Advertisement

அத்தியாயம் – 10

முன் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் பக்கவாட்டு முகத்தை வெறித்தாள் அவந்திகா. ‘இந்த ஓட்டுநரைப் பார்த்தால் 22லிருந்து 25வயதுக்குள் இருப்பவன் போல இருக்கிறது. பவளனைப் போல, மேகனைப் போல அதே வயது. இவனும் யாளி உலகிலிருந்து வந்திருப்பானோ.’ என்று நினைத்தாள்.

சந்தேகமாக இருந்த அவளது பார்வையை சிறிதும் தளர்த்தாமல், அவனுக்குப் பதில் அளித்தாள் அவந்திகா, “நான் வளைவுகள் வர வர வழிச் சொல்கிறேன். இப்போது நேராகச் செல்லுங்க.” என்றாள்.

“சரிங்க அம்மா(1)” என்றான் ஓட்டுநர்.

அவன் காரியமே கண்ணாகத் தானூர்தியை இயக்கியப் போதும், அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவந்திகாவின் பார்வை அவனை விட்டு மீளவில்லை. அப்படியே, “அது இருக்கட்டும். ஏன் என்னை அவந்திகா என்று அழைத்தீர்கள்? என் பெயரை நான் சொன்னதாக நினைவில்லையே!” என்று நேரடையாகக் கேட்டாள்.

அவளது கேள்வி அவன் காதில் விழுந்ததற்கு அடையாளமாக அவன் இதழ் விரித்தான். சில நொடிகள் எதுவும் பேசாமல் அவன் அமைதியாக இருந்தான். இன்னமும் அவந்திகா இமைக்க மறந்து எச்சரிக்கையுடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

பின் இருக்கையின் நடுவில் அமர்ந்திருந்த அவளை வண்டியின் முன் இருக்கைக்கு முன் நடுவிலிருந்த கண்ணாடியில் ஒரு நொடி பார்த்துவிட்டு உள்ளூர சிரித்தான் அந்த ஓட்டுநர்.

பின், “தவறாக எண்ண வேண்டாம் அம்மா. முன் நீங்களும் உங்களுடன் மற்றொருவரும் என்னுடைய ஊர்தியில்தான் இந்தத் தங்கும் விடுதிக்கு வந்தீர்கள். அப்போது எதிர்பாராமல் நீங்கப் பேசியது என் காதிலும் விழுந்தது. அந்த ஆடவன் உங்களை அவந்திகா என்று அழைத்தது மனதில் பதிந்திருந்தது. அதனால் உங்களைப் பார்த்ததும் அவந்திகா என்று கேட்டேன்” என்றான்.

அவன் வண்டியின் கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணராத அவந்திகா அவன் சொல்லச் சொல்ல உண்மை உணர்ந்தவளாக, மெல்ல மெல்ல முகம் தெளிந்தாள்.

‘கார்திக்குடன் வரும்போது இவனது தானூர்தியில்தான் வந்தோமா?! சே! இந்தப் பவளனாலும் மேகனாலும் யாரை பார்த்தாலும் சந்தேகமாகத் தோன்றுகிறது. போதாதற்கு இவன் வேறு பாதி முகம் மறையும்படி தலையில் நீல நிறத்தில் ஜீன்ஸ் தொப்பி அணிந்திருந்து என் சந்தேகத்தை அதிகப்படுத்திவிட்டான்’ என்று தன்னுள்ளே முனுமுனுத்துக் கொண்டு பெருமூச்சுவிட்டாள்.

அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு உள்ளூர ஆனந்தமாக உணர்ந்தான்.

அவன் விளக்கத்திற்கு பிறகு பேதமேதும் உணராமல், “அதுதான் இல்லையா? நான் தெரிந்தவர்கள் யாரோ என்று சந்தேகமுற்றேன்” என்றாள் அவந்திகா. பின் கண்கள் மூடி இயல்பாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.

