Advertisement

தேவாவின் மனம் ஆதிசேஷனைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த நாட்களில் தான் அவள் தந்தை மீண்டும் ஒருமுறை அவளிடம் வந்து நின்றது. இப்போது துணைக்கு தன் மகன் சத்யதேவையும் அழைத்து வந்திருந்தார் அவர்.

“என்ன முடிவு செய்திருக்க தேவா?” என்று மகளை அவர் விசாரிக்க,

“எதைப்பத்தி டாட்?”

“சேஷன் கேட்ட விவாகரத்தைப் பத்தி?” என்று அழுத்தமாக தந்தை அறிவுறுத்த,

“சேஷனே அப்பாகிட்ட சொல்லிட்டான் தேவாம்மா.” என்றான் அண்ணன்காரன்.

“ஓ… நான் அவருக்கு விவாகரத்து கொடுக்கறதா இல்லை டாட். நீங்க அமெரிக்கா கிளம்புங்க. இங்கே நான் சமாளிச்சுக்குவேன்.” என்றாள் திடமாக.

“எதை சமாளிப்ப தேவா. நீ குருட்டு தைரியத்துல பேசிட்டு இருக்க. உன் பாட்டி உன்னை ப்ரெய்ன்வாஷ் பண்ணி, அவங்க பேரனோட தலையில கட்டிட்டு போய்ட்டாங்க… அவங்களுக்கு அவங்க பேரன் முக்கியமா இருக்கட்டும். எனக்கு என் பொண்ணு வாழ்க்கை தான் முக்கியம். என்னோட வந்திடு.” என்று அவர் அழைக்க,

“தலையில கட்டிட்டாங்களா… எப்படி நீங்க எங்களை தலை முழுகிட்டுப் போனீங்களே… அப்படியா?” என்று சுருக்கென முள்ளாக குத்தினாள் மகள்.

“தேவா…” என்று அண்ணன் அதட்ட,

“என் வாழ்க்கையை நான் முடிவு பண்ணிட்டேன் தேவ். யார் என்ன சொன்னாலும் நான் கேட்கமாட்டேன். நீங்க எல்லாரும் உங்க வேலையை பாருங்க.”

“காலத்துக்கும் உன்னைப் பிடிக்கலனு சொல்றவன்கூட உன்னால வாழ்ந்திட முடியுமா தேவா?”

“நான் வாழாமலே போனாலும் இது என் பாட்டியோட ஆசை. என்னால அதை நிராசையாக்க முடியாது.” என்று முடித்துவிட்டாள் தேவா. இறுதிவரை கலையரசிக்கு செய்த சத்தியத்தைப் பற்றி எங்கும் அவள் வாய் திறக்கவில்லை.

அடுத்த பதினைந்து நாட்களில் பிரகதீஸ்வரியின் காரியம் முடிந்து, தேவ், பிரபாகரன் இருவரும் அமெரிக்காவிற்கு விமானம் ஏற, விமான நிலையத்தில் வைத்தும் மீண்டுமொரு முறை மகளை அழைத்தார் பிரபாகரன்.

மகள் எதுவும் பேசாது தந்தையைக் கட்டிக்கொண்டாள்.

“அப்பா உங்களை தலைமுழுகிட்டு எல்லாம் போகலைடா… அப்பாவுக்கு தெரியல. அப்போ அம்மாவைத் தவிர, வேறுதுவுமே மனசுல பதியல. என்னால உங்களை நல்லா வளர்க்க முடியாதோன்னு ஒரு பயம். அதனாலதான் உன் பாட்டி கேட்டதுமே கொடுத்துட்டேன். அதோட அவங்க பெண்ணையும் அவங்ககிட்ட இருந்து பிரிச்சுட்டேன் இல்லையா.. அதுக்கு பிராயச்சித்தம்ன்னு நினைச்சுட்டேன்டா…” என்று கலங்கி நின்றார் மனிதர்.

“ம்ச் அப்பா… எனக்கு தெரியாதா? அன்னைக்கு ஏதோ கோபத்துல பேசிட்டேன்ப்பா. விடுங்க. நிம்மதியா போயிட்டு வாங்க.” என்று தந்தையையும், தமையனையும் வழியனுப்பி வைத்தாள் அவள்.

அடுத்தநாள் காலையில் அவள் அலுவலகம் கிளம்பி நிற்க, அவளைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்ல முயன்றான் ஆதிசேஷன்.

