Advertisement

மௌனமாய் எரிகிறேன் 22

சேனாவின் இரவு அந்த ஊஞ்சலில் கழிந்துவிட, காலை சூரியனின் வரவில் தான் எழுந்து அறைக்குள் வந்தாள் அவள். அந்த அறையின் நடுவில் இருந்த மெத்தைக்கு அருகில் தரையில் கைகளை தலைக்கு தலையணையாக வைத்துக் கொண்டு உறங்கி கொண்டிருந்தான் சேஷன்.

“இவன் ரூம்க்கு போகவே இல்லையா” என்று பெருமூச்சை வெளியேற்றி, அந்த அறையில் இருந்து வெளியேறினாள் அவள். சேஷாவின் அறையில் குளித்து தயாராகி அவள் கீழே இறங்கி வர, அவளைக் கண்டதும் காஃபி வைத்துக் கொடுத்தார் சமையல்காரர்.

கையில் வாங்கிக்கொண்டு இயல்பாக வீட்டை விட்டு வெளியேறி பின்பக்கம் இருந்த தோட்டத்தை அடைந்தாள் சேனா. கையில் இருந்த காஃபியை மெல்ல பருகியபடி, அந்த தோட்டத்தில் இருந்த சிமெண்ட் இருக்கையில் அவள் அமர்ந்துவிட, எதிரே இருந்த மல்லிகைப்பந்தலும், முல்லைக்கொடியும் மனதிற்கு நிம்மதியைக் கொடுக்கவில்லை.

சேஷனின் இந்த பிடிவாதம் புதிதாக இருந்தது அவளுக்கு. விட்டு விட்டான் என்று தான் நினைத்திருந்தாள் இதுநாள்வரை. எப்படியோ ஏற்றுக்கொண்டு ஒருவழியாக அவள் மீண்டு வருகையில், விடமாட்டேன் என்று அவன் நிற்பதை ஏற்க முடியவில்லை.

இந்த நிமிடம் வரை சேஷனின் மீது காதல் என்றெல்லாம் பெரிதாக எதுவும் பொங்கி பெருகி விடவில்லை பெண்ணுக்கு. ஏன் கணவன் என்ற இயல்பான ஒரு உரிமையுணர்வு கூட இல்லை அவளிடம். அப்படி ஏதும் இருந்திருந்தால், வார்த்தைக்கு வார்த்தை அவன் ‘அம்மு’ என்றதை நிச்சயம் தாங்கியிருக்க மாட்டாள்.

ஆனால், அவனது அந்த அழைப்பும் உனக்கானது என்று அவன் உணர்த்தியிருக்க, உண்மைக்கும் குழம்பிப் போயிருந்தாள் அவள். இதுவரை அவன் நடந்து கொண்ட முறைக்கும், அவன் அழைப்புக்கும் சம்பந்தமே இல்லையே.

அவனின் இந்த திடீர் உரிமை வேறு. ‘இத்தனை நாட்கள் நான் இவன் மனைவி என்பது தெரியாதா இவனுக்கு’ என்று சொல்ல முடியாத ஒரு எரிச்சல் எழுந்தது பெண்ணுக்கு. அவளின் கேள்விகளுக்கெல்லாம் பதில் வேண்டுமெனில் சேஷனைத் தான் கேட்க வேண்டும். ஆனால், அதற்கும் விருப்பமில்லாமல் தனிமையில் வந்து அமர்ந்து கொண்டிருந்தாள் சேனா.

ஆனால், அவளை அப்படி விடமாட்டேன் என்று உறுதியெடுத்துக் கொண்டவன் போல், அடுத்த சில நிமிடங்களில் அவள் அருகில் வந்து அமர்ந்தான் சேஷன். சேனா சிந்தனை கலைந்தவளாக திரும்பி பார்க்க, அவளைப் பார்த்து அழகாக சிரித்தான் சேஷன்.

அந்த சிரிப்பு தேவாவை இன்னும் எரிச்சல்படுத்த, “நான் வீட்டுக்கு கிளம்புறேன். ஸ்கந்தா தேடுவான்.” என்றாள் அறிவிப்பாக.

