Advertisement

அத்தியாயம் -14

தன் கண்மீது அமர்ந்த பட்டாம்பூச்சியின் செய்கையில் உடல் சிலிர்த்து நின்றிருந்தப் போது அவள் அறையின் கதவு தட்டும் சப்தம் கேட்டது. அந்தச் சப்தம் அடங்கும் முன்னே அந்தப் பட்டாம்பூச்சியும் மெதுவாகப் பறந்து திறந்திருந்த சாளரத்தின்(window) வழியாக வெளியில் சென்றுவிட்டது.

அது போவதையே பார்த்திருந்தவளின் கவனம் மீண்டும் தட்டப்பட்ட கதவை நோக்கித் திரும்பியது. உடனே எச்சரிக்கை உணர்வுக் கொண்டவளாக, தன் கைப்பேசியில் நேரத்தைப் பார்த்தாள் அவந்திகா. மணி 9 -ஐ கடந்து 5 நிமிடம் ஆகி விட்டிருந்தது.

இருந்தும் ‘பாட்டு நடனத்திற்கு சென்றவர்கள் அதற்குள் வந்திருக்க கூடுமா! என்ன?’ என்று தோன்ற அந்த அறை கதவில் வெளியில் இருப்பவர்கள் யார் என்று அறிய உதவும் சிறு துவாரத்தில் எட்டிப் பார்த்தாள். பாவனாதான் வந்திருந்தாள்.

அவளைப் பார்த்ததும் ‘அதற்குள் பவி வந்துவிட்டாளா? நல்லவேளை நந்தன் இடம்மாற்றும் சக்கரத்தின் மூலம் என்னை இங்கு உடனே கொணர்ந்துவிட்டான். இல்லையென்றால் இவள் வருமுன் நான் இங்கு வந்திருக்க முடிந்திராது.

சும்மாவே ஆயிரம் கேள்விகள் கேட்கும் பவி அவள் வரும்போது நான் அறையில் இல்லை என்றாகியிருந்தால், பின்பு நான் வந்தப்பின் என்னைக் கேள்விமேல் கேள்வி கேட்டுத் தொலைத்திருப்பாள். நல்லவேளை நான் கேட்காமலே நந்தன் உதவினான்’ என்று எண்ணி பெருமூச்சுவிட்டு கதவினைத் திறக்கக் கதவின் திறவுகோளில் கையை வைத்தாள்.

அப்போதுதான் தான் அணிந்திருந்த கைக்காப்பை பார்த்தாள். அதனைத் தொடர்ந்து அவசரமாகத் தன் நிலையையும் ஆரய்ந்தாள். வழக்கத்திற்கு மாறாகச் சுடிதாரில் இருந்தாள் அவந்திகா. குகையிலிருந்து வரும்போது சண்டை போட நேரிடும் என்று உணர்ந்து துப்பட்டாவை இழுத்து உடலுக்குக் குறுக்காக (பரதம் ஆடுவதற்கு கட்டுவதுப் போல) கட்டியிருந்தாள்.

அதனோடு தூக்கி கட்டியிருந்த தன் கூந்தலும், சண்டையினால் வியர்வை வழிந்தபடி இருந்த தன் முகமும் கழுத்து வளைவும் பவிக்கு அவசியமில்லாத சந்தேகங்களைத் தரக்கூடும் என்று உணர்ந்தாள் அவந்திகா.

அவசரமாகத் தன் நிலையை இயல்பான அவந்திகாவின் உருவிற்கு மாற்ற எண்ணி, மற்றது மறந்து கையிலிருந்து கழற்றிய கைக்காப்பை வழக்கம்போல அவள் வளையல்களைக் கழற்றினால் வைக்கும் சிறிய பெட்டியில் வைத்தாள். இழுத்து கட்டியிருந்த கூந்தலை பிரித்துத் தளர விட்டாள்.

விரைவாகத் தன் கையோடு இரவு உடையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்து, முகம் கைக்கால்களைக் கழுவி அணிந்திருந்த சுடிதாரை கலைந்து இலகுவான இரவு உடைக்கு மாறினாள்.

ஆனால் அவந்திகா இவை அனைத்தும் செய்யும் வரை பாவனா அவளுக்காகக் காத்திருக்கவில்லை. அவந்திகா குளியல் அறையிலிருந்து வரும் முன்னரே, ‘அவந்திகா உறங்கிக் கொண்டிருக்கக் கூடுமோ’ என்று எண்ணி, பாவனா அவளிடம் இருந்த மற்றொரு திறவுக்கோல் (key) கொண்டு கதவைத் திறந்துக் கொண்டு அறையின் உள்ளே வந்தாள்.

