ராதிகா பார்த்து வைத்திருப்பதாகத் தானே சொன்னார். அந்த நினைவில் அவள் கொஞ்சம் கலக்கம் காட்ட, “உன் முகம் வாடறதை பார்த்தா எனக்கு சம்பவம் உறுதி போலவே…” என்றான் கலக்கத்துடன். அவள் போடா என்னும் பாவனையில் முகத்தை ஜன்னலுக்கு வெளிப்பக்கம் திருப்பிக் கொள்ள,
“ஹ்ம்ம்… உன்னை பேச வைக்கிறதே பெரும் போராட்டமா இருக்கு… இதுல காதலிக்க வெச்சு… அப்பறம் கல்யாணம், குடும்பம், குட்டி… எல்லாம் யோசிக்கவே மலைப்பா இருக்கே…” என தன்போல புலம்பி பெருமூச்சு விட… அவன் பாவனையில் ஜீவனாவிற்கு சிரிப்பு பொங்கியது.
இருந்தும் முயன்று கட்டுப்படுத்தி அமர்ந்திருக்க, “என்கிட்ட பேச தானே மாட்ட… நான் பேசறதை எல்லாம் கேட்ப தானே… அப்பறம் என் புலம்பலுக்கு சிரிப்பை கண்ட்ரோல் செய்யாட்டி என்ன?” என அவன் கண்டுகொண்டு கேட்க, ‘சரியான விடாக்கண்டன்…’ என எண்ணிக் கொண்டவளுக்கு அவனை திரும்பிப் பார்க்கும் தைரியம் சுத்தமாக இல்லை.
தேவராஜனை மருத்துவமனையில் சேர்த்து விட்டார்கள். அவருக்கு இதுபோல அடிக்கடி மயக்கம் வருவதால் மருத்துவர்கள் வழக்கமான அறிவுரைகளைத் தான் வழங்கினார்கள்.
உணவு கட்டுப்பாடு அவசியம் என மருத்துவர் மீண்டும் வலியுறுத்த… “நான் சொல்லி எல்லாம் வேலைக்கு ஆக மாட்டேங்குது… வேணும்ன்னா எங்க அப்பாகிட்ட நீங்க சொல்லி பாருங்க டாக்டர்…” என்றான் கெளதம்.
‘இதென்ன இப்படி கொஞ்சம் கூட பொறுப்பில்லாம பேசறான்’ என உடன் வந்த ஜீவனா பார்த்திருக்க,
“ஆமாம் நான் சொன்னா மட்டும் கேட்டுட்டு தான் உங்க அப்பா மறுவேலை பார்ப்பாரு… நீ வேற ஏன்டா?” என்று மருத்துவர் நொந்து போய் பேசினார்.
“நீங்க எவ்வளவு பெரிய டாக்டர்… நீங்களே இப்படி சொல்லலாமா?” என மீண்டும் வம்பிழுத்தவனின் கையை முறுக்கியவர், “மாமான்னு ஒரு வார்த்தை வருதாடா உன் வாயில இருந்து…” என முதுகில் தட்டினார்.
“நோ… நோ… மரியாதை ரொம்ப முக்கியம்…” என ரொம்பவும் பில்டப் தந்தவன், “வேணும்ன்னா உங்க பொண்ணை கட்டி கொடுங்க… மாமா மாமான்னு உங்க காலையே சுத்திட்டு இருப்பேன்…” என மேலும் வம்பு செய்ய, “எங்க அக்கா இந்நேரம் வந்துட்டு இருப்பாளே… வந்து சேரட்டும்… அவகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு கையோட கல்யாணத்தை முடிச்சு வெச்சிடறேன்…” என அவரும் சீண்டினார்.
“வாவ் சூப்பர் மாமா… சீக்கிரம் ஏற்பாடு செய்யுங்க…” என அவரை அணைத்து சொன்னவன், “மாலை டும் டும்… மஞ்சர டும் டும்… மாத்து அடிக்க மங்கள டும் டும்” என்று வேறு குதூகலமாக பாட, இங்கே ஜீவனாவின் முகம் வாடியது.
