மௌனமதில் யுத்தம் ஏனடி? – 4

புதிதாக வளர்ந்து வரும் பகுதியில் அமைந்திருந்தது லக்ஷ்மி கன்ஸ்ட்ரக்ஷன் கட்டியிருந்த அந்த தனி வீடு. அனைத்து வேலைகளும் முடிந்திருந்தது. ஆனால், இன்னும் விலை போகவில்லை.

அதனை பார்க்கத்தான் ஜீவனா வந்திருந்தாள். கிட்டத்தட்ட வேலைக்குச் சேர்ந்து மூன்று நாட்கள் கழித்து ஒரு வழியாக இன்று தான் சைட் விசிட் வர முடிந்தது அவளால். கம்பெனியின் லேப்டாப் வாங்குவது, ஜாயினிங் பார்மாலிட்டீஸ், அவளின் வேலைகள் என்னென்ன இருக்கும், யாருடன் பணிபுரிய வேண்டும் போன்ற தகவல்கள் பகிரப்படுவது என நாட்கள் போயிருக்க, இன்று ஒரு வழியாக கம்பெனியின் காரில் இங்கு வந்து விட்டாள்.

அந்த வீட்டை முழுவதுமாக புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு, ஒவ்வொரு இடத்தையும் கவனித்துப் பார்த்து வந்தவளுக்கு அப்பொழுதே மனதில் சில பல கணக்கீடுகள்… என்னென்ன செய்யலாம் என்பது போல!

மீண்டும் அலுவலகம் வந்ததும் என்னென்ன மாறுதல்கள் செய்ய வேண்டியதாக இருக்கும், அதற்கு எத்தனை பட்ஜெட் தேவைப்படும் என்று வேகமாக லேப்டாப்பை எடுத்துக் குறித்து வைக்கத் தொடங்கினாள்.

ஏற்கனவே இந்த வீடு கட்ட நிறைய செலவு ஆகியிருந்ததை கௌதமன் காட்டிய அறிக்கையின் மூலம் தெரிந்து வைத்திருந்தாள். அந்த அறிக்கையில் தான் அவளது பார்வை இப்பொழுது.

இவ்வளவு அதிகமாகச் செலவு செய்திருக்கிறார்களே என்று அங்கலாய்ப்பாக இருந்தது. இதன்மூலம் கண்டிப்பாக கம்பெனியின் லாபம் பெரிதளவு அடி வாங்கலாம். இன்னும் செலவை இழுத்து வைத்தால் அதன் மூலம் லாபம் இன்னும் அடி வாங்குமே… ஆக, யோசித்து யோசித்துத் தான் திட்டங்களைப் போட்டாள்.

வீட்டின் டிசைனிங் இருந்த போல்டர் ஏற்கனவே இவளுக்கு ஷேர் செய்யப்பட்டிருக்க, அதில் எடுத்து தான் யோசித்த மாறுதல்களை செய்யத் தொடங்கினாள். வெகு நேரம் லேப்டாப்பை விட்டுக் கூட தலையை நகர்த்தாமல் வேலை செய்து கொண்டிருந்தவளை, “லன்ச் போகிற ஐடியா இல்லையா?” என்ற கௌதமனின் குரல் தான் கலைத்தது.

அவளின் கை அப்படியே நிற்க, அவசரமாக தன்னை சுற்றி நோட்டமிட்டாள். அங்கு யாருமே இல்லை. அனைவரும் உணவுண்ண சென்று விட்டார்கள் போலும். வேலை வேறு பாதியில் இருக்கிறது… உணவு உண்ண சென்றால், அது வேறு அரை மணி நேரம் வீண். அதோடு இந்த ஹாஸ்டல் உணவு வேறு வாயில் வைக்க முடிவதில்லை என்று எண்ணியபடியே வேண்டா வெறுப்பாக உணவு பையை நோக்க, அது கௌதமன் பார்வையிலும் பட்டு விட்டது.

