Advertisement

அத்தியாயம் – 13

தரையில் கிடந்த ஓட்டுரை நோக்கி ஓடியவண்ணம், “கொடி… எச்சரிக்கையாக இரு. எந்த நேரத்திலும் சண்டைக்குத் தயாராக இரு” என்று தன் கையோடு ஒட்டியிருந்த கொடியிடம் சொன்னாள் அவந்திகா.

அவந்திகாவின் குரலைக் கேட்டதும் ‘பல வருடங்களுக்குப் பிறகு உடற்பயிற்சிப் போலச் சண்டையிடப் போகிறோம்’ என்று கொடி உற்சாகத்துடன் அவந்திகாவின் கையிலிருந்து ஒரு சுற்று வெளியில் வந்து அவந்திகாவின் ஓட்டத்தினால் ஏற்பட்ட காற்றோட்டம் தன் மீது விழப் படபட சத்தத்துடன் எட்டிப்பார்த்தது.

அவளுக்கு முன் சென்ற மின்மினிப் பூச்சிகள் அந்த ஆலமரத்தின் விழுதுகளைச் சுற்றி படர்ந்து அந்தி மாலைப் போல காரிருளிலும் வெளிச்சம் பரப்பியது. ஓடி வந்த அவந்திகா, ‘முதலில் இந்த இடத்தை விட்டுக் கிளம்ப வேண்டும்’ என்ற எண்ணி ஓட்டுநரை எழுப்ப முற்பட்டாள்.

எண்ணமே கருமமாக, ஒரு கணமும் தாமதிக்காமல் கீழே இருந்த ஓட்டுநரின் அருகில் முட்டிகால் போட்டு அமர்ந்து, தரையில் கிடந்த அவனது தலையை நிமிர்த்தி அவன் முதுகை தன் முட்டிகாலில் முட்டுக் கொடுத்து அமரும் நிலையில் நிறுத்தி அவனது கழுத்தில் சுண்டிவிட்டு அவனது தூக்கம் தரும் நாடியில் ஆன்மீக ஆற்றலின் ஒளியால் முன்பு உருவாக்கிச் செலுத்தி இருந்த குத்தூசியை(1) எடுத்தாள்.

அவள் கையோடு ஒளியினால் ஆன மெல்லிய ஊசி அவனது கழுத்திலிருந்து வெளியில் வந்து காற்றில் மறைந்தது.

தூக்கம் கட்டுபடுத்தும் குத்தூசி அவனது கழுத்து நாடியிலிருந்து எடுத்ததுமே அவனது இமைகள் லேசாக நடுங்க அவன் விழிக்கும் சகிதமாக அவனது நெற்றி சுருங்கி நெகிழ்ந்தது. அவந்திகா அவனை ஒரு நொடிப்பார்த்தவள், அவன் கண் விழிக்கும் வரை அவனையே பார்த்திராமல் அவன் தெளிந்து எழும் வரை அவனது பின் தலையில் மட்டும் தன் வலது கையை முட்டு கொடுத்துக் கொண்டு சுற்றும் முற்றும் எச்சரிக்கை உணர்வாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

தரையில் விழுந்து கிடந்ததால் தன் தலையில் அணிந்திருந்த தொப்பி விழுந்திருக்க, தூக்கம் கலைந்தவனாகக் கண்களைக் கசக்கிய வண்ணம் விழித்துப் பார்த்தான் அந்த ஓட்டுநர்.

அவந்திகா கண் விழித்த அந்த ஓட்டுநரைப் பார்க்கும் முன்னரே, அவசரமாகக் கீழே விழுந்திருந்த தொப்பியை எடுத்துத் தன் கண்வரை முகம் மறைக்குமாறு தலையில் மாட்டிக் கொண்டு தன் கை மறைவில் ‘இன்னிலையிலும் தன்னை அவள் அறியவில்லையே’ என்று மென்னகையிட்டான்.

ஒருவேளை அப்போது அந்த மின்மினி பூச்சிகளின் வெளிச்சத்தில் அவன் முகம் பார்த்திருந்தால் அவளுக்கு அந்த ஓட்டுநரின் கண் யாருடையது என்று தெரிந்திருக்குமோ! என்னமோ!. ஆனால் அசாதரணமாக இருந்த அந்த இரவுப் பொழுது அவளுக்குச் சுற்றி இருக்கும் இடத்தில் எச்சரிக்கையுடன் இருக்க செய்ததே தவிர உடன் இருந்தவனிடம் தெரிந்த பழமை உணர செய்யவில்லை.