‘ம்ப்ச்… அன்னைக்கு அத்தனை பேரு வந்து இவன் மேல விழுந்தப்பவும் அவ்வளவு கண்ணியமா இருந்தான். இப்ப என்னன்னா என்கிட்ட லவ் சொன்ன அன்னைக்கே அவங்க மாமன் பொண்ணையும் கட்டி கொடுங்கன்னு எவ்வளவு உரிமையா கேட்கிறான்… நான் இருக்கிறதை கவனிக்காம இதெல்லாம் பேசிட்டு இருக்கான் போல… நம்மளை ஏமாத்த தான் நினைச்சானா?’ மனதில் தாங்க முடியாத வலி எழுந்தது.
மாமா மற்ற நோயாளிகளைக் கவனிக்க நகர்ந்த பிறகே ஜீவனாவை கவனித்தவன், “அப்பாவுக்கு பிரஷர் அதிகம் ஆயிட்டா இப்படி தான் மயக்கம் வந்துடும். அதுதான் ஆபிஸ் வர வேண்டாம் வீட்டுல இருந்து என்ன வேலை செய்ய முடியுமோ அதை மட்டும் செய்யுங்கன்னு சொல்லி இப்ப எல்லாம் ரெஸ்ட் எடுக்க விட்டுட்டேன்… இன்னைக்கு உன்னை பார்க்கும் ஆர்வத்துல வந்திருப்பாரு போல… வழக்கம்போல உணர்ச்சிவசப்பட்டு இப்படி இருக்காரு… பயப்படற மாதிரி எதுவும் இல்லை…” என்று சொல்லிக் கொண்டே போக,
சின்னதாகத் தலையை மட்டும் அசைத்தவள், கைப்பையை எடுத்துக் கொண்டு அமைதியாக வெளியேறப் போக, வேகமாக அவளின் கையைப்பற்றி தடுத்தான். “அதுக்குள்ள எங்க கிளம்பிட்ட… நான் உன்கிட்ட பேசணும்ன்னு நினைச்சேன்…” என்றான் வேகமாக.
ஜீவனாவுக்கு கோபம் ஒரு பக்கம், ஏமாற்றம் ஒரு பக்கம். அவனின் கையை உதறிவிட்டு வேகமாக நடக்க, “ஹே ஜீவி…” என அவளின் பின்னாலேயே சென்றான். அவள் நிற்க மறுத்தாள்.
“இப்ப என்ன கோபம் உனக்கு?” என அவன் அவளை வழிமறித்து காய,
“உங்க மேல எனக்கு என்ன கோபம்? வழியை விடுங்க நான் போகணும்…” என்றாள் அடங்க மறுத்த ஆத்திரத்துடன். அவள் அவனிடம் ஒரு வழியாகப் பேசி விட்டாள். அதை உணரும் நிலையில் இருவருமே இல்லை.
“அதுதான் நான் உன்கிட்ட பேசணும்ன்னு சொல்லறேன் தானே?”
“எனக்கு பேச விருப்பம் இல்லை…” என்றாள் முகத்தைத் திருப்பி.
முகத்தில் அடித்தது போன்ற அவளின் செய்கையில் அவனுக்கு கோபம் வந்தது. அவளின் கன்னத்தை பிடித்து தன்னை நோக்கித் திரும்பியவன், “ஏன்? என்னை பார்த்தா எப்படி இருக்கு உனக்கு? என்கிட்ட பேச கூட முடியாத அளவுக்கு நான் என்ன செஞ்சேன்?” என ஆத்திரத்துடன் கேட்டவனின் கையை விலக்க முயற்சி செய்து தோற்றாள்.
