Advertisement

*மௌனமாய்…*

*அத்தியாயம் 01*

எதையும் எதிர்ப்பார்க்காமல் நடப்பதை அப்படியே நன்மைக்கு என்று ஏற்றுக் கொள்ள பழகிவிட்டால் ஏமாற்றங்கள் என்பது கிடையாது,
தானே…!

அந்த நிலையில் தான் அவளும் இருந்தாள்,
இது நாள் வரை.

ஆனால்,
இந்த நொடி…
முற்றிலும் மாறுபட்டதாய்.

அவளால்,
சட்டென்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கட்டிய மஞ்சள் கயிற்றின் ஈரம் கூட இன்னும் வற்றிப் போய் இருக்கவில்லை.

திருமணம் முடிந்து வரும் நேரம் இப்படி ஒரு விபத்து நிகழ்ந்திடும் என்று அவள் நினைக்க கூட இல்லையே,
கனவிலும்.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தான்,
அவள் கணவன்.
உள்ளே,
அவனுக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.

அவ்வறையின் முன்னே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தாள் அவள்..
கலங்கிய விழிகளோடு.

சுற்றம் இருந்த உறவுகள் அனைவருக்கும் அவன் நலமே மேலிட அவளை கவனிக்க அங்கு யாரும் இல்லை என்பது தான்,
நிஜமும் கூட.

அவனின் உறவுக்கார பெண்மணி ஒருவர் கூட இவளின் அபசகுனம் தான் விபத்து நடைபெற காரணம் என்று கத்தி கலவரம் செய்து கொண்டிருக்க அது அவளின் கருத்தில் பதிந்தால் தானே.

அவள் நினைவு முழுக்க இருந்தது அவன் தான்..
அவன் மட்டும் தான்..

காதல் திருமணம் இல்லை.
இரு வீட்டாரும் பேசி முடிவெடுத்து நடத்தி வைத்த திருமணம் தான்.

திருமணத்தின் முன்பு கூட அவனுடன் பேச அவள் விரும்பவில்லை.
எதுவென்றாலும் திருமணத்தின் பின் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் இருந்து விட்டாள்.

அவனுக்கும் இந்த திருமணத்தில் அத்தனை விருப்பம் இருக்கவில்லை.
ஆகையால்,
அவளின் தீர்மானம் அவனுக்கும் வசதியாய்ப் போய்விட அமைதியாக இருந்து விட்டிருந்தான்,
அவனும்…!

மாங்கல்யத்தை கழுத்தில் ஏற்கும் நொடியில் அவளுக்கு ஒன்றே ஒன்று புரிந்தது,
விரைவில் அவனை நேசித்து விடுவோம் என்று..!

கடமைக்கு என்று அவன் அவளை மணம் முடிக்க முன்வந்தாலும் தன்னை நம்பி வந்தவளை பாரத்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறை அவனில் கொட்டிக் கிடந்ததை அவள் அறிந்து கொண்டாள்,
விரைவாகவே.

திருமணத்திற்கு முன்பு கூட அவன் செயல்களில் அந்த அக்கறையை கண்டிருந்தாலும்,
உணர்ந்து கொண்டது இன்று தான்.

அதிலும்,
அந்த வாகனம் அவர்கள் வண்டியை மோத வரும் கதவை திறந்து அவளை பாதுகாப்பாக வெளியே தள்ளி விட்டிருந்தானே.

அந்த விழிகளில் தெரிந்த பரிதவிப்பு….!

அந்த கண்களில் நிச்சயம் காதல் இருக்கவில்லை.
ஆனால்,
அக்கறை இருந்தது..
தன்னை நம்பி வந்தவளை காப்பாற்ற வேண்டும் என்ற பதட்டம் இருந்தது..
அவளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற பயம் இருந்தது..

அவன் விழிமொழியை ஆழ்ந்து படித்திருந்தாள்,
பெண்ணவள்.

