Advertisement

மௌனமாய் எரிகிறேன் 20

சேஷாவின் பண்ணை வீட்டின் பின்னே இருந்த அவுட் ஹவுசில் சுயநினைவின்றி கிடந்தான் ஆத்மநாதன். வாயிலும், முகத்திலும் ஆங்காங்கே ரத்தம் வடிந்து கொண்டிருக்க, உடல் முழுவதுமே அடிபட்ட காயங்கள். தன் வாழ்விலும் இப்படி ஒருநாள் வரும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டான் அவன்.

ஆனால், அதை நடத்தி முடித்திருந்தான் சேஷா. நேற்று இரவிலிருந்து கேட்பாராற்று அவ்வபோது அடியும், மீதியும் என்று சித்ரவதைகளை அனுபவித்துக் கொண்டிருந்தான் அவன். யார் தன்னை கடத்தியிருக்கிறார்கள்? எதற்காக தான் அடிபடுகிறோம்? என்று எதுவும் தெரியாமலே அடி வாங்கி கொண்டிருக்கிறான் ஆத்மா.

மகள் என்று வளர்த்தவளை பணத்திற்காக பலி கொடுத்தவன் இன்று அவன் பாவங்களுக்கு பதில்கூற முடியாமல் திணறி நின்றான்.

அவன் செத்து விடுவோமா என்று அஞ்சி நடுங்கும் அளவு அவனுக்கு நேரம் கொடுத்தான் சேஷன். மொத்தமாக தன் வாழ்வு முடிந்தது என்று ஆத்மா முடிவெடுத்த நேரம், அவன் எதிரில் பிரசன்னமானான் ஆதிசேஷன்.

“என்ன ஆத்மா அடையாளம் தெரியுதா?” என்று நிதானமாக கேட்டபடி, தனக்கான நாற்காலியில் தோரணையாக அவன் அமர்ந்துகொள்ள, அவனுக்கு எதிரே தரையில் கிடக்கும் தன் நிலையை அறவே வெறுத்தான் ஆத்மநாதன்.

ஆனால், அதற்காக எதுவும் செய்யும் வாய்ப்பையே சேஷா அவனுக்கு கொடுக்கவில்லை. கால் மேல் காலிட்டு அவன் அமர்ந்திருந்த தோரணை வேறு, ‘என்ன செய்ய இருக்கிறானோ?’ என்று பதைக்கச் செய்தது ஆத்மாவை.

அவன் அச்சத்தை வெளிப்படையாக முகத்தில் காண்பித்து அமர்ந்திருக்க, ஏனோ அவன் மீது இரக்கம் என்பதே சுரக்கவில்லை அவனுக்கு.

“என் அப்பாவை நியாபகம் இருக்கா? என் அமிர்தாவை…” என்று சேஷன் நிறுத்த,

“நீ ஆள் தெரியாம கை வைக்கிற சேஷா.” என்று அப்போதும் மிரட்டவே முயன்றான் ஆத்மா.

அமர்ந்த இடத்திலிருந்து எழுந்து அவனை நெருங்கியவன், தனது வலது காலால் அவன் முகத்தில் ஒரு உதை விட, உலகம் அப்போதுதான் சுற்றியது ஆத்மாவுக்கு.

“இன்னும் வாய் அடங்கல உனக்கு.” என்றபடி இன்னும் இரண்டு மிதி மிதித்தபின்புதான் சற்றே நிதானமானான் சேஷன்.

“அமிர்தாவை என்ன செய்த? அதை மட்டும் சொல்லு. உன்னை விட்டுடறேன்.” என்று அவன் கழுத்தில் காலை வைத்தபடி மிரட்ட,

“எனக்கு எதுவும் தெரியாது. அவ தற்கொலை…” என்று முடிக்கக்கூட இல்லை ஆத்மா…

“பொய் சொல்லாதடா…” என்று அவன் மூக்கில் தன் ஆத்திரம் தீருமட்டும் குத்தியிருந்தான் சேஷன்.