அவள் தன்னை உணரவில்லை என்று அறிந்தப்பின் அவன் தொடர்ந்து பழைய ஓட்டுநர் வேடத்திலே, “என்னமா ஆச்சு. நாம் ஏன் இங்கு அமர்ந்திருக்கிறோம். நீங்க வந்த வேலை முடிந்ததா? என்ன இப்படி பகல் போல வெளிச்சமாக இருக்கிறது” என்று ஒன்றுமே அறியாத சிறுவன் போன்ற குரலில் அப்போதுதான் மின் மினி பூச்சிகளைக் கவனிப்பது போல இங்கும் அங்கும் விசித்திரமாகப் பார்த்தான்.

அவனுக்குப் பதில் சொல்லும் எண்ணம் இல்லாமல் அருகில் யாரோ தங்களை கொலைவெறியுடன் பார்ப்பதுப் போன்ற உணர்வு அவளுள் தோன்ற, “ஓட்டுநரே. இங்கு இப்படி அமர்ந்து இலகுவாகப் பேசிக் கொண்டிருக்க இப்போது நேரமுமில்லை. இது அதற்கான இடமுமில்லை. இரவில் மிருகங்களின் நடமாட்டமும் இந்த காட்டில் அதிகம் இருக்கும். அதனால் எல்லாம் நான் நம் தானூர்தியில் ஏறி அமர்ந்தப் பின் சொல்கிறேன். எழுங்க. போகலாம்” என்று அவனுக்குக் கைதாங்கி எழுப்பிவிட்டாள்.

அவனும் எதுவும் பேசாமல் அவள் கைப்பற்றி எழுந்தான். பின், “சரிமா. இந்த மின் மினி பூச்சிகள் எங்கிருந்து வந்தது. நமக்கு முன் வழிக் காட்டுவதுப் போல வரிசையாகப் போவதைப் பார்த்தால் அதிசயமாக இல்லை?” என்று கேள்வியும் பதிலுமாகக் கேட்டவண்ணம் அவள் கைப்பற்றிய வண்ணம் நடந்தான்.

உடன் நடந்தபடி இருந்தவள் அதிசயமாக இல்லை என்று அவன் கேட்ட குரலில் ஒரு நொடி நின்று ‘இந்தக் குரல்? மிக வெகுசமீபத்தில் கேட்டதுப் போலத் தோன்றுகிறதே!’ என்று சந்தேகம் தோன்ற அவனைத் திரும்பிப் பார்க்க நினைத்து அவன்புரம் திரும்பினாள்.

அவள் முழுதும் அவன் முகத்தை ஆராய்ந்து பார்க்குமுன்னே அவள் கவனம் “அ… ஊ ஊ… அ… ஊ ஊ… ” என்ற அலறலில்(howl) அவர்களைச் சுற்றியிருந்த மின்மினி பூச்சிகளைக் கடந்து காரிருளில் தெரிந்த பல ஜோடி வெளிர் நீல நிற கண்களின் மீது விழுந்தது.

தன் கைக்காப்பும், கொடியும் கையில் இருப்பதாலும், அதனோடு ஆன்மீக ஆற்றலுடன் மரகதக்கல் இருந்ததாலும், அவள் யாளியாக இருந்தப் போது இருந்த துணிச்சல் மீண்டவளாகவும் யாராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் சண்டையிட தயாராக நின்றாள்.

ஏனென்றால், மிருங்களுக்கு மட்டுமல்லாமல் தன் சுய உருவில் இருக்கும் யாளிகளின் கண்களும் இரவில் இப்படிதான் வெளீர் நீல நிறத்தில் தெரியும். அதனால் இயற்கையிலே இருந்த அந்த எச்சரிக்கை உணர்வில் அவளும் கொடியும் எதிரே தெரிந்த ஆபத்தை எதிர் நோக்கத் தயாராக நின்றனர்.

எப்போதும் தன் பாதுகாப்பைப் பற்றி அக்கறையின்றி உடன் இருப்பவரைக் காக்கும் இயல்பு வன்னியுடையது. அவந்திகாவாக மாறியப்பின் மனித உலகில் அவசியமில்லாத சஞ்சலங்களை உண்டாக்கிவிடக் கூடாது என்று அவளை மிகவும் கட்டுபடுத்திக் கொண்டு அதன்படி இருந்தாள்.

