தங்கும் விடுதியில் விட்டுச் சென்றபின், நம் போட்டிகள் இரண்டு நாட்கள் தள்ளி வைக்கப்பட்டது குறித்து எனக்குத் தகவல் வந்தது. அதனால் நாம் தங்கியிருந்த விடுதியின் முன்பதிவை இன்னும் இரண்டு நாட்கள் நீட்டிக்க வேண்டி உங்களை விட்டுச் சென்ற 20 நிமிடத்திலே மீண்டும் நான் அங்கு வந்தேன்.

அப்போது, நீங்க அவசர அவசரமாக எங்கோ வெளியில் சென்றதை பார்த்தேன். நீங்கச் சுடிதாரில் இருந்ததால் நீங்கதானா? என்று சந்தேகமாகத் தோன்றவும் உறுதி படுத்திக் கொள்ள உங்க பின்னால் ஓடி வந்தேன்.

ஆனால் நான் வருவதற்குள் நீங்க அங்கே வந்த தானூர்தியில் ஏறிக் கிளம்பிவிட்டீங்க. அதனால் வேறு வழி இல்லாமல், நீங்க ஏறிய தானூர்தியின் பின் மற்றொரு தானூர்தியில் தொடர்ந்து வந்தேன்.

தலைவலி அதிகமாகி மருத்துவமனைக்குத் தனியாகப் போகிறீங்களோ என்று நினைத்துத் தானும் உங்களுடன் வர எண்ணி, நீங்கச் சென்ற தானூர்தியை நிறுத்தச் சொல்வதற்காக உங்களது அலைப்பேசிக்கு அழைத்தேன். ஆனால் அது தொடர்புக்கு வரவில்லை. அதனால் வேறு வழியின்றி உங்களைத் தொடர்ந்தேன்என்று தன் செயலுக்கான காரணத்தைச் சொன்னான்.

அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவந்திகாவிற்கு அவன் தான் காட்டுக்குச் சென்றதை பார்த்திருப்பானோ என்று நினைத்தது சரியாகி போனது. எதுவரை பார்த்தான் என்று தெரியவில்லையேஎன்று ஒரு நொடி பதற்றம் வரத் திகைப்பு மறையதவளாகத் பார்த்தாள்

பின், ‘ஒருவேளை இவன் தான் யாரென்று ஏற்கனவே அறிந்துவிட்டிருந்தால் அவனிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டியதுதான். நான் மனிதன் அல்ல என்று தெரிந்த பிறகாவது என்மீது காதல் என்று என்பின் சுற்றுவதை நிறுத்தினால் நிம்மதிதான்என்று முடிவெடுத்தாள்.

இந்த முடிவால் முதலில் இருந்த திகைப்பு அவளுக்கு மறைந்தது. ஒரு நிமிர்வுடன், அசிரதையாக, “ம்ம். பின்னாடி வந்தீங்க சரி. இதில் எங்கே எனக்கானவன் வந்தார்.” என்று நேரிடையாக அவளுக்கு வேண்டியதைக் கேட்டாள் அவந்திகா.

அவளது நிமிர்வு குழப்பத்தைத் தர, “அது…என்று தடுமாறி பின், “நீங்கச் சென்ற தானூர்தியில்தானே அவரும் இருந்தார். அந்தத் தானூர்தி யாருமற்ற சாலையில் விலகிச் சென்று ஒரு நடுக்காட்டில் வந்து நின்றது. தனியே உங்களை அந்தத் தானூர்தியாளன் கடத்திக் கொண்டு வந்துவிட்டானோ என்று முதலில் நான் பதற்றமுற்றேன்.

அவசரமாக நான் வந்த தானூர்தியிலிருந்து இறங்கி உங்களை நோக்கி வந்தேன். ஆனால் அதற்குள் உங்களோடு வந்தவரின் கைப்பிடித்து உரிமையாக நீங்கப் பேசிக் கொண்டு எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவருடன் காட்டுக்குள் ஒன்றாகச் போனீங்க.