“உண்மையைச் சொல்லு. அம்ரு தற்கொலை செய்துக்கற அளவுக்கு கோழை இல்ல. நிச்சயமா நீதான் ஏதோ செய்திருக்கணும்… சொல்லுடா.” என்று அவன் கழுத்தை நெறிக்க தொடங்கிவிட்டான் சேஷன்.

‘எங்கே இறந்து விடுவானோ?’ என்ற அச்சத்தில் நிவாஸ் சேஷனைப் பிடித்திழுத்து தூர நிறுத்த,

“சாகட்டும் விடுடா.” என்று அவனை உதறித் தள்ளி, மீண்டும் ஆத்மாவின் கழுத்தை நெருக்கினான் சேஷன்.

ஆத்மா வாய் பேச முடியாமல், உறுமியபடி கையெடுத்துக் கும்பிட்டுவிட, “என் அம்ருவுக்கு என்ன பதில்? என்ன பண்ண அவளை?” என்று லேசாக இறுக்கத்தை குறைத்தபடி அவன் வினவ, ஆத்மா பதில் சொல்லும் நிலையில் இல்லை.

“டேய் அவனை பேச விடுடா…” என்று அதட்டிய நிவாஸ் சேஷனை பிடித்திழுத்து தூரமாக நிறுத்த, இருமியபடியே எழுந்து அமர்ந்தான் ஆத்மா.

“அடி வாங்கி சாகாம உண்மையை சொல்லிடு.” என்று நிவாஸும் மிரட்ட, சைகையில் அவனிடம் தண்ணீர் கேட்டான் ஆத்மா.

நிவாஸின் கண்ணசைவில் அவன் ஆட்கள் தண்ணீர் எடுத்து கொடுக்க, அவன் குடித்து முடித்த நிமிடம், “அம்ருவை என்ன செஞ்ச?” என்று மீண்டும் அவனை நெருங்கினான் சேஷன்.

“நான் எதுவும் செய்யல…” என்று பேசவே திணறியவனாக ஆத்மா பேச, “பொய்யா சொல்ற?” என்று மீண்டும் சேஷன் உதைக்க,

“நிஜமா நான் அவளை எதுவுமே செய்யல. அவ அனாதைன்னு மட்டும்தான் சொன்னேன். நான் சொல்றவனோட தான் வாழனும்… இல்ல, செத்திடுன்னு…” என்றவன் அதற்குமேல் பேச துணிவில்லாமல் அடங்க,

“சொல்லு.” என்று நின்றான் சேஷன்.

“அவ செத்துப் போவான்னு எனக்கு தெரியாது சேஷா. செத்திடுன்னு சொன்னேன் தான். அவ அப்படியே செய்வான்னு நினைக்கல. அவளை சாகடிக்கிற எண்ணமில்ல எனக்கு.” என்று அவன் முடிப்பதற்குள்,

“நாயே…” என்று மீண்டும் ஒருமுறை அவனை எட்டி உதைத்திருந்தான் சேஷன்.

“அத்தனை நல்லவனா நீ… உன்மேல தப்பில்லாத போது என்னை எதுக்காக மிரட்டணும்? சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கா? அடுத்தடுத்து கொள்ளி போடா சொன்ன இல்ல. உனக்கு கொள்ளி போட வேண்டிய அவசியமே இல்லாம செய்யுறேன்.” என்றவனை கலக்கத்துடன் பார்த்திருந்தான் ஆத்மா.

“சொல்லு. அமிர்தா தற்கொலை செஞ்சிருந்தா, நீ எதுக்காக என்னை மிரட்டணும்?” என்று சேஷன் அச்சமூட்ட,

“அமிர்தா தற்கொலை செய்திருந்தாலும், அவளை அப்படி செய்ய வச்சது நான்தானே… நீ இதை துருவ தொடங்கினா, அத்தனையும் வெளியே வந்திடுமோன்னு நினைச்சேன். அதோட அப்போ எனக்கும் அந்த மினிஸ்டருக்கும் வேற பகை ஆரம்பிச்சுடுச்சு.”