இயல்பாக அனைவரிடமும் அக்கறையுடன் இருந்தால்தானே தன்னையும் அறியாமல் தன் சக்தியால் ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்து தேவையில்லாத குழப்பங்களை இங்கு உண்டாக்க நேரிடும் என்று அவள் யாருடனும் அவசியமற்று பேசாமலும் பொது இடங்களுக்கு அவசியம் இல்லாமல் போகமலும் அவந்திகா இருந்தாள்.

ஆனால் எப்போது யாளிகளான பவளனையும், மேகனையும் இயல்பாக மனித உலகில் பார்த்தாளோ அப்போதே இது போன்ற தொந்தரவுகள் வரக்கூடும் மற்றும் எதிர்த்துப் போரிட சக்தியும் வேண்டும் என்று உணர ஆரம்பித்திருந்தாள்.

முன்பு மனித உடலுக்குள் வந்தப் பின்பும் தவம் செய்து ஆன்மீக ஆற்றலைச் சேர்க்க இந்த மனித உலகில் இருக்கும் வரை அவள் அவசியமில்லை என்றிருந்தாள். அதனாலே அவளது கைக்காப்பை விலகி இத்தனை வருடங்கள் இருந்தாள். ஆனால் இப்போது எதிர்பாராமல் சந்தித்த யாளிகளால் தன் சக்திகளைப் பெருக்க வேண்டும் என்று உணர்ந்து தன் கைக்காப்பை எடுத்து வர முடிவெடுத்து இங்கு வந்தும் விட்டாள்.

அதனோடு ‘நான் ஆன்மாவாக இருந்தப் போது தவம் செய்து ஆன்மீக ஆற்றலைச் சேர்க்க முடியாது. இப்போது இருக்கும் மனித உடலில் அது முடியும். என்ன யாளி உடலைவிட மனித உடலில் ஆன்மீக ஆற்றலைத் தவத்தின் மூலம் இயற்கையிலிருந்து உறிஞ்சுவது(Absorb) கடினமாக இருக்கலாம்.

காலம் அதிகம் கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால் முயன்று பார்க்கலாம்’ என்று நினைத்துதான் இன்று இங்குக் கைக்காப்பை எடுத்துச் செல்ல வந்தாள். ஆனால் இன்றே இப்படி இந்த மிருகங்களிடம் மாட்டிக் கொள்ள கூடும் என்று அவள் நினைக்கவில்லை.

அந்த மிருங்கங்களை பார்த்ததும் சில நூறு வருடங்களாக அவளுள் புதைந்திருந்த யாளியின் உயிர்ப்பு மீண்டவளாக, அன்னிச்சை செயலாக உடன் இருப்பவன் சாதாரண மனிதன் என்று எண்ணி, “எச்சரிக்கை” என்று சொல்லிய வண்ணம் ஏற்கனவே அவனைப் பிடித்திருந்த கையினை இழுத்து அவள்பின் அவனை நிறுத்தி அந்த மிருகங்களிலிருந்து அவனைக் காக்கும் விதமாக இடையில் நின்றாள. (6)

பின், “கிட்டத்தட்ட 10லிருந்து 15 நரிகளுக்கு மேல் நம்மைச் சுற்றி உள்ளது. எங்கும் தூரம் சென்று விட வேண்டாம். என் பின்னே மிக அருகில் நில்லுங்க. நான் இவைகளை பார்த்துக் கொள்கிறேன். நீங்கப் பயப்பட வேண்டாம்” என்று அவன் முகம் பார்க்காமலே அந்த ஓட்டுநருக்குத் தைரியம் சொன்னாள்.

அவள் உதடுகள் அவனிடம் முனுமுனுத்தப் போதும் அவளது விழிகள் எச்சரிக்கையாக எதிரில் தெரிந்த நரிகள் எத்தனை என்று எண்ணிய வண்ணம் தன்னுள் இருக்கும் ஆன்மீக ஆற்றல் தீர்ந்தால் எளிதில் ஆன்மீக ஆற்றலைத் தன் பணியகத்திலிருக்கும்(Bureau) மரகதக்கல்லிலிருந்து உறிஞ்ச தயாராக இருந்தாள்.

