மௌனமதில் யுத்தம் ஏனடி? – 8

நரசிம்மர், லட்சுமி தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் செல்வம், மாணிக்கம். நரசிம்மர் இறந்து விட லட்சுமி அம்மாள் தான் தங்கள் பிள்ளைகளை மிகுந்த சிரமப்பட்டு வளர்த்தார்.

செல்வம் வேதவல்லியையும், மாணிக்கம் லதாவையும் திருமணம் முடித்துக் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள்.

அவர்கள் இருவரும் தொடங்கியது தான் லட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ். தொழில் மிகவும் ஏறுமுகம் என்று சொல்வதற்கில்லை என்றாலும் ஓரளவு ஓடிக்கொண்டு தான் இருந்தது.

அப்பொழுது செல்வத்திற்கு ஒரு மகன் மட்டும் பிறந்திருந்தான். அவர் தான் கௌதமனின் தந்தை தேவராஜன். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாணிக்கம், லதா தம்பதிகளுக்குப் பிறந்தவள் தான் ஜீவனாவின் அன்னை ராதிகா.

லதாவுக்கு சிக்கலான பிரசவம் என்பதனால் குழந்தையைப் பிரசவித்த சில நாட்களிலேயே அவர் இறந்து விட்டார். அதன்பிறகு ராதிகாவின் முழு பொறுப்பும் லட்சுமி அம்மாளிடம் வந்து விட்டது.

வேதவல்லி எங்கே அந்த பிள்ளையின் பொறுப்பு மாமியாரின் காலத்துக்குப் பிறகுத் தன் தலையில் விழுந்து விடுமோ என்ற பயம் காரணமாக, கொழுந்தனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்கலாம் என்று தன் கணவர் செல்வத்திடம் அடிக்கடி சொல்லத் தொடங்கினார்.

செல்வமும் தன் அன்னையிடம் பேசிவிட்டு தம்பி மாணிக்கத்திடம் பேச அவரோ அந்த பேச்சிற்கு இடம் தரவே இல்லை. “அண்ணா என்னால லதாவை எப்பவும் மறக்க முடியாது. அவ இடத்துல எப்படிண்ணா இன்னொரு பொண்ணு? அப்படி என்னால கனவுல கூட யோசிக்க முடியாது. எனக்கு அவ நினைப்பே இந்த ஜென்மத்துக்கும் போதும். இனி இப்படி பேசாதீங்கண்ணா” என்று தீர்க்கமாகச் சொல்லி விட்டார்.

“உனக்கு வயசும் அதிகம் இல்லை மாணிக்கம். இப்ப நீ யோசிக்கிறது எல்லாம் சரியா தோணும். காலப்போக்குல உனக்கும் ஒரு துணை தேவைப்படும். உன்னோட வாழ்க்கைக்கு பிடிப்பு வேணாமா அப்பு?” என்று லட்சுமி அம்மாள் கவலைப்பட்டார்.

“என்னோட வாழ்க்கைக்கு பிடிப்பா தான் என் புள்ள இருக்காளேம்மா. அவளை கண்ணும் கருத்துமா வளர்த்தா போதாதா? இன்னொரு கல்யாணம் எல்லாம் எப்பவும் சரி வராதும்மா… இன்னொரு முறை இதை பத்தி பேசாதீங்க…” என்று மாணிக்கம் கறாராக சொல்லி விட்டார்.

“உனக்காக இல்லைன்னாலும் உன் குழந்தைக்காகவாச்சும் இன்னொரு கல்யாணத்தை பத்தி யோசிப்பா… சின்ன குழந்தை… அவளை வளர்க்கிறது சும்மாவா?” என லட்சுமி அம்மாள் மனம் கேட்காமல் வற்புறுத்த,

“என் மகளுக்கு அது தானேம்மா விதிச்சிருக்கு. விடுங்க. நாங்க இப்படியே இருந்துப்போம்… இது பத்தி இன்னொரு முறை பேசாதீங்கம்மா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு…” என மாணிக்கம் சொல்ல மேற்கொண்டு அவருடைய அன்னையாலும் தமையனாலும் வற்புறுத்த முடியவில்லை.