குழப்பமுடன் உங்களைத் தொடர நினைத்தப் போது திடீரென்று எங்கிருந்தோ தேனீக்கள் கூட்டமாக என்னை நோக்கி வந்தது. அதில் ஒரு தேனீ என்னைக் கொட்டிவிட பயந்து தானூர்தியில் மீண்டும் வந்து ஏறிக் கொண்டேன். தேனீக்கள் அகன்றதும் உங்களைத் தேடி வரலாம் என்று காத்திருந்தேன்.

ஆனால் தேனீ என்னைக் கொட்டியதாலோ என்னமோ நான் சில வினாடிகளிலே மயங்கிவிட்டேன். என்னை அழைத்து வந்த ஓட்டுநர் நான் மயங்கியதைப் பயந்துப் என்னை அழைத்துக் கொண்டு வந்து ஒரு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு போனார்.

அங்கு முதலுதவி செய்துக் கொண்டு நான் திரும்ப அந்தக் காட்டுக்கு வந்தப் போது அங்கே நீங்க வந்த தானூர்தியில்லை. அதற்குள் நீங்களும் திரும்பி இருக்க கூடுமென்று எண்ணி தங்கும் விடுதிக்கு அவசரமாக வந்தேன்.” என்றான்.

ஒருபுரம் இவன் உண்மை முழுதும் அறியவில்லை. ‘என்று நிம்மதி பெருமூச்சும் வந்தது. கூடவே அந்தத் தேனீக்களின் தாக்குதல் தன் ரகசியம் காக்க நந்தனால் ஏற்பட்டிருக்க வேண்டும்என்பதையும் உணர்ந்தாள்.

அவனது விளக்கத்தைக் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவந்திகாவிற்கு அவனை நினைத்துப் பாவமாகதான் இருந்தது. ‘தன் மீது அக்கறையில் அவன் செய்த அந்தச் செயலில் தேனீயிடம் கடி வேறு வாங்கி வைத்திருக்கிறான். ஆனால் இன்னமும் எனக்கானவன் என்று யாரை சொல்கிறான்என்று குழம்பினாள்.

அவள் அவன் பேசுவதை கேட்டிருந்த போதும் யோசனையிலே இருந்தவள் அவன் கடைசியாக, “அவர், நீங்கக் கையைப் பிடித்துக் கொண்டு காட்டுக்குள் போனீங்களே! அவர்தானே உங்க காதலர்என்று சொன்னதில் என்ன! நந்தன் என் காதலனா!’ என்றுஅதிர்ந்தாள்.

அவளையும் அறியாமல் அவளது காது மடல்கள் சூடானது. தன்னிலைக்கு வர, சில நிதான மூச்சுகள் எடுத்துவிட்டவள், கார்திக் சொன்னதற்கு மறுக்கும் விதமாக அவசரமாக விளக்கமளித்தாள்.

கார்திக். நேற்று நீங்க அந்தக் காட்டில் என்னைப் பார்த்தது உண்மைதான். ஆனால் நான் என் காதலனை நான் அங்குப் பார்க்கவில்லை. உண்மையில் நான் இதுவரை யாரையும் விரும்பவில்லை.” என்றாள்.

தொடர்ந்து நீங்கஎன்னுடன் நேற்று பார்த்ததுஅது…என்று நந்தனை 15 வருடங்களுக்கு முன்பு பார்த்தவர், நண்பர் என்று சொல்லலாமாஎன்று யோசித்து, பிறகு வேண்டாம் என்று முடிவெடுத்து ஓட்டுநர் என்றாள்.

நான் பதிவு செய்த தானூர்தியின் ஓட்டுநர். மிகவும் பயந்தவர் போல இருந்ததால் தனியே அவரை விட்டுச் செல்லாமல் உடன் அழைத்துச் சென்றேன். அவரை நா… நான் விருவிரும்பவில்லைஎன்றாள். இதைச் சொல்லும்போது அவளையும் அறியாமல் அவள் குரல் லேசாகத் தடுமாறியது.

