அதற்கு வேதவல்லியோ வேண்டுமென்றே பூச்சி மருந்தைக் குடித்து விட்டு தற்கொலை நாடகம் நடத்தினார். அவர் ஏமாற்ற பார்க்கிறார் என்று அனைவருக்கும் புரிந்தாலும் ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்குமா திடீரென்று எதுவும் ஆகிவிட்டால் என்ன செய்வது என குடும்பத்தினருக்குப் பயம் பிடித்துக் கொண்டது.
அதன்பிறகு பெரிதாக அவர் செய்வதைக் கண்டுகொள்வதில்லை. ஒரு மாதிரி ஒதுக்கி வைத்தது போல நடந்து கொண்டனர்.
அது வேதவல்லிக்குப் புரியவில்லை. அனைவரும் எனக்கு பயந்து நடக்கிறார்கள் என நினைத்துக் கொண்டார்.
ராதிகாவிற்கு என்ன புரிந்ததோ என்னவோ அவள் தனக்கு தேவையானதைப் பாட்டியிடம் மட்டும் தான் கேட்டுக் கொள்வாள். விளையாடக் கூட சுபத்ராவை ராதிகாவோடு விட மறுப்பார் வேதவல்லி. தேவராஜனையும் விளையாடாதே என்று தான் அதட்டுவார். ஆனால், அவன் கேட்க மாட்டான். அடி கிடைத்தாலும் வாங்கிக் கொள்வானே தவிர அவனுக்கு ராதிகா, சுபத்ரா இருவர் மீதும் இணையான பாசம் தான். பாரபட்சம் காட்ட மாட்டான். இன்னும் சொல்லப்போனால் ராதிகாவிடம் தான் அவனுக்கு நெருக்கமும் பற்றும் அதிகம்.
சுபத்ரா வளர வளர அவளின் குணம் அன்னையை மீறியது. எல்லாமே அவளுக்குத் தான் கிடைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் வீட்டை ரெண்டாக்கி விடுவாள். அவள் கத்தும் சத்தம் தெரு வரை கேட்கும்.
இதற்கும் வேதவல்லி அவளுக்குத் தான் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்வார். இருந்தாலும் அவள் திருப்தி கொண்டதில்லை. ஒரு கட்டத்தில் அவருக்கே மகளின் போக்கை நினைத்து எரிச்சல் வர தொடங்கி விட்டது.
ராதிகா அத்தனை பொறுப்பாய் வளர்ந்து நிற்க, சுபத்ரா இப்படி இருந்தால் அவருக்கு எரிச்சல் வராமல் இருக்குமா?
லட்சுமி அம்மாள் ராதிகாவிற்கு சின்ன வயதிலிருந்தே அவள் வேலைகளை அவளே செய்யப் பழக்கி விட்டிருந்தார். நாளை அவருக்கு ஒன்று என்றாலும் பிள்ளை தனியே கலங்கி நிற்க கூடாதே என்ற அச்சம் அவருக்கு இருந்ததால் அவளைக் குழந்தைத்தனத்துடன் அவரால் வளர்க்க முடியாது போனது.
அதற்குத் தகுந்தாற்போல தனக்கான பொறுப்பை உணர்ந்து ராதிகாவும் வளர்ந்து வந்தாள். கல்வி, வீட்டுப்பொறுப்பு என அனைத்திலும் அவளைக் குறித்து கவலை கொள்ள வேண்டியதே இல்லை. நல்ல தைரியமான பெண்ணும் கூட.
லட்சுமி அம்மாளுக்கு வயோதிகம் படுத்த தொடங்க, அதன் பிறகு வீட்டின் வேலைகளை அவரை அதிகம் செய்ய விடாமல் ராதிகா பார்த்துக் கொண்டாள். லட்சுமி அம்மாளுக்கு சின்ன பிள்ளையை இப்படி வேலை செய்ய வைக்க வேண்டியிருக்கிறதே என கவலையாக இருக்கும். ஆனால், என்ன செய்ய மருமகள் இம்மி கூட அசைய மறுக்கிறாளே!
லட்சுமி அம்மாள் ராதிகாவுக்கு விவரம் தெரிந்ததிலிருந்தே அவளிடம் சொல்லி சொல்லித் தான் வளர்த்திருந்தார். அவரே இல்லாமல் போனாலும் அவளுடைய பெரியப்பா, அப்பா, அண்ணன் என எல்லாரும் அவளுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதை நினைத்தும் கலங்கக் கூடாது. தைரியமாக இருக்க வேண்டும் என்று…
“அப்படி எல்லாம் சொல்லாதீங்க பாட்டி… உங்களுக்கு ஒன்னும் ஆகாது…” என சொன்னாலும் அந்த வயதில் என்ன புரியும் பாட்டிக்கு ஒன்று என்றால் என்ன செய்வது என்ற அச்சம் ஆட்டிப்படைக்கும். ஆனால், பாட்டிக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாது என அவர் முன்பு திடமாக இருப்பது போல கலங்காமல் இருப்பாள்.