‘இதென்ன இப்படி இருக்கான். பிள்ளையைத் தனியா எப்படி வளர்ப்பான்? என் காலத்துக்கு நான் பார்த்துக்குவேன். அதுக்கப்பறம் அந்த குழந்தையை வெச்சுட்டு என்ன செய்வான்?’ என அப்பொழுதே லட்சுமி அம்மாளுக்கு கவலை வந்துவிட்டது. அவருக்கும் வேதவல்லியின் குணம் தெரியுமே…

வேதவல்லிக்கு அவர் செய்வது மட்டும் தான் சரி. மற்றவர்கள் அனைவரையும் மட்டம் தட்டிக் கொண்டே இருப்பார். மாமியார் என்று கூட பாராமல் லட்சுமி அம்மாளிடமே அதட்டல் குரல் தான் அதிகமாக வெளியே வரும்.

“ஏன் உங்களுக்குப் பேத்தி மட்டும் தான் இருக்காளா? அவளை மட்டும் தான் கவனிச்சுப்பீங்களா? என் பையன் பள்ளிக்கூடம் விட்டு வந்து எவ்வளவு நேரம் ஆச்சு அவனுக்கு என்ன வேணும் ஏது வேணும்ன்னு கவனிக்க மாட்டீங்களா?” என அவர் கத்தும் போது பதிலுக்குக் கத்தா விட்டாலும்,

“அம்மா இல்லாத பச்சை குழந்தை. அவ கூட கூடவா உனக்கு போட்டியும் பொறாமையும். எனக்கு அம்மா இல்லாத என் பேத்தியையும் பார்த்துக்க தெரியும். அம்மா இருந்தும் இல்லாத மாதிரி சூழல்ல இருக்கிற என் பேரனையும் பார்த்துக்க தெரியும். இந்த குரலை உசத்துற வேலை எல்லாம் இங்கே வெச்சுகாத… அப்பறம் நான் ஒரு நேரம் போல இன்னொரு நேரம் இருக்க மாட்டேன்” என முகத்தில் அடித்தது போலப் பேசி விடுவார்.

வேதவல்லிக்கு அப்படி எரியும். ‘ச்ச! இந்த கிழவி என்ன பேச்சு பேசுது. எத்தனை நாளைக்கு ஆடும்ன்னு நானும் பார்க்கிறேன்…’ என வன்மமாக நினைத்துக் கொள்வார்.

ஏழு வயதில் இருக்கும் தேவராஜனுக்கு அம்மாவை விடவும் பாட்டி மீது தான் ஒட்டுதல் அதிகம். அம்மாவின் குணமும், அனைவரையும் இளக்காரமாக நினைத்து பேசும் பேச்சும் அவனுக்கு ஒத்துப்போவதில்லை. அதோடு வேதவல்லி மகனை அதட்டி உருட்டி ஆட்டி வைப்பார். அவர் இஷ்டப்படி தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அடி வெளுத்து விடுவார். தந்தையிடம் அதைப்பற்றி மூச்சு கூட விட்டு விட முடியாது. அதற்கும் அடி கிடைக்கும்.

அன்னைக்குப் பயந்த பிள்ளையாக வளர்ந்து வந்தவருக்குப் பாட்டியின் பாசமும் அரவணைப்பும் பெருமதிப்பானது.

பாட்டி எதுவும் வேலை செய்யும்போது குட்டித்தங்கை ராதிகாவின் அருகில் அமர்ந்து அவள் குட்டி விரல்களுக்குள் தன் விரலை நுழைத்து வைத்துப் பிடித்துக் கொண்டு சமர்த்தாக அமர்ந்து கொள்வான்.