அவன் அலட்சியத்தைப் பொருட்படுத்தாமல், “மாமா” என்று அவள் அழைத்து நிறுத்த, அலட்சியம் குறையாமல் திரும்பி பார்த்தான் அவன்.

“என்னோட ஆபிஸ்க்கு வாங்க. நம்ம பிசினஸ் லாஸ்ல இருக்கு. எனக்கு ஹெல்ப் பண்ணுங்க.” என தேவா அழைக்க,

“என்னை ஏன் கூப்பிடற? உன்னோட ஆபிஸ் அது. உன் பாட்டி உனக்கு கொடுத்த பிசினஸ். நீ என்ன வேணாலும் செய். எனக்கு எதைப்பத்தியும் கவலையில்ல.” என்று கூறி, நிற்காமல் நடந்துவிட்டான் அவன்.

அவன் பேச்சில் மனம் துவண்டாலும், ஏற்கனவே சேஷன் குழுமத்தை கவனித்துக் கொள்வதால் உதித்திருந்த சிறு நம்பிக்கையுடன் தான் அலுவலகம் கிளம்பிச் சென்றாள் தேவசேனா.

ஆனால், சேஷன் நெட்ஒர்க்ஸை விட பலமடங்கு மோசமாக இருந்தது அவர்களின் பல தொழில்கள். உண்மையில் திக்குமுக்காடி நின்றுவிட்டாள் தேவா. இதையெல்லாம் சரிசெய்யவே இன்னும் பல மாதங்கள் அயராது உழைக்க வேண்டும் என்ற நிலை.

அத்தனையும் அரட்டினாலும், எதையும் தலைக்கேற்றாமல் பாட்டியை மட்டும் மனதில் நினைத்துக்கொண்டு அலுவலகத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள் அவள்.

‘இவளுக்கென்ன தெரியும்.’ என்பதுபோல் அங்கிருந்தவர்கள் காட்டிய அலட்சியமும், அவர்களின் அசட்டையான போக்கும் அவள் சுயத்தை வெளிக்கொணர, அலுவலகப் பொறுப்பேற்றுக் கொண்ட இரண்டாம் நாளே, நீண்டகாலமாக அவர்களிடம் வேலையில் இருந்த ஒரு மேலாளரை வெளியே அனுப்பி வைத்தாள் அவள்.

அவரது நிலையைக்கண்டு அடுத்தவர்களின் நடவடிக்கையில் ஒரு ஒழுங்கு வர, அலுவலகத்தில் கண்டிப்பாய் தன் கவசமாக்கிக் கொண்டாள் அவள். தனக்கடுத்து தான் சொல்வதை செய்து முடிக்க யாரேனும் வேண்டும் என்ற நிலையில் தான் அவள் மலர்விழியைத் துணைக்கு அழைத்துக் கொண்டது.

முடியவே முடியாது என்று மறுத்தவளை, என்னென்னவோ பேசி சம்மதிக்க வைத்து தன்னருகில் இருத்திக் கொண்டாள்.

அலுவலகம் ஓர் ஒழுங்குக்கு வந்தாலும், அடுத்தமாத சம்பளத்திற்கே பற்றாக்குறை என்ற நிலைதான். ஒவ்வொன்றாக அவள் சரிசெய்ய முயன்று, அதில் வெற்றியும் பெற்றுக் கொண்டிருந்தாள். ஓரளவு அலுவலகம் அவளுக்கு பிடித்த இடமாக மாறிக் கொண்டிருந்த நேரம் தான் தன் வீட்டை அவள் அடியோடு வெறுக்கத் தொடங்கியது.

அவளின் முதல் சிக்கல் கலையரசியால் தொடங்கியது. கலையரசி தன் மக்களின் வாழ்வை சீர் செய்ய நினைத்து, இருவரையும் ஒரே அறையில் தங்கும்படி வற்புறுத்த, எப்போதும்போல் பதிலளிக்காமல் நகர்ந்துவிட்டான் சேஷன்.

அவனைக் கண்டுகொள்ளாமல் கலையரசி தன் மருமகளை மகன் அறைக்கு அனுப்பி வைக்க, “என்ன… கல்யாணம் முடிஞ்சு முதலிரவுக்கு வந்தாச்சா?” என்றான் குடிபோதையில் முழுதாக தன்னை தொலைத்து.