“உன்னை மொத்தமா ஒதுக்க நினைச்சு தான் மிரட்டினேன். நீயும் நான் எதிர்பார்த்தபடி விலகிட்ட.” என்றவனை கொன்றுவிடும் வேகத்தில் தான் இருந்தான் சேஷன்.

சட்டென ஆத்மாவின் கழுத்தைப் பிடித்தவன் அப்படியே அவனை சுவற்றில் தூக்கி நிறுத்த, ஆத்மாவின் முகத்தைப் பார்க்க பார்க்க, அமிர்தாதான் அவனுக்குள் நிறைந்தாள்.

அவளின் இறப்பும், அதன்பின்னான வேதனைகளும் ஒவ்வொன்றாக நினைவுவர, தன்னையறியாமல் ஆத்மாவை தரையிலிருந்து தூக்கிக் கொண்டிருந்தான்.

ஆத்மா அவன் பிடியிலிருந்து தப்பிக்க முடியாமல் அந்தரத்தில் கைகளை அசைத்து, தனது ஜீவமரண போராட்டத்தை தொடங்கிய நேரம், யாரும் எதிர்பாராதபடி அந்த வீட்டிற்குள் நுழைந்தாள் தேவசேனா.

“சேஷா…” என்று அதட்டியபடியே அவள் சேஷாவை நெருங்க, ம்ஹூம் ஆத்மாவைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை சேஷாவின் கண்களுக்கு.

அந்த நிமிடங்களில் அமிர்தாவின் மரணம் மட்டுமே அவன் மனதில் இருக்க, மொத்தமாக மிருகமாக மாறி நின்றான் அவன்.

தேவா அவன் கையை விடுவிக்க எவ்வளவோ போராடியும் முடியாமல் போக, வாழ்வில் முதல்முறையாக கலங்கி நின்றாள் அவள்.

இதற்காகவா இத்தனை போராட்டங்கள்? எது நடந்துவிட கூடாது என்று போராடினாளோ, அது கண்முன் நிகழ்ந்து கொண்டிருக்க, தடுக்க முடியாத தன்னைக் குறித்தே வேதனை கொண்டாள் அவள்.

“வேண்டாம் சேஷா… விடு..” என்று நிவாஸும், அவளும் பலமுறை போராடியும் பலனில்லாமல் போக, தன் உடன் வந்த பாதுகாவலர்களிடம் திரும்பினாள் அவள்.

“இவரை வெளியே இழுத்துட்டு போங்க.” என்று அவள் கத்த, அவள் கட்டளைக்காக மட்டுமே காத்திருந்தவர்கள் அல்லவா. அடுத்தநிமிடம் சேஷாவை ஆத்மாவிடம் இருந்து பிரித்து எடுத்தனர்.

ஆனாலும், அவர்கள் நால்வரால் சேஷா சமாளிக்க முடியாமல் போக, அவர்கள் பிடியிலிருந்து திமிறிக்கொண்டு வெளியே வந்திருந்தான் சேஷன்.

அவன் மீண்டும் ஆத்மாவை நெருங்க, இருவருக்கும் இடையில் நின்றாள் சேனா.

சேஷா, “தள்ளிப் போடி.” என்ற நிமிடம் தன் மனதில் இருந்த மொத்த கோபத்தையும் திரட்டி ஓர் அறை கொடுத்துவிட்டாள்.

