“அவங்க நம்பிக்கையானவங்க தான்… டிரைவர் சரியா கொண்டு போயி அவங்க வீட்டுல சேர்த்துடுவாரு…” கௌதமன் வந்து சொல்ல, அவன் எப்பொழுது பின்னால் வந்து நின்றான் என்றே அவளுக்குத் தெரியவில்லை. திடீரென்று பின்னாலிருந்து வந்த அவன் குரலில் ஒரு நொடி திக்கென்று ஆகி விட்டது.

பிறகு அவன் தான் என திரும்பிப் பார்க்காமலேயே புரிந்து கொண்டவளுக்கு மிதமிஞ்சிய எரிச்சல் தான்!

‘இவன் ஒருத்தன் குறுக்கக் குறுக்க வந்துட்டு… ச்சே! யாரோட சங்காத்தமே வேணாம்ன்னு நினைக்கிறோமோ அவங்க தான் நம்மகிட்ட பேச வருவாங்க…’ என எண்ணியவளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அதற்குள் அவன் பக்கவாட்டாக வந்திருக்க அவளின் முகம் அவனுக்கு என்ன காட்டிக் கொடுத்ததோ, கௌதமனுக்கு அவளின் புறக்கணிப்பு எரிச்சலைத் தான் கிளப்பியது.

அவனுக்கு அவனுடைய அத்தையையும் பிடிக்காது. அவரின் கணவரையும் பிடிக்காது. அந்த பிடித்தமின்மை காரணமே இல்லாமல் இவள் மீதும் தோன்றிட, அதனால் தான் இவள் இந்த பார்ட்டிக்கு வந்ததிலிருந்து இவளிடம் அறிமுகமாகிக் கொள்ளவில்லை.

திருமூர்த்தி அறிமுகம் செய்து வைக்க முயன்றார் தான் இவன் நாசூக்காகப் புறக்கணித்து விட்டான். அதன் பிறகு தம்பதிகள் இருவரும் மதுவோடு ஐக்கியமாகி விட்ட பிறகு தான், இனி அறிமுகம் செய்து வைக்க மாட்டார்கள் என்று ஆசுவாசமானான்.

தொழில்முறை கூட்டத்தில் இவன் கொஞ்சம் பாப்புலர்… இவன் வயதுடைய மற்றவர்கள் அனைவரும் பணம் இருக்கும் தைரியத்தில் வாழ்க்கையை இன்னமும் அனுபவித்துக் கொண்டிருக்க, இவனோ தொழிலைப் பெருக்கி லாபத்தில் திளைக்கிறான். தோற்றமும் பார்த்ததும் கவர்ந்திழுக்கும் வகையில் இருக்க… அதனாலே பெண்கள் கூட்டம் இவனை மொய்த்து ஒரு வழியாக்கி விடும்.

ரொம்ப நேரமாகப் பொறுத்துப் பொறுத்து போனவன், கைப்பேசி அழைப்பிற்காக ஓரமாகச் சென்று பேசிவிட்டு வந்தபோது மீண்டும் ஒரு பெண் வந்து மோதவும்… அப்போது இருந்த கோபத்தில் யோசிக்காமல் அறைந்து விட்டிருந்தான்.

வெளிச்சம் இல்லாத இடம் என்பதால் முதலில் யாரென்று தெரியவில்லை.

கொஞ்ச நேரத்திலேயே அந்த பெண் ஜீவனா என்பதும், அவள் தான் அடித்ததற்காக முறைக்கிறாள் என்பதும் புரிந்து விட, ‘இவ வந்து மோதுவா நான் வேடிக்கை பார்க்கணுமா?’ என்கிற கோபம் தான் அப்பொழுதும்.

ஏற்கனவே அவள் மீது நல்ல அபிப்ராயம் இல்லாதவன் என்பதால் மிகவும் எளிதாக அவளின் குணத்தையும் மட்டமாக நினைத்து விட்டான் போலும்!

எல்லாம் சில நொடிகள் தான்… பெண்கள் விஷயத்தில் அதிக சபலபுத்தி கொண்ட கருணாகரன் அவ்விடத்திற்கு இவளின் பெயர் என்ன என்று கேட்டபடி தள்ளாடி வந்த விதமும், அதற்கு இவள் பதறிக்கொண்டு ஓடிய விதத்தையும் பார்த்த பிறகு என்ன நடந்திருக்கும் என்று அவனுக்கு யூகிக்க முடிந்தது.