“இதுவும் வீடுதான். நானும்கூட உன்னைத் தேடுறேன் சேனா” என்ற சேஷாவை வெறுமையாக பார்த்தாள் பெண். அவளின் அமைதியில், “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி சண்டை போடுவோம் சேனா? உன் அத்தம்மா பையன் நான். எனக்கு நிம்மதியை கொடுக்ககூடாதா?” என்று பாவமாக கேட்டான் சேஷன்.

அவன் பேச்சில் தேவா உக்கிரமாக, “எல்லாத்துக்கும் இப்படி முறைச்சுட்டே நிற்காத. என்கிட்டே சண்டை போட்டாலும் பரவாயில்ல. ரெண்டு பேரும் சமாதானம் ஆகிடுவோம்” என்று மீண்டும் பேசினான் சேஷன்.

“நமக்கு நேத்துதான் கல்யாணம் ஆச்சா?” என்று பெண் வினவ,

“இல்லைதான். ஆனா, இன்னும் எத்தனை நாளைக்கு இதையே பேசுவோம்?”

“நீங்க செஞ்ச எதுவும் என் உயிர் இருக்கிற வரைக்கும் மறக்காதே எனக்கு. கட்டாயத்துல நடந்த கல்யாணமா இருந்தாலும் கூட, புருஷன்னு நினைச்சிருக்கேன். மாமா பாவம் அவங்களுக்கு டைம் கொடுக்கலாம்ன்னு யோசிச்சு ஒதுங்கி போயிருக்கேன்”

“ஆனா, எதுக்கும் மதிப்பு கொடுக்கல நீங்க. இன்னிக்கு திடீர்னு வந்து பொண்டாட்டியா இருன்னு சொன்னா, என்ன மீன் பண்றிங்க? என்ன செய்யணும் நான்? உங்க பொண்டாட்டியா இருந்து உங்களுக்கு குழந்தை பெத்துக் கொடுக்கணுமா?” என்று பட்டென சேனா கேட்டுவிட,

“அப்படி நான் கேட்டாலும் தப்பில்லன்னு நினைக்கிறேன். பிடிச்சாலும், பிடிக்காம போனாலும் இந்த நிமிஷம் வரைக்கும் நீ என் மனைவியாதான் இருக்க. உன்கிட்ட நான் கேட்கிறது தப்பா என்ன?”

“ஹ்ஹ்ம்… எப்படியெல்லாம் நியாயம் சொல்றிங்க நீங்க?”

“ஏன் பதில் சொல்ல முடியலையா உன்னால?”

“பர்ஸ்ட் நைட் அன்னைக்கு அம்முன்னு எவளோ ஒருத்தி பேரை சொன்னிங்களே. அந்த நிமிஷமே மனசார உங்களை தூக்கி போட்டுட்டேன். இந்த நாலு வருஷத்துல ஒருநாளும் உங்களை என் புருஷனா நான் நினைச்சதே இல்ல”

“உங்களை பார்க்கும்போதெல்லாம் எனக்கு நீங்க அடுத்தவளுக்கு சொந்தமானவர்ன்னு தான் நினைக்க முடியுது. நீங்க நினைக்கிற மாதிரி ஒரு வாழ்க்கையை என்னோட உங்களால வாழ முடியாது. சோ, இந்த உளறலை எல்லாம் நிறுத்திக்கோங்க” என்றாள் சேனா.

அவளின் நான்கு வருட வலி அவளை பேசச் செய்தது. ஆனால், எதிரில் இருப்பவன் அவளின் இந்த வாதங்களை ஏற்பதாக இல்லையே.

“காஃபி ஆறிடுச்சா? வேற கொண்டு வரட்டுமா? என்றான் சாதாரணமாக.

சேனா வந்த கோபத்திற்கு கையில் இருந்த காஃபியை அவன்மீது ஊற்றிவிடுவோமா என்று யோசிக்க, “யோசிக்காம ஊத்திடு” என்றான் சேஷன்.

“சூடா இருந்திருந்தா நிச்சயமா ஊத்தியிருப்பேன். இப்போ வேஸ்ட்.” என்றவள் கையிலிருந்த காஃபியை அவன் கண்முன்னே தலைகீழாக தரையில் கவிழ்த்துக் காட்டினாள்.