உள்ளே வந்ததும் அவந்திகாவை காணாமல் ஒரு நொடி திகைத்து, பின் குளியல் அறையில் கேட்ட நீர் சப்தத்தில் தெளிவுற்று, “அவந்தி…” என்று அழைத்தவண்ணம் குளியல் அறை கதவைத் தட்டினாள்.

பாவனா உள்ளே வரக்கூடும் என்று உணராத அவந்திகா, ஒரு நொடி தாமதித்துத் தன்னை நிலை படுத்திக் கொண்டு அப்போதுதான் பாவனா வந்தது அறிந்ததுப் போல, “பவி… அதற்குள் வந்திவிட்டாயா?” என்றாள் உள்ளிருந்தப்படி.

அவந்திகாவின் குரலைக் கேட்டதும் பாவனா, “ம்ம்… ஆமாம் அவந்தி…என்ன இந்த நேரத்தில் குளியல்?” என்றாள் ஏனோ சந்தேகம் தோன்ற.

அதற்குள் குளியலறையிலிருந்து வெளியில் வந்த அவந்திகா, முகத்தைத் தன் தோள்மீது இருந்த துண்டில் அழுந்தத் துடைத்தவண்ணம் வெளியில் வந்தாள். பின், “மின்விசிறி போட மறந்து அப்படியே தூங்கிவிட்டேன் போல. மிகவும் வியர்த்துவிட்டது” என்று வாய் வலிக்காமல் பொய் சொன்னாள் அவந்திகா.

அவள் பதிலில், “ஓ… இப்போது தலைவலி எப்படி இருக்கு” என்று கேட்டவண்ணம் அவந்திகா வெளியில் வந்ததும் குளியல் அறையில் நுழைந்து முகம் கழுவியபடி கேட்டாள் பாவனா.

துண்டின் அடியில் மறைத்தவிதம் குளியல் அறையிலிருந்து வெளியில் கொணர்ந்த தனது சுடிதாரை பாவனா அறியாமல் அவள் வெளியில் வருமுன் அவசரமாக மடித்து தன் பெட்டியில் வைத்தாள் அவந்திகா.

அவ்வாறு செய்தபடியே பாவனாவிடம், “ம்ம் சரியாகிவிட்டது பவி. அதுசரி நீ பாட்டு நடனம் எல்லாம் போனால் 10 மணிக்கு முன் வரமாட்டாயே. இன்று விரைவில் வந்துவிட்டாயே?” என்று இயல்பாகக் கேட்டாள்.

குளியல் அறையிலிருந்து வெளியில் வந்த பாவனா, அவந்திகாவின் தோள்மீது இன்னமும் கிடந்த துண்டை இழுத்து தன் முகத்தைத் துடைத்தபடி, “அது, நான் தாஜ்க்கு போகல அவந்தி. மேகனோட நண்பர்களோடே இரவு உணவு முடித்துவிட்டு வெளியில் கொஞ்ச நேரம் கடைவீதிக்கு சென்றேனா!. அதற்கே நேரம் ஆகிவிட்டது. அதுதான் ஏன் வீணாகச் செலவுபோல் தாஜ்க்குப் போக வேண்டும் என்று நேரே இங்கு வந்துவிட்டேன்” என்றாள் இயல்பாக.

அவள் மேகனுடன் இவ்வளவு நேரமும் சுற்றிவிட்டு வந்திருக்க கூடுமென்று எதிர்பாராத அவந்திகா பதிலேதும் சொல்லாமல் பாவனாவை விசாரணை தோரணையில் பார்த்தாள். அந்தப் பார்வையிலே, அவந்திகாவிற்கு தனது செயலில் விருப்பமின்மையை உணர்ந்தாள் பாவனா.

அவந்திகா எப்போதும் பாவனாவை இதைச் செய், இதைச் செய்யக் கூடாது என்று வற்புறுத்திச் சொன்னதில்லை. அதனால் அவந்திகாவின் அதிருப்தியான முகத்தை இன்றுதான் பாவனா முதல் முறையாகப் பார்த்ததே. பார்த்ததும் வேற்றுமையை உணர்ந்து பாவனா முதலில் திகைத்தாள்.