அவள் யாரையும் இன்னமும் விரும்பவில்லை என்பதை அறிந்ததுமே லேசாக நம்பிக்கை மீண்டும் துளிர்க்க இருந்த கார்திக்கிற்கு அவளது குரலில் தெரிந்த மாற்றம் தெரியவில்லை. “அப்படிதான் இல்லையா?” என்று தன் தலையில் அடித்துக் கொண்டு, “மன்னித்துவிடுங்க அவந்திகா. நான் தவறாக யூகித்துவிட்டேன்.” என்று வாயெல்லாம் பல்லாகக் கேட்டான்.

அவனது முக விகசிப்பு அவந்திகாவிற்கு கிணறு வெட்டப் பூதம் வந்தது போல அவனுக்குத் தன்னிலை விளக்கம் தந்து, மடிந்த கார்திக்கின் நம்பிக்கைக்கு உரம் போடும்படி அமைந்துவிட்டதோ என்று அவசரமாக,

அதற்காக உங்களிடம் எனக்குக் காதல் என்று அர்த்தமில்லை. சிலவற்றை நீங்க விளக்கமாகத் தெரிந்துக் கொள்ளாமல் இருப்பதே உங்களுக்கு நல்லது. என்னிடம் இதுகுறித்து இனி எதுவும் கேட்க வேண்டாம்என்று முகம் இறுகி சொன்னாள் அவந்திகா.

அவந்திகா அவனிடம் பேசியதிலே இதுதான் நீண்ட நெடிய சொற்றொடர்கள் என்று எண்ணிய கார்திக், “ம்ம். நான் கேட்கவில்லை. நான் கேட்கவில்லை.” என்று அவசரமாக மறுத்து,

நீங்க யாரையும் விரும்பாதவரை, என்னை நீங்க விரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறதே. நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். அதே சமயம் நான் உங்களை வற்புறுத்தவும் மாட்டேன்என்றான் மன மகிழ்வோடு.

பாவம் அவந்திகாவிற்கு காதலன் இல்லை என்ற இன்பம், வயது பெண் ஏன் இரவு நெருங்கும் மாலை வேளையில் காட்டுக்குள் சென்றால் என்ற சந்தேகத்தைக் கார்திக்கின் மனதில் துளியும் உண்டாக்கவில்லை போலும்.

இதைக் கேட்டதும் அவந்திகாவிற்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது. ‘திரும்பவும் முதலில் இருந்தா?’ என்று எண்ணியவள், “வீணாக விருப்பம் வளர்க்க வேண்டாம் கார்திக்என்றாள் தீர்க்கமாக.

அதை அவன் காதில் போட்டுக் கொண்டால்தானே! அவன்தான் அவளது முந்தைய பதிலில் வானில் பறந்துக் கொண்டிருந்தானே!. “ம்ம்… சரி சரி. அதைப் பற்றி நீங்கக் கவலை படாதீங்க. நான் பார்த்துக் கொள்கிறேன்என்று அதுவரை இருந்த இறுக்கம் மறைந்தவனாகக் வாயில் ஒரு காதல் பாடலை முனுமுனுத்துக் கொண்டு கடல் அலையின் அழகை ரசிக்க ஆரம்பித்தான் கார்திக்.

அவனையே பார்த்திருந்த அவந்திகா, இவனிடம் இப்போது எது சொன்னாலும் அவன் மண்டைக்குள் ஏறாது என்று உணர்ந்த அவந்திகா, “நான் காட்டுக்குச் சென்றதை குறித்து பவியிடம் சொல்ல வேண்டாம். அவள் பயப்படக்கூடும். நேரம் வரும்போது நானே அதன் காரணத்தைச் சொல்லிவிடுகிறேன்என்றாள்.

ம்ம். சொல்ல எண்ணியிருந்தால் நேற்றிரவே கேட்டிருப்பேன். நீங்க அதைகுறித்து கவலை படாதீங்கஎன்று கனிந்த குரலில் சொன்னான் கார்திக். அதன் பிறகு அவந்திகா அவனிடம் எதுவும் பேசவில்லை.

விரைவிலே எல்லோரும் தங்கும் விடுதிக்குச் சென்றுவிட்டனர். அவந்திகாவிற்கு இன்று முழுதும் நடந்த நிகழ்வுகள் அவளுக்கு வழக்கமாகத் தூங்கும் நேரத்தைக் கடந்தும் நித்திரை வரவில்லை. அப்படியே பல நிமிடங்கள் அன்று நடந்தவற்றை அசைப்போட்டுக் கொண்டிருந்தாள்.