“என் வாழ்க்கையும் இப்படித்தான் வேஸ்ட் ஆகிடுச்சு” என்ற குத்தலோடு அவள் எழுந்து கொள்ள, அவளை இழுத்து மீண்டும் அருகில் அமர்த்திக் கொண்டான் சேஷன்.

“உனக்கு நான் சொல்ற எதுவுமே புரியலையா சேஷா? என்று சேனா கத்திவிட,

“சாரி அம்மு.” என்று அவள் காதருகில் முணுமுணுத்தான் அவன்.

அவனது அம்மு அவளை ஆவேசமாக்கிட, “விடுடா என்னை” என்று அவன் கையை உதறித் தள்ளினாள் தேவசேனா.

சேஷன் சற்று பின்னால் நகர்ந்தாலும், அவள் கையை இன்னும் விடாமல் பற்றியிருக்க, “என் கையை விட்டுடு சேஷா” என்றவளை கண்டுகொள்ளாமல், தன் மறுகையை அவள் தலைமீது வைத்தான் சேஷன்.

சேனா அதிர்ந்து அவன் கண்களை சந்திக்க, “என்னோட அம்மு எப்பவும் நீ மட்டும்தான். உன்னைத்தவிர வேற யாரையும் நான் அப்படி கூப்பிட்டது இல்ல. கூப்பிடணும்னு நினைச்சது கூட இல்லடா” என்றவன் குரலில் அவள் மீதான பாசம் மொத்தமாக வெளிப்பட, நான்காண்டுகளுக்கு முந்தைய சேஷன் ஒருநிமிடம் நினைவுக்கு வந்தான்.

ஆனால், அத்தனையும் ஒரே நிமிடம் தான். அடுத்தநிமிடம் இன்னும் ஆக்ரோஷமாக அவன் கையைத் தட்டிவிட்டாள் சேனா.

சேஷன், “சேனா” என்று அவளது மற்றொரு கையையும் பிடிக்க, “நான் உன் அம்மு இல்ல.” என்றாள் சேனா.

“என்னதான் வேணும் சேனா உனக்கு” என்று சேஷன் அதட்ட,

“இந்த அம்முவை நினைச்சு எத்தனைநாள் நான் கலங்கி இருக்கேன். உனக்கு தெரியும் இல்ல… அப்போ எல்லாம் வாயே திறக்காதவன் இப்போ ஏன் பேசற?” என்று சேனா கேட்டுவிட, சற்றே தயங்கி பின் வாயைத் திறந்தான் சேஷா.

“என்னால உன்னை ஃபேஸ் பண்ண முடியல சேனா. அந்த நேரம் என்னால அமிர்தாவை தவிர வேறெதையும் யோசிக்க முடியல. நீ மனைவின்னு என்னை நெருங்குறதை நான் விரும்பல. அதுக்காக எதையோ செய்ய நினைச்சு தான் உன்னை நெருங்கினேன். என்னையும் அறியாம என் வாய் அம்முன்னு சொன்னதை நீ தவறா புரிஞ்சுகிட்டு நீ விலகிப் போகவும், அப்படியே விட்டுட்டேன்.” என்றவன் தலைகுனிய, அவன் பிடியில் இருந்த தன் கையை விலக்கிக்கொண்டு எழுந்துவிட்டாள் சேனா.

“சேனா” என்று மீண்டும் சேஷன் அழைக்க, அவனைத் திரும்பியும் பார்க்காமல் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் அவள்.

இத்தனை துயரத்திலும் கண்களில் இருந்து ஒருதுளி நீர் கூட தரையில் விழுந்து விடாதபடி தன்னை அடக்கிக்கொண்டு அவள் சென்றுவிட, செல்லும் அவளின் வேதனையை நினைத்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான் சேஷன்.

அவளின் அத்தனை வலிகளுக்கும், வேதனைகளுக்கும் ஒரே காரணம் சேஷன் மட்டும்தானே. என்ன சொல்லி அவன் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள முடியும்.