பின் இயல்பான துடுக்குதனம் மீண்டவளாக அவந்திகாவின் தோளைக் கட்டிக்கொண்டு, “அவந்தி கோபமா? நான் மேகனுடன் உன்னிடம் சொல்லாமல் அதிக நேரம் சுற்றிவிட்டு வந்தேன் என்று உனக்குக் கோபமா?” என்று நேரிடையாகக் கேட்டவண்ணம் கொஞ்சும் குரலில் கேட்டு அவந்திகாவிடம் செல்லம் பாராட்டினாள்.

அவளது இந்தச் செயலில் முன்பு மேகனிடம் இருந்த எச்சரிக்கை உணர்வால் அவந்திகா அதிருப்தியை காட்டியபோதும் பாவனாவின் மனம் புரிய மனம் இலகி, “ம்ம்…” என்று அவள் கைகளைத் தன் தோளிலிருந்து பிரித்து, தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டாள்.

பின் பாவனாவின் நெற்றியில் வழக்கம்போலச் சுண்டி விட்டு, “வாயாடி. தெரிகிறதுதானே. பிறகு ஏன் செய்கிறாய்? மேகனை உனக்குப் பிடிக்கலாம். ஆனால் அதற்காக அவனை முழுதும் அறியும் முன் அவனுடன் அதிக நேரம் ஊர் சுற்றுவது சரியா? நீயே சொல்” என்றாள் சிறு பிள்ளைக்குச் சொல்வதுப் போல.

தன் பின்னந்தலையை சொறிந்த வண்ணம், “சரியில்லைதான். இனி நான் கவனமாக இருக்கிறேன். அதற்காக அவந்தி நீ என்னிடம் கோபம் கொள்ளாதே!” என்றாள் சிறுபிள்ளையாக மீண்டும் அவள் தோள்மீது கையினை போட்டபடி.

இருந்தும் மனதில், ‘அவரைத் தெரிந்துக் கொள்ளதானே அவருடன் அதிக நேரம் இருந்தேன்!’ என்று பாவனாவின் மனம் முரண்டியப் போதும் வெளிப்படையாக அவந்திகாவிடம் சொல்லவில்லை.

பதிலாகப் புன்னகைத்த அவந்திகா, “ம்ம்…சரிசரி. என்னை விடு. எனக்கு இன்னமும் களைப்பாகதான் இருக்கிறது” என்று அவள் கைகளை விலக்கியப்போதே அவந்திகவின் வயிறு பசியில் சப்தமிட்டது.

அதனைக் கேட்ட பாவனா உடனே சிரித்துவிட்டு, “அவந்தி…இன்னமும் நீ சப்பிடவில்லையா? சாப்பிடாமல் என்னைப் போலக் கும்பகர்ணி தூக்கமெல்லாம் நீ போட மாட்டியே” என்று கேட்டாள்.

அதனைக் கேட்ட அவந்திகா.”அதற்குதான் எழுந்தேன் பவி. முகம் கழுவிவிட்டு கைப்பேசியில் அழைத்து உணவு வரவைக்கலாமென்று” என்று பாவனாவிடம் சொல்லிய வண்ணம் தன் கைப்பேசியில் என்ன வாங்கலாம் என்று பார்த்தாள்.

நேரத்தைப் பார்த்த பாவனா, “என்ன அவந்தி. என்னிடம் ஒரு குறுந்தகவல் அனுப்பியிருக்கலாம் தானே. நான் உணவு வாங்கி வந்திருப்பேனே!. இப்போதே நேரமாகிவிட்டது. எத்தனை கடைகள் இன்னமும் திறந்திருக்குமென்று தெரியவில்லை. நான் கார்திக்கிடம்” என்று படபடவேன பேசிக் கொண்டிருக்கும் போதே அறை கதவு மீண்டும் தட்டப்பட்டது.

பாவனா யாரென்று அறை கதவின் துவாரத்தில் பார்ததும், “அவந்தி. உன் ஆள்தான். பார் உனக்குப் பசி என்றதும் எங்கோ இருந்த அவருக்குக் கேட்டுவிட்டது. உணவோடு வந்திருக்கிறார்.” என்று அவந்திகாவை பார்த்துக் கண்ணடித்தபடி கதவைத் திறந்தாள்.