அவளது பக்காவாட்டு முகத்தையே சுவாரசத்துடன் பார்த்தவண்ணம் அந்த ஓட்டுநர், அவளது கையிழுப்பில், நடந்து அவள்பின் நின்றான். பின் குரலில் பயம் தென்பட, “என்னமா இப்படி வந்துகாட்டு மிருகங்களிடம் மாட்டிக் கொண்டோம். எனக்குப் பயமாக இருக்கிறது. வாங்கமா, வேகமாக ஓடிவிடலாம்” என்று அதிக அசைவு தெரியாமல் அவளது கைப்பற்றி இழுத்தான்.

அவனது குரல் மெலிந்து இருந்தப் போதும் எதிரில் தெரிந்த அசைவில் தங்கள் இறை உறுதிபட உற்சாகமாக வேட்கையுடன் அந்த நரிகள் விழியகற்றாமல் மெதுவாக அவர்களை நோக்கி அடியெடுத்து நகர்ந்து வந்தன. அவை நடக்க நடக்க புதர்களின் இலைகள் சலசலக்க ஆரம்பித்தது.

அந்த ஓட்டுநருக்கு மீண்டும் எச்சரிக்கும் விதமாக, “ஷ்…” என்று தன் உதடுமீது தன் ஆள்காட்டு விரலை வைத்துச் சொன்னாள்.

அதன் பிறகு எந்தப் பதிலும் சொல்லாமல் அவள் சொன்னதுப் போல அவளது முதுகுக்கு மிக அருகில் வந்து நின்றவண்ணம் குனிந்து அவள் பின்னங்காதின் அருகில், “சரி… நான் நீங்கச் சொன்னதுப் போலச் செய்கிறேன். உங்க அருகிலிருந்து நீங்களாகச் சொல்லும் வரை விலகமாட்டேன்” என்று அவன் மூச்சு காற்று அவள் கழுத்தில் விழுமாறு சொன்னான்.

யாளி உடலிடம் இப்படி நெருங்கிச் சொல்லியிருந்தால் எதுவும் அவள் உணர்ந்திருப்பாளோ என்னமோ, தொட்டால் சிலிர்க்கும் அவந்திகாவின் தற்போதையே மனித உடல் அவன் மூச்சுகாற்றில் அந்தப் பாதுகாப்பாற்ற சூழலிலும் சிறிது மெய்சிலிர்க்கதான் செய்தது.

‘அவனிடம் அருகில் இருக்க சொன்னேன்தான் அதற்காக ஒட்டி உரசிக் கொண்டல்ல. இவன் மனிதன்தானே. ஆணுக்கும் பெண்ணுக்கும் கொடுக்க வேண்டிய இடைவேளி தெரிய வேண்டாம்’ என்று எண்ணி அவனிடம் சொல்லும் முன்னே எதிரிலிருந்த நரிகளில் ஒன்று, “ஊர்… ஊர்… ஊர்…” என்று சத்தத்துடன் அவந்திகா மற்றும் அந்த ஓட்டுநர் இருந்த இடத்தை நோக்கிப் பாய்ந்து வந்தது.

உடனே சிதறிய கவனத்தை ஒருங்கிணைத்து, தன் பின் ஒட்டியிருந்தவனையும் மறந்து, “கொடி, கழுத்து நாடியில் குத்தூசியிடு(1)” என்று தன் ஆன்மீக விழிப்பில் (spiritual consciousness) சொல்ல ஆர்வமாக அவந்திகாவின் கையிலிருந்து கொடி, சாட்டைப் போலப் பறந்து முதலில் வந்த நரியின் தலைக்குப் பின் வெளிர்மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்த மாய ஊசியினால் தூங்கும் நாடியில் குத்தூசியிட்டது.

என்னவென்று உணருமுன்னே அந்த நரி, “யாயிக்…” என்று சப்தமிட்டு கண்கள் தூக்கத்தால் சொருக சுருண்டு தரையில் விழுந்தது.