அவனைப் பற்றி யோசிக்காமல் தன்னை பற்றி அவன் யோசித்தது இன்னும் அவளுக்கு அதிர்வு தான்.

கட்டிய கடமைக்காக அவன் காட்டிய அக்கறையே அவளை  மொத்தமாய் வீழ்த்தி விட்டிருந்தது.

கலங்கிய விழிகளை மெல்ல துடைத்துக் கொண்டவளுக்கு
அவனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற எண்ணம் தான்.

ஆனால்,
நினைப்பது எல்லாம் நடந்து விடுமா..?

படபடவென்று பதட்டமாய் இருந்தது,
பெண்ணுக்கு.

ஆறுதலுக்காக ஒரு தோளை அவள் மனம் தேடியது,
அந்நிமிடம்.

தலையை கவிழ்த்துக் கொண்டாள் அவள்,
மகாலக்ஷ்மி..!

தலையை கவிழ்ந்து கொண்டு அவள் இருக்க  பரிசோதித்து விட்டு வெளியே வந்தனர்,
வைத்தியர்கள்..!

மறுநாள் காலை.

தன் திருமணவாழ்வு இத்தனை சீக்கிரம் முடிவுக்கு வந்து விடும் என்று அவள் எதிர்ப்பார்க்கவில்லை,
சற்றும்.

அவளால் தானே,
எல்லாம்..!

அவளைக் காப்பாற்றப் போய் தானே..
அவன் இப்போது…!

அதற்கு மேல் நினைக்க முடியவில்லை,
அவளால்.

தன் அறையில் ஒரு மூலையில் அமர்ந்து முழங்காலில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள்,
மகா..!

இழப்புக்கள் வலித்திடும் என்று அவளுக்கு தெரியும்..
ஆனால்,
இத்தனை வலித்திடும் என்று அவள் நினைக்கவில்லையே.

தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலியை தடவிப்பார்த்தாள்.

கழட்டச் சொல்லி அனைவரும் வற்புறுத்தியும் அதை அடியோடு மறுத்து விட்டிருந்தாள்,
பெண்..!

காரணம் என்னவென்று கேட்டால்…?
நிச்சயம் பதில் சொல்லமாட்டாள் அவள்.

இனி எதுவும் இல்லை எனத் தோன்றிற்று அவளுக்கு.

ஆனால்,
இயற்றியவன் இன்னோரு வாய்ப்பளிக்க காத்திருக்கையில்
அதை மாற்றிட முடியுமா…?
அவளால்…!

              ●●●●●●

*ஒரு வருடத்திற்கு பிறகு…*

கோயிலில் மனமுருக வேண்டிக் கொண்டு குளக்கட்டில் அமர்ந்து கொண்டார்,
சாரதா.

வழமையாக சாமி தரிசனம் முடிந்தவுடன் வீட்டுக்கு கிளம்புவர் தான்.
இன்று மனம் சற்று அமைதியின்றி இருக்கவே கோயிலில் தரிக்க ஆசைப்பட்டார்,
சிறிது நேரம்.

மனம் முழுக்க மகளின் சிந்தனையே.

அவர் பிள்ளை என்று சத்தியம் செய்தாலும் யாரும் நம்பமாட்டார்கள்.
அவருக்கு அப்படியே தலைகீழான குணம்.

அவளை மாற்ற முயன்று அவர் சோர்ந்து போனது தான்,
மிச்சம்.

எத்தனை முயன்றும்,
பலனில்லையே.
மனமோ சிந்தனையில் லயித்துக் கிடக்க அவரின் நிலை புரிந்தவராய் என்றும் போல் இன்றும் புன்னகை முகத்துடனே அவர் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்,
பார்வதி..!

சாரதாவின் நெருங்கிய தோழிகளில் ஒருத்தர் அவர்.

சாரதாவும் தோழியை கண்டதும் சிந்தினார்,
மென்மையாக புன்னகையொன்றை.

“சாரதா..”

“ம்ம்ம்ம்ம்..”