அவந்திகா பாவனாவிடம் அப்படி சொல்லாதே என்று மறுத்துச் சொல்லுமுன் கார்திக் கையில் உணவு பொட்டலங்களுடன் அறையினுள் நுழைந்தான்.

பாவனாவை எதிர்பார்திராத கார்திக், “பாவனா. அதற்குள் வந்துடீங்களா? நான் அவந்திகா இன்னமும் சாப்பிடாமல் இருப்பாங்கனு உணவெடுத்துக் கொண்டு வந்தேன்.” என்று வேறெந்த கேள்வி பாவனா கேட்குமுன்னே விளக்கமளித்தான்.

பாவனா கேலியாக “ஆஹம்…” என்று சொல்லி அவனைப் பார்த்து, “அப்படியா?” என்று கட்டுபடுத்த முடியாமல் சிரித்தாள்.

அவளது செயல் கார்திக்கிற்கு தர்ம சங்கடத்தைக் கொடுப்பதை உணர்ந்த அவந்திகா, “பவி… அமைதியாய் இரு. எதற்குச் சிரிக்கிற” என்று பக்குவ பட்டவளாக அதட்டினாள்.

பாவனாவும் மேலும் கிண்டல் செய்யாமல், அந்த அறையில் இருந்த ஒரே நாற்காலியை அவனுக்கு நகர்த்தி “உட்காருங்க” என்றுவிட்டு, அவன் கையிலிருந்து உணவு பொட்டலங்களை வாங்கி அங்கிருந்த மேஜையில் கடை பரப்பினாள்.

ஏனோ சங்கடமாக உணர்ந்த கார்திக் தயங்கி தயங்கி, “அவந்திகா. இப்போது எப்படி இருக்கீங்க” என்றான்.

அவந்திகாவிற்கும் தானூர்தியில் நடந்த நிகழ்வுக்குப் பின் இயல்பாக அவனிடம் பேச முடியாமல், “ம்ம்” என்று மட்டும் சொன்னாள்.

அதற்குள் காகித தட்டில் சப்பாத்தியையிட்டு அவந்திகாவின் கையில் திணித்த பாவனா, “முதலில் சப்பிடு அவந்தி.” என்றுவிட்டு, கார்திக்கிடம் திரும்பி, “அப்பறம். கார்திக். எப்படி இருந்தது தாஜ். நான் தான் தவறவிட்டுவிட்டேன்.” என்று அங்கே நிலவிய அசௌகரிய சூழலை உடைக்கும் விதமாகக் கேட்டாள்.

பாவனாவின் கேள்வியில் கார்திக்கின் இறுக்கமும் குறைந்து, “ம்ம்… நன்றாகதான் இருந்தது நான்தான் விரைவில் வந்துவிட்டேன். நம்ம பசங்க இன்னமும் 1 மணி நேரம் பிறகுதான் வருவாங்க. அதனோடு ஏனோ போட்டி 2 நாட்களுக்குப் பிறகு தள்ளி வைத்திட்டாங்க.

அதனால் நாம் நாளையும் நாளை மறுநாளும் சும்மாதான் இருக்க போகிறோம். அது தெரிந்ததும் அவர்களும் சீக்கரம் தூங்க வேண்டிய அவசியம் இல்லையே. இன்னும் கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு வருகிறோம் என்றனர். நானும் அவர்களை அவசர படுத்தவில்லை.

மெதுவாக வரட்டுமென்று விட்டுவிட்டேன். இங்கு அவந்திகா சாப்பிடாமல் இருப்பாங்களே என்று ஓடி வந்தேன்” என்று அவந்திகாவின் மீது பார்வையை செலுத்தி மீட்டு எதையோ மனதில் மறைத்தவிதமாகச் சொன்னான்.

“ஐ… உண்மையாகவா. அப்போ நாம இரண்டு நாளும் மும்பை முழுதும் சந்தோஷமாகச் சுற்றி பார்க்கலாம்னு சொல்லுங்க.” என்று குதுகலத்துடன் கார்திக்கிடம் சொன்னாள்.

தொடர்ந்து, அவந்திகாவின் புரம் திரும்பி, “அவந்தி, இன்று நான் மேகனுடன் சென்ற கடைவீதிக்கு நாளைப் போகலாம். அங்கே விதவிதமாக ஆடைகளும் அணிகலன்களும் இருந்தது. அதற்கு மேல் சுவையான பலவகை பலகாரங்களும் இருந்தது.