யாளிகளால் ஒருவித உபாதைகள் என்றால், இந்த மனிதர்களால் வேறுவித அசௌகரியம். பாவனாவின் செயலும், கார்திக்கின் வார்த்தைகளும் அவந்திகாவை வெகுவாகப் பாதித்திருந்தது. ‘பேசாமல் கார்திக்கிடம் உண்மையில்லை என்றாலும் நந்தனையே விரும்புவதாகச் சொல்லிவிட்டிருக்கலாமோ என்றே அவளுக்குத் தோன்றியது.

இவர்கள் இருவரிடமும் உண்மையைச் சொல்லாமல் மனிதர்களின் உலகிலிருக்கும் இந்தக் காதல் திருமண சிக்கலிலிருந்து தப்ப முடியாது போல!’ என்று என்ன செய்வதென்று புரியாமல் யோசனையிலிருந்தாள்.

பின் நானும் நந்தனும் கார்திக் பார்க்கும்போது அவ்வளவு நெருக்கமாகவா இருந்தோம். ஏன் கார்திக் நந்தனை என் காதலனாக எண்ண வேண்டும்என்று சில நொடிகள் காட்டுக்குச் சென்றபோது நடந்த நிகழ்வுகளை மனதில் அசைப்போட்டாள்.

அவள் அவன் கைப்பற்றி அழைத்துக் காட்டுக்குள் சென்றது முதல் கடைசியில் அவன் அவள் கைப்பற்றிக் காட்டிலிருந்து அழைத்து வந்தது வரை நினைத்தவள், ‘உண்மையில் நான் அவனிடம் அறியாதவன் என்ற தயக்கமின்றி பல நாட்கள் பழகியவன் போலதான் இருந்திருக்கிறேன். அவனையும் தன் அருகில் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் அனுமதித்தும் இருக்கிறேன்.’ என்பதை உணர்ந்தாள்.

ஏன்?’ என்று அவந்திகா யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அருகிலிருந்த பாவனாவின் அலைப்பேசி ஒலித்தது.

கைப்பேசியை எடுத்தவள், “ம்ம்சொல்லு ரோஷன்.” என்றாள் பாவனா. அந்தப் பக்கம் என்ன பேசினான் என்று அவந்திகாவிற்கு கேட்கவில்லை. பாவனா அவந்திகா உறங்கிவிட்டாளா என்று ஒரு பார்வை பார்த்துவிட்டுப் பிறகு பதிலளித்தாள்.

ம்ம்நல்ல யோசனை ரோஷன். அந்த இடத்தில் அவந்தியையும், கார்திக்கையும் தனியே விட்டுவிட்டு நாம் போய் விடலாம். இன்று போலச் சில சந்தர்பங்களை நாளையும் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டால் போதும், அவந்திக்கு கார்திக்கை நன்கு தெரிந்துவிடும். மெல்ல மெல்ல அவளுக்கு விருப்பம் கூட வந்துவிடும்என்று கிளுக்கி சிரித்தாள்.

இதனைக் கேட்ட அதிர்ச்சியில் முன்பு நந்தனை பற்றிய அவந்திகாவின் சிந்தனை முற்றிலும் தடைப்பட்டு போனது. ‘இந்தப் பவியும் ரோஷனும் என்ன தந்திரவேலை செய்துக் கொண்டிருக்கின்றனர். ‘ என்று வாயடைத்துப் போனாள்.

இதைக் கேட்டபிறகும் நாளை இவர்களுடன் விளையாட்டுப் பூங்காவுக்கு(theme park) போக அவந்திகாவுக்கு பைத்தியமா என்ன? நாளைத் தன்னுடைய தலைவலி நாடகத்தை மீண்டும் அரங்கேற்றி அறையிலே இருக்க முடிவெடுத்துவிட்டு அதையே செயல் படுத்தவும் செய்தாள்.