“சொல்லு… ஏன் என்கிட்ட பேச மாட்ட… உங்க அம்மா ஏதோ மாப்பிள்ளை பார்த்திருக்காங்கன்னு எங்க அப்பா சொல்லறாரு. அது பத்தி தெரிஞ்சுக்காம உன்னை அனுப்பிட்டு நான் என்ன செய்யறது? எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாடுவேன்னு நினைச்சியா? என்னை பார்க்க உனக்கு அப்படியா தெரியுது?” என்றான் ஆத்திரமாக.
“அது ஏன் அப்படி பாடறீங்க… மாலை டும் டும்ன்னு பாடத்தான் உங்களுக்கு ஒரு மாமன் பொண்ணு இருக்காளே… அப்பறம் நான் யாரை கல்யாணம் செஞ்சா உங்களுக்கென்ன?” என அவனின் கையை வேகமாகத் தட்டிவிட்டு விட்டு அவள் பொரிய, அவன் முகம் பிரகாசமானது.
“வாட்? கம் எகைன்?” என அவன் சிரிப்போடு கேட்க,
“ம்ப்ச்… வழி விடுங்க முதல்ல…” என்றாள் எரிச்சலான குரலில்.
அந்த காரிடரில் இருந்த மற்ற அறைகளுக்கு எல்லாம் சென்று பார்த்துவிட்டு மீண்டும் அந்த வழியாக வந்த மருத்துவர், “இங்கே என்னடா செய்யற?” என்று நடுவழியில் நின்றிருந்தவனைப் பார்த்துக் கேட்டவர், அப்பொழுதே எதிரில் நின்றிருந்தவளை பார்த்தார்.
அவளைப் பார்த்து புருவம் சுருக்கியவர், “நீ… நீ… ராதிகா பொண்ணு தானேம்மா?” என கேட்க,
‘இதென்னடா? யாரை பார்த்தாலும் சரியா கேட்கிறாங்க…’ என அவள் விழிக்க, கெளதம் நேரடியாகவே, “நீங்களுமா மாமா?” என சலித்தான்.
அதற்கு அவன் மாமா ராஜேஷோ சின்ன சிரிப்புடன், “ஏன்டா? வேற யாரு அப்படி கேட்டாங்க?” என்று கேட்க,
“உள்ளே படுத்திருக்காரே… என்னை பெத்தவரு… இவளைப் பார்த்து நீயா? நீயான்னு வசனம் பேசி உணர்ச்சி வசப்பட்டு வழக்கம்போல வந்து மச்சான் கிட்ட ஓய்வெடுக்கிறாரு…” என்று சொல்ல,
“ஏன் இப்பதான் உங்க அப்பாவுக்கு கண்ணு தெரியுதாமா? இந்த பொண்ணு சென்னைக்கு வரான்னு ஒரு மாசத்துக்கு முன்னாடியே எங்க அக்கா சொன்னாளே… அப்ப எல்லாம் உங்க அப்பா ஆழ்ந்த தியானத்துக்கு போயிட்டாராமா? சும்மா பாவ்லா காட்ட வேண்டியது… தங்கச்சி மேல பாசம் இருந்தா பாசத்தை காட்ட சொல்லு… இல்ல அவங்க அம்மா தான் முக்கியம்ன்னா அந்த பொண்ணை ஆச்சும் நிம்மதியா விட சொல்லு… ரெண்டும் இல்லாம புதுசா என்ன பாசம் பொங்குது?” என ராஜேஷ் காய்ந்தார்.
“ஐயோ மாமா… ஏற்கனவே உங்க மாமன் எங்க மண்டைய போதும் போதும்ன்னு குழப்பி வெச்சிருக்காரு… நீங்களும் வேற ஏன் புரியாம பேசி எங்களை படுத்தறீங்க…” என கௌதமன் கதற,
“ஹாஹா… கொஞ்சம் கூட பிளாஷ்பேக் தெரியாம தான் உங்க ரெண்டு பேரையும் வளர்த்து வெச்சிருக்காங்களாக்கும்…” என நம்பாமல் கேட்டார்.