அதனால்தான் நாவை அடக்க முடியாமல் அங்கேயே இன்று சாப்பிட்டுவிட்டு வந்தேன். அங்கே சாப்பிட்டதால் தாஜ்க்கும் போகவில்லை” என்று தன் செயலுக்கான காரணத்தையும் உடன் புகுத்திச் சொன்னாள்.

அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்த அவந்திகா, பாவனாவின் செயலில் புன்னகை மலர, “ம்ம்” என்றாள்.

அந்தச் சிறிய புன்னகையிலே அவளையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்த கார்திக்கின் முகமும் லேசாகக் கனிந்தது. பாவனாவினை தொடர்ந்து அவனும், “நாளைக் கடற்கரைக்கும் செல்வோம். நேரம் இருந்தால் ஒரு அருங்காட்சியகத்திற்கு(Museum) செல்லலாம், நாளை மறுநாள் விளையாட்டுப் பூங்கா (Theme park) ஒன்றுக்கும் போகலாம்” என்று மற்றவர்களுடன் ஏற்கனவே போட்டிருந்த திட்டத்தையும் எடுத்துச் சொன்னான்.

அதனைக் கேட்டதும் கிளுக்கி சிரித்த பாவனா,”அப்போது அருமையாகப் பொழுது போகப் போகுது இந்த இரண்டு நாளும்” என்றாள்.

அவந்திகாதான் ஏதோ சந்தேகம் தோன்ற, “ஆனால் ஏன் முன் அறிவிப்பின்றி 2 நாள் போட்டியைத் தள்ளி வைத்துவிட்டார்கள்” என்று கார்திக்கை பார்த்துக் கேட்டாள்.

‘விரைவில் இந்த மேகனையும், பவளனையும் விட்டுச் சென்றால் நிம்மதி, இது இன்னமும் 2 நாள் தள்ளிப் போகிறதே’என்று மனதில் சஞ்சலம் எழத் தெளிவு வேண்டிக் கேட்டாள்.

“அது. அதனை எடுத்து நடத்துபவருக்கு அவரது சொந்த ஊரில் எதிர்பாராத ஏதோ அவசர வேலை வந்துவிட்டதாம். எது எப்படியோ. இந்த இரண்டு நாள் தங்குவதற்கும், உணவுக்கும் அவர்கள் பணத்தினை தருவதாக உறுதி அளித்துவிட்டதால் நமக்கு எந்தவிதத்திலும் இது லாபம்தான்” என்று விளக்கமாகச் சொன்னான் கார்திக்.

“ஓ…” என்றதோடு வேறேதுவும் அவந்திகா கேட்கவில்லை.

பின் கார்திக்கும் அதிக நேரம் அங்கிருக்காமல் அவந்திகாவை திரும்பத் திரும்பப் பார்த்தபடி விடைப்பெற்றுக் கொண்டு சென்றுவிட்டான்.

பாவனாதான் அவந்திகாவை, “ஏய் அவந்தி. உன்னுடன் தனியே பேசிக் கொண்டிருக்கலாமென்று அவசரமாக வந்திருப்பாரோ என்னமோ. என்னை இங்கு எதிர் பார்க்கவில்லை போல. என்னைப் பார்த்ததும் அவர் முகம் போன போக்கைப் பார்த்தாயா? பாவமாய் இருக்கிறது. கொஞ்சம் முகம் கொடுத்துதான் பேசேனடி” என்று அவந்திகாவிடம் தொந்தரவு செய்துகொண்டிருந்தாள்.

அதற்குப் பதில் சொல்லாமல், புன்னகையிலே நழுவி, படுக்கையிலே சரிந்தாள் அவந்திகா. “எனக்கு உறக்கம் வருகிறது. நாளைப் பேசலாம் பவி” என்று படுத்ததும் சொன்னதுப் போல உறங்கியும் விட்டாள் அவந்திகா.

வழக்கமாகப் பேசுமளவுக்கூட இன்று அவந்திகா அவளிடமும் சரி, கார்திக்கிடமும் சரி பேசவில்லை. ஏனோ மனதில் இது பட அவந்திகாவின் தூங்கும் முகத்தையே வெகுநேரம் பார்த்திருந்தாள் பாவனா.