மனதில் சுருக்கெனத் தைத்து விட்டது. தான் ஆத்திரத்தில் அறிவிழந்து செய்துவிட்ட செயலுக்காக ஒரு நொடி நொந்தவன், ‘ம்ப்ச்… இதுவும் ஒரு விதத்துல நல்லதுக்கு தான், அவ நம்ம இருக்கிற பக்கமே வரக்கூடாது…’ என்று எண்ணியபடி அலட்சிய தோள் குலுக்கலுடன் சென்று விட்டான்.

இருந்தும் ஓர் உறுத்தல்! என்ன இருந்தாலும் அடித்திருக்கக் கூடாதோ என்று!

அவளின் குணம் மோசமாக இருந்திருந்தால் கண்டிப்பாகக் கவலைப் பட்டிருக்க மாட்டான். தவறு தன் பேரில் என்பதால் கௌதமனின் நேர்மையான மனம் சமாதானமாக மறுத்தது.

அத்தனை நேரமாக அவள் இருக்கும் திசையைக் கூட புறக்கணித்தவன் இப்பொழுது அவளை கவனிக்க, அவளின் அலைப்புறுதல் புரிந்தது. அதுவும் அவள் அவனை முறைப்பாக பார்த்த நொடி அவன் தடுமாறித்தான் போனான். நெஞ்சினில் ஒருவித ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி விட்டிருந்தது அவளது வலியும் கோபமும் நிறைந்திருந்த பார்வை!

அதன்பிறகு அவள் இவனைப் பார்க்கவில்லை. ஓரமாகச் சென்று அவன் கண்ணில் படாமல் மறைந்து அமர்ந்து கொண்டாள். ஒரு மாதிரி நிராதரவான தோற்றம்! அவளின் தோற்றம் இவனை என்னவோ செய்தது. காரணமே இல்லாமல் அவளுக்காக இங்கே இவனின் மனம் துடித்தது.

தான் செய்தது தவறு என்று தெளிவாகத் தெரிந்திருந்த போதும் மன்னிப்பு கேட்பதற்கு அவனின் தன்னகங்காரம் இடம் தரவில்லை. இதுவரை அறிமுகமாகாத பெண், தன்னை விட வயதில் சிறியவள், அதிலும் தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு வர இருக்கிறாள். அவளிடம் எப்படி போய் மன்னிப்பைக் கேட்பது என்கிற தவறான எண்ணம் அவனுக்கு!

தவறு தன்மீதென்றால் மன்னிப்பு கேட்பதற்குத் தயங்கக் கூடாதல்லவா? அவனுக்கு அதைச் செய்ய மனம் இல்லை.

நேரம் கரைந்து கொண்டே சென்ற போதும் அவளிடம் அசைவில்லை. அவள் உணவை உண்டது போலவும் தெரியவில்லை.

அந்த நேரம் தான் சுபத்ரா ஏதோ அருகில் இருப்பவர்களிடம் சண்டை வளர்த்துக் கொண்டிருந்தார்.

‘ம்ப்ச்… ஆரம்பிச்சுடுச்சுங்க…’ என்ற சலிப்பு கௌதமனிடம். கணவன், மனைவி இருவரும் இருந்த கோலத்தைப் பார்த்து தலையிலடித்துக் கொண்டவன், அவர்களை வீட்டுக்கு அனுப்பும் வேலையைக் கவனித்துக் கொண்டான்.

இப்பொழுது மனம் இவள் விஷயத்தில் உறுத்திக் கொண்டிருந்தாலோ என்னவோ எப்படியோ போகட்டும் என்று விட முடியாமல் அவள் அருகில் வந்து நின்று பேச்சுக் கொடுக்க அவளோ இவனை இம்மியும் மதித்தாளில்லை.

என்னவோ செய்து கொள்ளட்டும் என்றும் யோசிக்க முடியாமல், “உன்னை நான் டிராப் செய்யறேன் வா…” என்றான் ஜீவனாவிடம். இவன் அழைத்தால் அவள் ஏன் வர வேண்டும் என்று யோசிக்க வேண்டாமா?

அவன் தன்னிடம் பேசவே இல்லை என்கிற தோரணையில் அவள் வேகமாக நகரப் பார்க்க, “ஜீவனா…” என்றான் பல்லைக் கடித்தபடி.