“அப்படி என்ன பெரிய பிளாஷ்பேக் இவ்வளவு அழகான அத்தை பொண்ணை கண்ணுலயே காட்டாம வளர்த்து வெச்சிருக்காங்க… கொஞ்சம் என்னன்னு நீங்களாச்சும் சொல்லுங்களேன்…” என கௌதமன் கேட்டான்.
வேகமாக குறுக்கிட்டு, “சாரி டாக்டர்… என்ன கதை சொல்லறதா இருந்தாலும் இதோ இவருக்கு சொல்லுங்க… எனக்கு எங்க அம்மா என்ன சொல்ல நினைக்கிறாங்களோ அது மட்டும் தெரிஞ்சா போதும். வேற எதையும் நான் தெரிஞ்சுக்க விரும்பலை… இப்ப நான் கிளம்பறேன்…” என்று ஜீவனா சொன்னாள்.
அவளது பதிலில் ராஜேஷ், “உங்க அம்மா அவளை மாதிரியே உன்னையும் ரொம்ப நல்ல மாதிரி வளர்த்து இருக்காமா…” என்று பெருமையாகச் சொன்னார்.
“மாமா… நீங்க வேற ஆட்டத்தை கலைக்காதீங்க… அவளை இங்கே கஷ்டப்பட்டு இழுத்துட்டு வந்ததே எதுவா இருந்தாலும் அவளுக்கும் எனக்கும் தெரிஞ்சுடட்டும்ன்னு தான்… இங்கே பாரு ஜீவி அவர் சொல்லறதை முதல்ல தெரிஞ்சுக்கலாம்… மாட்டேன்னு அடம் பிடிக்கிற அளவுக்குத் தப்பா எதையும் அவர் சொல்லிட போறதில்லை. நம்ம குடும்பம் ஏன் பிரிஞ்சிருக்குங்கிற காரணம் கண்டிப்பா நமக்கு வேணும். ஒருவேளை எதுக்காக சுபத்ரா அத்தையும், அவரோட புருஷனும் உங்க அம்மாவை மிரட்டிட்டு இருக்காங்கன்னு கூட அது மூலம் நமக்கு தெரிய வரலாம் இல்லையா?” என்று கேட்க,
ஜீவனா இவனுக்கு எப்படி இது தெரியும் என்பது போல விழித்தாள். தெரிஞ்சுக்கிட்டேன் என்பது போலத் தலையை அசைத்தவன், அவளைப்பற்றி விசாரித்ததையும் தனக்குத் தோன்றிய அனுமானத்தை வைத்து சிலதை ஊகித்ததையும் சொன்னான். கூடவே, “நீ உனக்கு பிடிக்காத உங்க அப்பாவோட இருக்கிறதுக்காக இங்கே வர காரணம் உங்க அம்மாவை தாண்டி வேற எதுவும் இருக்காதுன்னு தோணுச்சு…” என்று அவன் சொல்ல, அவள் மௌனமானாள்.
அம்மாவைப்பற்றி நாம் ஒன்றுமே தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே என அவளுக்கு இப்பொழுது வருத்தமாக இருந்தது.
கௌதமன் சொன்னதைக் கேட்டு, “எல்லாம் நேரம்… சுபத்ரா ராதிகாவை மிரட்டறாளா? அதுக்கு கட்டுப்பட ராதிகா என்ன முட்டாளா? இன்னும் எவ்வளவு காலம் இப்படி இவங்களுக்கு பயந்து ஓடிட்டே இருப்பாளாம்?” என ராஜேஷ் கோபப்பட்டார்.
பிறகு இருவரையும் பார்த்து, “சரி வாங்க… என் ரூமுக்கு போயிடலாம்…” என இருவரையும் அழைத்துக் கொண்டு தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு அழைத்து சென்றவர், அப்பொழுது நடந்ததை எல்லாம் இருவருக்கும் சொல்லத் தொடங்கினார்.