அதன்பின் பாவனா, ‘கார்திக் நல்லவர். அவந்திகா விருப்பம் சொல்லும் முன்னரே அவள்மீது எவ்வளவு அக்கறையாக இருக்கிறார். அவந்தி ஏன் அவளை விலக்குகிறாள். கார்திக்கிடம் மனம் விட்டுப் பேசினால் அவளுக்கு விருப்பம் ஏற்பட கூடுமோ!.

இன்று போலப் பல நேரம் நான் அவர்கள் இருவரும் பேசிக் கொள்ள தனிமை கொடுக்கவில்லையோ! எப்போதும் மூன்றாவது மனுசியாக நான் இருப்பதால் அவர்களுக்குள் காதல் வர வழி இல்லாமல் போய்விட்டதோ! எல்லாவற்றிற்கும் நான்தான் காரணமோ!’ என்று பலதும் யோசித்து

‘நாளை நான் இவர்கள் இருவருக்கும் இடையில் போகக் கூடாது. இத்தனை நாள் அவர்கள் உறவு வளரத் தடையாக இருந்ததற்கு சமன் செய்யும் விதமாக நாளை, முடிந்த அளவு அவர்கள் இருவரும் இணைந்திருக்குமாறு சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்’ என்று பெரிய திட்டமிட்டாள்.

பாவனாவின் மனநிலை அறியாத அப்பாவியான அவந்திகா மறுநாள் எங்குச் செல்லும் போதும் பாவனா அவளையும் கார்திக்கையும் அருகில் இருக்கும்படி பார்த்துக் கொண்டது இயல்பாய் நடப்பதுப் போல அமைய அவந்திகா கொஞ்சம் திணறிதான் போனாள்.

திரைப்பட அரங்கில், உணவு உண்கையில், கடைவீதிகளில் என்று எல்லா இடங்களிலும் கார்திக்கின் அருகில் அவந்திகா இருப்பதுப் போல மிகக் கவனமாகப் பார்த்துக் கொண்டாள் பாவனா.

அவளுக்கு உதவியாக உடன் இருந்தவர்களும் ஒத்துழைக்க ஒற்றையாக அவந்திகா என்னதான் செய்ய முடியும். கார்திக்குடன் இயல்பாகப் பேச முடியாமலும் விலகி ஓட முடியாமலும், பாவனாவை அவ்வப்போது கண்களால் தேடினாள் அவந்திகா.

வெகுநேரத்திற்கு பின்பே பாவனா ஏனோ அவளைத் தவிர்ப்பதுப் போலவும், வேண்டுமென்றே மற்றவர்களுடன் அதிக நேரம் செலவிடுவதுப் போலவும் அவந்திகாவுக்கு புரிந்தது. செய்வதறியாது கடைசியாகச் சென்ற கடற்கரை மணலில் அனைவரிலும் சற்று தள்ளித் தனியாக அமர்ந்துக் கொண்டாள்.

கார்திக்கும் அவள் தன்னை தவிர்கிறாள் என்பதை உணர்ந்து அவளைத் தொந்தரவு செய்யாமல் ரோஷன் அருகில் வந்து அமர்ந்துக்கொண்டு அவ்வப்போது அவந்திகாவையே பார்த்திருந்தான்.

அவர்களையே பார்த்திருந்த பாவனா, ‘இந்தக் கார்திக் என்ன செய்கிறார்? வாய்ப்பைப் பயன்படுத்தியிருக்க வேண்டாமா’ என்று சலிப்புற்று அவந்திகாவை நோக்கிச் சென்றாள்.

“அவந்தி. ஏன் தனியாக உட்கார்திருக்கிறாய்?” என்று அவளருகில் வந்த பாவனா, அவள் கைப்பற்றி எழுப்பி மீண்டும் இழுத்துச் சென்று கார்திக்கின் அருகில் அமரவைத்தாள்.

அவந்திகா எதுவும் பேசுமுன்னே, “ரோஷன், வா நாம் போய் ஏதாவது சாப்பிட பலகாரம் வாங்கி வரலாம்” என்று அவர்களுக்கு மீண்டும் தனிமையை ஏற்படுத்திக் கொடுத்தாள் பாவனா.

ரோஷனுடன் சென்ற போதும் திரும்பித் திரும்பி அவந்திகாவையே பார்த்திருந்த பாவனா, ‘அவந்திக்கு கார்திக்கை போல அக்கறையான ஒருவன் அமைந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். கார்திக்கின் அருமை அவளுக்குப் புரியவே மாட்டேன் என்கிறதே’ என்று பெருமூச்சுவிட்டாள்.