ராதிகா எட்டாவது படிக்கும் சமயம் லட்சுமி அம்மாள் தவறிவிட, ராதிகாவிற்கு அதன்பிறகு தனிமை தான். தேவராஜனும் அப்பொழுது கல்லூரி படிப்பிற்காக வெளியூரில் தங்கியிருக்க, அப்பாமார்களும் வேலையில் இருப்பார்கள். வீட்டில் வேதவல்லி, சுபத்ரா மட்டும் தான். இதுதான் சாக்கென்று மொத்த வேலைகளையும் அவள் தலையில் கட்ட பார்ப்பார் வேதவல்லி.
ஆனால், ராதிகா செய்ய மாட்டாள். அவரின் அதட்டலுக்கு அடிபணிவதில்லை. தன் வேலைகளைத் தானே பார்த்துக் கொள்வதோடு சரி. வேதவல்லி தலையில் கட்டும் வேலைகளை ஒன்று கூட செய்வதில்லை.
துணி துவைக்கும் போது எல்லா துணிகளையும் துவைத்துப் போடச் சொல்லி வேதவல்லி அதட்டினால், அவளுடையதை மட்டும் துவைப்பாள். மாணிக்கம் மனைவி இறந்த பிறகு அவர் உடையை அவரே துவைத்துக்கொள்ளும் பழக்கத்தை கடைபிடிப்பதால் இவள் துவைக்க வேண்டிய அவசியம் இருக்காது.
பெரியப்பா மீது பாசம் இருக்கிறது தான்… அவர் துணியைத் துவைப்பதில் எந்த பிரச்சினையும் அவளுக்கு இல்லை. ஆனால், பெரியம்மா அந்த வேலையைக் காலத்துக்கும் அவள் தலையில் கட்டி விடுவார் என புரிந்து செய்ய மாட்டாள்.
சமைக்கும் போதும் அப்படித்தான். காலையில் வேதவல்லி விவரமாய் தங்கள் பிள்ளைகளுக்கு அளவாக டிபன் பேக் செய்வார். ராதிகா அதெல்லாம் கண்டு கொள்ள மாட்டாள். காய்கறி, பருப்பு, அரிசி எல்லாம் சேர்த்து ஒரே கலவை சாதமாகச் செய்து கொள்வாள். நேரமில்லையா ரச சாதமோ, தயிர் சாதமோ கொண்டு போய் விடுவாள்.
எதற்கும் வேதவல்லியிடம் போய் நிற்கவில்லை. அவளை அவளே அழகாக பார்த்துக் கொண்டாள். அது வேதவல்லிக்கு இன்னும் எரிந்தது. பள்ளியிலும் நல்ல மதிப்பெண்கள் வரும்.
அவளை விட ஒரு வயது இளையவளான சுபத்ராவிற்கோ எல்லா வேலைகளையும் வேதவல்லி தான் செய்ய வேண்டும். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கூட அவரே தான் செய்ய வேண்டும். துணி மதிப்பது, காய்கறி வெட்டி தருவது, வீடு கூட்டுவது போன்ற சின்ன சின்ன வேலைகளைக் கூட செய்ய மாட்டாள்.
எடுத்து சொன்னால் சண்டை தான்! மகனை அடித்து வளர்த்து விட்டு மகள் விஷயத்தில் கோட்டை விட்டது புரிந்தது. இப்பொழுது என்ன செய்து மாற்ற முடியும் என புரியவில்லை.
மூன்று பிள்ளைகளும் வளர்ந்து நின்றார்கள். தேவராஜன் சிவில் இன்ஜினியரிங் படித்துவிட்டுப் குடும்பத் தொழிலில் ஈடுபட்டிருக்க, ராதிகா டிகிரி முடித்துவிட்டு டீச்சர் ட்ரைனிங் படித்துக் கொண்டிருந்தாள். சுபத்ரா தேங்கி தேங்கி படித்தாள். ஒருவழியாக தட்டுத்தடுமாறி தான் பாஸ் மார்க்கே எடுத்திருக்க அவளையும் ஒரு டிகிரி படிக்க கல்லூரியில் சேர்த்து விட்டிருந்தனர்.
அப்பொழுது தேவராஜனுக்கு வந்த வரன் தான் தாமரை. எல்லாம் பொருந்தி போக திருமணமும் நல்லபடியாக முடிந்தது.