சேஷா அடியை வாங்கிக்கொண்டும் அசராமல் நிற்க, “இந்த நிமிஷம் நீ என்னோட வரல, இதுவரைக்கும் அமிர்தாவுக்காக அழுத நீ… இனி எனக்காக அழுவ. உனக்கு தெரியும் நான் பொய் சொல்லமாட்டேன்.” என்று சேனா ஒரே நொடியில் அவனை ஒன்றுமில்லாமல் செய்துவிட,

“என்னை விட்டுடு சேனா… நீயும் என்னை வதைக்காத. புரிஞ்சிக்கோயேன் என்னை…” என்று குழந்தையாக மாறி கதறியவன், அவள் முன்னே மண்டியிட்டான்.

“அவனை கொன்னுடறேண்டி. என்னை விட்டுடு.” என்று அவன் தரையில் கையால் அடித்து அவன் கத்திக் கொண்டிருக்க, அவன் வார்த்தைக்கு இணங்காமல் நின்றிருந்தாள் தேவா.

அவன் அழுவதை கண்கொண்டு பார்க்க முடியாமல், கண்களில் துளிர்க்கவிருந்த கண்ணீரை அடக்கிக் கொண்டவளாக, அவன் சட்டையின் காலரைப் பிடித்து அவனை எழுப்பி நிறுத்தினாள்.

“சேனா ப்ளீஸ்…” என்று அவன் மீண்டும் முயல, அவன் கெஞ்சலை கொஞ்சமும் மதியாமல் அவன் கையை பிடித்து கிட்டத்தட்ட அவனை வெளியே இழுத்துச் சென்றாள் அவள்.

உதறிச் செல்ல ஒருநொடி ஆகாது என்றாலும், அவள் வார்த்தைகளை மீறும் துணிவில்லாமல் அவள் பின்னே சென்றான் அவன்.

இனி ஒரு மரணத்தை தாங்கும் துணிவு இல்லை அவனிடம். பரீட்சித்துப் பார்க்கக்கூட விருப்பமில்லாமல் சேனாவுடன் நடந்தான் அவன்.

காரின் முன்பக்க கதவைத் திறந்து அவனை உள்ளே அமர்த்தி, ஓட்டுநர் இருக்கையில் தேவசேனா அமர்ந்துவிட, அவள் முகத்தை திரும்பியும் பாராமல் தொடுவானத்  வெறித்தபடி சாலையில் கலந்திருந்தான் சேஷன்.

தேவாவும் அவனை கலைக்காமல், தன் கவனத்தை சாலையில் பதித்து இருக்க, அங்கே வாக்குவாதங்களுக்கு இடமில்லாமல் போனது. தேவா அவனை அவன் வீட்டிற்கே அழைத்துச் சென்றாள். அவன் கையிலும், சட்டையிலும் ஆங்காங்கே ரத்தம் தெறித்திருக்க, அவர்கள் அறைக்குள் நுழைந்த நிமிடமே, அவன் சட்டையை கழற்ற முயன்றாள் அவள்.

அவள்மீது இருந்த கோபத்தில் அவளைப் பிடித்து தள்ளியிருந்தான் சேஷன். அவன் தள்ளியதில் தேவா கட்டிலில் விழ, அவளை கண்டுகொள்ளாமல் தன் சட்டையை கழற்றி வீசிவிட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான் ஆதிசேஷன்.

தேவா பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், அவனுக்கு பழச்சாறு கொண்டு வரும்படி வேலையாளிடம் தொலைபேசியில் அழைத்து கூறிவிட்டு சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாள்.

சில நிமிடங்களில் பழச்சாறு வந்துவிட, முழுதாக இருபது நிமிடங்கள் கழிந்தபின்னும் குளியலறையிலிருந்து வெளியே வரவில்லை சேஷன்.

அதற்குமேல் காத்திராமல், “சேஷா…” என்று குளியலறைக் கதவைத் தட்டியபடி அவள் நிற்க, அதன்பின்னும் சில நிமிடங்கள் எடுத்துக் கொண்ட பின்னே வெளியே வந்தான் அவன்.