“சரி வா… இன்னைக்கு என்கூட லன்ச் சாப்பிடுவியாமா?” என அவன் பாட்டிற்கு அவளின் உணவு பையைத் தூக்கிக்கொண்டு நடக்க, அவள் பத்ரகாளியாகிப் போனாள்.

‘இவன் என்ன தான் நினைச்சுட்டு இருக்கான்?’ என்ற கோபத்தோடு தன் பையைத் திரும்பப் பெற வேகவேகமாக அவனை பின்தொடர, அவனோ அதற்குள் அவனது அறைக்குள் நுழைந்திருந்தான். இவளும் வேகமாக உள்ளே நுழைய, இவள் உள்ளே வருவதற்காகவே காத்திருந்தவன் போல, உள்ளே நுழைந்தவுடனேயே வேகமாக அறையை சாவி கொண்டு பூட்டி விட்டு தன் பேண்ட் பாக்கெட்டிற்குள் போட்டு விட்டு சோம்பல் முறித்து அவளை சீண்டினான்.

இனி அவனாக மனது வைக்காமல் வெளியேற முடியாது. சோர்ந்து போனாள். இவனுக்கு இதில் எல்லாம் என்ன விளையாட்டு என்று கடுப்பாக வந்தது. முகத்தைப் பக்கவாட்டாக திருப்பி வைத்துக்கொண்டு கோபமாக நின்றிருந்தாள்.

இருவருக்குள்ளும் இயல்பான பேச்சுவார்த்தை என்றால் கௌதமுக்கு இந்தளவிற்கு சீண்ட தோன்றாது போலும்! அவள் புறக்கணிக்க புறக்கணிக்க இவனுக்கு வீம்பு தலை தூக்குகிறது.

அவளின் முகத்தைப் பார்த்துவிட்டு, “விளையாட்டு எல்லாம் இல்லை… இந்த சாப்பாட்டை பாவமா பாத்தியே அதுதான் உங்க ஹாஸ்டல் சாப்பாடு என்ன அழகுல இருக்கும்ன்னு பார்க்க ஒரு ஆர்வம்…” என்று சொல்லியபடி அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன் அவளின் உணவை அவன் பாட்டிற்குத் திறக்க,

‘விளங்காதவன்… எதை மனசுல நினைச்சாலும் சரியா கண்டுபிடிச்சுக்கிறான்… இப்ப என் சாப்பாட்டை டெஸ்ட் பண்ண சொல்லி இவனை யாராச்சும் கூப்பிட்டாங்களா?’ என மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டிருந்தாள். வேலைக்கு வேறு நேரம் ஆகிறது. இன்றைக்குள் என்னென்ன மாறுதல்கள் தேவைப்படும் என்று திட்டமிட்டு விடலாம் என்று நினைத்திருந்தாள்.

“இப்படியே சிலுப்பிட்டு என்னை மனசுக்குள்ள திட்டிட்டே இருந்தா மட்டும் வேலை சீக்கிரம் முடிஞ்சுடாது. பேசாம வந்து உட்கார்ந்து சாப்பிட்டா இந்த ரூமை விட்டு போகலாம். இல்லாட்டி எவ்வளவு நேரம் ஆனாலும் இங்கேயே தான் நிக்க வேண்டி இருக்கும். அப்பறம் உனக்கு தான் நீ பிளான் பண்ணின வேலை எல்லாம் முடிக்க முடியாது… ஒருவேளை என்கூட டைம் ஸ்பெண்ட் செய்யணும்ன்னு ஆசை இருந்தா இன்னும் கொஞ்ச நேரம் நீ தாராளமா நிக்கலாம்…” என கௌதமன் சொல்ல ஜீவனாவிற்கு ஆயாசமாக இருந்தது.

