பல போராட்டங்களைக் கடந்த அந்த வீடு விலை போனதில் கம்பெனி முழுக்க பிரபலமாகியிருந்தாள் ஜீவனா.
திருமூர்த்தி மகளை தன் கேபினிற்கு அழைத்து, “செம ஜீவனா அசத்திட்ட. எனக்கு உன்னோட திறமையைப் பத்தி தெரியும். நீ என் வாரிசு ஆச்சே…” என பெருமையாகப் பேச சுபத்ராவின் முகத்தில் எரிச்சல்.
என் ரத்தம், என் வாரிசு என்பது போன்ற பேச்சுக்கள் ஏனோ அவளுக்குப் பிடிப்பதே இல்லை.
ஜீவனா எந்த பாவனையும் பெரிதாகக் காட்டாமல் அமைதியாகவே தான் இருந்தாள். தந்தையின் பேச்சுக்களையும் பார்த்தாள், அதற்கு சிற்றன்னை முகம் சுணக்கத்தை காட்டுவதையும் பார்த்தாள்.
“இன்னைக்கு முழுக்க உன் பேச்சு தான் ஆபிஸ் முழுக்க… நாளுக்கு நாள் போட்ட பணம் முடங்கி நஷ்டக்கணக்கு அதிகமாயிட்டே போயிட்டு இருந்த நேரம் எவ்வளவு அழகா சமாளிச்சு கொண்டு வந்திருக்க… இன்னும் சொல்லப்போனா நல்ல லாபத்துலயே வீட்டை வித்துட்டோம். நீ என் பொண்ணு ஆச்சே… அதெப்படி சாதிக்காம போவ? எல்லார் முகத்துலயும் கரியை பூசிட்டோம்…” என்று சாதித்தவர் போல ஆர்ப்பாட்டமாகப் பேசினார்.
இப்பொழுது இப்படி எல்லாம் பேசும் தந்தை தான் சில வருடங்கள் முன்பு, “பொண்ணுக்கு எதுக்கு இவ்வளவு தண்ட செலவு செய்யற? நீ சம்பாதிக்கிறது எல்லாத்தையும் இப்படியே செலவு செஞ்சே தீர்த்துட்டேனா நாளைக்கு அவள மேல் படிப்பு படிக்க வைக்க, கல்யாணம் பண்ணி வைக்க எல்லாம் எப்படி செலவு செய்வ? என்கிட்ட எல்லாம் எதுவும் எதிர்பார்த்து நின்னுடாத… நாங்களே சுபத்ராவோட ட்ரீட்மெண்ட் செலவு, எங்க செலவுன்னு திணறிட்டு தான் இருக்கோம்” என்று அன்னையிடம் கடினமாக பேசியதைக் கேட்டிருக்கிறாள்.
அவர்கள் என்னவும் செலவு செய்துவிட்டு போகட்டும். அது இல்லை ஜீவனாவின் பிரச்சினை. ஆனால், தாயை கேள்வி கேட்க இவருக்கு என்ன உரிமை? தாயின் சம்பாத்தியம், அதில் அவர் மகளுக்கு அவர் செலவு செய்கிறார். கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாமல் அதனைப் போய் கேள்வி கேட்டார்.
அன்று தந்தைக்குத் தோன்றாத தன் வாரிசு என்ற எண்ணம் இப்பொழுது தோன்றுகிறது. காரண காரியம் இல்லாமல் எதுவுமே இல்லை போல என்று ஜீவனா விரக்தியாகப் புன்னகைத்துக் கொண்டாள்.
இதற்கும் திருமூர்த்தி தண்ட செலவு என குறிப்பிட்டது அவளது பள்ளியில் அழைத்துப் போன இரண்டு நாட்கள் ட்ரிப்பிற்காக.
ராதிகா ஜீவானம்சம் என்ற பெயரில் கூட ஒரு பைசா திருமூர்த்தியிடம் வாங்கியதில்லை. அந்த நிலையிலேயே இப்படி ஒரு பேச்சு! சுயம்பு மனுஷியான ராதிகா இவர் பேச்சை மதித்து நின்று கேட்டதாக சரித்திரமே இல்லை. விட்டு சென்ற கணவனிடம் கொஞ்சம் அலட்சியத்தை கடைபிடிப்பார். அது திருமூர்த்திக்கு கடும் எரிச்சலைத் தரும்.