நேரம் வேறு ஆகிக்கொண்டே செல்கிறது. பலரும் கிளம்பத் தொடங்கி விட்டார்கள். இவள் தனியாக இருக்கிறாள் என்று பரிதாபம் காட்டினால், ரொம்பவும் தான் செய்கிறாள் என்ற எரிச்சல் அவனுக்கு.

ஜீவனாவிற்கு இவனுக்கு எப்படி என்னுடைய பெயர் தெரிந்தது என்கிற கோபம். அவனுடன் பேச வேறு துளியும் விருப்பம் இல்லை. அழைத்துத் தொலைத்தானே என்று பிடித்து வைத்த பிள்ளையாராய் நின்று கொண்டாள். நிற்காமல் போனால், அவன் இன்னும் குரலை உயர்த்தி இங்கே ஒரு காட்சியை வீணாக உருவாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் தான்! ஆனாலும் அவனிடம் ஏன் என்று கேட்கவில்லை.

அவள் நின்ற தோரணையைப் பார்த்து, ‘சரியான திமிர்…’ என முணுமுணுத்தான் அவன்.

அவளின் முன்னே வந்து நின்று, “உன்னை நான் ஹாஸ்டலில் விட்டுடறேன்னு சொன்னேன்” என்றான் அழுத்தமாக.

பக்கவாட்டாக முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்று கொண்டவளுக்கு அப்படியொரு ஆத்திரம். ‘இவன் யார் என்னை அழைத்துப் போவதற்கு என்று…’

அவளின் முகபாவனையிலேயே அவளின் எண்ணவோட்டத்தைப் புரிந்து கொண்டவன் போல, “உனக்கு வேற ஆப்ஷன் இல்லை” என்றான் அழுத்தமாக.

அவளுக்கு அப்படியொரு கோபம். ஏன் தான் இங்கே வந்தோமோ என மீண்டும் மீண்டும் நொந்து கொண்டாள்.

கௌதமன் அப்பொழுது தான் அவளிடம் அறிமுகமாகிக் கொள்ளாத தன் மடத்தனத்தை நொந்து கொண்டான். தான் யார் என புரியாமல் எப்படி வருவாள் என்று எண்ணியவன், “நீ நாளைக்கு ஜாயின் பண்ணறது எங்க கம்பெனியில தான்… நான் உங்க சித்தியோட அண்ணன் மகன்…” என்றவன், “நேரமாகுது இப்பவாச்சும் வரியா?” என்றான் எரிச்சலாக.

‘நீ யாராகவும் இருந்து கொள்’ என்கிற தோரணையுடன் இன்னும் பக்கவாட்டிலேயே பார்த்திருந்தாள்.

பார்வையால் கூட தன்னிடம் பேச மறுப்பவளின் பிடிவாதம் அவனை அசைத்துப் பார்த்தது. தான் அடித்ததற்காகவா இத்தனை அடம் என எண்ணியவன் அவளைப் பிரமிப்பாகப் பார்த்தான்.

நிராதரவான நிலையிலும் இறங்கி வர மறுக்கும் அவளின் வைராக்கியம் அவனுக்குச் சுவாரஸ்யம் தந்திருக்க வேண்டும். எப்படியும் என்னிடம் தான் வேலைக்கு வரப்போகிறாள் அப்பொழுது என்னிடம் பேசாமல் என்ன செய்வாளாம் என எண்ணியவனுக்கு, அவளின் பிடிவாதம் எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்கிறது என்று பார்க்க விபரீத ஆசை முளைத்தது.

பேசாமல் அப்பொழுதே மன்னிப்பைக் கேட்டிருக்கலாம். தன் நிலையை விளக்கி இருக்கலாம். காயம் கொண்ட அவளின் மனதிற்குச் சிறு ஆறுதலாவது கிடைத்திருக்கும். என்னவோ கௌதமனிற்கு அதற்கு மனமில்லை.

இவன் இன்று செய்யும் பிழையால் அவளிடம் கெஞ்சிக் கொண்டு நிற்க வேண்டி வரும் என்று தெரிந்திருந்தால் இப்பொழுதே மன்னிப்பு கேட்டு இருப்பானோ என்னவோ? அவளிடம் லோல் பட வேண்டும் என்ற விதி அவனுக்கு இருக்கையில் யாரால் தான் என்ன செய்ய முடியும்?

பார்க்கலாம் இவர்களின் பனிப்போர் எப்படிப் பயணிக்கப் போகிறது என்று…