தலையைக் கூட துவட்டாமல் அவன் கட்டிலில் அமர்ந்துவிட, அவன் கையிலிருந்த துண்டை பிடுங்கி அவன் தலையைத் துவட்டி விட்டவள், அருகில் வைத்திருந்த கண்ணாடி டம்ளரை அவனிடம் நீட்ட, அவன் தட்டிவிட்டதில் கீழே விழுந்து நொறுங்கியது அந்த டம்ளர்.

சலித்து கொள்ளாமல் மீண்டும் சமையலறைக்கு அழைத்து சூடாக பால் கொண்டுவர சொல்லிவிட்டு, அவன் எதிரில் இருந்த சோஃபாவில் அமர்ந்துவிட்டாள் தேவா.

பால் வரவும், மீண்டும் அவனிடம் நீட்ட, “எனக்கு எதுவும் வேண்டாம் சேனா. என்னை தனியா விடு.” என்று கத்தினான் அவன்.

“நாலு வருஷமா விட்டுட்டு தான் நிற்கிறேன்.”

சேஷன் பதில் சொல்ல முடியாமல் தலையைக் கையில் தாங்கிக்கொள்ள, “இதை குடிங்க.” என்றாள் மீண்டும்.

அவன் ‘விடமாட்டாள்’ என்று புரிந்தவனாக பால் டம்ளரை கையில் வாங்கிக் கொள்ள, இழுப்பறையில் இருந்து தூக்கத்திற்கான மாத்திரை ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினாள் தேவா.

பதில் பேசாமல் வாங்கிகொண்டவன் அதை விழுங்கிவிட்டு, பாலையும் குடித்து முடிக்க, “படுத்து தூங்குங்க.” என்றவள் மீண்டும் தன் பழைய இடத்திலேயே அமர்ந்துவிட்டாள்.

சேஷன் எப்போதும்போல் புரியாமல் பார்த்தான் அவளை. அவனுக்கு திருமணம் நடந்த நாளிலிருந்தே இப்படித்தான் இருக்கிறாள் அவள். அவனை ஒட்டியும் ஒட்டாமலும்…

அவளின் அத்தனை செயல்களும் சேஷாவை யோசித்து, அவனது நலனை முன்னிறுத்தியே இருந்தாலும், சேஷாவிடம் எப்போதும் இணக்கமான ஓர் உறவை வளர்த்துக் கொள்ள முயன்றதே இல்லை அவள்.

அன்பான பார்வையோ, ஆதரவான அரவணைப்போ எதையும் கொடுத்ததில்லை அவள். அதே சமயம் அவனிடமும் எதையும் எதிர்பார்த்து நின்றதே இல்லை.

அவனுக்கு ஏட்டிக்கு போட்டியாக நின்றாலும் கூட, அவனை வெல்ல வேண்டும் என்பதெல்லாம் அவளது குறியாக இருந்ததில்லை என்றும் அறிவான் அவன்.

அவனுக்கான அத்தனையும் அவள் பார்த்து பார்த்து செய்தாள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், அவனுக்கான அத்தனையும் செய்தாள் தேவசேனா.

ஆனால், இதுநாள் வரை எந்த விதத்திலும் அவனை நெருங்க முயற்சித்ததே இல்லை. அதற்காக அவனையும் நெருங்க விடாமல் நின்றாளா என்றால் அதுவும் கிடையாது. இதுவரை அவனை தடுத்ததில்லை அவள்.

குடியின் பிடியில் ஒளிந்து கொண்டாலும், அவள் செயல்களை எப்போதும் உணர்ந்திருக்கிறான் அவன்.

இதோ இப்போதும் கூட, அவனை கொலைகாரன் ஆகாமல் பாதுகாத்திருக்கிறாள் தான். அதன்பின்னும் அவனுக்கான தேவைகள் அனைத்தையும் கவனித்து கொண்டாலும், என்னவோ ஒரு ஒட்டாத தன்மையுடனே நிற்பவளை புரிந்து கொள்ள முடியாமல் கண்களை மூடினான் அவன்.