தான் சொன்னதை ராதிகா அலட்சியப்படுத்தவும், “இந்த திமிரு மட்டும் குறையறதே இல்லை என்ன? இந்த திமிரும் அகங்காரமும் தான் உனக்கான சொத்தைக்கூட வாங்கிக்காம உன்னை முரண்டு பிடிச்சு இப்படி தனியா உட்கார வெச்சிருக்கு… அதுவும் மாச சம்பளத்துல பிச்சை எடுக்கிற நிலைமையில. அப்பவும் திமிரு குறைய மாட்டேங்குதே உனக்கு? ஆனா கடவுள் இருக்காரு… அதுதான் உன்னை மாதிரி ஆளுங்களை எல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வைச்சிருக்காரு…” என்று நக்கல் சிரிப்புடன் திருமூர்த்தி சொல்ல, ராதிகாவின் முகம் தன் கட்டுப்பாட்டை மீறி கலக்கத்தைக் காட்டியது.
அம்மாவின் முகம் வாடி அது போன்ற சமயங்களில் தான் ஜீவனா பார்ப்பாள். என்ன தந்தை பேசும் எதற்கும் அர்த்தம் விளங்காது. அன்னையின் கலங்கிய தோற்றத்தைப் பார்த்து தந்தையிடம் கோபம் கோபமாக வரும். வெளிக்காட்டவும் அவளுக்கு அனுமதி இல்லை.
அப்பொழுது திருமூர்த்தி குறிப்பிட்டுச் சொன்ன ட்ரீட்மெண்ட் செலவு என்பது சுபத்ராவிற்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் கிடைக்காததால் ஐ. வி. எப்., முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அதைத் தான் சொல்லியிருந்தார் என்பது பின்னாளில் விவரம் தெரியும் வயதில் அம்மா அதுகுறித்து பேசியபோது புரிந்து கொண்டிருக்கிறாள். ஆனால், பாவம் இவர்களுக்கு அந்த வாய்ப்பிலும் குழந்தை அமையாமல் போய் விட்டது என்று அம்மா வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.
அவர்களுக்கு குழந்தை அமையவில்லை என்பதில் அம்மாவுக்கு ஏன் வருத்தம் என்று பல நாள் யோசித்திருக்கிறாள். அதற்கும் அர்த்தம் சமீபமாகத்தான் விளங்கியது. பிள்ளையே பிறக்காததால் தானே அதுவரை ஆகாத மகளாக இருந்த ஜீவனா மீது பாசமும், ஆதிக்கமும் என புரிந்துகொண்டவளுக்கு அம்மா ஏன் இப்படி விட்டுக்கொடுத்து போக வேண்டும் என்பதுதான் புரிய மறுத்தது.
“இப்ப முடிச்சு சேல் பண்ணின பிராஜெக்ட் செம தலைவலிடா… நானும் சுபாவும் எவ்வளவு எஃபர்ட் போட்டோம் தெரியுமா? என்னவோ கொஞ்சம் கூட லக்கே இல்லாத பிராஜெக்ட். நிறைய செலவை இழுத்து விட்டுடுச்சு… சரி விலை போகும்ன்னு பார்த்தா அங்கேயும் காலை வாரி…” என சொல்லிக் கொண்டே வந்தவர், “உஃப்…” என பெருமூச்சை விட்டுவிட்டு, “நீ சரி பண்ணி தந்துட்ட…” என்றார் ஆசுவாசமாக.
சுபத்ரா, “ம்ம்ம்…” என்றார் அழுத்தமாக. திருமூர்த்தி சுதாரித்தவராய், “சரி அதுதான் எல்லாம் சரி ஆயிடுச்சே… ம்ம் அப்பறம் மேற்கொண்டு நம்ம கையில இன்னும் ரெண்டு பிராஜெக்ட்ஸ் இருக்கு… அதுல இன்வால்வ் ஆக ஸ்டார்ட் பண்ணிடு…” என்று சொல்ல,
அவள் லேசாகத் தலையசைத்தாள். கொஞ்சம் இவர்களின் நோக்கம் புரிவது போல இருந்தது. அதாவது தன் வேலையைப் பற்றி, திறமையைப் பற்றித் தெரிந்ததும் அதன்மூலம் ஆதாயம் தேட இங்கு அழைத்து வந்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டாள்.