மனதில் தன் கைக்காப்பு இருக்கும் இடத்திற்கு செல்லும் வழியினை உணர்ந்த அவந்திகா அதன்ப்படி அவ்வப்போது வலது பக்கம் திரும்புங்க, இடது பக்கம் திரும்புங்க, என்று அந்த ஓட்டுநருக்கு வழிச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

ஒரு வழியாகப் பல வளைவுகளைக் கடந்து நடுக்காடுப் போல இருப்பக்கமும் மரங்கள் நிறைந்த வண்ணம் இருந்த சாலையின் நடுவில் வந்ததும் வண்டியை நிறுத்தச் சொன்னாள்.

வண்டியை விட்டு இறங்கியதும், “நீங்க இங்கேயே காத்திருங்க. நான் ஒரு அரை மணி நேரத்தில் திரும்ப வந்துவிடுகிறேன். “ என்று அடர்ந்து தெரிந்த காட்டினுள் நுழையத் திரும்பினாள்.

அவள் இறங்கியதும் உடன் இறங்கிய ஓட்டுநர் அவள் முன் பயம் கொள்வதுப் போல முகத்தை வைத்துக் கொண்டு அவர்கள் வந்த பாதையின் முன்னும் பின்னும் பார்த்தான். கண்ணை எட்டும் தூரம்வரை வளைவு தெரியாத நீண்ட பாதை. பாதையின் இருப்புறமும் உயர்ந்து வளர்ந்த மரங்கள். மாலை மங்கும் நேரம் என்பதால் ஏற்கனவே வெளிச்சம் குறைந்திருந்த அந்த இடம், இருப்புறம் இருந்த மரங்களின் நிழலால் இன்னமும் இருண்டு தெரிந்தது.

அவள் காட்டுக்குள் செல்லும் முன் வேகமாக ஓடி அவள் கைப்பற்றிய அந்த ஓட்டுநர் பயந்த முகத்துடன் விழித்தாழ்த்தி, “ஒரு நிமிடம்மா. என்னை இப்படி இந்த நட்ட நடுக்காட்டில் தன்னந்தனியாக விட்டுவிட்டு செல்கிறீர்களே. இது என்ன இடமென்றே தெரியவில்லை. காட்டு மிருகங்கள் வந்துப் போகும் இடம்போலத் தெரிகிறது. எனக்குப் பயமாக இருக்கிறதும்மா. என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்க” என்றான் நடுக்கமுற்றவாறு.

அவன் தன் கைப்பற்றி இழுத்ததில் துடுக்குற்ற அவந்திகா, தற்காப்பாக அவனை அடிக்கக் கை ஓங்கினாள். ஆனால் அப்போது பாவம்போலத் தெரிந்த அவன் முகத்தைப் பார்த்ததும் அடிக்க மனமற்று கையினை இறக்கினாள். முகம் இறக்கி விழி தாழ்தி சிறு பிள்ளைப் போல அவன் பயத்துடன் அப்படி கேட்டதால் அவந்திகாவின் செயலை அவன் பார்க்கவில்லைப் போலும். (2) என்று நினைத்தாள் அவந்திகா.

உடனே புன்னகை மலர அவந்திகா அவன் கையைத் தன் கையிலிருந்து விலக்கியவண்ணம், “என்னைவிடவும் பெரியவர்போல இருக்கிறீர்கள். இப்படி பயந்தால் எப்படி. நீங்கப் பயப்படும்படி எதுவும் இல்லை. எனக்கு அதிக நேரமாகாது. அதனோடு உங்களுக்குக் காட்டுக்குள் சென்று பழக்கம் இருப்பதுப் போல் தெரியவில்லை. அதனால் நீங்கத் தானூர்தியினுள் பூட்டிக் கொண்டு அமர்ந்திருங்க. நான் விரைவில் வந்துவிடுகிறேன்.” என்று சமாதனமாகச் சொன்னாள்.

அவள் சொல்வதை காதிலே போட்டுக்கொள்ளாமல், “இல்லை. இல்லை.அதெல்லாம் முடியாது” என்று சிறுப்பிள்ளைப் போல் வீர நடையிட்டு அவளுக்கு முன் நடந்த வண்ணம், “நீங்கு எங்குச் சென்றாலும் நானும் உங்களுடன் வருவேன். அவ்வளவுதான். இந்த அரை மணி நேரத்தில் என்ன நிகழுமோ.! நான் தனியாக இங்கு இருக்க மாட்டேனப்பா. “ என்றான்.