தன் கூட்டத்தில் ஒன்று அசைவற்று விழுந்ததைப் பார்த்து மற்ற நரிகள் ஒரு நொடி பயந்தப் போதும், அடுத்த நொடி வெறிக் கொண்டதுப் போல ஒன்றாகச் சேர்ந்து அவந்திகாவை நோக்கி ஓடி வந்தது. இதனை எதிர்பார்த்தே இருந்த அவந்திகா ஏற்கனவே கொடியினை வேகமாக இயக்கியிருந்தாள்.(3)

திரும்பவும் கொடிக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லாததுப் போலக் கண் இமைக்கும் நேரத்தில் படபடவென இங்கும் அங்கும் அசைந்த அவந்திகாவின் கையும், அவள் கையுடன் இணைந்திருந்த கொடியும் நற்தனம்(dance) ஆடி எதிரில் பாய்ந்து வந்த நரிகள் ஒன்றன்பின் ஒன்றாக “யாயிக்” என்று சப்தத்துடன் தரையில் விழுந்தது.

அவந்திகாவிற்கு இந்த நரிகளைக் கொல்லும் எண்ணமில்லை. அதனால் அவைகளை 8 மணி நேரம்(4) உறங்கச் செய்யும் விதமாகத் தன் ஆன்மீக ஆற்றலைக் கொண்டு ஒளியால் ஆன குத்தூசியை உருவாக்கி அவற்றை உறங்க வைத்தாள்.

ஒரு வழியாக எல்லா நரிகளையும் உறங்க வைத்துவிட்டதை உறுதி செய்தப்பின், “கொடி அவைகளை ஒன்றாக ஒரு இடத்தில் சேர்” என்று கட்டளை இட்டாள் அவந்திகா.

கொடியும் ஆர்வமாக ஒவ்வொரு நரியின் வயிற்றிலும் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக ஒரு இடத்தில் அவைகளை சேர்த்தது.

அவளையும் அவளது கொடியையும் சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தவன் அவளைத் தொடவில்லை என்றப் போதும், அவள் முன்பு சொன்னதுப் போல அவளைவிட்டு ஒரு நொடியும் விலகவுமில்லை அந்த ஓட்டுநர். வேலையே மும்முரமாக இருந்த அவந்திகா அவனது அருகாமையை கவனிக்கவில்லை.

எல்லா நரிகளும் ஓரிடம் வந்தபின் அவந்திகா அவற்றின் அருகில் சென்று 8 மணி நேரத்திற்கு இந்த நரிகளுக்கு வேறு மிருகங்களால், எந்தப் பாதிப்பும் வராமல் இருக்க பாதுகாப்பு சக்கரம்(defense array) வரைய எண்ணி ஆன்மீக ஆற்றலைத் தன் விரல் நுனியில் ஒளிரவிட்டாள்.

ஆனால் இந்தச் சிறிய சண்டையிலும் 8 மணி நேரம் தாங்குமாறு கிட்டத்தட்ட ஒளியால் ஆன 30 குத்தூசிகளை உருவாக்கியதிலும் அவளது ஆன்மீக ஆற்றல் கரைந்துவிட்டிருந்தது. அதனை உணர்ந்ததும் மீண்டும் மனித உடலின் பிரதிகூலத்தை(disadvantage) உணர, சலிப்பாக, தன் முத்திலிருந்து மரகதக்கல்லை எடுத்துத் தன் நெற்றியில் வைத்தாள்.

அப்போதுதான் ‘தன் அருகில் ஒரு மனிதன் இருந்தானே. அவனை மறந்து என்ன செய்துக் கொண்டிருக்கிறோம்’ என்று சட்டென்று கவனம் வர அவனைப் பார்க்கத் திரும்பினாள். அவன் வியப்பாகவோ அல்லது மாயாஜாலம் செய்யும் தன்னை பயத்துடனோ பார்த்து ஒரு ஓரமாக ஒதுங்கி நிற்கக்கூடும். அல்லது அச்சம் தாங்காமல் தன்னை தனியே விட்டு ஓடியே சென்றிருக்க கூடும் என்று எண்ணியிருந்தாள்

ஆனால் அவன் அவள் முதுகுக்குப் பின் முகம் திரும்பியதும் அவன் முகவாயில் தன் தலை இடித்துக்கொள்ளும் அளவு அருகில் நிற்கக் கூடுமென்று துளியும் எண்ணவில்லை. எதிர் பாரமல் உணர்ந்த அந்நிய ஆணின் அருகாமை மனித பெண்ணிற்கே இருக்கும் நாணத்தில் அவளைச் சட்டென விலகச் செய்தது.