“ஏன் நீங்க என் புருஷன் தானே. உங்க ரூமுக்கு வர நான் யார்கிட்ட கேட்கணும்? அதோட அதுக்கு மட்டும்தான் உங்க ரூமுக்கு வரணுமா?” என,

“நமக்குள்ள வேறெதுவும் இல்ல. வேணும்ன்னா, டிபிகல் இந்தியன் மேரேஜ் போல, லவ் மேக் பண்ண ட்ரை பண்ணுவோம்… ஒருவேளை குடும்பம் நடத்தினால் காதல் வந்திடுமோ உன் மேல?”

“நான் உங்ககிட்ட காதல் கேட்டேனா?”

“ஓ… அது மட்டும் போதுமா?” என்று இன்னும் ஏளனமாக கேட்டான் அவன்.

“எல்லைமீறி பேசறீங்க மாமா.”

“மாமாவா… கிக்காதான் இருக்கு. வா, வந்த வேலையைப் பார்ப்போம்.” என்றவன் அவளை நெருங்க, உச்சகட்ட அதிர்ச்சியில் சிலையாக சமைந்து நின்றுவிட்டாள் தேவசேனா.

“வேண்டாம் மாமா…” என்றவள் வார்த்தை முடியும் முன்பே அவள் இதழ்கள் சிறைப்பட, அவளின் எதிர்ப்பெல்லாம் எடுபடவில்லை அவனிடம்.

“ம்ம்…” என்று அவள் போராடிக் கொண்டிருக்கையில், “அம்மு…” என்று மயக்கத்துடன் வெளிவந்தது சேஷனின் குரல்.

அந்தநொடி தான் தேவா முழுமையாக நிமிர்ந்து நின்றது. அவன் தலைமுடியைப் பற்றியிழுத்து அவனைத் தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தினாள் அவள். அப்போதும் அவன் தடுமாற, தன் ஆத்திரமும், வலியும் தீருமட்டும் ஓங்கி அறைந்திருந்தாள் அவனை.

அடியை வாங்கிகொண்டும் அவன், “அம்மு” என, அன்று தொடங்கியது அவளது போராட்டம்.

தேவாவின் மனம் யாருமற்ற வெற்றிடம் தான் இதுவரை. அதன் காரணமாக தான் பாட்டி சேஷனை மணந்துகொள்ளும்படி கேட்ட நொடி அவள் சம்மதமாக தலையசைத்தது.

ஆனால், யாருக்காகவும் அவள் இன்னொருத்தியாக வேடம் தரிக்க தயாராக இல்லை.

அவன் அம்முவை நினைத்து கட்டிலில் சல்லாபிக்க, அவள் பிணம் கிடையாதே! உயிரும், உணர்வும் கொண்ட மனிதி அல்லவா.

சேஷன் வாங்கிய அடியில் தரையில் விழுந்து கிடக்க, அவனைத் தாண்டிச் சென்றவளுக்கு அந்த கட்டிலில் படுக்க மனம் வரவில்லை. அந்த அறையில் இருந்த திவானில் கண்களை மூடி படுத்துவிட்டாள்.

அடுத்தநாள் காலை சேஷன் அவளை உலுக்கும்வரையும் அவள் உறக்கம் தொடர, அவன் உலுக்கலில்தான் விழித்தெழுந்தாள் அவள்.

கண்களைத் திறந்த கணமே, அவன் கைகளைத் தன் பலம் கொண்டமட்டும் உதறித் தள்ளியிருந்தாள். சேஷன் அவளது செயலை புரியாமல் பார்த்திருக்க, “என்ன வேணும்” என்றவள் தொனி மாறியிருந்தது.

“நான் எப்படி அங்கே கீழ விழுந்தேன்.” என்று சேஷன் கோபம் கொள்ள,

“எனக்கு தெரியாது. கண்டிப்பா தெரியணும்ன்னா, ரெண்டு கேமரா பிக்ஸ் பண்ணுங்க. இன்னைக்கு நைட் தெரிஞ்சிடும்.” என்று நக்கலாக கூறி நகர்ந்து கொண்டாள் அவள்.

‘உடம்பு மொத்தமும் திமிரும்’ என்று அவன் முனக, அவனை கண்டுகொள்ளவே இல்லை தேவா.

உறவென்ற நிலையில் நிறுத்திப் பார்க்கையில்தானே, வலியும் வேதனையும், வருத்தமும்…

சேஷனை மூன்றாம் மனிதர்களின் வரிசையில் நிறுத்த, அப்போதிருந்தே பழகிக் கொண்டாள் தேவா.

Advertisement