அவன் உறங்கிய அரைமணி நேரத்திற்கெல்லாம் நிவாஸ் அழைத்துவிட்டான் அவளை.

“மேம் இங்கே…”

“போஸ் வந்திருக்கானா?” என்றாள் அவனை பேசவிடாமல்.

“எஸ் மேம். ஆத்மாவை…”

“அவனோட அனுப்பிட்டு வீட்டை க்ளியர் பண்ணு. ஆத்மா இருந்ததுக்கான எந்த அடையாளமும் அங்கே இருக்கக்கூடாது.”

“புரிஞ்சது மேம். சேஷா…” என்று நிவாஸ் தயங்க,

“வேலையை முடிச்சுட்டு சொல்லு.” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டாள் அவள்.

சில நிமிட இடைவெளியில் இளமாறனை அழைத்து, “ஆத்மாவை போஸ்கிட்ட கொடுத்தாச்சு. அவனை போலீஸ்ல ஹாண்ட்ஓவர் பண்றத அவன் பார்த்துப்பான். அதற்குமேல…” என்று கேள்வியாக அவள் நிறுத்த,

“நான் பார்த்துக்கறேன் தேவா.” என்றான் இளமாறன்.

“நீ எதுவும் பார்க்கவேண்டாம் இளா. உன் பேர் இதுல வர வேண்டாம்.” என்றாள் தேவா.

“தேவா…”

“நான் கமிஷனர்கிட்ட பேசறேன் இளா. ஆத்மா அவனே தூக்கு போட்டு சாகட்டும். நீயோ, சேஷாவோ யாரும் இதுல இன்வால்வ் ஆக வேண்டாம். இப்போ ஆத்மீக்கு நீ பொறுப்பு. அதை மனசுல வச்சிக்கோ.” என்றாள் தேவசேனா.

“நீ எப்படி தேவா?” இளா தயங்க,

“பணம் பேசும் இளா… சில சமயங்கள்ல சத்தமா… சில சமயங்கள்ல சத்தமில்லாம… பேசும்.” என்றாள் அழுத்தந்திருத்தமாக.

சொன்னபடியே, அடுத்த ஒருமணி நேரத்தில் அவள் கமிஷனரை நேரில் சந்தித்துப் பேச, அவள் கூறிய அத்தனையும் பொறுமையாக கேட்டு முடித்தவர், “நான் என்ன செய்யணும் மேடம்?” என,

“முடிச்சிடுங்க…” என்று முடித்துக் கொண்டாள் தேவா.

“அந்த மினிஸ்டர் கேஸ் நடந்தப்பவே எங்களுக்கும் ஏகப்பட்ட பிரஷர் மேடம். அப்போ சென்ட்ரல் மினிஸ்ட்ரில இருந்த ஒருத்தரை வச்சு இங்கே ஆடிட்டு இருந்தான். எங்களுக்கு நடந்த அத்தனையும் தெரிஞ்சாலும், எதுவும் செய்ய முடியாம வேடிக்கை பார்த்தோம்.’

“இப்போ எல்லாமே அவனுக்கு எதிரா இருக்கே. உள்ளே இருந்து அனுபவிக்கட்டுமே…” என்று கமிஷனர் வழிகூற,

“ம்ஹூம்… அவன் சாகுறது தான் தண்டனை. அதுவும் அவனே தற்கொலை செய்யணும்.” என்றாள் முடிவாக.

“நான் கவனிச்சுக்கறேன் மேடம்.” என்று அவர் உறுதியளிக்க,

“முடிச்சுட்டு சொல்லுங்க.” என்று முடித்துக்கொண்டு எழுந்துவிட்டாள் தேவசேனா.

Advertisement