அவனது செயலில் மனிதர்களின் பயத்தை ஏற்கனவே நன்கறிந்திருந்த அவந்திகா செயவதறியாமல் புன்னகைத்த வண்ணம் அவன்பின் நடந்தாள். பின் “சரி. காட்டு வழிப்பாதையில் தொலைந்துப் போக அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனால் என்னுடன் நெருங்கியே வாருங்க.” என்று அவள் அவன் கைப்பற்றி முன் நடந்தாள்.

பாவம் காரியமே கண்ணாயிருந்த அவந்திகாவிற்கு ஒன்று மனதில் படவில்லை. ‘இப்படிப்பட்ட காட்டில் ஏன் ஒரு பெண் தனியாக வந்திருக்கிறாள் என்று ஒரு சாதரண மனிதனாக இருந்தால் அவளைக் கேட்கக்கூடும். ஆனால் இந்த ஓட்டுநர் ஏன் கேட்கவில்லை’ என்று கூட அவளுக்குத் தோன்றவில்லை.

அவள் கவனம் முழுதும் காப்பின் இடம் நோக்கியே இருந்ததால் அவ்வப்போது தன் கண்களை மூடி வழியினை உணர்வதிலும் அதன்ப்படி நடப்பதிலும் இருந்தாள் அவந்திகா. தான் கைப்பற்றி அழைத்து வந்தவன், மௌனமாகக் குதுகலத்துடன் புன்னகைத்தவண்ணம் அவள் தன் கைப்பற்றிய இடத்தையே பார்த்துக்கொண்டு வருவதை உணரவில்லை.

பல மரங்களையும், சில புதர்களையும், சில காட்டு உயிரினகளையும் கடந்தப்பின் ஒரு ஆலமரத்தினடியில் இருவரும் வந்து நின்றனர்.

அவர்கள் இங்கு வருவதற்குள் முற்றிலும் இருண்டுவிட்டிருந்தது. ஓட்டுநரின் கையை விட்டுவிட்டு, தான் மாட்டியிருந்த கைப்பையினுள்(slim bag) இருந்த கைப்பேசியினை எடுத்து ஒளியினை எழுப்பி வெளிச்சத்தை பரப்பிவிட்டாள்.

எதிரே தெரிந்த அந்த ஆலமரத்தை பார்த்ததும் அவளையும் அறியாமல் அவளது கை அவள் கழுத்தோடு இருந்த இறக்கு மாட்டிய கருப்பு கையிற்றில் பதிந்து மீண்டது. ’15 வருடத்திற்கு முன் இந்த இடத்தில்தான் அவன் அந்த வெள்ளை ஆடை அணிந்த அந்த ஆளை பார்த்தேன். இன்றும் அவனை பார்க்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என்று எண்ணி சில நிமிடங்கள் அவளது எண்ண அலைகள் 15 வருடத்திற்கு சென்று வந்தது.

15 வருடங்களுக்கு முன்…

சிறு வயதிலிருந்தே அவந்திகா அளவாகதான் பேசிவாள். மற்ற குழந்தைகள்போலத் துடுக்குதனம் செய்யாமல் மிகவும் சமத்தாகச் சொல்வதை புரிந்துக் கொண்டு நடந்துக் கொள்வாள்.

செல்வமும், கனிதாவும் ‘ஏன் நம் பெண் எதிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பதுப் போல் இருக்கிறாள். யாருடனும் நட்புடன் பழகாமல் இருக்கிறாள்’ என்று எண்ணியப்போதும், படிப்பில் எந்தவித குறையும் இல்லாமல் இருந்ததால் மனதில் இருந்த சிறு உறுத்தலை ஒரு ஓரத்தில் ஒதுக்கியிருந்தனர்.

செல்வம் மற்றும் கனிதாவிற்கு ‘இரண்டாவது குழந்தை பிறந்தப் பின் அவர்களிடம் உண்மை சொல்லிவிட்டு இந்த மனித உடலை விட்டுப் போய் விடலாம்’ என்று அவந்திகாவாகிய வன்னி அதற்காகக் காத்திருந்தாள்.