தாமரை கொஞ்சம் அமைதியான பெண் என்பதால் வேதவல்லி தன் இஷ்டத்திற்கு ஆட ஆரம்பித்தார். தேவராஜன் இன்னும் அம்மாவை எதிர்த்து நிற்குமளவிற்குத் தைரியம் எல்லாம் கொண்டவர் இல்லை. அதனால், மனைவியைத் தான் பொறுத்துப் போகச் சொல்வார்.
அமைதியான தாமரைக்கும் அது கடினமாக இருந்ததில்லை. எல்லார் வீட்டிலும் மாமியார் என்றால் இப்படித்தானே என நினைத்துக் கொண்டவர் அமைதியாகத் தான் இருப்பார். மொத்த வேலைகளையும் தாமரை தலையில் கட்டிவிட்டு வேதவல்லி சொகுசாக இருக்க ஆரம்பித்தார். இப்பொழுது தான் ஒரு அடிமை கிடைத்தது என்பது போலத் திருப்தி அவருக்கு.
தாமரையிடம் அந்த வீட்டில் ஒட்டுதல் என்றால் அது ராதிகா தான்! ராதிகாவிற்கு தன் பாட்டியின் மறைவிற்குப் பிறகு நீண்ட ஆண்டுகள் கிடைத்த துணை தாமரை. மிகவும் அன்பாக இருக்கும் அண்ணியை அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது.
இத்தனை நாட்கள் பெரியம்மா வீட்டு வேலைகளைத் தலையில் கட்டும்போது எல்லாம் செய்ய மறுப்பவள், இன்று அண்ணி தனியாகக் கஷ்டப்படுவதால் தானாகவே உதவ முன் வர தொடங்கினாள்.
“உனக்கு ஏன் ராதி சிரமம்? நான் பார்த்துக்கிறேன் விடு…” என தாமரை மறுத்தாலும், “நீங்க மட்டும் தனியா எவ்வளவு செய்வீங்க? நானும் உதவி செய்யறேன்…” என நிற்பாள்.
வீட்டிலிருந்தால் அண்ணியோடே சுற்றித் திரிவாள். தேவராஜன் கூட கிண்டல் செய்வான். “என் பொண்டாட்டி பின்னாடி நான் சுத்தினா பரவாயில்லை. நீ என்ன ராதி இப்படி வால் பிடிச்சிட்டே திரிஞ்சுட்டு இருக்க…” என கேலி செய்வான்.
“உங்களை யாரு சுத்த வேண்டாம்ன்னு சொல்லறது…” என அண்ணியின் முந்தானையை எடுத்து அண்ணனிடம் நீட்டுவாள்.
“அதுதான் என் டூயூட்டியை நீ பார்க்கிறியே…” என அவளிடம் கேலி பேசினாலும், மனைவியிடம் தனிமையில், “பாட்டி இறந்ததுக்கு அப்பறம் அவளை அவளே தான் பார்த்துக்கிறா… அந்த வயசுல இருந்து தனியா தூங்கணும். தனக்குத் தேவையானதை அவளே சமைச்சிக்கணும்… அவளுக்கு உடம்பு முடியாட்டியும் அவளே தான் கஞ்சி வெச்சு குடிச்சுக்கணும்… அவளை பார்த்துக்க நாங்க யாரும் கூட இருந்ததில்லை. நான் காலேஜ் எல்லாம் ஹாஸ்டல்ல தான் படிச்சேன்… அப்பாவும் சித்தப்பாவும் வேலை வேலைன்னு தான் இருப்பாங்க… இப்ப தான் அவளுக்கு நீ ஒரு துணையா கிடைச்சிருக்க. எனக்கு அதுல ரொம்ப சந்தோசம் தெரியுமா!
முதல்ல கூட நான் யோசிச்சேன், தங்கச்சிங்களுக்கு முன்னாடி நான் எப்படி கல்யாணம் செய்யறதுன்னு… அப்பாவும், சித்தப்பாவும் தான் உனக்கும் அவங்களுக்கும் வயசு வித்தியாசம் அதிகம்ன்னு சொல்லி கல்யாணத்துக்கு வற்புறுத்தி பண்ணி வெச்சாங்க… அவங்க எவ்வளவு சரியா இருந்திருக்காங்க பாரு… இப்ப நீயும் ராதிகாவும் ஒன்னா இருக்கிறதை பார்க்கப் பார்க்க எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா? காலத்துக்கும் நீ அவ கூட இதே மாதிரி நல்ல உறவுல இருந்தா ரொம்ப சந்தோசம்…” என மனைவியிடம் சொன்ன தேவராஜன் தான் வருங்காலத்தில் தங்கையிடம் பேச்சு வார்த்தை கூட வைத்துக் கொள்ளாமல் இருக்கப் போகிறார் என அப்பொழுது அவருக்குத் தெரியாது.