“ரொம்ப பலமான யோசன போல..”

“இருக்காதா பின்ன..
மண்ட வெடிச்சுரும் போல இருக்கு..”

“யேன் மகா யென்ன பண்ணா..?”
காரணம் அறிந்தவராய் கேட்க விரக்தி புன்னகையொன்று அவரின் இதழ்கடையோரம்.

“யென்ன பண்ணலனு கேளு..”

“சரிப்பா..யென்னாச்சு..”

“முடிலடி..அவள எப்டி வழிக்கு கொண்டு வரதுன்னே தெரில..ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறா..
இருபத்தஞ்சு வயசு பொண்ணு மாதிரியா நடந்துக்குறா..
அவள சமாளிக்கிறதுக்குள்ளேயே போதும்னு ஆயிருது..”

“யேன் யேதாவது சண்ட போட்டாளா..?”

“அப்டி போட்டா கூட பரவால…இது அமுக்கினி மாதிரி அமைதியா இருக்கா..யார் கூடவும் பெருசா பேசவும் மாட்டேங்குறா..
அவ மனசுல யென்ன இருக்குன்னும் புரியல..”
இயலாமையோடு வெளிப்பட்டது,
சாரதாவின் குரல்.

பார்வதிக்கும் தோழியின் நிலை புரியத்தான் செய்தது.
அதிலும் மகாலக்ஷ்மியின் குணம் பற்றி அவர் நன்கு அறிந்து இருந்ததால் எதையும் குற்றம் சொல்ல இயலவில்லை,
கொஞ்சமும்.

“சரி..இன்னோரு கல்யாணம் பத்தி..”

“ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்…அத பத்தி பேசினாலே ரகள தான்..
நேத்து கூட அண்ணி யாரோ பையன் போடோ காட்டுனதுக்கு ரொம்ப கோபமா திட்டிட்டா..”

“ஏய்…என்ன சொல்ற அவங்களயா…”

“ம்ம்ம்..போன் பேசுற மாதிரி பேசி கிழி கிழின்னு கிழிச்சிட்டா..”

ஏனோ,
பட்டென்று சிரித்து விட்டார் பார்வதி..!

பயந்து நடுங்கும் தன் தோழி எங்கே..?
அதிரடியாய் இருக்கும் அவள் மகள் எங்கே..?

“அதுக்கப்றம்..”

“அப்றம் யென்ன அப்பா மக சண்ட தான்..”
என்று அலுத்துக் கொண்டார்,
நிஜமாலும்.

“பொதுவா பொண்ணுங்க அப்பாவோட ரொம்ப பாசமா இருப்பாங்கன்னு சொல்லுவாங்க..மகா அப்டி கெடயாதுல..”

“அது நெஜந்தான்..
அவ மட்டும் எப்டி தான் இவ்ளோ வித்தியாசமா வளந்துருக்காளோ தெரியல..
நா யெல்லாரயும் ஒரே மாதிரி தான நடத்துனேன்..பாரபட்சம் காட்டுனது கெடயாதுல பார்வதி..
யேன் இவ மட்டும் இப்டி..?”
மகள் தன் வாழ்வை பாழாக்கிக் கொள்வதில் ஓய்ந்து போனவர்..
அவளின் இந்த நடத்தைகளுக்கு காரணம் தானாய் இருக்குமோ என்று அடிக்கடி யோசிப்பது உண்டு.

அதை,
அவ்வப்போது தோழியிடம் வெளிப்படுத்துவதும் உண்மை தான்.

“அப்டிலாம் இல்ல சாரதா…எல்லா பசங்களும் ஒரே மாதிரி இருக்குறது கெடயாதுல..
மகாவோட கேரக்டர் அப்டி..
நீ அதுக்கு யென்ன பண்ண முடியும்..”
தோழியின் மனதை மாற்ற கவனமாகவே வார்த்தைகளை கையாண்டார்,
பார்வதி…!