பாவனா மாத்திரை போட்டுக் கொண்டு போகலாம் வாடிஎன்று எவ்வளவு வற்புறுத்தியும் அவந்திகா அவர்களுடன் செல்லவில்லை. காத்திருப்பது பலி பீடம் என்று தெரிந்துக் கொண்டு எந்த உயிரும் தானாகச் சென்று வலையில் மாட்டிக் கொள்ளாதே. அவந்திகா இன்னமும் இறுக்கமாகப் போர்வையை இழுத்து போர்திக் கொண்டு படுத்துக் கொண்டாள்

அவளை அசைக்க முடியாது என்று உணர்ந்த பாவனா, முயற்சி தோழ்வியில் அது நல்லாயிருக்கும் இது நல்லாயிருக்கும் எல்லாம் நீ தவறவிட போகிற அவந்திஎன்று ஆசை வார்த்தைகள் சொல்லிப் புலம்பியவண்ணம் மறுப்பை பரிசாக வாங்கிக் கொண்டு கிளம்பியும் சென்றுவிட்டாள்.

பாவனா அறையை விட்டுச் சென்றதை அவள் அரவம் நீங்கி நிசப்பத்தம் வந்ததும் உணர்ந்து தன் போர்வையை முகத்திலிருந்து பிரித்தாள் அவந்திகா. முகத்தில் விழுந்த கலைந்த தலைமுடியை ஒதுக்கியபடி பெருமூச்சுவிட்டாள்.

தனிமைக்காகவே காத்திருந்ததுப் போலக் கொடி அவந்திகாவின் கையிலிருந்து வெளியில் வந்து அந்த அறையை ஒரு சுற்று சுற்றி வந்தது. அவந்திகாவும் கொடியைத் தடுக்காமல் முழுதும் சுதந்திரமாக விட்டுவிட்டு, குளியல் அறைக்குச் சென்றாள்.

பிறகு பாவனா வரவழைத்திருந்த உணவும் தன் அறைக்கு வர அதனை உண்டுவிட்டு நேரம் கழிய அந்த அறையில் இருந்த சாளரத்தின்(window) வழியே வெளியில் வேடிக்கை பார்த்திருந்தாள். அப்போது கொடி நிதானம் இல்லாமல் படப்படப்பது போலச் சிணுங்கியபடி(whining) அவந்திகாவின் அருகில் வந்தது.

என்ன ஆச்சு கொடி?” என்று அவந்திகா தன் கையில் வந்து உரசிய கொடியிடம் கேட்டாள்.

கைக்காப்புஎன்று தன் ஆன்மீக விழிப்பில்(Spiritual Consciousness) அவந்திகாவிடம் சொன்னது கொடி.

அதனைக் கேட்டதும், அவந்திகாவிற்கு நேற்றைக்கு முந்தைய நாள் நடந்த நிகழ்வுகள் நினைவு வர, எச்சரிக்கை உணர்வே இல்லாமல் அவசரத்தில் அதனை வளையல்கள் வைக்கும் பெட்டியில் வைத்தது நினைவு வந்தது. அவசரமாக அந்தப் பெட்டியை எடுத்து அதில் கைக்காப்பை தேடினாள்.

ஆனால் கைக்காப்பு அதில் இருந்தால்தானே. உடனே கொடியின் பதட்டம் அவளுள் தொற்றிக் கொண்டதாக, கண்கள் மூடித் தன் ஆன்மீக விழிப்பில்(Spiritual Consciousness), தன் கைக்காப்பு இருக்கும் இடத்தைக் கணித்தாள்.

கைக்காப்பின் இடத்தைக் கணித்ததும் என்ன நிகழ்ந்திருக்கும் என்று அவந்திகாவால் யூகிக்க முடிந்தது. இன்று பாவனா குளிக்கச் சென்றபோது, வெள்ளை நிற மேல் சட்டையை மெத்தை மேல் எடுத்து வைத்துவிட்டு சென்றது அவந்திகாவிற்கு நினைவு வந்தது.