வேறு வழியில்லாமல் கடுப்புடன் வந்து அமர, அவனுடைய உணவு பையை அவள் புறம் நகர்த்தி வைத்தான். அவளுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. அந்த பையை கொண்டே அவனை அடித்தால் என்ன என்று எண்ணுமளவிற்கு கடுப்பு.

அவள் நிலை புரிந்து கௌதமன் சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டான். எப்படியாவது அவளை பேச வைத்து விட வேண்டும் என்று தான் வேண்டுமென்றே சீண்டிக் கொண்டிருக்கிறான். அவளின் வைராக்கியம் அறியாதவன் பாவம்!

வேண்டா வெறுப்பாக கௌதமின் உணவை உண்ணத் தொடங்கிய ஜீவனாவின் விழிகள் விரிந்தது. ‘அட! நல்ல சாப்பாடு…’ என அதன்பிறகு ஆர்வமாக உண்ணத் தொடங்கி விட்டாள்.

ஏதோ ஒரு அவசரத்தில் ஜீவனாவின் உணவை உண்ணத் தொடங்கிய கௌதமுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் முடியவில்லை. திணறி திணறி உண்ணும் நிலை! இப்பொழுது பாவமாக அவளை ஏறிட்டுப் பார்த்தான்.

ஜீவனாவிற்கோ பயங்கர சிரிப்பு. ‘மாட்டிக்கிட்டியா நல்லா அனுபவி…’ என ஓர விழியால் அவனின் அவஸ்தையை கவனித்தவள் கமுக்கமாக அவனது வீட்டு உணவை உண்டு கொண்டிருந்தாள்.

உண்மையில் நல்ல சாப்பாடு சாப்பிட்டே பல நாள் ஆனது போல ஆகிவிட்டது இந்த நான்கு நாட்கள் ஹாஸ்டல் உணவிற்கே! இப்பொழுது தான் நல்ல உணவே கண்ணில் சிக்கியிருக்கிறது. அதனால் கூச்சம் பார்க்காமல் உண்டு கொண்டிருக்க, “ம்ம்… க்கும்ம்…” என்று குரலை செருமினான் கெளதம்.

இவளாவது கவனிப்பதாவது… உண்ணுவதை நிறுத்தவே இல்லை.

“ஆக்டுவலி தப்பு என் மேல தான்… இப்படி அடுத்தவங்க சாப்பாட்டை மொத்தமா பிடுங்கி சாப்பிட்டிருக்கக் கூடாது. வேணும்ன்னா இப்ப எக்ஸ்சேன்ஜ் பண்ணிக்கலாமே… ஷேரிங் மாதிரி இருந்துட்டு போகட்டும்…” என்றான் என்னவோ அவனாக முன்வந்து விட்டுக்கொடுப்பவன் போல!

ஜீவனா துளி மாறுதல் இல்லாமல் பேசாமல் உண்டு கொண்டிருந்தாள். அவனுக்கு வேறு அந்த உணவை உண்ணவே முடியவில்லை. பாவமாக அவளை பார்த்துக்கொண்டே அடுத்த வாயினை வேண்டா வெறுப்பாக எடுத்து வைக்க, பாவம் பார்த்தோ என்னவோ இவனுடைய லன்ச் பாக்சிலிருந்து ஒரு பகுதியை எடுத்து அவனுக்கு நகர்த்தி வைத்தாள்.

“ரொம்ப நல்ல மனசு தான்… என் சாப்பாட்டை எனக்கே கொடுக்கிறா…” என முணுமுணுத்தபடி கெளதம் உண்ண, இவளுக்கு சிந்தனை எல்லாம் அந்த பிராஜெக்ட் பற்றி தான்.

அவள் யோசனை எங்கிருக்கிறது என்று புரிந்தவன் போல, “ஜீவனா…” என்றான் அவளை கலைக்கும் விதமாக அழுத்தமான குரலில்.

வேறு யோசனையில் இருந்ததாலோ என்னவோ சட்டென்று அவனைப் பார்த்து விட்டு, உடனே சுதாரித்தவளாய் தலையை உலுக்கிக்கொண்டு கவிழ்த்துக் கொண்டாள்.