தன்னுடைய மனப்போராட்டத்திற்காக தேவசேனாவை பலியிட்டு விட்டது காலம் கடந்தபின்பே புரிந்தது அவனுக்கு. எப்போதும் சிரித்துக்கொண்டும், விளையாடிக் கொண்டும், தனது அத்தம்மாவை கிண்டலடித்துக் கொண்டும் அத்தனை இலகுவாக வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தவள் அவள்.

அவளை எந்த நிலைக்கு தள்ளியிருக்கிறோம்? என்று அவன் மனமே, அவனை நோக்கி சாட்டையை சுழற்ற பதிலற்ற பல கேள்விகளுடன் வெகுநேரம் அமர்ந்திருந்தான் அவன்.

வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கவும், அவன் மனதைப் போலவே உடலும் தகிக்க தொடங்க, தாள முடியாமல் அங்கிருந்து எழுந்து தனது அறையை நோக்கி விரைந்தான் சேஷன்.

அவன் அறைக்குள் நுழையும் நிமிடம் மீண்டும் தேவா நினைவுவர, அவள் பாட்டியின் அறையை நோக்கி நடந்தான் சேஷன்.

அங்கு சேனா தன்னை மறந்த நிலையில் தரையில் விழுந்து கிடக்க, அவள் மூக்கிலிருந்து ரத்தம் மெல்ல கோடாக வடிந்து கொண்டிருந்தது. சேஷனின் மனம் விபரீதத்தை உணர்ந்து விரைந்து அவளை நெருங்கியது.

“அம்மு… அம்மு” என்று அவளை அள்ளி மடியில் கிடத்தி, அவள் கன்னத்தை சேஷன் தட்டிக் கொண்டிருக்க, ம்ஹூம்… எந்த எதிரொலியும் இல்லை அவன் மனைவியிடம்.

“அம்மு… கண்ணை திறடி” என்று குற்றவுணர்ச்சியிலும், இழந்து விடுவோமோ என்ற பயத்திலும் கதறி இருந்தான் அவன்.

“அம்மு…” என்று அவன் வாய் ஓயாமல் உச்சரித்துக் கொண்டிருக்க, முழுதாக ஐந்து நிமிடங்களை வீணாக்கிய பின்னரே சுயம் உணர்ந்து சேனாவை கையில் தூக்கிக்கொண்டு எழுந்தான் சேஷன்.

அரைமணி நேரத்தில் அவளை அருகில் இருந்த ஒரு மருத்துவமனையில் அனுமதித்தவன் நிவாஸை அலைபேசியில் அழைக்க, அந்த நேரம் அலுவலகத்தில் இருந்தான் நிவாஸ். சேஷன் விஷயத்தை கூறவும், தயங்காமல் அவன் சென்று நின்றது மலர்விழியிடம் தான்.

அவளிடம் அவன் விவரத்தை சொல்ல, பதறியவளாக நிவாஸுடன் கிளம்பிவிட்டாள் அவள். அவர்களுக்கு இடையே இருந்த ஊடல்கள் அத்தனையும் அந்த சமயம் மறந்து போனது அவளுக்கு.

மருத்துவமனையில் தனித்து விடப்பட்டவனாக அமர்ந்திருந்த சேஷனின் உள்ளம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக துடித்துக் கொண்டிருக்க, யாரையும் நிமிர்ந்து பார்க்கக்கூட விரும்பாமல் கைகளால் முகத்தை மூடிக் கொண்டிருந்தான் அவன்.

அவன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகளை அவன் கைகள் தாங்கி கொண்டிருக்க, நிவாஸ் அப்போதுதான் வந்தவன், நண்பனின் அந்த நிலையைக் காண முடியாமல் வேகமாக அவனை நெருங்கினான். அவன் சேஷனின் தோள் தொடவும், நிமிர்ந்து பார்த்த சேஷனின் கண்களில் இருந்த கண்ணீர்த்தடத்தை காண முடியாமல், “சேஷா” என்று நண்பனை அணைத்து கொண்டான் நிவாஸ்.

அவன் அணைப்பில், “அவளை ஒரேடியா கொன்னுட்டேன் போல நிவா…” என்ற சேஷன் கதறிவிட, அருகில் நின்றிருந்த மலர்விழிக்கு பதறிவிட்டது.