ஆனாலும் அடங்க மறுக்கத் தான் செய்தது,
சாரதாவின் மனம்.

“ஆன யெனக்கு ஒன்னு புரில பார்வதி..அவ யேன் திடீர்னு இப்டி மாறிப் போனான்னு..”

“………”

“சின்ன வயசுல ரொம்ப அமைதியா இருப்பா..
யாராவது யேதாவது சொன்னாவே பட்டுன்னு அழுதுருவா..”

“……….”

“ஆனா அதுக்கப்றம்..
அவ அழுதத நா பாத்ததே கெடயாது..
யார் முன்னாடியும் அழுறதும் இல்ல..
யெதயும் வெளிப்படயா சொல்றதும் கெடயாது..
அவ மனச புரிஞ்சிக்கவே முடில பார்வதி..
ரொம்ப அழுத்தமா மாறிப் போய்ட்டா..”
மகளின் மாற்றம் மனதை வாட்ட பெருமூச்சொன்றுடனேயே சொல்லி முடித்தார்,
சாரதா.

சிறியதொரு மௌனம்…
மீண்டும் அவரே தான் துவங்கினார்,
பேச்சை.

“யென்ன பண்றதுன்னே புரில..
அவள எப்டி மாத்துரதுன்னே புரில..
சின்னபுள்ளத்தனமா வேற இருக்கா..
பயமா இருக்கு பார்வதி..
அவ வாழ்க்க இப்டியே போய்டுமோனு..”
அவள் வாழ்க்கை பற்றிய பரிதவிப்பு அளவுக்கு மீறியே கொட்டிக் கிடந்தது,
அவர் குரலில்.

பார்வதிக்கும் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

மகா…!
மகாலக்ஷ்மி…!
பார்வதிக்கு அவளை பிடிக்கும்.
அவளை பற்றி தெரிந்து கொண்டதாலோ என்னவோ அவளின் சகோதரர்களை விட அவள் மீது பிரியம் அதிகம் தான்,
கொஞ்சம்.

அதனாலோ என்னவோ,
தோழி அவளை பற்றி சொல்லி மனம் வருந்தும் போதெல்லாம் எதையும் சொல்ல முடிவதில்லை,
அவரால்.

“விடு சாரதா..காலம் வரும் போது எல்லாம் சரியாய்டும்..”

“ம்ம்ம்ம்..அந்த நம்பிக்க மட்டும் மனசுல இருக்கு..”
என்றார்,
மகளை பற்றி நினைத்த படியே..!

          ●●●●●●

“மகாஆஆஆஆஆஆ”

“……….”

“மகாலக்ஷ்ஷ்ஷ்மி..”

“சரிடி..கத்தாத விஷயத்த சொல்லு..”

“நீ யென்னதான் நெனச்சுகிட்டு இருக்க மனசுல..”

“யேன் உனக்கு தெரியாதா..?”

“கண்ணடிக்காத..கொன்னுருவேன்..
யெதுக்கு இப்ப உங்கத்த பாத்த மாப்ளய வேணான்னு சொன்ன..”

“அதுஉஉஉஉஉஉ”

“இழுக்காத..பட்டுன்னு சொல்லு..”

“அதுஉஉஉஉஉஉஉ”

“மகாஆ”

“சரி..சரி..”

“……..”

“எனக்கு ஒரு கடம இருக்கு திவ்ஸ்..அத முடிக்கிற வர யென்னால வேற யெத பத்தியும் யோசிக்க முடியாது..”
என்றும் போல் இன்றும் தோழியின் பேச்சில் கோபம் உச்சத்தை தொட்டது,
திவ்யாவுக்கு.

“யேன்டி இப்டி இருக்க..”

“யெப்டி…”

“நடிக்காதடி..
எரிச்சலா இருக்கு..
நீ பண்றத பாக்கும் போது..”