ஆனால், இவ்வளவு பெரிய கம்பெனியில் தான் வந்துதான் இதை செய்ய வேண்டுமா என்ன? எத்தனை பிராஜெக்ட் இங்கு நடக்கிறது. அவர்கள் எல்லாம் இந்த பிராஜெக்டுகள் ரெட் ஜோன் நோக்கி நகரும் போது எதையும் செய்ய மாட்டார்களா என்ன? மாட்டார்கள் என்றால் ஏன்?
ஜீவனாவிற்கு குழப்பமாக இருந்தது. என்னவோ சில புள்ளிகள் இணைய மறுக்க, அவளின் தந்தையும் சிற்றன்னையும் இப்பொழுது போய்க்கொண்டிருக்கும் பிராஜெக்டுகள் குறித்த தகவல்களைச் சொன்னார்கள்.
ஏற்கனவே கௌதமன் சொல்லி இருக்கிறானே! இது தொடர்பான சாஃப்ட் காஃபி கூட அவளுக்கு அனுப்பப்பட்டு விட்டது. இவளும் தந்தையுடன் பணி புரிய வேண்டியிருக்கும் போல என்று ஆரம்பத்தில் எண்ணினால் தான்! ஆனால், அது என்ன இவர்கள் பார்க்கும் பிராஜெக்டுகள் மாத்திரம் இவள் வேலை செய்வது? மற்ற பிராஜெக்டுகளிலும் இருந்தால் தானே கொஞ்சம் கற்றுக்கொள்ள முடியும்.
இவர்கள் இதுபோல தான் யோசிப்பார்கள் என்று அனுமானித்தவன் போல கௌதமன் எப்படி சரியாக இவர்கள் பார்க்கும் மூன்று பிராஜெக்டுகள் குறித்த விவரங்களை மட்டும் நான் வேலைக்குச் சேர்ந்த அன்று என்னிடம் பகிர்ந்து கொண்டான்?
யோசிக்க யோசிக்கக் குழப்பம் தான் மிஞ்சியது.
“என்ன யோசிக்கிறமா? உன் முகமே சரி இல்லையே…” என திருமூர்த்தி கேட்க, “ஒன்னும் இல்லைப்பா… ஏதோ யோசனை… நான் இந்த பிராஜெக்ட் டீடைல்ஸ் பார்க்க ஆரம்பிக்கிறேன்…” என்று சொல்லிவிட்டு பைல்களுடன் வெளியே செல்ல, செல்லும் அவளையே தான் யோசனையாகப் பார்த்தார் திருமூர்த்தி.
அவள் சென்றது தான் தாமதம் சுபத்ரா தொடங்கி விட்டார். “நமக்கு வேற வழி இல்லாம தான் அவளை இங்கே கொண்டு வந்தோம்ன்னு இப்ப அவகிட்ட சொல்லியே ஆகணுமா நீங்க?” என கத்த,
“நான் எங்கே சுபா அப்படி சொன்னேன். சும்மா உளறாத…” என பதிலுக்கு திருமூர்த்தியும் எரிச்சலுடன் கேட்டார்.
“அது தான் பார்த்தேனே… நீ வந்து தான் எங்க பிழைப்பே ஓடுதுங்கிற ரேஞ்சுக்கு பில்டப் தந்து பேசிட்டு இருக்கீங்க. எல்லாமே ஒரு அளவுக்கு தான்… கம்பெனி அண்ணன் கண்ட்ரோல்ல இருந்த வரைக்கும் நமக்கு பிரச்சினை இல்லாம போயிட்டு இருந்துச்சு. நம்ம இஷ்டத்துக்கு யாரை வேணும்ன்னா யூஸ் பண்ணி பிராஜெக்ட் நல்லபடியா முடிச்சுட்டு இருந்தோம்.