சேஷனின் கண்ணீரே அதிர்ச்சி என்றால், அவன் வார்த்தைகளை கேட்டவளுக்கு தலை சுற்றாத குறைதான். தேவாவுக்கு என்ன என்பதே இன்னும் முழுதாக தெரியாது அவளுக்கு. அப்படியிருக்க, சேஷனின் இந்த வார்த்தைகளை கேட்டு நடுங்கிப் போயிருந்தாள் அவள்.

ஆனால், நடுக்கம் மெல்ல கோபமாக உருவெடுக்க, “என்ன பண்ணீங்க அவளை?” என்று சேஷனை பார்த்து கேட்டாள் மலர்.

சேஷன் அவள் பேச்சை கவனியாமல் அழுதபடியே இருக்க, “அப்புறம் பேசிக்கலாம் மலர்.” என்று அவளை அமைதிப்படுத்த முயன்றான் நிவாஸ்.

அவனது ஆறுதல் அலட்சியமாக தோன்றிவிட, “என்ன செஞ்சீங்க அவளை” என்று சேஷனின் தோளில் கோபத்துடன் அவள் தட்டிவிட, “ஏய்” என்று சேஷனை விலக்கி எழுந்துவிட்டான் நிவாஸ்.

அவன் கோபத்தில் பயந்தவளாக ஓரடி பின்னால் நகர்ந்தாலும், “என்ன ஆச்சு தேவாவுக்கு?” என்று அழுத்தமாக வினவினாள் மலர்விழி.

நிவாஸுக்கு அவளை பார்க்கவும் பாவமாக இருக்க, “ப்ளீஸ் மலர். அவனுக்கும் எதுவும் தெரியாது… கொஞ்சம் அமைதியா இரு” என்று அவளை அமைதிப்படுத்த முயன்றான் நிவாஸ்.

“எப்படி என்னை அமைதியா இருக்க சொல்ற நிவாஸ். உள்ளே இருக்கறது என்னோட பிரெண்ட். இவர் மட்டும்தான் அவளோட இருந்திருக்கார். அவளுக்கு என்னாச்சுன்னு எனக்கு தெரியணும். அவளுக்கு பண்ணதெல்லாம் போதாதுன்னு அவளை கொல்லவும் துணிஞ்சுட்டாரா இவர்” என்று இருக்குமிடம் மறந்து மலர் கத்த,

“ஒருமுறை சொன்னா புரியாதா உனக்கு” என்று நிவாஸ் கையுயர்த்த,

“நிவாஸ்” என்று அவனை அதட்டினான் சேஷன். அவன் குரலில் அடங்கியவனாக நிவாஸ் அமைதியாக நின்றுவிட, “தேவாவுக்கு என்ன ஆச்சு?” என்று இம்முறை நேராகவே சேஷனிடம் கேட்டு நின்றாள் மலர்.

“எனக்கும் எதுவும் தெரியல மலர். நான் பார்க்கும்போது மயக்கமா இருந்தா. அதோட மூக்குல இருந்தும் ரத்தம் வடிஞ்சு இருந்தது. இங்கே கொண்டு வந்து சேர்த்தேன்.” என்று அவன் அறிந்த வகையில் சேஷன் விளக்கம் கொடுக்க, ஓய்ந்து போனவளாக தரையில் விழுந்தாள் மலர்.

“மலர்” என்று பதறியவனாக நிவாஸ் அவளைத் தாங்கி பிடிக்க, கண்களை இருட்டுவது போல் உணர்ந்தாள் மலர். சேஷன் இருக்கையில் இருந்து எழுந்து, அவளை அந்த நீள இருக்கையில் அமர வைக்க நிவாஸ் வேகமாக சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.

நடுங்கும் கரங்களால் தண்ணீரை கையில் வாங்கி கொண்டாள் மலர். அவள் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிய தொடங்க, ஒருவாய் தண்ணீரை அருந்தியவள் அதை விழுங்கக்கூட முடியாமல் கேவி அழுதாள். சிறுபிள்ளையாக இதழ் பிதுக்கி அவள் அழ, “மலர்…” என்று அவள் அருகில் நிவாஸ் அமர, அவன் தோள் சாய்ந்தவள் கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டிருந்தாள்.

