யாருக்கோ என்ன அது நிச்சயம் திருமூர்த்திக்காகத்தான் இருக்கும் என்று அவனுக்குத் தெரியும்.
கடுப்புடன் கைப்பேசியை எடுத்து, “இன்னைக்கு முழுக்க நீ வெயிட் பண்ணினாலும் அவங்க வர போறதில்லை. டூ யூ வான்னா ஜாயின் டுடே ஆர் நாட்?” என்கிற கேள்வியுடன் ஒரு மெசேஜை தட்டி அனுப்பி விட்டான்.
மெசேஜை படித்ததும் புரிந்து விட்டது அவன்தான் என்று! இன்னமும் அவன் பெயர் கூட அவளுக்குத் தெரியாது!
ஒரு பெருமூச்சுடன் எழுந்து ரிஷப்சனிஸ்ட் பெண்ணிடம் சென்று, “திருமூர்த்தி, சுபத்ரா ரெண்டு பேரும் இன்னைக்கு வர மாட்டாங்களா?” என ஜீவனா மீண்டும் விசாரிக்க,
அவர்கள் இருவரும் அலுவலகத்திற்கு வருவதே அதிசயம் என்றும்… அப்படியே வந்தாலும் நேரம் காலத்துடன் வந்த சரித்திரமே இல்லை என்றும்… எப்படி அந்த பெண்ணால் உடைத்துச் சொல்ல முடியும்… “கௌதமன் சார் இருக்காரு மேடம்… நீங்க அவரையும் பார்க்கலாம். அவர் தான் கம்பெனியில சி.ஓ.ஓ.,” என்று சொல்ல, இவள் முகம் விழுந்து விட்டது.
கௌதமன் அது தான் அவன் பெயர் போல… புத்தரின் பெயரை வைத்திருக்கும் அவன் அவசர குணத்தை எண்ணினால் சிரிப்பு தான் வந்தது. அவன் தான் இங்கு சீஃப் ஆப்ரேட்டிங் ஆபிஸர்… அதாவது சி.ஈ.ஓ விற்கு அடுத்த நிலை. இந்த பதவியில் இருக்கும் இவனுக்கு கீழே வேலை செய்ய வேண்டும்… அவளால் முடியுமா என்ன? மொத்தமாகத் தளர்ந்து போனாள்.
‘இப்படியே வேலை வேண்டாம் என்று போய் விடலாமா?’ என்று அவள் யோசிக்க… தன்போல அன்னை ராதிகாவின் நினைவு வந்தது. குட்ட குட்ட குனிவது என்பது போல எவ்வளவு சகித்துப் போகிறார். அதுபோக சமீபமாய் ஜீவனாவிற்கு ஒரு சந்தேகம். அம்மா இப்படி அவர்களிடம் பணிந்து போவதற்கு ஏதாவது காரணம் இருக்குமோ என்று. அப்படித்தான் அவரது செய்கை சில நேரங்களில் இருக்கும். எதற்கோ கட்டுப்பட்டது போல…
அப்படி இந்த அப்பாவும், சிற்றன்னையும் அம்மாவை என்ன சொல்லி பிளாக்மெயில் செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணி இருக்கிறாளே… இப்பொழுது இங்கிருந்து சென்று விட்டால் மீண்டும் பழைய நிலை தானே தொடரும்…
என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினாள்.
அந்த நேரத்தில் கைப்பேசியில் மெசேஜ் வந்த சத்தம். எடுத்து வாசித்தாள்.
“ஈப் யூ வான்ட் டு லீவ், யூ மே கோ நௌ… அண்ட் ஜாயின் பேக் ஒன்ஸ் தே ஆர் அவைலபிள்…” என்று கௌதமன் தான் அனுப்பி இருந்தான்.
நீண்டதாக பெருமூச்சை இழுத்து விட்டவள், “நான் கௌதமன் சாரையே பார்க்க போறேன்…” என்று சொல்லிவிட்டு மீண்டும் மாடி ஏறினாள்.
அந்த ரிஷப்சனிஸ்ட்டுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏதாவது சாக்கிட்டு கௌதமனுடன் பேச அனைவரும் ஆவலோடு இருந்து தான் பார்த்திருக்கிறாள். முதல்முறை அவரை பார்க்க வேண்டா வெறுப்பாகச் செல்பவளைப் பார்த்தால் ஆச்சரியம் எழத்தானே செய்யும்.
மீண்டும் கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவளை அவன் குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையை உணர்ந்தாலும் ஜீவனா அவனைப் பார்க்கவில்லை. எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள்.