எப்ப இந்த கெளதம் வந்தானோ அப்பவே நம்மளை நோண்ட ஆரம்பிச்சுட்டான். முழு பிராஜெக்ட்டும் நம்ம மட்டுமே தனியா செய்யணுமாம். எப்படி நம்மளை கண்காணிக்கிறான் பாருங்க. பிராஜெக்ட் மோசமான நிலைக்கு போன அப்பறமும் யாரையும் அசைன் பண்ணலையே… அவனுக்கு இது எப்படி தாத்தா சொத்தோ… அதேமாதிரி எனக்கும் இது எங்க அப்பன் வீட்டு சொத்து… அவனுக்கு இருக்கிற உரிமைக்கு கொஞ்சமும் குறைவில்லை என்னோட உரிமை… ஆனா என்னை எப்படி எல்லாம் அலைய விடறான்… கையில இருக்க மூணு பிராஜெக்ட் முதல்ல சரியா முடிங்க அப்பறம் மேற்கொண்டு பிராஜெக்ட் எடுக்கலாம்ன்னு கட் அண்ட் ரைட்டா பேசறான்…” என உறுமிவிட்டு,
“சேலம்ல இவ பண்ணின பிராஜெக்ட்ஸ் பாத்துட்டு இவ மூலம் காரியம் ஆகும்ன்னு தான் இங்கே கூட்டிட்டு வந்திருக்கோம்… அதுக்குன்னு இவ வந்து தான் இங்கே தூக்கி நிறுத்திட்டு இருக்கான்னு இவளுக்கு எல்லாம் கொம்பு சீவி விட்டுட்டு இருக்காதீங்க… இவளை எல்லாம் தட்டி வைக்காட்டி அப்பறம் நம்ம இவளை வெச்சு போட்டிருக்கிற திட்டம் எல்லாம் தவிடுபொடி தான்…” என வன்மமாகப் பேச, திருமூர்த்திக்கு தலையிடியாக இருந்தது.
“இந்த சொத்து, சுகம், வளர்ச்சி எல்லாம் உங்க அண்ணன் தலையெடுத்த பிறகு தான் சுபா. அதுவும் இப்ப கம்பெனி தொட்டிருக்க உயரத்துக்கு காரணம் கெளதம் மட்டும் தான். உனக்கு சேரவேண்டிய சொத்தை உன்கிட்ட பிரிச்சு எப்பவோ கொடுத்துட்டாங்க. இந்த கம்பெனியில கூட நமக்கு எந்த உரிமையும் இல்லை. அது உனக்கும் நல்லா தெரியும். நாம பாட்டுக்கு பேசாம இருந்தா நம்ம நிலைமை மோசமாகாது… நீ மேல மேல ஆசை படறியோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு… எதுக்கு இதெல்லாம் தேவை இல்லாம…” என்றார் திருமூர்த்தி. அவர் ஒன்றும் அவ்வளவு நல்லவர் இல்லை. எங்கே இருப்பதும் போய்விடுமோ என்னும் பயம் அவருக்கு. அதில் தான் இவ்வாறு பேசினார்.
“என்ன? என்ன சொன்னீங்க? நான் ஆசை படறேனா? அதெப்படிங்க என்னை பார்த்து அப்படி சொல்லுவீங்க… எங்க அண்ணன் கிட்ட தான் இவ்வளவு பணம் இருக்கே… எவ்வளவு வசதியா சுக போகமா இருக்கான். எனக்கு கொடுக்கிறதால என்ன குறைஞ்சு போயிடுவான்… நான் அவனோட ஒரே தங்கச்சி தானே… அதெல்லாம் கொடுக்கலாம் தப்பில்லை… நானும் எனக்கு வேணும்ங்கிறத எடுத்துக்கலாம் அதுக்கு எனக்கு உரிமை இருக்கு…” என்று சுபத்ரா சொல்ல, இவளிடம் பேசி பயன் இல்லை என திருமூர்த்தி அமைதியாக விட்டு விட்டார்.
*** தேநீருடன் அந்த கம்பெனியின் பார்க்கிங் அருகே இருக்கும் சின்ன ஓபன் ஏரியாவில் ஒரு மரத்தின் அடியில் போடப்பட்டிருந்த கல் பெஞ்சில் அமர்ந்திருந்த ஜீவனாவின் யோசனை நிச்சயம் இங்கில்லை. தொலைதூர வானத்தை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள்
சென்னைக்கு அவள் ஏன் வந்தாள் என்று இன்னமும் அவளுக்கு விளங்கவில்லை. அப்படி என்ன இவர்களால் அம்மாவுக்கு ஆகிவிட போகிறது? வழக்கம்போல பட்டும் படாமலும் இருந்துவிட்டுப் போவதை விட்டுவிட்டு அடிக்கடி அம்மாவை சீண்டி சீண்டி பேசுகிறார்கள் இவர்களுக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என்று வீராவேசமாக இங்கே வந்திருக்கவே வேண்டாமோ என்று தன்னையே கடிந்து கொண்டிருந்தாள்.