ஆனால் அவள் காலருகில் இருந்த நரி ஒன்றில் அவள் கால் இடறி விழ அவளது இடையில் தன் கையினை விட்டு இழுத்து, இழுத்த இழுப்பில் அணைத்துப் பின் அவளை விலக்கி நிறுத்தினான். அந்த ஓட்டுநர்.

‘மனித உடலில் இருந்தப் போதும் தான் 5 அடி 7 அங்குலம் எனப் பெண்களிலே சற்று உயிரம்தான். ஆனால் தன் எதிரில் நின்றிருந்தவன் 6 அடிக்கும் மேல் இருப்பான் போல. அடர்ந்த தோள்பட்டையும், அவளை அணைத்தப் போது அவனது வயிற்றில் அவள் உணர்ந்த 6 அல்ல 8 தசைக்கோலங்களும்(8 pack abs), அவன் அவள் இடையில் பிடித்தப்போது உணர்ந்த அவனது வலிமையான கைகளும், முன்பு பயந்தவன் போல் இருந்தவன் இவன்தானா?’ என்று அவளை வியக்க செய்தது.

அவள் இன்னமும் அவன் உடலிலே கண்ணாக இருப்பதை உணர்ந்து மென்னகையுடன் அவள் முகத்தின் அருகில் குனிந்து அவளுக்குத் தன் கண்களைக் காட்டினான். அவன் முகம் அருகில் வந்ததும் அவளையும் அறியாமல் தன்னிச்சை செயலாக ஒரு அடிபின் நகர மீண்டும் விழ இருந்தவளை தன் வலது கையினால் தாங்கித் தன் கைகளுக்குள்ளே அவளை நிறுத்தினான்.

அவசரமாக அவனது கையினை விலக்கியவள், அப்போதுதான் நிமிர்ந்து அவன் கண்களைக் கண்டாள். கண்ட வினாடி அவளது விழிகள் வியப்பில் விரிந்தது.

“நீ… நீ… நீங்க… நீங்க…” என்று பேச நினைத்தவள் பேச முடியாமல் வியப்பாக அவனையே பார்த்திருந்தாள்.

இதுவரை அவளை இப்படி பார்த்திராத அவன், அவளது ஆர்வமான கண்களை உள்ளூர ரசித்தவண்ணம் முகத்தில் மென்னகையுடன், “நந்தன்…” என்றான்.

அவனது குரலில், நிலை உணர்ந்தவள் அவனிடமிருந்து விலகி, “ம்ம்?” என்று கேள்வியாகப் பார்த்தாள்.

“நீங்க அறிய விரும்பக்கூடும் என்று சொன்னேன். என் பெயர் நந்தன். அல்லது உங்கள் மொழியில் வெள்ளை நிற சட்டை அணிந்த ஆள்” என்றான் சின்ன சிரிப்புடன்.

அவன் சிரித்தப் போது தெரிந்த வெண்ணிற பற்களையே பார்த்திருந்த அவந்திகா விளக்கமாக எதுவும் கேட்காமல், “ஏன்??” என்றாள். அந்த ஏன் என்ற ஒரு சொல்லில், ‘ஏன் என்னைச் சிறுவயதில் காப்பாற்ற வேண்டும், உண்மையில் பலம் இருந்தும் ஏன் என்னிடம் இன்று பயந்தவன் போல நடிக்க வேண்டும். யாளியாக இருந்தால் யாளி உலகில் எல்லோரும் துரதஷ்டமாக எண்ணும் என்னைத் தேடி ஏன் இங்கு வர வேண்டும்’ என்று பல கேள்விகள் இருந்தது.

அதற்குப் பதிலேதும் சொல்லாமல் அவன் 15 வருடத்திற்கு முன்பு அவளிடம் இறகு கயிறினைக் கொடுத்தப் போது இருந்த தோற்றத்திற்கு மாறினான். பின் அவளது இடது கையைத் தன் வலது கையால் பற்றி, தன் இடது கையால் அந்த நரிகளைச் சுற்றி அவள் மனம் படித்தவன் போலத் தன் ஆன்மீக ஆற்றலால் அவற்றைச் சுற்றி பாதுகாப்பு சக்கரம் (defense array) வரைந்தான்.

பின் அவர்கள் இருவருக்கும் எதிரில் இருந்த காற்றில் இடமாற்றத்திற்கான சக்கரத்தை(teleporting array) (5)வரைந்தான்.