‘இவ ஒருத்தி… வெட்டியா வீம்பு பிடிச்சிட்டு… முகத்தைக் கூட பார்க்க மாட்டாளாம்’ என கடுப்புடன் முணுமுணுத்தவன், “அந்த பிராஜெக்ட்ல லாபம் குறையறது இப்ப பிரச்சினை இல்லை. குறைஞ்சா குறைஞ்சிட்டு போகட்டும். ஆனா, போட்ட பணம் முடங்கி போயிட கூடாது. சோ போகஸ் ஆன் தட். அந்த பிராஜெக்ட் எக்காரணம் கொண்டும் ஹோல்ட்’ல இருக்கக்கூடாது… அதுக்கு என்ன பண்ணலாம்ன்னு பாரு. டூ தி பெஸ்ட்…” என்று சொல்ல, மௌனமாக அமர்ந்திருந்தாள்.

இப்படி மௌனத்தில் மாத்திரம் சம்மதம் தருபவளை, முகத்தைக் கூடக் காண மறுத்து, ஒரு வார்த்தையும் பேசாமல் வீம்பு பிடிப்பவளை அணுகும் வழி அவனுக்குத் தெரியவில்லை.

‘தன்னால் அவளின் மௌனத்தை உடைக்க முடியுமா?’ என்ற சந்தேகம் எழுந்து விட்டது. தன்னை அறியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் ஆழமான பார்வை என்ன செய்ததோ அவளிடம் லேசான தடுமாற்றம்.

உணவை உண்ண முடியாமல் சற்று தடுமாறினாள். நீரை எடுத்துப் பருக அது கூட சிந்திச் சிதறியது.

அவளின் தடுமாற்றம் ஏன் என்று புரிந்து விட்டது. ஆக, உணவை உண்டு கொண்டே இருந்தாலும் பார்வை மாத்திரம் கூர்மையாக அவளிடம் மட்டுமே!

‘இப்ப என்ன தான்டா வேணும் உனக்கு? எதுக்கு இப்படி பார்க்கிற?’ என்று அவளின் முகத்தில் தடுமாற்றத்துடன் சேர்ந்து கோபமும் தெரிந்தது.

சிரிப்பை அதக்கியவன், “ஆக்டுவலி இப்ப என்ன வேணும்ன்னு கேட்டா கொஞ்சம் ஏடாகூடமா தான் கேட்டு வைப்பேன் போல…” என அவள் மேல் சிதறிய நீர்த்துளிகளைப் பார்த்தபடியே சொன்னவன், வேகமாகத் தலையை உலுக்கி இதழ் குவித்து காற்றை வெளியேற்றி இருந்தான்.

‘என்ன சொல்லறான் இவன்?’ என கொஞ்சம் திடுக்கிட்டது பெண் மனது. ‘விளையாட்டாகக் கேலி பேசுமளவு நெருக்கம் வந்து விட்டதா என்ன? ஒருவேளை வரவைத்துக் கொண்டானோ?’ அவன் பேசியதைத் தீவிரமாக எல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை அவள். விளையாடுகிறான் என்று தான் எண்ணினாள். இதுபோல விளையாட்டாகப் பேசுமளவு எல்லாம் இவனுக்கு இடம் கொடுக்கக் கூடாது என தனக்குள் சொல்லியும் கொண்டாள்.

ஆனால், அவனே அறியாமல் தானே இதுபோல பேசி வைத்திருந்தான். ஆக, இப்பொழுது தடுமாற்றம் கௌதமிடம்!

சங்கடமான மௌனம் அவ்விடத்தில். அதை உடைக்க வாய்ப்பிருக்கும் ஒரே ஒருவனும் உடைக்கும் நிலையில் இல்லை. அவஸ்தையுடன் இறங்கியது உணவு இருவருக்கும்.