தங்கையை தன் மடியில் வைக்க சொல்லி அடம் பிடிப்பான். லட்சுமி அம்மாள் அவள் வளர வேண்டும் என்று சொல்லி மறுத்து விடுவார். அவள் வளர்ந்தால் தன்னோடு விளையாட வருவாள் என பாட்டி சொல்லச் சொல்ல மிகவும் ஆசையாக இருக்கும்.

“சீக்கிரமா நிறைய பால் குடிச்சு வளரு பாப்பா…” என சொல்லி பாட்டி ராதிகாவுக்கு பாலை குடிக்க வைக்கும் போது செல்லமாக அதட்டுவான்.

“மெல்லமா தான்டா வளருவா… உன் அவசரத்துக்கு அவ எப்படி வளர்ந்து நிப்பா…” என சொல்லி லட்சுமி அம்மாள் சிரிப்பார்.

பாட்டியோடு நிறைய ஒட்டி திரிந்ததால் அவனுக்கு ராதிகாவோடும் ஒட்டுதல் அதிகமாக இருந்தது. அவள் வளர வளர அவளின் ஒவ்வொரு அசைவுக்கும் அதிகம் மகிழ்ந்தான். அவள் அமர்ந்த போது, தவழ்ந்த போது, அவளுக்கு அரிசிப்பற்கள் முளைத்த போது, எழுந்து நிற்க முயற்சி செய்த போது, தத்தி தத்தி நடை பயின்ற போது எல்லாம் தேவராஜன் தான் அதிகம் கொண்டாடியது.

அவளுக்கு ஆறேழு மாதம் இருக்கும் போதிலிருந்தே இவன் தான் தூக்கி வைத்துக் கொண்டே சுற்றுவான்.

இந்த சமயத்தில் தான் வேதவல்லி மீண்டும் கருவுற்றார். அடுத்த வருடத்தில் அவருக்கும் சுபத்ரா பிறந்தாள். ராதிகாவுக்கும் சுபத்ராவுக்கும் ஒன்றரை வயது தான் வித்தியாசம்.

வேதவல்லிக்கு மகன் தன்னோடு ஒட்டுவதே இல்லை என்பது காலப்போக்கில் புரிய, இனி மகளையாவது அந்த கிழவியிடம் தராமல் வளர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மகளும் மகனும் அந்த கிழவிக்கு ஜால்ரா அடித்துக்கொண்டு என்னை மதிக்க மாட்டார்கள் என புரிந்து சுபத்ராவை லட்சுமி அம்மாளிடம் சேர விடாமல் வளர்த்தார். மகனை இழுக்கப் பார்த்தால் அவனுக்கு கொஞ்சம் விவரம் புரியத் தொடங்க அம்மாவின் அதட்டலுக்குப் பயந்தாலும் பாட்டியிடம் அவன் கொண்டிருந்த ஒட்டுதல் குறைய மறுத்தது.

ராதிகாவும் சுபத்ராவும் ஒரே வீட்டில் வளர்நதாலும் இருவருக்கிடையே அவ்வளவு பாரபட்சம் இருக்கும். உடுத்தும் உடையிலிருந்து உண்ணும் உணவு வரை!

வேதவல்லி செய்வது முழுவதுமாக இல்லை என்றாலும் அவர் காட்டும் பாரபட்சம் செல்வத்திற்கும், மாணிக்கத்திற்கும் புரியத் தொடங்கியது.

செல்வம் மனைவியிடம் சண்டை பிடித்தால், பிள்ளைகளோடு அம்மா வீட்டுக்குப் போய் விடுவேன் என மிரட்டுவார். எத்தனை நாட்களுக்கு இந்த மிரட்டல் வேலை செய்யும்?

செல்வத்திற்கு அங்கே போயி மட்டும் எத்தனை நாளைக்கு இவளால இருக்க முடியும் என கோபம் வந்துவிட, “போகிறதுன்னா பிள்ளைங்களை விட்டுட்டு போடி…” என பொறுமை மீற கத்தி விட்டார்.