அவள் தன்னை பார்க்க மறுக்கிறாள் என்று புரிய கடுப்புடனேயே, “சிட்…” என்றான் கௌதமன்.
அமர்ந்த பிறகும் எதுவும் பேசவில்லை அவள். “உங்க ஆபர் லெட்டர்…” என்று கேட்டபோது எடுத்து நீட்டினாள்.
“முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தீங்க?” இந்த கேள்விக்கும் பதில் சொல்லவில்லை அவள். அவளுடைய ரெஸியூமை மட்டும் எடுத்து நீட்டினாள்.
கௌதமனின் புருவங்கள் மேலேறியது.
‘பேசமாட்டாளாம்’ இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டான். என்னவோ அவளின் சிறுபிள்ளைத்தனமான வீம்பு ரொம்பவும் பிடித்தது. விளையாட்டு போல இருந்ததோ என்னவோ?
சிவில் என்ஜினீரியரிங் பிராசஸில் ஏதாவது சிலதை செய்து கொண்டிருந்திருப்பாள் என்று அவன் நினைத்திருக்க… அவளுடைய ரெஸியூமில் பிளானிங் தொடங்கி கம்பிளீஷன் வரை அனைத்தும் அவள் தான் பார்த்திருக்கிறாள் என்று பார்த்தவனுக்கு பெரும் வியப்பாக இருந்தது. அதிலும் இன்டீரியர் டிசைனிங் செய்வதில் மிகவும் ஆர்வம் என்று குறிப்பிட்டிருந்தாள்.
தன்னிடம் இருந்த லேப்டாப்பில் அவளின் தகவல்கள் அனைத்தையும் பார்த்தான். அவளுக்கு முன்பு கொடுக்கப்பட்டிருந்த சம்பளம் அதிகம் தான். அதாவது அந்த லெவலில் இவள் வேலை இருந்திருக்க வேண்டும். ஆக, நல்ல திறமைசாலி தான் என புரிந்தது.
இப்பொழுது கௌதமனின் புருவங்கள் முடிச்சிட்டது. ‘இவளை கொண்டு அத்தை என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறார்?’ என்று யோசித்தவனுக்கு எதையாவது ஊகிக்கும் அளவிற்குத் தோன்றினாலும் எதையும் ஊர்ஜிதமாக நினைக்க முடியவில்லை.
‘இவளுக்கு அவரின் திட்டங்களில் எந்தளவிற்கு பங்கிருக்கக் கூடும்?’ அவன் பார்வை அவளிடம் ஆராய்ச்சியாக வலம் வந்தது.
‘ரெஸியூமை பார்த்துவிட்டு இன்னும் அடுத்த கேள்வியைக் கேட்கவில்லை…’ என்று யோசித்தபடியே அமர்ந்திருந்த ஜீவனா அவனை மறந்தும் பார்த்தாளில்லை. வேண்டுமென்றே அந்த அறையில் இருக்கும் வாட்டர் கேன், சோபா, கேலண்டர், பெயிண்டிங்ஸ்,கோட்ஸ் என ஒரு இணுக்கு விடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அந்த சோபா நல்லா இருக்கல்ல…” என்று திடீரென்று கௌதமன் கேட்கவும் ஒரு நொடி ஜெர்க் ஆனாலும், ‘நான் எங்கேயோ பார்த்துட்டு போறேன் உனக்கென்னடா?’ என மனதிற்குள் அர்ச்சித்தாள்.
“நீ எங்கே பார்த்தாலும் எனக்கு ஒன்னும் இல்லை தான்… ஆனா என்னை பார்க்கவே கூடாதுன்னு வீம்புக்காக பார்க்கிறியே அதுதான் அந்த சோபாவை விட நம்ம மட்டமா இருக்கோமோன்னு சந்தேகம்…” என்றான் இழுவையாக.
‘உனக்கு அதுல எல்லாம் சந்தேகமே வேண்டாம்…’ என்பது போல இருந்தது அவளின் முக பாவனை.
அடக்க முடியாமல் சிரித்து விட்டான். அவனது சிரிப்பில் ஜீவனாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, “சீரியஸ்லி நான் அதைவிட மட்டமாவா இருக்கேன்… ஓ மை காட்.. இப்ப நான் என்ன செய்யறது?” என தன்னை மீறி வெகு இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தான்.