பாவனா சட்டைக்குப் பொருத்தமாக இருக்க என் வளையல் பெட்டியில் வளையள்களைத் தேடியிருக்க வேண்டும். வெள்ளை நிறத்தில் இருந்த தன்னுடைய கைக்காப்பை, சாதரண ஆபரணம் என்று நினைத்து அதனை அணிந்து சென்றிருக்க வேண்டும்.’ என்று கணித்தாள்

அச்சோ!” என்று தன் எச்சரிக்கையற்ற நிலையை நினைத்துத் தன்னையே நொந்துக் கொண்டாள் அவந்திகா. ‘இதனால் நான் என்று எண்ணி எதாவது யாளி பாவனாவை நெருங்கி அவளுக்கு ஆபத்து விளைவிக்குமோஎன்று அஞ்சி அவசரமாகத் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பியபடி, பாவனாவிற்கு அலைப்பேசியில் அழைத்தாள். ஆனால் பாவனா எடுக்கவில்லை.

வேறு வழி இல்லாமல், கார்திக்கிற்கு அழைத்தாள். அவளது அழைப்பு என்றதும் அவனும் உடனே எடுத்தான். எடுத்ததும், “கார்திக். பவி எங்கே. அவளிடம் கைப்பேசியை கொடுங்கஎன்று வேறேதுவும் பேசாமல் பதற்றம் குறையாத குரலில் கேட்டாள்.

எப்போதும் நிதானமாக இருக்கும் அவந்திகாவின் இந்தப் பதற்றம் கார்திக்கிற்கு சந்தேகத்தைத் தர, “பாவனா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான், மற்றவர்களுடன் பெரிய ரங்கராட்டினத்தில் ஏறினாள். நான் அதில் செல்ல வில்லை. அவள் கீழே வந்ததும் பேசச் சொல்கிறேன். ” என்றான் விளக்கமாக.

…” என்ற அவந்திகா மேலும் பேசுமுன்னே, “ஏன் பதற்றமாகப் பேசுறீங்க அவந்திகா. எதாவது பிரச்சனையா? நான் வேண்டுமென்றால் வரட்டுமா என்று பாவனாவை எதாவது உதவிக்குதான் அவந்திகா தேடுகிறாளோ என்று நினைத்துக் கவலை தோய்ந்த குரலில் கேட்டான் கார்திக்.

ம்ம்அதற்கு அவசியமில்லை. நானே அங்கு வருக்கிறேன். நான் அங்கு வரும் வரை பாவனாவை எங்கும் தனியாக அனுப்பாமல் உங்க பார்வையிலே வைத்திருக்க முடியுமா?” என்று முழு விளக்கம் தராமல் கெஞ்சும் குரலில் கேட்டாள் அவந்திகா.

அவளது கெஞ்சும் குரலில் கார்திக் என்ன உணர்ந்தானோ, அவளுக்குத் தைரியம் தரும் குரலில் என்ன ஏது என்று தோண்டி துருவாமல், “ம்ம் சரி அவந்திகா. கவலை படாதீங்க. நான் பார்த்துக் கொள்கிறேன். தனியாக நீங்களாகவே வந்துவிடுவீர்களா?” என்று கேட்டான்.

அவந்திகாவும் வலவலவென்று பேசாமல், “நான் ஏற்கனவே கிளம்பிவிட்டேன் கார்திக். பாவனாவை எக்காரணம் கொண்டும் யாருடனும் தனியாக அனுப்ப வேண்டாம்என்று மீண்டும் மீண்டும் எச்சரித்தாள் அவந்திகா. மற்ற மனிதர்கள் முன் யாளிகள் அவர்களின் மாய சக்தியைக் கொண்டு பாவனாவிற்கு ஊறு விளைவிக்கமாட்டார்கள் என்று அவள் நம்பினாள்.

அவளது எச்சரிக்கை கார்திக்கிற்கு இனம்புரியாத பயத்தை தர, அதே நேரம் பாவனாவிற்கு என்ன ஆனதென்று அவந்திகா பயபடுகிறாள்.’ என்று புரியாமலும் குழம்பியபடி, “சரி வாங்க. நாங்க உங்களுக்காகக் காத்திருக்கிறோம்என்றான் கார்திக்.

Advertisement