இப்படி பாவனாவின் எண்ண ஓட்டமிருக்க, அவந்திகா என்ன செய்வதென்று புரியாமல் அமைதியாகக் கார்திக் அருகில் அமர்ந்தாள். ‘இனி இப்படியே விட்டால் சரியாகாது கார்திக்கின் மனம் கஷ்ட பட்டாலும் விருப்பமில்லையென்று சொல்லிவிட வேண்டியதுதான். இப்படி சங்கடபட்டுக்கொண்டு இருப்பது மிகவும் அசௌகரியமாக இருக்கு’ என்று முடிவெடுத்து அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

அவள் பேசுமுன்னே, “அவந்திகா. நீங்கச் சங்கட பட வேண்டாம். உங்களுக்கு என்மீது விருப்பமில்லை என்று நான் நேற்றே அறிந்துக் கொண்டேன். என்னுடன் இருக்கும் சூழலை இப்படி தவிர்க்க வேண்டாம். நான் உங்களை எதுவும் செய்துவிட மாட்டேன்” என்று மனதின் வலி கண்களில் தெரிய கடலையே பார்த்தவண்ணம் அவளிடம் சொல்லிவிட்டான்.

அவன் முகத்தைப் பார்த்த அவந்திகாவிற்கும் கஷ்டமாகதான் இருந்தது. ஆனால் அவள் சூழல் அவளுக்கு எந்தவித நெழிவு சுழிவிற்கும் இடமளிக்கவில்லை. ஒற்றை வாக்கியமாக, “என்னை மன்னித்துவிடுங்க” என்று தலை தாழ்த்தினாள்.

அந்தக் குரலில் அவள்புரம் முகம் திரும்பிய கார்திக், “பாவனா உங்கள் வயதுதான் என்ற போதும் இன்னமும் சிறுப்பிள்ளையை போல மனது அவளுக்கு. நாம் இருவரும் ஒன்றாய் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி இன்று முழுதும் உங்களுக்குச் சங்கடமான சூழலைத் தந்துவிட்டாள். அவளிடமும் கோபித்துக் கொள்ளாதீங்க.” என்றவனின் கண்கள் லேசாகச் சிவந்து கசிந்திருந்தது. ஆனால் அவனது இதழ்கள் புன்னகையை தந்தது.

அதனைப் பார்த்த அவந்திகாவிற்கு அவள் எதுவுமே செய்யவில்லை என்ற போதும், குற்ற உணர்வு மனதில் தோன்ற, அவள் மனம் ‘நல்லவன்தான். அவன் கஷ்டம் அனுபவிக்கும் நிலையிலும் பவி பற்றி யோசிக்கிறான். இவனுக்கு ஏன் என்மீது விருப்பம் வந்து தொலைந்தது.’ என்று நொந்துக் கொண்டது.

அவனுக்குப் பதில் சொல்லும் விதமாக, “ம்ம். பவி மீது எனக்கு எப்போதும் கோபம் வராது.” என்றாள்.

கார்திக், “…”.

சில நிமிட மௌனங்களுக்குப் பின், “உங்களை விரும்பும் உங்களுக்கும் பிடித்த ஒருவரை நிச்சயம் நீங்கச் சந்தீப்பீங்க. நான் உங்களுக்கானவள் இல்லை. ஏன் என்று என்னால் இப்போது காரணம் சொல்ல முடியவில்லை.” என்றாள் தயங்கி தயங்கி அவந்திகா.

அதற்குச் சின்ன சிரிப்பை உதிர்த்த கார்திக், “ம்ம். என்னைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்.” சில நொடி நிறுத்தி, “நீங்க ஏற்கனவே உங்களுக்கானவரை சந்தித்துவிட்டீங்க என்று நேற்று அறிந்தேன். அதனைப் பாவனாவிடம் சொல்லியிருந்தால் இன்று இப்படி நீங்கச் சங்கட பட வேண்டி இருந்திருக்காது” என்றான் குரலில் மாற்றம் இல்லாமல்.

“என்ன?” என்று புரியாமல் திகைத்து அவந்திகா அவனைப் பார்த்துக் கேட்டாள். அவள் மனது ‘எனக்கே தெரியாமல் நான் எப்போது எனக்கானவனை சந்தித்தேன்’ என்றது நெரூடலாக.

Advertisement