(இடமாற்றும் சக்கரம் ஒருவரை, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் மாற உதவும் சக்கரம். இதனை உருவாக்க அதிக ஆன்மீக சக்தி தேவைப்படும். இதைக் கற்றுக் கொள்வதற்கு குறைந்தது 5 சக்கர நிலை ஆன்மீக சக்தியாவது இருக்க வேண்டும்.)

அவள் வேறெதுவும் கேட்குமுன்னே அவளைப் பற்றியிருந்த கையினை இழுத்த வண்ணம் அந்தச் சக்கரத்தில் நுழைந்தான் நந்தன்.

அவள் கண் மூடித் திறைந்தப் போது அவள் அவளது தங்கும் விடுதியின் அறையில் இருந்தாள். அந்த நந்தனும் அவள் எதிரில் இன்னமும் அவள் கைப்பற்றி நின்றிருந்தான். அவள் மீண்டும் கேள்வியாக அவனைப் பார்க்க, அவன் அவள் பார்த்திருந்தப் போதே மாயம் போல வெளிர் மஞ்சள் நிற சிறு வெளிச்ச துகள்களாக மாறிப் பின் காற்றில் மறைந்தும் போனான்.

அவள் அதிர்ந்து அவன் முன்பு நின்றிருந்த இடத்தில் கைகளால் துலாவி அவனைப் பிடித்துவிட முயன்றாள் அவந்திகா. அவனது இந்தச் செயலில் அவன் யாளி என்பது புரிந்தது. ஆனால் அவன் கையில் எந்த நிற கைக்காப்பும் அவள் காணவில்லை. அதனால் அவனிடம் பல கேள்விகள் கேட்க அவள் மனம் துடித்தது. அவனது செயல்களால் அவன் அவளுக்கு நல்லவனாகவே தெரிந்தான்.

அவன் கண்ணிலிருந்து மறைந்ததும் மன சோர்வு வர, அங்கிருந்த மெத்தை மீது அமர்ந்தாள். அப்போது நந்தன் முன்பு அவந்திகாவின் கைப்பற்றியிதிருந்த அவளது இடது கை விரலில் அக்குளிப்பு(tickle) தோன்ற குனிந்து பார்த்தாள்.

அங்குத் தங்க நிறத்தில் ஒரு பட்டாம்பூச்சி தன் இறகை மெதுவாக விரித்து குவித்து அவள் கை விரலுடன் சேர்ந்து மின்மினிப்பூச்சிப் போல மினுமினுத்துக் கொண்டிருந்தது. துறுதுறுவென இதமாக இம்சித்த அந்தப் பட்டாம்பூச்சியின் தொடுகையில் தன் கைவிரலை உயர்த்தி தன் முகத்தின் அருகில் கொணர்ந்து ஆராயும் விதமாகப் பார்த்தாள்.

அந்தப் பட்டாம்பூச்சி சட்டென அவள் கை விரலிலிருந்து தாவி அவள் இடது கண்ணில் அமர்ந்து தன் இறகைக் குவித்து விரித்தது. அதன் செய்கையில் உடல் சிலிர்த்து நின்றிருந்தப் போது அவள் அறையின் கதவு தட்டும் சப்தம் கேட்டது.

Author note:

(1)குத்தூசி- (Acupuncture)

(2) பணியகம் – Bureau – அவள் கைக்காப்பு முத்தில் உள்ள கதவுடன் கூடிய பொட்டி.

(3) கற்பனை செய்ய முடியும் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் அருந்ததி படத்தில் புடவையைக் கொண்டு நடனம் ஆடுமே. கொஞ்சம் அதுபோல.

(4) ஆன்மீக ஆற்றலால் உருவான குத்தூசி, பயன்படுத்தப்பட்ட ஆற்றலின் அளவிற்கு ஏற்பச் சில மணி நேரத்திற்கு பின் கரைந்து அவை விழித்தெழுந்துவிடும்.

(5) இடமாற்றும் சக்கரம் – teleporting array- இது மந்திர பூட்டு சக்கரம், பாதுகாப்பு சக்க்ரம் போல ஒளியால் உருவான சக்கரம். காற்றில் ஒளியால் ஆன வட்டவடிய கதவுபோலக் கற்பனை செய்துக் கொள்ளுங்க.

(6) Why always Hero saves beauty scene in stories? Heroin also can save Handsome right? So I let Heroin Avanthika save Handsome Nandhan from hungry foxes. 😛

Advertisement