கிட்டத்தட்ட ஒரு மாதமாக இங்கே வந்து வேலையில் மூழ்கி விட்டவளுக்கு தாயைப்பற்றிய எண்ணங்கள் தான் அதிகம். இதுவரை அதிகம் அவரை பிரிந்து இருந்ததில்லை. அதனால் மனதளவில் வெகுவாக தளர்ந்து போனாள். தாயிடமும் சமீப காலமாய் சோர்வு மிகுந்து காணப்படுவது புலப்படுகிறது. பிரிவு ஏக்கம் இருக்கும் என்று புரிந்தாலும் இந்தளவிற்குத் தளர்ந்து தெரிவது கொஞ்சம் மனதை பிசையத் தொடங்கியிருந்தது.
அதோடு கல்வி தொடக்கம் வேலை வரை அனைத்தையும் இவள் இஷ்டத்திற்கு விட்டுவிட்ட அன்னை இப்பொழுது திருமணத்திற்கு மட்டும் கொஞ்சம் அவசரப்படுகிறாரோ என்று தோன்றியது.
“ஒரு நல்ல வரன் வந்திருக்கு ஜீவா…” என்று அன்னை நேற்றிரவு பேசியதைக் கொஞ்சம் அதிர்வோடு தான் கேட்டாள்.
“அம்மா… நான் படிப்பை முடிச்சு ஒரு வருஷம் கூட ஆகலைம்மா…” என்று தவிப்பாக சொன்னவளின் குரலைக் கிரகித்தாலும், அமைதியான குரலிலேயே, “நல்ல வரன் ஜீவா…” என்று சொன்ன அன்னையின் முகத்தைத் தொலைப்பேசியின் திரை வழியே பார்த்த ஜீவனாவிற்கு அவரின் அழுத்தம் புதியது.
கொஞ்சம் சோர்ந்தும் போனாள். திருமணத்திற்கு அவள் நிச்சயம் தயாராக இல்லை. ஆனால், அன்னை இப்படி தன் விருப்பத்திற்கு எதிராக அழுத்தமாக ஏன் சொல்கிறார் என்றும் புரியவில்லை.
“நான் சென்னையில வேலை பார்க்கிறது உங்களுக்கு இஷ்டம் இல்லையாம்மா… அப்படி இருந்தா சொல்லுங்க இப்பவே வேலைய விட்டுட்டு சேலத்துக்கே வந்துடறேன்…” என்று கேட்டபோதும்,
“எனக்கு விருப்பம் இல்லாட்டி உன்னை சென்னைக்கு போகவே விட்டிருக்க மாட்டேன் ஜீவாம்மா. கண்டதையும் யோசிச்சு குழப்பிக்காத. உண்மையிலேயே நல்ல வரன். அவங்களா கேட்டும் வராங்க. பையன் கூட சென்னையில தான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கா வேலை பார்த்துட்டு இருக்கான். நீ படிச்சு முடிச்சுட்ட, நல்ல வேலை. சொந்த காலுல நிக்கிற அளவுக்கு வந்துட்ட… இனியும் ஏன் தாமதிக்கணும்டா…”
அன்னையின் இந்த பேச்சு அவளுக்கு முற்றிலும் புதிது. திருமணம் செய்ய யோசிக்கிறார் என்று கூட இதுவரை பேச்சுவார்த்தை வந்ததில்லை. ஒரே ஒருமுறை தொடங்கினார் தான், ஆனால் இவளின் அழுத்தமான ‘அம்மா’ என்ற அழைப்பில் அன்றே அந்த பேச்சு முடிவுக்கும் வந்து விட்டிருந்தது. இப்பொழுது திடீரென்று வரன் என்று சொன்னால் என்னவென்று சொல்வது?
“இப்ப எதுவும் பேச வேண்டாம் மா… இந்த வீக் ஊருக்கு வரேனே… அப்ப பேசிக்கலாம்…” என்று தான் நேற்றைய பேச்சை முடிக்க வேண்டியதாய் இருந்தது. நேரில் சென்று பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தாள். அம்மா தான் சொன்னால் புரிந்து கொள்வார் என்பது அவளின் எண்ணம்.
ஆனால் இவள் என்ன பேசினாலும் ராதிகா வழிக்கு வரமாட்டார் என்று புரிந்தால் ஜீவனா எப்படி சாமாளிப்பாளோ?