“மலர்… ஒன்னும் இருக்காது. ப்ளீஸ் அழாம இரு. மேடம்க்கு சரியாகிடும்.” என்று நிவாஸ் அவளை தேற்ற,

“சரியாகாது…” என்று மறுப்பாக தலையசைத்தாள் மலர். அவள் கண்களின் கண்ணீர் இன்னும் குறையாமல் இருக்க, அவளிடம் சேஷன் விசாரிக்க நினைக்கும்போதே மருத்துவர் அழைப்பதாக சொல்லிச் சென்றார் செவிலியர்.

வேகமாக மூவரும் மருத்துவரின் அறையை அடைய, “அவங்களுக்கு ஹைப்பர் பிளட் பிரஷர் இருக்கறது ஏற்கனவே தெரியுமா உங்களுக்கு?” என்றார் அவர்.

சேஷன் மறுப்பாக தலையசைக்கும்போதே, “தெரியும் டாக்டர். அவ கொஞ்சநாளா ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்தா.. முன்னாடியும் சில சமயம் மயங்கி விழுந்திருக்கா… இதுக்காக ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு தான் இருந்தா” என்று விவரம் கூறினாள் மலர்விழி.

அவள் சிகிச்சை எடுத்து வரும் மருத்துவமனையின் விவரம் கூறியவள், அவளை கவனிக்கும் மருத்துவரையும் அலைபேசியில் அழைத்துக் கொடுத்தாள். அவளின் சிகிச்சை விவரங்களை பெற்றுக்கொண்ட மருத்துவர் தேவாவின் நிலையையும் தெளிவாக எடுத்துக் கூற, சேஷன் மொத்தமாக உடைந்து நின்றான் அந்த நிமிடங்களில்.

தேவாவுக்கு அதிகப்படியான மன அழுத்தமும், இரத்தக்கொதிப்பும் தான் வினையாக மாறிப் போயிருந்தது. அவளது மன உளைச்சல் அவளை கொஞ்சம் கொஞ்சமாக கொல்ல முயன்று கொண்டிருக்க, தனது நிலை ஓரளவு மாறுபடும் போதே அதற்கான மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள தொடங்கி இருந்தாள் அவள்.

அதையும் மீறி அவளின் அழுத்தம் அதிகரிக்கும் வேளைகளில் மாத்திரைகளின் தயவால் தன்னை நிலைப்படுத்திக் கொண்டிருந்தாள் அவள். இரண்டு நாட்களாக எந்த மாத்திரையும் எடுத்துக் கொள்ளாதது, சேஷனின் செயல்கள், இன்றைய அவனது விளக்கங்கள் அத்தனையும் சேர்ந்து அவளை இந்த நிலைக்கு தள்ளியிருந்தது.

ஏற்கனவே ஒருமுறை இதேபோல் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்திருக்க, அப்போதுதான் மலருக்கே விஷயம் தெரிய வந்தது. இப்படி மூக்கிலிருந்து ரத்தம் வழிவது அதீத ஆபத்து என்றும், மூளையில் ரத்தக்கசிவை ஏற்படுத்திவிடும் என்றும் மருத்துவர் ஏற்கனவே தெளிவாக எச்சரித்தும் இருந்தார்.

ஆனால், அத்தனையும் மீறி இதோ மீண்டும் ஒரு முறை ஆபத்தை நெருங்கியிருந்தாள் தேவசேனா. இப்போது அவளை சோதித்த மருத்துவரும் அதே ஆலோசனைகளை மீண்டும் கூறிட, அமைதியாக கேட்டுக்கொண்டு வெளியில் வந்து அமர்ந்து கொண்டனர் மூவரும்.

தேவாவுக்கு உறக்கத்திற்கான மருந்து ஏற்றப்பட்டிருக்க, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அவள்.

மலர் இதற்குமேலும் தாமதிப்பது முறையில்லை என்பதால், பல்லவிக்கு அழைத்து விஷயத்தைக் கூறிட, அரைமணி நேரத்தில் கணவன் மற்றும் கலையரசியுடன் மருத்துவமனைக்கு வந்துவிட்டாள் அவள்.

Advertisement