கௌதமன் இந்த மாதிரி இலகுவாக எல்லாம் பேசுவதே இல்லை. நண்பர்களுடன் இதுபோல இருக்கும் தான்… ஆனால், அலுவலகத்தில் அவன் கொஞ்சம் கறார் பேர்வழி. இப்படி சிரிப்பது, ஆர்ப்பாட்டம் செய்வது எல்லாம் அவனது வாடிக்கை இல்லை.
முதன்முறை தன் இயல்பை மீறி அவ்வாறு இருக்க, அது பெண்ணவளுக்கு தெரியாதே! அவள் கடுப்புடனேயே இருக்க, இன்றும் பார்வையால் கூட தன்னை தீண்ட மறுக்கிறாள் என்பதில் அவளைத் தன்னை பார்க்க வைக்க வேண்டும், அவளாக தன்னிடம் பேசியாக வேண்டும் என்று வீம்பு வந்தது கௌதமுக்கு.
இவளுக்கு என்ன வேலையை ஒதுக்கியிருக்கிறார்கள் என்கிற அனுமானம் கௌதமுக்கு இருந்தது. திருமூர்த்தி, சுபத்ராவை நம்பி மூன்று பிராஜெக்ட்டுகள் ஒப்படைக்கப்பட்டிருக்க அது இன்னும் விலை போகவில்லை. அதற்கு தான் இவளை இங்கு கொண்டு வந்திருப்பார்களோ என்று சரியாகக் கணித்தவன், அந்த பிராஜெக்ட் பற்றிய பைல்களை அவளிடம் நீட்டினான்.
அவளும் பைலை வாங்கி பார்வையிடத் தொடங்கினாள். அவனோ எழுந்து வந்து அவளருகில் நின்று கொண்டு அவளுக்கு முதல் பிராஜெக்ட் பற்றி விளக்கம் தந்து கொண்டிருந்தான்.
பிராஜெக்ட் முடிந்து விட்டது. இன்னும் விற்கப்படவில்லை. இப்படி ஹோல்டில் வைத்திருக்கக் கூடாது. அந்த வீட்டில் இன்னும் என்னென்ன மாறுதல் செய்தால் நல்ல விலையில் விற்க முடியும் என்பதைக் கவனிக்க வேண்டும் என்று சொன்னான். கூடவே, இதுவரை அந்த வீடு கட்ட ஆன பட்ஜெட், எத்தனை மாதங்களாக கட்டுகிறார்கள், கம்பெனி எதிர்பார்க்கும் லாபம் என்ன என எல்லாவற்றையும் விளக்க உன்னிப்பாக கவனித்துக் கொண்டே வந்தவள்,
மீண்டும் முந்தைய பக்கத்தைத் திருப்பி ஆராய்ந்தாள். அவளின் மொபைலை எடுத்து சில கணக்கு வழக்குகளைப் போட்டுப் பார்த்தவளுக்குப் பெருத்த ஏமாற்றம். இந்தளவிற்குப் பண விரயம் அவள் எதிர்பார்க்கவில்லை.
இவர்கள் என்ன கம்பெனி நடத்துகிறார்கள்? இத்தனை எப்படி அதிகமாக செலவு வரும்? என ஜீவனாவிற்கு பயங்கர குழப்பம்.
ஒரு ஸ்கொயர் பிட்டுக்கு ஒரு குறிப்பிட்ட அளவில் தான் பணம் செலவாக வேண்டும். ஆனால், இவர்கள் செய்து வைத்திருக்கும் வேலையில் பட்ஜெட் எகிறி இருக்கிறதே என்று பலத்த அதிருப்தி அவளுக்கு. ஆனால், முடிந்து போன வேலையில் இவள் என்ன செய்ய முடியும்? இத்தனை வீண் செலவு ஆகிவிட்டதே என்கிற அங்கலாய்ப்புடன் அந்த அறிக்கையை பார்த்தாள்.
அவள் முகத்தையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, இவள் அவர்கள் பக்கம் இல்லை என்று மனதில் உறுதியாகத் தோன்றியது. அதற்கு எந்த சாட்சியமும் இல்லை. அவளைப்பற்றி பெரிதாகவும் எதுவும் தெரியாது. இருந்தும் ஏனோ அவன் மனம் அவ்வளவு உறுதியாக நம்பியது.
அதாவது, இவளால் நிறுவனத்தில் எந்த மோசடியும் நடக்க வாய்ப்பில்லை என்று நம்பினான்.
ஜீவனா கௌதமனின் நம்பிக்கையைக் காப்பாற்றுவாளா? கௌதமன் திருமூர்த்தி, சுபத்ராவை வெறுப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? பொறுத்திருந்து பார்க்கலாம்.