அதேப் போல் அவள் மனித உடலில் பிறந்து 7 வருடங்களுக்குப் பின் அவளது பெற்றோர்களுக்கு அருண் பிறந்தான். அவன் பிறந்ததும் செல்வதிடம் சென்று, “அப்பா. அம்மா. நான் உண்மையில் உங்க குழந்தையில்லை.” என்றாள் அவந்திகா.

அப்படி அவள் சொன்னதை கேட்டதும் அருணை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த கனிதாவிற்கு அவந்திகா என்ன சொல்கிறாள் என்பது ஒன்றும் புரியாமல் நிமிர்ந்து அவந்திகாவைப் பார்த்தாள்

செல்வம்தான் அவந்திகாவின் தீவிரமான பேச்சு புரிய, “அவந்திம்மா, இங்க வா. என் அருகில் வந்து அமரு” என்று அவள் கைப்பற்றித் தன் அருகில் மெத்தை தைத்த இருக்கையில்(sofa) அமர வைத்தார்.

பின் அவள் முகத்தைத் தன்புறம் திருப்பி, “என்ன ஆச்சு. ஏன் உன்னை எங்க குழந்தையில்லை என்றெல்லாம் சொல்கிறாய். தம்பி பிறந்ததும் நானும் அம்மாவும் உன்னை ஒழுங்காகக் கவனிக்கவில்லையா? அந்தக் கோபமா?” என்று கேட்டார்.

உண்மையில் அவந்திகா சிறுவதிலிருந்து தன் பெற்றோர்கள் என்ற சலுகைகளை எப்போதும் அவர்களிடம் எதிர்பார்த்ததில்லை. அதனால் அன்பிற்காகத் தன் தம்பியுடன்(possessive) போட்டிபோல அவள் எண்ணமாட்டாள் என்று செல்வம் கனிதா இருவருமே அறிந்திருந்தனர். இருந்தும் கலக்கம் குறையாத மனதுடன் செல்வம் அவளின் மனம் அறிய கேட்டார்.

செல்வம் மற்றும் கனிதாவின் கலக்கத்தை உணர்ந்த போதும் அவந்திகாவிற்கு உண்மையை மறைக்கத் தோன்றவில்லை.

ஒரு பெருமூச்சை எடுத்துவிட்டுவிட்டு, “எனக்கு எந்த வித கோபமும் இல்லை. ஆனால் நான் இப்போது சொல்வதை கேட்டுவிட்டு நீங்கப் பயப்படவும் வேண்டாம். என்னால் உங்களுக்கு எந்தவித தீங்கும் நிகழாது” என்றுவிட்டு எப்படி சொல்வது என்று யோசித்த வண்ணம் தலை தாழ்தி அமர்ந்திருந்தாள் அவந்திகா.

ஏழு வயது குழந்தைப் போல அல்லாமல் அவந்திகாவின் தெளிந்த பேச்சு அவளிடம் மேலும் கேள்வி கேட்கவிடாமல் செல்வதை தடுத்தது.

மடியில் உறங்கிக் கொண்டிருந்த அருணையும் மறந்து, கனிதாவினுள் இனம் புரியாதவிதமாக அடிவயிற்றில் புளி கரைத்ததுப் போலக் கதி கலங்கியது.மடியிலிருந்த குழந்தையைத் தொட்டிலில் இருத்திவிட்டு தன் கணவன் அருகில் கலக்கத்துடன் வந்து அமர்ந்தாள் கனிதா.

கனிதா தன் அருகில் வந்து தன் கைப்பற்றியதும் திகைத்து இருந்த செல்வம் நினைவு வந்தவராக, “நாங்க பயப்படமாட்டோம். என்னவென்று சொல்லுமா” என்றார் செல்வம்.

“ம்ம்” என்ற போதும் உடனே அவந்திகா பேசவில்லை.

Author note:

(1) சரிங்க madam என்று அந்த driver சொல்லுவான். ஆனால் madam-க்கு தமிழில் பெருமாட்டினு இருக்கு. I dont feel like using that for Avanthika. So used அம்மா. If you guys have any better word let me know.

(2) பயந்ததுப் போல நடிக்கிறான் அந்த driver.

Advertisement