“நன்றிய மறக்க முடியாது திவ்ஸ்..”
என்றவள் அத்தோடு முடித்துக் கொள்வது போல வேறு பேச்சுக்கு தாவ திவ்யாவினால் தான் வர முடியவில்லை,
எந்த முடிவுக்கும்.

தோழியின் நடத்தை புதிராய் தெரிந்தது,
அவளுக்கு.
ஆனால்,
காரணம் தான் என்னவென்று தெரியவில்லை.
காரணம் தெரிய வரும் போது….?

அந்த பூங்காவில் இருந்து கிளம்பி வெளியே வந்து ஒற்றையடிப் பாதை வழியே நடந்து கொண்டிருந்தனர்,
இருவரும்.

பொதுவான கதைகளை அலசியபடி தொடர்ந்தது,
அவர்களின் நடை.

தன்னை யாரோ பின்தொடர்வது போல் தோன்றியது,
மகாவுக்கு.

சட்டென திரும்பிப் பார்த்தாள்,
பின்னே…

யாரும் இருக்கவில்லை.
மீண்டும் கதையில் ஆழ்ந்திட அந்த உள்ளுணர்வு மட்டும் அகன்றபாடில்லை.

மற்றுமொரு முறை திரும்பி பார்த்தாள்.
அப்போதும் யாரும் சிக்கவில்லை,
பார்வை வீச்சில்.

தோழியின் முகபாவமும் செயல்களும் அத்தனை உவப்பாய் படவில்லை,
திவ்யாவுக்கு.

“மகா..”

“ம்ம்ம்ம்..”

“யென்னாச்சு..”

“யாரோ போலோ பண்ற மாதிரி இருக்குடி..”

ஆனால்,
திவ்யாவுக்கு அப்படி ஒரு எண்ணம் தோன்றவில்லையே,
கொஞ்சமும்.

இப்பொழுது திரும்பிப் பார்ப்பது என்னவோ திவ்யாவின் முறை தான்.

“யாரயும் காணோமே”

“அதான் திவ்ஸ்..”
கலக்கத்துடனேயே நகர்ந்தாள்,
மகா…!

இத்தனை நேரம் அவளுக்கு தெரியாமல் அவளை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த நபரும் அவள் சந்தேகதமாய் திரும்பிப் பார்ப்பதை கண்டு சுதாரித்துக் கொண்டிருந்தான்,
சிக்காமல்.

கடந்து சென்றது மகா தான் என்று உறுதி செய்தவன் அடுத்த நிமிடமே அழைப்பை எடுத்து இருந்தான்,
தன் தோழனுக்கு.

“மச்சீ…”

“……….”

“கன்பார்ம் அந்த பொண்ணு தான்டா…”

“………”

“ஆமாடா..இப்போ தான் பாத்தேன்..கன்பார்ம்..”

“………”

“சரி..நா அப்றம் பேசறேன்..”

அழைப்பை துண்டித்து இருந்தான்,
பிரகாஷ்.

முகத்திலோ அத்தனை மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது.

இனி,
காய்களை நகர்த்தி விட்டால் போதுமென தோன்றிற்று.

வெளிநாட்டில் இருந்து இன்று தான் தாயகம் திரும்பியிருக்க வீடு செல்வதற்கு முன்பாகவே மகாவை காண்போம் என்பது அவன் எண்ணத்தில் சிறிதளவும் உதிக்காத விடயமொன்றே.

அவளை இங்கு கண்டது,
அதிர்ச்சி தான்.

அதனால் தான்,
களைப்பை மீறி…
அது அவள் என்று உறுதி செய்து கொள்ள பின்தொடர்ந்து வெற்றியும் கண்டிருந்தான்.

அவன் எண்ணம் ஒன்றாய் இருக்க…
விதி வேறொன்றை நினைத்திருப்பது அவன் அறியாதது..!

நிறைவான மகிழ்ச்சியுடனேயே வீடு நோக்கி சென்றான்,
பிரகாஷ்…!

தொடரும்.

🖋️அதி…!
2023.04.15…

Advertisement